‘வல்லினம் விருது’ மலேசிய எழுத்துலகில் இயங்கும் முக்கியமான ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது. ஐயாயிரம் ரிங்கிட் மற்றும் நினைவு கோப்பையும் இந்த விருதுவிழாவில் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2015இல் அ.ரெங்கசாமி அவர்களுக்கும் 2019இல் சை.பீர்முகம்மது அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2022க்கான வல்லினம் விருதை எழுத்தாளர் மா.ஜானகிராமன் அவர்களுக்கு வழங்க வல்லினம் குழு முடிவெடுத்துள்ளது.
மா.ஜானகிராமன் கள செயல்பாட்டாளராக தன் பயணத்தைத் தொடங்கி ஆவணத் தொகுப்பாளராக இயங்கி வருகிறார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வரும் இவரது கடும் உழைப்பில் வெளிவந்த ‘மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை’ மற்றும் ‘மலேசிய இந்தியர்களின் மறக்கப்பட்ட வரலாறு’ ஆகிய நூல்கள் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் மலேசிய ஆய்வுலகுக்கு அவசியமானவை. இந்நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்ததன் வழி அதற்கான பரந்த கவனத்தையும் மா.ஜானகிராமன் ஏற்படுத்தியுள்ளார். (மா.ஜானகிராமன் குறித்து விரிவாக அறிய)
மலேசிய எழுத்துலகில் நிகழும் பல்வேறு புறக்கணிப்புகளுக்கு மத்தியில் தொடர்ந்து இயங்கும் மா.ஜானகிராமன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இவ்வருடம் இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
இதே விருது விழாவில், வல்லினம் இளம் எழுத்தாளர் விருது பெற்ற அபிராமி கணேசனும் சிறப்பிக்கப்படுவார். செப்டம்பர் 2020இல் இந்த விருது அறிவிக்கப்பட்டாலும் கோவிட் காரணமாக விருதுவிழா நிகழ்ச்சி தள்ளிப்போடப்பட்டது. எனவே இதே நிகழ்ச்சியில் அவருக்கும் 2000 ரிங்கிட் விருது தொகையுடன் உரிய அங்கீகாரம் வழங்கப்படும். (அறிவிப்பு)
நிகழ்ச்சி விபரங்கள்:
நாள் : 27.2.2022 (ஞாயிறு)
நேரம்: மாலை மணி 2.00
இடம் : கிரேண்ட் பேரொன் தங்கும்விடுதி, தைப்பிங்
நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் கீழ்காணும் இணைப்பில் உங்கள் தகவல்களை பதிவு செய்துக்கொள்ளல் அவசியம். முறையான, முழுமையான தகவல்களைப் பதிவு செய்யாதவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாது. விடுதி நிர்வாகத்தின் ‘எஸ்.ஒ.பி’ அடிப்படையில் இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
பதிவு செய்ய: வல்லினம் விருது விழா பதிவு செய்ய
பாராட்டுக்கள்
ஜானகி ராமனுக்கு என் கனிந்த வாழ்த்துகள். இவ்விருதைப் பெறுவதற்கு பொருத்தமான ஆளுமை. அவருடைய ஆய்வு நூல்கள் மேலும் கவனம்பெற இந்த விருது துணை புரியட்டும்.