பிப்ரவரி 26-27 என இரு நாள்கள் நடந்த வல்லினம் நாவல் முகாமில் நானும் கலந்து கொண்டேன். நாவல் முகாம் குறித்த இரண்டாவது நாள் அனுபவங்களைப் பதிவு செய்யும்படி வல்லினம் குழுவினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தப் பதிவினை எழுதுகிறேன்.
பிப்ரவரி 27, காலை சிற்றூண்டிக்குப் பின் சரியாக 8.00 மணிக்கு முகாம் தொடக்கம் கண்டது. புதிய படைப்பாளர்கள் படைப்புலகத்தில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் அதை எதிர்கொள்ள அவர்கள் அணுகும் முறையைக் குறித்தும் இந்த அங்கம் நடத்தப்பட்டது. புதிய படைப்பாளர்களாக அரவின் குமார், ஹரிராஸ்குமார் ஆகியோரோடு நானும் முன்னே அழைக்கப்பட்டேன். எங்கள் மூவரைப் பற்றிய அறிமுகத்தோடு முதல் அங்கம் தொடங்கியது.
படைப்புலகிற்கு நான் புதியவன் என்றாலும் வாசிப்பனுபவமே என்னை அதிகம் எழுத தூண்டியதாக நான் குறிப்பிட்டேன். அதோடு இடைநிலைப்பள்ளிக்குச் சென்ற பிறகு தமிழாசிரியர் கொடுத்த ஊக்கத்தால் தொடர்ந்து எழுத தொடங்கியதை நினைவு கூர்ந்தேன். சிறுகதை, மரபுக் கவிதைகளின் மேல் எனக்கு இருக்கும் ஆர்வத்தைக் குறிப்பிட்டதோடு நாவல்களை அதிகமாக வாசித்துத் திறனாய்வு செய்து கொண்டிருப்பதையும், முகாமில் கலந்து கொண்டதனால் இன்னும் ஆழமாக எவ்வாறு திறனாய்வு செய்வது என அறிந்து கொண்டதையும் கூறினேன்.
தொடர்ந்து அரவின் குமார் தன்னறிமுகத்தில், பள்ளிக்காலம் தொட்டே நாளிதழ் வாசிப்பு இருந்து வந்ததைக் கூறினார். ஆசிரியர் கல்விக்கழகத்தில் விரிவுரைஞர் திரு. தமிழ்மாறன் வழிகாட்ட தீவிர இலக்கிய வாசிப்பு ஜெயமோகனிலிருந்து தொடங்கியது என்றார். ஜெயமோகனின் எழுத்தாளுமை தன்னுடைய எழுத்திலும் சிந்தனையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றவர், வல்லினம் இலக்கிய இதழில் தொடர்ந்து சில கட்டுரைகளையும் கதைகளையும் எழுதியிருப்பதைக் கவனப்படுத்தினார். தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகளையும் வாசித்து வருவதாகக் குறிப்பிட்டார். இது வரையில் வெளிவந்த சில படைப்புகள் நிச்சயமாக நன்றாக வெளிவந்திருக்கிறதென்றும் இன்னும் சில படைப்புகளில் போதாமைகள் இருப்பதையும் குறிப்பிட்டார். மேலும் இன்னும் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்ற ஆவல் கொண்டிருப்பதாகத் தன் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஹரிராஸ்குமார், சிறுவயதிலிருந்தே வாசித்துக் கொண்டிருப்பதால் அது தனக்கு நிறைய அனுபவங்களைப் பல வழிகளில் தந்திருக்கிறது என்றார். தொடக்க காலத்தில் தேர்வின்றி வாசித்தமையால் கிடைத்ததையெல்லாம் சிறந்த இலக்கியம் என்றெண்ணி வாசித்த ஹரிக்கு, எழுத்தாளர் கோ. புண்ணியவானின் நட்பிற்குப் பிறகு தமிழ் இலக்கிய வெளியின் நவீன இலக்கிய எழுத்தாளர்களின் அறிமுகம் கிட்டியது. அவர்களை வாசிப்பதனால் தன்னுடைய எழுத்திலும் இலக்கியப் புரிதலிலும் அதிகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார். கூலிம் நவீன இலக்கியக் களத்தின் சில சந்திப்புகளில் பங்கெடுத்துப் பல சிறுகதைகள், நாவல்கள் குறித்தெல்லாம் கலந்துரையாடியதின்பால் ஓர் இலக்கியப் படைப்பை அணுகும் விதத்தை அறியப்பெற்றதாகச் சொன்னார். சிறுகதை, விமர்சனக் கட்டுரை, மரபுக்கவிதை என தனது இலக்கியப் பங்களிப்பை வழங்கி வரும் ஹரி, வாசிப்பில் அதிக நேரத்தைச் செலவிடுவதையே முக்கியமானதாகக் கருதுகிறார் என்பது அவர் பேச்சில் தெரிந்தது.
எங்களின் அறிமுகத்துக்குப் பிறகு பங்கேற்பாளர்களிடமிருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டன.
ம. நவீன் : உங்கள் தலைமுறை படைப்பாளிகளிடையே எழுதுவது குறைந்து காணப்படுவதற்கான காரணம் என்ன ?
அரவின்: படைப்பு செயற்பாட்டுக்கு வாழ்வனுபவங்கள் மிகவும் அவசியமானவை என நம்புகின்றேன். அந்த வகையில் முந்தைய தலைமுறை படைப்பாளிகளுடன் ஒப்புநோக்க என்னிடம் வாழ்வனுபவங்கள் குறைவாகவே இருக்கிறது. இது குறைவான எழுத்துக்கு ஒரு காரணமாக இருக்கிறது. மேலும், இளம் வயதில் எழுத வந்த முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்பூக்கத்துக்கு அவர்கள் நம்பிய தத்துவங்கள் மிக முக்கிய காரணியாக இருந்தது. எங்கள் தலைமுறையில் அப்படி முழுமையான தத்துவ நம்பிக்கையோ படைப்பூக்கத் தூண்டலோ மிகக்குறைவாகவே இருப்பது படைப்புகள் குறைவாக வரக்காரணமாக இருக்கலாம்.
ஆதித்தன்: இலக்கிய படைப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் எங்கு இருக்கிறார்கள் என்பதுதான் கண்டறிய வேண்டிய ஒன்றாக இருக்கிறது. எங்கு இயங்குவது, தனக்கான தளம் எது என்கிற கேள்விகளுடனேயே இருப்பதால் இளைய தலைமுறை படைப்பாளர்களை எளிதில் கண்டறிவது கடினமாக இருக்கிறது. அதே சமயம் எந்த இயக்கத்தில் இணைந்து எழுத தொடங்குவது என்ற தயக்கமும் அவர்களிடையே இருக்கிறது. முதலில் அதை களைய வேண்டும். அப்பொழுதுதான் இலக்கியத்தின் மீதான நம்பிக்கை இளைஞர்களுக்கு உண்டாகும்.
ஹரிராஸ்குமார்: நான் மருத்துவப் படிப்பில் அலுவலாய் இருந்தமையால், கடந்த சில காலமாய் எழுத்துலகில் அவ்வளவாய்ப் படைப்புகளை வழங்க இயலவில்லை. தற்போது படிப்பு நிறைவுற்றதால், இனி தொடர்ந்து என் பங்களிப்பை அதிகமாக வழங்குவேன். தனியொரு படைப்பாளிக்கு எதுவுமே தடையாக இருந்துவிட முடியாது. என் எழுத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருப்பதால், என் எழுத்துச் செயற்பாட்டிற்கு என்னைத் தவிர வேறு யாரும்/எதுவும் பெரிதாகத் தாக்கத்தினைச் செய்துவிட முடியாது. வாசகர்கள் தரும் விமர்சனங்களைத் தன் எழுத்துப்போக்கை மேம்படுத்த பயன்படுத்திக்கொண்டு, பல அரைகுறை வாசகர்களின் வெற்றுப் புகழ் மழையில் நனைந்து தன் எழுத்தே சரி எனும் மாயை இன்றி செயல்பட்டால், நம் இலக்கியப் படைப்பூக்கம் மட்டுப்பெறாது தொடரும்.
இளம்பூரணன்: இலக்கியச் சர்ச்சையின்போது இளம் தலைமுறை படைப்பாளிகளின் நிலைப்பாடு என்ன?
அரவின்: மலேசியச் சூழலில் படைப்பை விமர்சனம் செய்தப் பின்னர் தனிமனித அவதூறுகள் செய்வதுண்டு. இந்த மாதிரியான சர்ச்சையின்போது உடனடி கருத்துகளைச் சொல்வதைவிட இளம் தலைமுறை படைப்பாளிகள் செய்ய வேண்டியது வெகுஜன எழுத்திலிருந்து தீவிர இலக்கியத்தை வேறுபடுத்தும் கூறுகளை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதே என நினைக்கிறேன். இலக்கியத்தின் மதிப்பீடுகளைச் சார்பில்லாமல் முன்வைப்பதன் வாயிலாகவே சூழலை முன்னகரச் செய்ய முடியும். ‘பேய்ச்சி’ நாவல் தடை செய்ய கோரி சர்ச்சை எழுந்தபோது அந்த நாவலின் மீதான மதிப்பீடுகளை முன்வைத்து எழுதினேன். பின்னர், வெகுஜன மலேசிய நாவலொன்றையும் விமர்சனம் செய்து கட்டுரை எழுதியிருந்தேன். இம்மாதிரியாக, இலக்கியப் படைப்பின் கலைத்தரமொட்டிய சார்பில்லாத விமர்சனங்களைத் தொடர வேண்டும்.
ஆதித்தன்: இலக்கியம் சார்ந்த சர்ச்சை வருகிறது என்றால், அதற்குக் காரணமாக அமைவது எது என்ற தெளிவின்மை இளம் தலைமுறையிடம் இருப்பதை காண முடிகிறது. இரண்டு எழுத்தாளர்களுக்கிடையே நடக்கும் விவாதங்களை இலக்கிய சர்ச்சை என தவறான புரிந்துணர்வில் இன்றைய தலைமுறையினர் செயல்படுவதும் தனக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கி போவதுமாகதான் இருக்கிறது. இலக்கியம் சார்ந்த சர்ச்சையைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
ஹரிராஸ்குமார்: மலேசியாவில் நிகழும் இலக்கிய சர்ச்சை தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற தனி மனித/ஓர் இயக்கத்தின்/குறுகிய வட்டத்தின் சுயநலத்தின்பால் நிகழ்வன. இவற்றைப் பெரிதாக எடுத்துக்கொண்டு நாம் பேசுவதனால், அவர்களுக்குதான் அதீத கவனிப்பே தவிர, நமக்கு எந்த இலாபமும் இல்லை. இலக்கியத்தை எதார்த்தமாகவும், அதன் கலைத்தன்மை கெடாமலும் படைக்க வேண்டும் என்றால், எழுத்தாளர்கள் இதுபோன்ற சர்ச்சைகளைக் கண்டு கொள்ளக் கூடாது. தன் படைப்புச் சார்ந்த ஆக்கத்திலே கவனிப்பாய் இருக்க வேண்டும். இவ்வாறான சர்ச்சைகள் கவனப்படுத்தப்படாதிருப்பின் காலம் அவற்றையெல்லாம் களையெடுத்துவிடும். இளைய தலைமுறையினர் தீவிர இலக்கியம் குறித்து விவாதித்து, அது சார்ந்த தன் கருத்துகளை முன்வைப்பதென்பது இலக்கியத்தை மிக ஆரோக்கியமாக அனுபவிக்க வகை செய்யும். இடையில், வீணான சர்ச்சைகளில் தங்களை ஈடுபடுத்துவது அவரவர் விருப்பம் என்றாலும், அதை நான் நேர விரயமாகவே கருதுகிறேன். நமக்குச் செய்வதற்குப் பல வேலைகளும் படிப்பதற்குப் பல நூல்களும் இருக்கின்றன.
புதிய படைப்பாளர்களுடனான கலந்துரையாடல் காலை மணி 9.30க்கு நிறைவடைந்தது. தொடர்ந்து எழுத்தாளர்கள் சு. வேணுகோபால் மற்றும் ஜா. ராஜகோபாலன் ஆகியோர் மெய்நிகர் சந்திப்பில் கலந்து கொண்டனர். கையறு, சிகண்டி நாவல்கள் குறித்து மிக விரிவான பார்வையை அவர்கள் முன் வைத்தனர். எழுத்தாளர் கோ. புண்ணியவன், சல்மா தினேஷ்வரி, சத்யா, அரவின் குமார் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கும் மிக விரிவாகவும் பதிலளித்தனர்.
இருள் ஒரு நாவலின் தரிசனமாக அமையலாமா என்று சல்மா தினேஷ்வரி எழுப்பிய கேள்விக்கு ஜா. ராஜகோபாலன தனக்கே உரிய பாணியில் விரிவாக விளக்கமளித்தார். இருள் ஒரு நாவலிலிருந்து வெளிப்பட்டாலும் கதாப்பத்திரங்களின் வழி வெளிப்படுகின்ற வெளிச்சம்தான் நாவலின் தரிசனமாக இருக்க முடியும் என்றார். இருள் நிறைந்த வாழ்வின் மீட்பாக அமையும் தர்க்கப்பூர்வமான ஒன்றையே தரிசனமாக முன்வைக்க முடியுமென்றார்.
தொடர்ந்து மலேசியாவில் இன்று எழுதத் தொடங்கும் இளம் படைப்பாளிகளுக்கு நிலத்துடன் பிணைந்த வாழ்வு என்பது முந்தைய தலைமுறை படைப்பாளிகளைப் போல அமையவில்லை. தமிழின் மகத்தான இலக்கியப் படைப்புகளான காடு போன்ற நாவல்களில் புறச்சித்திரிப்பு என்பது மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. ஆகவே, எழுதத் தொடங்கும் படைப்பாளிகளுக்கு இருக்கும் குறைவான புறக்காட்சி சார்ந்த அனுபவதத்துக்கு எதை ஈடாக முன்வைக்கலாம் என அரவின் குமார் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த ஜா.ராஜகோபாலன், புனைவில் புறமின்றி அகமில்லை என்று சொல்லுமளவுக்கு ஒவ்வொரு பாத்திரத்தின் அகத்தையும் புறச்சித்திரிப்பே விளக்குகிறது என்றார். புறச்சித்திரிப்பு ஈடாக வேறொன்றை முன்வைத்தும் எழுதப்படும் படைப்புக்கும் அசலான புறச்சித்திரிப்புக்கு இடையிலான வேறுபாடு என்பது போலி நகைகளுக்கும் அசல் நகைகளுக்குமான வேறுபாட்டைப் போன்றது என்றார். அதே கேள்விக்குப் பதிலளித்த சு.வேணுகோபால், புறச்சித்திரிப்பு என்பதை பெரும் காடுகள், முழுமையான நிலவரைப்படங்கள் எனப் புரிந்து கொள்ளாமல் அன்றாட வாழ்வில் கடந்து போகும் கட்டடங்கள், கால்வாய்கள்,மரங்கள் எனச் சிறிய அளவில் இருப்பவையும் புறச்சித்திரிப்பே என்றார்.
தேநீர் இடைவேளைக்குப் பின் புதிய படைப்பாளர்களிடம் இருக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் அங்கம் நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. இந்த அங்கத்தில் புதிய படைப்பாளர்கள் அவர்களுக்குள்ளே இருக்கும் அடிப்படை கேள்விகளுக்கான விடைகளைத் தேடிக் கொண்டனர். ‘நாவல் எழுதுவதற்கான கருவை எப்படித் தேர்ந்தெடுப்பது?’, ‘பல ஆழமான படைப்புகள் பலரிடையே சென்று அடையமால் இருப்பதற்கான காரணம் என்ன?’, ‘வேலை பளுவில் எவ்வாறு இலக்கியத்தில் ஈடுபடுவது?’ போன்ற அடிப்படை கேள்விகளைப் புதிய படைப்பாளர்கள் கேட்டனர்.
மனோஷ் இராம்: சிறுகதை அல்லது நாவலின் முடிவை எதற்கு ஓர் எழுத்தாளர் முடிவு கொடுக்காமல் அதை வாசகனிடம் விட்டு விடுகின்றனர்?
கோ. புண்ணயவான்: எழுத்தாளன் என்பவன் தன்னுடைய முடிவை கொடுக்கும்போது அக்கதை இங்கேயே முடிந்து விடுகிறது. முடிவை வாசகனிடம் கொடுத்து விடும்போது வாசகர்கள் அதற்கான முடிவுகளைக் கற்பனையின் வழி தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். இதுதான் வாசகர் இடைவெளியாக இருக்கிறது. வாசகர்களுக்கும் கலையில் ஒரு பங்கு இருப்பதை அது உறுதி செய்கிறது.
சத்யா: வல்லினம் பதிப்பகம் வெளியிடும் நாவல்கள் ஏன் கல்வித்திட்டத்தில் இடம் பெறுவதில்லை? ஆசிரியர்கள் காரணமா? மாணவர்களின் புரிதல் நிலை காரணமா? அல்லது வல்லினத்தின் இலக்கியம் ஏற்புடையதாக இல்லாத காரணமா?
இளம்பூரணன்: மலேசிய பாடத்திட்டத்திற்கு என ஒரு கல்வி கொள்கை இருக்கிறது. ஒரு நாவல் பாடத்திட்டத்திற்கு வரும்போது 5 ஆண்டுகளுக்கு அந்த நாவலிலிருந்து கேள்விகள் தயாரிக்க வேண்டிய அம்சங்கள் இருக்க வேண்டும். கல்வி முறைக்கு முரணான நாவல்களைப் பாடத்திட்டத்திற்குள் கொண்டு வர முடியாது.
அ.பாண்டியன் : எஸ்.பி.எம் தேர்வில் அமையப் பெற்றிருக்கும் இலக்கியப் பாடத்தின் நோக்கம் என்பது இலக்கியப் படைப்பை வாசித்து அறிவதற்கான எளிய அறிமுகமாகவே கொள்ள வேண்டும். கல்வியமைச்சின் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டே பாடத்திட்டத்துக்கான நூல்கள் தேர்வு பெறுகின்றன என்பதால் தீவிர இலக்கியப் படைப்பும் வேறு வேறானவை.
11.45க்கு எழுத்தாளரும் மருத்துவருமான சண்முகசிவா வருகை புரிந்தார். புதிய படைப்பாளர்கள் அதிகமாக நாவல் முகாமில் கலந்திருந்தது குறித்துத் தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார். தொடர் வாசிப்பாலும் எழுத முனைவதாலும் மட்டுமே எழுத்துத்துறையில் நீண்ட நாளுக்கு நிலைத்து நிற்க முடியும் என்றும் தெரிவித்தார். இலக்கிய சர்ச்சைகள் அவ்வப்போது படைப்புலகத்தில் நடந்து கொண்டிருந்தாலும் அதுவும் ஆரோக்கியமான சர்சையாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும் சொன்னார். எந்த எழுத்துப் படைப்பின் மீது அதிகமான விமர்சனங்கள் எழுகிறதோ அதுதான் ஆரோக்கியமான இலக்கிய சர்ச்சை எனவும் அவர் தெளிவு படுத்தினார். அப்படியான விமர்சனங்கள் மூலமாகதான் ஓர் எழுத்தாளன் தன் படைப்புகளில் மாற்றத்தையும் கொண்டு வர முயல்வான் என்றார். மேலும், தாழ்வு மனப்பான்மையாலோ அல்லது திட்டவட்டமான இலக்கிய மதிப்பீடுகளையோ போட்டுக் கொண்டு படைப்புகளைக் குறுக்கிக் கொள்ள கூடாதென்றார். தம் போக்கில் எழுதத் தொடங்கி மதிப்பீடுகள், பார்வைகளால் எழுத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற ஆலோசனையையும் வழங்கினார்.
12.00க்கு முகாமில் கலந்து கொண்டவர்களின் மனநிலைப்பாடுகளைக் கேட்டறியப்பட்டது. நாவல் முகாம் தங்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தைக் காட்டியிருப்பதாகப் பலர் தெரிவித்தனர். ஒரு நாவலை எவ்வாறு அணுகுவது குறித்த தெளிவான பார்வையினை எழுத்தாளர்கள் சு. வேணுகோபாலும், ஜா. ராஜகோபலானும் பகிர்ந்து கொண்டதில் கற்றுக் கொண்டதாகவும் சொன்னார்கள். தொடர்ந்து எழுதுவதற்கு போதிய தெளிவு கிடைத்திருப்பதாகவும் இனி எழுத தயாராக வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அடுத்து ரஷ்ய நாவல்கள் ஒட்டிய வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்ற வகையில் சிறிய குழுவிலான முகாமை முன்னெடுக்கப் போவதாக ம.நவீன் குறிப்பிட்டார். பல முக்கியத் தருணங்களைத் தகவல்களைத் தொகுத்து வழங்கியபடி முகாம் நிறைவு பெற்றது.