‘வல்லினம்’ நாவல் முகாமின் முதல் நாள்

மழை நீரானது புவி மீதினில் சேற்றின் மீது பொழிவதைக் கண்டு மழை நீர் என்பது சேற்றினால் ஆனது என எண்ணம் கொள்வது அவரவர் அறியாமையினை உணர்த்திடும். சிறுகதைகள் மற்றும் நாவல்கள் மீதான எனது எண்ண ஓட்டங்களும் அதன் மீதான பார்வையும் அவ்வாறே இருந்தன எனலாம். வல்லினம் ஏற்பாட்டில் நான் கலந்து கொண்ட சுனில் கிருஸ்ணன் அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் கூலிமில் நடைபெற்ற மூன்று நாள் இலக்கிய முகாமும் எனது அறியாமையை நீக்கி, அவற்றின் மீதான தெளிவானதொரு பார்வைப் புலனைக் கொடுத்தது. இவ்விரு நிகழ்வுக்கு அடுத்துப் பெரிய எதிர்ப்பார்ப்போடு நான் காத்திருந்தது தைப்பிங் பேராக்கில் நடக்க இருந்த நாவல் முகாம். இம்முகாமானது இரு வருடங்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது, கொரோனா நச்சுக் காரணத்தால் 26&27 பிப்ரவரி 2022 நடந்தேறியது

இம்முகாமானது ரஷ்ய இலக்கியங்கள் குறித்து ராஜாகோபால் அவர்களையும் சு.வேணுகோபால் அவர்களையும் அழைத்துப் பேச வைப்பதாக இருந்தது.  வலுவான வாசிப்புப் பின்புலம் கொண்ட ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நடைபெறும்போது கூடுதலான தகவல்கள் கிடைக்கப் பெறும். கொரோனா நச்சுப் பரவலால் இவ்விரு ஆளுமைகளாலும் இம்முகாமில் கலந்து கொள்ள இயலாமல் போனதால் அதற்கு மாற்றாக மலேசியாவில் எழுதப்பட்ட 5 படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அதனை ஒட்டி கலந்துரையாடல் நடத்த முடிவெடுக்கப்பட்டது. முகாமில் பங்கு கொள்ளும் அனைவரும் மேற்குறிப்பிட்ட 5 படைப்புகளையும் கட்டாயம் வாசித்திருக்க வேண்டும் என்று முன்பே வலியுறுத்தப்பட்டிருந்தது. மலேசியாவில் எழுதுவது எல்லாம் இலக்கியம் என்கிற பார்வைப் பொரும்பாலோருக்கு உண்டு. நாளிதழ்களில் வெளிவருபவை, புத்தகமாக வெளியிடப்படுபவை, விருது பெருபவை யாவும் சிறந்த படைப்பு என்கிற எண்ணமும் மேலோங்கியே உள்ளது. ஒரு படைப்பை எவ்வாறு ஆழமாக உள்வாங்கிட வேண்டும், படைப்புகளில் எதனைக் கவனிக்க தவறுகிறோம், எக்கூறுகள் ஒரு படைப்பைச் சிறந்த படைப்பாக மாற்றுகின்றது, மற்றும் ஒரு படைப்பின் பலவீனங்களைக் கண்டறிந்து தரத்தை மதிப்பிட்டு தீர்மானிக்கும் வாசகனை உருவாக்கிட வேண்டும் போன்ற நோக்கங்களின் அடிப்படையில் இம்முகாம் நடத்தப்படுகின்றது எனக் கூறி கலந்துரையாடலைத் தொடக்கி வைத்தார் ம.நவீன்.

கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். முதல் நிகழ்வாய் மலேசிய நாவல்களான  எழுத்தாளர் செல்வன் காசிலிங்கம் எழுதிய மிச்சமிருப்பவர்கள், அ.பாண்டியன் எழுதிய குறுநாவலான ரிங்கிட், கோ.புண்ணியவான் எழுதிய கையறு, எழுத்தாளர் சை.பீர்முகமது எழுதிய அக்கினி வளையங்கள் மற்றும் ம.நவீன் எழுதிய சிகண்டி ஆகிய நாவல்கள் பற்றிய கலந்துரையாடல் என நிரல்படி கலந்துரையாடல்கள் ஆரம்பமாயின.

முதல் நிகழ்வாக மிச்சமிருப்பவர்கள் நாவலை ஒட்டிய கலந்துரையாடல் ஆரம்பமானது. அந்நாவலை வாசித்து எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை / பார்வையினைப் பகிர்ந்து கொண்டேன். அதாவது என் வாசிப்பின் பார்வையானது புறவயமானதான நிகழ்வை அல்லது சம்பவத்தைக் கொண்டும் வரலாற்றின் ஓர் அங்கமாகத் திகழும் இந்திய மக்கள் இடையே நிலவும் சமகால பிரச்சனைகளையும் அதனால் உண்டான கண நேர மக்கள் எழுச்சியையும் முன்வைத்து இருந்தன. அதனை அடுத்து ‘மிச்சமிருப்பவர்கள்’ நாவலை ஒட்டிய கலந்துரையாடல் தொடங்கியது. ஒரு வரலாற்று நிகழ்வினையும் அதனைச் சார்ந்த பின்னனியையும் குறிப்பிடுவதால் ஒரு நாவல் சிறந்த படைப்பு எனப்படுமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. புறவயமான சம்பவத்தையும் கதாப்பாத்திரங்களையும் சொல்வதன் வழி அகவயத்தை எட்டிட இயலவில்லையா? என்கிற மற்றொரு வினாவும் எழுப்பப்பட்டது.  கதாப்பாத்திரத்தின் அறியப்படாத இடைவெளியை நிரப்பிட அக வெளிப்பாட்டின் வழி எழுத்தாளர் அனுகியிருந்தால் இந்நாவல் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றதுடன் இணையம் வாயிலாக கைச் சொடுக்கும் நேரத்தில் இலகுவாக அறிந்திட இயலும் வரலாற்றுத் தகவல், அதன் பின்னனி சமூக பொருளியல் பிரச்சனைகளைச் சொல்வதற்காக ஒரு புனைவு உருவாக வேண்டிய அவசியம் இல்லை என்று கலந்துரையாடலில் கலந்து கொண்ட அரவின் அவர்கள் தன் மாறுபட்ட பார்வையை முன்வைத்தது என்னைப் பெரிதும் கவர்ந்தது எனலாம்.

அதற்கு அடுத்த கட்டமாக ஜா.ராஜகோபால் அவர்களின் காணொளி தொகுப்பான ‘நாவல் வடிவம்’ என்கிற உரையின் முதல் பகுதி ஒளியேற்றபட்டது. அக்காணொலி பதிவில் நாவல் என்பது ஒரு சமூகத்தின் கூட்டு விவாதத்தின் வெளிப்பாடு, அது ஒரு கலை வடிவம் என்றார். அக்காணொலி தொகுப்பின் பின்னர் அ.பாண்டியன் அவர்கள் எழுதிய ரிங்கிட் எனும் குறுநாவலை ஒட்டிய கலந்துரையாடல் தொடங்கியது. அரவின் குமார் அவரது வாசிப்பின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்நாவலானது வரலாற்றின் சர்ச்சையான பண வீழ்ச்சியைப் பற்றி பேசுவதுடன் அக்காலக் கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் பிம்பத்தை எழுத்தாளர் அ. பாண்டியன் அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பதாக ஆதித்தன் தனது வாசகப் பார்வைவை முன்வைத்தார். மேலும் இந்நாவலை ஒட்டிய கேள்வி பதில் அங்கத்தில்) ஒரு கல்லூரி மாணவர் தன் சந்தேகத்தை முன்வைத்தார்.  ஓர் எழுத்தாளர் என்பவர் அரசியல் பற்றி பேசும்போது பலவீனங்கள் பற்றி பேசலாமா? பேச கூடாதா? என்பதே அக்கேள்வியாகும். ஓர் புனைவாளன்/படைப்பாளி என்பவன் அதிகாரத்தின் பிடியைச் சார்ந்திருக்காது எத்தகைய பதிவுகள் ஆயினும் (நேர்/எதிர்மறை) அதனை மறைக்காமல் எழுதும்போதுதான் ஒரு நாவலானது வரலாற்று நாவலாகும் என ம.நவீன் பதில் அளித்தது அங்கிருந்த அனைவரிடமும் சிறந்த தெளிவைக் கொடுத்தது.

‘ரிங்கிட்’ நாவலை ஒட்டிய சு.வேணுகோபால் ஐயா அவர்களின் ஒரு காணொலி தொகுப்பும்  வெண்திரையில் காட்டப்பட்டது. 1967ல் பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட பண வீழ்ச்சி அல்லது பணத்தின் மதிப்பு மாறும்போது ஏற்படுகிற மக்களின் தடுமாற்றத்தைப் பேசுவதாகக் கூறியதுடன் காம்யூனீஸ்ட் போராட்டவாதியாகிய சின்பெங்கின் காலத்து விவரணைகள் சிறப்பாக இருப்பதாகக் கூறினார். இந்நாவலில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் செட்டியார் பற்றிய விவரணைகள், இஸ்லாமிய வாழ்க்கை, பண்பாட்டுமுறை  பற்றியவை நன்பகத்தன்மையுடன்  உள்ளது என்றதுடன் காம்பூனிஸ்ட் என்பவர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள், தீவிரவாதிகள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிர்ப்பானவர்கள் என்கின்ற கம்யூனிஸ்டு மீதான மக்களின் பார்வைகள் இந்நாவலில் காட்டப்பட்டுள்ளதாக் கூறினார். எழுத்தாளர் இந்நாவலில் கூறும் தகவல்கள்,செய்திகள் ஈர்ப்பாகவும் செறிவாகவும் மேலும் சில தகவல்கள் அறிந்திடாத தகவல்களாக உள்ளன என்றதுடன் இந்நாவலுக்கான அனைத்து விசயங்களும் ஒன்றோடு ஒன்று பிணையப்பட்டு ஒருமைக்குள் வருவதாகக் கூறி ஒட்டுமொத்தமாக இந்நாவல் வன்மத்தையும் மனிதாபிமானத்தையும் காட்டுவதாகக் கூறி உரையை முடித்துக் கொண்டார். அடுத்த கலந்துரையாடல் நடைபெறுவதற்கு முன்பு மதியம் 3 மணிக்குத் தேநீர்/பலகாரங்கள் வழங்கப்பட்டன. இதுப் பங்கேற்பாளர்களின் சோர்வைக் களைய செய்தது.

அடுத்த படைப்பாகக் கோ.புண்ணியவான் அவர்கள் எழுதிய கையறு நாவல் முன்வைத்து கலந்துரையாடல் நடைப்பெற்றது.  கையறு நாவல் தனக்கு ஏற்படுத்திய வாசிப்பு அனுபவத்தை முன்வைத்தார் ஆதித்தன் மாகாமுனி. கையறு நாவலானது ஜப்பான்காரர்களால் கூலி தொழிலாளிகள் இரயில் தண்டவாளங்கள் கட்டும் பணிக்கு இழுத்து வரப்பட்டு அனுபவித்த இன்னல்களையும் அவலத்தையும் பேசுவதுடன் தோட்டம் சார்ந்த விசயங்கள் நன்றாக எழுதப்பட்டுள்ளது என்றார். இந்நாவலின் பின்புலத்தில் இருக்க கூடிய அரசியலைப் பற்றி எழுத்தாளர் பெரிதுபடுத்தவில்லை, மாறாகச் சாமானிய வர்கத்தினரான தோட்டப்பாட்டாளிகள் படும் அவலங்களைத் தனது படைப்பில் கொண்டு வந்துள்ளார் என்றும் இந்நாவலில் எவ்விடத்திலும் பெரும் நிலக்காட்சி குறிப்பிடவில்லை, அதனை எழுத்து வடிவில் உருவாக்கும் திறனை  ஓர் எழுத்தாளர் கையில் எடுப்பது பெரும் சவாலானது என தனக்கான பாணியில் வாசிப்பனுவத்தைப் பகிர்ந்து கொண்டார் ம.நவீன்.

எழுத்தாளர் சை.பீர்முகமது அவர்கள் எழுதிய அக்கினி வளையங்கள் நாவலை ஒட்டிய பார்வையை முன்வைத்தார் தினேஸ்வரி. அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்று. கம்யூனிஸ்ட் கலவர போராட்டத்தைக் காட்டும் அதே வேளையில் ஒரு தனி மனிதனின் இருப்பு என்ன என்பதைப் புனைவாகத் தருவதை இந்நாவல் தவறவிட்டது ஒரு கலை குறைப்பாடு என்றார் ம.நவீன். மற்றுமொரு பங்கேற்பாளரான அரவின் இருளான இடத்தைத் தரிசனமாகக் காட்டலாம் என்றதுடன் அதற்கான சாத்தியம் இந்நாவலில் உண்டு, அதாவது தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வணிகம் செய்து சமூக செல்வாக்கின் உச்சத்தில் இருக்கும் மனிதரான சண்முகபிள்ளை, அவற்றினால் நிறைவு ஏதும் காணாது ஜெயா மற்றும் முத்து இருவரையும் அடிப்பது, அவர்களை அடிமைப்படுத்தி அதனால் கிடைக்கக்கூடிய குரூரமான திருப்தி என்பது ஒரு மனிதனின் கீழ்மையான இருள் நிறைந்த பகுதியைக் காட்டுவதுடன், அதனை தாம் தரிசனமாகக் காண்பதாகத் தனக்கே உரிய பாணியில் கூறியது சற்று என்னைச் சிந்திக்க வைத்தது எனலாம்.

மாலை மணி 5க்கு ஜா.ராஜாகோபால் ஐயா அவர்களின் நாவல் வடிவம் காணொலி பதிவான 3ஆம் பகுதி ஒளியேற்றப்பட்டது. அக்காணொளிக்கு அடுத்து மாலை 5.30க்கு இரவு உணவு தங்கும் விடுதியின் கீழ் தளத்தில் வழங்கப்பட்டது. இரவு உணவை முடித்தவர்கள் அவரவர் அறை சென்று ஓய்வெடுத்துக் கொண்டனர்.

இறுதி படைப்பாக இரவு 8 மணிக்குச் சிகண்டி நாவல் குறித்த கலந்துரையாடல் நடந்தது. சிகண்டி நாவலின் வாசிப்பு அனுபவத்தை இளம்பூரணன் அவர்கள் பகிர்ந்து கொண்டார். அதனை ஒட்டிய கலந்துரையாடலில் அ.பாண்டியன் ஐயா, சுப்புலட்சுமி ஆசிரியர், அரவிந்த என தங்களுக்கே உரித்தான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். சிகண்டி நாவலின் கலந்துரையாடலோடு அன்றைய நிகழ்வு முடிவுற்று அவரவர் தனக்காக ஒதுக்கப்பட்ட விடுதிக்கு சென்றனர்.

ஓர் ஆலமரம், படர்ந்து விரிந்து கிளைகள் பல கொண்டு பல ஆண்டுகள் வாழக் கூடியது. பரந்துபட்ட கிளைகளைத் தாங்கிட விழுதுகள் என்பது அவசியமாகிறது. அதுபோலத்தான் ஒரு படைப்பு, பரந்துபட்ட வாசகர்கள், அதனைத் தாங்கிட மாறுபட்ட கோணங்களில் வெவ்வேறான வாசிப்பு அனுபவங்கள் கொண்ட வாசக பார்வைகள் என்பது ஒரு படைப்புக்கு மிக அவசியமான ஒன்று என்பதை அன்றைய கலந்துரையாடல் உணர்த்திச் சென்றது. இத்தகைய கலந்துரையாடலானது இனிவரும் காலங்களில் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்குக் கட்டாயம் நடத்தபட வேண்டிய ஒன்றாகும், அப்போதுதான் அவர்களால் ஒரு வாசகனாக ஒரு படைப்பை ஆழமாக அணுகவும் சிறந்த படைப்பைச் சரியான கூறுகளுக்கேற்ப மதிப்பிட்டு அதன் தரத்தை முடிவு செய்யவும் முடியும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...