சுடரேற்றம்

திருப்பட்டூருக்கான அரசுபேருந்து துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து விடியல் துடிகொள்ளத் தொடங்கிய நேரத்தில் கிளம்பியது. வழியெங்கும் கடைவாசல்களில் நீர் தெளித்துக்கொண்டிருந்தார்கள்.

“வயசுப்பிள்ளை வேகமா பஸ்ஸீல ஏறி எடம்பிடிக்குதான்னு பாரு,”

“இதுக்குதான் வரலேன்னு சொன்னேன்…” என்ற சுஜி தன் பின்னால் நின்றவரின் கைகளில் மோதிய துப்பட்டாவை இழுத்துப்பிடித்தாள்.

“ஆமா…வரலேன்னா ஆச்சா. காரிய சாமார்த்தியமில்லாம,”

“வியாழக்கிழமைன்னா இந்தபஸ்ஸீல கூட்டமாதான் இருக்கும்… பொம்பளப்பிள்ளை இவ்வளவு கும்பல்ல என்ன பண்ணும்…” என்ற பெரியம்மா பிடித்து நிற்க கம்பி இருக்கும் இடமாகத்தேடினார்.

“கடைசி ஆளாவா ஏறுவாங்க… ஊர் உலகத்துல எல்லாரும் பெத்திருக்காங்கன்னு நானும் பிள்ளைபெத்திருக்கேன் பாருக்கா… அந்த பிரம்மனைப் பாத்தாச்சும் விதி மாறுதான்னு பாப்போம்,”

பெரியம்மா புன்னகைத்தார். சுஜி கண்களை உருட்டி பேருந்திற்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். படிகளில் ஆட்கள் தொங்கத்தொங்க பேருந்து வேகமெடுத்தது. நேரம் செல்லச் செல்ல ஊர்களே இல்லாத பாதையின் இருபுறங்களிலும் பொட்டல்வெளி விரிந்தது.

சுஜி மனதை இன்னதென்று தெரியாத ஒன்று கவ்விப்பிடித்தது. பேருந்து நின்ற இடங்களிலும் ஊர்கள் இல்லை. நிறுத்தத்திலிருந்து நடந்து செல்ல வேண்டிய ஊர்களுக்கு பெருமாள் கோவில் நிறுத்தத்தில் இறங்கினார்கள்.

பெருமாளும் ஊரில்லாத தனியனாகத்தான் இருந்தார். காய்ந்தநிலம்  சூடு கொள்ளத்தொடங்கியிருந்தது.  பிரம்மனின் தலையைகொய்த பாவம் நீங்க சிவனிற்கு அருளிய பெருமாள்.

சென்றவாரம் பள்ளி ஆய்விற்காக வந்த வட்டார கல்வி அதிகாரி சுஜிக்கு மாப்பிள்ளையை கோர்த்து விட்டிருந்தார். வீட்டிலும் முதல் வரன் வந்து பார்க்கட்டும் என்று எளிதாக பேச்சை முடித்துவிட்டார்கள்.

“பொண்ணு பாக்க வர வேணான்னு சொல்லுங்க… கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லாம வர சொல்றது ஏமாத்து வேலை,” என்ற சுஜி நடையில் அமர்ந்து அடைமழையை பார்த்துக்கொண்டிருந்தாள்.

“எல்லா பிள்ளைகளும் வேணாண்னு சொல்றததுதான். எங்களுக்குத் தெரியாதா? மாப்பிள்ளையை பாக்காம வேணாம்னா எப்படி?”

“கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்லைங்கறது என்ன தப்பான காரியமா…”

“மாப்பிள்ளையை பாத்தா மனசுக்குத் தோணும்…”

இரவுபொழுதில் தெருவிளக்கு வெளிச்சத்தில் யாருமற்ற அமைதியில் பெய்துகொண்டிருக்கும் மழையைப் பார்ப்பதற்கு மனம் எப்பொழுதும் பதைக்கிறது. சுஜி கண்களை மூடிக்கொண்டு ஐந்து நிமிடம் அமர்ந்திருந்தாள். முன்னால் தரையில் வைக்கப்பட்ட புகைப்படம் கண்களில் பட்டது.

“விஷ்வா…!”

“ஆமா…அரசாங்க உத்தியோகம். நல்ல சம்பளம்,”  என்ற அம்மா நடையின்சுவர் ஓரத்தில் கிடந்த மரபெஞ்சில் அமர்ந்தார்.

“இந்தப்பையன் திருச்சி ட்ரெய்னிங்ல உனக்கு கிளாஸ் நடத்தறாரா? டீச்சர்ஸ் ஸ்ட்ரைக்ல ஒருநாள் முழுசா எங்கூட இருந்தார்,” என்ற அய்யா வீட்டிற்கு வெளியே மடித்துக்கட்டிய கைலி, வெள்ளை சட்டையுடன் குடைபிடித்துக்கொண்டு சாக்கடையின் தேக்கங்களை பெரிய தடியை வைத்து தள்ளிக்கொண்டிருந்தார்.

“ஆமாங்கய்யா.  இவர் நியூஅப்பாயிண்ட்மென்ட்டா? போனவாரம் கூட  துறையூர் முழுக்க இருக்கற ஸ்கூல் டீடெல்ஸ் எழுத உதவி செஞ்சேன்,”

“எஸ்.எஸ்.ஐ ட்ரெனிங்க்கு புதுசா இருப்பாரு…”

“வாத்தியாரா இருந்துக்கிட்டு செயலாளர், மறியல்ன்னு கட்சியாளுங்க வேலையெல்லாம் பாக்கறது. உங்களையெல்லாம் ஜெயில்ல போடமாட்டிக்கிறாங்க. கொஞ்சநேரம் நீங்க பேசாம இருந்தாலே போதும். சுஜி… இந்த வேலையெல்லாம் எங்க செய்வீங்க,”

அய்யா வாசல்படியில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார்.

“ட்ரெயினிங் நடக்கிற க்ளாஸ்ரூம் பெஞ்ச்ல ஒக்காந்துதான். அதுகென்ன இப்ப…”

அம்மா சிரித்தாள்.

“சிரிக்காதீங்கம்மா. எரிச்சலா வருது. பி.எட் படிக்கறப்ப விஷ்வா மாதிரி எத்தனையோ பசங்கபக்கத்துல உக்காந்திருக்கேன். பக்கத்துல ஒக்காந்தா, சிரிச்சு பேசினா கல்யாணம் பண்ணிக்கனுன்னு இல்ல,”

“நீ எதுக்கு எப்பவும் இல்லாத வழக்கமா  இவ்வளவு பேசற…”என்றபடி அம்மா அவள் பேசுவதை உள்வாங்க முடியாமல் விழித்தாள். சுரபிக்கு வேறுவிதமான புரியாமை. ஐாதகம், பெண்பார்க்க வருதல் வரைக்கும் வந்தது எப்படி! எங்கே தன்னை மீறி அனைத்தையும் நடத்திவிடுவார்களோ என்ற பதட்டத்தில் பேச வேண்டும் என்ற உந்துதல் இருந்து கொண்டிருந்தது.

அம்மாவைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. திருமணம் என்பது இறப்பு பிறப்பு போல நடந்தேயாக வேண்டிய ஒன்றாக நம்புகிறாள். ஊரை சுற்றியுள்ள மாரியம்மன், செல்லியம்மன், எதுமலையான், பெரியசாமி, பிச்சாயி, பேச்சாயி, ஊமைப்பிடாரி, சங்கிலிகறுப்பன்  என்று ஒரு சுற்று வந்து விட்டாள். சுஜியின் ஆத்மரான கோட்டப்பாளையத்து இயேசுவிடம் கோரிக்கை வைக்க மெழுகுத்திரியும் மல்லிகைப்பூவுமாக மக்தலேனாள் ஆலயத்திற்கும் சென்றாள். அங்கிருந்த வயோதிக சிஸ்ட்டரிடம் குடும்பக்கதையை பேசிவிட்டு வந்திருக்கிறாள்.

மைதானத்தில் கால்பந்து விளையாடும் பிள்ளைகளுடன் ஜூலி சிஸ்டர் பந்தை உதைத்து ஓடிக்கொண்டிருந்தார். அவர் முகம் பள்ளிமுகப்பில் பூத்திருக்கும் பன்னீர்பூக்களைப் போல இருந்தது. கழுத்தில் சிலுவை ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. காவிப்புடவையை இழுத்து செருகியிருந்தார்.

இடையில் செருகியிருந்த தூயவெள்ளை கைக்குட்டையால் முகத்தை துடைத்தபடி புடவையை சரிசெய்தார். சிரித்துக்கொண்டே விளையாடும் பிள்ளைகளுடன் சத்தமாக பேசியபடி மதிலருகே வந்தார். மதிலில் சாய்ந்து நின்ற சுஜியிடம், “நீ விளையாடலயா?” என்றார்.

“இப்பதான் சிஸ்டர் ஐம்பது ஸ்கிப்பிங் தாண்டினேன்,”

“பதினேழு வயசுல இதெல்லாம் ஒன்னுமே இல்ல,” என்றப்பின்  புளியமரத்தினடியில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார்.

“சிஸ்ட்டர்…”

“என்ன?”

“மதியம் கல்யாணபத்திரிக்கை கொண்டு வந்தாங்களே… அந்த அக்கா யாரு?”

“லில்லி…எம்.பி.பி.எஸ் முடிச்சிருக்கா,”

“சிஸ்டர்…எல்லாரும் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கனுமா?”

சிரித்தபடி நிமிர்ந்து பார்த்து அருகில் அழைத்தார்.

“கண்முன்னாடி நான் இருக்கேன்,” என்று சிரித்தார்.

“அதான் கேக்கறேன் சிஸ்டர்…”

“அதெல்லாம் உனக்கெதுக்கு…இப்ப ஸ்ட்டடீஸ் தான் முக்கியம்…”

“எங்கஊர்ல என்வயசு பிள்ளைகளுக்கு கல்யாணமாயிருச்சு. சேவைசெய்யறதுன்னா மட்டும்தான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கனுமாங் சிஸ்ட்டர்,”

அவர் புன்னகைத்து, “எல்லாமே உடனே தெரிஞ்சிறாது. வயசாகறப்ப புரியும்,”என்றார்.

காளிங்கனின் தலையை பிஞ்சுப்பாதங்களால் மிதித்து ஆடும் கண்ணனின் கருஞ்சிலை முன் நின்றவளை பெரியம்மா உசுப்பினார்.  திருப்பட்டூர் சாலை நடக்க நடக்க மேடாகிக்கொண்டிருந்தது. இருசக்கர வாகனங்களும், கார்களும் பறந்து கொண்டிருந்த சாலையில் ஓரமாக நடந்தார்கள்.

“மூணுல ஒன்னு சோடைன்னு ஜோசியர் சொன்னாருக்கா…”

“ஷ்…பேசாம வா,”

சுஜி வலதுகால் பெருவிரல் நுனியை கல்லில் தட்டிக்கொண்டாள். சுருக்கென்று வலி தலையில் பாய்ந்தது.

“சனியனே…பாதைய பாத்து நடன்னு உனக்கு லட்சம் தடவையாச்சும் சொல்லியிருப்பேன். அந்த மனுசராட்டமே…என்னத்தைதான் நெனச்சுக்கிட்டு இருப்பீங்களோ. என்னைய ஒரு விவசாயக்காரங்களுக்கு கட்டிக்குடுத்திருந்தாலும் நிம்மதியா இருந்திருப்பேன்…”

“இந்த மாப்பிள்ளதான் வேணுன்னு தாத்தாக்கிட்ட அடம்பண்ணி அய்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டது யாரு? அதுவும் பதினேழு வயசிலேயே. நானெல்லாம் அந்தவயசுல எலியை டிசெக்சன் பண்ணிக்கிட்டிருந்தேன்,”

சட்டென்று மலர்ந்த அம்மா அவள் தோளில் அடித்து சிரித்தாள்.

“அதான் தப்பா போச்சு. அந்த வயசிலயே எவனையாச்சும் பிடிச்சு கட்டிவச்சிருந்தா பேசுவ நீ?  நீயும் உங்கய்யாவும் எனக்குன்னு வந்த இம்சை.  பொம்பளைப் பிள்ளைக… மாப்பிள்ளை பிடிக்கலைன்னு சொல்லும், இல்லன்னா இவனைத்தான் கட்டிக்குவேன்னு சாவும்.  கல்யாணத்துலயே பிடிப்பில்லாம இருக்கற அதிசயத்த இப்பதான் பாக்கறேன்,”

“நானுந்தான்,” என்ற பெரியம்மா பெருமூச்சுவிட்டார்.

சுஜி பேசாமல் நடந்தாள். எங்கோ ஒன்றிரண்டாக நின்ற நுணாமரங்களை பார்த்தபடி நடந்தாள். நுணா மரத்தை அடுத்த மேட்டில் ஏறி இறங்கியதும் கோவில் தெரிந்தது. உடனே பெரியம்மா நெஞ்சில் கைவைத்தபடி பிள்ளைகளுக்கு நல்ல விதி எழுதுய்யா என்றார்.

விதியை மாற்றி எழுதும் பிரம்மா ஆலயம் என்று இரண்டு மூன்று இடங்களில் தகர தட்டிகள் நடப்பட்டிருந்தன. நல்ல கூட்டம் இருந்தது. சிறியபாலத்தை கடக்கும் போது குனிந்தாள். எத்தனை ஆண்டுகளாக தண்ணீர் காணாத ஓடையோ என்று தோன்றியது.

பஞ்சகாலத்தை பற்றி படித்து மனதில் உருவான பிம்பங்களில் ஒன்று உண்மையாக எழுந்து வந்ததைப்போல இருந்தது. அதற்கு பொருத்தமில்லாமல் சிரிப்பும், உற்சாகமும், கார்களும், பட்டுப்புடவைகளும், நகைகளுமாக மக்கள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். இளம்வயதினரும், பதின்மவயதினரும் ஒருவித அலட்சியம் அல்லது என்னடா இது என்ற கலவரத்துடன் இருந்தார்களா? இல்லை இவள் அப்படி உணர்ந்தாளா? தெரியவில்லை.

சுஜியை கோவில் வாசலில் நிறுத்திவிட்டு அம்மாக்கள் தள்ளுவண்டி கடைகள் பக்கம் நடந்தார்கள்.  இடப்புறம் நின்ற பெரிய அறிவிப்புப்பலகையை பார்த்தாள். முன்னோர் சாபம், திருமணத் தடை, கல்வி, குடும்பச் சிக்கல், உடல் நலம், மனநலம், தொழில், குழந்தைசெல்வம் அதற்கான பரிகார விளக்குகளின் எண்ணிக்கை என்று ஒருபட்டியல் விரிந்தது.

 பிரம்மா தன் ஒருதலைகொடுத்து அகங்காரபங்கம் அடைந்து தன்னொளி இழந்தார். அந்த சாபத்தை நீக்கிக்கொள்ள சிவனை வழிபட்ட இடம், தீர்த்தம் புலிக்குளம் என்று மதில் சுவரில் எழுதியிருந்தது. புலி வந்து போகிற இடமா? தூர்வாராமலேயே எவ்வளவு பெரிய ஏரி. நடுவில் சிறிய பரப்பு மட்டும் சேறாக குழம்பியிருந்தது. கரைமேட்டில் கோவில்.

அம்மாக்கள் கைகளில் இருந்த கைப்பையுடன் சேர்த்து சிலபாலித்தீன் பைகளுடன் வந்தார்கள். ஐப்பசி கார்த்திகையில் கூட இவ்வளவு பெரிய ஏரியில் தண்ணீரில்லை என்ற  பெரியம்மா அவளிடம் ஒரு பையைக்கொடுத்தார்.

அவர்கள் கிழக்கு கோபுரத்தை பார்த்துவிட்டு தென்புற வாயிலில் உள்ளே நுழைந்தார்கள். நுழைந்ததும் விரிந்த இடத்தில் நீண்ட நீண்ட தகர செவ்வக தட்டுகள் இரும்புத்தாங்கிகளில் நின்றன.  எரிவதும், கரிந்ததும், பாதியில் அவிந்ததுமான அகல் தீபங்கள் பரவிக்கிடந்தன.

“ ரெண்டாவதா இருக்கே அந்த தட்டுல இந்தவிளக்கெல்லாம் பொருத்து சுஜி…நாங்க அங்க போயிட்டு வந்திடறோம்…”

“நீங்க எங்கப்போறீங்க? இவ்வளவுமா…”

“கேள்வியா கேக்கக்கூடாது…வந்துருவோம்…” என்ற சொல்லில் ஆணை இருந்தது. அவள் மீண்டும்,” ஒருவிளக்குன்னாலும் பத்துவிளக்குன்னாலும் ஒன்னு தானேம்மா…”

“என்னோட தலையெழுத்தை முதல்ல மாத்தி எழுது சாமீ,” என்ற அம்மாவை இழுத்துக்கொண்டு  பெரியம்மா நகர்ந்தார்.

 எதிர்பக்கம் ஒருவன் சிரத்தையாக விளக்குகளை பொருத்திக்கொண்டிருந்தான். அவள் கையிலிருந்த பையை தட்டில் வைத்தாள். நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தான்.

“ஏன் நிக்கிறீங்க…கூட்டம் வரதுக்குள்ள பொருத்துங்க…”

அந்த இடமே சூடு பரவியிருந்தது. விளக்குகளை எடுத்து எரியும் விளக்கோடு இரண்டிரண்டாக கோர்த்து கோர்த்து வைத்தாள்.

“இதுவும் நல்லாருக்குங்க…ஜோடி ஜோடியா..”

“ஒவ்வொன்னா பொருத்த கஷ்ட்டமா இல்லியா…”

“பழகிருச்சு…ஜாதகபலன் அப்படியிருக்கு…”

“பேரென்ன?”

“செந்தூர்ராஜா…”

“உங்கப் பேரு…”

“சுஜீ…?”

“என்ன பண்றீங்க?”

“டீச்சர்,”

“நீங்க?”

“போலீஸ் டிபார்ட்மெண்ட்..”

அப்பொழுதுதான் முடிவெட்டை கவனித்தாள். கழுத்து, நெற்றியில் வியர்வை வழிந்தது. உடற்பயிற்சி செய்வதைப்போன்ற நிமிர்வுடன் குனிந்து விளக்கேற்றிக் கொண்டிருந்தான்.

“என்ன பேச்சையே காணும்…”

“இதெல்லாம் நம்பறீங்களா சார்?”

“வேற வழி…லவ் பண்ணறதுக்கு தைரியம் கிடையாது. இந்தமாதிரி பரிகாரங்களை செய்தாதான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க…ஏன் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா,”

விளக்குத்திரிநுனிகளை நசுக்கி வைத்தபடி அவள் புன்னகைத்தாள்.

“பரிகாரமா?”

“இந்தக் கோயில பாக்கலான்னு வந்தேன். வந்த எடத்துல அம்மாவோட எதுக்கு வம்பு,”

மேலும் மூன்று விளக்கேற்றிகள் வந்து நின்றார்கள். அவன் சற்று நேரம் அவளைப் பார்த்தப்பின் கடைசிவிளக்கை பொருத்தினான்.

“எனக்கும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க…”

அவன் கோபமாக நிமிர்ந்து அழுந்திய குரலில், “ஏங்க…உங்கவெளக்க நான் பொருத்தக்கூடாது…சாமி குத்தமாயிடப்போகுது. இந்த சாமி எதையாச்சும் மாத்தி எழுதி வச்சிறப்போகுது,” என்றான்.

புதிதாக வந்து நின்றப்பெண் வாயில் கைவைத்து சிரித்தாள். கத்தரிப்பூ நிற புடவையில் கொஞ்சம் உயரம் குறைந்த பெண். சிரிப்பில் அனைத்தையும் சரியாக்கிவிடுவாள் என்று தோன்றியது.

“அந்தப்பொண்ணு எப்படி சிரிக்குது பாருங்க. உங்களுக்கு பரவாயில்லன்னா எனக்கொன்னுமில்ல,”

“ சூடுதாங்கல…”

அருகில் வந்து விளக்குகளை பொருத்தியப்பின் கையாட்டி நகர்ந்தான். கல்வி விளக்குகளுக்கு அருகில் நல்ல கும்பல்.

தட்சணாமூர்த்தியை அடுத்து வாயிலில் நுழையும் இடத்திலேயே சட்டென மஞ்சள் மேனியனாக உயர்ந்த பிரம்மா தெரிந்தார். கருவறை சிலை இத்தனை பெரியதா என்று தோன்றியது. திருவுருவத்திற்கு நேராக ஆட்களை அனுப்பி பக்கவாட்டில் வெளியேற்றினார்கள். இடையில் நடக்கும் போது ஜாதகநோட்டுகள் வாங்கப்பட்டு சென்று கொண்டிருந்தன.

‘விதியிருப்பின் விதி கூட்டி அருள்க’ என்ற வாசகத்தை முன்னால் சென்ற போலீஸிடம் காட்டினாள். தொலைவிலிருந்தே திருவுருவத்தை நன்றாக பார்த்ததால் அருகில் சென்றதும் உடனே திரும்பினாள். அவளின் தோளை பட்டும்படாமலும் தொட்டது ஒருகரம்.

 “நேருக்கு நேரா பாருங்கோ…பார்வை படனும்…சிரத்தை இல்லையே..”

கல்பத்மத்தில் இருகைகளை மடியில் கோர்த்து நிமிர்ந்து அமர்ந்த அழகர். நீண்டகாது. சாந்தமுகம். சமண முனிவரா? என்று நெற்றியை சுருக்கும் போது அவளின் கரங்களில் ஈரமஞ்சளும் குட்டித்தாமரையும் விழுந்தது.

“நகருங்க…நகருங்க…”என்ற சொல் கிளிமொழியென ஒலித்துக்கொண்டே இருந்தது. வாயிலில் நின்ற போலிஸ், “எங்களையெல்லாம் விரட்றாங்க…” என்று அவன் கையிலிருந்த தாமரையை சட்டைப்பையில் வைத்தான்.

வேதமண்டபம் என்று எழுதியிருந்த இடத்தில் ருட்ராட்சபந்தலின் கீழ் படுத்திருந்த நந்தி நாக்கை நீட்டி வளைத்து வாயிலிட்டு சப்பிக்கொண்டிருந்தது. அடுத்தமண்டபத்தில் ஏழிசை தூண்கள். அதைக்கடந்து உள்ளே பிரம்மவிமோசனம் அளித்த பிரம்மபுரீஸ்வரர்.

அங்கிருந்து சுஜி தென்புறவாசலுக்கு திரும்பும்போது போலீஸ்காரன் பக்கவாட்டில் வந்தான்.

“சார்…இங்க பிரம்மா வழிபட்ட பனிரெண்டு சிவலிங்கங்கள் இருக்காம்… சரியா எண்ணினா கல்யாணம் கண்டிப்பா முடிவாயிடுமாம்…”

“சார்..சார்ன்னு சொல்லாதீங்க. கேட்டு கேட்டு போர் அடிக்குது. இதை யாரு சொன்னா…”

“எங்க பெரியம்மா…” என்று காண்பித்தாள்.

பெரியம்மா சிரித்தபடி, “எண்றது சரின்னா நெனச்சது நடக்கும் தம்பி…” என்றார். அவன் முன்னால் சென்றான்.

“இந்தப்பையன் யாரு பாப்பா,”

“தெரியல. ஆனா போலீஸ்…”என்று கண்களை உருட்டினாள்.

பெரியம்மா வேகமாக சிரித்தபடி, “இந்தபிள்ள இருக்கே…எல்லார்கூடவும் நல்லாதான் பேசுது. ஆனா…” என்று நிறுத்தி பின்,“இந்தமாதிரி மாப்பிள்ளை அமைஞ்சா நல்லாருக்கும்,” என்றார்.

“நீ வேற… இதுக்கு மொதல்ல கல்யாணம் பண்ணிக்கனுன்னு மனசு ஒத்துக்கட்டும்… பொண்ணு பாக்க வரேன்னு சொல்ற மாப்பிள்ளைக்கே இன்னும் பதில் சொல்லாம இருக்கு,”

ஓரமாக இருந்த நீள்செவ்வக மண்டபத்தில் அமர்ந்தார்கள். பரிபூரண மௌனம். என்பு தோல் போர்த்திய உடல் என்ற வரியே நினைவிற்கு வந்து அசையாமல் நின்றது. செந்தூரும் அம்மாக்களும் எழுந்து சென்றார்கள். ‘பாதாளமூர்த்தி’ என்று பக்கத்திலிருந்த அம்மா சொன்னாள்.

கண்ணாடி சட்டமிடப்பட்ட பெரிய படத்தின் முன்பு அமர்ந்திருந்தார்கள். பின்புறம் கல்விளக்கு தீபம் அசையாமல் நின்றது. படம் கருப்புவெள்ளையில் இருந்தது.  சாம்பல்நிற மேக வானம். ஔிரா முழுநிலவு. ஒருநட்சத்திரம். நரியோ புலியோ நடந்து கொண்டிருந்தது. அந்த ரூபம் கண்களை மூடியிருந்தது. தாடிமீசை வளர்ந்து விழுதுகளைப் போல உடலில், மடியில் பரவி விரிந்திருந்தது. உடலெங்கும் வேராடிய மரம் போல இடக்கரத்தில் கொப்புத்தேடிப்பிடித்த கொடி ஒன்று சுற்றியிருந்தது.

எலும்பாலான கூடு. வயிறே இல்லை. எலும்பு வரிசைகள் தெரிந்த மார்புக்கூடு பதைக்க வைத்ததும் கண்களை தாழ்த்திக்கொண்டாள். ரூபத்தின் கைகால் நகங்கள் வளர்ந்து நீண்டிருந்தன. பேயுரு என்று தோன்றியதும் நிமிர்ந்தாள். முகத்தில் ஒருஉணர்வுமில்லை. ஒட்டிய கன்னங்கள். எதற்காக இப்படி? உடலை உருக்கி உருக்கி என்னத்தை செய்தார். எத்தனை தனிமை. உடல் பதறியது சட்டென எழுந்து நடந்தாள். சப்தகன்னிகள் வண்ணவண்ண ஆடைகளில் மின்னினார்கள். கைக்குவித்து பார்த்தபடி நின்றாள்.

‘ வீட்ல சொல்றபேச்சை கேக்காத மட்டையாயிட்டேன். இவங்க பாசத்துல விழக்கூடாது. இவங்க சொல்றதுக்காக கல்யாணம் பண்ணிக்கமுடியாது. எனக்குத் தோணனும்’ என்று வரிசையாக நின்ற கன்னிகளின் ஒவ்வொரு முகமாகப் பார்த்தாள்.

“சுஜி சீக்கிரம் வா,”

அதற்குள் செந்தூர் அம்மாக்களுடன் ஒட்டிக்கொண்டான். அம்மாவின் பை அவன் கையிலிருந்தது.

“செந்தூர் வாப்பா..” என்றபடி பெரியம்மா முன்னால் சென்றார். வாயிலை அடுத்து பூத்து நின்ற அரளி, நந்தியாவட்டை மற்றும் வேப்பமரங்களுக்கு நடுவில் அளவான பாதை. புதுப்பிக்கப்பட்ட மதில் சூழ்ந்திருந்தது. மகிழமரத்திற்கு பக்கவாட்டில் பிரம்மன் வழிபட்ட சிவலிங்கங்களை நோக்கி கிளைகளாய் பிரிந்த பாதைகள்.

காடாக இருந்திருக்கும் என்று தோன்றியது. மதில் ஓரத்தில் கைலாசநாதரின் சிறுகோயில்முன் நின்றார்கள். அந்த இடம் மட்டும் காடாகவே இருந்தது. கோயில் சுவர்களில் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டிருந்தன. தூண்களில் காந்தியின் குரங்கு பொம்மை போன்ற ஒன்று குத்துகாலில் உடல் ஒடுக்கிய வடிவில் செதுக்கப்பட்டிருந்தது. சுற்று சுவரில் அதுவே புடைப்புசிற்பமாக இரு சிம்மங்கள் காவல்காக்க அமர்ந்திருந்தது. பாம்புவால் கெண்ட முனிவர். நிமிர்ந்த அரசர். நான்கு வரிசை பதினாறு கால்களில் நின்றிருந்த முன்மண்பம் ஒருபுறமாக சரிந்திருந்தது.

வெளியே ஆளுயர நாலுக்கால் மேடையில் வாளிப்பான நாட்டு காளை வடிவில் நந்தி. காளைகளின் கழுத்தில் மடிந்து தொங்கும் கீழ்கழுத்து தசை வளைவை எந்த மனமோ இத்தனை ரசித்திருக்கிறது. மேல்கழுத்தின் மெல்லிய வரி மடிப்புகளுடன் நாவை சப்பாத காளை. கம்பீர சாகவாசத்துடன் கால்மடக்கி படுத்திருந்தது. மனதிலிருந்து கைகளில் கொண்டு வந்து கல்லில் அந்த குழைவை மென்மையை வளைவை நிமிர்வை எப்படி! தொட்டுப்பார்த்தாள். உடல் சிலிர்த்தது.

“தெய்வத்து மேல கைய வைக்காத,” என்ற பெரியம்மா அவள் கைகளில் வேகமாக தட்டினார். குங்குமசிமிழ் மாதிரியான கோவில்.  காடுமண்டி கிளைகள் மறைத்திருந்தன. அங்கே கல்தளத்தில் நால்வரும் அமர்ந்தார்கள்.

கருங்கல்லால் ஆன குகை போன்ற யாகசாலையில் சிறுபிள்ளைகளின் விளையாட்டைப்போல், கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார்கள். எத்தனை வேண்டுதல்கள்!

“அங்க என்ன ரொம்ப நேரமா படிச்சிங்க,” என்ற செந்தூர் அவள் அருகில் அமர்ந்தான்.

“படிச்சேன்…புரியல. உடலில் ஏழுசக்கரங்கள் இருக்காம்,”

“ஆமா…கேள்விப்பட்டிருக்கேன்,”

“அநாதகம் ஒரு சக்கரம். அது அன்பிற்கான சக்கரமாம். இந்த சித்தர் உடம்பு, மனம், அன்புங்கற மூணு கான்செப்ட்டை முக்கோணமாக வரைஞ்சிருக்கார். அன்பை அந்தசக்கரங்களுக்கு  மையமா வச்சிருக்கார்,”

“உடம்பு மனசு ரெண்டையும் காவல்காக்கறது பாசம் தானே…”

“இப்படித்தான் புரளி கிளம்பும்…” என்று புன்னகைத்தாள்.

“என்ன?”

“பதஞ்சலி முனிவர் சொன்ன உண்மை என்னன்னு தெரியல. நான் எனக்கு புரிஞ்சும் புரியாததுமா சேர்த்து உங்கக்கிட்ட சொல்லிருக்கேன். நீங்க இதை டிபார்ட்மெண்ட்ல பரப்புவீங்க…அப்படியே பரவ வேண்டியதுதான்,”

அவன் வேகமாக சிரித்தான். பெரியம்மா தரையில் கையூன்றி அவன் தோளை பிடித்தபடி எழ முயற்சித்தார். அவன் சட்டென எழுந்து அவரை தூக்கிவிட்டான்.

கோவிலின் பக்கவாட்டில் ஏரிக்கரையில் பெரிய பெரிய புளியமரங்களின் நிழலில் நோயாளிகள் அமர்ந்திருந்தார்கள். உடலின் பாகங்களில் வெள்ளைத்துணி கட்டுகள். ஒரு சிலர் வாட்டசாட்டமான சாமியார்கள். அம்மா சுஜியிடம் பணம் கொடுத்து அவர்களுக்கு கொடுக்கச் சொன்னாள்.

“புலிப்பாண்டிய பாக்க போவலியா…”என்று ஒருவர் அவளிடம் நையாண்டி பார்வையுடன் சிரித்தார்.

“அவர் யாருங்கய்யா?”

“இங்கருந்து கண்ணுபாக்கற, கால்நடக்கற தூரந்தான்…”

“பாக்கலாம்மா…”

“நேரமாச்சு…ஒருமணி பஸ்ஸ விட்டா நாலுமணிக்கு தானாம்….”

அவர் சிரித்தார். நல்ல காவிஆடையுடன் குளித்து திருநீறு பட்டையிட்டிருந்தார்கள். அவர்கள் கைகளில் அழகான திருவோடுகள். முகத்தில் ஒரு கிண்டல் பாவனை. இவர்களுடன் பேசினால் குரங்கு, புலி, பாம்பு, தீபங்கள் பற்றி எதையாவது தெரிந்து கொள்ளலாம். அம்மா அவள் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள்.

செந்தூர் பையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு  விடைபெற்றான். பெரியம்மா அவன் இருகன்னங்களையும் பிடித்து சீக்கிரம் கல்யாணமாகும் என்று சொல்லி சிரித்தார்.

கிழக்குவாசலில்  பேருந்து நிற்கும்  இடத்தில் நின்றார்கள். நின்ற இடம் கோவில் இருந்த இடத்தை விட மேடான இடம். நல்ல வெயில். சற்று தொலைவில் மரங்கள் சிறுகூட்டமாக தெரிந்தது. இங்கு வந்தால் விதி மாறும் என்றால் என்ன? விளக்கேற்றுவது வெறுமனே விளக்கேற்றுவது மட்டுமா? என்று அவள் மனம் சுழன்று வந்தது.

உடல்நிலையை மாற்றினால் வாழ்வின் நிலை மாறுமா? அப்படியென்றால் இது பனிரெண்டு பேர் கொண்ட வைத்திய சாலையா? உடலிற்கு ஆசனம், ஆத்மாவிற்கு யோகம் என்று  உள்ளே எழுதியிருந்ததை நினைத்துக்கொண்டாள். மரபும் சூழலும், மனிதர்களின் கற்றல், ஆளுமைகளை தீர்மானிப்பதை போல, உடலும் மனமும் தனிமனிதரை தீர்மானிக்கிறது என்று சித்தர் சொல்கிறாரா? மரபால் விளையும் உடல்மன இயல்புகளை நம் முயற்சியால் மாற்றிக்கொள்ள முடியும் என்கிறாரா?

பேருந்து வந்து சற்று முன்னால் சென்று நின்றது. திரும்பித்திரும்பிப் பார்த்தாள். பேருந்தில் ஏறி அமர்ந்தாள். வெளியே வலபுறமிருந்த சிறுபலகையில் புலிப்பாணி சித்தர் என்று எழுதி வழிகாட்டப்பட்டிருந்தது.

ஓட்டுநர் கோவில் முன்னால் இருந்த பீடத்தில் ஒருவிளக்கை ஏற்றி வைத்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட எலுமிச்சையை பேருந்தின் முகப்பில் வைத்தப்பின் இருக்கையில் அமர்ந்து ஒலிப்பானை தட்டினார்.

அவள் கோவிலை பார்த்துக்கொண்டிருந்தாள். முன் இருக்கையிலிருந்து திரும்பிய அம்மா, “பசிக்குதா…”என்றாள்.

“இல்லம்மா,”

“உம்முன்னு இருக்க,”

“புலிசித்தரோட இடத்தை பாக்க முடியல,”

“அது ஒன்னுதான் குறைச்சல். பிள்ளைங்க என்னா அழகா பரிகாரபூஜை செய்யுதுங்க. நீ என்னடான்னா மிட்டாய்கடை மாதிரி கோயிலை பாக்கற. கொஞ்சமாச்சும் பக்தி இருக்கா? கல்யாணம் பண்ணி வாழனுங்கற எண்ணம் வருதா உனக்கு,”

“என்னைய புரிஞ்சுக்கவே மாட்டீங்களா?”

“ஆமா… புரியாமையா உம்பின்னாடியே வரேன். சரின்னு ஒருவார்த்தை சொல்லமாட்டியான்னு கோயில் கோயிலா அலையறேன்,”

சுஜி புன்னகைத்தாள். அம்மா முன்னால் திரும்பிக் கொண்டாள்.

வளைவில் பேருந்து திரும்பியது. கோவிலை எட்டிப்பார்த்தாள். ஆய்வுக்கூடம் என்று தோன்றியது. ஆய்வுக்கூடம் என்றதும் பதஞ்சலி முனிவரின் உடல் கண்முன்னால் வந்து நின்றது. தலைமேல் நின்ற விண்மீனின் ஒளி பாய்ந்த உடல்.

 தாத்தாவுக்கு தெவசம் செய்ய வந்த ஹரிஅண்ணா திருப்பட்டூருக்கு போயிட்டு வாடா…போயிட்டு வந்து சொல்லு என்றார். கோயில், தெய்வம், வேண்டுதல், பரிகாரம் எல்லாம் நம்ம மனசுக்கு தான்.  நம்ம சிக்கலை பற்றி மட்டும் மனசு சிந்திக்கறதுக்குதான் இதெல்லாம்.  சூட்சும வழியாச்சும் இருந்தா தான் தெய்வமாயிருந்தாலும் அடியெடுத்து வைக்க முடியும் என்று அன்று பேசிக்கொண்டே சென்றார்.

இந்த சித்தர்கள் தங்களுடைய மனதையும், உடலையும் எதற்கான வழியாகவோ மாற்றியிருக்கிறார்கள். சட்டென்று தன்மனதை இன்னும் தானே  திறந்து பார்க்கவில்லை  என்று அவளுக்கு தோன்றியது. ஜன்னல்களுக்கு வெளியே வெயில் அலையடித்தது.  சன்னல் வழியே காற்று முடியை கலைத்தது. வறண்ட நிலம் வேகமாக கடந்து கொண்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...