வல்லினம் நாவல் முகாம்: இரு வாசகர்களின் பகிர்வுகள்

வல்லினம் குழுவினரால் நாவல் முகாம் 26 முதல் 27 வரை பிப்ரவரி மாதத்தில் இரண்டு நாள்கள் தைப்பிங் ‘கிரேண்ட் பெரொன்’ தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி பல தடைகளைத் தாண்டி, பாதுகாப்பு அம்சங்களுடன் இவ்வாண்டு குறிப்பிட்ட திகதிலும் நேரத்திலும் நடத்தப்பட்டது. இந்த நாவல் முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதாகவே ஐந்து நாவல்களைப் படித்து வர வேண்டும் என்ற நிபந்தனையும் கோரப்பட்டிருந்தது. அதனை உள்வாங்கி ‘மிச்சமிருப்பவர்கள்’, ‘ரிங்கிட்’, ‘அக்கினி வளையம்’, ‘கையறு’, ‘சிகண்டி’ போன்ற நாவல்களை வாசித்து வந்திருந்தோம். முதல் நாள் இந்நிகழ்ச்சி காலத்தைக் கருத்தில் கொண்டு சரியாகப் பிற்பகல் மணி 12.00 அளவில் தொடங்கினர். ஒரு சிறு குழுவைக் கொண்ட இம்முகாம் அனைவரையும் பேச வைத்தது. எழுத்தாளர்களும் மற்றும் சக வாசகர்களும் தங்களின் அறிமுகத்தின் மூலம் அவர்களின் தன்னடக்கத்தை உணர வைத்தனர்.

அடுத்த அங்கமாக நாவல் வடிவத்தின் கூறுகளை ஏற்கனவே பதிவு செய்த காணொளியைக் காண்பிக்கப்பட்டது. ஐயா ஜா. இராஜகோபாலன் நாவல் வடிவம் எதை சார்ந்து இருக்க வேண்டும் என்று கருத்துக்களைப் பகிர்ந்தார். நாவலின் அகத்தையும் புறத்தையும் எளிமையாக உணரும் வகையில் தெள்ளத் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரு நாவலாகப்பட்டது அனுபவம், தத்துவம், தரிசனம் போன்றவற்றை அகவயமாக உள்ளடக்கியது. அதுபோல நாவலின் புற வயத்தில் அடங்கியுள்ள மொழி, வெளிபாடு, நடை, மற்றும் கால ஒழுகு என்பதையும் துல்லியமாக எடுத்துரைத்தார். மேலும் நாவலின் உத்திகள், கதா பாத்திரம் மற்றும் தகவல் பயன்பாட்டையும் தன் உரையில் எடுத்துரைத்துச் சென்றார். ஓர் எழுத்தாளர் நாவல் எழுதும் போது கையாளும் உத்திகளைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் படித்து வந்த நாவல்களைச் சார்ந்து தங்களின் பார்வையை முன்வைத்தனர். பிறகு மற்றவர்களும் நாவலையொட்டி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொருவரும் பல கண்ணோட்டத்தில் நாவலை அணுகியுள்ளனர் என்பதை கருத்துப் பகிர்வில் தெரிய வந்தது. எழுத்தாளர் வேணுகோபால் அவர்களும் ஐந்து நாவலையொட்டி தங்களின் விமர்சனத்தைத் துல்லியமாகக் குறிப்பிட்டிருந்தனர். அவர்களின் பார்வைக்கும் வாசகர்களின் பார்வைக்கும் நாவலின் விமர்சனம் மாறுபட்டே இருந்ததை உணர இயன்றது.

ம.நவீன் புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்து, கேள்வி பதில் அங்கத்தை நடத்தினார். புதிய எழுத்தாளர்களின் பதில்கள் வாசகர்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. அதுபோல முதல் முறையாகக் கலந்து கொண்ட புதிய முகங்களையும் நவீன் வெளிகாட்டினார். இளைய தலைமுறையினர் தங்களின் சந்தேகங்களைக் கேள்விகளாக எழுப்பி பதிலையும் கண்டடைந்தனர். இம்முகாமில் ஐயா கோ.புண்ணியவன், இளம்பூரணன், பாண்டியன் போன்ற எழுத்தாளர்களைச் சந்தித்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.

இறுதியாக விருது நிகழ்ச்சிலும் கலந்துகொண்டோம். எழுத்தாளர் சண்முகசிவாவின் நகைச்சுவையான பேச்சு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. விருது பெற்ற எழுத்தாளர் ஜானகிராமனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ஆவணப்படமும் அவரது உரையும் இறுதி தருணத்தில் கண்ணீரை வரவழைத்தது. அரவின் குமார் மற்றும் செல்வம் அண்ணன் ஆகியோர் கைவண்ணத்தில் ஜானகிராமன் அவர்களின் காணொளி தொகுப்புச் சிறப்பாகவே அமைதிருந்தது. இளம் எழுத்தாளர் அபிராமியின் தன்னம்பிக்கையான பேச்சும் விழாவைச் சிறக்கச் செய்தது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுவினர்களுக்கு நன்றி.

மா.புஷ்பவள்ளி

கோவிட் பிரச்சினையால் தள்ளிப் போன இலக்கிய நாவல் முகாம் நிகழ்ச்சி மீண்டும் நடை பெற போவதாகப் புலனம்வழி அறிவிக்கப்பட்டபோது மகிழ்ந்தேன். இம்முகாமுக்காக வல்லின இலக்கிய குழு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் செயல்பாடுகளும் முக்கியமானவை. தைப்பிங்கில் 26-27 பிப்ரவரி மாதம் நடைபெறும் நாவல் முகாமில் கலந்து கொள்ளலாம் என முடிவெடுத்தேன். பல்கலைக்கழகத்தில் பயிலும்போது, சென்று வந்த நகரம். அதோடு, அவ்வூருக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. தைப்பிங் ஈயச் சுரங்கித்திற்குப் புகழ் பெற்ற நகரம். சீன மொழியில் தைப்பிங் என்றால் அமைதி அல்லது நித்திய அமைதி என்று பொருள்படும்.

பிப்ரவரி 26 காலை 10.15க்கு, தைப்பிங்கை அடைந்தேன். முகாம் ஏற்பட்டாளர் காலை உணவும் மதிய உணவும் சாப்பிட்டு வாருங்கள் எனப் பணித்தபடியால் தைப்பிங் நிலையத்தில் உள்ள ஒட்டுக் கடையில், நான் விரும்பும் ரொட்டி உள்ளதா எனப் பார்த்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது.
மணி 12 நெருங்க, ஒவ்வொரு நாவல் முகாம் பங்கேற்பாளர்களும் 1பியில் இருக்கும் தாமரை ஹாலை நிறைத்தனர். இரண்டு வருடத்திற்கு முன்பு பார்த்த சிலரைச் சந்தித்தேன். புதியவர்கள் சிலர் வந்திருந்தனர். முன்னாள் தலைமையாசிரியரான மு.சுப்புலட்சுமி அம்மா கண்டிப்பானவர் என எண்ணிருந்தேன். நானும் ஆசிரியர் பணியில் இருப்பதால் தலைமை ஆசிரியர்களிடம் தள்ளியே இருப்பேன். ஆனால், இவரின் இமயம் நாவலின் வாசிப்பு அனுபவம், இவரின் அன்பையும் தாய்மையையும் உணர வைத்தது. அவரிடம் சிரிப்பின் வழி என் அன்பைத் தெரிவித்தேன். தோழி நிர்மலாவோ நலம் விசாரித்ததும், தன்னுடைய பகிர்வுதான் நிகழ்ச்சியின் முதல் அமர்வு எனத் தன் பதற்றத்தையும் பகிர்ந்து கொண்டார். வெகுநாட்களுக்குப் பிறகு, மீண்டும் கோவிட் நிலை அதிகரித்தாலும் இலக்கியத்தின் பால் கொண்ட அக்கறையால், கூடியிருக்கும் நண்பர்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

முகாமின் முதல் அங்கமாக, தொடக்க உரையை எழுத்தாளர் ம.நவீன், ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பங்கேற்பாளர்களும் அவரவர் பாணியிலும் தொனியிலும் அவர்களை அறிமுகம் செய்து கொண்டனர். எனக்கோ இம்மாதிரியான நிகழ்வுகளில் கலந்து கொள்ள பிடிக்கும். ஆனால் பொது வெளியில் பேச, கருத்து தெரிவிக்க சிறு தயக்கம் எப்போதுமே இருக்கும். பள்ளி சபையில் பேசும் போதும் சரி; ஆசிரியர் சந்திப்பு கூட்டத்திலும் சரி அந்த பதற்றம், ஒரு வித சொல்லமுடியாத ஒவ்வாமை உணர்வு தொற்றிக் கொள்ளும். எல்லா இடங்களிலும் நாம் வாய் திறக்க வேண்டியதில்லை. எந்த இடத்தில் யாரிடம் கருத்தைச் சொல்கிறோம், அதனால் ஏற்படும் விளைவும் நன்மையும் என்ன என்பதைச் சீர்தூக்கிப் பார்த்த பின்புதான் உரையாடுவேன்; கருத்தையும் தெரிவிப்பேன். இரண்டே வரியில் என்னுடைய அறிமுகத்தை முடித்துக் கொண்டு, தொடங்கவிருக்கும் ஜா.ராஜகோபாலன் ஐயாவின் பதிவு செய்யப்பட்ட உரைக்கு தயாரானேன்.

அவர் சாந்தமான முகத்துடனும் மிக நிதானமாக குரலில் சுமார் 45 நிமிடத்திற்கு நாவல் வடிவத்தைப் பற்றி உரையாற்றினார். நாவல் என்றால் என்ன என்று அவருடைய வாதத்தையும் எழுத்தாளர் ஜெயமோகன் கூற்றையும் ஒப்பிட்டு விளக்கினார். ஒரு நாவல் எழுத்தாளன் என்பவர் யார்; அவரின் பரிணாமங்கள் நாவல் வடிவமைப்பதில் எவ்வாறு இருக்க வேண்டும் என மிகத் தெளிவாக விளக்கினார். நாவல் என்றால் தத்துவத்தின் கலை வடிவம். இந்த முகாம் நாவலை எப்படி எழுத வேண்டும் என போதிக்க உருவாக்கப்படவில்லை. ஒரு சிற்பிக்கு தான் வடிக்கும் சிற்பத்தை வடிக்க அனைத்து சுதந்திரம் இருந்தாலும் எந்த கோணத்துக்கு எந்த உளி என்பது அவசியம். அவ்வகையில் இது நாவலை அறிவதற்கான அடிப்படை பயிற்சி என்றார்.
இன்றைய காலக்கட்டத்துக்கு, சிலப்பதிகாரம் நமக்குக் சொல்லவரும் தரிசனம் என்ன என்பதை பற்றியும்; அக்காப்பியத்தில் வரும் ஒவ்வொரு கதைமாந்தரின் வழி புரிந்து கொண்ட விழுமியத்தைப் பற்றியும் இதனால்தான் அவை காலத்தைக் கடந்தும் தன்னைதானே ஒரு இலக்கிய விருட்சமாகவும் கலைவடிவமாகவும் நிறுவிக் கொள்கிறது என சாந்தமானக் குரலில் விளக்கினார். முதல் அங்கத்தில் அனுபவங்கள், தத்துவங்கள், தரிசனங்கள் என்றால் என்னவென்று புரிந்துகொண்டேன்.

அதனைத் தொடர்ந்து, மிச்சமிருப்பவர்கள் குறுநாவலை முன்வைத்து விவாதங்கள் நடைப்பெற்றது. முதலில் பதற்ற நிலையில் கட்டுரையாளர் நிர்மலா இருந்தாலும், அவருடைய பகுதி வந்தவுடன், மிக தைரியமாகவும் உறுதியாகவும் அவர் கருத்துகளை முன் வைத்தார். மிச்சமிருப்பவர்கள் நாவலைப் பற்றி சில குறிப்புகளும் எழுதிக் கொண்டு வந்தார். பிறகு, மற்ற சில வாசகர்களும் அந்நாவலின் வழி கண்டு அடைந்த சிறப்புகளை விளக்கினர்.
ஜா.ராஜகோபாலன் உரை தொடக்கமாக இருந்ததால் ஒரு நாவலின் தர்க்கதையும் முரண்களையும் அனுபத்தையும் நோக்கியே உரையாடல் இருந்ததது. எல்லா வாசகரும் அவரவருடைய வாதத்தை முன் வைத்த பின், எழுத்தாளர் சு.வேணுகோபால் சுமார் 15 நிமிடம் மிச்சமிருப்பவர் நாவலில் உள்ள சிறப்பையும் குறையையும் கட்டமைப்பையும் எல்லாரும் புரிந்து கொள்ளும்விதமாக மிக இலகுவாக விளக்கினார். ஓர் எழுத்தாளர் அவருடைய அனுபவத்தையும் அவதானிப்பையும் எப்படி நாவலில் வடிவமாக்கலாம் என இந்நாவலில் வழி அறிந்து கொண்டேன். நாவலில் பன்மைதன்மையும் பலக்குரல் தன்மையும் கவித்துவதரிசனம் இருக்க வேண்டும் என ஆணித்தரமாக விளக்கினார். எழுத்தாளர் சு.வேணுகோபால் நாவல் என்றால் இயற்கையின் அருங்கொடையாக விளங்கும் விருட்சத்தைப் போல் மிளிர வேண்டும் என உவமைப் படுத்தினார். அந்நாவல் என்ற விருட்சம் நின்று நிதானித்துப் பல்வேறு கிளைகளாக விரிந்தும் அதில் உள்ள இலைகள், பூக்கள், எறும்புகள், பறவைகள், பட்டைகள், பொந்துகள் போன்றவற்றை உள்ளடக்கியும் இருக்க வேண்டும் என விளங்கி கொண்டேன்.


அதனைத் தொடர்ந்து மணி 2.00-2.45க்கு, எழுத்தாளர் அ.பாண்டியனின் குறுநாவலான ‘ரிங்கிட்’ நாவலின் கலந்துரையாடல் இடம்பெற்றது. எழுத்தாளர் அரவின் குமார் அவரின் வாசிப்புப் பின்புலம் மூலமாகவும் அவரின் புரிதலுக்கு உட்படுத்தியும் நாவலின் சாராம்சத்தை விளக்கினார். ஏற்பட்டாளர் ரிங்கிட் நாவல் பற்றி கருத்து சொல்ல அழைக்க, திடுக்கிட்டேன். ஒரு கணம் ரிங்கிட் நாவலின் மையக் கருவையும் எனக்கு அளித்த அனுபவத்தையும் யோசித்துவிட்டு, விவாதத்தை முன் வைத்தேன். மலேசியாவில் உள்ள மூவின மக்களின் கலாச்சாரமும் பண்பாட்டு உறவும்தான் இந்நாவலின் நீட்சி எனத் தோன்றியது. எல்லா விசயத்திலும் சுழலிலும் நிறைவையும் சிறப்பையும் பார்க்கும் கண்ணும் மனமும் வாசிப்பிலும் அப்படியே அமல்படுத்தினேன். ஆகையால், ரிங்கிட்டின் குறை என என்னிடம் சொல்ல எதுவுமில்லை. ஆனால், இதற்கு முன் நடந்த உரையாடல் எல்லாம் இரண்டு வாதத்தையும் முன்வைத்த படியால், மீண்டும் ஏற்பட்டாளர் நாவலின் குறை என்ன எனக் கேட்கும் முன்பே, எழுத்துப்பிழைகள் குறித்து முன்வைத்தேன்.


அனைவரும், கருத்தை முன்வைத்தவுடன், எழுத்தாளர் சு.வேணுகோபலின் ரிங்கிட் நாவலின் ஏறக்குறைய 15 நிமிட காணொளி ஒளிபரப்பானது. ஓர் இலக்கிய ரசிகனிடமிருந்தும் எழுத்தாளரிடமிருந்தும் ரிங்கிட் ஒரு நல்ல குறுநாவல் வடிவத்தைக் கொண்டுள்ளது எனக் கேட்கும் போதே சந்தோஷமாக இருந்தது. இந்நாவலை நான் வாசிக்கும் போது, ஒரு வாசகராக எழுத்தாளர் முழு நாவல் வடிவமாக எழுதியிருக்கலாமே என ஏக்கம் எனக்கும் இருந்ததது. எழுத்தாளர் சு.வேணுகோபாலின் ஆழமானப் பார்வையும் உரையும் நாவலாசியருக்கும் வாசகருக்கும் புது எழுத்தாளருக்கும் நாவலின் கதையில் வரும் எல்லா கதாமாந்தர்களையும் ஒரு புள்ளியில் ஒருமையோடும் மைய கருத்தோடும் இணைக்கும் தருணத்தையும் மீள்பார்வை செய்துகொள்ள உதவியது. அதுமட்டுமில்லாமல், நாவலில் வரும் நுண்தகவல் எவ்வாறு உயிர்ப்பு கொள்கிறது எனச் சுட்டிக் காட்டிக் கொண்டே, சில உதாரணங்களையும் கூறினார். இவ்வுரை நாவலை விமர்சனம் செய்பவர்களுக்குத் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை.


இடைவேளையில் தேநீரும் ஜவ்வரிசி பலாகாரமும் வழங்கப்பட்டது. முதல் தடவை, ஜவ்வரிசி பலகாரத்தை சாப்பிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த பலாகாரம். ஏனென்றால், எண்ணெயில் பொரிக்காமல்; ஆவியில் அவித்தது. உடம்புக்கு ஏற்ற உணவு.


தொடர்ந்து, மதியம் 3.00-3.30 மணியளவில் எழுத்தாளர் ஜா.ராஜகோபாலனின் பதிவு செய்யப்பட்ட பகுதி 2 உரையை ஒளிப்பரப்பினர். இரண்டாவது பகுதியில், அவர் நாவலின் புறவடிவத்தையும் கூறுமுறையையும் தொகுத்து வழங்கினர். இம்முறை, நாவலின் மொழி, வெளிபாடு, காலமுறை மற்றும் நடையைப் பற்றி உரையாற்றினார். பொதுவாக, மலேசியாவில் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களிடையும் எழுத்தாளர்களிடமும் முகம் சுழிக்கும் வார்த்தைகளையும் வர்ணனையும் புனைவில் இருப்பது அவசியமா அல்லது மறைத்துப் புனைய வேண்டுமா என்ற புரியாமைக்கு இவரின் விளக்கம் விடை அளித்திருக்கும். நாவலில் வரும் சூழ்நிலை, கால அடிப்படை, சம்பவத்தை நகர்த்திச் செல்லும் சொல்லாடலும் உரையாடலும், வாக்கிய அமைப்பு, கதைமாந்தரின் வட்டார மொழி என அனைத்தையும் சீர் தூக்கிப் பார்த்த பின்பே, ஒரு நாவல் காலத்தைத் தாண்டி வரலாறு படைக்குமா அல்லது காற்றோடு காற்றாக கரைந்து போகுமா என நிர்ணயிக்கப்படுகிறது எனப் புரிந்தது.

அவ்வுரையைத் தொடர்ந்து, வளர்ந்து வரும் எழுத்தாளர் ஆதித்தன் மகாமுனி ‘கையறு’ நாவலை அக்குவேர் ஆணிவேராகப் பக்கமாக பிரித்து மேய்ந்துவிட்டார். அவரின் அனைத்து கருத்துகளையும் விமர்சனத்தையும் அமைதியாக எழுத்தாளர் கோ.புண்ணியவான் செவிமெடுத்தார். ஒரு சிறு பதற்றமோ அல்லது கோபத்தின் சாயலோ சிறிதும் ஆதித்தன் மகாமுனியிடம் திரும்பவில்லை. மாறாக, அவரின் பக்குவ நிலையும் இளைய எழுத்தாளருக்கு தரும் ஆதரவும் தான் புலப்பட்டது.

அடுத்தாக, ‘அக்கினி வளையங்கள்’ மற்றும் ‘சிகண்டி’யை எழுத்தாளர் தினேஷ்வரியும் எழுத்தாளர் இளம்பூரணனும் இலக்கிய அனுபவத்தைக் கொண்டு, மிகஆழமாகவும் நுணுக்கமாகவும் விமர்சித்தனர். அவர்களின் விமர்சன மொழியும் இலக்கிய பார்வையும் என்னை வெகுவாகக் கவர்ந்தது.
மறுநாள் பிப்ரவரி 27, இலக்கியச் சந்திப்பும் வல்லினம் விருதுவிழாவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. சு.வேணுகோபால் ஜா.ராஜகோபாலன் ஆகியோர் நேரலையில் அழைத்து கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினர். இடையில் எழுத்தாளர் மா.சண்முகசிவாவும் எங்களுடன் இணைந்துகொண்டார்.

விருதுவிழாவில் நான் பார்வையாளராகப் பங்கேற்றேன். முன் தயாரிப்புக்கான சில உதவிகள் செய்தேன். நிகழ்ச்சியும் சிறப்பாக நிறைவாக நடந்து முடிந்தது.

அன்று இரவும் தோழிகளுடன் தைப்பிங்கில் தங்கினேன். ஊர் திரும்பும் முன் தைப்பிங்கில் உள்ள புகழ்பெற்ற பூங்காவுக்குச் சென்றேன். முகாம் நடந்த விடுதி பூங்காவை ஒட்டியே இருந்தது. இப்பூங்காவை பார்க்க வேண்டும் என வரும்போதே முடிவெடுத்திருந்தேன். மலேசியாவில் 1880-இல் தோன்றிய முதல் பூங்கா என்பது மட்டுமில்லாமல், அங்குள்ள மரங்கள் குறைந்தது நான்கு தலைமுறை மனிதர்களின் வாழ்வியலுக்கு ஆதாரமாகும். சூரிய ஒளி கதிர்பட்டு, மஞ்சளும் பச்சையும் கலந்து என்னமோ தங்க பூங்காவைப்போல இருப்பதுபோல் இணையத்தில் பார்த்தேன். அதனால், அவ்வழகை என் கண் கொண்டு பார்க்க வேண்டும் போல் இருந்தது.

காலை ஏழு மணிக்கு சூரியனும் வரவில்லை; என் நண்பர்களும் மெத்தையில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தனர். நண்பர்கள் இன்னும் கிளம்பவில்லை எனச் சோகத்தில் இருக்கும் எனக்கு, இயற்கையின் வரப்பிரசாதாமாக அமைந்தது அக்காட்சி. அப்போதுதான் பால்கனியில் இருந்து கண்கொள்ளா காட்சியைக் காண முடிந்தது. முதன்முறை அறையில் தனியாக தங்கியதற்குச் சந்தோசப்பட்டேன். தோழிகள் உடன் இருந்தால், என்னுடைய நடமாட்டம் அவர்களின் தூக்கத்தைக் கெடுத்து விடுமோ என அஞ்சி, மெத்தையில் புரண்டிருப்பேன். இத்தனிமையும் பல இனிமையான நினைவுகளை அதுவாக வகுத்துக் கொடுத்தது. ஒருவழியாக காலை உணவு முடிந்தவுடன், தைப்பிங் பூங்காவை அடைந்தோம். அங்குள்ள மரங்களின் தண்டுகள் ஐந்திலிருந்து ஏழு பேர் சேர்த்து பிடிக்கும் அளவுக்கு அகலமாகவும் பெரிதாகவும் இருந்தன. அங்கு வாடகைக்கு விடப்பட்ட சைக்கிளில் எல்லா நண்பர்களும் வட்டமடிக்க, நிர்மலா தெய்வதீனமாக எனக்கும் சைக்கிளைக் கொடுத்து வலம் வர வழியைக் காட்டினார். மொத்தம் 64 ஹெக்டர் நிலபரப்பில், 8 ஏரிகளைக் கொண்ட பூங்கா.

முழுமையாக அந்த பூங்காவின் அழகை அனுபவித்துவிட்டு காலை 11 மணி அளவில் அனைவரிடத்திலும் தைப்பிங் ரயில் நிலையத்தில் விடைபெற்றேன். இலக்கிய முகாம் மன நிறைவை அளித்தது. ஒரு நாவலை விமர்சிப்பதற்கும் தரிசனத்தை கண்டு அடைவதற்கும் இம்முகாம் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் திண்ணம்.

பாரதி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...