ஞமலி

மோப்பம் பிடித்தபடி கண் முன்னே திரிந்து கொண்டிருந்தவன், எதிர்வீட்டு வாயிற் கதவோரம் எப்போது காலைத் தூக்கினான் என்றே தெரியவில்லை. காலணி ஒன்று பறந்து வந்து இரும்புக் கதவில் மோதி எழுப்பிய சத்தத்தில்  சிறுநீர் கழிப்பதை நிறுத்திவிட்டு ஓரடி பின் வாங்கி குரைத்தான். பின்னர் முன் கால்களை படுக்கவைத்து பிட்டத்தை தூக்கியபடி காலணியைப் பார்த்து வாலை ஆட்டத்தொடங்கினான். அசைவு வராததை உறுதி செய்துகொண்டவன் மறுபடியும் காலைத் தூக்கி அதன்மீது அடையாளத் துளிகள் வைத்தபோதுதான் நான் பதறிக்கொண்டு ஓடினேன். 

அது நல்ல உறுதியான கருப்பு நிற தோல் காலணி. போப்பியின் மீது பட்டிருந்தால் நிச்சயம் அடி பலமாக இருந்திருக்கும். நான் அவனுடைய கழுத்துப்பட்டையைப் பிடித்து இழுத்தபோது கால்களை ஊன்றி வர மறுத்தான். தார்ச் சாலையில் அவன் நகம் மொரமொரத்தது. 

“உனக்கு அறிவில்லையா?” எனக் குரல் எழுந்தபோது அவன் கழுத்துப்பிடியை விடாமல் எதிர்வீட்டைப் பார்த்தேன். வல இடம் மட்டும் சிலுப்பிய தலை மயிரும் நீண்ட வெண் தாடியுமென வினோதமாகத் தெரிந்த ஒருவர் மெல்ல மெல்ல அந்தி ஒளியில் புலப்பட்டார். நெற்றி தொடங்கி பின் மண்டைவரை வழுக்கை. தாடியை மழித்துவிட்டால் அவரது உடற்கட்டிற்கு வயது இன்னும் குறைச்சலாகத் தெரியக்கூடும்.  முழங்கால் வரை நீண்ட உறுதியான கைகள். அடர்த்தியான புருவம் அவர் பார்வையை இயல்பாகவே கோபமாகக் காட்டியது. லிம் சொன்னது நினைவுக்கு வந்தபோது சுதாகரித்துக்கொண்டேன்.

“அடுத்தவன் வீட்டில் நாயை மூத்திரம் பெய்ய விடுகிறாயே… முட்டாள்!” என ஆங்கிலத்தில் கத்தினார். 

கம்பத்தில் போப்பி எங்கு வேண்டுமானாலும் மூத்திரம் போவான். மூத்திரம் பெய்து முடித்தவுடன் சில வீடுகளில் அவனுக்கு ரொட்டியெல்லாம் கொடுத்து அனுப்புவார்கள். இங்கு அவன் நாகரீகமாக வீட்டு வாசலோரம்தான் போயிருந்தான். இதையெல்லாம் எப்படி ஆங்கிலத்தில் சொல்வது எனச் சொற்களைத் திரட்டிக்கொண்டிருக்கும்போதே, “அடுத்த முறை பார்த்தால் உன் நாய் உயிருடன் இருக்காது!” என்றார்.

எனக்கு அவர் சொன்னது கடும் கோபத்தை மூட்டினாலும் உடனடியாக என்ன செய்வது எனத் தெரியவில்லை. அம்மாவுக்குத் தெரிந்தால் போப்பிக்கு இரண்டு அடியும் எனக்கு அதைவிட கூடுதலாகவும் விழும். அவளுக்கு அண்டைவீட்டாரின் உறவு மிக முக்கியமானது. “எல்லாரும் வெளிய போன பின்னாடி நா ஒண்டியாதான கெடக்கேன்,” என்பாள். அதுவும் புதிதாக மாற்றலாகி வந்த இடத்தில் அவள் சச்சரவுகளை விரும்பமாட்டாள். ஏற்கனவே மூட்டையில் இருந்த துணிகளை அடுக்கி வைக்க உதவவில்லை என என் மீதும் அப்பாவின் மீதும் கடும் கோபத்தில் இருந்தாள். 

காலையில் அலமாரி, மேசை, கட்டில் போன்ற தளவாடங்களை நானும் அப்பாவுமாகச் சேர்ந்து தூக்கி வைக்கத் தொடங்கும்போதே பக்கத்து வீட்டிலிருந்து சீனர் ஒருவர் உதவிக்கு வந்தது நல்லதாகி போனது. அவரைப் பார்க்க அசப்பில் ‘புரூஸ் லீ’ போலவே இருந்தார். பரட்டைத்தலைக்குக் கீழ் மெல்லிய ஆனால் உறுதியான உடல் அவருக்கு. அவர் மகனும் உடன் வந்திருந்தான். என் வயதுதான் இருக்கும். போப்பி அவர்களைப் பார்த்து குரைக்கவும் புரூஸ் லீ கொஞ்சம் பயந்துதான் போனார். “கன்றுக்குட்டி மாதிரி இருக்கு”. என்றார். போப்பி வாசலில் கட்டப்பட்டிருந்ததால் ஒவ்வொருமுறையும் தயங்கி தயங்கி லாரிக்கும் வீட்டுக்குமாக நடந்தார். ஆனால் அவர் மகனுக்கு போப்பியுடன் விளையாட ஆர்வம் வந்திருந்தது. அவன் பெயர் லிம். கையோடு கொண்டுவந்த பந்தை போப்பியிடம் கொடுத்து சில நிமிடங்களில் நட்பாகிவிட்டான். அவன் தோளில் ஏறி நின்று முகத்தை நக்கிவிடும் அளவுக்கு போப்பியும் லிம்முடன் நன்கு ஒட்டிக்கொண்டான். 

“கிரெட் டென் அப்படித்தான். யாரையாவது நண்பனாக ஏற்றுக்கொண்டால் அவர்கள் உயரத்துக்கு எழுந்து நின்று முகத்தை நக்கிவிடும்,” என்றேன். “ஆம் அதற்காகத்தான் அவை உயரமாகவே வளர்கின்றன,” என்றான். “உன்னிடம் நாய் உள்ளதா?” என்று அவனிடம் கேட்டபோது முகம் சோகமாவதைக் கண்டேன். ஒன்றும் சொல்லாமல் போப்பியை ஏக்கமாகப் பார்த்தான்.

பள்ளித் தவணை விடுப்பு முடிந்தவுடன் என்னையும் அவன் பயிலும் பள்ளியிலேயே சேர்ப்பதாக அப்பா சொல்லவும் ஒருவரை ஒருவர் பார்த்து நட்பாகச் சிரித்துக்கொண்டோம். வீட்டுக்குத் திரும்பும்போது லிம்மின் அப்பா எதிர்வீட்டை முறைத்துப் பார்த்து ‘இங்கு நாய்களுக்கு ஆபத்து உண்டு. கவனம்!’ என சூசகமாகச் சொல்லிவிட்டுச் சென்றார். 

கொஞ்ச நேரத்தில் போப்பியிடமிருந்து பந்தை மீட்டுச்செல்ல வந்த லிம் “எதிர்வீட்டுக் கிழவர் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர்,” என்று ரகசியமாகக் கூறினான். எனக்கென்னவோ அதை சொல்லவதற்காகத்தான் அவன் வந்ததுபோல இருந்தது. தன்னிடம் இருந்து பந்தைப் பறித்துவிடுவான் என உஷாராகி, தன் இரு கரங்களுக்குள் பந்தை வசப்படுத்தியிருந்தான் போப்பி. லிம் தயங்கியபோது நான் அருகில் சென்று எடுத்தேன். முடிந்தவரை தன் வாயைப் பெரிது செய்து அந்தப் பெரிய பந்தை கௌவ முயன்ற தோல்வியில் குரைத்தான். 

மறுபடியும் “சிக்கிட் கீலா மா” என விரல்களை தலையோரம் சுழற்றும்போது, அவன் தன் முகத்தை அஷ்டகோணலாக மாற்றிய விதம் எனக்கே பயமாக இருந்தது. “தன் பேரனையே கொன்றுவிட்டாராம். அதனால் அவரது பிள்ளைகளும் அவரைக் கைவிட்டனராம். ஏதோ சமூக நல வாரியம் அவருக்கான உதவித்தொகையைத் தருகிறது,” என்றான். 

“போலிஸ் பிடிக்கவில்லையா?” என அதிர்ச்சியாகக்கேட்டேன். 

“விசாரணையெல்லாம் நடந்தது. அது விபத்து என முடித்துவிட்டார்கள்,” என்றான். குடியிருப்பின் பிரதான சாலையில் காரில் அடிப்பட்ட அவனை, கிழவர் திட்டமிட்டே சாலையில் தள்ளியிருக்கலாம் என்பது அவன் அப்பாவின் வழி அவனுக்குக் கிடைத்த ஊகங்கள். அவனும் அவன் அப்பாவுடன் சென்று அடிபட்ட சிறுவனைக் கண்டதாகக் கூறினான். உயிர்போகும் நிலையில் அவன் உடல் எப்படி வெட்டி வெட்டி இழுத்தது என்பதை ஒரு பக்க தோளோடு முகத்தையும் உலுக்கி, செய்து காண்பித்தவன் “அப்போதுகூட கிழவர் அழவில்லை… பைத்தியம்” என்றான்.

“எல்லாரும் பேரன் இறந்ததால்தான் அவருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல்போய்விட்டது என்கிறார்கள். உண்மையில் அதற்கு முன்பிருந்தே அவருக்குக் கிறுக்குப் பிடித்திருந்தது. ஏழுவயதுப் பேரனுடன் மூச்சிரைக்க இதே குடியிருப்பு வீதிகளில் சிரித்துக்கொண்டே ஓடுவதை நானும் அப்பாவும் பலமுறை பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு மாலையில்தான் அவன் இறந்தான்,” என்றான்.

நானும் எதிர்வீட்டை பலமுறை எட்டிப்பார்த்தேன். அதில் யாரும் இருப்பதற்கான அடையாளம் ஒன்றும் இல்லை. இருண்டு கிடந்தது. காற்றில் பறந்து வரும் சருகுகள் வாசலை ஆக்கிரமித்திருந்தன. சிமென்டு மூடாத பகுதிகளெல்லாம் புல் மண்டிக்கிடந்தது. அடிச்சுவரெல்லாம் பாசிபடர்ந்தும் பால்கனியின் இரும்பு கிரீல்கள் துருப்பிடித்தும் பாழடைந்து காட்சியளித்தது.

எதிர்வீட்டுக் கிழவர் ஏசியதை நான் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் லிம் மட்டும் எப்படியோ பார்த்திருந்தான். மறுநாள் காலையில் வாசலில் சரமாகக் கோர்த்து மாட்ட அம்மா கேட்ட மாவிலையைப் பறிக்கச் சென்றபோது “அந்தக் கிழவனிடம் நேற்று நன்றாக வாங்கிக் கட்டினாயா?” எனப் பின்தொடர்ந்து வந்து கேட்டான். அவனுக்குக் காலையில் எழுந்து பல்துலக்கும் பழக்கம் இல்லையென நினைத்துக்கொண்டேன். வாய் வீச்சம் எனக்குத் தலைவலியை உண்டாக்கியது. எல்லாம் போப்பியால்தான் என்று பேச்சை முடிக்க விரும்பினேன். அவன் விடவில்லை. “அதற்கு என்ன தெரியும். நீதான் அதைப் பழக்க வேண்டும்” என்றான். நான் “நாயை எப்படிப் பழக்குவது?” எனக் குழப்பமாகக்கேட்டேன்.

“என்னிடம் ஒரு நாய் இருந்தது. ‘சிட்’ என்றால் உட்காரும். ‘ஈட்’ என்றால்தான் சாப்பிடும். ‘கம்’ என்றால் அருகில் வரும். ‘கோ’ என்றால் போய்விடும். சுருக்கமான நான்கே சொற்கள் போதும்,” என்றான். 

“இப்போது அது எங்கே?”என்றேன்.

“இறந்துவிட்டது. இந்தக் குடியிருப்பில் இதோடு மூன்று நாய்கள் இறந்துவிட்டன,” என்றவன் கூர்மையாக என்னைப் பார்த்துவிட்டு தலையைத் தொங்க போட்டபடி நடந்துபோனான்.

நான் வீட்டுக்குத் திரும்பியதும் போப்பியை அழைத்து வந்து என் கண்களைப் பார்க்க வைத்தேன். ‘சிட்’ என்றேன். முகத்தை நக்கினான். மீண்டும் அழுத்தமாக ‘சிட்’ என்றபோது இரு முன்னங்கால்களைத் தூக்கி என் தோளில் வைத்து வாலை ஆட்டினான். எனக்கு கடுப்பானது. தொலைவாகச் சென்று ஒரு குச்சியை கையில் எடுத்துக்கொண்டு ‘கம்’ என்றேன். முன்னங்கால்களை தூக்கி தூக்கி தரையில் அடித்து குரைத்தான். கம்பு அவனுக்கு எப்போதும் எரிச்சலைக் கொடுக்கும் பொருள். எனவே அதனை தூரமாக போட்டுவிட்டு ‘கம்’ என்றதும் ஓடி வந்து மறுபடியும் தோளில் கைகளைப் போட்டான். எனக்கு கொஞ்சம் திருப்தியாக இருந்தது. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பழக்கிவிடலாம் என நினைத்துக்கொண்டேன். 

அன்று மாலை நெருங்கவும் மறுபடியும் நேற்றுபோலவே குரைக்கத் தொடங்கினான். வாயிற் கதவருகே இடவலமாக நடந்தான். அவனால் சின்ன பரப்பளவு கொண்ட வாசலில் அடைந்திருக்க முடியவில்லை. அம்மா செய்யும் வேலையை விட்டு விட்டு பால்கனியில் இருந்து கீழே எட்டிப்பார்த்து “அத வெளியே கொஞ்சம் கூட்டிப்போயேன்!” எனக் கத்தினாள். அது அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும். மேலும் உற்சாகமாக இருகால்களால் நின்று அழைத்தான்.  நான் கொஞ்சம் உசாராகி கயிறொன்றை எடுத்துவந்து கழுத்துப்பட்டையில் பிணைத்து வெளியே அழைத்துச் சென்றேன். அது அவனுக்கு வினோதமாக இருந்திருக்க வேண்டும். உடலைத் திருப்பிக் கயிற்றை கடிக்க முயன்றான். நான் ‘கோ கோ’ எனக் கத்தினேன். நான் இழுக்கும் திசைக்கு வராமல் உடல் மொத்தத்தையும் ஒரு பக்கமாகச் சாய்த்து என்னை இழுத்துச்சென்றான். அவன் பலம் அசாதாரணமானது. பல சமயம் என்றாவது இவன் இன்னும் வளர்ந்து காளை மாடாகிவிடுவானோ என நினைத்துக்கொள்வேன். கயிறு கையை அறுத்தது. எரிச்சல் அதிகமாகி பொசுங்குவதுபோல வலித்தது. பிடி கொஞ்சம் தளர்ந்தபோது தாவிச்சென்று நேற்று போலவே எதிர்வீட்டில் மூத்திரம் பெய்தான். 

உள்ளே கிழவர் காத்திருந்திருக்க வேண்டும். “அறிவில்லாதவனே… எத்தனை முறை சொல்வது? உனக்கெல்லாம் வாயில் சொன்னால் புரியாதா?” எனக் கத்தத் தொடங்கினார். சுற்றி முற்றி எதைக் கொண்டு அடிப்பதென தேடினார். 

“வெளியே போர்டில் எழுதியிருப்பதை படிக்கவில்லையா?” என ஒரு கம்பை எடுத்துக்கொண்டு வந்தார். அப்போதுதான் கவனித்தேன். ஒரு நோட்டுப்புத்தகத் தாளில் ‘இங்கு நாய்கள் வரக்கூடாது’  என ஆங்கிலத்தில் எழுதி அதை ஒரு பையில் செருகி மாட்டி வைத்திருந்தார்.  நேற்றுதான் மாட்டியிருக்க வேண்டும். எப்படியாயினும் போப்பிக்கு ஆங்கிலம் எழுதப்படிக்கத் தெரியாது. இப்போதுதான் ‘கம்… கோ’ வே பழகுகிறான். அதைச் சொன்னால் அவர் திட்டுவார் என்பதால் “என்னால அவன இழுக்க முடியல” என தமிழிலேயே பலவீனமாகக் கூறினேன். 

அவர் போட்ட சத்தம் அம்மாவின் காதில் விழுந்திருக்க வேண்டும். என்னவென்று வெளியே வந்து பார்த்தாள். போப்பி அம்மாவைப் பார்த்த மகிழ்ச்சியில் என்னை இழுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று அம்மாவின் பெருவிரலில் முத்தமிட்டு ‘நீயும் விளையாட்டுக்கு வா’ எனக் குரைத்தான். அவன் இழுக்கும் இழுவைக்கெல்லாம் உடலை முன்னே நீட்டி செருப்பு தேய பின்னே ஓடும் என்னை லிம் வீட்டு பால்கனியில் நின்றபடி நக்கலாகப் பார்ப்பதை கவனித்தேன். நான் ‘ஸ்டாப் ஸ்டாப்’ என்று கத்தியும் குடியிருப்பு விளக்கொளியில் அவன் விளையாட்டு அதிகமானது. அவனுக்கு எல்லாமே விளையாட்டுத்தான். 

கிழவர் விடாமல் கத்தத் தொடங்கினார். “நாளைக்கே நகராண்மை கழகத்தில் புகார் செய்கிறேன். நாயா வளர்க்கிறாய் நாய். அதற்கு கழுத்தில் லைசன்ஸ்கூட இல்லை. வந்து பிடித்துக்கொண்டு சென்று கொல்வார்கள் பார்!” என கர்ஜித்தார். அம்மாவுக்கு நடந்தது புரிந்திருக்க வேண்டும். மெல்ல அவர் அருகில் சென்று நடந்ததற்கு மன்னிப்புக் கேட்டார். மிகவும் பொறுமையாகப் பேசினார். அவர் அப்பாவைத் தவிர மற்ற அனைவரிடமும் அப்படித்தான் பேசுவார். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என அம்மா சொல்லிக்கொண்டிருக்கும்போதே போப்பி என் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக விடுபட்டு அம்மாவின் அருகில் சென்று ‘லொள்’ என்றான். எந்தப் பிடிப்பும் இல்லாமல் இரு கால்களில் நின்று தன்னை அணைத்துக்கொள்ளச் சொன்னான். அம்மா பல்லைக்கடித்தபடி ‘வீட்டுக்குப் போ’ என்றதும் சுற்றிச்சுழன்று ஆடினான். அம்மாவின் கைலியைப் பிடித்திழுத்து ‘எங்கே பிடி பார்ப்போம்’ எனச் சொன்னான். நான் அம்மாவை பலவீனமாகப் பார்த்தேன். அவள் மூக்கு விரிவது கடும் கோபத்தின் வெளிப்பாடு எனப் புரிந்தது. ஒரு வழியாக முன்னங்கால்களைப் பிடித்துத் தூக்கி இரண்டு கால்களில் நடக்க வைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். 

அம்மா அன்று இரவு என்னிடம் ஒன்றும் பேசவில்லை. அப்பாவிடம் தொலைபேசியில் கத்துவது மட்டும் மந்தமாகக் கேட்டது. “ஒரு மாசமெல்லாம் காத்திருக்க முடியாது. அடுத்த வாரமே வேலைய கோலாலம்பூர் பிராஞ்சிக்கு மாத்திக் கேட்டுட்டு வாங்,க” என்றதோடு மௌனமானார். அம்மா அறையினுள் அழுதுகொண்டிருப்பார் என்றே எனக்குத் தோன்றியது. வீடு மாற்றலாகி வந்த மறுநாளே அப்பா பினாங்கில் வேலை உள்ளதாகச் சொல்லிப் புறப்பட்டிருந்தார். அவர் வேலை செய்யும் மசாலா நிறுவனம் பினாங்கு முழுவதும் உள்ள கடைகளில் அப்பா விநியோகித்த பொருள்களின் வசூலை முடித்துக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும் என ஒரு மாதக் கெடு கொடுத்திருந்தது. 

காலையில் எழுந்தபோது போப்பிக்கு எப்படி லைசன்ஸ் எடுப்பது என புரூஸ் லீயிடம் அம்மா கேட்டுக்கொண்டிருந்தார். அவர் சொல்லும் நுணுக்கங்கள் எதுவும் அம்மாவுக்குப் புரியவில்லை என அவள் முகத்திலேயே தெரிந்தது. “அந்த ஆபிஸெல்லாம் எங்க இருக்கோ… அப்பா வந்தாதான் எடுக்கணும்,” என சோர்வாகச் சொன்னாள். போப்பியைப் பார்த்து முறைத்தாள். போப்பிக்கு இப்போது அம்மாவின் கோபம் புரிந்திருக்க வேண்டும். காதுகளை மெல்ல மடக்கி, முனகியபடி தாடை தரையில் படியப் படுத்துக்கொண்டான். கொஞ்ச நேரம்தான். பின்னர் வாயைத் திறக்காமலேயே இரும்பைக் கண்ணாடியில் கீறுவதுபோல ‘உய்ய்’ என ஒலியெழுப்பி அதையே குரைப்பாக மாற்றினான்.  மறுபடியும் வந்த புரூஸ் லீ பத்திரமாக வைத்திருந்த அவர் நாயின் சங்கிலியை அம்மாவிடம் கொடுத்து ஏதோ கிசுகிசுத்துப் புறப்பட்டதும் “இன்னிக்கு முழுக்க அவனை அவுத்து உடாத,” என அம்மா சொல்லிவிட்டுச் செல்வதைப் பரிதாபமாகப் பார்த்தான். 

போப்பிக்குச் சங்கிலியால் கட்டிக்கிடந்தெல்லாம் பழக்கமில்லை. குட்டியாக வந்த நாள் முதலே அவனை சுதந்திரமானவனாகவே வளர்த்தேன். சங்கிலியால் கழுத்தைப் பிணைத்ததும் என்னை வினோதமாகப் பார்த்தான். நான் அடுத்து அவனை என்ன செய்யப் போகிறேன் எனக் குழம்பியிருக்கக்கூடும். குரலை மாற்றி எதையோ கூற முயன்றான். அன்று மதிய உணவை அவன் சாப்பிடவில்லை. நான் ‘அப்… அப்… சிட்… சிட்…’ என ஆயிரம் முறை சொல்லியும் எதையும் கண்டுகொள்ளாமல் மௌனமாகவே படுத்துக்கிடந்தான். அம்மா எட்டிப்பார்த்து “ரோசத்துக்கு மட்டும் கொறைச்சலில்லை,” என வைவதை பெருமூச்சுடன் ஏற்றுக்கொண்டான். இரவு நெருங்க நெருங்க எனக்குப் பயம் வந்தது. எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியே அழைத்துச்சென்று வர வேண்டுமென முடிவெடுத்துக்கொண்டேன். மனதில் நான் சென்று திரும்பக்கூடிய வரைபடங்களை பல மாதிரி போட்டுக்கொண்டேன். 

என் வீட்டின் வலது புறத்தில் அந்தக் குடியிருப்பின் பிரதான சாக்கடை ஓடுவதால் இடது புறம் மட்டுமே நடக்க வேண்டிருக்கும். நேராக நடந்து சென்றால் அக்குடியிருப்பு வரிசையின் தொங்கலில் ஒரு  வீட்டை தனியார் பாலர் பள்ளியாக்கி நடத்துகிறார்கள். மாலையில் யாரும் அங்கு இருக்கப்போவதில்லை. அதன் வெளிப்புறம் பசும் புற்கள் சூழ விசாலமாகவே இருக்கும். போப்பி அங்கே சுதந்திரமாக மூத்திரம் பெய்யலாம் என்பது திட்டம். அதையே அமுல்படுத்தினேன். 

முதலில் எதிர்வீட்டுக்குத்தான் செல்ல வேண்டுமெனத் திமிறினான். “அங்க என்னா பன்னீரையா தெளிக்கப்போற” என சங்கிலியைப் பிடித்து வேகமாக இழுத்துச்சென்ற பிறகு எங்களுக்குள் இயல்பாக இணைந்த நடை உருவானது. எங்கும் இழுக்காமல் உற்சாகமாக வேடிக்கைப் பார்த்தபடி நடந்துவந்தான். இவ்வளவு சீக்கிரம் அவன் எனக்கு அடங்கியது ஆச்சரியமாக இருந்தது. “கம்… கம்…” எனச் சொல்லிக்கொண்டே அவனைக் கூட்டிச்சென்றேன். நான் நினைத்ததுபோலவே பாலர் பள்ளிக்கு வெளிப்புறம் இருந்த பரந்த புல்வெளி அவனை உற்சாகம் கொள்ளச் செய்தது. அங்கு அனாதையாகச் சுற்றிக்கொண்டிருந்த தவளையைச் சீண்டியும் தட்டானைத் துரத்தியும் விளையாடினான். ஆங்காங்கே விழுந்திருக்கும் சுள்ளிகள், தெருநாய் கழித்துச்சென்ற காய்ந்த மலம், தீயணைப்பு பீலி என எல்லாவற்றையும் முகர்த்து பார்த்தவன் என்னைப் பார்த்து ஒருதரம் குரைத்தான். வால் ஆடுவதில் உடலில் பின்புறம் மொத்தமுமே வேகமாக அசைந்தது. ஏதோ செய்யத் திட்டமிடுகிறான் என நான் சங்கிலியை இறுக்கிப்பிடிக்கவும் வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தான். நான் எவ்வளவு பலவீனமாக இருக்கிறேன் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். அவன் இழுத்த இழுப்பில் என் வலது கையுடன் உடலின் ஒரு பகுதி முழுக்க சாய்வாகப் போனதால் இன்னொரு கை கொண்டு இழுத்துப் பிடிக்க முடியவில்லை. உண்மையில் உடல் என் கட்டுப்பாட்டில் இல்லை. நான் அந்தச் சங்கிலியின் ஒரு தொடர் இணைப்புபோல அவன் பின்னே ஓடினேன். அவன் தன் பின்னங்கால்களை முன்னங்கால்களுக்கு நடுவில் விட்டு அழுத்தம் கொடுத்து ஓடுவது சிறுத்தை தாவிச்செல்வது போல இருந்தது. ஒரே ஒரு வினாடி நின்று என்னைத் திரும்பி பார்த்து ‘வேகமாக என் பின்னால் வா’ எனக்குரைத்து ஓட்டத்தைத் தொடர்ந்தான். நான் நினைத்தது போலவே எதிர்வீட்டின் வாசலில் மூத்திரம் பெய்தான். 

இம்முறை அந்தக் கிழவரை சமாதானம் செய்ய லிம்மின் அப்பா வர வேண்டியதாய் போனது. என் அம்மா கண்களுக்குள் கொள்ளித் துண்டுகளை வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து முறைத்தாள். போப்பி இன்னும் விளையாட்டு ஆர்வத்திலேயே இருந்தான். எனக்கு நாக்கு வறண்டு மூச்சு வாங்கியது. அம்மா வைத்திருந்த மொத்தக் கோபத்துடன் ‘போப்பி’ எனக் கத்தவும் வாலைச் சுருட்டிக்கொண்டு வீட்டினுள் புகுந்து தாடையை தரையோ வைத்துக்கொண்டான். அம்மாவின்  அடித்தொண்டை சத்தம் கிழவரையும் பயப்பட வைத்திருக்க வேண்டும் “நாளை என்ன நடக்கிறது எனப் பார்!” என்றவர் வீட்டுக்குள் புகுந்து கதவை இழுத்தடித்து சாற்றினார்.

லிம்மின் அப்பா, “அவன் மோசமானவன். என் நாய் இரத்தம் கக்கி வீட்டின் முன் இறந்து கிடந்தது. அருகில் அவித்த முட்டை. இவன்தான் முட்டையினுள் ஊசியை வைத்து அதைக் கொன்றிருக்க வேண்டும். நான் பார்க்காவிட்டாலும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதற்கு முன்பே இங்கு சில நாய்களை இவன் கொன்றுள்ளதாகப் பேச்சு உண்டு,” என்றார். அம்மாவுக்கு அவர் சொன்னது பயத்தைக் கொடுத்திருந்தாலும் “சாகட்டும் சனியன்” எனத் திட்டிவிட்டு உள்ளே சென்றாள். போப்பி அம்மாவை ஏறெடுத்துகூட பார்க்கவில்லை. கண்களை வல இடமாக அலையவிட்டானே தவிர வேறு எதையும் காட்டிக்கொள்ளவில்லை. அம்மா உள்ளே நுழைந்ததை உறுதி செய்த பிறகு தலையைத் தூக்கி என்னைப் பார்த்து வாலாட்டிச் சிரித்தான். உள்ளே அம்மா தொலைபேசியில் அப்பாவிடம் கத்துவது கேட்டது.

மறுநாள் முழுக்க அம்மா போப்பியை அவிழ்த்துவிட அனுமதிக்கவே இல்லை. லிம் பந்தை எடுத்து வந்தபோதும் கட்டியே கிடக்கட்டும் என்றாள். போப்பி எங்களுடன் விளையாடக் காட்டிய உற்சாகத்தில் சங்கிலி அறுந்துகொண்டு வந்துவிடுமோ என்ற சந்தேகமெல்லாம் வந்தது. நெடுநேரம் குரைத்துப் பார்த்து சோர்ந்துபோனவன் வலது காலை இடது காலின் மீது போட்டு படுத்துக்கொண்டான். நாக்கை நீட்டி மூச்சு வாங்கினான். எனக்கு அவனைப் பார்க்க உண்மையில் பாவமாக இருந்தது. அருகில் சென்று அமர்ந்தேன். “இனிமே அந்த ஆள் வீட்டுப்பக்கம் போகாதே டா” என்றேன். பெரிய உற்சாகமில்லாமல் கையை நக்கிவிட்டான். பின்னர் கவிழ்ந்து அடிவயிற்றைக் காட்டினான். அவன் தான் இன்னும் குட்டியென்றே நம்பியிருந்தான்.

இரவில் அவனை அழைத்தபோது, பெரிய ஆர்வமில்லாமல்தான் முன்னே நடந்தான். உடலைச் சாய்த்து இழுக்கவில்லை. இடவலம் ஓடவில்லை. அவனுக்கு எங்கே செல்ல வேண்டுமென தெரிந்திருந்தது. புல்வெளி பரப்பில் ஏதோ எல்லாவற்றுக்கும் கட்டுப்பட்டவன்போல மூத்திரமும் மலமும் கழித்துவிட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். தொலைவிலேயே கிழவர் வாசலில் நிற்பது தெரிந்தது. முன் ஜாக்கிரதையாக இருக்கலாம். அவர் கையில் ஒரு தடிமனான கம்பு இருந்தது. நான் அவரை ஏறெடுக்காமல் நடந்தேன். சரியாக எங்கள் இரு வீட்டுக்கு மையத்திற்குச் சென்றதும் என்ன நினைத்தானோ ‘லொள்’ என்றவன் என்னை பலம் கொண்டு இழுத்தான். என்னால் அவன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் அந்தச் செய்கைக்கு தயாராக இல்லை. சட்டெனப் பாய்ந்து கிழவரின் தோள்கள் மீது ஏறி நின்று உதட்டை நக்கிவிட்டான். அவனது பெரிய நாக்கு, அவரது கன்னம் மூக்கெல்லாம் வழித்தெடுத்தது.

அவர் போட்டக்கூச்சலில் ஆங்காங்கே வீடுகளில் இருந்து ஆட்கள் எட்டிப் பார்க்கத் தொடங்கினர். நான் அவன் கழுத்து பகுதியில் இருந்த சங்கிலியை பலம் கொண்டு இழுத்தபோது அவன் நகங்கள் அவர் தோள்களில் கீறியிருந்தன. கிழவர் முகத்தில் ஆசிட் பட்டதுபோல துடித்தார். கையில் இருந்த கழியை தூக்கிப்போட்டுவிட்டு வாசலில் இருந்த வாளி நீரை முகத்தில் அள்ளி அள்ளி தெளித்தார். அவர் பக்கத்து வீட்டில் இருந்த சில மலாய்க்காரர்கள் ஓடிவந்து எவ்வளவு சமாதானம் செய்தும் குமுறி அழுதார். கூட்டம் கூடியதும் போப்பி உற்சாகமானது. குரைத்து அனைவரையும் விளையாட அழைத்தான். பின்னர் அவன் தலையை உதறவும் வாயில் இருபக்கமும் தொங்கிய சதையில் தேங்கியிருக்கும் எச்சில் நான்கு திசைகளும் பறந்தது. கிழவருக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர். எல்லாரும் போனதில் போப்பிக்கு ஒரே வருத்தம். அம்மா வீட்டை விட்டு வரவேயில்லை. 

மறுநாள் காலையில் போப்பி என்னைப் பார்த்து உற்சாகமாக வாலை ஆட்டினான். நேற்று இரவு என்னிடம் வாங்கிய அடி ஒன்றுமே அவனுக்கு நினைவில் இல்லை. நாயை அடித்து வளர்த்தால்தான் நாம் சொல்வதுபடி கேட்கும் என லிம்தான் அறிவுரை சொல்லிவிட்டுப் போயிருந்தான். அப்பா தொலைபேசியில் “ஒன்னய ஆம்பளன்னு நம்பிதானடா உட்டுட்டு போனேன்!” எனத்திட்டியது என்னை அதிகமே உசுப்பியது. 

முதல் அடியை பிரம்புக் கோலில் மெதுவாகத்தான் அடித்தேன். அது அப்பா எனக்காக வாங்கி வைத்தது. மெதுவாக அடித்தாலும் சுளீர் என வலிக்கும். அவனிடம் எந்த அசைவும் இல்லாததால் மறுபடியும் ஒன்று கொஞ்சம் வேகமாகக் கொடுத்தேன். கால்களை உள்ளிழுத்துக்கொண்டான். பின்னர் நிதானமாக அடிவிழுந்த இடத்தை பார்த்துவிட்டு உடலை ஒடுக்கிக்கொள்வது எனக்குக் கடுப்பை மூட்டியது. அவன் செயல் என்னை அவமதிப்பதாக உணர்ந்தேன். மூன்றாவது அடி வேகமாக விழவும் கொஞ்சம் கோபமாகப் பற்களைக் காட்டி குரைத்தான். பின்னர் அவனுக்கு தான் குட்டி என நினைவு வந்திருக்க வேண்டும். மல்லாக்க படுத்து அடிவயிற்றைக் காட்டினான். அவன் அபோதம் எனக்குக் கடும் எரிச்சலை மூட்டியது. மூன்று நாள் கோபம் மொத்தமாக வந்து கண்மண் தெரியாமல் அடித்தேன். முதலில் வலியால் எதிர்த்துக் குரைத்தவன் பின்னர் தனது அவ்வளவு பெரிய உடலை ஒடுக்கிக்கொண்டு அடித்தொண்டையில் அழுதான். சில அடிகள் எலும்பில் பட்டபோது ‘வாள்’ என்றான்.

நான் போப்பியின் அருகில் சென்று அமர்ந்தபோது அவனும் அமர்ந்து கொண்டே தனது ஒரு கையை மட்டும் எடுத்து என் கால் மூட்டில் வைத்தான். தான் கோபித்துக்கொள்ளவில்லை என்கிறானா? எனக்கு அந்த பார்வையின் அர்த்தம் புரியவில்லை. அவன் உடலைத் தடவினேன். அடித்த இடமெல்லாம் தடவினேன். அவன் கண்களில் இன்னமும் ஏக்கம் தெரிந்தது. வாஞ்சையைக் கோரும் ஏக்கம். கழுத்தைக் கட்டிக்கொண்டேன்.  ‘இனிமே அடிக்க மாட்டேன்’ என்று மார்புப் பகுதியை தடவியபோது காதுகளை விடைத்து சுகத்தை உள்வாங்கினான். 

அன்று பெரும்பாலும் நான் போப்பியுடன்தான் இருந்தேன். நேற்று நான் செய்த செயலை அவன் விளையாட்டுத்தனத்தால் கீறிக்கொண்டிருந்தான். எதுவும் நினைவில் இல்லை என்பதுபோலவே உடல் மொத்தத்தையும் குழைந்து காட்டினான். இரவு அவன் அழைக்காமலேயே சங்கிலியைப் பிடித்துக்கொண்டு வெளியேறினேன். இம்முறை கிழவர் முன்னமே வாசலில் நின்றார். அதே கட்டையுடன் முறைப்புடன் காத்துக்கொண்டிருந்தார். எனக்கு அவரைப் பார்க்க வெறுப்பாக இருந்தது. போப்பி அவர் வீட்டு வளாகத்தில் மூத்திரம் பெய்வது அப்படி ஒன்றும் குற்றமில்லையெனத் தோன்றியது. நான் என் பிடியைத் தளர்த்தினேன்.

“இன்று வந்தால் உன் நாயின் மண்டையை பிளப்பேன் பார்!” என்றார்.

நான் நிதானமாக அவர் அருகில் சென்றேன். போப்பி அவரைப் பார்த்து வாலாட்டினான். 

“ஒரு நாயை உன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை… என்ன ஆண்மகன் நீ!” என்றார்.

“நீங்கள்தான் முயன்று பாருங்களேன்!” எனச் சங்கிலியை அவரை நோக்கி வீசியபோது தடுமாறிப் பிடித்தார். போப்பி என்ன நினைத்தானோ சட்டென அவரை இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கினான். கிழவர் சங்கிலியுடன் அவனைப் பின்தொடர்ந்தார். நான் ஏன் அப்படிச் செய்தேன் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அது பெருந்தவறு என கொஞ்ச நேரத்தில் உணர்ந்தேன். அவர் விழுந்து அடிப்பட்டால் இன்னும் பெரிய விவகாரமாகும் என அவர் பின்னாலேயே ஓடினேன். “சங்கிலியை விட்டு விடுங்கள்” எனக் கத்தினேன். அது காது கேட்கும் தூரம்தான். ஆனால் அவர் விடவில்லை. போப்பியின் ஓடும் வேகத்தையும் அதன் தசைகளின் வலுவையும் தொலைவில் இருந்தே பார்க்க முடிந்தது. வெளிச்சம் உள்ள இடங்களில் அவன் உரோமம் மின்னியது. கிழவர் வைத்திருந்த கழியை கைவிட்டிருந்தார். 

போப்பி தனக்கு புதிய ஒரு நண்பன் கிடைத்த சந்தோசத்தில் அவரை எல்லாத் திசைகளுக்கும் இழுத்துச் சென்றான். கிழவர் ஓடுவது ஒரு சின்னஞ்சிறிய சிறுவனின் ஓட்டம் போலவே இருந்தது. இழுபடும் பட்டம்போல அவர் கால்கள் அவ்வளவு இயல்பாக இசைந்தது. என்னால் அவர் முகத்தைப் பார்க்கமுடியவில்லை. ஆனால் அவர் சிரித்துக்கொண்டிருப்பதாகவே என் உள்ளுணர்வு கூறியது. நான் ஓடிச்சென்று சங்கிலியை அவரிடமிருந்து பிடுங்கினேன். போப்பி அவர் தோள்களில் நின்று முகத்தில் நக்கியதை அவர் தடுக்கவில்லை. நெற்றியோரம் வியர்வை. மூச்சிரைத்தது அவருக்கு. நான் என் இரு கரங்களையும் கூப்பி அவரிடம் மன்னிப்புக்கேட்டேன். இனி எப்போதும் இப்படி நடக்காது என சத்தியம் செய்தேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. தலை குனிந்தே இருந்தது. நிதானமாக மிக நிதானமாக வீட்டை நோக்கி நடந்தார்.

அன்றிரவே அவர் வீட்டில் தூக்குமாட்டி இறந்துவிட்டது மறுநாள் காலையில் வழக்கம்போல பசியாற கொடுக்க வந்த உணவக பணியாளன் வழி தெரிந்துகொண்டோம்.

லிம், “பார்த்தாயா… அவன் ஒரு பைத்தியம்… சொன்னேன் அல்லவா?” என காதில் கிசுகிசுத்தான். நான் ஒன்றும் சொல்லவில்லை. நேற்று நடந்ததைச் சொன்னால் அவனே போலீசுக்குப் புதிய கதையை ஜோடித்துக் கொடுப்பான் என்பதால் இறுக்கமாக முகத்தை வைத்திருந்தேன். போலிஸ்காரர்கள் புரூஸ் லீயிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். கிழவரின் பிள்ளைகள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். நரை தலையுடன் மூப்பாகத் தெரிந்த பெண் கிழவரின் மருத்துவ அறிக்கைகளைப் போலீசுக்குக் காட்டி பேரனின் விபத்துக்குப்பின் அவருக்கு ஏற்பட்ட மனப்பிறழ்வை விளக்கிக்கொண்டிருந்தாள். மருத்துவ வண்டி கொஞ்சம் தாமதமாகவே வந்து சேர்ந்தது. பிணத்தைக் கயிற்றிலிருந்து இறக்கி வெளியே எடுத்துவந்தபோது போப்பி நிறுத்தாமல் ஊளையிட்டதை கிழவரின் பிள்ளைகள் வினோதமாகப் பார்த்தார்கள். 

4 comments for “ஞமலி

 1. முனியாண்டி ராஜ்.
  January 3, 2021 at 10:27 pm

  கதை சிறப்பாக இருந்தது. யதார்த்தமான சம்பவங்களின் கோர்வை. சில நல்ல தமிழ்ச் சொற்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

 2. sv
  January 4, 2021 at 8:37 pm

  என்ன செய்தீர்கள் கிழவனை. ? தோண்டினால் பல ஆதரங்கள் வெளிப்பட்டு தற்கொலை கொலையாக மாற வாய்ப்பிருக்கிறது.
  சிறுகதையை வாசித்துக்கொண்டிருக்கின்றபோதே, வாய்விட்டுச்சிரித்தேன். நாயகன் நாய்தான். இருப்பினும் இழுத்துக்கொண்டு ஓடும் பராமரிப்பளரின் நிலை ஒல்லிக்குச்சி நகைச்சுவை நடிகர்களை நினைவிற்குக் கொண்டுவந்தது.
  இது நாயின் கதை என்றாலும், நம்மவர்கள் குழந்தைகளையும் அப்படித்தான் வளர்ப்பார்கள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் நச்சரிப்பால். புரியாத மொழியில் பேசிக்கொண்டு..
  அது இப்போதான் கம், கோ பழகுது, அது எப்படி இங்கிலிஷ்யில் படிக்கும் …!!!! ஹாஹாஹா. முடியல…..
  அதுசரி, ஞமலின்னா என்ன.?

  விஜி

 3. கலைசேகர்
  January 9, 2021 at 12:03 pm

  *ம.நவீனின் ‘ஞமலி’ (சிறுகதை) எமது வாசிப்பில்*

  நாய் பிரியர்களுக்கான ஒரு சிறந்த பரிசு ‘ஞமலி’. எழுத்தின் வழி ஒரு வளர்ப்பு நாயின் நடவடிக்கைகளை இத்தனை உயிரோட்டமாக காட்சிப்படுத்தியமைக்கு முதற்கண் கதாசிரியருக்கு பாராட்டுகள்.

  போப்பி எனும் ‘க்ரெட் டென்’ இரக நாய் அதன் உரிமையாளர்களுடன் கம்பத்திலிருந்து பட்டணத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறது. அது அதுவாகவே இருக்கிறது.

  புதிய இடத்தின் சுற்றுப்புறத்தார் அவர்களின் எதிர்ப்பார்ப்புகளை போப்பியின் மீது திணிக்க முயல்கின்றனர். குறிப்பாக (மண்டை ஓடி என கருதப்படும்) அண்டை வீட்டு முதியவரின் இறுக்கம் நாய் உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது. போப்பி எதையும் கண்டுக்கொள்ளாமல் அதன் அன்பை மட்டும் அனைவரிடத்திலும் பரிமாறுகிறது. அதன் அன்பை உணரும் முதியவர் தற்கொலை செய்து கொண்டு மடிகிறார்.

  முதல் வாசிப்பில் அவரின் தற்கொலைக்கு காரணம் குற்ற உணர்ச்சியே என தோன்றியது. அப்படியானால் இது ஒரு சாதாரண கதையாகவே முடியும். ஆனால் இக்கதை வேறு அர்த்தம் சொல்வதை நுணுகி வாசித்தாலே அறியலாம்.

  பேரனின் இழப்பின் காரணமாக இறுக்கமான மனதோடு முடங்கிக் கிடந்த முதியவர்தான் கதை முழுவதும் காட்டப்படுகிறார். அவருக்கு உணவை பிறர் வந்து கொடுக்கின்றனர். வீடு கேட்பாறற்று இருண்டு கிடக்கிறது. அதற்கு காரணம் அவர் பேரனின் இழப்பு. அந்த இழப்புக்குப் பின்னர் அவர் மனிதர்கள் அண்டாத சூனியத்தில் இருக்கிறார்.

  அதிலிருந்து அவரை மீட்பது போப்பி. அவரை இழுத்து கொண்டு ஓடும் இடத்தில் போப்பி அவர் கண்களுக்கு அந்த பேரனாகவே தெரிந்திருக்கிறது. அது நக்குவதை ஏற்கிறார்.
  போப்பி செலுத்திய அன்பு அவர் இறுக்கத்தை உடைக்கிறது. அவர் தன் சூனிய உலகில் இருந்து மீழ்கிறார்.

  பேரனின் இழப்பில் உண்டான இறுக்கம் தளர அவர் நிஜ உலகில் நுழைகிறார். தன்னை மறித்துக்கொள்கிறார்.

  (புற அழுத்தங்கள் கலைஞனின் வெளிபாட்டுக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்கு நகைச்சுவை மிளிரும் இக்கதை ஒரு சான்று)

  நன்றி.

  கலைசேகர்

 4. Maniramu Maniramu
  February 11, 2021 at 10:00 am

  கதையோடு ஒன்றிப் போக முடிகிறது. வந்த காட்சிகளே திரும்ப திரும்ப வருவதை தவிர்த்திருக்கலாம். அடிக்கடி அந்த வீட்டுக்குப் போய் மூத்திரம் பெய்வதை விரும்புவதற்கு காரணம்.. அங்கே மண்ணுக்கடியில் கிழவனால் புதைக்கப் பட்ட சடலம் எதுவும் இருக்குதோ.. அதை மோப்பம் பிடித்துதான் போப்பி ஓடுதோ என்று நினைத்தேன். ஆனால் அது அப்படி நிகழலல. நினைக்காத முடிவானபோதும் அதில் நிறைந்த அமானுஷ்யம் காண்கிறேன். பேரனின் ஆன்மா போப்பிக்குள் இருப்பதான புரிதல் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *