சரவாக் பழங்குடியின மக்கள் (பகுதி 2)

சரவாக் பழங்குடிகள் பல்வேறு குறுங்குழுக்களாக வாழ்கிறார்கள். அவர்களிடையே பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் அதிகமாக உள்ளதைக் காண முடிகிறது. இருப்பினும், சரவாக் பழங்குடியின் சிறுபான்மை குழு மக்களின் முக்கியமாக  கவனிக்கப்பட வேண்டிய வரலாறு, பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்ற தகவல்கள் மிகவும் அரிதாகவே ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. வாய்மொழி பதிவுகளாகவும் செவிவழிச் செய்திகளாகவும் கிடைக்கும் சில தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டே நாம் அவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. பெரும் வனத்தில் தனித்தனி குழுக்களாக வாழும் அம்மக்களின் வாழ்வியலை மேலும் நம்பகமான ஆய்வுகளின் வழி பதிவுசெய்ய வேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது. கிடைக்கும் சொற்ப தகவல்களின் வழிதான் நாம் அவகளை ஓரளவேனும் அறிய வேண்டிய சூழல் உள்ளது.

பவாங் பழங்குடியினர் (Lun Bawang)

லுன் பவாங் பழங்குடியினர் (Lun Bawang) கிழக்கு கலிமந்தன், புருனே (டெம்புரோங் மாவட்டம் – Temburong District), சபாவின் தென்மேற்கு மற்றும் சரவாக்கின் வடக்குப் பகுதி (லிம்பாங் பிரிவு – Limbang Division) ஆகியவற்றின் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள். லுன் பவாங் என்றால் உட்புற பகுதியில் வாழ்பவர்கள் என்று பொருள். “லுன்” என்றால் மக்கள், “பவாங்” என்றால் உட்புறம். லுன் பவாங் பழங்குடியினர் போர்னியோ மலைப்பகுதிகளான கிழக்கு கலிமந்தன், புருனே, சபா மற்றும் சரவாக் ஆகியவற்றின் உட்புறத்தில் தோன்றினார்கள் எனச் சொல்லப்படுகிறது.

இவர்கள் விவசாயம் மற்றும் கோழி, பன்றிகள் மற்றும் எருமைகள் போன்ற கால்நடை பறாமறிப்பில் ஈடுபட்டுள்ளனர். லுன் பவாங் பழங்குடியினர் வேட்டைக்காரர்கள் மற்றும் மீனவர்களால அறியப்படுகிறார்கள். கடந்த காலங்களில் துணிச்சலான போர்வீரர்களாகவும், தாக்குதல் நடத்துபவர்களாகவும், தலைகளை வெட்டி வேட்டையாடுபவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்ததால் மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை சூழலை நன்கு அறிந்து வைத்துள்ளனர். இதனால், எதிரிகளை எளிமையான வழியில் பல யுக்திகளைப் பயன்படுத்தி எதிர்கொள்கிறார்கள். ஆனால், இவர்கள் நீர்நிலைகளில் வாழ்வதற்கும் நீர் போக்குவரத்துகளைக் கையாளுவதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

லுன் பவாங் மக்கள் உயரமாக கட்டப்பட்டிருக்கும் நீண்ட வீடுகளில் வாழ்கின்றனர். இவ்வீடுகளில் ஒரு புறம் ஒரு திறந்த பொது பகுதியும், மறுபுறம் தனியார் குடியிருப்பு போல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு நீண்ட வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பம் வாழலாம் எனச் சொல்லப்படுகிறது.

தாங்கள் உண்ணும் அரிசியை நுபா’ லயா (Nuba’ Laya) எனப்படும் முறையில் வாழையிலை அல்லது இத்திப் (daun itip) எனும் இலையினுள் சுற்றி வைப்பார்கள். பசையம் அரிசி, நாட்டுச் சர்க்கரை, எண்ணெய் மற்றும் உப்பு கலந்து செய்யப்படும் கெலுபிஸ் (Kelupis) என்னும் உணவு லுன் பவாங் மக்களின் பாரம்பரிய உணவு ஆகும். அது மட்டுமின்றி, “பினரம்” மற்றும் “நுனு” போன்ற பாரம்பரிய பலகாரங்களும் இதனுள் அடங்கும். மேலும், இறைச்சி மற்றும் மீன்களுடன் உப்பு சேர்த்து ஒரு மாதத்திற்கு மூங்கிலினுள் அடைத்து பாதுகாப்பார்கள். இம்முறையில் பதப்படுத்தப்படும் உணவுகளை தெலு (Telu) என்று குறிப்பிடுகின்றனர். இவ்வாறு புளிப்பு தன்மை கொண்ட உணவுகள் இவர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். மேய்ன் கெரம்புட் எனப்படும் கிணற்றில் இருந்து பெறப்படும் உப்பு நீரைக் கொண்டு தங்களுக்குத் தேவையான உப்பை இவர்கள் உற்பத்தி செய்து கொள்கிறார்கள். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மலை உப்பில் அதிக அயோடின் உள்ளடங்கி உள்ளது. குறிப்பாக இளம் குழந்தைகளின் அறிவுத்திறன் அளவை அதிகரிக்கும், சோடியம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன.

லுன் பவாங் பழங்குடியினர் கைவினைப் பொருட்களை உருவாக்குவதில் திறமை வாய்ந்தவர்கள். முற்காலத்தில் லுன் பவாங் பழங்குடி ஆண்களுக்கான ஆடைகள் குயு தாலுன் (kuyu talun) என்ற மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளன. தலையைச் சுற்றிக் கட்டப்படும் துணி சிகர் (sigar) என்றும், மேல் சட்டையாக அணியும் துணியை அப்பர் (abpar) என்றும் அழைக்கின்றனர். மேலும், இவர்கள் பல வண்ணங்கள் நகைகள், தொப்பிகள் மற்றும் பாரம்பரிய உடைகளை உருவாக்குவதில் கைத்தேர்ந்தவர்கள். சரவாக்கில் உள்ள பல பழங்குடியினரைப் போலவே, பச்சை குத்துவதும் லுன் பவாங் பழங்குடியினரின் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது.

“இராவ் அகோ லுன் பவாங்” எனப்படும் திருவிழா லுன் பவாங் மக்களால் இன்றளவும் தவறாமல் கொண்டாடப்படுகிறது. இது பாரம்பரியமாக நெல் அறுவடைத் திருவிழாவாக இருந்துள்ளது. இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் நடைபெறும். லுன் பவாங் பழங்குடி தங்களின் மற்ற பழங்குடி நண்பர்களையும் இத்திருவிழாவிற்கு அழைப்பது வழக்கம். “ங்குய்ப் சுலிங்” (nguip suling) மற்றும் “அங்க்லுங்” (angklung) போன்ற லுன் பவாங் பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனங்களும் இந்நிகழ்வில் நடைப்பெறும். லுன் பவாங் பழங்குடியினர் விருந்தோம்பும் உபசரிப்புக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பவர்களாக் கருதப்படுகிறார்கள்.

கெலாபிட் (Kelabit)

ஏறக்குறைய 3000 மக்கள்தொகையுடன் கெலாபிட் பழங்குடியினர் சரவாக் மலைப்பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பரியோ எனும் பகுதியின் மலையக மக்களாக அடையாளப் படுத்தப்படுகின்றனர். பரியோ எனும் பகுதியில் மொத்தம் 16 கிராமங்கள் உள்ளன. அவர்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்வதைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். கெலாபிட் மற்றும் லுன் பவாங் பழங்குடியினருக்கு இடையில் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

இவர்கள் நெல் விவசாயத்திற்குப் பிரபலமானவர்கள். அது மட்டுமின்றி, மலைப்பிரதேசங்களில் மற்றும் குளிர்ந்த காலநிலைக்கு ஏற்ற பல்வேறு பயிர்களையும் அவர்கள் பயிரிடுவது உண்டு. கெலாபிட் மக்கள் மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, அன்னாசி, பூசணி, வெள்ளரி, அவரை, காப்பி, தேசிப் புல், சாமை, கொடித்தோடை பழம் மற்றும் செம்புற்றுப்பழம் போன்றவற்றைகளையும் பயிரிடுபவர்களாகவும் உள்ளனர்.

சரவாக்கில் உள்ள பல பழங்குடி சமூகங்களைப் போலவே, கெலாபிட்களும் மத்திய போர்னியோவின் மலைப்பகுதிகளில் நீண்ட வீடுகளில் வசித்து வந்தனர். இருப்பினும், பொருளாதார மற்றும் சமூக காரணிகளால், 1980 களில் இருந்து பலர் நகர்ப்புறங்களில் வசிக்க இடம்பெயர்ந்துள்ளனர். ஏறக்குறைய 1,200 கெலாபிட்கள் மட்டுமே இன்னும் மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  இவர்கள் கெலாபிட் என அழைக்கப்படும் தங்களின் தாய் மொழியைச் பேசுகிறார்கள். இன்று இளைய தலைமுறையினரிடையே ஆங்கில மொழியின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இது தங்களின் தாய் மொழியின் பயன்பாட்டை பாதிக்கும் என அச்சம் கொண்டதால் அதை பாதுகாப்பதற்காக, கெலாபிட் மொழி அகராதி தயாரிக்கும் முயற்சி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.

கெலாபிட் பழங்குடி மக்களிடத்தில் நீண்ட வித்தியாசமான பெயர்களைச் வைத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. அடிப்படையில் இவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் பெயர் மற்றும் தன் தந்தையின் பெயர் இரண்டையும் சேர்த்து ஒரு பெயராக ஏற்றுக் கொள்வார்கள். கெலாபிட் ஆண்களுக்குப் பொதுவாக லியான் (Lian), அகன் (Agan), கியாக் (Giak) மற்றும் அபுய் (Apui) ஆகிய பெயர்களை வழங்குவது வழக்கம். அது போல், பெண்களுக்கு அதிகமாக சுபாங் (Supang), சிகாங் (Sigang), ரினாய் (Rinai), தயாங் (Dayang) மற்றும் ருரன் (Ruran) போன்ற பெயர்களைச் சூட்டுவது உண்டு. இது சரவாக்கில் உள்ள மற்ற பழங்குடி மக்களிடமிருந்து இவர்களை வேறுபடுத்துகிறது. கெலாபிட் மக்கள் தங்களின் பாரம்பரிய நடனம் மற்றும் இசைக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்குபவர்கள். “சேப்” (sape) எனப்படும் வீணை போன்ற கருவியை இவர்களே சுயமாக உருவாக்குகின்றனர். நீளமான மரத்தின் தண்டை கொண்டு வெவ்வக வடிவில் செதுக்குவதன் மூலம் இந்த இசைக்கருவி உருவாக்கப்படுகின்றது. சேப் மற்றும் பகங் கருவியின் இசைக்கு கெலாபிட் மக்கள் இருவாட்சி மற்றும் போர் நடனங்களை ஆடுவார்கள் எனச் சொல்லப்படுகிறது. இருவாட்சி பறவையின் அசைவுகளைப் பின்பற்றி ஆடுவதே இருவாட்சி நடனமாகும். இருவாட்சி பறவை கருணையுள்ளம் கொண்டவை என்பதால் கெலாபிட் மக்கள் அப்பறவையை வணங்கி அதற்கு சிறப்பு செய்யும் வகையில் அப்பறவைகள் போல் நடனம் ஆடுவது வழக்கம்.

கெலாபிட் மக்கள் மனிதனின் உண்மையான உணவு அரிசி என நம்புகிறார்கள். அவர்கள் அரிசி, அத்துடன் இறைச்சி, பழங்கள், காய்கறிகள், சோளம் மற்றும் கரும்பு ஆகிய உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். நுபக் லாயக் (இசிப் இலையில் மசித்த அரிசி), மனுக் பன்சுஹ் (பதப்படுத்தப்பட்டு மூங்கிலில் சமைக்கப்பட்ட கோழி), உடுங் உபிஹ் (தேசிப் புல் சேர்த்து வறுக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு), அ’பெங் (எலும்பு நீக்கப்பட்ட மீன்), பௌஹ் அப்ப (கத்திரி மற்றும் வெள்ளரி கொண்டு சமைக்கப்படும் மீன்) மற்றும் லபோ செனுடக் (காந்தன் பூ கொண்டு சமைக்கப்பட்ட மாட்டிறைச்சி) ஆகியவை கெலாபிட் பழங்குடியின் சில பாரம்பரிய உணவு வகைகள் ஆகும்.

மட்பாண்டங்கள் செய்தல் மற்றும் மர வேலைப்பாடுகளை கொண்டு கைவினைப்பொருள்களை உருவாக்குவதில் கெலாபிட் மக்கள் திறமைவாய்ந்தவர்கள். அதனை தவிர, இவர்கள் ஊசி வேலைப்பாடுகளிலும் ஆர்வம் உள்ளவர்கள். முத்துக்களைக் கொண்டு அணிகலன், தலைக்கவசம் என சுமார் 69 பொருள்களை உருவாக்குகிறார்கள். முத்துகளைக் கொண்டு செய்யப்படும் கழுத்தணிகளை ஆண்கள் பெண்கள் என இருவராலும் அணியப்படுகின்றன, அதே சமயம் தலைக்கவசம் பெண்கள் மட்டுமே அணிவார்கள்.

பிசாயா (Bisayah)

பிசாயா பழங்குடி மலேசியாவில் வடமேற்கு போர்னியோவின் பழங்குடியின மக்கள் ஆவர். தற்போது அதிகமாக சரவாக் மாநிலத்தின் வடக்கு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். பிசாயா பழங்குடி மக்கள் முருட் மொழியைத் தங்கள் தாய்மொழியாக கொண்டுள்ளனர். பிசாயா பழங்குடி மக்கள் முருட் மக்களின் கிளைகளில் ஒன்றாக தோன்றியவர்கள் என நம்பப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுமார் 7,000 பிசாயா பழங்குடியினர் சரவாக்கில் வாழ்ந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் ஆற்றோரங்களில் வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். நிலத்தை எரித்து சுத்தப்படுத்தி பின் பயிரிடும் செயல்முறையைப் பயன்படுத்தி பாரம்பரியமாக உலர் அரிசி, சாகோ பனை, காய்கறிகள் போன்றவற்றையை பிசாயா மக்கள் உற்பத்தி செய்து வருகின்றனர்.

மேலும், விலங்குகளை வேட்டையாடுவது மட்டுமின்றி கோழி, வாத்து, ஆடு, எருமை, மாடுகள் மற்றும் பலவகையான கால்நடைகளை வளர்க்கும் வழக்கமும் பிசாயா மக்களிடம் உண்டு. ஆறு மற்றும் கடலில் இருந்து மீன் பிடிப்பதில் திறமைவாய்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்களால் மற்ற பழங்குடி மக்களைக் காட்டிலும் நீண்ட நேரம் நீருக்கடியில் மூச்சைப் பிடித்து நீந்த முடிகிறது. பிசாயா மக்கள் ஆன்மவாத நம்பிக்கை உடையவர்கள். நீர், நிலம், ஆகாயாம் ஆகியவற்றிக்கு ஆன்மா உள்ளதாக நம்புகிறார்கள்.

குளிந்தங்கன் (Kulintangan), காங் (gong) ஆகியவை பிசாயா பழங்குடியின் பாரம்பரிய இசைக்கருவி ஆகும். இந்த இசைக்கருவிகள் இசைக்கத் தொடங்கியவுடன் ஆண் பெண், பெரியவர்கள், சிறியவர்கள் என பேதம் இல்லாமல் அனைவரும் ஒன்றுசேர நடனம் ஆடத் தொடங்கிவிடுவார்கள். திருமண விழா மற்றும் முக்கிய நபர்களை கொண்டாடும் நிகழ்வுகளில் இந்த இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இசைக்கருவிகள் மட்டுமின்றி பலவிதமான ஆயுதங்களை செய்வதிலும் வல்லவர்கள் பிசாயா பழங்குடி மக்கள்.

“பாபுலாங்” என்னும் திருவிழா பிசாயா பழங்குடி மக்களால் முக்கியமாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு ஆகும். இந்திருவிழாவின் போது பிசாயா பழங்குடியின் இசை, பாடல்கள், நடனங்கள், பாரம்பரிய உடைகள், அலங்காரங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. பாபுலாங் போட்டி மற்றும் நீர் எருமை பந்தயம் ஆகியவை இந்நிகழ்வின் மிக முக்கிய அங்கமாகும்.

பெராவன் (Berawan)

சரவாக்கில் வாழும் ஒராங் உலு என்னும் இனக்குழுவின் சிறுபான்மையினரில் பெராவன் பழங்குடியும் ஒன்றாகும். இவர்கள், மிரி, லோகன் மற்றும் உலு பாரம் பகுதியில் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்காலத்தில் பெராவன் மக்கள் நான்கு சமூகங்களாக பிரிந்து வாழ்கின்றனர். அவை, “லாங் டெராவான்” (Long Terawan), “பத்து பேலா” (Batu Belah), “லாங் தேரு” (Long Teru) மற்றும் “லாங் ஜெகன்” (Long Jegan) ஆகிய சமூகங்கள் ஆகும். முதல் இரண்டு சமூகத்தினர் “டுடோ” நதி (Tutoh river) அமைப்பில் தங்கள் குடியேற்றங்களைக் கொண்டுள்ளன. அடுத்த இரண்டு சமூக மக்கள் “டின்ஜர்” நதி (Tinjar river) அமைப்பில் வாழ்ந்து வருகின்றனர். டுடோ மற்றும் திஞ்சார் இரண்டும் வடக்கு சரவாக்கில் உள்ள பாரம் ஆற்றின் முக்கிய துணை நதிகள் ஆகும்.

கடந்த காலத்தில், சகோ மற்றும் மரவள்ளிக் கிழங்குடன் அரிசியை சேர்த்து சமைத்து சாப்பிடுவது பெராவான் மக்களின் பிரதான உணவின் ஒரு பகுதியாக இருந்தது. அத்துடன், காட்டில் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் இறைச்சியை சேர்த்து சாப்பிடுவதும் வழக்கமான ஒன்று. குறிப்பாக, பெராவன் மக்கள் காட்டுப்பன்றியை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும், ஆற்றிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள் மற்றும் காட்டில் இருந்து பெறப்படும் காய்கறிகளையும் அவர்கள் தங்கள் உணவில் சேர்த்து கொள்வார்கள்.

தினமும் மாலை வேளைகளில் புராணக்கதைகளைச் சொல்வது அல்லது ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்வது இவர்களின் முக்கிய பொழுது போக்கில் ஒன்று. பெராவன் பழங்குடி சமூகத்தில் இருக்கும் சிறுகுழந்தைகளுக்குத் தங்களின் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்ல முதியவர்கள் அவர்களுக்கு புராணக்கதைகளைச் சொல்வது வழக்கமாக உள்ளது. இது மட்டுமின்றி, ஓய்வு நேரங்களில் கூடைகளை முடைதல், மணி வேலைப்பாடுகள், சேப் (sape) இசைக்கருவிகளை தயாரித்தல் மற்றும் பாடல்கள் பாடுவது என பல நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடுவார்கள்.

பெராவன் மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இவர்கள் தங்களுக்கு தேவையான பொருளைத் தேவையான அளவில் பயிரிட்டு அறுவடை செய்வதே வழக்கம். கூடுதலான தேவை இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்கள் அதிகம் பயிரிடுவார்கள். சத்துப்பு நிலம் மற்றும் மலைப்பிரதேசங்களில் நெல் பயிரிடும் வழக்கம் இருந்தாலும் கூட பெரும்பாலான பெராவன் மக்கள் மலைப்பகுதிகளில் பயிரிடவே விரும்புகின்றனர். நெல் சாகுபடியைத் தவிர்த்து மரவள்ளிகிழங்கு, சகோ போன்றவைகளையும் பயிரிடுவது உண்டு. பெரும்பாலான காய்கறிகள் காட்டில் இருந்து சேகரிக்கப்படுவதால், அவர்கள் அரிதாகவே காய்கறிகளை பயிரிட்டனர்.

பெராவன் மக்கள் வேட்டையாடுவதில் திறவையானவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் நஞ்சு பதித்த ஈட்டி அல்லது ஊதுகுழல்களைக் கொண்டு வேட்டையாடும் முறையையே பயன்படுத்துவார்கள். சிலர் மட்டும் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் முடிவில் தங்களைத் தற்காத்துக் கொள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து பெற்ற துப்பாக்கிகளைக் கொண்டு வேட்டையாடுவார்கள். வேட்டையாடப்பட்ட விலங்குகளைக் கண்காணிக்க அவர்கள் வழக்கமாக வேட்டை நாய்களுடன் காட்டுக்குள் செல்வார்கள். பெராவன் மக்கள் காட்டுப்பன்றிகளை விரும்பி உண்ணும் காரணத்தால் அதிகமாக காட்டுப்பன்றிகளையே வேட்டையாடுவார்கள். சில சமயம், பன்றிகள் தென்படாவிட்டால் குரங்குகளை வேட்டையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

புனான் (Punan)

சரவாக் மநிலத்தில் காணப்படும் மற்றுமொரு பழங்குடியினர்தான் புனான் (Punan) . இவர்களை புனன் பா (Punan Bah) என்றும் அழைப்பது உண்டு. புனான் மக்கள் பெனான் பழங்குடியைச் சேர்ந்தவர்கள் எனப் பெரும்பாலும் தவறாக நினைத்துக் கொள்வது உண்டு. எனவே, புனான் மக்கள் பெனான் பழங்குடி சமுகத்தினமிருந்து வேறுப்பட்டவர்கள் என்று குறிப்பிடுவது அவசியமாக உள்ளது. மிகுவாங் புங்குலன் (Mikuang Bungulan), மிகுவாங் (Mikuang) மற்றும் அவேங் புவான் (Aveang Buan) போன்ற பெயர்களும் புனான் மக்களுக்கு உண்டு. இவர்கள் வழ்ந்து வரும் பகுதியில் அருகில் இருக்கும் நதிகளின் பெயர்களில் இருந்து இவர்களுக்குப் இப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

புனான் மக்கள் நாடோடிகளாக வாழ விரும்பாதவர்கள். விவசாயம் இவர்களின் பிரதான தொழிலாக இருந்துள்ளது. இவர்கள் மரவள்ளி, சாமை, கரும்பு, புகையிலை போன்ற பல வெப்பமண்டல தாவரங்களை அதிகமாக பயிரிடுவார்கள். விலங்குகளை வேட்டையாடுதல், மீன் பிடித்தல் மற்றும் வன வளங்களைச் சேகரித்தல் போன்றவைகளும் அவர்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய காரணியாக இருந்துள்ளது.

புனன் பெரும்பாலும் சரவார்க் பிந்துலு பிரிவில் உள்ள பாண்டன், ஜெலாலாங் மற்றும் காகஸ் ஆகிய இடங்களில் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். ராஜாங் ஆற்றின் அருகே, அவர்களின் குடியிருப்பு பரந்து விரிந்துள்ளன. போர்னியோவின் மையப் பகுதி, ராஜாங் நதி மற்றும் பலுய் பகுதிகளில் செகாபன், கெஜாமன் மற்றும் லஹானன் ஆகியோருடன் சேர்ந்து குடியேறிய ஆரம்பகால மக்களில் புனான் பழங்குடியினரும் அடங்குவர். புனான் பழங்குடி மக்கள் “பஹ்-பியாவ்” (Bah-Biau) என்னும் மொழியைப் தாய் மொழியாக் கொண்டுள்ளனர். இம்மொழி செகாபன் (Sekapan) மற்றும் கெஜமான் (Kejaman) பழங்குடி மக்கள் பேசும் மொழிக்கு நெருக்கமானது.

புனான் பழங்குடியினர் “பெசாவிக்” (Besavik) என்னும் ஆன்மவாத நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள். பின்னர், கென்யா பழங்குடியினரின் வழிப்பாட்டு மரபான “புங்கன்” (Bungan) முறையை கலிமந்தானைச் சேர்ந்த “ஜோக் அபுய்” (Jok Apui) என்பவரின் வழிகாட்டலில் புனான் கடைப்பிடிக்கத் தொடங்கினர். புனான் மக்களின் இறப்பு சடங்குகள் தனித்துவமானதாக கருதப்படுகிறது. கடந்த காலங்களில் “லாஜர்” (lajar) என்று அழைக்கப்படும் தங்களின் தலைவர்கள் இறந்தவுடன் நிலத்தில் புதைக்கவோ எரிக்கவோ செய்ய மாட்டார்கள். அதற்கு பதிலாக, 50 மீட்டர் உயரத்தில் “கெலிரியங்” (kelirieng) என்று சொல்லப்படும் ஒரு பரண் உருவாக்கி அதில் தங்களுடைய தலைவர்களை அடக்கம் செய்வார்கள். தற்போது சரவாக்கில் 30க்கும் குறைவான கெலிரியங்கள் மட்டுமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கெலிரியங் பெலியான் மரத்தூண்களில் செதுக்கப்படுகின்றது. ஒரு பெரிய மரத்தை தேர்ந்தெடுத்து வெட்டப்பட்டு கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அம்மரதூணை துல்லியமாக செதுக்கக்கூடிய ஒருவரிடம் ஒப்படைக்கப்படும். ஒவ்வொரு வடிவமும் குறிப்பிடத்தக்க அர்த்தத்தைக் கொண்டிருப்பதால், செதுக்குபவர் வடிவமைப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டியது மட்டுமல்லாமல், அவர் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். ஒரு கெலிரியங் தூணை வடிவமைத்து முடிக்க மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் எனப்படுகிறது. கெலிரியங் பூர்த்தி அடைந்த பின், அடுத்து வரும் அறுவடை காலத்தில் இரண்டாம் நிலை இறப்பு சடங்குகள் மேற்கொள்ளப்படும். இறந்த உடலின் எச்சங்கள் தஜாவ் எனப்படும் ஜாடியில் அடைக்கப்பட்டு கெலிரியங்கில் வைத்து பாதுகாக்கப்படும்.

சேகப்பன் (Sekapan)

சரவாக்கில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் இனக்குழுக்களில் சேகப்பன் சமூகமும் ஒன்று. ஆரம்பக்காலகட்டத்தில் இவர்கள் சுங்கை கஜாங் மற்றும் சுங்கை லினாவின் மேல் மற்றும் கீழ் நீரோடைப் பகுதிகளைச் சுற்றி வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர், முரு , பெலாகா ஆகிய ஆற்றோரங்களுக்கும் மற்றும் “கியாம் புங்கன்” (Giam Bungan) எனும் பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

செகப்பன் பழங்குடியினர் மெலனாவ் சமூகத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சொல்லப்படுகிறது. செகப்பன் மக்கள் கரும்பு, நெல், அன்னாசி, மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, புகையிலை மற்றும் பல காய்கறிகள் பயிரிட்டு விவசாயம் செய்வதை தன்களின் முதன்மை தொழிலாகக் கொண்டுள்ளனர். இவருகள் ஆற்றோரங்களில் குடியேறி இருந்ததால் விவசாயம் செய்வதற்கு மிகவும் ஏதுவான நிலங்களும் நீர் வசதியும் அவர்களுக்கு இருந்தது. மேலும், பறவைகள் மற்றும் குரங்குகளை வேட்டையாடி சாப்பிடும் வழங்கமும் இவர்கள் மத்தியில் உள்ளன. விலங்குகளை வேட்டையாடுவதற்கும் போரிலில் எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள ஈட்டிகள், வாள்கள் மற்றும் கேடயங்களை செகப்பன் மக்கள் பயன்படுத்தியுள்ளனர். செகப்பன் சமூகத்தில் பத்து வயதிலிருந்தே ஈட்டிகளை வீசவும், வாள்களை உபயோகிக்கவும் கற்றுக் கொடுக்கப்படும் வழக்கம் உள்ளது. ஆனால்,  ஈட்டிகள் மற்றும் வாள்களின் பயன்பாடு ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பெண்கள் விவசாயம், கால்நடைகளை வளர்ப்பது, நெசவு செய்தல் மற்றும் மரக்கட்டைகளைச் செதுக்குதல் மற்றும் கைவினைப்பொருட்களைத் தயாரித்தல் போன்ற வேலைகளைச் செய்வார்கள். இவர்கள் ஆற்றங்கரை அருகில் வசிப்பதால் அனைவரும் நீச்சல் அடிப்பதில் திறமையானவர்களாக இருக்கிறார்.

செகப்பன் சமூகத்தின் பழக்கவழக்கங்களில், ஆண்கள் பெண்கள் என வேறுபாடு இல்லாமல் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் பச்சைகுத்துதல்.  பச்சைகுத்துதல் ஆதி காலத்திலிருந்து அனைவரும் பின்பற்றி வந்த செகப்பன் பழங்குடியினரின் முக்கியமான பாரம்பரியம் எனக் கருதப்படுகிறது. செகப்பன் பழங்குடி பெண்கள் தங்களின் அழகை அதிகரித்துக் கொள்ளவும், தங்களுடைய துணையை எளிதாகக் கண்டுபிடிக்கவும் பருவமடைவதற்கு முன்பே பச்சைகுத்துவது நடைமுறையில் இருந்துள்ளது. ஏனென்றால், பச்சை குத்தல்கள் பண்டைய காலத்தில் செகப்பன் பெண்களின் அழகு மற்றும் நேர்த்தியின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. முந்தைய காலங்களில் இரண்டு கைகளுக்கும் சேர்த்து பச்சை குத்தி அதனை உலர வைப்பதற்குக் குறைந்து ஒரு நாள் அல்லது அதிகபட்சம் மூன்று வாரங்கள் வரை எடுத்துக் கொள்ளப்படும். முழங்கையிலிருந்து தொடங்கி விரல் நுனி வரை இரண்டு கைகளும் முழுமையாக மையால் மூடப்பட்டிருக்க வேண்டும். இதற்கு மூன்று முதல் ஐந்து வகையான ஊசிகள் பயன்படுத்தப்படும்.

கெஜாமன் (Kejaman)

சரவாக்கில் வாழும் காஜாங் எனும் ஒரு பெரிய சமூகத்தின் கீழ் வெகுவாக அறியப்படாத மற்றொரு சிறுபான்மையினர் கெஜாமன் பழங்குடியாவர். கெஜாமன் மக்கள் நீண்ட வீடுகளில் வாழ்பவர்கள். சரவாக்கின் “பெலாகா” (Belaga) மாவட்டத்தில் உள்ள “ரெஜாங்” (Rejang) ஆற்றின் மேல் பகுதியில் உள்ள “லாங் லிட்டன்” (Long Liten) மற்றும் “லாங் செகாஹாம்” (Segaham) ஆகிய இரண்டு கிராமங்களில் கெஜமான் மக்களை அதிகமாக காணலாம்.

“சுவே” (Suwey) என்பது கெஜமன் பழங்குடியின் பாரம்பரிய நடனமாகும். தங்களுடைய விருந்தினரை வரவேற்பதற்காக இந்நடனம் ஆடப்படும். இவர்களுடைய பாரம்பரிய உணவு “சிகு” (Sigu ) என்னும் சவ்வரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உணவு ஆகும். சரவாக்கில் உள்ள பிற சிறிய பழங்குடியினரைப் போலவே, கெஜாமன் பழங்குடி மக்களும் பச்சை குத்தல்கள் மற்றும் காதாணி அணிதல் உட்பட தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் வழக்கத்தைப் பின்பற்றியுள்ளனர்.

இவர்களை நிறைய பேர் அறிந்திருப்பது இல்லை. சிறுபான்மையினர் என்பதால் இவர்கள் மேல் அதிகமான கவனம் செலுத்தப்படவில்லை என்றுதான் கூறவேண்டும். இவர்கள் தொடர்பான வரலாறுகளும் தகவல்களும் மிகவும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டில் இவர்களின் இருப்பை வெளியில் தெரியப்படுத்துவதற்கு, சுவே நடனத்தில் அதிக எண்ணிக்கையிலான கெஜாமன் மக்கள் பங்கேற்று, நடனம் ஆடி மலேசியவின் சாதனை புத்தகத்தில் பெயர் பதித்துள்ளனர். அதே ஆண்டு, வழக்கொழிந்து வரும் தங்களின் மொழியைப் பாதுகாக்கும் முயற்சியாக கெஜாமன் மொழியில் பட அகராதி ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

இது போன்று சரவாக் மாநிலத்தில் மட்டும் இன்னும் சிறுக்குழுக்களாகப் பிரிந்து பல பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியின மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தை மலேசியா ஏற்றுக்கொண்டாலும், மலேசிய பழங்குடியின மக்கள் தங்கள் உரிமைகள் குறிப்பாக நில உரிமைகளைப் பெற்றுக் கொள்ள அடிப்படையில் இருந்தே பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.

மலேசிய அரசாங்கம் சரவாக் மாநிலத்தில் உள்ள காடுகள் நிலையானவை (sustainably) என குறிப்பிடுகின்றனர். ஆனால் அவை பெரிய அழிவை நோக்கி செல்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவதால் ஆறுகளில் அதிகமான சேறுகள் சேர்ந்து ஆற்றில் உள்ள மீன்கள் இறந்து விடுகின்றன. ஆறுகளில் உள்ள மீன்களை உணவாக கொண்டு வாழும் மக்களின் வாழ்வாதாரம் சிக்கலுக்குள்ளாகுகிறது. அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளரத் தொடங்கும் போது, அவை குறுங்காடுகளாக இருக்கும். இதனால், மழைக்காடுகளுக்கான சிறப்பு அம்சங்களும் மதிப்பும் இல்லாமல் போகும். அடர்ந்த மழைக்காடுகளில் வாழ்கின்ற பெனான் பழங்குடியின மக்கள் குறுங்காடுகளில் வாழ சிரமப்படுவார்கள்.

உலகின் மிக ஏழ்மையானவர்களில் பழங்குடியின மக்கள் 15% இருப்பதற்கான காரணம் அவர்கள் மேல் நிகழ்த்தப்படும் பாகுபாடும் ஒரு காரணமாகிறது. உலகளவில், மற்ற இன மக்களை விட பழங்குடி மக்கள் நிலமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உள் இடப்பெயர்ச்சி ஆகியவற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பழங்குடி மக்கள் வாழ்கின்ற நிலம் பூமியின் 80% க்கும் அதிகமான பல்லுயிர் வளங்களைக் கொண்டுள்ளது. மேலும், அவை எண்ணெய், எரிவாயு, மரம் மற்றும் தாதுக்கள் போன்ற இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலங்கள் அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டு அல்லது மாசுபடுத்தப்படுகின்றன. பல பழங்குடி மக்கள் தங்கள் நிலத்தை விட்டு வேறு இடத்திற்கு விரட்டியடிக்க படுகின்றனர். அவர்களின் வாழ்வாதரத்திற்கான முக்கியமான வளங்கள் மற்றும் மரபுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு, வறுமை, நோய் என விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இன்னும் சில பழங்குடி மக்களின் சமூகம் முழுதுமே அடையாளம் இல்லாமல் காணாமல் போய்விட்டன.

உலக பல்லுயிர் பெருக்கத்தின் சிறந்த பாதுகாவலர்கள் பழங்குடியினர் எனச் சொல்லப்படுகிறது. காடுகளில் இருந்து சேமிக்கப்படும் 20 சதவீதத்திற்கும் அதிகமான கரிபொருள் பழங்குடி மக்களால் நிர்வகிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக அவற்றில் கரிபொருள் குளங்கள் சேகரித்துப் பாதுகாக்கப்படுகின்றது. அவை தொடர்ந்து கார்பனீராக்சைட்டை (carbon dioxide CO2) கைப்பற்றி வளிமண்டலத்தில் ஆக்சிசன் (Oxygen) வெளியிடுகின்றன, இதனால் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறைகின்றன.

ஆனால், பழங்குடியினர் சுற்றுச்சூழல் மற்றும் அதன் வளங்களைச் சார்ந்திருப்பதால், காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகளை எதிர்கொள்வதில் இவர்களே முதன்மையானவர்கள் என ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை (The United Nations Department of Economic and Social Affairs) குறிப்பிடுகின்றது.

எளிய வாழ்க்கை முறையை வாழவிரும்பும் பழங்குடிகள் இயற்கையோடு இயந்து வாழவே விரும்புகிகின்றனர். ஆனால் நாகரீக சமூகம் இயற்கையை மொத்தமாக சுரண்டி வாழும் சுயநலப் போக்கையே வளர்த்துக் கொண்டுள்ளது.  இந்த முரணான குணங்களில் பழங்குடிகள் வாழ்வு நசுக்கப்படுகிறது. பழங்குடி மக்கள் மனிதன் உலகிற்கு சொந்தமானவன் என்று நம்புகிறார்கள் ஆனால் நாகரீக மக்கள் உலகம் மனிதனுடையது என்று நினைத்துக் கொள்கிறது.

சரவாக் பழங்குடி மக்கள் – பகுதி 1

மேற்கோள் பட்டியல்

(2020, May 11). Indigenous World 2020: Malaysia. IWGIA – International Work Group for Indigenous Affairs. https://www.iwgia.org/en/malaysia/3605-iw-2020-malaysia.html

6 ways indigenous peoples are helping the world achieve #ZeroHunger. (2017, August 9). Food and Agriculture Organization of the United Nations. https://www.fao.org/zhc/detail-events/en/c/1028010/

Administrator, B. T. (2022, February 19). Kelirieng: Death Pole of the Punan Bah. BorneoTalk. https://www.borneotalk.com/kelirieng-death-pole-of-the-punan-bah/

Amnesty International. (2021, December 13). Indigenous Peoples. https://www.amnesty.org/en/what-we-do/indigenous-peoples/

BIGTOWN PRODUCTION. (2021, May 24). ETNIK BERAWAN SARAWAK. https://www.bigtownproduction.com/677549_etnik-berawan-sarawak

Bisaya | people. (2016). Encyclopedia Britannica. https://www.britannica.com/topic/Bisaya

Burkhardt, J. L., & Burkhardt, J. M. (2018). THEN AND NOW: CHANGES IN SOCIAL ORGANISATION AND LIVELIHOOD OF THE BERAWAN COMMUNITY SINCE THE FORMATION OF MALAYSIA. Journal of Borneo-Kalimantan, 3(1). https://doi.org/10.33736/jbk.618.2017

E. (2017, August 11). Punan appreciates efforts to preserve ‘keliriengs.’ Borneo Post Online. https://www.theborneopost.com/2017/08/12/punan-appreciates-efforts-to-preserve-keliriengs/

Editor CJ. (2020, October 25). Who are the Punan? DayakDaily. https://dayakdaily.com/who-are-the-punan/

Guerreiro, A. J. (2021, February 2). Cultural History In Focus | “Kelirieng: The Vanishing Monumental Heritage of Sarawak” by Antonio J. Guerreiro. Art of The Ancestors | Island Southeast Asia, Oceania, and Global Tribal Art News. https://www.artoftheancestors.com/blog/kelirieng-antonio-j-guerreiro

Hood, R. R. (2022, February 24). Etnik Sekapan di Belaga. Red Riding Hood. http://mydylarice.blogspot.com/2016/10/etnik-sekapan-di-belaga.html

Indigenous Peoples. (2021, March 19). The World Bank Group. https://www.worldbank.org/en/topic/indigenouspeoples#1

IWGIA – International Work Group for Indigenous Affairs. (2021, April 21). Malaysia. https://www.iwgia.org/en/malaysia.html

Kelabit. (2019). Encyclopedia.Com. https://www.encyclopedia.com/humanities/encyclopedias-almanacs-transcripts-and-maps/kelabit

L. (2022, February 24). SEKAPAN PANJANG. Lyickherry. http://lyickherry.blogspot.com/2010/06/sekapan-panjang.html

Lun Bawang di Borneo. (2010). Kata Malaysia. https://katamalaysia.my/culture/lun-bawang-di-borneo/

Project, J. (2016). Berawan, West in Malaysia. Joshua Project. https://joshuaproject.net/people_groups/10800/MY

Project, J. (2016b). Sekapan in Malaysia. Joshua Project. https://joshuaproject.net/people_groups/14821/MY

The kejaman tribe of Sarawak. (2018). DIOCESE OF MIRI. http://dioceseofmiri.blogspot.com/2018/08/the-kejaman-tribe-of-sarawak.html

The Kenjaman. (2017). Nomadic Tribe. https://nomadictribe.com/tribes/the-kenjaman

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...