காளைப் பாண்டியன் நைட் ஷிப்டுக்கு புறப்படுவதற்காக வண்டியைக் கிளப்பிய அதே நேரத்தில்தான் ஹாஸ்டலுக்குப் போகும் பாதையில் காதில் ஹெட்போனுடன் வந்துகொண்டிருந்த காசிநாத்தை ஆத்திரத்துடன் வழிமறித்தான் அமித். கௌசியிடம் முகம் பார்த்துச் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பியது காளைப்பாண்டியனுக்கு லேசான சங்கடத்தைக் கொடுத்திருந்தது.
1
நம்பியூரிலிருந்து மில்லுக்குப் போக அதிகபட்சம் பதினைந்து நிமிடங்கள்தான். ஆனால், காளை அரைமணி நேரத்துக்கு முன்பாகவே கிளம்புவதுதான் வழக்கம். பிரமாண்டமான கதவுகளைக்கொண்ட மில் வாசலில் கூர்க்காக்களின் பரிசோதனைக்குப் பின் கைவிரல் ரேகை வைத்து வருகையை பதிவுசெய்துவிட்டு இருபுறமும் தென்னைமரங்கள் அணிவகுத்திருக்கும் தார்ச் சாலையின் நடைபாதையில் ஒரு கிலோமீட்டர் விரைந்து நடந்த பிறகுதான் சலவைப் பிரிவுக்கான வாசலை அடையமுடியும். அடையாள அட்டையிலும் சம்பளப் பட்டியலிலும் செக்சன் இன்சார்ஜ் என்பதைப் பார்க்கும்போது கெத்தாகத்தான் இருக்கும். ஆனால், இன்னதுதான் வேலை என்று வரையறை இல்லாமல் எல்லா வேலைகளையும் பார்க்கவேண்டும் என்பதைத்தான் ‘இன்சார்ஜ்’ என்று வகுக்கிறார்கள் என்பது புரியும்போது அந்த தலைநிமிர்வு சரிந்துவிடும்.
வண்டியை நிறுத்திப் பூட்டிவிட்டு கண்ணாடியில் முகம் பார்க்கும்போது செல்போன் ஒலித்தது. கௌசிதான். “கௌம்பிட்டியா? அந்தக் கடங்காரன் தெனமும் தெரிஞ்சேதான் செய்யறான். அவன்கிட்ட மல்லுக்கட்ட முடியல. டீ சாப்டியா மாமா?”
“பரவால்லே. நீ வீட்டுக்கு வந்துட்டியா?”
“இதோ. இன்னோம் கதவக்கூட நீக்கல. சீக்கிரமா ஷிப்ட மாத்திட்டா பரவால்லே மாமா. நாள் நெருங்குதுல்ல.”
“இனி ரெண்டுநாள்தான் கௌசி. மாசம் முடியுது. அடுத்த மாசம் பத்தாம் தேதிதானே சொல்லிருக்காங்க. கொழந்தப் பொறந்ததுக்கு அப்பறமா ராத்திரிலே வீட்ல இருக்கணும்னுதானே இந்த மாசம் நைட் ஷிப்டுக்கு ஒத்துக்கிட்டேன்.”
இடையில் வேறொரு அழைப்பு வரும் சமிக்ஞை தெரிந்தது. நாடிமுத்து அழைக்கிறான். பகல் ஷிப்ட் இன்சார்ஜ். அதற்குள் என்ன அவசரம்?
“பத்தாம் தேதி வரைக்கும் தாங்காதுன்னு தோணுது. நானுமே மாசம் முடியட்டுமேன்னுதான் பல்லக் கடிச்சுட்டு வேலைக்குப் போறேன். கூட செக்கிங் டேபிள்ல வேலை செய்யறவங்கல்லாம் திட்றாங்க. வீட்டுக்காரம்மாவும் இன்னிக்குக் காலையில சொன்னாங்க.”
“நானுமே அதத்தான் சொல்றேன். நீ கேக்க மாட்டேங்கறே. செரி பரவால்லே. முடியலேன்னா போ வேணாம். இன்னிக்கு ஒரு தடவை உங்கம்மாகிட்ட பேசிப் பாரேன்.”
“ம்” உற்சாகமற்ற குரலைக் கேட்டதும் அதைச் சொல்லியிருக்க வேண்டாமென நினைத்தான் காளை. போனமுறை மருத்துவரிடம் காட்டிவிட்டு வந்த நாளன்று தயக்கத்துடன்தான் தன் அம்மாவை அழைத்தாள் கௌசி. கைப்பேசியை ஸ்பீக்கரில்தான் போட்டிருந்தாள். “யார்கிட்டயும் சொல்லாம தாலி கட்ட தெரிஞ்சவளுக்கு புள்ளப் பெத்துக்க மட்டும் அம்மா கேக்குதா?”
அப்போதே இனி யாரையும் அழைத்து மனம் புண்படவேண்டாமென தீர்மானித்திருந்தனர்.
“எங்க அத்தை ஒருத்தங்க திருப்பூர்ல இருக்காங்கல்ல. அவங்க கிட்டயும் பேசிப் பாக்கறேன். துணியெல்லாம் தொவச்சு மடிச்சு வெச்சுட்டேன். சோறாக்கியாச்சு. சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு. போனை நோண்டிட்டு உக்காந்திருக்காதே.”
“செரி மாமா. பத்து மணிக்கு மேல கூப்படவா?”
“நானே கூப்பிடறேன். எனக்கு போன் வந்துட்டே இருக்கு. என்னன்னு பாக்கறேன். வெக்கவா?”
2
உலையில் வாட்டிய சோளக் கதிரை ஊதினான் அமித். புகை வாடையுடன் வீசிய காற்றில் கொடியில் உலர்த்தியிருந்த பழுப்புப் படிந்த வேட்டி அசைந்தது. பாசுதேவ் சுருட்டைப் பற்றவைத்தார் “காலையில எட்டு மணிக்கெல்லாம் ருதான்பூர்ல இருக்கணும். ஆதார் அட்டை கண்டிப்பா வேணும். போட்டுக்க துணிமணி மட்டும் போதும். வேற எதுவும் எடுத்துக்க வேண்டான்னுட்டான். ரெண்டு வாரத்துக்கு டாக்கூரோட பொறுப்பு. தங்க வெச்சு சோறு போட்டுருவான். அதுக்குள்ள ஏதாவது ஒரு மில்லுல சேத்தி விட்டுருவான். அதுக்கப்பறம் நம்ம சாமர்த்தியந்தான். சம்ஜா?”
கதவோரத்தில் பாயில் கிடந்த சோனா தலையைச் சொறிந்தபடியே அனத்தினாள் “பையா, முஜே பீ லே லோ.”
“வயசு பத்தாகுது கழுதை. இன்னும் ஒழுங்கா படுக்கத் தெரியலை” அவள் பாவாடையை இழுத்து கால்களை மூடினாள் சம்பா. “நான் அமித்தைவிட ரெண்டு வயசுதானே சின்னவ. நானும் போனா பரவால்லதானே? இஸ்மே கட்பட் க்யா? சித்பூர் மாமாவோட பொண்ணுக ரெண்டு பேரு திருப்பூர்லதானே இருக்காங்க. மூணு வருஷமாச்சு. நெறைய பேர்த்தை கூட்டிட்டு போயிருக்காங்களே.”
“அவங்க போனா நீயும் போயிடணுமா? எல்லாத்துக்கும் பறக்காதே. பொறு. தேக் லேங்கே. இவன் போகட்டும். நல்லபடியா அமைஞ்சுதுன்னா இந்த டாக்கூரை வெச்சே போலாம்” கல்லிருந்த ரொட்டியைப் புரட்டித் திருப்பினாள் கங்காதேவி. மங்கிய வெளிச்சம் வாசலில் நீண்டிருந்தது. தொட்டாற்போல அருகருகே இருந்த வீடுகளின் வாசலிலும் துண்டுதுண்டாய் வெளிச்சம். சூடான கல்லில் வேகும் ரொட்டியின் மணம். புழுதியுடன் சுழன்று வீசியது காற்று.
அமித் தன் பெயரை மண்ணில் கிறுக்கினான். எண்ணெய் காணாத அவன் தலையைத் தடவினார் பாசுதேவ் “இங்க இருக்கற விவசாய வேலைக்குப் போயெல்லாம் ஒண்ணும் பண்ணமுடியாது. எத்தனை வருஷமானாலும் நாமெல்லாம் இப்பிடியேதான் இருக்கணும். நிமிர வுடமாட்டாங்க. இரும்பாலைக்கு போறதுக்கும் சிபாரிசு, பணம்னு நெறைய பிரச்சினை. வேற வழியில்லை. டாக்கூர் சொல்ற எடத்துக்கு போறதுதான் நல்லது. அவன் கொஞ்சம் காசு எடுத்துக்குவான். தொலையட்டும். ஆறு மாசம் ஆகட்டும். எல்லாம் நல்லபடியா அமைஞ்சா நாங்களும் வந்துருவோம்.”
அந்த கிராமத்தில் தான் இருக்கப்போகும் அந்தக் கடைசி இரவில் அமித் தூங்காமல் கண்விழித்திருந்தான்.
3
அதற்குள் நாடிமுத்துவிடமிருந்து நான்கு முறை அழைப்பு வந்திருந்தது.
“கேட் பக்கத்துல வந்துட்டேன் நாடி. எதாச்சும் அவசரமா?”
“செக்சன் வாசலுக்கு வந்துட்டிங்களா காளை?” என்று கேட்டபடியே வெளியே வந்தான் நாடிமுத்து. முகத்தில் கலவரம். காளை உள்ளே எட்டிப் பார்த்தான். வழக்கத்துக்கு மாறாக எதுவும் தென்படவில்லை. வெம்மையும் நெடியும் சூழ்ந்த இரைச்சலுடன் இயங்கிய எந்திரங்களுக்கு நடுவே அடர்நீல சீருடையில் ஆட்கள்.
“செக்சன்ல பிரச்சினை ஒண்ணுமில்லை. நீங்க உடனே ஹாஸ்டலுக்குப் போகணும். ரெண்டு பசங்களுக்குள்ள சண்டையாம். அதான் அவசரமா கூப்பிட்டேன்.”
நாடிமுத்துவின் கண்களில் பயம். வேலையில் எந்தப் பிரச்சினை என்றாலும் சமாளித்துவிடுவார். ஆனால், வேலையாட்களை மேய்ப்பதுதான் அவருக்கு சிக்கல். ஹிந்தியும் தெரியாது.
“சஞ்சீவ் இல்லியா நாடி?”
“வார்டன்னு பேருதான். ஆளைக் காணோம். எங்க போனான்னு தெரியல. பசங்க கூப்பிட்டு சொன்னாங்க. நீங்க போயி பாத்துட்டு வாங்களேன்.”
“எதுக்கு இப்பிடி பதர்றீங்க? இவனுங்க அடிச்சுக்கறது என்ன புதுசா. பாத்துக்கலாம் வாங்க.”
சஞ்சீவை அழைக்க முயன்றபடியே ஹாஸ்டலுக்குப் போகும் பாதையில் விரைந்தான் காளை. எதிரில் நிற்பவர்களை சற்றே யோசிக்க வைக்கும் திடமான உடல். கூரிய பார்வை. இரண்டு வருடங்கள் நொய்டாவில் வேலை பார்த்த அனுபவம், வடக்கத்தித் தொழிலாளர்களை சமாளிக்க உதவுவதால் இதுபோன்ற சிக்கல்களின்போது காளையைத்தான் அழைப்பார்கள்.
மில்லை அடுத்திருந்த கோசாலையைக் கடந்து வேகமாக நடந்தார்கள் இருவரும். சாண மணத்துடன் சாம்பிராணி வாசனை. பசுக்களின் கழுத்து மணியோசை. தேங்காய் நெற்றுகளை எண்ணி அகலமான அலுமினிய வாளியில் தூக்கி எறியும் சத்தம். மண்பாதையின் ஓரத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. விளக்கு வெளிச்சத்தை மரங்களின் நிழல் மட்டுப்படுத்தியிருக்க தொலைவில் கம்பித் தடுப்புக்கு அப்பால் ஹாஸ்டல் வாசலில் ஆட்கள் கூடியிருப்பதைப் பார்க்க முடிந்தது. தெளிவற்ற இரைச்சல்.
நாடிமுத்துவின் கையிலிருந்த டார்ச் லைட்டை வாங்கி கூட்டத்தை நோக்கி வெளிச்சத்தைப் பாய்ச்சினான் காளை.
4
அன்று காலையில் அமித் ருதான்பூருக்கு வந்தபோது டாக்கூருடன் இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவன் காசிநாத் சிங். இன்னொருவன் சுஷில் போலா. அமித்தின் கிராமத்தின் பெயரைக் கேட்டதுமே காசிநாத் முகம் சுழித்தான். டாக்கூரின் காதுகளில் கிசுகிசுத்தான். “சுப் சாப் ஆ ஜானா. சம்ஜே” டாக்கூர் கண்கள் சிவக்க அவனை முறைத்ததும் அடங்கினான்.
ரயில் நிலையத்தில் இன்னும் பத்துப் பேர் காத்திருந்தனர். வெவ்வேறு கிராமத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள். டாக்கூர் எல்லோருடைய ஆதார் கார்டுகளையும் பரிசோதித்தான். அவர்களை அழைத்து வந்தவர்களுக்குப் பணம் கொடுத்தான்.
ரயிலில் ஏறிக்கொண்டதும் ஒவ்வொருவருக்குமான இருக்கை எண்ணைச் சரிபார்த்து அமரச் செய்தான் டாக்கூர். காசிநாத்துக்கும் அமித்துக்கும் எதிரெதிர் இருக்கை. ஆனால் அவன் எதிரில் வந்து உட்காரவேயில்லை. ஜன்னலோரமாய் சுஷில் போலா அருகே உட்கார்ந்திருந்தான். பாலிதீன் தாளில் சுற்றப்பட்ட ரொட்டிகளைக் கொடுத்தான் டாக்கூர். பிளாஸ்டிக் தூக்கு வாளியிலிருந்து சப்ஜியை ஊற்றினான். “யாரும் ரயில்ல இருந்து எறங்கக்கூடாது. நாளன்னிக்கு காலையில ஏழரை மணிக்கு எறங்குவோம்.”
ஜன்னல் வழியாக சில்லென்ற காற்று வீசவும் இருக்கையில் தலைசாய்த்தான் அமித். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒவ்வொருநாளும் இப்படிப் பலரும் புறப்பட்டுச் செல்கிறார்கள். எல்லோரும் சொல்லும் ஒரே பெயர் ‘திருப்பூர்’. இத்தனை பேருக்கும் அந்த ஊரில் இடமிருக்கிறதா? அத்தனை பெரிய ஊரா அது? இதுவரையிலும் போனவர்கள் யாரும் திரும்பவில்லை. சில மாதங்களிலேயே சொந்தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். பெண் பார்த்து மணம் முடித்து அழைத்துப் போகிறார்கள். இத்தனைக்கும் யாருக்கும் எந்த வேலையும் தெரியாது. விவசாயக் கூலி வேலையைத் தவிர வேறென்ன தெரியும்? அத்தனை சுலபமாக சில நாட்களில் கற்றுக்கொள்ளும்படியான சுலபமான வேலைக்கா அத்தனை கூலி தருகிறார்கள். ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், பிழைக்க அதுதான் வழி என்பது மட்டும் எந்த குழப்பமும் இல்லாமல் புரிந்தது.
“எந்த ஊரு” எதிரில் இருந்தவன் தயக்கத்துடன் கேட்டான்.
ஊர்ப் பெயரைச் சொன்னதும் அவன் கைநீட்டினான் “எம் பேரு உதய். சின்ஜாவனுக்குப் பக்கத்துல ராதேநகர் கிராமம்.”
“அமித்.”
“என்ன படிச்சிருக்கே?”
“நாலாவது வரைக்கும். அதுக்கப்பறம் கிராமத்துக்கு வந்திட்டிருந்த வாத்தியார் வர்லை.”
“பரவால்லே. நீ நாலாவது வரைக்கும் வந்துட்டே. நான் மூணாவதுதான். ஆனா எழுதப் படிக்கத் தெரியும். திர்ப்பூர்ல எல்லாப் பக்கமும் இந்தில எழுதிருப்பாங்களாம். சொன்னாங்க.”
“ம். நானும் படிப்பேன். ஆனா எதுக்கும் அவசியம் இல்லைன்னு டாக்கூர் சொன்னாரு.”
“அவர் அப்பிடித்தான் சொல்வாரு. அப்பிடி இருந்தாத்தானே அவருக்கு வசதி. ஒவ்வொரு தலைக்கும் ஒரு அமவுண்ட் கெடைக்கும் அவருக்கு. அதுபோக மாசா மாசம் வர்ற சம்பளத்துலயும் பத்து பர்சென்ட்.”
சற்றே அச்சத்துடன் தலையைத் திருப்பி டாக்கூரைப் பார்த்தான். சற்று தள்ளி ஜன்னலோரமாய் தலைசாய்த்து பாக்கை மென்றுகொண்டிருந்தார். “இதெல்லாம் எப்பிடித் தெரியும்?”
“ஏற்கெனவே எங்க ஊர்லேர்ந்து ரெண்டு அண்ணா போயிருக்காங்க. அவங்க சொன்னாங்க.”
“கூலியெல்லாம் நமக்குத்தானே தருவாங்க?”
“உங்கிட்ட சொல்லலியா? போனதுமே பேங்க்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணிருவாங்க. மாசா மாசம் டாக்கூருக்கான பத்து பர்சென்டை கழிச்சுட்டுத்தான் போடுவாங்க. சோறு போடுவாங்கல்ல, அதுக்கும் ஒரு அமவுண்ட் புடிச்சுக்குவாங்க.”
இந்த விபரத்தை டாக்கூர் அப்பாவிடம் சொல்லியிருக்கக்கூடும்.
“ரெண்டு வாரத்துக்குள்ள எங்கயாச்சும் வேலைக்கு சேத்துவிட்டிருவான். கூலி வேலை மாதிரி. கொஞ்சமா கூலி கெடைக்கும். அத வெச்சு சமாளிக்க வேண்டிதுதான்.”
“அப்பிடி என்ன வேலை? யாருக்கும் எதுவுமே தெரியாமதானே போறோம்?”
“ஆரம்பத்துல மூட்டைய தூக்கற மாதிரிதான் இருக்குமாம். அப்பறமா சின்னச் சின்னதாக சொல்லித் தருவாங்களாம். ஆனா வயித்துக்கும் தங்கறதுக்கும் பிரச்சினை இருக்காது.”
அதுபோதும் என்றிருந்தது அமித்துக்கு. உதய் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டான். வெளியிலிருந்த இருட்டைப் பார்க்க இப்போது அத்தனை பயமாக இருக்கவில்லை.
5
தரையில் கட்டி உருளும் இருவரைப் பிரிக்கும் முயற்சியில் இருந்தவர்களும் வேடிக்கை பார்த்தவர்களும் வெளிச்சம் விழுந்தவுடன் திரும்பிப் பார்த்தனர். கூச்சலும் சத்தமும் சட்டென அடங்கி எல்லோரும் அவசரமாய் விலகுவது தெரிந்தது.
செக்யூரிட்டி கூண்டை ஒட்டியிருக்கும் சிறிய கதவைத் திறந்துகொண்டு காளையும் நாடிமுத்துவும் உள்ளே விரைந்தபோது தொப்பியை சரிசெய்தபடி காவலாளி ஓடிவந்தார். கையில் நீண்ட கம்பு. முறுக்கிய நரை மீசை மேலுதட்டை மூடியிருந்தது.
“சொன்னா கேக்கவே மாட்டேங்கறாங்க சாரே. வாங்க சாரே. இவனுங்க ரெண்டு பேருதான்.”
அமித்குமாரும் காசிநாத் சிங்கும் எதிரெதிரே முறைத்தபடி நின்றனர். இன்னும் தணியாத ஆவேசத்துடன் மூச்சிறைத்தது. உடலெங்கும் புழுதி. கலைந்த தலைமயிர்.
இருவரின் முகத்தையும் உற்றுப் பார்த்தான் காளை. தீராப் பகையின் சினம் கண்களில் தழும்பியது. யாரும் தடுக்காவிட்டால் இக்கணமே ஒருவர் பலியாவது நிச்சயம் என்பதுபோல கொலைவெறி.
சுற்றியிருந்தவர்களில் இருவரை மட்டும் தேர்ந்தெடுத்தான் காளை “இஸ்கே அலாவா சப் அந்தர் ஜாவ். கொயி பாகர் நயி ஆனா. சம்ஜே. ஜாவ்!” கனத்த குரல் அதிர்ந்தது. நால்வர் மட்டுமே அந்த இடத்தில் எஞ்சி நின்றனர். டீ சர்ட்டும் அரை டிராயருமாய் உள்ளே விரைந்தவர்களில் பலரும் இளைஞர்கள். எல்லோருக்கும் ஒரே உடல், ஒரே முகம், ஒரே உடல்மொழிபோலத் தெரிந்தது.
6
எதிர்பார்த்ததையும்விட திருப்பூர் ரயில்நிலையம் மிகச் சிறிதாக இருந்ததைக் கண்டதும் சற்று ஏமாற்றமாக இருந்தது அமித்துக்கு. டாக்கூர் தப்பான இடத்துக்கு அழைத்துச் செல்கிறானோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், ரயில் நிலையத்திலிருந்த பெயரைக் கண்டு உதய் உறுதி செய்ததும் நம்பிக்கை வந்தது. ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் அவனைப் போலவே நிறையப் பேர் இறங்கினார்கள். எல்லோருர் முதுகிலும் ஒரு பை. ஒன்றுபோலவே உடையும் உடலும். செம்மறி ஆடுகள் போல வரிசையில் நடந்தார்கள்.
ரயில்நிலைய வாசலின் ஒருபக்கமாய் கைகாட்டி அமித்தைப் பார்த்து காசிநாத் ஏதோ சொல்ல சுஷில் போலா வாய்விட்டுச் சிரித்தான். அமித் அந்தத் திசையில் திரும்பிப் பார்த்தான். கட்டணக் கழிவறை. அவன் என்ன சொல்லியிருக்கக் கூடுமென்பதை ஊகித்ததும் ஆத்திரத்துடன் தலைகவிழ்ந்தான். அவனைப் பார்க்கக்கூடாது என்ற உறுதியுடன் மறுபக்கமாய் சென்றான். ஆனால், காசிநாத்தின் சிரிப்பொலி காதில் விழுந்து அவனை உசுப்பேற்றியது.
“ஆவ்… ஜல்தி ஆவ்” டாக்கூரின் குரல் கேட்டதும் அனைவரும் கும்பலாக அவனை நோக்கி ஓடினர். அனைவரையும் வரிசையில் நிற்க வைத்தான். டாக்கூரைப் போலவே இன்னும் இரு ஏஜெண்டுகள். இரு சக்கர வாகன நிறுத்தத்தில் நெரிசலாய் நூற்றுக்கணக்கான வாகனங்கள். ருதான்பூரில்தான் சில வாகனங்களைப் பார்த்திருக்கிறான் அமித். அவை அனைத்தும் பழைய வண்டிகள்.
மொத்தமாய் நாற்பத்தி இரண்டு பேர். டாக்கூருக்கும் மற்ற இரு ஏஜெண்டுகளும் தனியாக நின்று பேசினார்கள். அமித் உட்பட இருபது பேரைத் தனக்கெனத் தேர்ந்தெடுத்த டாக்கூர் அனைவரையும் அருகிலிருந்த பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்றான். நகரப் பேருந்தில் ஏற்றினான். சொகுசான புதிய பேருந்துக்குள் பாட்டு ஒலித்தது. உட்கார இடம் கிடைக்கவில்லை. நெரிசலில் பையைச் சுமந்தபடி இடித்துக்கொண்டு நின்றபோதும் அமித்துக்கு சிரமம் தெரியவில்லை.
“தெனந்தெனம் இத்தனை பேரைக் கொண்டு வந்து எறக்கறாங்க. நாத்தம் புடிச்சவனுக. குளிக்கவே மாட்டானுகபோல. டேய், தள்ளி நில்றா” உட்கார்ந்திருந்தவன் உதய்யின் தோளைத் தொட்டுத் தள்ளினான்.
“இன்னும் அஞ்சு வருஷத்துல இவனுக ஓட்டுப் போடறவனுகதான் நமக்கு எம்எல்ஏ வா வருவானுக. இப்பவே எங்க பாத்தாலும் இந்தில எழுதிருக்காங்க. டாஸ்மாக்குலகூட இந்தி பேசறானுங்கன்னா பாரு.”
உதய் வெளியில் கைகாட்டினான். பெரிய பாலத்தின் மேல் பேருந்து ஏறிச் சென்றது. கீழே ரயில் பாதை. அதற்கப்பால் உயரமான கட்டடங்கள். அணிவகுத்துச் சென்றன கார்களும் இரு சக்கர வாகனங்களும். செழிப்பான டீக் கடைகள், பேக்கரிகள், பழக்கடைகள். பளபளவென்ற தார்ச் சாலைகள். ஏழ்மையே சிறிதும் தலைகாட்டாத சொர்க்கபுரிதான் இது. இங்கே எல்லோருக்கும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது அமித்துக்கு.
7
செக்யூரிட்டி கூண்டருகே விளக்கொளியில் இருவரும் நிற்க வைக்கப்பட்டனர். அமித்தை இளைஞன் என்று சொல்ல முடியாது, சிறுவனைப் போலத்தான் தெரிந்தான். இடுங்கிய கண்களும் அரும்பு மீசையுமாய் ஒல்லியாக நின்றான். நீண்டிருந்த கழுத்தில் வெள்ளையாய் ஒரு சங்கிலி மின்னியது. வலதுகையில் தடிமனான காப்பு. முறுக்கிய மீசையுடன் நின்ற காசிநாத்துக்கு முன்னால் அமித்தை பொடியன் என்றுதான் சொல்லவேண்டும். முரட்டு ஜீன்ஸ் பேண்டும் முழங்கை வரையிலும் சுருட்டிய சட்டையுமாய் நின்ற காசிநாத்தின் முகத்தில் அலட்சியம். எதையோ மென்று கொண்டிருந்தான்.
காளையின் முன்னால் நின்றார் நரைமீசை காவலாளி “இவனுங்களோட ஒரே சல்லியம் சாரே. பத்து பதினைஞ்சு நாளாவே ரெண்டு பேர்த்துக்குள்ள சின்னச் சின்னதா சண்டை. என்ன பிரச்சினைன்னு மனசிலாகலே. வார்டன்கிட்டயும் பறஞ்சது. ஆயாள் ஒண்ணுஞ் செய்தில்ல.”
கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு அலட்சியமாய் நின்ற காசிநாத்தையே கவனித்துக்கொண்டிருந்த காளை எதிர்பாராத நொடியில் பளாரென்று அறைந்தான். பொறி கலங்கிட தலையை உலுக்கினான். உடல் விதிர்த்தது.
“தும் பதாவ். க்யா ஹூவா?” தனித்து நின்ற இருவரில் ஒருவனைக் கேட்டான்.
அவன் சற்று முன்னால் நகர்ந்து அமித்தின் முகத்தைப் பார்த்தான் “தஸ் பந்த்ரா தின் பஹலே காசிநாத் இஸ்கோ காலி தியா, இஸ்கா காவ், மா பாப் அவ்ர் சப் குச் கே பாரே மே. தப் சே ஜகடா சுரு கியா.”
“யே சோட்டா தோ அச்சா லடுகா சாப். கொயி கட்பட் நஹி. யே காசிநாத் ஹி ஹமேசா உசே … கர்தா ரஹா” இன்னொருவன் காசிநாத்தின் கண்களைப் பார்த்தபடியே தயக்கத்துடன் சொன்னான்.
காசிநாத்தின் கன்னத்தில் இன்னொரு முறை அறைந்த காளை அமித்தின் தாடையைப் பற்றி நிமிர்த்தினான் “அவ்ளோ தூரத்துலேர்ந்து அப்பா, அம்மாவ விட்டுட்டு இங்க எதுக்குடா வந்தே? இப்பிடி சண்டை போட்டுட்டு அடிச்சிக்கவா? அவந்தான் வம்புக்கு இழுக்கறான்னா நீ ஒதுங்கி போ மாட்டியா?”
அமித்தின் கண்களில் சிறிதும் பயமில்லை “நா எதுக்கு சாப் ஒதுங்கிப் போணும். எம் மேல என்ன தப்பு? அவன் என்னைப் பத்தி, எங்க குடும்பத்த பத்தி தப்பா பேசினான். ஏன்னு கேட்டேன். அது தப்பா? அப்பிடியெல்லாம் என்னால ஒதுங்கிப் போக முடியாது.”
காசிநாத் மஞ்சள் பற்கள் தெரிய சிரித்தான் “இவனுகளையெல்லாம் எங்களோட சேத்து ஒண்ணா வெக்கறதே தப்பு. எங்க ஊர்லயெல்லாம் தெருப் பக்கமே தலைகாட்ட வுடமாட்டோம். நேருக்கு நேர் நின்னு மூஞ்சியப் பாத்து பேசறான். சாலா.”
காளை மீண்டும் கையை ஓங்கவும் நாடிமுத்து தடுத்தார் “எதுக்கு சார் இவனுங்ககிட்ட வம்பு. நாம ஹெச் ஆர்ல சொல்லி ஹாஸ்டலை மாத்த சொல்லுவோம் சார். இந்தப் பிரச்னை எங்க போனாலும் மனுசனைப் பொழக்க வுடாதுபோல.”
நாடிமுத்து தடுத்தது காசிநாத்துக்கு சாதகமானதுபோலச் சிரித்தான் “இங்க இருக்கறதுல எங்க ஆளுங்கதான் அதிகம். இவனுகள வெளிய அனுப்புங்க. இல்லேன்னா அவ்ளோதான்.”
அமித் சீறினான் “இப்ப நீ தப்பிச்சிட்டே. இன்னொரு தடவை மாட்டுனே அவ்ளோதான். ஊருக்கு பொணந்தான் போவும்.”
காளை அமித்தின் கைகளைப் பிடித்து முறுக்கினான் “பேசிட்டிருக்கும்போதே உனக்கென்னடா அத்தனை கோவம்? சும்மா இருக்கமாட்டே?”
“இவனுக ரெண்டு பேரும் ஒரே ஊரா?”
“பக்கத்து ஊருபோல சார்.”
“ஏஜெண்ட் யார்றா?”
“டாக்கூர் சார்.”
“காலையில அவனை வரச் சொல்லு. ரெண்டு பேர்த்தையும் கூட்டிட்டு போட்டும்,” காளை திரும்பிப் பார்த்தான். ஜன்னலிலும் வாசலிலும் நின்றவர்களைப் பார்த்து வரச் சொல்லி கை அசைத்தான். எல்லோரும் திரண்டு நின்றனர்.
“எல்லாரும் கேட்டுக்குங்க. அவனவன் வேலையப் பாத்துட்டு சாப்பிட்டமா, தூங்குனமா, சம்பளத்தை வாங்கினமான்னு இருக்கணும். உங்க ஊர் சண்டையெல்லாம் இங்க வெச்சுக்கறதுன்னா வெளியில போயிருங்க. உங்களுக்கே தெரியும். ஒரு நாளைக்கு எத்தனை பேர் ரயில்ல வந்து எறங்கறாங்கன்னு. கொரானா சமயத்துல வேற வழியில்லாம என்ன பிரச்சினைன்னாலும் கண்டுக்காம உங்களையெல்லாம் வெச்சிருந்தோம். இனி அப்பிடியெல்லாம் அவசியமில்லை. முடியாதவங்க வெளியில போயிர்லாம். நாளைக்கே ஒருத்தர்க்கு ரெண்டு பேர் வந்துருவாங்க. அதுனால ஒழுங்கு மரியாதையா இருக்கற வழியப் பாருங்க.”
யாரும் பதில் பேசாமல் தலையாட்டினார்கள்.
“இவனுகள இன்னிக்கு இங்க ஒண்ணா விட்டா சரிப்படாது நாடி. ரெண்டு பேர்த்தையும் அழைச்சிட்டு போயி தனித்தனியா உக்கார வெச்சர்லாம். சஞ்சீவ் வந்தப்பறமா அவர்கிட்ட ஒப்படைச்சர்லாம். தும் தோனோ அமாரே சாத் சலோ.”
ஒருமுறை அனைவரையும் பார்த்துவிட்டு காளை நகர்ந்தான். நரைமீசை காவலாளி எல்லோரையும் உள்ளே விரட்டினார். அமித்தும் காசிநாத்தும் தயங்கி நகரவும் அவர்களின் பின்னால் நடந்தார் நாடிமுத்து.
8
“உடோ. உதர்னா இதர். உடோ உடோ” டாக்கூரின் குரல் எழுப்பியது. பரபரவென்று கண் திறந்தான். ஜன்னலுக்கு வெளியே பசேலென்ற வயல்வெளி. நிறைய தென்னைமரங்கள். பேருந்து நின்றதும் குதித்து இறங்கினார்கள். டாக்கூர் அனைவரையும் எண்ணிச் சரிபார்த்தான்.
தலையில் யாரோ ஓங்கி அடித்தவுடன் திரும்பிப் பார்த்தான். அருகில் நின்றவன் பைக்குள் எதையோ தேடிக்கொண்டிருந்தான். யார் அடித்தது? சிரிப்பொலி கேட்டு மறுபக்கமாய் பார்த்தான். காசிநாத்தும் போலாவும் எங்கோ பார்ப்பதுபோல சிரித்துக்கொண்டு நின்றனர்.
பிரமாண்டமான கதவு. கருப்புத் தொப்பியும் சீருடையும் அணிந்த காவலர்கள் ஒவ்வொருவரையும் ஆதார் அட்டையுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்தனர். கைரேகையைப் பதிப்பிக்கச் செய்தனர். பெரிய கதவருகிலிருந்த இன்னொரு சிறிய கதவின் வழியாக ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தனர். அகலமான தார்ச் சாலையின் இரண்டு பக்கங்களிலும் மரங்களுக்கு அப்பால் பெரிய கட்டடங்கள். பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நின்றிருந்தன. சரக்கு வாகனங்களும் லாரியும் குறுக்கு நெடுக்குமாக ஊர்ந்திருந்தன. தனியாக ஒரு கட்டடத்தில் தீயணைப்பு லாரி நின்றது.
ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த கூடமொன்றில் வரிசையில் நின்றதும் மீண்டும் பரிசோதனை. டாக்கூரிடம் ஆவணங்களை சரிபார்த்து வாங்கிக் கொண்டபின் அவன் வெளியில் சென்றான். நேற்றே வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுவிட்டது. பாஸ்புக்கை டாக்கூர் வாங்கிக்கொள்வான் என்று உதய் சொல்லியிருந்தான்.
“இதர் தேகோ. ஆஜ் சே தும் சப் லோக் இதர் ஹி காம் கரேகா. ஒரு வாரந்தான் டைம். அதுக்குள்ள வேலையைக் கத்துக்கணும். ஏமாத்திட்டு இருக்கலாம்னு நெனச்சா வெளியில அனுப்பிருவோம். உங்க ஆளுங்கதான் டிரெய்னிங் தருவாங்க. என்ன சந்தேகம்னாலும் கேளுங்க,” நீலச் சட்டையும் கருப்பு கால்சட்டையும் அணிந்திருந்தவர் கண்டிப்புடன் சிலரை அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு பிரிவிலும் பயிற்சியளிக்க இருப்பவர்கள் தங்கள் அணிகளை அழைத்துச் சென்றனர். அமித்தும் உதய்யும் வெவ்வேறு அணிகளில். காசிநாத் அமித்தை முறைத்தபடியே இன்னொரு அணியுடன் சென்றான்.
நூல் அரவைப் பிரிவின் பயிற்சியாளர் கரீம் பாயை அமித்துக்கு பிடித்துப் போனது. வேலைகளை திருத்தமாகவும் பொறுமையாகவும் சொல்லிக் கொடுக்க அமித் பத்தாவது நாளில் நூல் திரட்டும் கோன்களின் உள்ளே ஒட்டப் பட்டிருக்கும் லேபிள்களைக் கொண்டு அவற்றைப் பிரித்து அடுக்கக் கற்றுக்கொண்டான்.
கழுத்தில் தொங்கிய அடையாள அட்டை, ஆலையில் நுழையும்போது வாயிலில் தினமும் பதிக்கும் கைரேகை, வேளாவேளைக்கு தேநீரும் உணவும் என எல்லாமே அமித்துக்குப் பிடித்துப்போனது. விலகி விலகிப் போனபோதும் அவனது ஒரே பிரச்சினையாக எஞ்சியிருந்தது காசிநாத் மட்டும்தான்.
சில மாதங்களில் சம்பாவை அழைத்து வந்துவிட்டால் இங்கேயுள்ள பெண்களுக்கான ஹாஸ்டலில் பாதுகாப்பாகத் தங்கிக்கொள்ள முடியும். ஓய்வு நேரத்தில் டெய்லரிங் கற்றுக் கொடுக்கிறார்கள். இருவரும் சேர்ந்து உழைத்தால் நிமிர்ந்துவிட முடியும்.
9
கோபி நம்பியூர் சாலையோரப் பள்ளத்தில் அடர்ந்த வேப்பமரத்து நிழலில் வலது கரத்தில் ஓங்கிய வாளுடன் வீற்றிருந்த கருப்பராயன் எதிரே கைகூப்பி நின்றிருந்தாள் கௌசி. கண்கள் கசிந்தன. முகத்தில் கல்யாணக் களையை மீறிய கலக்கம். அவளைத் தொந்தரவு செய்யாமல் சற்றே விலகி நின்ற காளைப் பாண்டியன் மண்ணில் உறைந்த ரத்தத் திட்டின்மீது ஊர்ந்த எறும்புகளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.
குனிந்து பீடத்தைத் தொட்டு வணங்கியவள் கன்னத்தில் போட்டபடி நிமிர்ந்தாள் “நீ கும்பிடலையா மாமா?” உதடுகள் துடித்தன.
“ம். ஆச்சு. எதுக்கு இப்ப நீ அழறே?”
“ஒண்ணுமில்ல. என்னவோ நெனப்பு.”
“புரியுது. ரெண்டு பேரும் வேலைக்குப் போயி ஒரு வாரம் ஆச்சு. கையில இருக்கற காசசெல்லாம் தீந்துருச்சு கௌசி. நாளைக்கிருந்து ஷிப்டுக்குப் போகணும். நீ தைரியமா இருந்தாத்தானே பரவால்லே,” அணைத்தபடியே ஆவரம்புதரருகே இருந்த நீண்ட கல்லில் உட்காரச் செய்தான்.
கண்களைத் துடைத்தபடியே தலையாட்டினாள். தொங்கட்டான் அசைந்தது “நானும் போறேன் மாமா. வீட்ல உக்காந்துட்டு என்ன பண்ணப் போறேன்?”
“இல்லப்பா. நீ இப்ப போ வேணாம். கொஞ்ச நாள் போட்டும்.” பச்சைக் கிளிகள் தாவிப் பறந்தன. சாலையில் விரைந்த காரிலிருந்து எறியப்பட்ட தண்ணீர் புட்டி ஓசையுடன் உருண்டது.
“உங்க வீட்லயாச்சும் ஒத்துக்குவாங்கன்னு நம்புனேன். இப்பிடி யாருக்குமே புடிக்காம எல்லாத்தையும் மீறி கல்யாணம் கட்டிக்கிட்டது என்னவோ பயமா இருக்கு மாமா.”
“அதெல்லாம் ஒண்ணில்லப்பா. மனசைப் போட்டுக் கொழப்பிக்காதே. கொஞ்ச நாள் போனா செரியாப்போயிடும்.”
வண்டியை உதைத்துக் கிளப்பியபோது அவனுக்குள்ளும் அப்படியொரு அச்சம் தலையெடுத்தது.
10
ஹாஸ்டலுக்கு வந்த முதல் நாளே வார்டனிடம் காசிநாத் குரல் உயர்த்திக் கத்திக் கொண்டிருந்தான்.
“அவன வேற எடத்துக்கு அனுப்புங்க. அவன் இருக்கற எடத்துல நான் இருக்க முடியாது.”
வார்டனுக்கு புரியவில்லை “அவன் இங்க இருந்தா உனக்கு என்னப்பா பிரச்சினை?”
எதையும் கண்டுகொள்ளாமல் அமித் செல்போனில் படம் பார்த்துக்கொண்டிருந்தான்.
“இங்க வேற ஹாஸ்டல் இருக்கில்ல. நான் அங்க போறேன்,” பையை எடுத்துக்கொண்டான்.
வார்டன் அவனைப் பிடித்து நிறுத்தினார் “அப்பிடியெல்லாம் போக முடியாது. போ உள்ளே. என்ன பிரச்சினைன்னு கேக்கறேன். நீ பாட்டுக்கு பையத் தூக்கிட்டுப் போறே?”
தோளிலிருந்து அவர் கையைத் தட்டிவிட்டான் காசிநாத். அமித்தை எரிச்சலுடன் முறைத்தபடியே பையைக் கீழே போட்டான் “ஊர்ல வாசல் பக்கமே இவனுகள எட்டிப் பாக்க விடமாட்டோம். இப்ப இவனும் நானும் ஒரே எடத்துல படுக்கணுமா?”
வார்டன் அவன் தோளைப் பற்றினார் “அதான் விஷயமா? அதெல்லாம் உங்க ஊர்ல போய் வெச்சுக்க. இங்க எல்லார்த்துக்கும் இதுதான் எடம். போய் பேசாம படு,” தொப்பியை தலையில் இறுக்கிக் கொண்டு வெளியில் வந்தார்.
காவல் கூண்டில் நின்றவர் நரை மீசையைத் தடவினார். சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு கேமராவுக்கு மறுபுறமாய் நகர்ந்து பீடியைப் பற்ற வைத்தார் “வந்துட்டானுங்க நம்ம உசுர வாங்க. இவனுகளுக்கெல்லாம் பஞ்சாயத்துப் பண்றமாதிரி ஆயிருச்சே நம்ம பொழப்பு. மாசம் பூரா கண் முழிச்சு கால் கடுக்க நின்னா எட்டாயிரம் ரூவா. அதுக்குத்தான் வூட்ல மரியாதை. இல்லேன்னு சொன்னா அவளும் என்னை வாசல்லதான் படுக்க வெப்பா.”
நரைமீசை காவலாளி நமுட்டலாகச் சிரித்தார் “வீட்டுக்கு வீடு வாசப்படி. அது கெடக்கட்டும். பொகைய பாத்து ஊதுங்க, கேமராவுல மாட்டப் போவுது. அப்பறம் அதுக்கும் பதில் சொல்லோணும்.”
11
புவனேஸ்வரி படத்துக்கு முன்னால் விளக்கேற்றி வணங்கிவிட்டு திண்ணையில் வந்து அமர்ந்தாள் கௌசிகா. பூத்தொடுத்துக்கொண்டிருந்த சின்னி தலைநிமிர்ந்து பார்த்தாள் “என்னக்கா, மாமா ஆக்கி வெச்ச சோறு செம ருசிபோல.” ஜாதிமல்லியின் வாசனை கமழ்ந்தது.
“புதுசா என்னத்த செய்யப் போறாரு உங்கண்ணன்? அதே காய் சாதம்தான்.”
சரஸ்வதியம்மா சுக்குட்டி கீரையுடன் வந்து உட்கார்ந்தாள் “நாள் நெருங்கிடுச்சு. அவன் இன்னிக்கும் நைட் ஷிப்டுக்குத்தான் போயிருக்கானா?”
“ரெண்டு நாள்தானேம்மா. அப்பறமா கூடத்தான் இருப்பாரு.”
“அப்பிடி என்ன கோவம் உங்காத்தாவுக்கு. பொண்ணுக்கு தலப் பிரசவம். அட, சீமந்தம் பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயி வாய்க்குப் புடிச்சதை ஆக்கிப் போட்டு சந்தோஷமா வெச்சிக்கத்தான் முடியலை. ஆசைப்பட்டவனை சொல்லாம கல்யாணம் பண்ணிட்டான்னு ஒரு வருத்தம். இப்ப அது பழைய கதை இல்ல. இங்க வந்து இருந்து நல்லது கெட்டதைப் பாக்க வேணாம். நல்ல ரோஷக்காரிதான் போ.”
சங்கடத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கௌசி புன்னகைத்தாள்.
“அது செரிக்கா. அந்தண்ணன் வீட்டுலேர்ந்தும் ஒருத்தரும் ஏன்னு கேக்கலைங்கறதுதான் எனக்கு வெசனமா இருக்கு,” மொக்குகளை பொறுக்கி நூலில் கோர்த்தாள் சின்னி.
“தானிக்கு தீனி செரியாத்தான் இருக்கு புள்ள. இதுதான் பாவம் ஒத்தையில கெடந்து தவிக்குது,” கீரையை கிள்ளி முறத்தில் போட்டாள்.
“ஆசைப்பட்டு கல்யாணம் பண்றது என்ன உலகத்துல நடக்காமயா இருக்கு. நடந்தது நடந்துபோச்சு, இனி நல்லபடியா இருக்கட்டும்னு வந்து கலந்துக்கிட்டாதானே பெரிய மனுஷங்களுக்கு அழகு,” சின்னி சில்வர் போசியிலிருந்து மொக்குகளை அள்ளிப் போட்டாள்.
“செரிம்மா. நேரமாயிடுச்சு. நீ படுத்துக்க. இந்த கீரையை ஆஞ்சு வெச்சுட்டு வரேன்,” பத்து நாளாக சரஸ்வதியம்மா இரவில் வந்து துணைக்குப் படுத்துக்கொள்கிறாள்.
“மாமா போன் பண்றேன்னு சொன்னாங்க. அதான் பாத்துட்டிருக்கேன்,” செல்போனை எடுத்துப் பார்த்தாள்.
“மில்லுக்குள்ள பூந்துட்டா வீட்டு நெனப்பெல்லாம் வராது உம் மாமனுக்கு. என்னவோ இவன்தான் எல்லாத்தையும் எடுத்துக் கட்டறதுமாதிரி. நீயே கூப்பிட்டு பாரு.”
ஏற்கெனவே இரண்டு முறை அழைத்திருந்தாள். பதில் இல்லை. இப்போதும் முயன்றாள். அழைப்பொலி முழுக்க ஒலித்து அடங்கிற்று. சோர்வுடன் உள்ளே எழுந்து போனாள். சின்னிக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.
12
ஞாயிற்றுக்கிழமை சாயங்காலத்தில் நொய்யலாற்றுப் பாலத்தில் இறக்கிவிடும்போதே காசிநாத் அமித்தை குறிவைத்திருந்தான். டவுன் ஹால் முனையிலிருந்து தொடங்கி குமரன் சாலையின் இருபுறமும் சிறிதும் பெரிதுமான கடைகள். சட்டை, பேண்ட், டிராக் பேண்ட், ஜெர்கின், சுடிதார், டீ சர்ட், போர்வை, தலையணை, செருப்பு, ஜிமிக்கி, கம்மல், வளையல், பெல்ட், பிளாஸ்டிக் வாளிகள் என்று எல்லாமே வடக்கத்திய தொழிலாளர்களுக்காகவே கடைவிரிக்கப்பட்டிருந்தன. காலை பதினோரு மணியிலிருந்தே வெவ்வேறு ஆலைகளிலிருந்தும் கம்பெனிகளிலிருந்தும் வடக்கத்திய ஆட்களை கொண்டு வந்து இறக்கி விடுவார்கள். அரை நாள் முழுக்க சுற்றித் திரிந்து வேண்டியதை வாங்கிக்கொண்டு வேனுக்குத் திரும்புவார்கள். செலவைப் பொருட்படுத்தாமல் சிலர் பிரியாணி வாங்குவதுண்டு. இளைஞர்களில் சிலர் ரகசியமாய் டாஸ்மாக்கில் பீர் வாங்கி பார்க்கில் மறைந்து குடிப்பதும் உண்டு.
அமித்துக்கு எதுவும் வாங்கவேண்டாம். உதய் அழைத்தான் என்பதாலும் அடைந்து கிடக்காமல் வெளியில் போய் வரும் ஆசுவாசத்துக்காகவும் வந்திருந்தான். வெறுமனே வேடிக்கை பார்த்தபடி நடந்தபோது எதிரில் வந்த காசிநாத் மோதுவது போல நின்றான். அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு விலகி நகர முயல அவனும் நகர்ந்து நின்று முறைத்தான்.
“சொன்னா கேக்க மாட்டியா? ஒழுங்கு மரியாதையா ஊருக்குப் போயிரு. இல்லையா வேற மில்லுக்கு ஓடிரு. இங்க இருக்கக்கூடாது. புரியுதா?”
அமித் குபீரெனச் சிரித்தான் “உன்னைப் பாக்க வேடிக்கையா இருக்கு. போ, போய் வேற யார்கிட்டயாச்சும் உன் வித்தையைக் காட்டு.”
காசிநாத்தின் அருகில் நின்றவர்களும் வாய்விட்டு சிரிக்கவும் அவனுக்கு சினம் தலைக்கேறியது. கையை ஓங்கினான். அமித் சிறிதும் விலகாமல் முறைத்துக்கொண்டு நின்றான்.
“என்னடா முட்டிக்கிட்டு நிக்கறீங்க. ஒழுங்கா நடங்க. டேய், அமித் நீ போ” சூப்பர்வைசரின் குரல் முடுக்கியது.
உதய் அமித்தை இழுத்துக்கொண்டு சாலையைக் கடந்து எதிர்வரிசைக் கடைகளை நோக்கிப் போனான்.
இருட்டிய பிறகே வேனுக்குத் திரும்பியபோது இன்னும் சிலர் வந்து சேரவில்லை என்பதால் பானி பூரி கடையருகே நின்றிருந்தனர் உதய்யும் அமித்தும். திடீரென்று பின்னாலிருந்து அமித்தின் இடுப்பில் உதைத்தான் காசிநாத். எதிர்பாராத அடியில் குப்புற விழுந்தவன் மீது பாய்ந்தான் காசிநாத். அவனைப் பிடித்து விலக்குவதற்குள் கன்னத்திலும் மூக்கிலும் பலமாய் குத்தினான். அமித் சுதாரிக்கவே நேரமிருக்கவில்லை.
சூப்பர்வைசரும் இன்னும் சிலரும் காசிநாத்தைப் பிடித்துத் தூக்கி அப்பால் இழுத்துச் சென்ற பிறகுதான் அமித் எழுந்தான். உதட்டில் ரத்தம் கசிந்தது. சட்டையிலும் தலையிலும் அப்பியிருந்த மண்ணைத் தட்டிவிட்டான். உதய் தண்ணீர் பாட்டிலைக் கொடுத்ததும் முகத்தைக் கழுவினான்.
சூப்பர்வைசர் முகத்தை நிமிர்த்திப் பார்த்தார் “உங்க ரெண்டு பேர்த்துக்கும் அப்பிடி என்னடா பிரச்சினை? எப்பப் பாத்தாலும் வம்பு பண்ணிட்டே இருக்கான் அவன்.”
அமித் நிமிர்ந்து பார்த்தான் “அவன்கிட்ட போயி கேளுங்க சார். அடி வாங்கிட்டு நிக்கறேன், எங்கிட்ட வந்து கேக்கறீங்க?”
“காலையில மொதா வேலையா ரெண்டு பேர்த்துல யாராவது ஒருத்தரை வெளிய அனுப்பறதுக்கு ஏற்பாடு பண்ணணும்,” தலையை உலுக்கியபடியே வேனில் இருந்தவர்களை எண்ணிப் பார்த்தார்.
எல்லோரும் ஏறிய பிறகும் காசிநாத் வரவில்லை.
13
வாசல் தெளிக்கும் சத்தம் கேட்டு எழுந்து வெளியே வந்தாள் கௌசி. வாசல் படியில் படுத்திருந்த பூனை விருட்டென எழுந்து திண்ணைக்குத் தாவியது. ஒருகணம் திடுக்கிட்டவள் தலையை முடிந்தபடியே ஓரமாய் உட்கார்ந்தாள்.
“குட்மார்னிங்க்கா!” கோலமிட்டுக் கொண்டிருந்த சின்னி நிமிர்ந்து சிரித்தாள்.
“குட்மார்னிங். நல்லா தூங்கிட்டேன்போல,” என்று சொன்னபோதுதான் நேற்றிரவு காளையிடமிருந்து அழைப்பே வரவில்லை என்பது நினைவுக்கு வந்தது.
அதே கணம் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டதும் கௌசி எழ முற்பட்டாள் “சார்ஜ் போட்டிருந்தேன். எடுக்க மறந்துட்டேன்.”
“நீ இருக்கா. எடுத்து தரேன்,” சின்னி துப்பட்டாவை சரிசெய்தபடியே உள்ளே போனாள் “உங்க ஆசை மாமாதான்.”
ஒருகணம் கன்னத்தில் வெட்கத்தின் ஒளி பரவ செல்போனை காதில் வைத்தாள் “சொல்லு மாமா.”
மறுகணம் முகத்தில் அந்த வெளிச்சம் மறைந்தது “நீங்க யாரு பேசறது? அவருக்கு என்னாச்சு?”
மறுமுனையில் யார் என்ன பேசினார்கள் என்பது தெரியாமல் சின்னி அருகில் நெருங்கி நின்று தோளைத் தொட்டாள்.
“அவருக்கு என்னாச்சுன்னு சொல்லுங்க… ப்ளீஸ்…” கதறினாள். சத்தம் கேட்டு சரஸ்வதியம்மாவும் கோடிவீட்டு குழந்தையப்பனும் ஓடி வந்தார்கள்.
செல்போனை அவள் கையிலிருந்து வாங்கினாள் சின்னி. பொறுமையாகக் கேட்டாள். “அண்ணனுக்கு ஏதோ சின்ன ஆக்ஸிடென்ட்னு சொல்றாங்க. மில்லுக்குள்ளாறதானாம். பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை. அவநாசி ஆஸ்பத்திரில சேத்துருக்காங்களாம்.”
“ஆத்தா கருவலூர் மாரியம்மா, எம் புள்ளைக்கு ஒண்ணும் ஆவக்கூடாது தாயே” தென்திசை நோக்கிக் கும்பிட்டவள் கௌசியை அணைத்துக்கொண்டாள் “ஒண்ணும் இருக்காது கௌசி. நீ இந்த நேரத்துல பயப்படக்கூடாது. தைரியந்தான் முக்கியம்.”
இதற்குள் சின்னியின் கணவன் ஆக்டிவாவை முடுக்கினான் “நீங்க ரெடியா இருங்க. நான் போயி கார் எடுத்துட்டு வரேன்.”
கண்ணீருடன் கௌசி மறுபடியும் காளையின் எண்ணை ஒற்றினாள்.
14
பைக்குள் இருந்தவற்றை வெளியில் எடுத்துப்போட்டு தேடிக்கொண்டிருந்தான் அமித். ஆஸ்பெஸ்டாஸ் கூரையிலிருந்து இறங்கிய அனல் தகித்தது. நீண்ட கூடத்தின் மின் விசிறிகள் இரவில் மட்டுமே இயங்கும். முகத்தில் வழிந்த வேர்வையைத் துடைத்தபடியே தலையை நிமிர்த்தி சுவரைப் பார்த்தான்.
“நல்லா ஞாபகமிருக்கு. காலையில ஷிப்டுக்குப் போறதுக்கு முன்னாடி பாத்தேனே,” உறுதியாகச் சொன்னதும் உதய் மடித்து வைத்திருந்த உடைகளைப் புரட்டிப் பார்த்தான். சிலரது பாய்கள் சுருட்டி சுவரோரமாய் கிடக்க இன்னும் சிலருடைய படுக்கைகள் மடிக்கப்படாத போர்வைகளுடன் தாறுமாறாய் கிடந்தன. திறந்திருந்த ஜன்னல் கம்பிகளில் உள்ளாடைகள்.
“இங்கதான் இருக்கும். பொறுமையா பாக்கலாம்,” சொல்லும்போதே சாயங்காலம் உள்ளே வரும்போது வாசலில் நின்று கெக்கலித்துச் சிரித்த காசிநாத்தின் முகம் நினைவுக்கு வந்தது. நிச்சயமாய் அவன்தான் எடுத்திருப்பான். பகல் முழுக்க அவன் இங்கேதான் இருந்தான்.
“அவன் வேலைதான் இது,” சினத்துடன் துணிகளைப் பையில் திணித்தான் அமித். அழுகையும் ஆத்திரமும் உதடுகளைத் துடிக்கச் செய்தன. எழுந்து வேகமாய் நடந்தான். பையை எடுத்து ஓரமாய் போட்டுவிட்டு பின்னாலேயே ஓடினான்.
பூட்டிய கதவுக்கு இடப்புறமாய் தண்ணீர் தொட்டியருகே இரைச்சலும் சிரிப்புமாய் கூடியிருந்த கும்பலுக்கு நடுவே காசிநாத். இரவுக் காவலாளியும் முதுகில் கைகளைக் கட்டியபடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“போட்டோ எங்க?” உரத்த குரலில் அமித் கேட்டதும் அனைவரும் திரும்பிப் பார்த்தனர். போலா சட்டென்று கைகளை பின்னால் மறைத்தான்.
காசிநாத் உதடுகளைச் சுழித்தான்.
“யார்கிட்ட கேக்கறே நீ?” காவலாளி புரியாதவராய் வினவினார்.
“உங்கிட்டதான் இருக்குன்னு எனக்குத் தெரியும். மரியாதையாக் குடுத்துரு!” காசியை முறைத்தான் அமித்.
“எந்த போட்டோ? எங்கிட்ட எதுக்குக் கேக்கறே நீ?” முகவாயை மேலுயர்த்தி எச்சிலை நிறுத்தினான்.
“எதுன்னு உனக்குத் தெரியும். குடுத்துரு ப்ளீஸ். வம்பு பண்ணாதே!” அமித் இப்போது சீற்றத்தைக் குறைத்துக்கொண்டு கெஞ்சினான்.
“பாவம்டா அவன். அவங்க அக்காவும் தங்கையும் இருக்கற படம். நீதான் எடுத்துருப்பே. குடுத்துரு காசி,” உதய் முன்னால் நகர்ந்து அவன் கைககளைப் பற்றினான்.
“நான் எடுத்ததை நீ பாத்தியா? எங்கிட்ட வந்து கேக்கறே?” சட்டென்று அவன் கையைப் பற்றி முறுக்கினான்.
“டேய் வேணான்டா. இருடா. இந்தப் படமா பாரு,” அமித்தின் கண்ணீரைக் கண்டதும் போலா படத்தை நீட்டினான். மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு சம்பா உட்கார்ந்திருக்கும் சிறிய படம்.
படத்தைக் கண்டதும் ஆவலுடன் அமித் கை நீட்டி வாங்க முயல அதே நொடியில் காசி வெடுக்கென்று பறித்தான். போலாவின் கையில் ஒரு துண்டும் காசியின் கையில் மறுதுண்டுமாய் படம் கிழிந்தது. ஒருகணம் புரியாமல் திகைத்தான் அமித்.
“இதப் பாரு. நா எதுவும் பண்ணலை. அவன்தான்…” காசியால் சிரிப்பை மறைக்க முடியவில்லை. போலா பதறினான்.
ஆவேசத்துடன் காசியின்மேல் பாய்ந்தான் அமித். அவன் முகத்தில் ஓங்கிக் குத்தினான். எச்சில் தெறிக்கத் தடுமாறியவன் சுதாரித்துக்கொண்டு கைகளால் தடுப்பதற்கு முன்பே நெஞ்சில் கைவைத்து கீழே தள்ளினான். மேலே பாய்ந்து அவன் தலைமுடியைப் பற்றி வெறிகொண்டவனாய் உலுக்கினான்.
உதய்யும் போலாவும் இருவரையும் பற்றி மேலேயிழுக்க முயல காவலாளி விசிலை ஊதியபடி கம்பைச் சுழற்றினார்.
கோசாலையிலிருந்து இன்னும் இரண்டு காவலர்கள் ஓடிவந்து இருவரையும் பிரித்து நிறுத்தியபோது காசியின் உதடுகள் கிழிந்து ரத்தம் வழிந்தது.
கிழிபட்ட படத்துண்டுகளை கையில் ஏந்தி அழுதபடியே அமித் தரையில் சரிந்தான்.
15
தென்னங்கீற்றுகள் நிலவின் ஒளியுடன் காற்றில் ஆட மண்ணில் அசைந்தன நிழல்கள். நீண்ட பாதையின் ஒருபக்கத்தில் மின் விளக்குகள் ஒளிர்ந்தன. இயந்திரங்களின் இரைச்சலுடன் நூற்பாலை இருட்டில் பிரமாண்டமாய் நின்றது.
காசிநாத் உடன் வர காளை செல்போனைப் பார்த்தபடியே முன்னால் நடந்துகொண்டிருந்தான். சற்று பிந்தி அமித் நிதானமாக வந்தான். அவனுக்கு இணையாக, வீட்டுக்குச் செல்ல தாமதமான வருத்தத்துடன் நாடிமுத்து தளர்ந்து நடந்தார். கோசாலையருகே திரும்பும்போது செல்போன் ஒலிக்கவும் தடுமாற்றத்துடன் பையிலிருந்து எடுத்தார் நாடிமுத்து. ஒரு நொடி நின்று திரையைப் பார்த்தார். வீட்டிலிருந்துதான். காதில் வைத்தபடியே ஓரமாய் நின்று பேசலானார். அவரையே கவனித்தபடி வந்த அமித்தின் கண்கள் பாதைக்கு அப்பால் புன்னை மரங்களுக்கு நடுவே கிடந்த இரும்புக் குழாய்களை நோட்டமிட்டன. வெவ்வேறு இடங்களிலிருந்து அகற்றப்பட்ட துருப்பிடித்த குழாய் துண்டுகள். எடுக்கவேண்டிய ஒரு குழாயை அவன் கண்கள் கண்டன. தலையைத் திருப்பாமலே ஓரக்கண்ணால் நாடிமுத்துவை பார்த்தான். அவர் தலையைக் குனிந்து செல்போனில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். நொடியில் குனிந்து விறுவிறுவென ஓசையெழாமல் நகர்ந்து குழாயை எடுத்தான். கனமான குழாய். முன்னால் நடந்துகொண்டிருந்த காசிநாத்தை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு அவனை நோக்கி காலடியோசை எழாமல் திடமாக நடந்தான். இருவருக்குமிடையே இருபது அல்லது முப்பது அடிகள்தான் தொலைவு. செல்போனை அணைத்துவிட்டு நாடிமுத்து நிமிர்ந்தபோது அவர்களை நெருங்கியிருந்தான் அமித். “ஏய், என்னடா பண்றே?” என்று நாடிமுத்துவின் வாயிலிருந்து சத்தம் எழும்போது கையிலிருந்த குழாயை விசைகொண்ட மட்டும் காற்றில் வீசியிருந்தான். காசிநாத் சட்டென்று விலகித் திரும்பினான். அதே நொடியில் அமித்தின் கையிலிருந்த குழாய் காளையின் பின்மண்டையை தாக்கியது.
16
நம்பியூர் அரசு மருத்துவமனைக்கு அருகில் செல்லும்போதே அவநாசிக்குத்தான் கொண்டு போயிருக்கிறார்கள் என்று செய்தி வந்ததும் அவசரமாக கார் திரும்பியது.
“நெசத்தை சொல்லுங்களேன். மாமாவுக்கு என்னாச்சு? ஏன் யாரும் எதுவுமே சொல்லமாட்டேங்கறீங்க?” கௌசியின் தொண்டை வறண்டு கண்கள் வீங்கியிருந்தன.
அவள் கண்களைப் பார்க்க தைரியமில்லாதவளாய் முந்தானையை எடுத்து முகத்தைத் துடைத்தாள் சின்னி.
“ஒண்ணுமில்லக்கா. இங்க ஃபர்ஸ் எய்ட் பண்ணிட்டு அவநாசில பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காங்க. நீங்க பயப்படாதீங்க.” முன் இருக்கையில் அமர்ந்திருந்தவன் திரும்பிப் பார்க்காமலே சொன்னான்.
செய்தி வந்ததிலிருந்து என்ன விபத்து என்பதைப் பற்றி தெளிவாக யாரும் சொல்லவில்லை. சின்னிக்கு மேலும் அதைக் கேட்கும் தைரியம் இருக்கவில்லை.
முன் இருக்கையில் இருந்தவன் தொடர்ந்து செல்போனில் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டே வந்தவனின் முகத்தை சரஸ்வதியம்மா உற்றுப் பார்த்தாள். அப்படியெல்லாம் எதுவும் நடந்திருக்காது என்று அவளும் நம்பவே விரும்பினாள். விரைந்த காருக்கு வெளியே நொடிப்பொழுது கண்ணில் பட்டு மறைந்த கருப்பராயனை வேண்டிக்கொண்டாள்.
அவநாசி அரசு மருத்துவமனைக்குள் கார் நுழைந்ததுமே ஆட்கள் சூழ்ந்தனர். ஏதோவொரு பெண் முகத்தை மூடிக்கொண்டு கதறவும் அவளை அவசரமாக பின்னால் இழுத்தனர். கௌசிக்குத் தெரிந்துவிட்டது. தலையைக் கவிழ்த்து அமைதியாக உட்கார்ந்தாள். மேடிட்ட வயிற்றை கை அனிச்சையாய் தடவியது. ஓரமாய் உட்கார்ந்திருந்த சின்னி அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் கீழே இறங்கி ஓடினாள்.
சிறிது நேரத்துக்குப் பின் கௌசி தலை நிமிர்ந்தபோது காரில் யாரும் இருக்கவில்லை. வெளியே அதிகாரிகள் போலிருந்த நால்வர் தணிந்த குரலில் பேசிக்கொண்டிருக்க சரஸ்வதியம்மாவும் சின்னியும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். திரும்பி பார்த்த வீட்டுக்காரம்மா கெளசியை நோக்கி வந்தாள்.
“கௌசி…” அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் திணறினாள்.
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை ஊகித்தவள்போல கௌசி கீழே இறங்கினாள். “வாங்கக்கா போய் பாக்கலாம்” கையைப் பற்றியதும் நால்வரில் இருவர் வழிகாட்டுவதுபோல முன்னால் நடந்தனர். மரத்தடியில் கூடியிருந்த பெண் தொழிலாளிகளில் சிலரது அழுகுரல் வலுத்தது.
17
சூழ்ந்து நின்ற எவரையும் பார்க்க விரும்பாதவனாய் அமித் காவலர்களுக்கு நடுவே நின்றிருந்தான். அவனுடைய அப்பா பாசுதேவ் எதுவும் புரியாதவராய் தாடையை சொரிந்தபடி நின்றார். சைரனுடன் வந்து நின்ற போலீஸ் வாகனத்தை ஆர்வமில்லாமல் ஏறிட்டவர் உள்ளங்கையில் பாக்கைக் கொட்டி கட்டைவிரலால் நசுக்கி ஊதிவிட்டு கடைவாயில் அடக்கினார்.
“முன்னா குச் போலோனா? இதர் தேக்கோ. பதாவோனா?” கங்காதேவி தலையில் போட்டிருந்த சீலையை முன்னால் இழுத்துவிட்டாள். செம்பட்டை முடி வெயிலில் மின்னியது. வெடித்த உதடுகள். நீண்ட கழுத்தில் மெல்லிய மணிமாலை. மெருகிழந்த மஞ்சள் புடவையில் பளபளப்பிழந்த சம்கிகள்.
அவனுக்குப் பின்னால் தோள்பற்றி நின்றாள் சம்பா “ச்சோடாம்மா. மை தேக் லூங்கா. தும் உதர் ஜாவ்.” கண்ணீரைத் துடைத்தபடி நின்றாள் சம்பா.
நம்பியூர் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட அந்த இரவிலிருந்தே அவன் எதுவும் பேசவில்லை. உதய்யும் காவலாளிகளுமே விபரங்களைச் சொல்லினர். கண்ணில் கண்ட ஒரே சாட்சியான நாடிமுத்து இருட்டில் எதையும் சரியாகப் பார்க்கமுடியவில்லை என்று எழுதிக் கொடுத்திருந்தார். அவருக்கு சிறு குழப்பம். அடித்தது காசியா அல்லது அமித்தா?
மறுநாள் காலையில் ஆலையின் அதிகாரிகள் வந்து அமித்துக்கும் காளைக்கும் முன்விரோதம் எதுவுமில்லை, காசிநாத்தைத் தாக்கப்போய் தவறி அது காளையின் தலையில் பட்டுவிட்டது என்று புகாரளித்த பின் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. அமித் யாரிடமும் எதையும் சொல்லவோ பேசவோ மறுத்துவிட்டான்.
“ஜாமீன் வாங்கிவிடலாம். அவன் வாயைத் திறந்து நான் சொல்லிக் கொடுப்பதைச் சொன்னால் போதும்.” திரும்பத் திரும்ப வக்கீல் ஆலையின் அலுவலர்களிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
சஞ்சீவின் முகத்தில் இன்னும் பதற்றம் தணிந்திருக்கவில்லை “அவன்தான் வாயே தெறக்க மாட்டேங்கறானே பாவி. எங்கிருந்தோ பொழக்க வந்துட்டு எம் பொழப்புல மண்ணப் போட்டுட்டானே.”
“அதெல்லாம் நீ பயப்படாதே. மொதலாளிகிட்ட நான் பேசிட்டேன்.”
“இல்லண்ணே. இந்த கேஸ் விவகாரத்துக்காகத்தான் அவர் பொறுத்திட்டு இருக்கார்னு எம்.டி சொன்னாராம். வேற எடத்துலதான் பாக்கணும்.” அவன் முகம் இருண்டிருந்தது.
“நீயே இப்பிடி கவலைப்பட்டா நாடிமுத்தண்ணன் நெலமையை யோசிச்சுப் பாரு. அன்னிக்கிருந்தே அவர் பைத்தியம் புடிச்ச மாதிரிதான் உக்காந்திருக்காரு. என்ன நடந்துதேன்னே செரியா சொல்ல முடியலை. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி சொல்றாரு. வக்கீலுக்கும் செம கடுப்பு.”
கங்காதேவி குமுறி அழுதபடி விலகி நடக்க பாசுதேவ் பின்னாலேயே விரைந்தார். “அங்க பாரு பாவம். என்னவோ நெனச்சு பையனை இங்க அனுப்பிருக்காங்க. இப்பிடி ஆயிடுச்சுன்னு பொலம்பறாங்க. இதுல சம்பந்தப்பட்டவன் அந்தப் பாவிப்பய காசி. அவன் ஜாலியா இருக்கான். இன்னுமே அவன்கிட்ட அந்தத் தெனாவெட்டு போகலே பாத்தியா?”
சற்று தள்ளி இன்னும் சில ஆலை அலுவலர்களுடன் காசியும் நின்றிருந்தான். வாய் எதையோ மென்று கொண்டிருக்க அடிக்கடி தலையைக் கோதியபடி அமித் இருக்கும் திசையில் பார்த்துச் சிரித்தான்.
உரத்த குரலில் இவர்களது வழக்கு எண் அழைக்கப்படவும் அனைவரும் பதற்றத்துடன் உள்ளே நுழைந்தனர். அமித் அதே நிதானத்துடன் உள்ளே வந்து தலை குனிந்து நின்றான்.
18
சின்னியும் சரஸ்வதியம்மாவும் தணிந்த குரலில் சொன்னது எதுவுமே கௌசிக்கு விளங்கவில்லை. தொட்டிலில் கிடந்த குழந்தை இடதுகாலை ஒரு முறை உதைத்துவிட்டு முகத்தைச் சுருக்கி சிணுங்கிற்று. கை தானாக தொட்டிலை மெல்ல அசைத்தது.
“கூட்டம் போடாதீங்க. பாத்துட்டு சீக்கரமா போணும். டாக்டர் வந்தாத் திட்டுவாங்க” செவிலி கையிலிருந்த அட்டையில் எதையோ உற்றுப் பார்த்தபடியே முகப்பிலிருந்த மேசையை நோக்கி நடந்தாள். இறுகக் கொண்டையிட்ட தலை உச்சியில் வெள்ளை அரை வட்ட அட்டைபோல் ஒன்று. தடித்த கண்ணாடி.
ஏதோவொரு குழந்தை அழும் சத்தம் கூடத்தின் மூலையிலிருந்து கேட்டது.
“அவங்க எதுக்கும்மா என்னைப் பாக்க வரணும்?” எங்கோ ஆழத்திலிருந்து பலவீனமாக ஒலித்தது கௌசியின் குரல்.
“அந்தம்மாவும் பொண்ணும் வந்துருக்காங்க. என்ன சொல்றாங்கன்னு புரியலை. மில் ஆளுங்க ரெண்டு பேருதான் கூட்டிட்டு வந்துருக்காங்க.” பேறுகாலக் களைப்பும் கைம்பெண்ணின் துயரமும் ஒரேயடியாக தலையில் கவிழ்ந்த சுமையைத் தாளமாட்டாமல் சுருண்டிருந்த கௌசியின் தலையை மெல்ல வருடினாள் சின்னி.
சரஸ்வதியம்மா இருவரையும் அழைத்து வந்தாள்.
தயக்கத்துடன் மஞ்சள் முக்காடை சரிசெய்தபடியே கங்காதேவி. அவளுடன் இளஞ்சிவப்பு சுடிதாரில் சம்பா. இருவரும் அருகில் வரும்போதே பிரசவ வார்டின் நெடியையும் மீறிய ஒரு காந்தல் வாடை. சம்பாவின் முகத்தை ஏறிட்டாள். அவள் கண்களைக் கண்டதும் சட்டென துக்கம் பொங்கி கண்ணீர் சுரந்தது.
தொட்டிலருகில் நின்று குனிந்து குழந்தையைப் பார்த்தாள் கங்காதேவி. குழந்தைக்கு முன்னால் ஆசிர்வதிப்பதுபோல கைகளை நீட்டி முணுமுணுத்தாள் “ஜீத்தே ரஹோ. கடவுள் உன்னை கைவிடமாட்டார்.”
கௌசியின் வலதுகை மணிக்கட்டைப் பற்றி நின்றாள் சம்பா. முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். பற்றியிருந்த கரத்தின் வெம்மையை உணர்ந்தவளாய் விசும்பினாள் கௌசி.
கௌசியை நெருங்கி வகிட்டைத் தொட்டாள் கங்காதேவி “மேரா பச்சா கோ மாப் கரோ. வோ பகுத் சோட்டா. என்ன ஆச்சுன்னு தெரியலை. நீ உன் புருஷனை இழந்துட்டே. நான் என் புள்ளையை இழந்துட்டேன். இதுமாதிரி மொலைய சப்பிட்டு தொட்டில்ல கையக் கால ஆட்டிட்டு அழுத கொழந்தைதான் அவனும். சபிச்சுராதே.”
அவள் சொல்வது புரியாமல் பார்த்துக்கொண்டேயிருந்தாள் கௌசி.
0