இறுதி சாகசம்

என்னுடைய அப்பாவழித் தாத்தாக்கள், அப்பாவின் அப்பாவும் சித்தப்பாவும், பள்ளிப்படிப்போடு நிறுத்திக்கொண்டனர். இருவரும் சிறுவயதிலிருந்தே எந்த வேலையையும் சொந்தமாகக் கற்றுக்கொள்வதில் தேட்டையாக இருந்தனர். பதின்மவயதிலேயே எண்ணெய் வியாபாரத்தைத் தொடங்கினர். அதற்கு அதிக முதலீடு தேவையில்லை. ஒரு செக்குக் கட்டையும் ஒருஜோடி மாடும் போதும். குலத்தொழில்தான் என்றாலும் அவர்கள் தொழிலுக்குப் புதிது.

குலவித்தை கல்லாமல் பாகம்படும் என்று துணிந்து இறங்கி, தாமாகவே மாற்றிமாற்றிச் செய்துபார்த்து ஒருவழியாக மிகத்தரமான நல்லெண்ணெய் தயாரிப்பதன் சூட்சுமத்தைக் கண்டுகொண்டனர். சொந்த உழைப்பு என்பதால் ஆட்கூலிச் செலவில்லை. தரமான எண்ணெயைக் குறைவான விலையில் கொடுத்து விரைவில் உள்ளூர் வியாபாரத்தைப் பிடித்தனர். பிறகு சுற்றுப்புற கிராமங்களையும் பிடிக்க ஆரம்பித்தனர்.

தான் எண்ணெய் விற்ற கிராமங்களில் மொத்தம் எத்தனை வீடுகள் இருந்தன என்பதைத் தன்னிடமிருந்த ஓலையை எண்ணிப்பார்த்துச் சொல்லிவிடலாம் என்று தாத்தா ஒருமுறை சொன்னார். அப்போதெல்லாம் பனையோலையில் எழுத்தாணிகொண்டு எழுதுவதுதான் வழக்கம். வீட்டுக்கு ஓர் ஓலை. முதலில் கடனுக்குத்தான் கொடுக்கவேண்டும். அனைவரும் விவசாயிகள் என்பதால் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் வருமானம். சிலர் காசில்லை என்று காதுமூக்கில் கிடப்பதைக் கழற்றிக்கொண்டும் வருவராம்.

ஒருகட்டத்தில் செக்குத்தொழில் வருமானத்தின் எல்லைகள் அவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நெல் விவசாயம் பசுமைப்புரட்சியால் களைகட்டத் தொடங்கியிருந்தது. ஏழுமேனி எட்டுமேனி அறுத்துக்கொண்டிருந்தவர்கள் இரசாயன உரம், பூச்சிக்கொல்லி துணையுடன் இரட்டிப்பு கண்டு முதல் செய்யத் தொடங்கியிருந்தனர். என் தாத்தாக்களும் எண்ணெய்த் தொழிலை ஏறக்கட்டிவிட்டு விவசாயத்தில் இறங்கினர்.

சிறுவிவசாயிகளாகத் தொடங்கி, தீவிர விவசாயம் செய்து மகசூலையும் இலாபத்தையும் பெருக்கி, சில ஆண்டுகளிலேயே பெருவிவசாயிகளாக ஆயினர். அப்போது அவர்கள் இருவரின் மேற்பார்வை மட்டும் போதாமல் இன்னொரு நம்பிக்கைக்குரிய ஆளும் தேவைப்பட்டது. ஆனால் கூலிக்கு மாரடிப்பவராக அல்லாமல் தங்களைப்போலவே யோசித்துச் செயல்படும் ஆளாகவும் இருக்க வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் வந்து சேர்ந்தவர்தான் சின்னப்பா. 

தன் கடுமையான காலந்தவறாத உழைப்பாலும், பொறுப்பான மேற்பார்வையாலும், புத்திசாலித்தனமான ஆலோசனைகளாலும் விரைவில் சின்னப்பா தாத்தாக்களின் நம்பிக்கையைப் பெற்றார். சின்னப்பாவிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் அதை முடித்துவிட்டதாகவே கொள்ளலாம். காலப்போக்கில் விவசாயப் பண்ணையாளாக மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவும் சின்னப்பா ஆகிவிட்டார். என் பாட்டி சின்னப்பாவை ‘பெரியபுள்ள’ என்றும், என் தந்தையை ‘சின்னபுள்ள’ என்றும் அழைப்பார்.

நான் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம்தான் முதலில் சின்னப்பாவைக் குடும்பத்துடன் மிகநெருக்கமாகப் பிணைத்தது என்பதைப் பின்னாளில் அறிந்தேன்.

கைப்பிள்ளையாக இருந்த எனக்கு ஓரிரு நாட்களாகவே கழிச்சலும் காய்ச்சலுமாக இருந்திருக்கிறது. பல்முளைக்கும் பிராயத்தில் இதெல்லாம் உள்ளதுதான் என்று கிராமத்தில் ஒரு மூடநம்பிக்கை உண்டு. எனவே கைவைத்தியமாக ஏதோ மருந்துகள் கொடுத்திருக்கின்றனர். திடீரென எனக்குக் காய்ச்சல் எகிறி ஜன்னி பிறந்து, கைகால்கள் கோணிக்கோணி இழுக்க ஆரம்பித்துவிட்டது. அம்மா போட்ட கூச்சலில் கூட்டம் கூடிவிட்டது. அது அறுவடைக்காலம் என்பதால் ஆண்கள் அனைவரும் வயலில் இருந்திருக்கின்றனர்.  வயலுக்குத் தகவல் சொல்ல ஆள் பறந்தது.

வயலிலிருந்து அனைவருக்கும் முன்னதாக ஓடி வீட்டை வந்தடைந்தவர் சின்னப்பாதான். சின்னப்பா ஓடினால் யாராலும் பிடிக்க முடியாது என்று அப்பா சொல்வார். இதெல்லாம் நடந்தது எண்பதுகளின் தொடக்கம். அந்தக் கிராமத்தில் அப்போது யாரிடமும் காரோ மோட்டார்சைக்கிளோ இல்லை. மாட்டு வண்டியைக் கட்டிப் பிள்ளையையும் தாயையும் ஏற்றிக்கொண்டு மூன்று கிலோமீட்டர் போனால்தான் மருத்துவம். அதுவரை பிள்ளை தாங்குமா என்பது சந்தேகம். என் அம்மா இருந்த பதற்றத்தில் அவரால் என்னை வைத்துக்கொண்டு சைக்கிளில் அமர்ந்து அவ்வளவுதூரம் போகமுடியாது. ஆனால் அவர் தன் பிள்ளையை யாரிடமும் கொடுப்பதற்கும் தயாரில்லை.

கைவசம் நேரமதிகமில்லை என்பதை உணர்ந்த சின்னப்பா, இன்னொருவரை சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்து தயாராக நிற்கும்படி சொன்னார். பிள்ளையைக் கூர்ந்து பார்ப்பவர்போல அருகில் வந்து பார்த்தவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அம்மாவிடமிருந்து என்னைப் பறித்துக்கொண்டு தயாராக இருந்த சைக்கிளில் ஏறிவிட்டார். என்ன நடந்தது என்பதை என் அம்மா உணருமுன்னரே சைக்கிள் தெருமுனை தாண்டிவிட்டது.

மருத்துவமனையில் ஐஸ்கட்டி வைத்து வெப்பம் தணிவிக்கப்பட்டு நான் உயிர்பிழைத்தேன். சின்னப்பாதான் சமயோசிதமாகச் செயல்பட்டு போன உயிரைப் பிடித்துக்கொண்டு வந்தார் என்று என் குடும்பத்தினரின் ஆழ்ந்த அன்புக்கும் நன்றிக்கும் உரியவராக ஆனார்.

இன்னொரு சம்பவத்தில் சின்னப்பா என் தம்பியின் உயிரைக் காத்தார். ஏழெட்டு வயது நானும், நான்கைந்து வயது தம்பியும் திண்ணையை ஒட்டிய ஆளோடியில் விளையாடிக்கொண்டிருந்தோம். உள்ளே மதிய உணவு நடந்துகொண்டிருந்தது. சின்னப்பாவும் குடும்பத்தினரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சிறுபிள்ளைகளான நாங்கள் வீட்டுக்கு வெளியே செல்ல முடியாதபடி, கம்பிகேட்டைச் சாத்தி, கிட்டி போட்டுவிட்டனர். எனக்கோ தம்பிக்கோ அப்போது அக்கிட்டியைத் திறக்கத்தெரியாது.

நாங்களும் கிட்டியைத் திறப்பதற்குப் பல நாட்களாகத் தொடர்ந்து முயன்றுகொண்டுதான் இருந்தோம். அதுவரை திறக்காத கிட்டி அன்று திறந்துகொண்டது. அருகிலிருந்த குளத்தில் ஓடிச்சென்று இறங்கிவிட்டோம். உ.வே.சாமிதய்யர் ‘என் சரித்திர’த்தில் அவர் வீட்டருகே இருந்த குளக்கரையில் சோனப்பாட்டா கல் என்றொரு துணிதுவைக்கும் கல் இருந்ததாகச் சொல்வார். அதைப்போல நாங்கள் இறங்கிய குளக்கரையிலும் ஒரு கல் இருந்தது. முதலில் அதில்தான் துணிதுவைத்து விளையாடினோம். பிறகு எப்படியோ தம்பி மெல்லமெல்ல குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டான். தண்ணீரில் மூழ்குவதும் மேலே வருவதுமாக இருந்த அவனைப் பார்த்ததும் ஏதோ விபரீதம் என்பது எனக்கு விளங்கிவிட்டது.

வீட்டுக்குள் ஓடி, ‘தம்பி.. தண்ணி.. எம்பி.. எம்பி..’ என்று உளறினேன். பிறர் சுதாரிப்பதற்குள் மின்னலாகக் குளத்தில் பாய்ந்தார் சின்னப்பா. தம்பியைக் கரைக்குத் தூக்கிக்கொண்டு வந்தவர் அவனுடைய வயிற்றுப்பகுதியைத் தன் தலையில் அழுந்துமாறு வைத்துக்கொண்டு கிறுகிறுவென சுற்றினார். குடித்த தண்ணீர் மொத்தத்தையும் அவன் கக்கினான். மூச்சும் திரும்பியது. சின்னப்பா குலதெய்வம் முனீஸ்வரனுக்கு அடுத்தபடியாக குடும்பவாரிசுகளைக் காத்த காவல்தெய்வமாகவே ஆனார்.

பாட்டிக்குத் தள்ளாமை அதிகரித்தபோது அன்றாடம் தன்னுடைய இறப்பைக் குறித்து ஓரிரு தடவைகளாகவது பேசுவது வழக்கமாகியது. அந்தப் பேச்சிலும் சின்னப்பாவுக்கு இடமிருந்தது. தன் ஜீவன் போனபின் பத்திரமாகக் கொண்டுபோய்க் காட்டில் சேர்த்துவிடவேண்டும் என்றும் வேறுவேலை அது இதுவென எங்காவது போய்விடக்கூடாது என்றும் சின்னப்பாவிடம் வாரந்தோறும் உறுதிபெற்றுக்கொள்வார். சின்னப்பாவின் வேலை நறுவிசாக இருக்கும் என்பதால் வைக்கப்பட்ட கோரிக்கை. ‘அதுக்கென்னம்மா.. நல்லா செஞ்சிடுவோம்’ என்பதுதான் சின்னப்பாவின் பதில்.

சின்னப்பா எழுதப்படிக்கத் தெரியாதவர். அதிகம் பேசாதவர். சிறு வயதிலிருந்தே கடுமையாக உழைத்த உடம்பு என்பதால் முறுக்கான திரேகம்.  உடலுழைப்புத் தொழிலாளர் பலரையும்போல அவரும் தினமும் இரவில் சாராயம் குடிப்பவர்தான் என்றாலும் உளறுவதோ சலம்புவதோ கிடையாது. இரவில் வாசலில் காற்றுவாங்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் தாத்தாவிடம் வழக்கமாகப் பேசவருபவர், அரிதாகக் குடி கொஞ்சம் எல்லைதாண்டும்போது, சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு நிற்பார். போதை கூடிவிட்டதை அறிந்துகொண்டு, ‘நாளைக்கி வேல ஊருபட்டது கெடக்கு.. நேரத்தோட போய்ப்படு’ என்று தாத்தா சொல்வார். அதோடு சின்னப்பாவும் போய்விடுவார்.

கெடுபிடி அல்லது தேவை அதிகரிக்கும்போது சில ஊர்களுக்கு சாராயத்தைக் கொண்டு சேர்ப்பதற்கு சின்னப்பாவை வியாபாரிகள் அணுகுவரார்களாம். ஒற்றை ஆளாக இரவோடிரவாக கண்காணிப்பு இல்லாத வாய்க்கால்களின் வழியாகவே கொண்டு சேர்த்துவிடுவாராம். தண்ணீரில் சாராய டப்பாக்களின் எடை குறையுமென்பதால் இரண்டு மூன்றுபேர் சேர்ந்து தூக்கவேண்டியதை ஒற்றை ஆளாகச் செய்யமுடியும். வயலில் பலநாள் பாடுபட்டால் கிடைக்கும் வருமானத்தை சாராயக்கடத்தலில் ஓரிரவில் ஈட்டலாம் என்றாலும் அவர் அதைத் தொழிலாகச் செய்ததில்லை. எனவே மற்றவர்களால் இயலாத ஒன்றைத் தான் செய்த ஒரு சாகசமாகவே அவர் அதைச் செய்திருக்கவேண்டும்.

வலைவைத்து மடையான் பிடிப்பது, தேன்கூடு கலைத்துத் தேனெடுப்பது, கன்று ஈன சிரமப்படும் மாடுகளைக் கையாள்வது என அவர் ஆற்றல் பெற்றிருந்த பல வேலைகளில் இயல்பாக ஒரு சாகச அம்சமும் இருந்தது. வயல் வேலைகளின்போது பார்த்திருக்கிறேன். அவரைவிட வயதில் பெரியவர், சிறியவர், ஆண், பெண் என்ற எந்த பேதமுமில்லாமல் அனைவரையும் ஒரே சொல்லில் கட்டுப்படுத்தும் ஆற்றல் சின்னப்பாவுக்கு இருந்தது. அதே அளவுக்குக் கரிசனமும் அவர்கள் மேல் இருந்தது.

அறுவடைக் காலத்தில் அரிகாய்ச்சல் போட்ட கதிர்களைக் கட்டாகக் கட்டித் தூக்கிவந்து அடித்து நெல்மணிகளை உதிர்ப்பார்கள். இருப்பதில் ஆகப்பெரிய கட்டை சின்னப்பா தூக்கிக்கொள்வார். தலையில் கட்டைச் சுமந்து மெல்லோட்டமாக அவர் வீதிக்குள் வரும்போது, கட்டு அவர் தலையை மறைத்து தலைக்குமேல் நான்கடி உயரத்திற்கு இருக்கும். அதைப்பார்க்கும் கண்கள் விரியும்போது ஒரு சாகச உணர்வை அவர் அடைந்திருக்கவேண்டும்.

சின்னப்பா கம்பு விளையாட்டில் மன்னராம். ஆனால் நான் எவ்வளவு கேட்டும் ஒருமுறைகூட சுற்றிக்காண்பிக்கவில்லை. இன்னொரு நாள் நிச்சயம் காண்பிப்பதாகச் சொல்லிவிடுவார். ஒரு வித்தையில் தீர்ந்த கற்புடையவர்கள் அதை வேடிக்கைக்காகச் செய்துகாட்டுவதில் நாணம்கொள்வர் போலும். அவருக்குத் தோள்பட்டையில் பெரிய தீக்காயம்பட்ட தழும்புண்டு. அதன் காரணத்தை நான் கேட்டபோதும்கூட ஒழுங்காக பதிலேதும் சொல்லாமல் மழுப்பிவிட்டார்.

மாட்டுவண்டி ஓட்டுவதற்கு எனக்கு சிறுவயதில் பெருத்த ஆசை. ஆனால் ஆபத்தானது என்று வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். அவர் சாகசத்தை விரும்பியதாலோ என்னவோ என்னுடைய சாகச வேட்கையைப் புரிந்துகொண்டார். சின்னப்பாவோடு என்றால் மட்டும் எனக்கு மாட்டுவண்டிக்கு அனுமதி உண்டு. என்னைத் தேடிவந்த எமனை எட்டி உதைத்தவராயிற்றே?

என்னைத் தூக்கி வண்டியின் மூக்கனையில் உட்காரவைத்துவிட்டுக் கையில் மாடுகளின் கயிற்றைக் கொடுத்துவிடுவார். வண்டியை நானே ஓட்டுவதாகத்தான் முதலில் நம்பிக்கொண்டிருந்தேன். எனக்குப்பின்னால் உட்கார்ந்துகொண்டு கயிற்றைப் பிடிக்காமலேயே மாடுகளை அதட்டியும், காலால் அவற்றின் சப்பையில் தட்டியும் அவரால் வண்டியை ஓட்டமுடியும் என்பது பிறகுதான் தெரிந்தது.

எங்கள் வீட்டுக்குத் தொலைக்காட்சி வந்தபிறகுதான் சின்னப்பா ஒரு எம்ஜியார் பைத்தியம் என்பதைக் கண்டேன். ஞாயிற்றுக்கிழமை தூர்தர்ஷனில் எம்ஜியார் படம் வரப்போகிறது என்றால் சின்னப்பாவிடம் சொல்லிவிடுவேன். தொலைக்காட்சிப் பெட்டியின்முன் ஓரிடத்தில் தரையில் அமர்பவர் படம் முடியும்வரை ஆடாது அசங்காது கண்கொட்டாமல் பார்ப்பார். படம் முடிந்ததும் எழுந்து சென்றுவிடுவார். வேறு எதையும் அவர் பார்க்கவோ கேட்கவோ விரும்பியதில்லை.

நான் வளர்ந்தபின் சின்னப்பா என்னைப் ‘பெரியபுள்ள’ என்றும் என் தம்பியை ‘சின்னபுள்ள’ என்றும் அழைக்க ஆரம்பித்தார். பிறகு படிப்பு முடிந்து ஊரைவிட்டு நான் வெளியே வேலைக்குக் கிளம்பியதும் சின்னப்பாவுடனான அன்றாடத் தொடர்பு அற்றுப்போனது. ஊருக்குப் போகும்போது சிறு உரையாடலோடு சரி. அவருக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. ஆனால் பேசும்போதெல்லாம் நான் சிறுவயதில் பார்த்த உருவத்திலேயே நீடித்தார். காலம் உருண்டோடியது. 

ஒருநாள் சின்னப்பா ரயிலில் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டார் என்ற செய்தி வெளியூரிலிருந்த எனக்குக் கிடைத்தது. என்னால் அந்த செய்தியைச் செரித்துக்கொள்ளவே முடியவில்லை. சின்னப்பா போன்ற ஓர் இரும்பு மனிதர் தற்கொலை செய்துகொள்ள சாத்தியமுண்டு என்பதை என்னால் கற்பனை செய்யவே முடியவில்லை. உடலுறுதியோடு மனவலிமையும் மிகுந்தவர், எதற்கும் கலங்காதவர். அவரின் இதயதெய்வமான எம்ஜியார் மறைந்தபோதுகூட ஒருநாள் கொஞ்சம் வருத்தமாக இருந்தார் அவ்வளவுதான்.

‘இப்புடி போனானே பாவி’ என்று பாட்டி ஆற்றாமையில் அதன்பிறகு அன்றாடம் புலம்பத் தொடங்கினார். தனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் போனான் என்ற கோபம்வேறு. வாழும்போது அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு சரிவர பதில்சொல்வதில் விருப்பமில்லாமல் புதிர்த்தன்மையோடு இருந்த சின்னப்பா இறப்பிலும் புதிராகவே நீடித்தார். இன்ன காரணத்தால்தான் தன்னை மாய்த்துக்கொண்டார் என்று அவரது குடும்பத்தினர் உட்பட எவருக்குமே தெளிவாகச் சொல்லமுடியவில்லை.

கடன்காரர்கள் யாரும் துரத்தவில்லை, உடல்நல மனநலச் சிக்கல் இருந்ததாகத் தெரியவில்லை, குடும்பச் சண்டையில்லை, வேலையில் அல்லல் படவில்லை, அவருக்கென கிராமத்தில் தனி மதிப்பிருந்தது, ஒரு குடும்பம் காவல்தெய்வமாகக் கருதி மானசீகமாக வழிபட்டுக்கொண்டிருந்தது. ஒருவேளை விபத்தாக நடந்திருக்குமோ என்று விசாரித்தேன். அவரே ஓடிச்சென்று ரயிலில் விழுந்ததை அந்தப்பக்கத்தில் மாடுமேய்த்தவர்கள் பார்த்திருக்கிறார்கள். பட்டப்பகலில் நடந்த சம்பவம். ரயில் வரும் நேரத்துக்குத் திட்டமிட்டுப் போயிருக்கிறார்.

அவரது மரணம் ஏனோ எனக்குள் கடும் குற்றவுணர்ச்சியை வளர்த்தது. எந்த ஒரு காரணமுமில்லாமல் ஒரு மனிதன் சாவைத் தேடிக்கொள்ள முடியுமா என்ற கேள்வி அதைவிடவும் பெரிதாக வளர்ந்தது. ஒரு விட்டேற்றியான மனநிலையில் வசப்பிசகாக உண்டான ஒரு சாகச உணர்வுதான் அவரை ரயிலுக்குமுன் பாயச்செய்திருக்க வேண்டும் என்றும் அதுவே அவரது இறுதி சாகசம் என்றும் நான் எனக்கு விளக்கிக்கொண்டேன். அதன்பிறகு கொஞ்சம் ஆறுதல் உண்டானது. என் வீட்டிலும் ஊரிலும் ஆளாளுக்கு அப்படியொரு விளக்கத்தைத் தங்கள் நிம்மதிக்காகத் தேடிக்கொண்டனர். 

2 comments for “இறுதி சாகசம்

  1. ஆரியபாலன்
    January 5, 2021 at 10:38 am

    சிறுகதை சிறப்பிதழ் என்பதால் இதனை சிறுகதை என்றே நம்பி வாசித்தேன். அதற்கான எல்லா கூறுகளும் கொண்ட எழுத்து. சிவானந்தன் சிறுகதைகளும் எழுத வேண்டும்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...