முடிவின்மையின் வடிவம்

நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். வெளியே என்றால் ரொம்பவும் வெளியே. நான் நிற்கும் இடத்தில் இருந்து மகிழ்ச்சியின் மையக்கூடத்திற்குச் செல்வதற்கு இறுகி நெருங்கி நின்றிருக்கும் எண்ணற்ற மனிதர்களைக் கடக்க வேண்டியிருக்கும். ஒரு நாளோ ஒரு வருடமோ ஒரு யுகமோ கூட ஆகலாம். ஆனால் இப்போது நான் நிற்கும் இடத்தில் அவ்வளவு நெருக்கடி இல்லை. இடர்பாடுகள் இல்லை.

என்னைப்போலவே என்னைச்சூழ்ந்து நிற்பவர்களும் மேற்கொண்டு முன்னேறலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலும் தயக்கத்திலும்தான் இருக்கிறார்கள். எங்களுக்கு அப்பால் இருப்பவர்கள் இப்படியொரு கூடம் இருப்பதையே பொருட்படுத்தாதவர்களாக சாலைகளில் விரைந்து கொண்டிருக்கிறார்கள். சுற்றுச்சுவரே இல்லையென்றால்கூட மகிழ்ச்சிக்கூடத்தையும் சாலையையும் பிரிக்கும் ஒரு எல்லைக்கோடு தானாகவே உருவாகி இருந்தது. தயக்கத்துடன் நின்று கொண்டிருக்கும் எங்களைப்போன்ற சிலர் சாலையைப் பார்த்ததும் உறுதி அறுபட்டவர்களாய் சாலையை நோக்கி அழுது கொண்டே ஓடினர். மீண்டும் அதே வாழ்க்கைக்குள். அதே எச்சில் இன்பங்களுக்குள். அதே உதிரத் துன்பங்களுக்குள். சாலையில் விரைந்து கொண்டிருக்கும் சிலர் எங்களின் விழிகளை துளிக்கணம் சந்திக்கிறார்கள். அந்த வாழ்க்கையை அப்படியே போட்டுவிட்டு எங்களுடன் வந்து நின்று விடுகிறார்கள். அப்படி வந்து நிற்கும் சிலர் எங்கள் யாரையுமே பொருட்படுத்தாது விடுவிடுவென உள்ளே சென்று விடுகிறார்கள். அவர்களை உள்ளே இருக்கும் நெரிசல் தடுக்க முடிவதில்லை. அவர்கள் நெரிசலைக் காண முடியாதவர்கள். உள்ளே நுழைய வேண்டும் என்ற உறுதி மட்டுமே கொண்டவர்கள். அவ்வளவு துன்பத்தை பருகி இருப்பார்கள் போல. ஒருவேளை வாசலில் தயங்கி நிற்கும் நாங்களெல்லாம் உண்மையான துன்பம் எதையுமே அனுபவங்கொள்ளாமல் வெறுமனே கற்பனை மட்டும் செய்து கொண்டிருக்கிறோமா? உண்மையில் நாங்கள் தயங்கிதான் நிற்கிறோமா? திரும்பி சாலைக்கு ஓடி விடும் கணத்திற்காகத்தான் நானும் காத்துக் கொண்டிருக்கிறேனோ?  

என்னருகே ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். சாலையையே பார்த்துக் கொண்டிருந்தாள். வெறிப்போ ஆர்வமோ இல்லாத வெறும் பார்வை. நான் அவள் பார்வையை பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை நோக்கித் திரும்பினாள். கழுத்தைச் சுற்றி ஒரு குளிர்துண்டு சுற்றி இருந்தாள். நீல நிற ஸ்வெட்டருக்குள் வெண்ணிற சட்டை தெரிந்தது. கருப்பு நிற ஜீன்ஸ்.

“வெயிலல்லவா அடிக்கிறது?” என்றேன்.

“எனக்கு குளிர்கிறது” என்றாள் “அங்கே பாருங்கள் அவர் குடை பிடித்துக்கொண்டு நிற்கிறார்”

“நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பருவ காலத்தில் இருக்கிறோம் போல” என்று சொல்லி சிரித்தேன்.

“நீங்கள் சாலைக்குப்போக விரும்புகிறீர்களா?” என்றாள்.

“தெரியவில்லை. வாழ்க்கை முழுக்க இப்படி ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொண்டே இருப்பதில் மனம் வெறுத்துத்தான் இங்கே வந்தேன்”

“மன்னியுங்கள்”

“நீங்கள் ஏதும் தவறாக கேட்கவில்லை. என்னிடம் உறுதி தென்பட்டிருந்தால் நீங்கள் இந்தக் கேள்வியை கேட்டிருக்கமாட்டீர்கள் தானே? தவறு என்னுடையதுதான்”

இப்போது அவள் புன்னகைத்தாள். அவ்வளவு துயரமான புன்னகை.

“நீங்கள் தேர்வு செய்வதில் குழம்பிப்போய் இங்கு வந்திருக்கிறீர்கள். நான் என் தேர்வுகளுக்கு உண்மையாக இருக்க முயன்று ஒரு எல்லைக்கு மேல் இயலாமல் ஓடிவந்துவிட்டேன்”

“இந்தத் தேர்வுக்காவது உண்மையாக இருப்பீர்களா?”

இப்போது இருவருமே சிரித்துவிட்டோம். நெரிசலை வெறித்துக் கொண்டிருந்த மேலும் சிலர் எங்களை நோக்கி ஓடி வந்தனர்.

வந்தவர்களில் ஒருவன் அவனாகவே பேசத் தொடங்கினான்.

“நான் என்னுடைய இருபத்தொன்பதாவது வயதுவரை எந்தப் பெண்ணையும் புணர்ந்ததில்லை. ஆனால் பதினேழு வயது முதலே திருட்டு முத்தங்கள் கொடுத்திருக்கிறேன். பெற்றுமிருக்கிறேன். பெண் எனக்கு அவ்வளவு ஆறுதல் தந்து கொண்டிருந்தது என் இருபத்தொன்பதாவது வயதுவரை. ஆனால் எனக்கு மனைவியாக வந்தவளை புணர்ந்த அன்றே அந்த உலகில் எந்த மகிழ்ச்சியும் இல்லை என்று உணர்ந்து கொண்டேன். உடனே இங்கு ஓடிவந்துவிட்டேன். என் மனைவிதான் என்னை இங்கு அனுப்பினாள்”

இன்னொரு பெண் சொன்னாள்.

“நானொரு நடிகை. ஒரு படப்பிடிப்பில் என் முகத்தில் தவறுதலாக அமிலம்பட்டது. ஓரளவு முகத்தை சீரமைக்க இயன்றாலும் முன்புபோல என்னைத்தேடி பட வாய்ப்புகள் வரவில்லை. ‘புகழ்பெற்ற முன்னாள் நடிகை’ என்பதற்காக வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினர். அந்த வாழ்க்கையும் நன்றாகத்தான் இருந்தது. பல வாடிக்கையாளர்கள் நான் நடித்த புகழ்பெற்ற வேடங்களில் என்னை வரச்சொல்லினர். அதிகம்(பல) முறை நான் காவல்துறை அதிகாரியாக வேடம் தரித்தேன். சோதனை முயற்சியாக வாயில் எச்சில் ஒழுகும் பாலகனொருவனுக்கு நான் அன்னையாக நடித்து படம் வணிகரீதியாக வெற்றி இல்லை என்றாலும் என்னை ஒரு நல்ல நடிகையாக அடையாளம் காட்டியது. அந்த வேடத்தில் ஒரு வாடிக்கையாளர் என்னை வரச்சொன்னார். நானும் சென்றேன். அவர் எச்சில் ஒழுகும் வாயுடன் அமர்ந்திருந்தார். அவர்தான் என்னை இங்கு வரச்சொன்னார்”

ஒரு முதியவர் சொன்னார்.

“எனக்கு தொன்னூற்றுநான்கு வயதாகிறது. சாகவும் பயமாக இருக்கிறது. இங்கு வந்தால் மகிழ்ச்சியை உணரலாம் என்று சொன்னார்கள்.”

ஒரு பள்ளி மாணவன் சொன்னான்.

“என்னைக் காதலித்தவன் என் வகுப்பு மாணவி ஒருத்திக்கு முத்தங்கொடுத்தான். எனக்கு வாழ்க்கையே கசந்துவிட்டது” 

ஒரு மத்திய வயதுக்காரர்.

“நானொரு வெற்றிகரமான வழக்கறிஞன். என் இருபது வருட ஏற்றத்தில் மட்டுமே சென்று கொண்டிருந்த நீதிமன்ற வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் இருக்கும் வெற்றியின்  சாத்தியங்கள் மட்டுமே என் கண்களுக்குத் தெரிந்தன. அது என் தொழிலுக்கு உதவியதுதான். ஆனால் ஒரு கட்டத்தில் என்னால் எந்த நிகழ்விலும் உண்மையை காண முடியாமலாயிற்று. உணவிலிருந்து சுவையை எடுத்துவிட்டது போலாகிவிட்டது வாழ்க்கை. வெற்றிக்கும் மகிழ்ச்சிக்குமான தொடர்பு வெற்றிக்கும் இருப்புக்குமான தொடர்பைப்போல வலுவானதல்ல என்று உணரத் தொடங்கினேன். ஓடிவந்துவிட்டேன்”

ஒரு மத்திய வயதுப் பெண் சொன்னார்.

“நான் அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த பெண். இருபது வயதிலேயே அந்த வயதில் என் நாட்டின் பிரஜை பெறக்கூடிய உட்சபட்ச  அதிகாரத்தைப் பெற்றேன். முப்பத்தைந்து வயதில் நிர்வாகத்தில் என்னைவிட அதிகாரம் கொண்டவராக ஒருவர் மட்டுமே என் நாட்டிலிருந்தார். அவர் என் கணவரின் தந்தையாக இருந்தார். என் கணவரால் என்னளவுக்கு அதிகாரத்தை இந்த வாழ்நாளில் பெறவே இயலாது. என்னை அதிகாரம் செய்ய இயலாத ஆணுடன் அந்தரங்கத்தைப் பகிர்வது எனக்குப் பிடிக்கவில்லை. உடலுறவின் போது அலுவலகம் சம்பந்தமானவற்றை அவரிடம் கேட்பேன். அவர் தந்தையைப் புகழ்வேன். அவருக்கு சில சமயம் வெறிகூடும். சில சமயம் தளர்ந்து போவார். என் மகள் பிறந்த பிறகு அவர்மீது ஒரு துறைசார் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தேன். அவர் என்னிடம் கெஞ்சினார். எனக்கு அந்தக் கெஞ்சல் எந்த ஆணிடமிருந்தும் கிடைக்க சாத்தியமான கொஞ்சலைவிட அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது. மேலும் அவருக்கு சிக்கல் வரும்படி செய்தேன். அவர் தன் தந்தையை வைத்து என்னை மிரட்டப் பார்த்தார். அவர் தந்தையாலும் ஒரு எல்லைக்கு மேல் என்னைத் தடுக்க இயலவில்லை. ஒரு பெரிய ஊழல் வழக்கில் தந்தையும் மகனும் ஒன்றாக சிக்கும்படி செய்தேன். பின்னர் அவரை விவாகரத்து செய்தேன். இதையெல்லாம் ‘குடும்பத்தையும் பொருட்படுத்தாத நேர்மையான அதிகாரி’ என்ற பட்டத்துடன் செய்து முடித்தேன். அவர் இன்னொரு மணம்புரிந்து கொண்டபோது நான் தளர்ந்து போனேன். என் மகிழ்ச்சி பறிக்கப்பட்டுவிட்டதாக உணர்ந்தேன். என் முன்னாள் கணவர் தான் இங்கு செல்லும்படி என்னிடம் சொன்னார். அவர் என் மீது வைத்திருந்த காதலுக்காக இதைச் செய்வதாகச் சொன்னார்”

அவர்கள் அனைவரும் என்னையும் என்னருகில் நின்ற பெண்ணையும் பார்த்துத்தான் தங்கள் கதைகளை சொல்லிக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தின் மையமே நாங்கள்தான் என்பதுபோல ஒவ்வொருவரும் பேசினர். நெரிசலில் புக முனைந்து நின்ற ஒரு முதியவர் “தீவிரமில்லாதவர்களின் மரணம்கூட அர்த்தமற்றதாகவே முடியும்” என்று எங்களை சபித்தார். அத்தனை பேரும் அவரை அலட்சியமாக பார்த்தோம் எனினும் கதைகள் எங்களுக்குள் உருவாக்கியிருந்த சினேகச்சரட்டினை அச்சொற்கள் அறுத்துவிட்டன. மீண்டும் அவரவர் துயரத்துடன் தனித்து விடப்பட்டோம். ஒருமுறை எழுந்துவிட்ட பிறகு தொடர முடியாத சீட்டாட்டம் போல எங்களிடையே சற்றுமுன் நிகழ்ந்த உரையாடல் கிடந்தது.  மீண்டும் அந்த உரையாடலைத் தொடர சிலர் விழைந்தனர். அருகிலிருப்பவரிடம் பேசினர். அவர்கள் கதையை கேட்டனர். தங்கள் கதையை கூறினர். ஆனால் அறுந்த உரையாடலை என்ன செய்தும் ஒட்டவைக்க முடியவில்லை.

எதிர்விளைவாக உரையாடலில் பங்கு கொண்ட அனைவருமே ஒருவர்பின் ஒருவராக முட்களால் அமைந்திருந்த அந்த வேலியில் இன்னொரு முள்ளாக தங்களையும் பொறுத்திக்கொள்ளத் தொடங்கினர். நானும் இணைந்து கொண்டேன். கழுத்தில் குளிர்துண்டு போர்த்தியிருந்த பெண்ணும் இணைந்து கொண்டாள். இம்முறை என்னால் எளிதாக உள் நுழைய முடிந்தது. வியர்வையும் கசகசப்பும் நிறைந்த உடல்களை கடந்து கடந்து சென்று கொண்டிருந்தேன். ஆணுடல் பெண்ணுடல் குழந்தையுடல் முதிய உடல் என எல்லா வகையான உடல்களையும் உரசி உரசி முன்னகர்ந்து கொண்டிருந்தேன். அத்தனை உடல்களின் மணங்களும் என்மீது பூசப்பட்டதாலோ என்னவோ என் உடலுக்கு என்று இருப்பதாக என் போதம் நம்பிய மணத்தை நான் மறக்கத் தொடங்கிவிட்டேன். என் உடல் மணம் நெய்பிஸ்கட் சுவை கொண்டது என்று என்னை முதலில் முகர்ந்து பார்த்த பெண் சொல்லியதும் இரண்டாமானவள் என் கழுத்துக்கு புதுப்பாலின் மணம் என்று சொல்லி கழுத்தில் முத்தமிட்டதும் நினைவுக்குவர ஒரு கணம் தளர்ந்து நின்றுவிட்டேன்.. உடலை அணுகி உரைக்கப்படும் இந்த சொற்கள் உடலின் எந்தப் புலத்தில் படிகின்றன? காலங்கள் எவ்வளவோ கடந்தபின்னும் கணக்கற்ற நிகழ்வுகள் ஞாபக அடுக்கில் முடிவற்று விழுந்தபின்னும் எங்கிருந்து எழுகின்றன இந்த நினைவுகள்? புத்தகத்தில் மூடிவைத்த பணத்தாள் போல கொஞ்சமும் புதுக்கருக்கழியாமல் எங்கிருந்து புறப்படுகின்றன இந்த ஞாபக வாசனைகள்? எச்சிலின் வாசனை. குருதியின் வாசனை. ஆணவத்தின் வாசனை. தெய்வத்தின் வாசனை. 

அந்த வாசனைகளின் உலகத்துக்குள், இனி அந்த வாழ்க்கைக்குள் செல்லவே முடியாது. உலகில் மகிழ்ச்சியின்மை பெருகிக் கொண்டிருப்பதை நினைத்து பெரிய கவலையில் மூழ்கியிருந்த ஒரு கவிஞனும் பைத்தியக்காரனுமான நண்பன்தான் என்னை திரும்பி வரவே இயலாத இந்த இடத்துக்கு அனுப்பினான். நிரந்தரமான மகிழ்ச்சி நிலவும் இந்த இடத்துக்கு வந்துசேர எண்ணமே ஊர்தி. துயரமே ஊர்தியின் எரிபொருள் என்று உளறினான். தானொரு கவிஞனானபடியால் தனக்கு உண்மையான துயரம் சாத்தியமே இல்லையென்றும் தன்னால் இங்கு வரவே முடியாது என்றும் புலம்பி அழுதான். ஆனால் அவன் மகிழ்ச்சியின் இப்பெருங்கூடம் பற்றி சொல்லத் தொடங்கியதுமே நான் மனதால் இவ்விடத்தைக் கண்டுவிட்டேன். காலமற்ற பயணத்தின் முடிவில் தூரமற்ற இவ்விடத்தை வந்தடைந்தும்விட்டேன். 

ஆனால் பழைய வாழ்க்கையின் மீதான ஏக்கங்களும் வஞ்சங்களும் எனக்குள் முழுதாகத் தீரவில்லைபோல. தலையை உதறிக்கொண்டு மீண்டும் நகரத் தொடங்கிவிட்டேன். முன்னே செல்கிறேனா பக்கவாட்டில் நகர்கிறேனா வெளியேறுகிறேனா என்றே தெரியவில்லை. கொடிகளில் உலரும் துணிகளைத் தள்ளிவிட்டுக்கொண்டே ஓடுவது போல உடல்களை தள்ளிவிட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தேன். இவ்வளவு பேர் இங்கிருப்பார்கள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதற்கான எத்தனத்தை உலகில் கொஞ்சம் பேர் தான் இழப்பார்கள் என்று நான் நினைத்திருந்தேன். அதுவும் அறிவும் பகுத்தறியும் திறனும் நுண்ணுணர்வும் கொண்ட ஒரு சிறு கூட்டமே மகிழ்ச்சியாக வாழ முடியாததாக இருக்கும் என்று நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் மகிழ்ச்சியின்மையளிக்கும் விவேகம் நிறைந்தவர்கள் இவ்வளவு பேரிருப்பது ஒரு பக்கம் ஆறுதலாகவே இருந்தது. ஆனால் நான் தள்ளித்தள்ளி நகரும் இந்த உடல்கள் இப்போது சோர்வளிக்கின்றன. இவ்வளவு பேரா? எல்லாவற்றையும் எண்ணிச்சொல்லிவிடும்போது அனைத்தும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக நமக்குத் தோன்றிவிடுகிறது. இத்தனைக்கோள்கள். இத்தனை துணைக்கோள்கள். இத்தனை கோடி மனிதர்கள். ஆனால் உண்மையில் எண்ணிக்கை ஒரு பிரம்மைதான். நம்மால் ஒரு மனிதரைக்கூட எண்ண முடியாது. வகுக்க முடியாது. அவ்வளவு சிக்கலாகிக் கிடக்கிறது ஒவ்வொரு உயிரும். எங்கு தொட்டாலும் திறப்பது முடிவின்மையாகத்தான் இருக்கும். நான் எத்தனை கோடி முடிவின்மைகளை உரசிக்கொண்டு இந்த மகிழ்ச்சியின் மையக்கூடத்தை நோக்கிப் போய்கொண்டிருக்கிறேன். எத்தனை கோடி முடிவின்மை! நான் எண்ணிக்கையின்மையையும் எண்ணத் தொடங்கிவிட்டேன்.  சிரிப்பு வருகிறது இல்லையா?

எத்தனை நாட்கள் கடந்தன என்று தெரியவில்லை. பசி இல்லை. ஆனால் வலி இருந்தது. காற்றின் உராய்வினால் நிற்கும் பந்துபோல ஒருநாள் என்னால் மேலும் முன்னகர முடியாமல் போனது. நான் உயரத்தில் இருக்கிறேன் என்பது மட்டும் புரிந்தது. இங்கிருந்து நகர என்னை மேலும் மேலும் அழுத்த வேண்டும் என்று புரிந்தது. உந்தினேன். அழுத்தினேன். என்னால் இப்போது உள்நுழைய முடிந்தது. உயவெண்ணெயில் மாட்டிக்கொண்ட ஈ போலத்தான் என்னால் இப்போது நகர முடிந்தது. ஒவ்வொரு நகர்விற்கும் எலும்புகள் உடைந்துவிடும்படி அழுத்தம் கூடிக்கூடி வந்தது. உதிர நாற்றம் வரத்தொடங்கியது. சுற்றி இருக்கும் முகங்களைப் பார்த்தேன். வியர்வையும் ரத்தமும் பூசியவை. அழுகையும் ஓலமுமாக நகர்கிறவை. அதுவரை எனக்கிருந்த மொத்த தைரியமும் வற்றிவிட்டது. அந்த முகங்களைப் பார்த்ததும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற இச்சை எழுந்தது. நிகழ வாய்ப்பே இல்லாத ஒன்றுக்கான தூய்மையான ஆசையை விட துயரளிப்பதும் இரக்கத்தக்கதும் ஏதுமில்லை. எனக்குப் பின்னே ஒரு அடிகூட என்னால் எடுத்து வைக்க இயலாது. முன்னேற மட்டுமே முடியும். உண்மையில் இவ்வளவு தூரம் என் எத்தனத்தால் நான் முன்னேறி வந்தேன் என்பதுகூட கற்பனை தான். இந்த ஓலப்பெருக்கில் உந்தி நகர்த்தப்பட்டிருக்கிறேன். உடலில் மேலும் மேலும் வலியும் அழுத்தமும் கூடியது. மொத்த ஆற்றலையும் திரட்டி அண்ணாந்து பார்த்தபோதுதான் இவ்வளவு நேரம் நான் நேர்கோட்டில் நகரவில்லை மேலிருந்து கீழே இறங்கி இருக்கிறேன் என்பது எனக்குத் தெரிந்தது. 

எலும்புகள் உடைந்தன. நெஞ்சுக்கூடு உடைந்து வாயில் ரத்தம் வழிந்தது. வியர்வையின் கசகசப்பினை ரத்தத்தின் பிசுபிசுப்பு மூழ்கடித்தது. நாங்கள் நகர்ந்து கொண்டே இருந்தோம். இப்போது விளிம்புகளை என்னால் பார்க்க முடிந்தது. இரண்டு ஓரங்களிலும் ஒரு கரிய சுவர். மேலிருந்து கீழே இறங்க இறங்க அச்சுவர் அகலம் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. நெருக்கடிக்கு அதுதான் காரணம். ஏற்கனவே முன்னேறி நெருக்கடியில் சிக்கி இறந்த உடல்களின் அழுகல் நாற்றத்தை நாசி உணரத் தொடங்கியது. கால்களில் அழுகிய உடல்களின் கொழகொழப்பு. இறந்த உடல்களின் பற்களும் எலும்புகளும் மிதிபட்டு உடைபடும் ஒலி. பாதி அழுகிய முலைகளில் கால்படும்போது ஒரு மெல்லிய ஆறுதல். நான் இன்னும் சாகவில்லை. நான் இன்னும் நடக்கிறேன். ஏற்கனவே பாதி இறந்தவர்கள் என்னுடன் நடந்து கொண்டிருந்தனர். இன்னும் இறக்காதவர்கள் கால்களுக்கிடையே மிதிபட்டுக் கொண்டிருந்தனர். அழுத்தம் கூடியது. உயிரோடு இருப்பதன் வேதனையை இன்னுமதிகமாக உணரத் தொடங்கினேன். அந்த நெரிசலில் இறந்த உடல்கள் அழுக மட்டுமே இயலும். அழுகி அழுகி விழும் உடல்கள்தான் பின்னே இருப்பவர் முன்னேற வழி அமைத்துக் கொடுக்கின்றன என்பது புரிந்த போது மெல்லக்குமட்டியது. இப்போது என்னை ஒருசிலரே அழுத்திக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண் தன் குழந்தையை இறுக்கிப் பிடித்திருந்தாள். அது ஏற்கனவே செத்துவிட்டது. அவளது உடையில் இறந்த அந்தக்குழந்தையின் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவள் விழிகளில் பேய் வெறிப்பு. முன்னேற வேண்டும் என்ற தவிப்பு. அருகே நகர்ந்து கொண்டிருந்த இன்னொருவன் ஏழடி உயரம் இருந்தான். அவன்தான் எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே நின்றிருந்தான். அவன் உடலே ரத்தமாக இருந்தது. பலரை நெரித்துப் போட்டுவிட்டு நகர்ந்திருக்கிறான். மீதமிருந்த இருவர் கீழே விழுந்து கொண்டிருந்தனர். அவன் அந்தப் பெண்ணின் விழிகளைப் பார்த்தான். அதில் தெரிந்த உறுதி அவனை எரிச்சல் கொள்ள வைத்தது. என்னைவிடுத்து அந்தப் பெண்ணை அழுத்தத் தொடங்கினான். ஒரேநேரத்தில் அவன் அப்பெண்ணைக் கொல்லவும் புணரவும் விழைவது அவன் அழுத்துவதில் தெரிந்தது. அவள் கையிலிருந்த குழந்தையை பிய்த்தெடுக்க முயன்றான். அவள் மிருகம்போல ஓலமிட்டு அழத் தொடங்கினாள். குழந்தையைப் பற்றிய அவனது வலக்கையின் விரல்கள் இரண்டைக் கடித்தாள். அவன் அவள் தலையில் மீண்டும் மீண்டும் அறைந்தான். ஆனால் அவள் விடவில்லை. அவன் தொடர்ந்து அறைந்ததில் அவள் உயிரும் அவனுடைய நடுவிரலும் போயின. இறந்து அருகே ஊர்ந்த உடல்களில் அவள் சரிந்தபோது அவள் பற்களுக்கு இடையே இருந்த நடுவிரல் அவள் உதடுகளை மூடவிடாமல் செய்து அவள் சிரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அவன் இப்போது என்னை நோக்கித் திரும்பினான். நான் யோசிக்கவே இல்லை. அவன் ஆணுறுப்பை பிடித்து வேகமாக இழுத்துவிட்டேன். அவன் வலியில் துடித்தான். அலறினான். அவன் நிதானமே கொண்டுவிடாத படிக்கு அவன் உடலை அடித்துக் கொண்டே இருந்தேன். எவ்வளவு நேரம் அவனை எங்கெங்கு அடித்திருப்பேன் என்று தெரியவில்லை. அவன் இறந்துபோனான்.

இப்போது எனக்கு முன்னே ஒரேயொரு உடல்தான் தெரிந்தது. குறுகிக் குறுகி வந்த கருஞ்சுவரில் ஒருவர்கூட நுழையமுடியாதபடி ஆகியிருந்த ஒரு இடுக்கில் அவ்வுடல் மாட்டியிருந்தது. ஆம்! மகிழ்ச்சியின் மையக்கூடம் இதுதான். எனக்கு முன்னே இருக்கும் உடல் தன் எத்தனங்களால் அந்தப்பக்கம் போகும் வரையிலோ அல்லது அழுகி இறக்கும் வரையிலோ நான் காத்திருக்க வேண்டும். இந்த குறுகிய வழியைக்கடந்து விட்டால் நான் நிரந்தரமான மகிழ்ச்சி நிலைக்கு சென்று விடுவேன். அது உருவாக்கிக் கொள்ளாத மகிழ்ச்சி. இயல்பானது. எந்நேரமும் எனக்குள் இருக்கக்கூடியது. அர்த்தமுடையது. பறித்துக்கொள்ள இயலாதது. சாசுவதமானது. அத்தகைய மகிழ்ச்சிக்கும் எனக்கும் இப்போது இடையே இருப்பது ஒரேயொரு உடல்தான். அந்த உடல் அக்குறுகிய இடைவெளியில் இருந்து காணாமலானது. நிரந்தர மகிழ்ச்சியை நோக்கிச் சென்றுவிட்டது.

பிறப்புறுப்பினைப் போன்ற ஒரு துளை இப்போது என் முன்னே இருந்தது. என் பயங்களும் துர்கனவுகளும் என்னை மீண்டும் பற்றின.  வெளியேற முடியாத ஒரு இடுக்கில் மாட்டிக்கொள்வேன் என்று நான் இளமை முதலே அஞ்சி இருக்கிறேன். குறுகலான இடங்கள் எனக்கு அச்சத்தையே அளித்திருக்கின்றன. உயிரோடு என்னை மண்குழியில் போட்டு மூடுவது போலவும் என்னைச்சுற்றி என் தோள்களில் உரசுவது போல சுவர்கள் எழுப்பப்படுவது போன்றும் கனவுகள் கண்டு எழுந்து அமர்ந்திருக்கிறேன். 

நான் அந்த இடைவெளியை நிரப்பினேன். கருஞ்சுவரின் அந்தக் குறுகிய இடைவெளி மூச்சுவிடுவதை என்னை அதனுள் பொருத்திக்கொண்ட கணத்தில் உணர்ந்தேன். ஒரேயொரு கணம் என்னை அச்சுவர் அழுத்தியது. மறுகணம் விடுவித்தது. குறுகலில் இருந்து வெளியேறி விழுந்து கொண்டே இருந்தேன். முடிவற்று விழுந்து கொண்டே இருப்பதாகத் தோன்றியது. கீழே விழுவது இவ்வளவு சலிப்பூட்டும் என்று யாரும் சொன்னால் நம்ப முடியுமா என்ன? ஆனால் எனக்கு அப்படித்தான் இருந்தது. விழுந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஒரு உடற்கிளர்ச்சியை முதலில் உண்டு பண்ணினாலும் போகப்போக பழகிவிட்டது. எப்போது விழுந்து முடிப்போம் என்றிருந்தது. விழுதல் நின்று.  எழுந்து பார்த்தபோது விளிம்புகளற்ற மாபெரும் வெளி ஒன்றினுள் நின்று கொண்டிருந்தேன். நான் அதுவரை சுவாசித்தறியாத காற்றின் நறுமணம். தோல் உணர்வது வெப்பமா குளிரா என்று சொல்ல முடியவில்லை. நிற்பது இரவிலா பகலிலா என்று தெரியவில்லை. என் கண்கள் காணும் ஒரு காட்சியையும் நான் முன்பு கண்டதில்லை. பெயர்களால் மாசுபடுத்தப்படாத பெருவெளி ஒன்றினுள் நின்று கொண்டிருந்தேன். காலமில்லாத வெளி. அல்லது காலமேயான வெளி. இருப்பு  பிரக்ஞையை அழுத்தவில்லை. இதுதான் மகிழ்ச்சியா? மகிழ்ச்சி இப்படித்தான் இருக்குமா? இவ்வளவு அமைதியாக? இவ்வளவு வெறுமையாக? வெறுமையா? வெறுமையென்று சொல்லிவிட முடியுமா இந்த உணர்வை?

காலமற்ற அவ்வெளியின் பரிசுத்தமான புறத்தில் தூசினைப்போல காலம் படியத் தொடங்கியது. அடிவானத்தில் கருஞ்சுவர் ஒரு புள்ளியாகத் தென்படத் தொடங்கியது. அப்புள்ளியை கண்டவுடன் நான் மீண்டும் காலத்தை என் உடலில்  ஒரு புற்றுக்கட்டியென உணரத் தொடங்கினேன். என் மகிழ்ச்சி மீண்டும் ஒரு நினைவாக மாறத் தொடங்கியது. மீண்டும் நடக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் நாக்கினை சுழற்றிக்கொண்டு இரையை நெருங்கும் மிருகம் போல பளபளப்பான அந்தக் கருஞ்சுவர் துலக்கமாகத் தென்படத் தொடங்கியது. என்னைப்போலவே குனிந்து நடக்கும் இன்னொரு மனிதரைக்கண்ட போது நான் சோர்ந்து போனேன். அவள் குளிர்துண்டு அணிந்திருந்த பெண்தான். இப்போது அவள் உடலில் அத்துண்டு மட்டுந்தான் இருந்தது. அவள் என் வலக்கையையும் நான் அவள் இடக்கையையும் பற்றினோம். நாங்கள் ஒன்று கலந்தோம். எங்களுக்கு குழந்தைகள் பிறந்தன. அவை வளர்ந்தன. அவர்களால் அங்கொரு நகரம் எழுந்தது. நாங்கள் அங்கேயே தங்கினோம். நாங்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. 

‘தூரத்தில் கருஞ்சுவர் தெரிகிறது’ என்று சொல்லும் எங்களை எங்கள் சந்ததிகள் கேலி செய்தனர்.  அவர்கள் வளர்ந்தனர். அவர்கள் மனங்களும் வளர்ந்தன. எண்ணற்ற எளிய மனக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக்கொண்டன. ஒரு கோடு இன்னொரு கோட்டின் மேலே கிடந்தது. அதே கோட்டின் இன்னொரு முனை இன்னொரு கோட்டுக்கு கீழே கிடந்தது.  எங்கள் சந்ததிகளும் மகிழ்ச்சியற்றவர்களாகிக் கொண்டிருந்தனர். எங்களிருவரையும் தெய்வங்களாக்கினர். தங்கள் குறைகளை அழுத்தங்களை எங்களிடம் வந்து சொல்லி அழுதனர். இந்தத் துயரங்கள் ஒரு தொல்நினைவாக எங்களுக்குள்ளும் இருக்கிறதென்பதை அவர்களிடம் சொல்வதைத் தவிர நாங்கள் வேறென்ன செய்துவிட முடியும்? தெய்வம் என்பது துயரங்களை ஏற்கனவே அனுபவங்கொண்ட இருப்பு மட்டுந்தானா? நாங்கள் எழுந்தோம். மீண்டும் கருஞ்சுவரின் குறுகல் நோக்கி நடக்கத் தொடங்கினோம். எங்கள் நிலத்தை கடைசியாகத் திரும்பிப் பார்த்தபோது நாங்கள் அமர்ந்திருந்த பீடத்தின் மீது ஒரு சிறுமி மணற்கடிகையொன்றை கொண்டுவந்து வைத்தாள். முடிவின்மை நிமிர்ந்து நின்றதைப் போலத் தெரிந்தது அம்மணற்கடிகை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...