உச்சை: தருணங்களை வியப்பாக்கும் கதைகள்

இன்று மலேசியப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவராக இலக்கியப் புனைவுகளின்வழி தன்னை முன்னிறுத்திக் கொண்டவர் ம.நவீன். கவிதை, கட்டுரை, நாவல், விமர்சனம், பயண இலக்கியம், நேர்காணல்கள் என நீளும் படைப்புகளின் வரிசையில் அவரின் சிறுகதைகள் அதன் தனித்தன்மைகளால் சிறப்பிடம் பெறுகின்றன. 

நவீனின் 90 விழுக்காடு சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். அவரின் முதல் சிறுகதை தொகுப்பு மண்டை ஓடி 2015இல் வெளியீடு கண்டது. அடுத்த தொகுப்பு போயாக். இத்தொகுப்பு 2018இல் வெளியானது. தொடர்ந்து மூன்றாவதாக 2020ஆம் ஆண்டில் வெளியானது உச்சை. 2015க்கு முன்பு அவரின் சிறுகதைகள் நூலாக்கப்படாமல் இருந்த காலந்தொட்டே நவீனின் இலக்கியப் பயணத்தில் முரண்பட்டும் பொருந்தியும் பயணித்துள்ளேன். இந்தப் பயணம் என்பது என் இலக்கிய ஈடுபாட்டில் மிக முக்கியமான பயணம். வாசிப்பினாலும் பட்டறிவினாலும் என் பொதுஅறிவுக்குள் சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம் போன்ற இலக்கிய வகை குறித்த மரபார்ந்த வரையறைகளின் கட்டமைப்பை மீளாய்வு செய்து தொடர் தேடலை உருவாக்கித் தந்ததுதான் இந்தப் பயணம். 

பரதம் ஆடுபவரின் அசைவுகளின் நேர்த்தியும் நிறுத்தமும் அக்கலைஞரின் நடன ஒழுங்கைக் காட்டும். அக்கலை பற்றிய ஆழமான அறிவும் ஈடுபாடும் தொடர் பயிற்சியும் இருந்தால் மட்டுமே நடனம் அதன் ஒழுங்கின் கட்டுக்குள் அடங்கும். கதை எழுதுவம் அத்தகையது; கலைத் தன்மைமிக்கது. கதைக் கலையின் அடிப்படைநோக்கம் அறிந்து செயல்படும் ம.நவீனின் கதைப்படைப்புகள் கலைநயம் மிக்கவை. வெறுமனே அழகியல்களை மட்டும் முன்னிறுத்தி வாசகனை மயக்குவதோ அல்லது யதார்த்தம் என்ற போர்வையில் சொன்னதையே புலம்பித் தள்ளும் தன்மைகள் கொண்டதாகவோ இவரின் படைப்புகள் அமையவதில்லை. இந்த இரு கூறுகளிலும் புதுமையைக் கண்டடையத் தூண்டுகின்றன நவீன் சிறுகதைகள். 

சிறுகதை ஏன் எழுதப்படவேண்டும்? அல்லது இலக்கியங்கள் ஏன் படைக்கப்பட வேண்டும் என்ற வினாவைப் பெரும்பாலான எழுத்தாளர்களிடம் முன்வைக்கும்போது அவர்களின் பதில்கள் அனைத்தும் ஏறக்குறைய ஒத்த தன்மையினதாகவே இருக்கும். சமூகத்தின் யதார்த்தங்களைக் காட்டுவதற்காக அதாவது சமூகத்தின் காலக் கண்ணாடி எனக் கூறுவர். மேலும் இலக்கியங்கள் உலகத்தின் இலக்குகளை வரையறுக்கவேண்டும் என்பர். தொடர்ந்து எழுத்தாளன் தன் வாழ்க்கையைப் பதிவு செய்வதற்கு என இலக்கியத்தின் உள்ளார்ந்த இயங்கு நிலை அறியாமல் கூறுவதே பல எழுத்தாளர்களின் பதில்களாக இருக்கின்றன. இந்த மரபார்ந்த இயங்குநிலைகளைத் தாண்டி நவீனின் சிறுகதைகள், கதைகளின் வியப்புமிகு இலக்கிய விசையை முடுக்கி விடுகின்றன. அவரின் பல சிறுகதைகள் யதார்த்தங்களின் காணாத பக்கங்களைத் திருப்புகின்றன. அவை மீண்டும் மிகவும் பழகிவிட்ட யதார்த்தங்களைப் புதிதாக அறிமுகப்படுத்துகின்றன. இங்கு புதிதாக அறிமுகப்படுத்துகின்றன என்றதும் புதுமையான படைப்பு உத்தியும் புதுசொற்களின் பயன்பாடும் அவற்றைப் புதிதாகக் காட்டுகின்றன என்பதல்ல. அவை இதுவரை நாம் கண்டிராத, நம் பட்டறிவுக்கு எட்டாத விடயங்களைக் காட்டுகின்றன. அவை அதிர்வையும் வியந்துநோக்குகின்ற நிலையையும் உருவாக்குகின்றன. நவீனின் சிறுகதைகள் காட்டும் வியப்புகள் என் பொதுஅறிவுக்குள் கட்டமைந்த பல விடயங்களை கட்டுடைத்து புதியதொரு திறப்பை உருவாக்கி முற்றுப்புள்ளியில்லாத, வரையறைக்குள் சிக்காத தொடர் தேடலை நோக்கி நகர்கிறது. நவீன் கதைகளின் இத்தகைய நிலை எந்தக் கருத்தியல் சார்ந்தும் இறுதி நிலை சமரசத்தில் திருப்தி அடையவிடுவதில்லை. எல்லையிலாத நுகர்ச்சிக்கே வித்திடுகிறது. 

‘உச்சை’ சிறுகதை தொகுப்பில் அடங்கியுள்ள ஒன்பது கதைகளுமே இத்தகையதே. 

கழுகு

‘கழுகு’ என்ற தலைப்புக்கும் கதைக்கும் உள்ள தொடர்பு என்ன? அமிர்தலிங்கத்தின் பார்வையும் உடல்வாகும் சிவாவுக்குப் பிணந்தின்னி கழுகாகவே தோன்றுகிறது. அமிர்தலிங்கம் மனப்பிறழ்வு கொண்டவர் என நம்பும் சிவா அவருடன் உரையாடியபோது திகைத்து நிற்கிறான். அவரின் சூட்சமமான பேச்சு அவனை வியப்பில் ஆழ்த்துகிறது. அதே வேளை குழப்பமும் அடைகிறான். அவர் பைத்தியமா அல்லது அதுபோல நடிக்கிறாரா? தெளியாத மனநிலையில் உரையாடல் தொடர்கிறது.  அவர் கூறுகின்ற செய்திகள் அவனைத் திகைப்பூட்டுகின்றன. அதே வேளை சில கணம் சலிப்பூட்டுகின்றன. திகைப்பூட்டும் கணங்களில் தன்னைப் பற்றிய  உயர்மதிப்பீடுகளையெல்லாம் துறந்துவிட்டு வெறுமையில் நிற்கிறான். வரலாற்றையும் மக்கள் வாழ்வியலையும் பதிவு செய்து வாங்கிய விருதுகளெல்லாம் அமிர்ந்தலிங்கத்தின் கேள்விகளிலும் சொற்களிலும் மிதிப்பட்டு உடைகின்றன. தான் இதுவரை சாதித்தது அனைத்தும் போலி வாழ்வியல் மதிப்பீடுகளாகின்றன. வரலாற்றுக்கும் நாளைய வாழ்க்கைக்குமான உரையாடல் திகைக்க வைக்கின்றது. இக்கதையில் இந்த உரையாடலை மிக நுணுக்கமாகவே கையாண்டுள்ளார் ம.நவீன். 

இந்த பகுதியில்தான் கழுகு சிறுகதையின் கலைத்தன்மை வாசகனை உலுக்குகிறது; உலகம் கொண்டாடும் மிகப்பெரிய அதிகாரவர்க்கத்தின் அரசியலை அசைத்துப் பார்க்கிறது. கடந்து விட்ட வரலாற்றை மீள்பதிவு செய்து அதை அடிச்சுவடாகக் கொண்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் பலவீனத்தைப் பரீசிலினை செய்கிறது. “இப்ப நீ சொல்லு… ஒரு பாலம் அங்க நிக்கிறது வரலாறா? இல்ல அத்தன பேரு செத்துப்போனது வரலாறா?” என்று வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களில் மீண்டு கிடக்கும் இருளைக் கண்டடையச் சொல்கிறார் அமிர்தலிங்கம்.  மனபிறழ்வுற்றவராகப் பார்க்கப்படும் அமிர்தலிங்கத்திடம் வெளிப்படாத எத்தனையோ உண்மைகள் புதைந்துள்ளதை இக்கதையில் ஆங்காங்கு காணமுடிகிறது. தன் மகள் காயத்திரி பிறப்பில் மறைந்திருக்கின்ற உண்மை, பெரிய வேலைய செஞ்சி முடிக்க பயித்தியமாதான் இருக்கணும்! என்ற கூற்றில் மறைந்திருக்கின்ற புதிர்கள், அமிர்தலிங்கத்தின் பிணந்தின்னி கழுகு பார்வை, நாளை கட்டப்போகும் பாலம் பற்றிய சிந்தனை, உலகம் விரைவிலேயே அழியும் என்ற கூற்று  என அனைத்தும் வாசகனுக்கான இடைவெளிகள். இவை இக்கதையில் இன்னும் ஆழமான திறப்புகளை நோக்கி நம்மை நகரச் செய்கின்றன. 

உச்சை

உச்சை என்ற சொல்லே எனக்கு இக்கதையின்வழிதான் புதிதாக அறிமுகமானது. அதுபோலவே இந்தச் சிறுகதையின் வாசிப்பும் புதியதொரு அனுபவத்தையே வழங்கியது. பல சிறுகதைகளில் கண்டுவிட்ட அதே களம்தான். அதாவது தோட்ட அதிகாரவர்க்கத்திற்கும் அடிமைப்பட்டோருக்குமிடையே இருக்கும் இடைவெளியையும் மனப்போக்கையும் குறிக்கும் கதைபோல பழைய யதார்த்தங்களைச் சொல்வதுபோல் அமைந்திருந்தாலும் உச்சையில் இடம்பெற்றிருக்கின்ற தொன்மக் கூறுகளும் நம்பிக்கைகளும்  இக்கதையில் புதியதொரு திறப்பை அனுமதிக்கின்றன. காஷியபர்  முனிவரின் இரண்டு மனைவிகளுக்கும் இந்திரனின் உச்சைசிரவஸ் எனும் குதிரை மீது எழுந்த ஐயத்தின் விளைவால் விநதை கத்ருவிற்கு அடிமையான கதை இந்தச் சிறுகதை உணர்த்துகின்ற தொன்மமாக அமைகின்றது. இந்தத் தொன்மக் கதை உணர்த்தும் வாழ்வியலின் பின்னணியில்தான் படர்கின்றது உச்சையில் காட்டப்படுகின்ற தோட்டப்புறக் கதை. 

‘பிளாக்கி’ அல்லது ‘உச்சை’ எனும் குதிரை இக்கதையில் மிக முக்கிய குறியீடு. துரைக்குப் பிளாக்கி மீதிருந்த பற்று அதிகாரவர்கத்தின் போக்குக்கான குறியீடு. முத்தண்ணன் உச்சை மீது கொண்டிருந்த பற்று அடிமைவர்கத்தின் போக்குக்கான குறியீடு. ஒரே குதிரையின்மீது துரையின் பார்வையும் முத்தண்ணனின் பார்வையும் வேறுபடுகிறது. முத்தண்ணனுக்கு உச்சை சமூகத்தில் தன்நிலையை உயர்த்திக் கொள்ள பயன்படும் கருவியாகின்றது. அதே வேளை துரைக்கோ அது தன்மதிப்பின் அடையாளமாக இருக்கின்றது. இரண்டுமே ஆசைகளால் ஏற்பட்ட விளைவுகள். அவ்வாசைகள் இரண்டு பேருக்குமே அழிவையே ஏற்படுத்துவதாகத்தான் அமைகிறது.  தொன்மத்தில் விந்தை, கத்ரு இங்கு துரையும் முத்தண்ணனும்.  இதுவே இக்கதைக்கான சிறப்பு. கதையில் நடக்கின்ற திருப்பங்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் நம்மைத் தொன்மத்தைப் பற்றிக்கொள்ளச் செய்கின்றது.  இச்சிறுகதையில் இந்தக் தொன்மக் கதையை உணர்த்துகின்ற கதாப்பாத்திரமாக ஐயர் இடம்பெறுகின்றார். துரை வாங்கிய புதிய குதிரை குறித்து முத்தண்ணனுக்கு விளக்கும் சூழலில் இத்தொன்மக் கதை இடம்பெறுகிறது. அதே வேளை குதிரை கொண்டிருக்கும் சுழியைப் பார்த்து அதனால் ஏற்படப்போகும் வினைகளை அனுமானிக்கும் இடம் கதையின் அடுத்தப் பகுதியை வாசிக்காமலே சொல்லி விடுகின்றது. இந்நிலை வாசகனுக்கு இக்கதையின் மீதுள்ள எதிர்பார்ப்பை சற்றே குறைத்து விடுகிறது. இருப்பினும் கதையின் முடிவு வாசக இடைவெளியை மீண்டும் திறக்கிறது. துரையின் கட்டளைபடி பிளாக்கி கொல்லப்படுமா? அல்லது உச்சையின் உடலில் சுற்றியுள்ள கருநாகங்கள் வெளிப்படாமல் இருக்க காப்பாற்றப்படுமா? என்ற நெருக்கடிக்கு விடை தெரியாமல் கதை முடிகின்றது. 

சியர்ஸ்

சியர்ஸ் சிறுகதை உத்தியாலும் கதைச் சொல்லும் இயல்பாலும் புதுத்தன்மை கொள்கிறது. ஒரு புகைப்படத்தின் வாயிலாகக் கதை நகர்த்தப்படுகிறது. ஒரு புகைப்படத்தின் சிறுபுள்ளியில் குவியமான கதை அதன் நிலையில் விரிந்து பருத்துப் பர்மாவைச் சுற்றி வலம் வருகிறது. அந்தப் பயணத்தில் மூர்த்தியின் தேடல் உணர்ச்சிப் பூர்வமானது. ஒரு பழைய புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு தன் தாயைக் கண்டடையும் தருணம் வாசகர்களை உணர்ச்சிவசத்தில் ஆழ்த்துகிறது. கதையில் இறுதியில் மூர்த்தி கண்டுவிட்ட தன் தாய் உண்மையில் அவரின் தாய்தானா என்ற கேள்வியை எழுப்பி விடுகின்றார் கதைச் சொல்லி.  

“இது வேறு வகையான ரியலிட்டி” என்று கதையின் இறுதியில் வரும் உரையாடல் கதைக்கான புரிதலைப் புதிய பார்வையில் அணுகச் செய்கிறது. தாயைத் தேடும் வெறும் உணர்ச்சி தெறிப்பைச் சொல்லும் கதையிலிருந்து விலகி கனவுலகம் புதிய கணங்களைப் படைத்துக் கொடுக்கின்றது. அந்தக் கனவுலகத்தின் தேடல் நனவுக்கும் நினைவுக்குமிடையே வாழ்க்கையைக் கடத்திப் புதுத் தருணங்களைப் படைத்துக் கொடுக்கிறது. இப்படி அமைகின்ற வாழ்வியலை அனுபவித்தவர்களுக்கும் நம்புகின்றவர்களுக்கும் வாழ்க்கை ருசிக்கும் மங்கி ஷோல்டர்தான். மூர்த்தி சந்தித்த தருணங்களை மிக மேலோட்டமாக கடந்து செல்பவர்களுக்கு வாழ்க்கை அனுபவிக்க இயலாத ‘லோக்கல் தண்ணி’தான்.  

ராசன்

ராசன்  சிறுகதையைப் படித்து முடித்ததும், இது ஒரு பாம்பு கதை எனச் சொல்லி விலகிவிடலாமா? இல்லை தீபன் தனக்கு ஏற்பட்ட குறையைப் போக்கிக் கொள்ள நடத்தும் போராட்டத்தை மையப்படுத்தி கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாமா? இல்லை அதையும் கடந்து பாம்பாட்டி அமிர்கானின் சோக வரலாறு என முடித்துக் கொள்ளலாமா? என எண்ணங்கள் தோன்றினாலும் இக்கதையின் சில கணங்கள்  வாசிப்பவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி விடுகின்றன. அந்த அதிர்ச்சி ஏற்படுகின்ற வேளையில் நிறுத்தி சற்று ஆழ்ந்து நோக்கும்போதுதான்  கதையில் புதிய திறப்புகள் விரிகின்றன. அப்படியே வாசிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தாமல், மிக இயல்பான புரிதலில் இக்கதையை கடக்கும் வேளையில்கூட களமும் சிக்கலும் புதிதாகத்தான் அறிமுகமாகின்றது. எப்படி பார்த்தாலும் இக்கதையே தனிக் குணத்தோடு இயங்கும் ராசன்தான். கிளர்ச்சி உட்டுகிறது.

அமிர்கானின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சு கதையின் பல முடிச்சுகளை அவிழ்க்கின்றது. “ராசாங்க படையெடுத்துப் போனதெல்லாம் திருட்டா? அபகரிக்கிறதெல்லாம் வீரனோட தர்மம். அபகரிச்சாதான் காப்பாத்த முடியும். காப்பாத்த வக்குள்ளவன் அபகரிக்கிறான்.” கதையில் இந்தத் தருணம் நம்முள் மீண்டும் கதையை ஓட்டிப் பார்க்கச் செய்கின்றது. அமிர்கான், தீபன் மற்றும் நீலவேணு மூவருமே ராசனின் உரு கொள்கிறார்கள். அந்த மூவருக்குள்ளும் எழும் ராச குணம் திருட்டுகளை அபகரிப்புகளாக்கி அவர்களைப் பாதுகாத்துக் கொள்கிறது. அப்படி இயலாத பட்சத்தில் தன்னையே மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளுகிறது ராச குணம். மேலோட்டமான பார்வையில் ஆக்கசக்தி கொண்டதாகக் கருதப்பட்டாலும் ராச குணம் மிகக் குரூரமானது என்பதையே ராசன் கதை முன் வைக்கிறது. 

கன்னி

‘கன்னி’ ஏழு கன்னிகள் தொடர்பான நம்பிக்கைகளை அலசிப் பார்க்கும் சிறுகதை. அந்த நம்பிக்கைகள் ஏற்படுத்தும் மாயையும் அதனுள் கட்டுண்டு கிடக்கும் புதிர்களையும் மீள் மதிப்பீடு செய்கிறது கதை. கொலை செய்யப்பட்டு மரணமடைந்த இளம் பெண்களின் ஆவிகளின் ஆற்றல் மீது கொண்டுள்ள அனைத்து வகையான நம்பிக்கைகளும், சடங்குகளும் அவற்றிற்கான வழிபாட்டை ஏற்படுத்துகின்றன என்ற தெய்வ அமைப்பாக்க கருத்தும் இக்கதையில் தெளிவாகின்றன. மனிதனிலிருந்து தெய்வமாக்கல் என்பது செய்த பாவத்திற்கு அஞ்சி தன்னைத் தற்காத்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட சடங்கியல் என எண்ணவும் தோன்றுகிறது. அதே வேளை இச்சிறுகதை பெண்ணியம் குறித்த உரையாடல்களுக்கும் வழி வகுக்கிறது. பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை மறைப்பதற்கு ஆணினம் தனக்கு இட்டுக்கொண்ட பாதுகாப்புக் கருவியோ இந்தக் கன்னி தெய்வ வழிபாடுகள் எனவும் எண்ணத் தோன்றுகிறது. 

பூர்வக்குடி பெண் தொடங்கி இறுதியில் சாமியாரின் மகள் புவனா வரையில் தொடருகின்ற கொலைகள் சரடாகப் பின்னப்பட்டுள்ளது வியக்கவைக்கிறது. கடைசியில் புவனாவைக் கொலை செய்தவர் மாரியாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. கதையின் இறுதிப் பகுதியில் மாரி, சரணுக்குக் கூறும் அறிவுரை இக்கதை அடுத்தக் கன்னிக்குக் காத்திருக்கும் எதிர்பார்பை உருவாக்குகிறது. “நீ இந்த வளையத்துல மாட்டிக்க வேணாம் தம்பி. பேசாத போயிரு!” என்ற மாரியின் பேச்சு நம்மை மீண்டும் கதைக்குள் இழுத்துச் சென்று மீண்டும் கதையில் மாரியின் செயல்பாடுகளை மதிப்பிடச் செய்கிறது. மேலும் கதை முடிந்த நிலையில் வாசகன் சரணை பிடித்துக் கொண்டு ஏழாவது கன்னியைத் தேடிப் பயணிக்கின்றான். கதையில் கன்னியாக வரும் லட்சுமியைச் சரணோடு தொடர்புப்படுத்தி கதை நீள்கிறது.

இந்தக் கதையின் தொடக்கத்தில் லட்சுமி சரணுக்கு அனுப்பிய வாட்சப் குரல் பதிவின்வழி  மலேசிய இலக்கியச் சூழல் செயல்பாடுகள்மீது நவீன் கொண்டுள்ள மதிப்பீட்டையும் ஒரு கணம் நமட்டுச் சிரிப்பை உதிர்க்கச் செய்துவிட்டு கடந்து செல்கிறது.

பூனியான்

வாசிக்கும்போது சிறுகதை புதியதொரு திறப்பைக் கொடுக்கவேண்டும். ஒரு அதிர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுஅறிவை அசைத்து வெகுசன ரசனை கொஞ்சம் கலந்து சொல்ல வேண்டியவற்றைக் காத்திரமாகப் படைத்திட வேண்டும் என்பதை நிறைவு செய்த கதையாகப் பூனியானைப் பார்க்கிறேன். பூனியான் உலகின் அதிசயங்களை இக்கதையில் உடைத்துக் காட்ட முயற்சித்து உள்ளார் ம.நவீன். 

மக்களால் காலங்காலமாக நம்பப்படும் பூனியான்கள் பற்றிய நம்பிக்கையை கலை வடிமாக்கியுள்ளார். இக்கதை  மலாக்கா மாநிலத்தின் பூலாவ் கெச்சில் எனும் புனைவுத் தீவில் நடப்பதாக காட்டியுள்ளார்.  மனித இனத்திற்கு அந்நியப்பட்டது பூனியான் உலகம். அச்சம் தரக்கூடிய அமானுட உலகத்தின் அழகியலை ரீத்தாவின் விழிவழி காட்டுகிறார் கதாசிரியர்.  பூனியான்கள் உலகம் உண்மையானது என நம்பும் ரீத்தா,  தன்னுள் அந்த உலகத்தை வரித்துக் கொண்டு வாழ்கிறாள் என்பதெல்லாம் தர்க்கவியலால் உறுதிப்படுத்த முடியாத அகவுலக மாயைகள். இன்றைய வாழ்க்கையில் உறுதிப்படுத்தப்படாத உண்மையை நம்புவது கடினம்தான். ஆனால் இன்று நாம்  ஏற்று புழங்கிக் கொண்டிருப்பதெல்லாம்  நேற்று நம்பவியலாத விடையங்களாக இருந்தவைதான். அப்படித்தான் இந்த பூனியான் உலகமும். 

நேற்றைய உலகம் மறைத்து விட்டுச் சென்ற  அமானுட இயக்கத்தின் விடைத் தேடலை தொடங்குகிறது பூனியான். நாளைக்கு இதற்கான உண்மை தெரியும். இதைத் தர்க்கவாதமும் அதர்க்கவாதமும் செய்ய முடியாது. இலக்கியத்தால் மட்டுமே நிகழ்த்திக் காட்டவியலும். அது பூனியானில் தொடங்கியிருக்கிறது.

ஒலிப்பேழை

வாசிப்பு என்பது சுகம் என்று சொல்லக் கேட்டிருப்போம். அந்தச் சுகம் ஒலிப்பேழையிலிருந்து கசிந்திருக்கிறது.  ‘மோனா ஃபேண்டி’ 1993இல் மலேசியாவை உலுக்கிய ஒரு பெயர். அரசியல்வாதி ஒருவரை மிகக் கொடூரமாகக் கொன்று மரண தண்டனைக்கு ஆளான ஒரு பாடகி. அவள் கொலைக் குற்றத்தில் கைதானதிலிருந்து மரண தண்டனை விதிக்கப்பட்டது வரையிலான செய்திகளை உண்மையாக ஏற்று ஊடகங்கள் செய்திகளைப் பரப்பின. வன்மமும் கொடூரமும் நிரம்பியுள்ள இந்தச் சம்பவத்தை மீள்பதிவு செய்து மோனா பேண்டி மரணத்தில் மறைந்திருக்கக்கூடிய தருணங்களை இச்சிறுகதையில் ஒலிப்பேழை மீட்டெடுக்கிறது.  மோனா பேண்டி கொலை வழக்கில் மறைக்கப்பட்ட சாட்சியமாகிறது யாரும் அறியாத உண்மை ஒலிப்பேழை. இந்தக் கதையின் இலக்கியத்துவமே எல்லாரும் அறிந்த மோனா பேண்டி கொலை வழக்கு உண்மைக்குள் இன்னொரு சாத்தியத்தை நிறுவுவதுதான்.  இதில் இப்படி ஒரு தருணம் ஒளிந்திருக்கிறது என்பதை அன்றே நவீன் தன் கதைவழி சொல்லியிருந்தால் மோனா பேண்டியின் தலைவிதி மாறியிருக்கலாம். ஆனால் 17 ஆண்டுகள் கடந்து படைத்துக் கொடுத்து அவள் வாழ்க்கையை இலக்கியமாக்கியிருக்கிறார்.  

பட்சி

‘பட்சி’ மஞ்சன் என்ற பறவையைத் தேடிய பயணம். இந்தப் பயணம் வாசகனுக்கு இயற்கையோடு உரையாட களம் அமைத்துக் கொடுக்கிறது. மஞ்சன் பறவை இயல்புகளின் மிக நுணுக்கமான விவரிப்பு, இயற்கையோடு அதன் உரையாடலை அறியச் செய்துள்ளது. மஞ்சனின் நிறம், ஒலி, செயல் அனைத்தும் அதனைச் சார்ந்துள்ள இயற்கையோடு மிகச் சூட்சமமாகப் பொருந்துகின்ற நிலையைக் காணமுடிகிறது. இது உயிரினங்களுக்கு இயல்பான வாழ்வியலாக இருந்தாலும் அதன் இயக்கம் வியப்புக்குரியது. அதைக் கண்டடையச் செய்கிறார் ம.நவீன். இது இன்று அறியப்படாத அறிவியல். இதன் நாளைய தேடலுக்கு அடித்தளமிட்டிருக்கிறது பட்சி.   

கதைச் சொல்லி, மஞ்சன், பச்சையம்மன் ஆகியோருக்கிடையே இருக்கின்ற அகவயமான தொடர்பை இயற்கையின் ஏதோ ஒரு விசை இயக்கி விடுகிறது. இந்த இயக்கம் இக்கதையில் மிகக் கவனதிற்குரியது. கதைச் சொல்லியின் குரல் ஒலியைப் புரிந்து கொள்கின்ற மஞ்சன்; மஞ்சனின் ஒலியைப் புரிந்து கொள்கின்ற பச்சையம்மன்; பச்சையம்மனின் இருத்தலை உணர்கின்ற கதைச் சொல்லி. இவையின் தொடர்பனைத்தும் இயற்கையின் இயக்கம். இவ்வியக்கத்தின் இயங்குநிலை வரையறுக்க முடியாத தொடர்புநிலை. இந்தத் தொடர்பைக் கதை மிக அழகாகக் காட்டிச் செல்கிறது.

இறுதியாக

பொதுவாக, இக்தொகுப்பில் அனைத்துக் கதைகளும் வாழ்க்கையின் யாதார்த்தத்தில் கண்டிராத தருணங்களை அறிமுகம் செய்கின்றன. மேலும் இத்தொகுப்பின் கதைகளில் நிலவுகின்ற பயணங்களும் கவனத்திற்குரியது. இப்பயணங்கள் வாசகனைக்  கதைக்குள் ஈர்த்துப் புதியவைகளை அறிமுகம் செய்கின்றன. இந்தப் புதியவைகள்தான் வாசகனை வியப்பில் ஆழ்த்துகின்றன.  அவற்றில் வாசகனின் பங்கேற்பை உறுதி செய்கிறது. தொடர்ந்து, ஒன்பது கதைகளிலும் படிமமாக, குறியீடாக அல்லது கதைப்பாத்திரங்களாக  பலவகை விலங்குகள் வாழுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் வாசகனின் சிந்தனையை வசியப்படுத்துகின்றன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...