விருதுகள் இலக்கியவாதிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஊக்குவிப்பு. குறிப்பாக ஒரு புத்தகத்திற்கு விருது கிடைக்கும்போது அந்தப் புத்தகம் பரவலான வாசிப்புக்குச் செல்கிறது. எல்லா விருதுகளும் அத்தகைய முக்கியத்துவம் கொண்டிருப்பதில்லை. ஒரு விருது தனக்கான முக்கியத்துவத்தைத் தனது தொடர் தேர்வுகளின் மூலமே பெற்றுவிடுகிறது. அவ்வகையில் எபிகிராம் புனைவு நூலுக்கான பரிசும்(Epigram Books Fiction Prize), தென்கிழக்காசியாவில் வழங்கப்படும் மிக முக்கியமான விருதாகக் கருதப்படுகிறது. இந்த விருதை இவ்வருடம் ஒரு மலேசிய எழுத்தாளர் கரினா ரோப்லஸ் பஹ்ரின்(Karina Robles Bahrin) பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதைப் பெற்ற எழுத்தாளரை அறிவதற்கு முன், இந்த விருதை வழங்கும் எபிகிராம் நிறுவனத்தின் நிதி மூலத்தையும் அந்நிறுவனம் வழங்கும் விருது எவ்வகையில் முக்கியமானது என்பதையும் அறிவது அவசியம். எபிகிராம் நிறுவனமானது (Epigram) 1991-ஆம் ஆண்டில், எட்மண்ட் வீ (Edmund Wee) என்பவரால் ஒரு வடிவமைப்பு நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. அவ்வகையில், இந்நிறுவனம் முதலில் தனியார் நிறுவனங்களின் சின்னம், போர்ட்போலியோ வடிவமைத்தல் மற்றும் வருடாந்திர அறிக்கைகளை வெளியிடுதல் ஆகிய சேவைகளையே வழங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து, 1999-இல் நிறுவப்பட்ட எபிகிராம் புத்தக நிறுவனம் (Epigram Books), மலையேறும் வீரர் டேவிட் லிம் (David Lim) அவர்களின் ‘மவுண்டன் டு க்ளைம்ப்: தி க்வெஸ்ட் ஃபார் எவரெஸ்ட் அண்ட் பியோண்ட்’ (Mountain to Climb: The Quest for Everest and Beyond) எனும் புத்தகத்தை முதன்முதலில் வெளியிட்டது. 5000 பிரதிகள் விற்பனையான அப்புத்தகத்தின் வடிவமைப்பு மற்றும் அச்சிடும் செலவுகளை எபிகிராம் புத்தக நிறுவனமே ஏற்றுக் கொண்டது.
2011-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திலிருந்து, எபிகிராம் புத்தக நிறுவனம் அதன் கூட்டு நிறுவனத்திலிருந்து விலகி ஒரு தனி நிறுவனமாக இயங்கி வருகிறது. 2015-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட எபிகிராம் புக்ஸ் ஃபிக்சன்பரிசானது (Epigram Books Fiction Prize), அதன் ஆரம்பக்கட்டத்தில் சிங்கப்பூர் குடிமக்கள், சிங்கப்பூரின் நிரந்தர குடியேறிகள் மற்றும் சிங்கப்பூரில் பிறந்து வெளிநாட்டில் வசிக்கும் எழுத்தாளர்கள் ஆகியோருக்கு மட்டுமே உரியதாக இருந்தது. 2019-ஆம் ஆண்டு முதல், சிங்கப்பூர் மட்டுமின்றி, பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அசல் தன்மையுடைய மற்றும் இதற்கு முன்பு வெளியிடப்படாத சிறந்த ஆங்கில மொழி நாவலுக்காக ஆண்டுதோறும் இப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2015-ஆம் ஆண்டு தொடங்கி இன்றளவிலும், இந்த எபிகிராம் புக்ஸ் ஃபிக்சன்பரிசானது, சிங்கப்பூரின் உயர்நிலை இலக்கியப் பரிசாக நிலவி வருகிறது.
2015-ஆம் ஆண்டின் தொடக்கப் பரிசை ஓ தியாம் சின் (O Thiam Chin) தனது ‘நவ் தட் இட்ஸ் ஓவர்’ (Now That It’s Over) நாவலுக்காக வென்றார். 2016-ஆம் ஆண்டு, ‘தி கேட்கீப்பர்’ (The Gatekeeper) எனும் நாவலுக்காக நுராலியா நோராசிட் (Nuraliah Norasid) வென்றார். 2017-ஆம் ஆண்டுக்கான பரிசைச் செபாஸ்டியன் சிம் (Sebastian Sim) ‘தி ரியோட் ஆக்ட்’ (The Riot Act) எனும் நாவலுக்காக வென்றார். இம்மூன்று வருடங்களிலும் இப்பரிசினை வென்ற எழுத்தாளர்கள் அனைவரும் சிங்கப்பூரின் குடிமக்களாவர். 2018-ஆம் ஆண்டில், ‘இம்பெரெக்திக்கல் யூசஸ் ஒப் கேக்’ (Impractical Uses Of Cake) எனும் நாவலுக்காக எபிகிராம் புக்ஸ் ஃபிக்சன் பரிசினை வென்ற இயோ ஜோ-ஆன் (Yeoh Jo-Ann) எனும் எழுத்தாளர் மலேசியாவில் பிறந்து, பின்னர் சிங்கப்பூரின் நிரந்தரக் குடியுரிமம் பெற்றவர்.
2019-ஆம் ஆண்டு முதல் பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மலேசிய எழுத்தாளரான ஜோசுவா காம் (Joshua Kam) ‘ஹவ் தி மேன் இன் கிரீன் சேவ்ட் பகாங், அண்ட் போசிப்லி தி வோர்ல்ட்’ (How The Man In Green Saved Pahang, And Possibly The World) எனும் நாவலுக்காக 2020-ஆம் ஆண்டின் எபிகிராம் புக்ஸ் ஃபிக்சன் பரிசினை வென்றார். அவரைத் தொடர்ந்து, ஜனவரி 2021-இல், ‘தி போர்மிடபல் மிஸ் கேஸ்ஸிடி’ (The Formidable Miss Cassidy) எனும் நாவலுக்காக மெய்ஹான் போய் (Meihan Boey) மற்றும் ‘செல்லி போங்!’ (Sally Bong!) எனும் நாவலுக்காக முன்பதாகவே 2017-இல் இப்பரிசினை வென்ற செபாஸ்டியன் சிம் (Sebastian Sim) எனும் இரண்டு எழுத்தாளர்களும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். எபிகிராம் புக்ஸ் ஃபிக்சன் பரிசளிப்பு விழாவின் வரலாற்றிலே, இரு கூட்டு வெற்றியாளர்கள் பரிசினை வெல்வதும், ஒரே எழுத்தாளர் மற்றொரு முறை பரிசினை வெல்வதும் இதுவே முதல் முறையாக அமைந்தது.
இவர்களின் வரிசையில், 2022-ஆம் ஆண்டில் எபிகிராம் புக்ஸ் ஃபிக்சன் பரிசை இரண்டாவது முறையாக மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளரான கரினா ரோப்லஸ் பஹ்ரின் (Karina Robles Bahrin) வென்றுள்ளார். இவர் எழுதிய ‘தி ஆக்சிடென்டல் மலெ’ (The Accidental Malay) எனும் நாவலுக்கு $25,000 டாலர் (மலேசிய ரிங்கிட்டிற்கு RM77,777.50) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், 22-ஆம் திகதி 2022-இல் ஃபேஸ்புக் (Facebook) மற்றும் யூடியூப்பில் (Youtube) நேரலையாக வெளியிடப்பட்ட மெய்நிகர் விழாவில் போட்டிக்குக் கிடைக்கப் பெற்ற மொத்தம் பத்து நாவல்களுள், இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இதர மூன்று எழுத்தாளர்களை வீழ்த்தி, கரினா ரோப்லஸ் பஹ்ரின் இவ்வருடத்திற்கான எபிகிராம் புக்ஸ் ஃபிக்சன் பரிசை வென்றுள்ளார். மெய்நிகர் விழாவின்போது தனது ஏற்புரையில், எழுத்தாளர் கரினா, தனக்குக் கிட்டிய வெற்றி எதிர்பாராதது என்றும், ‘தி ஆக்சிடென்டல் மலெ’ புத்தகமே தன்னுடைய எழுத்துலகின் முதல் நாவல் முயற்சி என்பதையும் தெரிவித்தார்.
மலேசியாவில் கெடா மாநிலத்திலுள்ள லங்காவி தீவில் வசிக்கும் 52 வயது நிரம்பிய எழுத்தாளர் கரினா ரோப்லஸ் பஹ்ரின், தன் இளம் வயதில் அத்தீவில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சமூகக் கதைகளைச் சொல்வதன் மூலமாகத் தன்னை இலக்கியத்தில் பழக்கப்படுத்திக் கொண்டார். இளம் வயதில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பெட்டாலிங் ஜெயாவின் அஸ்ஸுன்டா (Assunta) இடைநிலைப்பள்ளியில் தனது கல்வியை முடித்த எழுத்தாளர் கரினா ரோப்லஸ் பஹ்ரின், பின்னர் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University, California) இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.
கொலோம்பிய நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளரான கேப்ரியல் கர்சியா மர்குவேஸ்ஸின் (Gabriel Garcia Marquez) படைப்பிலக்கியங்களை விரும்பி வாசிக்கும் பழக்கமுடைய எழுத்தாளர் கரினா, நாளடைவில் நாவல் எழுதுவதில் ஆர்வம் காட்டினார். அதற்கான முதல் முயற்சியே தென்கிழக்காசியா அளவில் சாதனைக்கு வித்திட்டது. தற்போது மற்றொரு நாவலை எழுதி வரும் எழுத்தாளர் கரினா, அவர் தொடர்ந்து எழுதுவதற்கான உந்துதலைக் கொடுப்பது தனக்குக் கிடைத்த பரிசல்ல, மாறாக எழுதும் செயல்பாட்டில் தனக்குக் கிடைக்கும் இரசிக்கத்தக்க நிகர் வாழ்க்கையே என தெரிவித்துள்ளார்.
நாற்பது வயதுடைய ஜெஸ்மீன் லியோங் (Jasmine Leong) எனும் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டே ‘தி ஆக்சிடென்டல் மலெ’ எனும் இந்நாவல் அமைக்கப்பட்டுள்ளது. பிறக்கும்போதே தாய் தந்தையை இழந்து, தனது பாட்டியான மேடம் லியோங்கால் (Madam Leong) வளர்க்கப்பட்ட ஜெஸ்மீனின் வாழ்க்கையில் ஒரே லட்சியம் தான். அது, ஃபீனிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆக வேண்டும் என்பதுதான். ஆனால் மேடம் லியோங் இறந்தவுடன், ஜெஸ்மீன் தனது சுய பூர்வீகம் பற்றிய உண்மையை அறிகிறாள். உண்மையில் ஒரு முஸ்லீம் பெண்ணான ஜெஸ்மீன் எப்படி மலேசியாவின் சிறந்த பாக் குவா (Bak Kwa) என்று அறியப்படும் லியோங் குடும்பக் குழுமப் பேரரசின் தலைவியாக முடியும்? இதுவே ‘தி ஆக்சிடென்டல் மலெ’ நாவலின் கதையோட்டமாகும். அரை நூற்றாண்டுக்கு முன்னர் வரையறுக்கப்பட்ட மலேசியாவின் அரசியலமைப்புக் கொள்கைகளின் மனித விலையை இந்நாவலின் கதை ஆராய்கிறது என்றும், இம்மாதிரியான விதிகள் இன்றைய உலகில் இன்னும் பொருத்தமானதா எனும் கேள்வியை இந்நாவல் வாசகர்களிடையே எழுப்பும் என்றும் எழுத்தாளர் கரினா ரோப்லஸ் பஹ்ரின் தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் கரினா ரோப்லஸ் பஹ்ரினொடு, நிஷா மெராஜ், நிங் சிகின், தன் லிப் ஹோங் ஆகிய மூன்று சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நாவல்களும் இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆயினும், 2022-ஆம் ஆண்டுக்கான எபிகிராம் புக்ஸ் ஃபிக்சன் பரிசு ‘தி ஆக்சிடென்டல் மலெ’ நாவலுக்குக் கொடுக்கப்பட்டதன் காரணத்தை நடுவர் குழுவிலிருந்த சிலர் முன்னுரைத்தனர். எடுத்துக்காட்டாக, 2022-ஆம் ஆண்டுக்கான எபிகிராம் புக்ஸ் ஃபிக்சன் பரிசின் நடுவர் குழுவிலிருந்த யுனிவர்சிட்டி டெக்னாலஜி நன்யாங்கின் (Universiti Teknologi Nanyang) பேராசிரியரான, ஷெர்லி செவ் (Shirley Chew) எழுத்தாளர் கரினா ரோப்லஸ் பஹ்ரின் நாவலை “நன்கு வடிவமைக்கப்பட்ட புத்திசாலித்தனமான படைப்பு” என்று பாராட்டினார். அதோடு, “நாவலின் கதை இயக்கமும், அமைப்பும் கூர்மையான நாடக உணர்வோடு கட்டமைக்கப்பட்டுள்ளன. புத்திசாலித்தனத்துடன் கூடிய உயிரோட்டமான உரைநடை இதற்கு நன்றாக உதவுகிறது” என்றும் அவர் கூறினார்.
இதர நீதிபதிகளான எழுத்தாளர் அமீர் முஹம்மட் (Amir Muhammad), மலேசியாவில் புகு ஃபிக்ஸியின் (Buku Fixi) வெளியீட்டாளரான சசிதரன், சிங்கப்பூரின் நடவடிக்கை மற்றும் ஆராய்ச்சிக்கான மகளிர் சங்கத்தின் தலைவர் மார்கரெட் தாமஸ் (Margaret Thomas) மற்றும் எபிகிராம் புக்ஸ் வெளியீட்டாளரான எட்மண்ட் வீ (Edmund Wee) ஆகியோரும் எழுத்தாளர் கரினா ரோப்லஸ் பஹ்ரின் நாவலைப் பாராட்டினர். கரினா ரோப்லஸ் பஹ்ரின் மற்றும் ஜோசுவா காம் போன்ற சிறந்த மலேசிய எழுத்தாளர்களின் முயற்சியும் படைப்பாற்றலும் அவர்களுக்கு மட்டுமல்லாது, மலேசிய திருநாட்டிற்கே நற்பெயரை ஈட்டியுள்ளது.