சரவாக் பழங்குடியின மக்கள்

(பகுதி 1)

மனித உரிமை மீதான பார்வை சமீப காலக்கட்டத்தில் அதிகரித்து உள்ளது என்றே சொல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் மக்களுக்கு மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வுகள் பல வழிகளில் போதிக்கப்பட்டு வருகின்றது. மக்களுக்கான மனித உரிமை பாதுக்காக்கப்பட வேண்டி இங்கு நிறைய விவாதங்களும் பேச்சுகளும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. ஆனால், இங்கு முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய மக்கள் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டிருக்கும்போது மனித உரிமைகள் பற்றி விவாதித்து என்ன பயன்? உலகெங்கிலும் உள்ள 370 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடியினர் பெரும்பாலோர் பல்வேறு வகையான அடக்குமுறைகள் மற்றும் உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர். காலனித்துவ மரபுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பழங்குடி மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதற்கான மிக முக்கிய காரணமாகத் திகழ்கின்றது.

19 ஆம் நூற்றாண்டில் இந்தோசீனாவில் (Indochina), காலனித்துவ அரசாங்கங்கள் பழங்குடி மக்களின் இருப்பை அங்கீகரித்து புதிய ஐரோப்பிய-பாணி சட்டக் கட்டமைப்பில் (European-style legal frameworks) அவர்களைக் குறிப்பிட்டு அடையாளப்படுத்தியது. அது ஒரு வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும் கூட அவர்கள் பூர்வகுடி மக்களை குறிப்பிடும்போது காட்டுமிராண்டிகள் (savage), நாகரீகமற்றவர்கள் (uncivilized), பழமையானவர்கள் (primitive) மற்றும் பின்தங்கியவர்கள் (backward) போன்ற எதிர்மறையான அர்த்தங்களை கொண்டுள்ள சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். பூர்வகுடி மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் மற்றும் 2007 இல் பழங்குடியின மக்களின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகளின் பிரகடனம் (United Nations Declaration on the Rights of Indigenous Peoples-UNDRIP) அமல்படுத்தப்பட்ட பிறகும், காலனித்துவவாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட எதிர்மறையான அர்த்தங்களை கொண்டுள்ள பெயர்கள் சில நாடுகளில் அரசாங்கம், முக்கிய சமூகங்கள் மற்றும் சட்ட நூல்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.

ஆசிய நாடுகளிடையே இப்பெயர் குறிப்பிடும் விடயம் மற்றொரு சிக்கலான நிலையை ஏற்படுத்தியுள்ளது. “Indigenous,” தமிழில் “சுதேசி” என்ற சொல்லே இவ்வகை மக்களைக் குறிப்பிடுவதற்கான தகுந்த பெயர் எனச் சொல்லப்படுகின்றது. இம்மக்களின் தனித்துவமான நிலைகள் மற்றும் உரிமைகளை அங்கீகரித்து குறிப்பிடும் இப்பெயரை தேசிய அதிகாரிகளும் தலைவர்களும் மக்களுக்கு அறிமுகப்படுத்த அல்லது ஏற்றுக்கொள்ள தவறியுள்ளனர். இதனால், பூர்வகுடி (Native), பழங்குடி (Tribal) மற்றும் சிறுபான்மையினர் (Ethnic Minorities) ஆகிய சொற்களை பயன்படுத்துவது மட்டுமல்லாமல், சில நடுகளில் பழங்குடி மக்களுக்காக அமல்படுத்தப்படும் சட்டங்களைச் சட்ட புத்தகத்தில் எழுதும் போதும் கூட முறையாக பெயர்களைக் குறிபிட்டு அடையாளப்படுவது இல்லை. இது குழப்பத்தை ஏற்படுத்துவதோடு பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பழங்குடியின மக்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், நிலைநிறுத்துவதற்கும் தடையாக அமைகின்றது. அது மட்டுமல்லாமல், பழங்குடியின மக்களின் இனப்பெயர்களை வசைச் சொல்லாகவும் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக மலேசியாவில். மலேசியர்கள் ‘சக்காய்’  என்ற பழங்குடியின மக்களின் பெயரை வசைச்சொல்லாக பயன்படுத்துவதை அதிகம் காணலாம்.

உலகம் முழுவதும் 370 மில்லியன் பழங்குடி மக்கள் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளனர். அவர்களில் 5,000க்கும் மேற்பட்டவர்கள் வெவ்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சுமார் 4,000க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசக்கூடியவர்கள். பழங்குடி மக்கள் உலக மக்கள்தொகையில் 5% எனச் சொல்லப்படுகிறது. அவர்களில் 70% மக்கள் ஆசியா கண்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

பழங்குடியின மக்கள் பல தலைமுறைகளாக தாங்கள் வாழ்ந்த நிலத்துடன் தங்களுக்கே உரிய ஒரு இனக்கமான உறவைக் கொண்டுள்ளனர். இயற்கை வளங்களை எவ்வாறு நிலையான முறையில் நிர்வகிப்பது மற்றும் அடுத்த தலைமுறைக்கு நிலத்தின் பாதுகாவலர்களாக செயல்படுவது பற்றிய முக்கியமான அறிவை அவர்கள் பெற்றுள்ளனர். நிலத்தை இழப்பது என்பது அவர்களின் அடையாளத்தை இழப்பதற்குச் சமமாகக் கருதுகின்றனர்.

மலேசியாவும் பூர்வக்குடிகளும்

2017-ஆம் ஆண்டின் நிலவரப்படி, மலேசியாவின் 31,660,700 மில்லியன் மக்கள்தொகையில் 13.8% விழுக்காடு பழங்குடி மக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.  மலேசியாவின் எல்லா  பூர்வக்குடி மக்களையும் பொதுவாக  “ஒராங் ஆசால்” அல்லது “ஒராங் அஸ்லி” என்று அழைக்கப்படுகின்றனர். இதன் பொருள் ஆதிமனிதர் என்பதாகும். ஓராங் அஸ்லி என்பது மலாய் தீபகற்பத்தின் நிலத்தை பழங்காலத்திலிருந்தே ஆக்கிரமித்துள்ள பழங்குடியினரைக் குறிக்க மலேசியாவில் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மலாய் வார்த்தையாகும். ஆனால் அவர்களுள் பல பிரிவினர் உண்டு. அதிகாரப்பூர்வமாக, தீபகற்ப மலாயாவில் ஒராங் அஸ்லி இனத்தில் குறைந்தது 18 பழங்குடியினர் உள்ளனர்,  தீபகற்ப மலேசியாவில் நெக்ரிட்டோ (செமாங்), செனோய் மற்றும் மலாய் பழங்குடியினர் குழுக்களில் உள்ள 18 ஒராங் அஸ்லி துணைக்குழுக்களையும் சேர்த்து மொத்த மக்கள் தொகை 0.7% ஆகும்.  அதிகாரப்பூர்வமாக, தீபகற்ப மலாயாவில் ஒராங் அஸ்லி இனத்தில் குறைந்தது 18 பழங்குடியினர் உள்ளனர், அவர்கள் மரபியல் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் மூன்று முக்கிய குழுக்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள். சபாவில் 39 பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். சபாவின் 3,813,200 மக்கள்தொகையில் 2,233,100 அல்லது 58.6% பழங்குடியின மக்களே ஆவர். டுசுன், முருட், பைடன் மற்றும் பஜாவ் குழுக்கள் முக்கியமாக இதில் அடங்குவர். தீபகற்ப மலேசியா மற்றும் சபாயில் வாழும் பழங்குடியினர் நிறைய பேர் தங்களுடைய வாழ்க்கை கலாச்சாரத்தை மாற்றிக் கொண்டு நகரங்களுக்கு மாறி சென்று விட்டனர். ஆனால், சரவாக் மாநிலத்தில் இன்னமும் அதிகமான பழங்குடியின மக்கள் முழு கலாச்சாரத்தையும் பழக்க வழக்கத்தையும் மறக்காமல் இருக்கின்றனர்.

சரவாக்கில் பழங்குடியினர்

சரவாக்கில் வாழும் அனைத்து பூர்வகுடி மக்களையும் பொதுவாக அடையாளப்படுத்தும்போது ‘டாயாக்’ அல்லது “ஒராங் உலு” என்று குறிப்பிடுகின்றனர். இவர்களில் இபான், பிடாயு, மெலனாவ், கயன், பெனான், கென்யா, லுன்பவாங், புனன், பிசாயா, கெலாபிட், பெரவான், கெலாமன், உகிட், மற்றும் செகபன் என 14 பழங்குடி பிரிவினர்கள் அடங்குவர்.

சரவாக் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையான 2,707,600-ல் 70.5% அதாவது சுமார் 1,932,600 பழங்குடி மக்கள் ஆவர். சரவாக் பழங்குடி மக்கள் ஆஸ்திரோனீசிய மொழி (Austronesian language) பேசக்கூடியவர்கள். ஆஸ்ட்ரோனேசிய மொழி இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் பெரும்பகுதியில், பிலிப்பைன்ஸ், மடகாஸ்கர், மத்திய மற்றும் தெற்கு பசிபிக் தீவு, மலேசியா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் மற்றும் தைவான் ஆகியவற்றின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் மொழிகளின் குடும்பம் ஆகும். முன்பு இம்மொழி குடும்பம் மலாயோ-பாலினேசிய மொழி (Malayo-Polynesian languages) என்று அழைக்கப்பட்டது.

இபான்

இபான் (சீ டாயாக்- கடல் டாயாக்)  பழங்குடியினர் சரவாக் மாநிலத்தின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் உள்ளனர். 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வலிமைமிக்க போர்வீரர்களாக வாழ்ந்து வந்துள்ள இபான் பூர்வகுடியினரின் தோற்றம் தற்போது இந்தோனேசியாவின் வடமேற்கு கலிமந்தான் என சொல்லப்படும் கபுவாஸ் நதிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பின், சரவாக் மாநிலத்தின் தென்மேற்கு உள்பகுதியில் மலைப்பாங்கான பிரதேசத்திற்கு இபான் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வரலாற்று குறிப்பேடுகளில் இவர்கள் கடற்கொள்ளையர்களாகவும் மீனவர்களாகவும் சித்தரிக்கப்பட்டதால் இவர்களை “Sea Dayaks” (கடல்வாசிகள்) என்று குறிப்பிடப்பட்டனர். அவர்கள் கெலிங்காங் (Kelingkang) மலைத்தொடரைக் கடந்து, படாங் ஆய் (Batang Ai), ஸ்க்ராங் நதி (Skrang River), சரிபாஸ் (Saribas) மற்றும் ராஜாங் நதியின் (Rajang River) பள்ளத்தாக்குகளில் வீட்டுகளை அமைத்து வாழ்ந்தவர்கள். இபான் மக்கள் கால் வீடு என்னப்படும் கட்டமைப்பு முறையைப் (stilted structures) பயன்படுத்தி அதிகமான அறைகளைக் கொண்டு கட்டப்பட்ட நீண்ட வீடுகளில் வசிக்கின்றனர். கால் வீடுகள் (stilt house) நிலம் அல்லது நீர் மட்டத்துக்கு மேல் நான்கு கால்கள் கொண்டு உயர்த்திக் கட்டப்பட்டிருக்கும். இவர்கள் நதியோரம் வாழ்பவர்கள் என்பதால் முக்கியமாக வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க இது போன்று வீடுகளை அமைத்து வாழ்கின்றனர்.

ஈபான்

கிராமப்புறங்களில் வசிக்கும் இபான் பழங்குடியினர் மாற்று விவசாயத்தின் வழி நெல் சாகுபடி செய்து வருகின்றனர். நிலத்தை முழுமையாக சுத்தம் செய்துவிட்டு, குறுகிய கால வரையறைக்கு உட்பட்டு நெல் பயிரிட்டு பின் அந்நில மண் மீண்டும் தனக்கான சத்துகளை மீட்டெடுப்பதற்காக சில வருடங்களுக்குப் பயன்படுத்தாமல் பாதுகாத்திருப்பார்கள். இபான் பழங்குடியினரின் அவர்களின் பாரம்பரியமான புவா கும்பு (Pua Kumbu) எனப்படும் நெசவு முறை, வெள்ளி கைவினைகள், மர வேலைப்பாடுகள் (wooden carvings) மற்றும் மணி வேலைப்பாடுகள் (beadwork) போன்றவற்றில் புகழ் பெற்றவர்கள்.

“கவாய் டாயாக்” என்னும் நெல் அறுவடை திருவிழா (Gawai Dayak-harvest Festival), “கவாய் கென்யாலாங்” என்ற இருவாய்ச்சி பறவையை போர் கடவுளாக கொண்டாடும் விழா (Gawai Kenyalang-Hornbill the god of war festival), “கவாய் அண்டு” இறந்தவர்களுக்கான திருவிழா (Gawai Antu-festival) ஆகியவை இபான் மக்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் ஆகும்.

இபான் மக்களின் போர்வீரர்கள் தங்கள் துணிச்சலின் அடையாளமாக உருவாகிய பச்சை குத்தும் பழக்கம் இன்று உலகில் மிகவும் தனித்துவமானவையாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வேட்டையாடப்பட்ட மிருகங்களின் தலைகளை வெற்றியின் குறியீடாகவும் மரியாதையைக் குறிக்கும் விதமாகவும் தங்களின் வீடுகளில் இபான் மக்கள் வைத்திருப்பார்கள். 1930களிலே இபான் மக்கள் மிருகங்களை வேட்டையாடுவதை நிறுத்தியிருந்தாலும் இன்னமும் சிலர் இவ்வழக்கத்தை தங்கள் வீடுகளில் கடைப்பிடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இபான் மக்கள் அமைதியான மற்றும் தாராள மனப்பான்மை உடையவர்கள் ஆவர். விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுக்ககூடிய பழங்குடி மக்களுள் இவர்களும் அடங்குவர்.

பிடாயு

இபான் பழங்குடியினரைப் போலவே, பிடாயு வகையைச் சேர்ந்தவர்களும் போர்னியோ இந்தோனேசியாவின் வடமேற்கு பகுதியிலிருந்து போர்னியோ சரவாக்கிற்குப் புலம்பெயர்ந்துள்ளனர். பிடாயு பழங்குடியினர் சரவாக் மாநிலத்தின் மேற்கு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். சரவாக் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 10% விழுக்காடு பிடாயு பழங்குடியின மக்கள் ஆவர். இவர்கள் தற்போது பாவ் மற்றும் செரியன் மாலைப்பகுதியில் வாழ்கின்றனர். அதன் பிறகு இன்று வரை அவர்கள் வேறு எந்த இடத்திற்கும் மாறாமல் அதே இடத்தில் வாழ்ந்து வருவதால் அவர்களை “Land Dayaks” அல்லது “landowners” என்று குறிப்பிடுகின்றனர். பிடாயு (Bidayuh) என்ற சொல் பிஹதா (Biatah dialect) பேச்சு வழக்கில் நில மக்கள் எனப் பொருள்ப்படும். பௌ-ஜகொய் அல்லது சிங்கை (Bau-Jagoi/Singai) என்ற பேச்சுவழக்கில் இவர்களை பிடொயோ (Bidoyoh) என்று அழைகின்றனர். பிடொயோ (Bidoyoh) என்ற பெயருக்கும் நில உரிமையாளர் என்றே பொருள்.

பிடாயு

பருக் (baruk) எனச் சொல்லப்படும் கட்டுமானத்தில் நிலத்தில் இருந்து சுமார் 1.5 மீட்டர் உயரத்தில் ஒரு சுற்று வீடு விசாலமான அமைப்பில் கட்டப்பட்டிருக்கும். பாரம்பரியமாக பிடாயு மக்கள் அம்மாதிரியான வீடுகளில்தான் வாழ்ந்து வருகின்றனர். பிடாயு பழங்குடியினர் சுழற்சி முறை விவசாயத்தை (Swidden agriculture/shifting cultivation) மேற்கொள்கின்றனர். இவ்வகை விவசாயத்தில் சாகுபடி முடிந்தவுடன் தீ மூட்டி நிலம் அழிக்கப்பட்டு பின் சில ஆண்டுகளுக்குப் பயன்படுத்தாமல்  காட்டு தாவரங்கள் சுதந்திரமாக வளருவதற்கு விட்டுவிடுவார்கள். இவ்வாறு சுழற்சி முறையில் தங்களின் வாழ்விடத்தைச் சுற்றி உள்ள அனைத்து நிலங்களிலும் பயிரிட்டு மண்னிற்கும் நிலத்திற்கும் பாதிப்பு இல்லாமல் விவசாயம் செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இபான் இனமக்களுக்கு அருகாமையில் வாழ்ந்து வந்தாலும் கூட பிடாயு பழங்குடியினரின் மொழி சற்று வேறுபட்டே இருக்கும். கொண்டாட்டங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பரிமாறப்படும் துவாக் (tuak) என்ற இனிப்பு அரிசி பானத்திற்கும் (sweet rice wine) பிடாயு மக்கள் பிரபலமானவர்கள் என சொல்லப்படுகிறது.

இபான் மக்களைப் போன்று இவர்களும் கவாய் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், பிடாயு மக்கள் காவாய் பண்டிகை கொண்டாடப்படும் விதம் சற்றே வேறுப்படும். பிடாயு பழங்குடியினர் பண்டைய ஆன்மவாத (பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற நம்பிக்கை) சடங்குகளில் (Ancient Animistic Rituals) அதிகம் நம்பிக்கையுடையவர்கள். காவாய் பண்டிகையின்போது சன்கர் (Sangar) எனச்சொல்லப்படும் மூங்கிலைக் கொண்டு ஆலயம் போல் கட்டப்பட்டிருக்கும் கூடாரத்தில் சடங்குகள் செய்து பிரசாதம் வழங்கி ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். காவாய் தலைவர் தலைமையில் மக்கள் சன்கர் (Sangar) ஆலயத்தைச் சுற்றி நடனமாடுவார்கள். சன்னதியைச் சுற்றி நடக்கும் சடங்கு நடனத்தில் பங்கேற்பவர்கள் மூங்கிலில் சமைத்த பசையம் அரிசி மற்றும் கையால் சுருட்டப்பட்ட சிகரெட் துண்டுகள் போன்ற சில பொருட்களைக் கைகளில் ஏந்திச் செல்வார்கள்.

கம்போங் துயோ (Kampung Duyoh), கம்போங் ஸ்டாஸ் (Kampung Stass) மற்றும் கம்போங் செராசோட் (Kampung Serasot) ஆகிய கிராமங்களில் பிடாயு பழங்குடியின மக்களில் ஜகோய்-பிரடக் (Jagoi-Bratak) என்ற பிரிவைச் சேர்ந்த மக்கள் இந்நூற்றாண்டு காலக்கட்டத்திலும் இம்மரபுகளை உயிர்ப்புடன் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களின் சடங்குகளில் பெரும்பாலானவை காவாய் தலைவரின் வழிநடத்துதலின்படி டாயுங் போரிஸ் (Dayung Boris) எனப்படும் பெண்கள் எடுத்து நடத்துவார்கள். டாயுங் போரிஸ் (Dayung Boris) என்ற பெண் பிடாயு மக்கள் நம்பிக்கையின்படி தாங்கள் வணங்கும் ஆத்மாக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

மெலனாவ்

சரவாக்கின் பிந்துலு நகரத்திற்கும் இராஜாங் நதிக்கும் இடையில் காணப்படும் தென்-மத்திய கடலோர சதுப்பு நிலங்களில் மெலனாவ் எனும் பழங்குடியினர் வாழ்ந்துள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கில் உள்ள சில உள்நாட்டு மக்களுடன் கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் இணைக்கப்பட்டு காடுகளின் உட்புறத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடலோர (coastal areas) பகுதிக்குச் செல்லத் தொடங்கினர். சரவாக்கில் வாழும் பெரும்பாலான பழங்குடியினர் மற்ற இடங்களில் இருந்து இங்கு இடம்பெயர்ந்தவர்கள் ஆனால், மெலனாவ் மக்கள் ஆதிகாலம் தொட்டு இங்கேயே வாழ்ந்து வரும் அசல் குடியேறிகள் என்று சொல்லப்படுகின்றனர். சரவாக்கில் உள்ள முக்கா (Mukah) என்னும் பகுதியில் உயரமான வீடுகளை உருவாக்கி அதில் வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அவர்களில் பலர் மலாய் மக்களின் வாழ்க்கை முறையை ஏற்று கம்போங் வகை குடியிருப்புகளில் வாழ்கின்றனர். பாரம்பரியமாக மெலனாவ் மக்கள் மீனவர்களாக இருந்தவர்கள்.

மெலனாவ்

மெலனாவ் பழங்குடியினர் வாழும் நிலப்பரப்பின் வடகிழக்குப் பகுதியின் பேச்சுவழக்குகள் தென்மேற்கில் வாழும் மக்களிடம் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றன. மெலனாவ் மொழி பேசும் சில மக்கள் தங்களின் பேச்சுவழக்குகளை தனி ஒரு மொழியாகவே மாற்றியுள்ளனர். மெலானாவ் பழங்குடியினர் தங்கள் கிராமங்களைச் சுற்றியுள்ள சகோ பனைகளில் (sago palms) இருந்து மாச்சத்து (starch) உற்பத்தி செய்வதில் கைதேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றனர். மெலனாவ் மக்களின் நடனங்களில் கூட இசைவழி சகோ செய்யும் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளனர். மலேசியாவிலேயே மிகப்பெரிய சகோ ஏற்றுமதியாளார் சரவாக் மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல், இன்றளவும் படகு கட்டுதல் மற்றும் கைவினைப்பொருட்களை உருவாக்குதலில் சிறந்தவர்களாக திகழ்கின்றனர்.

மெலனாவ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு ஆண்டும் ஆத்மாக்களின் மாதம் (Bulan Pengejin-The Month Of The Spirits) எனச்சொல்லப்படும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் மெலனாவ் மக்களால் கவுல் திருவிழா (Kaul Festival) கொண்டாடப்படுகிறது. இவ்விழா வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன் அதிகமாக காற்று வீசும், தொடக்கத்தில் லேசான சாரல் மழை பின், காற்று படிப்படியாக வலுவடையும் எனச் சொல்லப்படுகிறது. மேலும், இச்சமயம் சூரியன் வடக்கு நோக்கி நகர்ந்து சந்திரன் சூரியனின் அசல் இருப்பிடத்தை மாற்றும் எனப்படுகிறது. இந்த திருவிழா மழைக்காலத்தின் முடிவு மற்றும் மீன்பிடி பருவத்தின் வருகை அல்லது தொடக்கத்தை குறிக்கிறது. இக்காலக்கட்டத்தில் கடலில் ஏராளமான மீன்கள் காணப்படும். இந்த நேரத்தை அவர்கள் ஆண்டின் தொடக்கமாகவும், ஆத்மாக்களின் முதல் மாதமாகவும் (The First Month Of Pengejin) குறிப்பிடுகிறார்கள்.

ஐப்போக் (Ipok) என அழைக்கப்படும் கடல் ஆத்மா அல்லது பாதுகாவலர் என்று மெலனாவ் பழங்குடியினரால் நம்பப்படும் சக்தியை வேண்டி நன்றி கூறும் விதமாக இத்திருவிழா நடத்தப்படுகிறது. இந்த நாளில், செராஹாங் (Serahang) என்ற உணவு ஐபோக் பாதுகாவலருக்காக விருந்தாகப் படைக்கப்படும். மூங்கில் இலைகள் மற்றும் நிபா இலைகளுக்குள் தானியம், கோழி முட்டை, மஞ்சள் பசையம் அரிசி, புகையிலை மற்றும் வெற்றிலை ஆகிய அனைத்தையும் ஒன்று சேர வைத்து பூஜைக்கான இவ்வுணவு செய்யப்படும். அவர்கள் செராஹாங் உணவை கடலுக்கு எடுத்துச் சென்று ஐப்போக் கடவுளை வணங்கி அவர்களை தங்கள் விருந்தில் பங்கேற்க அழைப்பார்கள். விருந்துக்குப் பிறகு, பாதுகாவலர்கள் மற்றும் மற்ற ஆத்மாகள் அவர்களுடன் எடுத்துச் செல்வதற்காக விருந்தில் படைக்கப்பட்ட அனைத்து உணவுகளும் பானங்களும் கடற்கரையில் விடப்படுகின்றனர். இது நம்பிக்கையின் அடிப்படையில் கடல் பாதுகாவலர்கள் மற்று ஆத்மாக்களுக்காக படைக்கப்படுகின்ற உணவு என்பதால் மனிதர்கள் அதனை எடுத்து கொள்வதற்கோ சாப்பிடுவதற்கோ அனுமதி இல்லை.

இந்த விழாவின் போது, அவர்கள் “திபோ” என்று அழைக்கப்படும் பெரிய ஊஞ்சலைக் கட்டி, அதைக் கட்டும் போது திபோ மந்திரத்தைப் பாடி, ஏராளமான மலர்கள், ஏராளமான பழங்கள் மற்றும் கடலில் ஏராளமான மீன்கள் கிடைக்க வேண்டும் என்று தங்கள் காவல் தெய்வங்களை வேண்டி ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்.

கயன்

சரவாக்கில் தோராயமாக 15,000 கயன் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் பாரம் ஆற்றின் (Baram River) நடுவே சரவாக்கின் வடக்கு உள்பகுதியில் நீண்ட வீடுகளைக் கட்டி வாழ்கின்றனர். இவர்கள் படகு செய்வதில் தனித்துவமானவர்கள் எனச் சொல்லப்படுகிறது. வெப்பமண்டலம் சார்ந்த பகுதிகளில் காணப்படும் வலிமையான பெலியான் மரகட்டைகளைக் கொண்டு செதுக்குவதில் இவர்கள் திறமை வாய்ந்தவர்கள்.

கயன்

கயான் மக்கள் காட்டில் மிருகங்களை வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. “பேக்கின்” (Bakin) மற்றும் “ஹெபுட்” (Heput) போன்ற தனித்துவமான ஈட்டிகளைக் கொண்டு வேட்டையாடுவதில் வல்லமை வாய்ந்தவர்கள். இதன் வழி காட்டில் உள்ள ஏராளமான மிருகங்களை வேட்டையாடி “சிஹெய்” எனப்படும் வறுத்தல் முறையைக் கொண்டு சமைத்து சாப்பிடுவார்கள். இந்த செயல்முறை “உமா அவோ” (Uma Avo) என்றழைக்கப்படும் விறகு அடுப்புகளில் செய்யப்படும். பழங்காலத்தில் கயன் மக்கள் உணவை நீடித்து நிலைக்கச் செய்ய “நைஹெய்” (Nyihei) என்ற அழைக்கப்படும் செயல்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. எரிக்கரியில் தீமூட்டி அதன் மேல் வேட்டையாடப்பட்ட மிருகத்தின் இறைச்சியை வைத்து உலர்த்துவார்கள். இது போன்று உணவுகளை பதப்படுத்தி நீண்ட நாள் கெடாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் யுத்திகளை கயன் மக்கள் நன்கு அறிவர்.

ஆரம்பக்காலக்கட்டத்தில் கயன் மக்கள் “அப்போ கயன்” (Apo Kayan) என்னும் நம்பிக்கையைப் பின்பற்றி வந்தனர். இதனால் அவர்கள் கழுகு, “பகேய் லாலி” (Pakei Lali), “பாகே இசிட் தாவ்” (Pakei Isit Ta’o) ஆகிய பறவைகளை மரியாதைக்குரியவையாக நம்பினார்கள். இந்நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களுக்கு “டுங்கன் மீன்” (ikan Dungan) குறுமான் (kijang) மற்றும் சருகுமான் (pelanduk) போன்ற சில குறிப்பிட்ட மிருகங்களை வேட்டையாடி உண்பதற்கு அனுமதி இல்லை. இந்த நம்பிக்கையின்படி, ஒருவர் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் அல்லது காட்டில் வேட்டையாடும்போது, “மனுக் இசிட்” (Manuk Isit) என்னும் பறவை கடந்து செல்லும் சத்தம் கேட்டால், அவர்கள் உடனடியாக வீடு திரும்ப வேண்டும் என்று நம்பப்படுகிறது. ஏதோ ஆபத்து வரும் என்பதை அப்பறவை ஓசை எழுப்பி தெரியப்படுத்துவதாக அவர்கள் நம்பினார்கள். பின், “புங்கன்” (Bungan) நம்பிக்கை முறை தோன்றிய பிறகு இந்த பழைய நம்பிக்கை கைவிடப்பட்டது. இந்த புங்கன் நம்பிக்கை 1950களில் மத்திய போர்னியோவில் தோன்றிய உள்ளூர் மத நப்பிக்கை எனக் குறிப்பிடப்படுகிறது. பழங்குடி மக்களில் பாரம்பரிய வழக்கத்தையும் கிருஸ்த்துவ நம்பிக்கையின் பல்வேறு கூறுகளை இணைக்கும் விதத்தில் இந்நம்பிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நம்பிக்கையின் சடங்குகள் அதிகமாக விவசாயத்துடன் தொடர்புடையது எனச் சொல்லப்படுகிறது.

மேலும், கயன் பழங்குடி மக்கள் விசித்திரமான பல நம்பிக்கைகளை கொண்டவர்கள். உதாரணமாக, கயன் மக்களிடத்தில் நாய்கள், புழுக்கள் மற்றும் பிற விலங்குகளைப் பார்த்து சிரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி யாரேனும் சிரித்தால் “கெலிட்” (kelit) எனப்படும் புயல் ஏற்பட்டு அவர்கள் கல்லாக மாறுவார்கள் என நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல், பிறருடைய உடைகள் மற்றும் மீன்பிடி வலைகள் போன்றவற்றைக் கிழித்து நாசம் செய்வதை மிகப்பெரிய தவறாக என்னுகின்றனர். அவ்வாறு செய்தால், அந்த நபர் வயிறு வீங்கி பயங்கரமான வயிற்று வலியில் இறந்துவிடுவார்கள் எனச் சொல்லப்படுகிறது. இளைஞர்கள் முதியவர்களிடம் அவமரியாதையாக நடந்துகொள்வதும் மிகப் பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. மற்றவர்களின் தியாகங்களும் சேவைகளும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு சிறுவயது முதலே நினைவூட்டப்படுகிறது. தடையை மீறிய ஒருவருக்கு பின்னர் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அந்த நிகழ்வை விபத்து என்று நினைக்காமல் மாறாக அதை அவர்களுக்கு வந்துள்ள கொள்ளைநோயாகக்  கருதப்படுகிறது. இன்று வரை நடைமுறையில் உள்ள தடைகளில், ஒருவர் மற்றவர்களுக்கு முன்னால் தற்செயலாக் கூட எச்சில் துப்பக்கூடாது. அதனை கயன் மக்கள் மரியாதையற்ற செயலாக கருதுகின்றனர். இந்த நம்பிக்கைகள் இன்றுவரை கயன் பழங்குடி மக்களிடையே வலுவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

காயன் பழங்குடி மக்கள் நீண்ட மற்றும் பச்சை குத்தப்பட்ட காதுகளைக் கொண்டிருப்பார்கள். இந்த சமூகத்தில் உள்ள பெண்களுக்கு நீண்ட காதுகள் மற்றும் பச்சை குத்தல்கள் கூடுதல் அழகியல் அம்சமாக சொல்லப்படுகிறது. ஒரு பெண்ணின் காதுகள் எவ்வளவு நீளமாக இருக்கிறதோ, அவ்வளவு அழகுடையவர் என்று கருதப்படுகிறது. நீண்ட காதுகளைப் பெற கயன் பெண்கள் அதிக எடை கொண்ட தகரத்தால் செய்யப்பட்ட காதணிகளை அணிந்து கொள்வார்கள். இது போன்ற காதணிகள் “சபாவ்” (Sabau) மற்றும் “லுங்கின்” (Lungin) என்று இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. கயன் ஆண்களும் தங்கள் காதுகளை அலங்கரிக்க விரும்புவார்கள். காதுகளின் மேல் கீழ் என இரண்டு பகுதிகளிலும் துளையிட்டு, அத்துளைகளில் “உதெங்” (Udeng) எனப்படும் மணிகளால் நெய்யப்பட்ட கரடிப் பற்கள் அணிந்துக் கொள்வார்கள்.

பெனான்

பெனான் பழங்குடி சரவாக் மாநிலத்தின் கென்யாலாங்கில் உள்ள சிறுபான்மை இனக்குழுக்களில் ஒன்றாகும். நாடோடி வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வரும் கடைசி பழங்குடி மக்கள் இவர்களே ஆவர். இவர்கள் வேட்டையாடி உணவுகளைச் சேகரித்து உலு-பாரம் பகுதியின் உட்புறத்திலும், லிம்பாங் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். 16,000 மக்கள் தொகைக் கொண்ட பெனான் சமுதாயத்தில் பலரும் இன்னும் நாடோடி வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்றனர். மொழியியல் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் காரணமாக, பெனான் மக்கள் மேற்கு பேனான் மற்றும் கிழக்கு பேனான் என இரண்டு பிரிவினர்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். வர்க்க படிநிலைகளைக் கொண்ட சில பழங்குடி மக்களைப் போலல்லாமல், பெனான் மக்கள் மக்களுக்குள் ஏற்றத்தாழ்வு என வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் சமத்துவம் கடைப்பிடித்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

பெனான்

பெனான் மக்கள் ஊதுகணைக்குழலால் (sumpit) ஒன்றை சுயமாக தயாரித்து வேட்டையாடுவதற்குப் பயன்படுத்துவார்கள். பெனான் மக்கள் பாலூட்டிகள், பாம்பு வகைகள் மற்றும் சவ்வரிசி போன்ற உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். பெனான் பழங்குடி மக்களும் ஆன்மவாதம் நம்பிக்கையைக் கடைபிடிக்கின்றனர். காட்டில் உள்ள ஒவ்வொரு விலங்கு, மரம், ஆறு, ஓடை மற்றும் பாறை ஆகிய அனைத்தினுள்ளும் ஆத்மா இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். காட்டில் செழிப்பாக வாழ இவர்கள் அந்த ஆத்மாக்களுடன் இணக்கமான உறவைப் பேண வேண்டும் என்று கருதுவார்கள்.

பெனான் பழங்குடியினர் தங்கள் வாழ் நாளில் இறப்பை மிகவும் முக்கியமான ஒன்றாக பார்பத்து மட்டுமில்லாமல் அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக பல சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கடைப்பிடிகின்றனர். இறந்தவர்களின் ஆத்மா சாந்தி நிலை அடைய வேண்டும் என்பதற்காக அவர்கள் தலைமுறைகளாக வித்தியாசமான வழக்கங்களைக் கொண்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இறந்து அவர்களுடைய உடல் உதைக்கப்படும் இடங்களுக்கு அருகில் சத்தம் போடக்கூடாது. இறந்த நபரை அடக்கம் செய்த பிறகு, அம்மக்கள் அந்த இடத்தை விட்டு வேறு இடத்தை நோக்கி வாழச் செல்வார்கள். மேலும், இறந்தவர்களின் பெயரை சொல்ல பெனான் மக்களிடையே அனுமதி இல்லை. அந்த இறந்த நபரைக் குறிப்பிட வேண்டிய சூழல் வந்தால் அவர் எங்கு புதைக்கப்பட்டார் என்ற இடத்தின் பெயரையே சொல்ல வேண்டும்.

பெனான் பழங்குடியின் தனித்துவத்தை அவர்களின் பாரம்பரியம் மற்றும் கலை கலாச்சாரத்தின் வழி காணலாம். அவர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளான “கெரிங்கோட்” ஒரு மூக்க்கின் வழி வாசிக் கூடிய புல்லாங்குழல், “பாகாங்” என்னும் கருவி ஒரு மூங்கில் கிட்டார் மற்றும் “ஓரெங்” அல்லது “இலுட்” எனப்படுவது வாய் மற்றும் கைகளைக் கொண்டு வாசிக்கக் கூடிய  புல்லாங்குழல் ஆகும். பெனான் மக்கள் பயன்படுத்தும் கருவிகள் மற்ற போர்னியோ பூர்வீகவாசிகளிடமிருந்து பெரிய அளவில் வேறுப்பட்டு இருக்கும். அவர்கள் உருவாக்கும் பெரும்பாலான கருவிகள் காட்டில் இருந்து பெறக்கூடிய பொருள்களைக் கொண்டு இலகுவாக பயன்படுத்தகூடியதாக இருக்கும்.

பெனான் மக்கள் மிகவும் விரும்பி பயன்படுத்தக்கூடிய கருவிகளில் ஒன்று “ஓரெங்” (oreng) ஆகும். இக்கருவி சாகோ மரத்தின் கிளை வெட்டுக்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த இசைக்கருவி பொதுவாக பேனான் பெண்களால் மகிழ்ச்சியான மற்றும் கவலையான உணர்வுகளை வெளிப்படுத்த வாசிக்கப்படுகிறது. பெனான் பழங்குடியினரின் நம்பிக்கைப்படி “ஓரெங்” இசைக்கருவியை பெண்கள் மட்டுமே வாசிக்க முடியும். அதையும் மீறி, ஆண்கள் இக்கருவியை வாசித்தால் அவர்கள் காட்டில் தொலைந்து போவார்கள் என்பது இவர்களின் நம்பிக்கை. மேலும், பண்டிகை நாட்களில் மற்றும் கிராமத்திற்கு ஏதேனும் விருந்தினர்கள் வந்தாலும் கூட இவ்விசைகருவி இசைக்கப்படும். “ஓரெங்” ஒரு நுட்பமான மற்றும் மென்மையான கருவியாகும். காரணம், இதை நாக்கு மற்றும் வாயைப் பயன்படுத்தி வாசிப்பதற்கு மிக நுட்பமான திறன்கள் தேவை எனச் சொல்லப்படுகிறது. மேலும், இக்கருவியின் சிறப்பு அம்சம் ஒலி சுருதியை பல்வேறு தடிமன்களில் செதுக்குவதன் மூலம் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

சரவாக் மாநில அரசாங்கம் பெனான் பழங்குடி மக்களின் நிலத்தின் மீதான உரிமையை அங்கீகரிக்கவில்லை. 1970களில் இருந்து, சரவாக் முழுவதும் வணிக நோக்கத்திற்காக பழங்குடியினரின் பெரிய அளவிலான நிலங்களின் மரங்களை வெட்டப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டில், பல பெனான் சமூகங்கள் தங்கள் நிலத்தில் உள்ள மரங்கள் வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காடுகளை அழிக்க வரும் நிறுவனங்களின் வாகனங்களை மறித்து சாலைகளில் போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வின் போது நூற்றுக்கும் மேற்பட்ட பெனான் மக்கள் கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இன்று வரை பல பெனான் பழங்குடி மக்கள் தங்கள் நிலத்திற்காக அதை அபகரிக்க நினைக்கும் நிறுவனங்களுக்கு எதிரான முற்றுகைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

கென்யா

கென்யா, சரவாக் மற்றும் இந்தோனேசிய போர்னியோவின் பழங்குடி மக்கள், கயான் அல்லது பொதுப் பெயரான பஹாவ் உடன் குழுவாக உள்ளனர். 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி கென்யா மக்களின் மொத்த மக்கள் தொகை 69,256. அவற்றுள், 25,000 மக்கள் சரவாக்கிலும், 44,000 மக்கள் இந்தோனேசியாவிலும் (கிழக்கு கலிமந்தன்) வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சரவாக்கில் உள்ள கென்யா மக்கள் பலர் பலுய் (Balui) மற்றும் பாரம் (Baram) ஆற்றின் மேல்தளத்தில் இருக்கும் வெப்பமண்டல காட்டுப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மற்றும் சிலர் சமீபத்தில் நகரமயமாக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

கென்யா

வகுப்புவாத வீட்டு (communal house) அமைப்பு முறையில் நிலத்தூண்களுக்கு மேல் 400க்கும் மேற்ப்பட்ட முற்றங்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் வீடுகளில் சில கென்யா மக்கள் வசிக்கின்றனர். முற்றங்களின் பின்புறத்தில், குடும்பங்களுக்கான அறைகளின் வரிசை மற்றும் ஒரு பரந்த மூடப்பட்ட தாழ்வாரம் (veranda) அமைக்கப்பட்டிருக்கும். இந்த தாழ்வாரம் பொதுவான பணியிடமாகவும் பண்டிகை நாட்களில் மக்கள் கூடும் இடமாகவும் உள்ளது. அதே போல், சிலர் ஆற்றோரங்களில் நீண்ட வீடுகளில் வசிக்கின்றனர். இதனால் அவர்கள் மீன் பிடிப்பதற்கும் படகுகளைப் பயன்படுத்தி மற்ற இடங்களுக்குச் செல்வதற்கும் சுலபமாக உள்ளது. 1,200 அடி நீளமுள்ள பெலியான் போன்ற கடின மரக் கம்பங்களைக் கொண்டு இந்நீண்ட வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த வீடுகளிலும் அதே போல் அறை வரிசையும் முன்பக்கத்தில் தாழ்வாரங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.

இவர்கள் கயான் பழங்குடியினருடன் பல வழிகளில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என சொல்லப்படுகின்றது. கென்யா மற்றும் கயான் பழங்குடியினரிடையே பல கலாச்சாரங்களும் பழக்கவழக்கங்களும் பெருமளவில் பொதுவானதாக இருந்தாலும் கூட அவர்கள் பேசும் மொழிகள் வேறுபட்டுள்ளது. கென்யா மக்களின் முதன்மையான தொழிலாக இருப்பது விவசாயம். மற்ற பழங்குடியினரைப் போல் அல்லாமல் கென்யா மக்கள் விவசாயம் செய்யும் செயல்முறை சற்று வேறுபட்டே உள்ளது. கடுகளில் சிறிய பகுதிகள் வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டு பின், அதன் சாம்பலில் நெல் விதைக்கப்பட்டு உலர் அரிசியை சாகுபடி செய்வார்கள்.

ஆதிகாலங்களில் கென்யா மக்கள் மனித தலைகளை சடங்கு வழிப்பாடுகளுக்குப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. கென்யா பழங்குடி மக்கள் தங்கள் எதிரிகளின் தலைகளை வெட்டி கிராமத்திற்குத் தங்களின் வீரத்தின் நினைவுப் பொருளாக கொண்டு வருவது வழக்கம். யார் நிறைய எதிரிகளின் தலைகளைக் கொண்டு வருகிறார்களோ அவர்களே கிராமத்தின் வீரம் மற்றும் மரியாதைக்கூரிய நபராக போற்றப்படுவர். அதுமட்டுமல்லாமல், பாரம்பரிய வழக்கப்படி வழிபாட்டு விழாவின்போது கொண்டு வரப்படும் தலையானது ‘உலே’ அயாவ்” (‘Ule’ Ayau”) சடங்கிற்கும் பயன்படுத்தப்படும்.

பாரம்பரியமாக கென்யா பழங்குடி மக்கள் “அபாவ் லகன்” (Apau Lagan) மற்றும் “புன்கன்” (Bungan) ஆகிய ஆன்மவாத மரபுகளின் மீது நம்பிக்கைக் கொண்ட சமூகமாகும். பெனான் பழங்குடி மக்களைப் போல் இவர்களும் தங்களைச் சுற்றியுள்ள அனைத்திற்கும் ஆத்மா இருப்பதாக நம்புகிறார்கள். இயற்கையின் ஒவ்வொரு அறிகுறிகளும் தனித்தனி அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொண்டுள்ளது என தீர்க்கமாக நம்புகிறார்கள். பொதுவாகவே, இந்த அறிகுறிகள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்களின் அன்றாட வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது எனக் குறிப்பிடுகின்றனர்.

கென்யா பழங்குடியினரின் சமுகத்தில் திருமணத்தை “பெபெட்டோ” (Pepeto) என்று அழைப்பார்கள். பழங்கால வழக்கப்படி, மணமகன் பெண் குடும்பத்தின் கோரிக்கைப்படி மணமகளுக்குச் சீர் கொண்டு வர வேண்டும். திருமண நாள் அன்று மணமகனும் அவரது உறவினர்களும் வரும்போது மணமகளின் பிரதிநி வீட்டின் வாசல் கதவிற்கு முன் பாதுகாவலராக நிற்பார். கோரிக்கையின்படி அனைத்து பொருள்களும் கொண்டு வரப்பட்டுள்ளதா என்று அவர் சரிப் பார்த்து உறுதி செய்த பிறகே மணமகனையும் அவர்தம் உறவினர்களையும் உள்ளே செல்ல அனுமதிப்பார். மணமகன் உண்மையில் மணமகளை திருமணம் செய்ய விரும்புகிறாரா என்பதை சோதிக்க இச்சடங்கு நிகழ்கிறது. கென்யா மக்கள் திருமண நிகழ்வு ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்று சேர்ந்து நீண்ட வரிசையில் “லெகோபா” (Lekopa) என்ற நடனத்தை ஆடி தொடங்குவார்கள். பின், மணமகனும், மணமகளும் முன் வந்து அமர அழைக்கப்படுகிறார்கள். அதன் பிறகு, மரக்கட்டைகளை எடுத்து வைக்கும் சடங்கு நடத்துவதற்கு மணமக்கள் வீட்டின் கீழ் பகுதிக்கு அழைத்துச் செல்வார்கள். வம்சாவளி தரவரிசைப்படி மணமக்கள் மரக்கட்டைகளை எடுத்து அடுக்க வேண்டும். இச்சடங்கு 8 சுற்றுகளாக நடத்தப்படும் எனச் சொல்லப்படுகிறது. இது புதுமணத் தம்பதிகள் திருமணமாகிய பின் வாழ்க்கையின் திருப்பங்களையும் துன்பங்களையும் ஒன்றாக எதிர்கொண்டு வாழத் தயாராக இருக்க வேண்டும் என்பதை இச்சடங்கு எடுத்துரைப்பதாக கருதப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு, மணமகளின் பெற்றோரின் தியாகங்களுக்கும் அன்புக்கும் மரியாதைச் செழுத்தும் விதமாக மணமகன் 1 அல்லது 2 ஆண்டுகள் தன் மனைவியின் குடும்பத்துடன் வாழ வேண்டும். பின், மணமகனின் பெற்றோருக்கு மணமகளின் பழக்கவழக்கங்கள் பிடிக்கவில்லை அல்லது மணமகளின் பெற்றோருக்கு மணமகனின் நடத்தைப் பிடிக்கவில்லை போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் மணமக்கள் விவாகரத்து செய்துக்கொள்ளலாம். இதற்கு தண்டனையாக “செரி காசிஹ்” (seri kasih) எனப்படும் வழக்கத்தின்படி இரு தரப்பு பெற்றோர்களும் ஒரு பன்றி அல்லது மதிப்புமிக்க பொருட்களை அபராதமாக வழங்க வேண்டும். பணத்தின் பயன்பாடு அதிகரித்த பின், அபராதத்தின் தொகை 5000 ரிங்கிட்டாக மாறியது. இந்த விவாகரத்தை ஊர் தலைவர் அல்லது உயர் பதவியில் இருப்பவர் நியாயமான விசாரணையுடன் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் எனக் குறிப்பிடுகின்றனர்.

கடையன்

போர்னியோ தீவுகளில் வாழும் பழங்குடியின மக்களில் கடையன் சமூகமும் முக்கியமானவர்கள். சரவாக்கில் கடையன் பழங்குடி மக்களின் முக்கிய குடியிருப்புகள் லிம்பாங் (Limbang), லாவாஸ் (Lawas), மிரி (Miri), சிபுட்டி (Sibuti) மற்றும் பிந்துலு (Bintulu) ஆகும். 2011ஆம் ஆண்டு சரவாக் மாநில புள்ளியியல் துறையின் கணக்குப்படி சரவாகில் கடையன் பழங்குடி மக்களின் மொத்த எண்ணிக்கை 15,780 எனச் சொல்லப்படுகிறது.

கடையன்

கடையன் பழங்குடி “மலாய்-புருனை” (Melayu-Brunei) மக்களின் உடலியல் பண்புகளை ஒத்த இருப்பார்கள் என்கின்றனர். கடையன் மக்களால் பேசப்படும் “பஹச டெ ஃபக்டொ” (bahasa de facto) எனும் கடையன் மொழி மலாய் மொழி குடும்பத்தைச் சார்ந்தது. கடையன் மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள். கடையன் பழங்குடியின் சமூக அமைப்பு முடியாட்சி கட்டமைப்பிற்குக் கீழ் இயங்கி வந்தாக குறிப்பிடுகின்றனர். கடையன் சமூகத்தின் பாரம்பரிய வாழ்க்கை விவசாயத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, கடையன் மக்களின் திருமண சடங்குகள் மலாய் இனத்தவரின் சடங்குகள் போலவே இருந்தாலும் கூட சில வேறுபாடுகளையும் தனித்துவங்களையும் நம்மால் கடையன் திருமண நிகழ்வுகளில் நாம் காண முடியும். மலாய்காரர்கள் “மெரிசிக்” (merisik) செய்து கொள்வது போல கடையன் சமுகத்தில் “ஞாவும்-ஞாவும்” (Njaum-njaum) என்ற சடங்கு முறை நடத்தப்படுகிறது.

இச்சடங்கு மணமகன் மணமகளுக்கு இனிப்பு பொருள் கொடுத்த பின் மோதிரத்தை அணிவித்து பணத்தை அந்த பெண்ணுக்கு கொடுப்பதில் இருந்து தொடங்குகிறது. மோதிரமும் பணமும் பெண்களால் பெறப்பட்ட பிறகே, பெண் வீட்டாரிடம் மணமகன்தான் அவர்களுடைய பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக்கக் கூறி அனுமதி கேட்பார்கள். இச்சடங்கின்போது மணமகன் மணமகளுக்கு என்னென்ன பொருள்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று கலந்து பேசி முடிவெடுக்கப்படும். முந்தய சடங்கின்போது பேசியபடி நிச்சயதார்த்த நிகழ்வின்போது மணமகன் தன் குடும்பத்தோடு பெண் வீட்டிற்கு அப்பொருள்களைக் அலங்கரித்துக் கொண்டு வர வேண்டும். முடிவு செய்தப்படி அனைத்து பொருள்களும் சரியாக உள்ளதா என்ற மணமகள் நிகழ்வுக்கு வந்திருப்பவர்களிடம் தெரிவிக்க வேண்டும். திருமண ஒப்பந்தம் முடிந்ததும், இரவில் மணமகனும், மணமகளும் தங்கள் வீடுகளில் ‘பாபதாக்’ எனும் விழாவை நடத்துவார்கள். இந்த விழாவில் மணமகனும் மணமகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு ஆண்கள் மற்றும் ஏழு பெண்களுக்கு விருந்தளிப்பார்கள்.

மறுநாள், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் தலைமையில் மணமகனை மணமகளின் வீட்டிற்கு திருமண விழாவிற்கு அழைத்துச் செல்வார்கள். மணமகளின் வீட்டின் முற்றத்திற்கு வந்த பிறகு, மணமகனும் அவருடைய உறவினர்களும் கடிகார திசையில் மூன்று முறை சுற்ற வேண்டும். இந்த சடங்கு “பூசா நாகா” (Pusaa Naga) என்று அழைக்கப்படுகிறது. அதன் பிறகு மணமகளின் உடன்பிறந்தவர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களில் ஒருவர், மணமகனின் கால் அல்லது காலணிகளின் நுனியில் தண்ணீர் ஊற்றுவார்கள். பின், கடவுளை வணங்கி விட்டு, மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகன் மற்று அவரது குடும்பத்தினர் மீது மஞ்சள் அரிசியை தூவுவார்கள். அதனைத் தொடர்ந்து “நாபககன்” (napakakan) எனும் சடங்கு நடத்தப்படும். மணமகன் பிரார்த்தனை தண்ணீரை தன் உள்ளங்கைகளில் எடுத்து மணமகளின் நெற்றியில் தொட வேண்டும். பின், இருவரும் அமர்ந்து பிரார்த்தனை செய்ய தொடங்குவார்கள். இறுதியாக, மணமக்கள் வெறுங்காலுடன் நிலத்திற்கு இறங்கி மூன்று, ஐந்து அல்லது ஏழு முறை மீண்டும் வீட்டினுள் நுழையும் “பசுலாங்” (Basulang) என்ற சடங்குடன் திருமணம் நிறைவை அடையும்.

தொடரும்

மேற்கோள் பட்டியல்

(2020, May 11). Indigenous World 2020: Malaysia. IWGIA – International Work Group for Indigenous Affairs. https://www.iwgia.org/en/malaysia/3605-iw-2020-malaysia.html

6 ways indigenous peoples are helping the world achieve #ZeroHunger. (2017, August 9). Food and Agriculture Organization of the United Nations. https://www.fao.org/zhc/detail-events/en/c/1028010/

Administrator, B. T. (2021, January 28). Keeping Bidayuh Gawai traditions alive. BorneoTalk. https://www.borneotalk.com/keeping-bidayuh-gawai-traditions-alive/

Amnesty International. (2021, December 13). Indigenous Peoples. https://www.amnesty.org/en/what-we-do/indigenous-peoples/

Apoh, M. J. O. (2020, November 4). Asal Usul Kaum Kayan. My Journey of Life. https://indigenousboy.blogspot.com/2017/01/asal-usul-kaum-kayan.html

Bk, K. (2021, June 14). Kenali Kaum Penan, Antara Kaum Terakhir Yang Masih Amalkan Gaya Hidup Nomad. I Love Borneo. https://www.iloveborneo.my/cerita-menarik-dari-borneo/kenali-kaum-penan-antara-kaum-terakhir-yang-masih-amalkan-gaya-hidup-nomad/

Erve, E. (2018, March 27). Adat Pepeto. Belaungdaduk. http://belaungdaduk.blogspot.com/2018/03/adat-pepeto.html

Indigenous Peoples. (2021, March 19). The World Bank Group. https://www.worldbank.org/en/topic/indigenouspeoples#1

IWGIA – International Work Group for Indigenous Affairs. (2021, April 21). Malaysia. https://www.iwgia.org/en/malaysia.html

Joshua, J. (2015). Penan in Malaysia. JOSHUA PROJECT a Ministry of  FRONTIER VENTURES. https://joshuaproject.net/people_groups/14357/MY

Kaum Melanau. (2012). SARAWAK BUMI KENYALANG. http://isswak.weebly.com/kaum-melanau.html

Lim, G., & Tan, T. (2012, May 16). Keunikan alat muzik masyarakat Penan. Citizens Journal Malaysia. https://cj.my/64555/keunikan-alat-muzik-masyarakat-penan/

N. (2014, February 14). Ethnoscape of Riverine Society in Bintulu Division [Yumi Kato, et al.]. Biomasssociety.Org. http://www-archive.cseas.kyoto-u.ac.jp/biomasssociety.org/en/2014/02/ethnoscape-of-riverine-society-in-bintulu-division%E3%80%80yumi-kato-et-al/

Nativeglot, N. (2013). Bulan Pengejin (The Month of the Spirits). Melanau. http://learnmelanau.nativeglot.com/2016/04/bulan-pengejin-month-of-spirits.html

Othman, N. (2016). SEJARAH DAN LATAR BELAKANG MASYARAKAT KADAYAN. Al-Hikmah, 8(2), 3-18.  Retrieved from https://spaj.ukm.my/jalhikmah/index.php/jalhikmah/article/view/239

People & Culture of Sarawak – Amazing Borneo Tours. (2016). Amazing Borneo. https://www.amazingborneo.com/sarawak/people-culture

Samrah, A. D., Ros Aiza, M. M., & Mohad, A. H. (2018). Norma Dan Adat Kelahiran Masyarakat Kedayan Di Sipitang, Sabah Birth Custom and Norms of Kedayan Community In Sipitang, Sabah. JURNAL SULTAN ALAUDDIN SULAIMAN SHAH, SPECIAL(ISSUE), 37–46. http://journal.kuis.edu.my/jsass/images/speciallissue2018/jsass_khas02_009_samrah.pdf

Soken-Huberty, E. (2020, April 20). 10 Reasons Why Human Rights Are Important. Human Rights Careers. https://www.humanrightscareers.com/issues/10-reasons-why-human-rights-are-important/

Syahira, S. (2021, December 29). Perkahwinan Suku Kaum Kedayan. Syahira. http://berangankejap.blogspot.com/2016/09/perkahwinan-suku-kaum-kedayan.html

The Editors Of Encyclopaedia Britannica. (2016, April 18). Kenyah | people. Encyclopedia Britannica. https://www.britannica.com/topic/Kenyah

Wattimena, P. M. (2018, October 15). DISCRIMINATION AGAINST INDIGENOUS PEOPLES, FROM LEGAL TEXTS TO POLICING PRACTICE. Cultural Survival. https://www.culturalsurvival.org/news/discrimination-against-indigenous-peoples-legal-texts-policing-practice

1 comment for “சரவாக் பழங்குடியின மக்கள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...