“பசியென்பது இனம், மதம் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று” – மா.ஜானகிராமன்

2021ஆம் ஆண்டுக்கான வல்லினம் விருதும் வரலாற்றுத் தொகுப்பாளரான ஜானகிராமன் மாணிக்கம் அவர்களுக்கு வழங்குவதில் வல்லினம் பெருமைகொள்கிறது. மலேசிய இந்தியர்களின் வரலாற்று ஆவணப்படுத்தலில் திரு ஜானகிராமன் பங்களிப்பு முதன்மையானது. தோட்டப் பின்னணியில் வறுமைச் சூழலில் வளர்ந்த இவர், மலேசிய இந்தியர்களின் வரலாற்றை ஒட்டிப் பல கள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். மலேசியாவில் இந்தியர்களின் வரலாறு ரீதியான மாற்றங்களை ‘மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை’, ‘மலேசிய இந்தியர்களின் மறக்கப்பட்ட வரலாறு’ ஆகிய நூல்களில் தொகுத்தளித்திருக்கிறார்.  கோட்பாடுகள், சிந்தனைச் சட்டகங்களுக்குள் ஆய்வுகளைக் குறுக்கிக்கொள்ளாமல் வரலாற்றுச் செய்திகளைப் பார்வையாளராகத் தொகுத்தளிப்பதோடு, ஏராளமான மக்களின் வாய்மொழித் தகவல்களையும் இணைத்து,  கள ஆய்வுகளையும் முன்னெடுத்திருக்கிறார்.

சமூகச் செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு கொண்ட மா.ஜானகிராமன் களப்பணியிலும் கள ஆய்வுகளிலும் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருபவர். மலேசிய இந்தியர்களின் வரலாறு குறித்த ஆய்விலும் பதிவிலும் அங்கீகாரங்களை எதிர்பார்க்காது, அயராது உழைத்துவரும் அவரின் அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வல்லினம் விருது ஜானகிராமன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

வல்லினம் விருது பெறுவதை ஒட்டி அவரின் பின்னணி, செயற்பாடுகள், ஆய்வுகள் குறித்து அவருடன் விரிவான நேர்காணல் ஒன்று நடத்தப்பட்டது. அவர் பிறந்து வளர்ந்த பத்தாங் பெர்ஜூந்தாய் (இன்று பெஸ்தாரி ஜெயா என பெயர் மாற்றம் கண்டுள்ளது) என்ற ஊரிலேயே இந்த நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது.

உங்களுடைய வாழ்க்கைப் பின்னணி, இளமைக்காலம் பற்றிக் கூறுங்கள்?

மா.ஜானகிராமன்: என்னுடைய தந்தை வழித் தாத்தாவும் பாட்டியும் தமிழ்நாட்டின் திண்டிவனம் மாவட்டத்தின் ஆலக்கிராமம், நீலத்தொட்டி பகுதியிலிருந்து கோலாசிலாங்கூர் மாவட்டத்தில் ஹோப்புள் தோட்டத்தில் குடியேறினார்கள். அந்தத் தோட்டத்தின் டிவிசன்களுள் ஒன்றான ஜாவா சிலாங்கூர் தோட்டத்தில் 1948இல் மிகவும் மோசமான சூழலில் இருந்த ‘கல்லுக்குழி ஆசுப்பித்திரி’ என அழைக்கப்பட்ட குரூப் மருத்துவமனையில்தான் நான் பிறந்தேன். மருத்துவமனையில் மருத்துவச்சியாக இருந்த ஆயா பத்து வயது வரையிலும் என்னைக் கண்டவுடன் வருடி கண்ணேறு கழிப்பார். அவரை என்னுடைய பிரசவத்தைக் கண்ட இன்னொரு தாயாகவே எண்ணிக்கொள்வேன். என்னுடன் உடன் பிறந்தவர்கள் அறுவர். அதில் மூவர் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் சிறுவயதிலே இறந்துவிட்டனர்.

என்னுடைய ஆரம்பக்கல்வி ஜாவா சிலாங்கூர் தோட்டத்தில் கொட்டகைபோல இருந்த பள்ளியில்தான் தொடங்கியது. என்னுடைய தொடக்கக்கல்வி ஆசிரியராக மலேசியாவில் நன்கு அறியப்பட்ட கவிஞரான பெ.மு.இளம்வழுதி இருந்தார். அந்தப் பள்ளியில் ஒன்றாம் ஆண்டு தொடங்கி நான்காம் ஆண்டுவரை பயின்றேன். பிறகு என்னுடைய மாமா  வசித்த ரோஸ்வேல் தோட்டத்திற்குச் சென்று அங்கிருந்த பள்ளியில் 5ஆம் ஆண்டுவரை பயின்றேன். அப்பொழுது ஆறாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சியடையாமல் இடைநிலைப்பள்ளியின் புதுமுக வகுப்புக்குச் செல்ல முடியாது. சிலாங்கூர் ரிவர் தோட்டப் பள்ளியில்  ஆறாம்  வகுப்பு பயின்று பி கிரேடில் தேர்வில் தேர்ச்சியடைந்தேன். அதன் பிறகு கம்போங் குவாந்தானிலிருந்த இடைநிலைப்பள்ளியில் புதுமுகவகுப்பு, படிவம் 1 வரை பயின்றேன். பள்ளியின் புதிய கட்டடம் கோலாசிலாங்கூர் நகரப்பகுதியில் கட்டப்பட்டதால் மீண்டும் சொந்தத் தோட்டத்திற்கே சென்றேன். படிவம் 2 முடியும் தருவாயில் அப்பா காலமாகிவிட்டார். அதன்பின் அம்மாவுக்கு உதவியாளராகத் தோட்டத்திற்குச் சென்று மங்கு துடைப்பது எனச் சிறு சிறு வேலைகள் செய்யத் தொடங்கினேன்.

எனக்கு 16 வயதானபோது பத்தாங் பெர்ஜூந்தை வட்டாரத்தில் பள்ளியில் கல்வி தடைபட்ட மாணவர்கள் Lower Certificate of Education தேர்வு எழுதுவதற்காக Further Education Class எனும் வகுப்புகள் தொடங்கப்பட்டிருந்தன. வேலைக்குச் செல்வதற்குச் சான்றிதழ் அவசியமென்பதால், அந்த வகுப்பில் சேர்ந்து எல்.சி.இ வகுப்புக்குச் சென்றேன். அந்தத் தேர்வில் சிறப்பான புள்ளிகளைப் பெற முடியாவிட்டாலும், அதில் கிடைத்த சான்றிதழைக் கொண்டே மே கலவரத்துக்குப் பின் சிலாங்கூர், டுசுன் துவா எனும் இடத்தில் அமைந்துள்ள இளைஞர் தொழில் நுட்பப் பயிற்சி மையத்தில் இளைஞர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல முடிந்தது.

நீங்கள் வாழ்ந்த தோட்ட மக்களின் அன்றைய வாழ்க்கைச் சூழலை நினைவுகூர முடியுமா?

மா.ஜானகிராமன்: அறுநூறு ஏக்கர் பரப்பளவுகொண்ட ஜாவா சிலாங்கூர் தோட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள்தான் குடியிருந்தோம். வீடமைப்புப் பகுதிக்கு நடுவே தோட்டத் திடலும் கோவிலும் தமிழ்ப்பள்ளியும் இருந்தன. அடிப்படை வசதி குறைவாகவே இருந்தது. நீர் வசதி குறிப்பிட்ட நேரம் மட்டுமே கிடைக்கும்படியாக இருந்தது. மின்சாரவசதி செய்து தரப்படவில்லை. மலக்கூடங்கள் மிகவும் மோசமான சூழலில் இருந்ததால் வெளிப்புறங்களைத்தான் கழிவு அகற்ற பயன்படுத்திக்கொண்டனர். வறுமையில் வாழ்ந்தாலும் சமூக அமைப்பு முறையில் மகிழ்ச்சி இருந்ததாகவே உணர்கிறேன். பந்து விளையாட்டு, சிலம்பப் பயிற்சி, கோவில் திருவிழா, நாடகங்கள், படத் திரையிடல் போன்ற சமூக நிகழ்வுகள் ஒருபுறத்தில் நடந்தன. மறுபுறத்தில், தோட்டத்தை ஒட்டியிருந்த புறம்போக்கு நிலத்தில் கால்நடை வளர்ப்பு, காய்கறி பயிரிடுதல் போன்றவை நடக்கும். குறைந்த வருமானத்தில் வாழ்ந்தாலும் இந்த மாதிரியான நிகழ்வுகள் (rich culture) பண்பாட்டுப் புலத்துடன் கூடிய வாழ்வாக இருந்தது. நாங்கள் இருந்த சிறிய தோட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்களே வறுமையான சூழலில் இருந்தபடியால் சமூக உறவு முறைகளில் சாதியப் பாகுபாடு இருந்ததாகவே உணரவில்லை. எனக்கு பன்னிரண்டு வயதாக இருந்தபோது அப்பாவுக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அப்போது ஒட்டுமொத்தத் தோட்ட மக்களும் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருந்ததை என்னால் மறக்கமுடியாது.

ஒரு தோட்டப் பாட்டாளியாக இருந்த உங்களை சமூக மனிதனாக மாற்றி அதை நோக்கி இயங்க வைத்த முதல் சம்பவம் எது?

மா.ஜானகிராமன்: என்னுடைய பதின்மூன்று வயதில் எங்கள் தோட்டத்துக்குப் பக்கத்தில் இருந்த ஹோல்மூட் தோட்டம் துண்டாடப்பட்டது. கோலாசிலாங்கூர் வட்டாரத்தில் துண்டாடப்பட்ட முதல் தோட்டமாக அந்தத் தோட்டம் இருந்தது. துண்டாடலுக்குப் பிறகு, தோட்டத்தின் அமைப்பு முறை முற்றிலும் மாறிப்போனது. ஒவ்வொரு சிறிய தோட்டத்திலும் பத்துப் பதினைந்து குடும்பங்களுக்கு மட்டுமே வேலை இருந்ததால், வீடமைப்பும் துண்டாடப்பட்டது. தோட்டத் துண்டாடலின் பாதிப்புகள் எங்களையும் அச்சுறுத்தத் தொடங்கின. தோட்டத்தை எப்படியாவது வாங்கிவிடவேண்டுமென்ற நம்பிக்கையைத் துன் சம்பந்தன் தொடங்கிய தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் அளித்தது. தோட்டத் தொழிற்சங்கம், பத்தாங் பெர்ஜூந்தை ம.இ.கா கிளை தோட்ட நிர்வாகத்திடம் பேசி தோட்டத்தை விலைக்கு வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த முயற்சிக்கு தோட்டத் தொழிற்சங்கம் இடையூறாக இருந்தது. தோட்டத் தொழிற்சங்கம் தொடங்கியிருந்த கெட்கோ எனும் நிலக்குடியேற்றத் திட்டம் வாயிலாக டென்டர் போடுவதாக ஒருபக்கமும் நில நிதி கூட்டுறவு சங்கம் தொடங்கியிருந்த பங்கு திரட்டித் தோட்டம் வாங்கும் திட்டத்துக்கான ஆதரவுமாக மக்கள் இரண்டாகப் பிரிந்திருந்தனர். அதனால் அந்த முயற்சி நிறைவேறாமல் போனது. அப்பொழுது அந்தத் தோட்டத்தின் விலை 16 லட்சம் வெள்ளியாக இருந்தது. சுற்றிலுமிருந்த மற்ற தோட்டங்களிருந்த மக்களிடம் ஒவ்வொருவரிடம் பத்து வெள்ளி பணம் வசூலித்து ஒரு லட்சம் திரட்டினோம். மற்றத் தோட்ட மக்களின் மீது கொண்ட அக்கறையால் மக்கள் பணம் கொடுக்க முன்வந்தனர். ஆனால், மக்களிடமிருந்த பிளவின் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை, இறுதியில், கெர்லிங்கிலிருந்த பிளாட்டா ரிவர் தோட்டம்தான்  வாங்கப்பட்டது. தோட்டத் துண்டாடலின் பாதிப்புத்தான் சமூகத்தை நோக்கி என்னைத் திருப்பிய முதல் நிகழ்வாகக் காண்கிறேன்.

மணிமன்ற இயக்கத்தில் உங்களின் செயற்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள்.

மா.ஜானகிராமன்: தோட்டத்திலிருந்துதான் என்னுடைய சமூக ஈடுபாடு தொடங்கியது. தோட்டத்தில் நடைபெறும் திருமணம், திருவிழா போன்ற நிகழ்வுகளுக்குப் பந்தல் அமைப்பதைத் தொண்டூழியமாகச் செய்து வந்தேன். 1966ஆம் ஆண்டில் பத்தாங் பெர்ஜூந்தையில் ஆசிரியர் பெ.மு.இளம்வழுதி மணிமன்றம் தொடங்கினார். அவர் நாடறிந்த எழுத்தாளர் . வயது கட்டுப்பாடு காரணமாக அப்பொழுது அதில் என்னால் பங்குபெற முடியவில்லை. கோ.சாரங்கபாணி ஆசிரியராக இருந்த தமிழ்முரசில் மாணவர் முரசில் உறுப்பினராக இருந்தேன். அதன்பின்தான், மணிமன்றத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அந்தக் காலகட்டத்தில் செயின்ட் ஆண்ட்ரூ தோட்டத்தில் தூர்ந்து போயிருந்த கிணற்றைத் தூர்வாரித் துப்புரப்படுத்தியதே மணிமன்றத்தில் எங்களுடைய முதல் சமூகத் தொண்டாக அமைந்தது. மணிமன்றத்தின் வாயிலாக இலக்கியம், கலை போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டாலும் இந்த மாதிரியான களப்பணிகள்தான் எனக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. வறுமைச்சூழலில் இருந்த மக்களுக்கு நேரடியாக உதவி புரிவதே சமூக சேவையாகப்பட்டது.

மணிமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த க.கிருஷ்ணசாமி, சா.ஆ.அன்பானந்தன் போன்றவர்களின் நேரடித் தொடர்பு சமூக விழிப்புணர்ச்சி கொடுப்பதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் முழுக்க முழுக்க மொழி, கலை இலக்கியச் செயற்பாடுகளிலே மணிமன்றத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்தது. அதைத் தவிர்த்த சமூகச் சிக்கல்களில் மணிமன்றம் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாதது என்னைப் பொறுத்தளவில் பெருங்குறையாகவே இருக்கிறது. மொழியுடன் தங்களைக் குறுக்கிக்கொண்டார்கள்; சமுதாயச் சிக்கல்கள் போன்றவற்றை ஆய்வு செய்து களையும் முறைகளையோ, பயிற்சியையோ மணிமன்றம் முன்னெடுக்காமற் போய்விட்டது.

சா.ஆ.அன்பானந்தன், பரஞ்சோதி, க.கிருஷ்ணசாமி அவ்வப்போது நாளிதழ்களில் சமூக அவலங்களை ஆற்றாமையுடன் எழுதி வந்தனர். இந்தத் தலைவர்கள் மெல்ல அரசியலில் ஈடுபடுவதைப் போன்று தெரிந்தது. தமிழ் இளைஞர் மணிமன்றம் தனித்திருந்தபோது அதன் இலக்கு செயற்பாடுகள் ஆகியவை தெளிவாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மணிமன்றம் நாடு தழுவிய அளவில் பலர் பங்கெடுத்த பேரியக்கமாக இருந்தது. இடைக்காலத்தில் மணிமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் ஆளுங்கட்சியாக இருந்த ம.இ.கா போன்ற கட்சிகளில் சன்னம் சன்னமாக இணைந்தனர். சமூகப்பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் சமூகமொன்றில் அரசியல் சார்பற்று இளைஞர் அமைப்பாகவே இயங்கியிருந்தால் மணிமன்றத்தால் வலிமையான குரலை எழுப்பியிருக்க முடியும். பெருமளவிலான செயல்களை முன்னெடுத்திருக்க முடியும். ஆனால், தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காக அரசியலியக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டனர்.

மணிமன்றத்தின் தேசிய பொதுச் செயலாளராக இருந்த க.கிருஷ்ணசாமியே ம.இ.காவின் கலாசாரப்பகுதி செயலாளராகவும் பொறுப்பேற்றது எங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. இளைஞர்களால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கை சரியத் தொடங்கியது. அரசியலியக்கங்கள் வாயிலாக சில அனுகூலங்கள் கிடைக்கும் என்ற அவர்களின் காரணமும் எனக்குச் சரியாகப்படவில்லை. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையில் இயங்கும் அடிமைகளைப்போல அரசியலியக்கங்களில் பங்கெடுப்பதைவிட, எவ்வித அரசியல் சார்பும் இல்லாமல் தனித்துக் குரல் கொடுத்தால் வன்மையானதாக இருக்குமென்றே நினைத்தேன்.

சமூக இயக்கங்களில் உங்களின் செயற்பாடுகளைப் பற்றி குறிப்பிடுங்கள்

மா.ஜானகிராமன்: இதுபோன்ற நம்பிக்கை இழந்த சூழலில்தான், எங்கள் தோட்டத்திலிருக்கும் கிருஸ்துவக் குடும்பங்களுக்கு ஊழியம் செய்ய இலங்கையிலிருந்து வந்த பிரெஞ்சுப் பாதிரியாரான மறை குருவானவர் ஈவ்ஸ் காரோப் அவர்களின் சமூகம் சார்ந்த பணிகள் எங்களை ஈர்க்கத் தொடங்கின. அவர்தான், ஜாவா சிலாங்கூர் தோட்டத்தை மையமாக வைத்துக் கூட்டுறவுச் சங்கம் தொடங்க உதவி புரிந்தார்.

அந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வதற்கு முன்னர், கூட்டுறவு பற்றி அறிந்துகொள்ளும் அடிப்படை பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனை மிகவும் வித்தியாசமான நடைமுறை. அதற்கு முன்னதாக, இந்தியர்களால் தொடங்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களில் நேரடியாகப் பங்கு வாங்க மட்டுமே ஊக்குவிக்கப்படும். ஆனால், இந்தச் சங்கத்தில் கூட்டுறவுச் சங்கம் என்றால் என்ன, ஏன் தொடங்கப்படுகிறது, அதன் நன்மை, அதை நிர்வகிப்பவர்கள் யார் போன்றவற்றுடன் பங்குதாரர்களே பொறுப்பேற்று நடத்தவும் பயிற்றுவிக்கப்படுவர். கூட்டுறவு நாணயச் சங்கத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் பங்குதாரர்களே ஏற்றுத் தங்களுக்கான சிக்கலைத் தாங்களே கண்டறிந்து தீர்வு காணும் நீண்டகால அளவில் பயன் தரும் முறையை இது ஊக்குவித்தது. தோட்டத்திலிருந்த மக்களுக்குக் குறைந்த கல்வியறிவே இருந்ததால் ஆண்டு பொதுக்கூட்டம் நடத்துதல், வரவு செலவுப் பதிவு, அறிக்கை தயார் செய்தல் போன்ற நிர்வாக நடைமுறைகள் கற்றுத்தரப்பட்டன. இவ்வாறாகப் பயிற்சி பெற்று, பொறுப்பிலிருப்பவர்களை  மற்றத் தோட்டங்களுக்கு அழைத்துச் சென்று மக்களைச் சந்தித்துத் தாங்கள் பெற்ற பயிற்சியையும் ஊக்குவிப்பும் அளித்துக் கூட்டுறவு கிளைகளை விரிவுபடுத்தினோம். அந்தக் கூட்டுறவு சங்கத்தில் ஐந்தாண்டுகள் தலைவராகவும் பதினைந்து ஆண்டுகள் வேறு பொறுப்புகளிலும் இருந்தேன். என்னுடைய தலைமையில் 60 கிளைகளும் 2,500 உறுப்பினர்களும் இருந்தனர். சங்கத்திற்கென்று பத்தாங் பெர்ஜூந்தை நகரத்தில் கட்டடம் ஒன்றை வாங்கினோம். தோட்டத்து இளைஞர்கள் பெருஞ்செலவில் வெளியூர்களுக்குச் சென்று தொழிற்கல்வி பெறுவது மிகவும் சவாலானதாக இருந்தது. ஆகவே, ஒரு ஏக்கர் நிலத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கும் மையமொன்றை அமைக்க முடிவெடுத்தோம்.

தொடக்கமாக, தோட்டங்களில் வேலை செய்யும் இளைஞர்களுக்கு வார இறுதி நாட்களில் பகுதி நேரமாக வாகனங்கள், தொலைக்காட்சி, வானொலி பழுதுபார்ப்பு, விவசாயம் ஆகிய பயிற்சிகள் வழங்கினோம். ஆயினும் தொடர்ந்து கூட்டுறவுக்குச் சொத்து சேர்ப்பதென்பது, ஒருவகையில் பணம் குறித்த சிந்தனையில் ஆழ்த்திவிடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 1986 இல் மற்றவர்களுக்கு வழிவிட பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டேன். அதன் பிறகு,  சமுதாயச் சிக்கலுடன் பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டுமென மக்கள் சேவை இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த இயக்கத்தின் வாயிலாக மகளிர்க்கு தையல் வகுப்பு, இளைஞர்களுக்கு விவசாயப் பயிற்சிகள் ஏழ்மை நிலையிலிருக்கும் மாணவர்கள் தொழிற்கல்வி பெற நிதியுதவி என நிறைய தன்னுதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தோட்ட மக்கள் பெரிதும் அறிந்திராத தொழிலாளர் சேமநிதி வாரியம் (EPF), தொழிலாளர் சமூக நலன் நிதி (SOCSO), தொழிலாளர் சட்டம் ஆகியவை குறித்து வழக்கறிஞர் மன்றத்தின் சட்ட உதவி நிலையத்தின் வாயிலாகத் தோட்டங்கள் தோறும் விளக்கமளிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொழிலாளர்களின் உரிமைகள், உடனடி வேலை நிறுத்தத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வேலையிட விபத்துக்கான நிதியுதவி பெறும் முறை எனப் பலவும் மக்களுக்கு விளக்கப்பட்டது.

பாதிரியார் ஈவ்ஸ் காரோப் அவர்கள் வலியுறுத்திய ‘உங்களுடைய சேவை குறிப்பிட்ட இனத்துடனும், வர்க்கத்துடனும் இருந்துவிடக்கூடாது, மனிதனாகப்பட்டவன் எல்லா மனிதனுக்கும் சேவை செய்யவேண்டும்’ என்ற சிந்தனை என்னை மிகவும் தாக்கத்திற்குள்ளாக்கியது. அவர் மலாய்க்காரர்கள், சீனர்கள், மீனவர்கள், நெல் விவசாயிகள், பெல்டா நிலக்குடியேற்றக்காரர்கள், பூர்வக்குடிகள் அனைவரையும் சந்தித்து அவர்களின் வாழ்வியலைத் தெரிந்துகொள்ளச் சொல்வார். அப்படிப் பலரின் வாழ்வையும் அருகிருந்து கண்டறிந்ததன் மூலம் ஒரு மலேசியனாக மற்ற இனத்தவனுக்கு உதவி புரிவதென்பது என்னுடைய பிறப்புரிமையாகவே உள்ளது என்பதை உணர்ந்தேன். வறுமை என்பது இனம் சார்ந்தது அல்ல. பசியென்பது இனம், மதத்துக்கப்பால் அனைவருக்கும் பொதுவான ஒன்று. மனிதத்தின் பெயரால் தொண்டூழியம் செய்யும்போது இன, சமயப் பார்வையால் நம்மைக் குறுக்கிவிடக்கூடாது. காரோப் பாதிரியார் எப்பொழுதும் மனித மேம்பாடு நிறம், இனம், மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது. அனைவருக்கும் சேவை செய்ய வேண்டுமென வலியுறுத்துவார். அவரின் நினைவாகவே, தேசிய மனித மேம்பாட்டு மையம் என்ற பெயரில் மையம் தொடங்கினேன்.

அதனால்தான், சமூகத்தின் மீதான பார்வையைக் குறிப்பிட்ட இனத்துடன் என்னால் குறுக்கிக்கொள்ள முடியவில்லை. இந்தியர்களைக் காட்டிலும் பின்தங்கியிருக்கும் மற்ற சமூகங்களின் சமூகப் பொருளாதாரத்தை முன்னேற்றும் பொறுப்பும் கடமையும் எனக்கு இருப்பதாகவே உணர்கிறேன்.

உங்களது ஆய்வுலக ஈடுபாடு எங்கிருந்து தொடங்கியது?

மா.ஜானகிராமன்: நான் முன்னர் குறிப்பிட்ட மக்கள் கூட்டுறவு நாணயச் சங்கம், மக்கள் சேவை இயக்கம் போன்ற இயக்கங்களில் பங்கெடுக்கும் போது பத்தாங் பெர்ஜூந்தை வட்டாரத்தை ஒட்டியுள்ள நிறைய குடிசைப்பகுதிகள், தோட்டப்பகுதிகள், ஈயலம்பத் தொழிலாளர் குடியிருப்புகள் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன் வாயிலாக மற்ற சமூகங்களின் வாழ்வியல் நிலையைக் கண்டேன். ஊதியச் சிக்கல், வீடமைப்புச் சிக்கல் எனப் பல சிக்கல்கள் மத்தியில் வாழ்பவர்களின் நிலையைக் கண்டு அவர்களின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டுமென நினைத்தேன்.

1973ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக், தொழிலாளர் அமைச்சர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், மறைந்த டத்தோ கு.பத்மநாபன் ஆகியோரின் முயற்சியால் தோட்டத் தொழிலாளர் வீட்டுடமைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. தென்னமரத் தோட்டம், ராஜா மூசா தோட்டம், சுங்கை பூலோ தோட்டம், கெமாசான் தோட்டம் ஆகிய தோட்டங்களுக்குச்  சென்று அங்குள்ள மக்களுக்கு மாற்று வழியில்  வீட்டுடமைத் திட்டத்தில் பங்கெடுக்க செய்ய வங்கிக் கடனுதவி, தொழிலாளர் சேமநிதி மூலமாக வீடு வாங்க உதவி போன்றவற்றைக் குறித்த விளக்கமளிப்பு வழங்கினோம். அதே சமயத்தில் தோட்டத்தில் நடக்கும் சில போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், மறியல்கள் ஆகியவற்றில் பங்கெடுத்தோம். அவர்களின் வாழ்வியலுக்கான போராட்டங்களில்  எங்களுக்கும் பங்கு இருக்கிறது. கூட்டுறவுச் சங்கம் தொடங்கி அவர்களை அதில் பங்கெடுக்கச் செய்கிறோம். ஆனால், அவர்களுக்குச் சிக்கல் வந்தால் மட்டும்  வேடிக்கை பார்ப்பது எந்தவகையில் நியாயமாகக்கூடும். மக்கள் சேவை இயக்கம், மக்கள் கூட்டுறவு நாணயச் சங்கம் ஆகியவற்றுக்கு அப்பால் தொழிலாளர்களின் வாழ்வியல் போராட்டங்களிலும் பங்கெடுத்தேன். இதனால், உள்துறை அமைச்சு, காவல் துறை போன்ற அதிகார அமைப்புகளிலிருந்து பல நெருக்குதல்களைச் சந்தித்தாலும் நியாயமான சட்டத்திற்குட்பட்ட வழிகளில் தீர்வு காண முயன்றோம். பத்து ஆராங் ஈயச்சுரங்களில் வேலை செய்யும் குத்தகைத் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் அமைத்தோம்.

அந்தச் சமயத்தில்தான் சமூகச் சிக்கல்களை எழுத்து வடிவத்தில் கொண்டுவரும் எண்ணம் தோன்றியது. எழுத்தின் மூலம் பரவலாக வாசகர்களைச் சென்றடையும் என்ற எண்ணம் ஏற்பட்டது. என்னுடைய எழுத்தார்வத்தைத் தூண்டியது ஆசிரியர் பெ.மு.இளம்வழுதி அவர்கள்தான். அவர் அப்பொழுது நாடு தழுவிய நிலையில் நடைபெற்ற இலக்கியம் சார்ந்த பல போட்டிகளில் பங்கெடுப்பார். போட்டிகளில் இருந்து கிடைக்கும் பரிசுகளையும் கடிதங்களையும் மாதத்திற்கொருமுறை அஞ்சல்காரர் கொண்டுவருவார். அவற்றை எங்கள் முன் தான் பிரித்து ஒவ்வொன்றாகப் பார்ப்பார். அதுதான் என்னைச் சிறுவயதில் எழுத்துத் துறையில் ஈடுபடவேண்டும் என்கிற ஆர்வத்தை விதைத்தது. 1960களில் வாசக சாலையில் வாசித்த விளையாட்டுச் செய்திகள், பழமொழி ஆகியவற்றைத் துணுக்குகளாக நாளிதழுக்கு அனுப்புவேன். அந்த ஆர்வம் மெல்ல வளர்ந்து 1980களில் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை அவதானித்து நாளிதழில் கட்டுரைகளாக எழுதத்தொடங்கினேன்.

மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை நூலுக்கான பின்னணி என்னவாக இருந்தது?

மா.ஜானகிராமன்: கடந்த 1971இல் புதிய பொருளாதாரக் கொள்கை கொண்டுவரப்பட்டு மக்களின் வறுமை நிலை குறித்து பேசப்பட்டன. இதே காலகட்டத்தில், 1974ஆம் ஆண்டுவாக்கில் மக்கள் கூட்டுறவு நாணயச் சங்கத்தைத் தொடங்கினேன். தோட்டத் தொழிலாளர்களின் நலவாழ்வு, வீட்டுடமைத் திட்டம், ஊதியம், தோட்டப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஈடுபாடு ஆகியவை குறித்து நாளிதழ்களில் எழுதத் தொடங்கினேன். மேலும், அப்போது அரசாங்கம் கொண்டுவந்த ஐந்தாண்டுத் திட்டங்களில் இந்தியர்களுக்கான சாதக, பாதக அம்சங்களை ஆராய்ந்து  எழுதினேன். 1970 தொடங்கி 1990வரையில் சமூகச் சிக்கல்கள் தொடர்பாக நாளிதழ்களில் நிறையக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். அக்கட்டுரைகளைத் நூலாகத் தொகுக்க வேண்டுமென எண்ணம் வந்தது. இதே காலகட்டத்தில் மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் துண்டாடல் காரணமாகவும் தோட்டங்கள் கையகப்படுத்தப்பட்டு, தோட்ட மக்கள் நகர்புறங்களுக்கு விரட்டப்பட்டு முற்றிலும் புதிய வாழ்வியல் சூழலுக்குள் மாறுகின்றனர். ஆகவே, 200 ஆண்டுகாலத் தோட்டப்புற வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டுமெனத் தோன்றியது.

சிலாங்கூர் மாநிலத்தில் 1957இல் 500 தோட்டங்கள் இருந்தன. 2010 வாக்கில் அவை வெறும் 26 ஆக மாறியது. உடனடி நோட்டிசுகள் கொடுக்கப்பட்டுப் போதுமான வாழ்விட வசதிகளும் வேலை இழப்பு உதவிநிதியும் அளிக்கப்படாமல் தோட்டத் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டனர். ஏறக்குறைய 400,000 மக்கள் தோட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர். வெள்ளைக்காரர்கள் பள்ளி, கோவில், வீடுகள், திடல் என ஏற்படுத்தித் தந்த சமூக அமைப்பு முறைக்கான மாற்றை முன்வைக்காமலே புதிய சமூக வாழ்வியலுக்குள் வலுக்கட்டாயமாக  ஆட்படுகின்ற மக்கள் எவ்வாறு அதை எதிர்கொள்ளப் போகின்றனர் என்பதற்கான பதிவாக என்னுடைய நூல் அமைய வேண்டுமென நினைத்தேன்.

1990 தொடங்கி 2006 வரையில் ஆய்வுகளை மேற்கொண்டு ‘மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை’  நூலை வெளியிட்டேன். மேலும், இன்றைய தலைமுறையினர் தங்கள் முன்னோர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள இந்நூல் ஒரு வழிகாட்டியாக அமையுமாறு வடிவமைத்தேன். கர்னயல் சிங் சித்து (Karnail Singh Sidhu) தம்முடைய ஆய்வில் 1785ஆம் ஆண்டு தொடங்கி 1957ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய 40 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் மலாயாவுக்கு வருகை புரிந்ததாகவும் அதில் 12 இலட்சம் பேர் கொசுக்கடி, பாம்புக்கடி, நோய்களாலும் மாண்டதாகவும் தெரிவிக்கிறார். நாட்டின் நவீன வளர்ச்சிக்குப் பின்னணியாக இருந்த ரப்பர் தோட்டங்கள், ஈய வயல்கள், நெல் விவசாயம் ஆகிய கனிமவளங்களைப் பெருக்குவதில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட மக்களை இளம் தலைமுறையினர் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

உங்களை ஆய்வாளர் எனச் சொல்வதைவிட வரலாற்றுத் தொகுப்பாளர் எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமா? எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள்?

மா.ஜானகிராமன்: இம்மாதிரியான அடையாளங்களை எதையுமே என்னால் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நான் என்னுடைய தனிப்பட்ட சமூகப்பார்வையிலேயே ஆய்வுகளை மேற்கொள்கிறேன். என்னை அடையாளப்படுத்துவது வாசகர்களின் தனிப்பட்ட விருப்பம். இந்தியர்களின் வரலாற்றை எழுதிய மற்றவர்கள் அதனைக் கல்வியியல் பின்புலத்தில் இருந்தே அணுகினார்கள். நான் இந்த நூலில் குறிப்பிடும் இந்தியர்களின் வறுமைச் சூழலை என் வாழ்வியல் வழியாக நன்கு உணர்ந்து அந்தப் பின்னணியிலிருந்தே எழுத வருகிறேன். அதுதான் மற்ற ஆய்வாளர்களிலிருந்து என்னை வேறுபடுத்துகிறது. தோட்டத்தின் வறுமைச்சூழலில் பசியுடன் வாழ்ந்திருக்கிறேன். அந்த வகையில், என்னை ஒரு முன்னாள் ரப்பர் பால் மர வெட்டுத் தொழிலாளியாக அடையாளப்படுத்தப்படுவதையே பெருமையாகக் கருதுகிறேன்.

நீங்கள் தரவுகள் சேகரிக்கும் முறையைப் பற்றிக் குறிப்பிடுங்கள். ஆய்வு முறைக்கான பயிற்சியை யாரிடமாவது பெற்றீர்களா?

மா.ஜானகிராமன்: கல்வியியல் ஆய்வுகளுக்காகத் தரவுகளைச் சேகரிக்கும் ஆய்வாளர்களின் முறையைவிட என்னுடையது சற்றே மாறுபட்டது. என்னுடைய ஆய்வுக்கான தரவுகளைப் பெரிதும் நாளிதழ்களிலிருந்தே எடுத்தாள்கிறேன். அன்றாடம் வெளிவரும் அனைத்து நாளிதழ்களையும் வாங்கும் பணவசதி இல்லாததால், அருகிலிருக்கும் உணவகங்களில் வாரத்துக்கொருமுறை அந்த வாரத்தில் வெளியான அனைத்து நாளிதழ்களையும் பெற்றுக்கொள்வேன். உணவகங்களில் இருக்கும் உணவுகள் பட்டு நாளிதழில் துர்நாற்றம் வீசுவதும் உண்டு. ஞாயிற்றுக்கிழமையன்று நாளிதழில் வெளிவரும் முக்கியமான செய்திகளை வெட்டிப் பத்திரப்படுத்தித் தேதி, நாளிதழ் பெயர்களைக் குறித்துக்கொண்டு தொடர்புடைய கோப்பில் சேகரித்து விடுவேன். உதாரணத்துக்குக் குடிசைப்பகுதிச் சிக்கல், தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் என ஒவ்வொரு தலைப்புக்கும் தனித்தனியான கோப்புகள் வைத்திருப்பேன். அவற்றைக்கொண்டே, ஆய்வுகளைத் தெளிவாகச் செய்யமுடியும். அத்துடன், இந்தியர்கள் குறித்து வெளியான சில முன்னோடி ஆய்வுகளிலில் இருந்தே என்னுடைய ஆய்வுகளுக்கான தரவுகளை எடுத்தாள்கிறேன். உதாரணத்துக்கு, 1970களில் வெளியான ‘ம.இ.காவின் புதிய பொருளாதாரமும் மலேசிய இந்தியர்களும்’ எனும் ஆய்வு நூலில் இருந்து 1970களின் காலகட்டத்துக்கான புள்ளி விவரங்களையும் கருத்துகளையும் பெற்றேன். முறையான கல்விப் பின்புலம் இல்லாமையால் தகவல்களைச் சேகரிப்பது தொடங்கி ஆய்வுகளை எழுதுவது வரையில் ஒரு பாமரனின் பார்வையிலேயே மேற்கொள்கிறேன்.

ஆய்வுக்கான முன் தயாரிப்பு, முன்திட்டங்களாக எதையாவது கொண்டிருப்பீர்களா?

மா.ஜானகிராமன்: நான் பத்தாங் பெர்ஜூந்தை வட்டாரத்திலே பிறந்து வளர்ந்தேன். முழுமையாக அந்த வட்டாரத்தை மட்டுமே மையமாகக்கொண்டு மலேசியா முழுமைக்குமான இந்தியர்களின் வரலாற்றை எழுதமுடியாது. ஆகவே, நாடு முழுமையிலும் பல பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலையை நேரில் அறிந்தேன். எனக்கு முன்னர், சமூகச் செயற்பாடுகளால் சமூகத்துக்கு அறிமுகமானவர்களின் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று  ஆய்வுகளை மேற்கொண்டேன். உதாரணத்துக்கு, கம்போங் மேடான் குடிசைப்பகுதியில்  இந்தியர்களைச் சந்திக்க, அப்பொழுது அசுந்தா மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரிந்த ஸ்டெல்லா என்பவர் உதவிபுரிந்தார். போதைப்பொருள் விநியோகம், குண்டர் கும்பல் போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடைபெற்ற அவ்விடத்தில் அவரின் உறவினர் வீட்டில் பாதுகாப்பாகத் தங்கியிருந்து ஆய்வுகள் செய்ய ஏற்பாடுகள் செய்து தந்தார். தோட்டப் பின்னணியிலிருந்து வந்ததால், மிக எளிதாகத் தோட்ட மக்களுடன் பேசித் தரவுகளைப் பெற முடிந்தது. என்னுடைய ஆய்வுக்கு நாளிதழ் செய்திகள், ஆய்வு வாசிப்பு, கள ஆய்வுகள், நேரடிச் சந்திப்புகள், உரையாடல் துணையாக இருந்தன. கள ஆய்வுகளின்போது முதியோர்களையே அதிகம் சந்திப்பேன். முதியோர்களின் கதைகளில் குறிப்பிட்ட காலகட்டத்தின் மாற்றத்தையும் வரலாற்றையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

உங்களது நூலுக்கு முன்னரே மலேசிய இந்தியர்களின் வரலாற்றைக் குறித்த ஆய்வு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. உங்களின் ஆய்வு மற்ற நூல்களிலிருந்து வேறுபடும் இடமாக எதைக் கருதுகிறீர்கள்?

மா.ஜானகிராமன்: நான் தோட்டத்தில் பிறந்து வளர்ந்து குறைந்த கல்வி நிலையை மட்டுமே பெற்றிருந்தேன். தோட்டத்தில் பால்மரம் சீவும் பணியில் பத்தாண்டுகள் பணிபுரிந்தேன். என்னைப்போல தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கையைப் பதிய வேண்டுமென்ற எண்ணமே இந்த ஆய்வுநூலை எழுதக் காரணம்.  என்னுடைய ஆய்வுகள், கல்வியியல் சார்ந்தவையல்ல. எழுதுவதற்கு முன்னர், இந்தியர்களின் வரலாற்றை ஒட்டி கர்னயல் சிங், அரசரத்தினம், ராஜேஸ்வரி அம்பலவாணன், மைக்கல் ஸ்டேன்சன் டாக்டர் நாகராஜன், அன்பழகன், ப.சந்திரகாந்தம், மெ.அறிவானந்தன், பி.ராமசாமி போன்றவர்கள் எழுதிய நூல்களையெல்லாம் வாசித்தேன். ஆழமான கல்விப் பின்புலத்தைப் பெற்றிருக்கும் இவர்கள், வலுவான கருத்தியலைத் தங்கள் நூல்களில் நிறுவியுள்ளனர். இந்நூல்களில் கல்வியியல் சார்ந்த, கோட்பாட்டுரீதியான ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுள்ளது. என்னுடைய நூலில் ஆய்வுகளுடன், வாய்மொழி வரலாற்று அடிப்படையில் செய்திகளையும் தகவல்களையும் திரட்டித் தந்துள்ளேன். தோட்டங்களிலும் குடிசைகளிலும் புறம்போக்குப் பகுதிகளிலும் வாழ்ந்த  இந்தியர்களைச் சந்தித்துப் பேசி, அவர்கள் அளித்த வாய்மொழித் தகவல்களைப்  படங்களுடன் சேர்த்து வெளியிட்டேன். அந்தப் படங்களின் வாயிலாக சுதந்திரத்திற்குப் பின்னரும் இந்தியர்களின் வாழ்விடச் சூழலும் வாழ்க்கை நிலையும் சுதந்திரத்துக்கு முந்தைய காலனித்துவக் காலத்துடன் ஒப்பிட, பெருமளவில் மாறாதிருந்ததைக்  காணமுடிந்தது. தோட்டங்களில் இருந்த ஆயா கொட்டகை, காண்டா கம்புகளில் ரப்பர் பால் சுமக்கும் முறைகள் என இளைய தலைமுறையினரும் தோட்ட வாழ்வியலைக் கற்பனை செய்து பார்க்கும் படியாகப் படங்களை இணைத்தேன். ஒவ்வொரு தலைப்புக்குக் கீழும் கள ஆய்வுகள், படங்கள், படவிளக்கங்கள், தொடர்புடைய அட்டவணைகள், செய்திகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மற்ற நூல்களிலிருந்து இந்நூலை இவைதான் வேறுபடுத்துகிறது. இந்நூல், இந்தியர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களை விரிவான ஆய்வின் மூலம் நிருபிக்க முயன்றிருக்கிறது.

மலேசிய இந்தியர்களுக்கு மலேசியாவுடனான தொடர்பு, வருகையில் தொடங்கி தோட்ட வாழ்வு, நகர வாழ்வு என ஒரு வீழ்ச்சி/தேக்கத்தின் சித்திரம் இந்த நூலில் பதிவாகியிருக்கிறது. உங்களுடைய பார்வையில் இந்திய சமுதாயம் வீழ்ச்சியை நோக்கி மட்டுமே சென்றதாக கருதுகிறீர்களா?

மா.ஜானகிராமன்: 1948இல் மேற்கொள்ளப்பட்ட கூட்டரசு மலாயா ஒப்பந்தத்துக்குப் பிறகே தோட்டத் துண்டாடல் தொடங்குகிறது. அந்த ஒப்பந்தம் மலாயா சுதந்திரத்துக்கான எழுச்சியை மேலோங்கச் செய்கிறது. அப்பொழுது தோட்ட உடைமையாளர்களாக இருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் சுதந்திர மலாயாவில் தங்களின் நலன் குறித்து அச்சமடைந்து தோட்டங்களை விற்கத் தொடங்குகின்றனர். அதனால் தோட்டத் துண்டாடல் சிக்கல் தொடங்குகிறது. வாழ்விடப் பாதிப்பு, குடியுரிமைச் சிக்கல், வேலை பெர்மிட், மே கலவரம் ஆகிய சிக்கல்களால் சிலர் இந்தியாவுக்குத் திரும்புகின்றனர். அடுத்தாக, மேம்பாட்டுத் திட்டங்களினால் இந்தியர்கள் தோட்டங்களில் வேலையிழந்து கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். உதாரணத்துக்கு, நாட்டின் நிர்வாகத் தலைநகரான புத்ரா ஜெயா உருவாக்கத்துக்காக  பிராங் பெசார் உட்பட ஐந்து தோட்டங்கள் கையகப்படுத்தப்படுகிறது. ஏறக்குறைய 150 ஆண்டு காலமாகத் தாங்கள் வாழ்ந்து வந்த வாழிடத்தை இழந்த மக்களுக்கு முறையான வசிப்பிட வசதி ஏற்படுத்தித் தராமல் தாமான் பெர்மாத்தாவில் கட்டப்பட்ட அடுக்ககங்களில் குடியமர்த்தப்பட்டனர். அந்த அடுக்ககங்கள் ஆபத்தான சூழலில் இருப்பதால் வீடுகளுக்காக இன்றும் மக்கள் போராடுகின்றனர். ஆகவே,  நாட்டின் மேம்பாடு என்பதில் அரசு முன்னிலைப்படுத்த விரும்புவது மனிதர்களின் மேம்பாட்டையா அல்லது அழகிய தோற்றத்தைத் தரும் உயர்ந்த கட்டடங்களையா என்ற கேள்வி எழுகிறது. தலைநகரில் பெரும் மேம்பாட்டுப் பணிக்காகக் கையகப்படுத்தப்பட்ட புக்கிட் கியாரா, புக்கிட் ஜாலில் தோட்டங்களில்  வசித்த மக்கள் இன்னும் வீடுகளுக்காகப் போராட்டம் நடத்துகின்றனர். நான்காயிரம், ஐயாயிரம் ஏக்கர் தோட்ட நிலங்களைக் கையகப்படுத்தும் நிறுவனங்களும், அரசும் அங்கு வசிக்கும் மக்களுக்கு சிறிய பரப்பளவில் வசிப்பிடத்தை ஏற்படுத்தித் தராமல் போவதில் இனம் சார்ந்த பாகுபாடு ஒரு காரணமாக இருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. இந்த விவகாரத்தில் அவர்களையும் இந்நாட்டின் மக்களாக, உழைக்கும் வர்க்கமாக அணுகி மாற்று வீடுகளையும் வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதில்லை. 150 ஆண்டு காலம் நாட்டுக்காக உழைத்த மக்களுக்குச் செலுத்தும் நன்றிகடனின் அடையாளமாக வீடுகள் கட்டித் தந்திருக்கலாம். ஆனால், அதை அரசோ, தனியார் நிறுவனங்களோ செய்ய தவறிவிட்டன.

மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் 1940களில் இருந்த தொழிற்சங்க எழுச்சி, இந்திய தேசிய ராணுவ (.என்.) கால எழுச்சி அதன் பின் இண்ட்ராப் எழுச்சி என சில முக்கியமான எழுச்சிக் காலகட்டங்கள் அமைந்திருக்கின்றன. அவையனைத்தும் குறுகிய காலத்திலேயே அமுங்கிவிட்டிருக்கின்றன.  இந்த எழுச்சியின் விளைவுகளாக எதைக் கருதுகிறீர்கள்.

மா.ஜானகிராமன்: மலேசியாவில் சுதந்திரப் போராட்டம் 1920களிலே தொடங்கிவிட்டது. 1920 ஆம் ஆண்டு மலாயா கம்யூனிஸ்டு கட்சி மலாயாவுக்கு சுதந்திரம் கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. சுதந்திரத்துக்கான முதல் குரலாக அது. அந்தக் காலகட்டத்திலே  மலாயா கம்யூனிஸ்டு கட்சியில் இயங்கிய குருதேவன் போன்றவர்கள் நாட்டு வளம் சுரண்டப்படுவதையும் மக்கள் நசுக்கப்படுவதையும் குறித்துப் பேசியிருப்பதை மலாயா கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்ட ‘மலாயா கணபதி’ என்னும் நூலில் காண முடிகிறது. அதன்பிறகு, சுதந்திரத்துக்கான வேட்கையை ஏற்படுத்திய இயக்கமாக நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தலைமையேற்ற இந்தியத் தேசிய ராணுவ (ஐ.ஏன்.ஏ) இயக்கத்தைக் குறிப்பிடலாம். அவரின் செயல்பாடுகள் குறித்து ஆய்வாளர்களிடையே பல முரண்பட்ட கருத்துகள் இருந்தாலும், அவருடைய  முதன்மைப் பங்களிப்பாக, ஆயுத பலத்தாலே நாடுகளையும் மக்களையும் அடிமைப்படுத்திய காலனிய அரசை அதே ஆயுதங்களைக்கொண்டே ராணுவ நெறிமுறைகளுடன் எதிர்த்ததைக் குறிப்பிடலாம். அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும்போதுதான் மனிதன்  முழுமையடைந்தவனாகிறான் என்கிற பார்வை அவரிடம் இருந்தது. அந்த இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள்தான் பின்னாளில் போராட்டவாதிகளாக உருமாறினார்கள். மலாயா சிங்கப்பூரில் ஜப்பானியர் காலத்துக்குப் பின்பு கம்யூனிஸ்டுகளின் தாக்குதல் மேலோங்கிய காலகட்டத்தில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அப்பொழுது கம்யூனிஸ்டு இயக்கங்களில் பங்குகொண்ட பலரும் ஐ.ஏன்.ஏவில் பயிற்சி பெற்றவர்களாகவே இருந்தனர். ஐ.ஏன்.ஏவின் நீட்சியாகவே மலாயா கணபதி, வீரசேனன் ஆகியோர் ஏற்படுத்திய தொழிற்சங்கப் போராட்டங்களைக் குறிப்பிட முடியும். மலாயா கணபதி தலைமையிலான தொழிற்சங்கத்தில் –  Pan Malayan Federation of Trade Unions (PMFTU) மூன்று இலட்சம் தொழிலாளர்கள் இருந்தனர். அதில் 80 விழுக்காட்டினர் இந்தியர்களாக இருந்தனர். அப்போதைய காலனித்துவ அரசை எதிர்ப்பதற்கான வலிமையான குரலாகத் தொழிற்சங்கங்களின் குரல்கள் இருந்தன. நாட்டின் சுதந்திரத்தைத் தாமதப்படுத்தத்தான் இந்த மாதிரியான போராட்டங்களை முடக்கியும் அதில் பங்குபெற்ற தலைவர்களை நாடு கடத்தியும், தூக்குத்தண்டனையும் அளித்தது பிரிட்டன் அரசு. அதன் பின்னர் எந்தவிதமான பெரிய போராட்டங்களுமின்றி சுமூகமான முறையில் சுதந்திரம் கிடைத்துவிட்டது. பிறகு, 1957ஆம் ஆண்டு தொடங்கி 2007ஆம் ஆண்டு வரையில் இந்தியர்களின் சமூக உரிமைக்காக எந்தவிதமான பெரிய போராட்டங்களும் நடக்கவில்லை. 1960களில் புக்கிட் அசாஹான் தோட்டத்தில் நடந்த வேலைநிறுத்தமும்  தொழிற்சங்கம் பின் வாங்கியதால் நான்கு நாட்களில் முடிந்துவிட்டது.

2007இல் நிகழ்ந்த இண்டராஃப் பேரணி என்பது நாட்டில் நிகழ்ந்த கோவில் உடைப்புகள், தடுப்பு மையத்தில் இந்தியர்களின் நிலை ஆகியவற்றை ஒட்டியே உருவாகியது. சரியான திட்டமிடலும், தூரநோக்கும் இல்லாத தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமாகவே இண்டராஃப் போராட்டம் வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட வேண்டியதாகிறது. சமூகத்தில் சிக்கல்கள் நிறைந்திருந்த அந்த சமயத்தில், எவரலும் அப்படியானதொரு போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியும். இண்டராஃப் இயக்கத் தலைவர்கள் வழக்கறிஞர்களாகவும் உயர்கல்வி பின்புலம் கொண்டவர்களாகவும் இருந்தமையால் அவர்களால் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமென மக்களிடம் நம்பிக்கை உருவானது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட இண்டராஃப் முன்னணித் தலைவர்களால் சிறைவாசத்துக்குப் பின் ஒற்றுமையாகச் செயற்படமுடியவில்லை. அவர்களை இணைக்கும் கொள்கையோ, இலக்கோ இல்லாமல் போனதே அதற்கான காரணம்.

1941ஆம் ஆண்டு நடைபெற்ற கிள்ளான் கலகத்தில் 30,000 தொழிலாளர்கள் பங்குகொண்டனர். இண்டராப் போராட்டத்தைப் போலவே தோட்டத் தொழிலாளர்களின் 12 அடிப்படைக் கோரிக்கைக்காக நடந்த அந்தப் போராட்டத்தில் அறுவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தப் போராட்டத்தின் இறுதிவரையில், தலைவர்கள் மக்களுடன் இணைந்து போராடினர். ஆனால், இண்ட்ராப் இயக்கம் மக்களை உணர்ச்சிவசப்படச்செய்து போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள எதிர்மறையான சில செய்திகளைப் பரப்பியது. ஆகவே, 1941இல் நடந்த கிள்ளான் கலகம் என்பது மக்களின் வாழ்வியலுக்கான திட்டமிடப்பட்ட போராட்டமாக இருந்தது. 2007 இண்டராஃப் போராட்டமானது, முறையாகத் திட்டமிடப்படாமல் மக்களை உணர்ச்சிவசப்படச்செய்து ஒன்றுதிரட்டி நடைபெற்ற போராட்டம் என்பதுதான் என்னுடைய கருத்து.

மலேசிய இந்தியர் வரலாற்றில் மேலும் ஆய்வு செய்யவேண்டிய இடங்களாக எதை எண்ணுகிறீர்கள்?

மா.ஜானகிராமன்: என்னுடைய முதல் இரண்டு நூல்களிலும் தோட்டம் சார்ந்த வாழ்வியலே மிகுதியாக இடம்பெற்றது எனப் பலரும் தெரிவித்தனர். ஆனால், பெரும்பான்மை இந்தியர்களின் வாழ்விடமாக இருந்த தோட்டங்கள் அழிக்கப்பட்டப்போது அவர்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரும் சிக்கல்கள் நேரும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் நகர்புறங்களில் குடிசைப்பகுதிகளிலும் புறம்போக்குப்பகுதிகளிலும் மலிவு விலை வீடமைப்புப்பகுதிகளிலும் குடியேறினர். பெரும்பாலும் குறைந்த நிலை கல்வித்தகுதியும் எவ்விதத் திறன் பயிற்சியுமில்லாத, உடல் உழைப்புத் தொழிலாளர்களான இந்தியர்கள் தோட்ட வாழ்க்கையில் இருந்த ஒரு கட்டுக்கோப்பு உடைந்து, நகர்புறங்களில் சிதறிப் போனார்கள். அவர்களைப் பற்றிய முழுமையான ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை. ஒவ்வொரு தோட்டத்திலிருந்தும் இடம்பெயர்ந்தவர்கள் எங்குச் சென்றார்கள், அவர்களின் நிலை என்ன, என்பன குறித்த முழுமையான ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை. அரசாங்கத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிவரப் பட்டியலின்படி குறைந்த வருமானக்கோட்டுக்குக் கீழுலுள்ள (Bottom 40) குடும்பங்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள் 165,000 பேர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், கள நிலவரத்தின்படி இந்தியச் சமுதாயத்தைச் சேர்ந்த பலர் சமூகநல இலாகாவின் உதவிகளைப் பெறுபவர்களாகவும் தனித்து வாழும் தாய்மார்களாகவும் இருப்பதால் அரசு வெளியிட்டிருக்கும் எண்ணிக்கையைவிட, வறுமையில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும்.  தோட்டச் சமூக அமைப்பு முறை போலல்லாமல் சிதறிப்போன சூழலில் இந்தியர்கள் குரலற்ற சமூகமாக மாறிப் போய்விட்டனர். ஆகவே, தற்காலத்தில் இந்தியர்களின் வாழ்க்கை முறையை ஒட்டிய விரிவான கள ஆய்வுகள் அவசியமானவையாக இருக்கின்றன. அவர்களின் வாழ்க்கைச் சூழலை முழுமையாக ஆராயந்தால்தான், இந்தியர்களுக்கான நீண்டகாலத் திட்டங்களை உருவாக்க முடியும். அவர்களை நேரடியாக அணுகி, அவர்களின் சேமிப்பு, வாழ்க்கைத்தரம், குற்றச்செயல் ஈடுபாடு, வீடில்லாதவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைத் தெரிந்துகொள்வது அவசியமாகும். மலேசியாவின் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும் உள்ளடக்கிய இத்தகைய பொருளாதார, சமூகநிலை சார்ந்த ஆய்வு செய்யப்படுவது அவசியம் என நினைக்கிறேன். அது சாத்தியமாகாதநிலையில், குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமாவது தோட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் நிலை குறித்த ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

இதுதவிர, இந்தியர் விவகாரங்களை முன்னெடுக்கும், ஒருங்கிணைக்கும், பிரதிநிதிக்கும்  தனிப்பட்ட அமைப்போ குழுவோ இல்லாமல் இருப்பதும் ஒரு பெரும் குறையாக உள்ளது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் எனும் சூழலே நிலவுகிறது. சமூக நலனை முன்னெடுப்பதில் தொடர் உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். இந்த உரையாடல்களில் மற்றச் சமூகங்களும் பங்கெடுக்க வேண்டும். இவ்வாறான உரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டால் இந்தியர்களின் சிக்கலுக்கு இந்தியர்தான் குரல் கொடுக்க வேண்டுமென்ற நிலைமாறி மற்ற இனத்தவர்களும் குரல் கொடுக்கும் நிலை உருவாகும். அப்பொழுதுதான் பின்தங்கியிருக்கும் சமூகத்துக்கு அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம் என்ற சூழல் உருவாகும்.

கடும் உழைப்பில் நூல்களை எழுதுகிறீர்கள். அதற்கேற்ற அங்கீகாரம் இந்நாட்டில் கிடைத்துள்ளதா?

மா.ஜானகிராமன்: என்றுமே நான் அங்கீகாரங்களை விரும்பியதில்லை. அதை எதிர்பார்த்துச் செயல்படுவதும் இல்லை. திருமணத்தின்போது மனைவி அணிவித்த மாலையைத் தவிர பிற இடங்களில் மாலைகளை வேண்டி ஏற்றதில்லை. ம.இ.கா போன்ற அரசியல் கட்சிகளின் பொறுப்புகளில் பங்குகொள்ளும் வாய்ப்புகள் வந்தபோதும் ஏற்கவில்லை. அரசியல் கட்சியில் பங்குபெற்றால் என்னுடைய குரல் தனித்தொலிக்க முடியாது என நன்கு அறிந்திருந்தேன்.  தமிழ்நாட்டின் நாமக்கல்லைச் சேர்ந்த சின்னப்பப் பாரதி அறவாரியம் என்னுடைய நூலுக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும் மின்சான்றிதழும் அளித்தனர். இது தவிர சில அமைப்புகள் சமுதாயச்சிற்பி, வரலாற்று ஆசிரியர் போன்ற விருதுகளை அன்பினால் அளித்தனர். ஆனால், உண்மையான உழைப்புக்கு அங்கீகாரம் தனாகவே தேடி வரும் என்பதை நம்புகிறேன். 1984ஆம் ஆண்டு ஐ.நா சபை இந்தியா, புதுடெல்லியில் ஏற்பாடு செய்த ஊரக வளர்ச்சி கருத்தரங்குக்கு மலேசியப் பிரதிநிதியாக என்னைத் தெரிவு செய்ததை அப்படியான அங்கீகாரமாகவே காண்கிறேன். அடிமட்டத்தில் இருக்கும் மக்களுக்குக் களப்பணியாற்றும் செயற்பாட்டாளர்கள் தங்கள் செயற்பாடுகளையும் நேரடி அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வது அந்நிகழ்ச்சியின் நோக்கம். மலேசியா முழுதும் இருக்கும் களப்பணியாளர்களை ஈராண்டுகள் ஆராய்ந்து இறுதியில், கூட்டுறவுச் சங்கச் செயற்பாடுகளுக்காக நான் தெரிவுசெய்யப்பட்டது வியப்பாக இருந்தது. அந்தக் கருத்தரங்கின் இறுதி நாளன்று மலேசியப் பேராளர் குழுவின் அறிக்கையை நான் சமர்பிக்க அழைக்கப்பட்டேன். பேராசிரியர்கள் பலரும் இடம்பெற்றிருந்த குழுவில் நான் பேச அழைக்கப்பட்டபோது தயக்கமாக இருந்தது. அங்கிருந்த நண்பரொருவர் பேசும்போது ஆங்கிலேயரைப்போல லேசாக நாக்கைச் சுழற்றிக்கொண்டே ஆங்கிலம் பேசுங்கள். அது, உங்கள் பேச்சில் மற்றவர்களின் கவனத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துமென்றார். அந்த ஆலோசனை வேடிக்கையானதாக இருந்தாலும் கருத்தரங்கின் இறுதிநாளன்று என்னுடைய பகிர்வுரையை மிக முக்கியமானதாகக் கருதப்பட்டு,என்னுடன் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது. அந்நேர்காணலில் கூட்டுறவுச் சங்கம் அடித்தட்டு மக்களுக்கு எவ்வாறு பயன் அளித்தது  என்பதைப் பகிர்ந்துகொண்டேன். அமெரிக்காவில் வெளிவரும் இலண்டன் பாரிஸ் அமெரிக்கா சஞ்சிகையில் நேர்காணல் வெளிவந்தது.

என்னுடைய நூல் வெளியான பின்னர் பல கருத்தரங்குகளுக்கு அழைக்கப்பட்டு உரையாற்றியிருக்கிறேன். ஒவ்வொரு நிகழ்ச்சியின்போதும் மண்டபத்தின் பின்புறம் புத்தகங்களை அடுக்கி சலுகை விலையில் புத்தகங்களை விற்றிருக்கிறேன். புத்தக விற்பனையும் பெரிய அளவில் நடந்தது எனச் சொல்ல முடியாது. “நான் இந்தியர்களின் வரலாற்றுக் கதையைச் சொல்கிறேன், கதைகளால் சமூகத்துக்குப் பயனில்லை” என்பது போன்ற பார்வைகள்தான் சமூகத்தில் இருக்கிறது. ஆனால், கருத்தரங்குகளில் கலந்துகொண்ட சிலர் தங்கள் முன்னோர்களுக்கு நேர்ந்தவற்றை மிக ஆர்வத்துடன் கேட்டுப் புத்தகங்களை வாங்கினர். என்னுடைய ஆய்வுகளின் முக்கியமான நோக்கமே இளையர்களிடம் நம் முன்னோர்களின் வரலாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவேஇருந்தது. ஆனால், இந்நாட்டின் இளையர் அமைப்புகளான தமிழ் இளைஞர் மணிமன்றம், இந்து இளைஞர் இயக்கம் போன்ற இயக்கங்கள் என்னுடைய நூலை இளம்தலைமுறையிடம் சேர்ப்பிக்க எந்த முன்னெடுப்புகளும் செய்யவில்லை. அந்த இயக்கங்களில் முன்பு இருந்த வயது மூத்தவர்கள் சிலர்தான் என்னுடைய புத்தகங்களை வாங்கி ஆதரவளித்தனர். Malaysian Indian Delemmaவை நூலாக்கும் முயற்சியின் போது தேசிய நூலகத்தில் நிதியுதவி கோரும் வாய்ப்புள்ளதாக சில நண்பர்கள் ஆலோசனை கூறினர். ஆனால், விண்ணப்பங்கள் செய்தபோது, தகவல், தொடர்பு அமைச்சிலிருந்து நிதி பற்றாக்குறை உள்ளதாக பதில் வந்தது. அரசுக்கு மாற்றான சிந்தனையை இந்த நூல் கொண்டிருப்பதால் அரசு சார்ந்த அமைப்புகளிடமிருந்து எந்த உதவியும் பெற இயலாது என்பதையும் அறிந்தே உள்ளேன்.

கடும் உழைப்பில் உருவான உங்கள் நூலுக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாணிக்க வாசக விருதை வழங்காமல் இராஜேந்திரன் தலைவராக இருக்கும்போது அவர் மனைவிக்கு அந்த விருதை வழங்கி மகிழ்ந்தது. உலக சட்ட திட்டங்களுக்கு முரணான நிலை இது. இதுபோன்ற புறக்கணிப்புகளை எப்படிக் கடந்து வந்தீர்கள்?

மா.ஜானகிராமன்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசினை வழங்குகிறது. அந்த ஆண்டு கட்டுரை நூலுக்குத்தான் பரிசளிக்கப்படுகிறது என்று அறிந்து நண்பர்கள் பலரும் என்னுடைய நூலை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே நூலை அனுப்பினேன். நயனம் இதழின் ஆசிரியர் வித்யாசாகர்கூட தனது இதழில் என்னுடைய சமூகச் செயற்பாடுகளைப் பற்றி எழுதி, விருது பெறுவதற்குத் தகுதியான நூல் என்ற குறிப்பையும் வெளியிட்டிருந்தார். ஆனால் என்னுடைய நூலுக்குத்தான் விருது கிடைக்கவேண்டும் என்று நான் எதிர்பாக்கக்கூடாது. மேலும் தேர்வுக்குழுவின் பார்வையைப் பொருத்தே விருதுகள் அமைகின்றன. ஆகவே. என்னுடைய நூலுக்கு விருதளிக்கப்படாததை புறக்கணிப்பாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இந்நூல் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என நண்பர்கள் பலரும் தெரிவித்தனர். இருப்பினும், தேர்வுக் குழுவின் முடிவின் மீது எந்த ஆதங்கமும் எனக்கில்லை.

உங்களின் இரண்டாவது ஆய்வு நூலான ‘The Malaysian Indian Forgotten History of the colonoal era’ இந்தியர்களின் வரலாற்றைக் காலவரிசைப்படி படங்களாகத் தொகுத்தளிக்கிறது. அந்தப் படங்களுக்கான தேடல் எவ்வாறு அமைந்தது?

மா.ஜானகிராமன்: என்னுடைய முதல் நூலான ‘மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை’ நூல் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் பதினைந்தாயிரம் பிரதிவரை விற்பனையாகி பரவலான வாசக கவனத்தைப் பெற்றது. அதனால், பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்படும் கருத்தரங்குகளுக்குச் சென்று மாணவர்களிடையே உரையாற்ற அழைக்கப்பட்டேன். கருத்தரங்குகளுக்கு வரும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்களில் இருக்கும் நாட்டின் பொதுவான வரலாறே தெரிந்திருந்தது. இந்தியச் சமூகம் சார்ந்த வரலாற்றை ஆர்வத்துடன் கேட்டனர். அவர்களையும் வரலாற்றை ஆர்வத்துடன் வாசிக்கச் செய்ய படங்களை இணைத்து நூல் தயாரிக்க வேண்டுமெனத் தோன்றியது. இந்த நூலுக்கான தயாரிப்புப் பணியை ஐந்து ஆண்டுகள் மேற்கொண்டேன். நான் பதிவு செய்திருந்த தேசிய மனித மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் மூலம் தேசியப் பழங்சுவடி காப்பகம், தி ஸ்டார், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகிய நாளிதழ்களின் அலுவலகங்களுக்குச் சென்றுப் படங்களைத் திரட்டினேன். அத்துடன், இந்தியர்களின் வரலாற்றை ஒட்டி வெளிவந்துள்ள மற்ற நூல்களிலிருந்தும் நூலாசிரியரின் அனுமதியுடன் படங்களை எடுத்தாண்டேன். உதாரணத்துக்குச் சீக்கிய சமூகம், யாழ்ப்பானத் தமிழ் சமூகம் வெளியிட்டுள்ள வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ள படங்களை அடிக்குறிப்புடன் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்தனர். இந்த வரலாற்றை இந்திய சமூகத்துக்கும் மலாயாவுக்குமிடையிலான தொடக்ககால வரலாற்றுடன் வெளியிட வேண்டுமென நினைத்தேன். இந்தியர்கள் கூலிகளாக மலாயாவுக்கு வருவதற்கு முன்னரே வாணிபம் செய்வதற்காக வந்தனர் என்ற கருத்து பல இந்திய ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது. இருப்பினும், இந்தியர்கள் முன்வைத்த கருத்தை இன்னொரு இந்தியர் மீளச் சொல்வது அந்தக் கருத்துக்கு வலுவூட்டாது. அதனால், பேராசிரியர் டத்தோ டாக்டர் நிக் ஹசான் எழுதிய Early history எனும் மலேசியாவின் தொடக்கக் காலம் பற்றிய விரிவான ஆராய்ச்சி நூலில் இருந்த தரவுகளைப் பயன்படுத்தினேன். அதன் பிறகு, நவீன மலேசியாவின் வரலாற்றைப் பேசும் சியா பூன் கெங் எழுதிய Early Modern History எனும் நூலிலிருந்து மலாயாவுக்கு இந்தியர்கள், சீனர்களின் வருகை தொடர்பான தரவுகளைப் பெற்றேன். அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள், ஆய்வேடுகளிலிருந்து தகவல்களைத் திரட்டி இந்நூலை உருவாக்கினேன். இந்த நூல், மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியர்களின் வரலாற்றை அறிவதற்கான வழிகாட்டியாக இருக்குமென நம்புகிறேன்.

தற்போது நீங்கள் மேற்கொண்டு வரும் ஆய்வுகளைப் பற்றி குறிப்பிடுங்கள்.

மா.ஜானகிராமன்: என்னுடைய மூன்றாவது ஆய்வு நூலையும் இந்தியர்களின் வரலாற்றை ஒட்டியே எழுதுகிறேன். மலேசியாவில் இந்தியர்கள் பிரிட்டன், ஜப்பான், மலாய் மேலாதிக்கம் மூன்று ஆட்சிக் காலகட்டங்களில் இருந்திருக்கிறார்கள். இந்த மூன்று காலகட்டங்களிலும் இந்தியர்களின் நிலையை முறையே சுரண்டப்பட்டோர், கொடுமைக்குள்ளானோர், குரலற்றோர் என மூன்று நிலைகளாகச் சொல்லலாம். சுதந்திரத்துக்கு முன்பு ரப்பர்த் தோட்டங்களில் ஏற்பட்ட சுரண்டப்பட்டன். சயாம்-பர்மா மரண ரயில்வேயில் பல்லாயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இறந்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் அதிகாரம் பெற்ற பெரும்பான்மை சமூகத்தினர் இந்தியர்களின் இந்நிலையை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பது குறித்த ஆய்வாக அந்நூலாக இது அமையும்.

உங்களின் ஆய்வுப்பணிக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு எவ்வளவு தூரம் பங்களிக்கிறது?

மா.ஜானகிராமன்: முழுநேரமும் ஆய்வில் ஈடுபட்டவாறே இல்லற வாழ்விலும் பயணிப்பது சிரமமான ஒன்றாக இருந்தது. பிள்ளை வளர்ப்பில் என் மனைவியே பெரும்பொறுப்பை எடுத்துக்கொண்டார். ஆய்வில் முழுமையாக ஈடுபட்ட காலகட்டத்தில் முகம் முழுக்கத் தாடியுடன், பிள்ளைகளுக்கே அடையாளம் தெரியாமல்  இருந்தேன். என்னுடைய குடும்ப வாழ்க்கை நல்லபடியாக அமைந்தற்கு மனைவிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். தொடக்கக்காலத்தில் என்னுடன் இணைந்து தோட்டத்தில் களப் பணியாற்றியதால், என்னுடைய பணியை மனைவி முழுமையாக அறிந்திருந்தார். அவருடன் பல விடயங்களில் முரண்பாடுகள் இருந்தாலும், என்னுடைய ஆய்வுலக ஈடுபாட்டுக்கு எந்தவகையிலும் அவர் தடையாக இருந்ததில்லை. கள ஆய்வுகளுக்காக பல இடங்களுக்கும் தனித்து மோட்டாரிலும் பேருந்திலும் பயணிக்கும்போது என்னுடைய பாதுகாப்புக் குறித்து அச்சம் கொண்டிருப்பார். கூட்டங்கள் முடிந்து வீடு திரும்ப எவ்வளவு தாமதமானாலும், எங்களின் பழைய கம்பத்து வீட்டின் முன்னால் எனக்காகக் காத்திருப்பார்.  குடும்பத்துக்காகவும் மனைவியுடனும் அதிக நேரம் செலவிட முடியாமல்போன துயரம் எப்பொழுதும் என்னை வாட்டும். என்னுடைய மனைவி காலமான பிறகு அவருடைய கட்டிலுக்கு அடியில் இருந்த பொருட்களைச் சுத்தம் செய்தபோது, எங்களுடைய காதல் கடிதங்கள் தொடங்கி திருமண அழைப்பிதழ் வரையில், காலவாரியாக அடுக்கப்பட்டிருந்த ஒரு கட்டையும் பிள்ளைகளின் படங்களையும் மட்டுமே கண்டேன். அவர் என் மேல் எப்பொழுதும் வைத்திருந்த அன்பின் சாட்சி அது. என்னுடைய குடும்ப வாழ்க்கைக்கும் ஆய்வுலக ஈடுபாட்டுக்கும் என்னுடைய மனைவி எனக்கு பெருந்துணை.

மலேசிய இந்தியர்களைப் பற்றிய மற்ற ஆய்வுகளில் சொல்லப்படாத, நீங்கள் கண்டடைந்த முக்கியமான செய்திகள் ஏதேனும் உள்ளதா?

மா.ஜானகிராமன்: மற்ற ஆய்வாளார்கள் சொல்லாத எதையும் நான் கண்டடையவில்லை. ஆனால், பொதுப் பார்வையில் பெரிதும் பேசப்படாத சிலவற்றை நான் பேசியுள்ளேன்.  என்னுடைய இரண்டாவது ஆய்வு நூலான “மலேசிய இந்தியர்களின் மறக்கப்பட்ட வரலாறு” எனும் நூலில் பொதுத் தளத்திற்கு அதிகம் அறிமுகமில்லாத சில முக்கியமான வரலாற்றுச் செய்திகளைக் கண்டறிந்தேன். 1945இல் ஜப்பானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறி பின்னர் மீண்டும்  பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டபோது, ‘மலாயன் யூனியன்’ எனும் நிர்வாக முறையைக் கொண்டு வருகிறார்கள். ‘புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் குடியுரிமைத் தளர்வு போன்ற சலுகைகள் அளிக்கப்படுகின்றன’ போன்ற காரணங்களைச் சுட்டி மலாய் சமூகத்தினர் மலாயன் யூனியனை எதிர்த்தனர். அந்தக் காலகட்டத்தில் Putera, AMCJA போன்ற அமைப்புகள் சேர்ந்து மலாயன் யூனியனுக்கு மாற்றாக மக்கள் அரசமைப்பு (People Constitution) முறையை பரிந்துரையை முன்வைக்கின்றனர். நாட்டின் அனைத்து மக்களையும் இனம், மத வேறுபாடின்றி மலாயா மக்கள் எனக் குறிப்பிடப்படுவது, அனைத்து இனத்தவருக்கும் சமமான இனப்பிரதிநிதித்துவம் போன்ற கோரிக்கைகளை அப்பரிந்துரை முன்வைத்தது. அந்த மாற்று அரசமைப்பு முயற்சியில் மலாய்த் தலைவர்களும் மலாய் மக்களும் இணைந்து செயல்பட்டனர் என்பது பலரும் அறிந்திராத செய்தி. அதன்பிறகு, 1948இல் அமைக்கப்பட்ட கூட்டரசு மலாயா ஒப்பந்தத்தில் இந்தியர்களும் சீனர்களும் இடம்பெறவில்லை. மலாய்க் கூட்டமைப்பு மாநிலங்கள், கூட்டமைப்பு அல்லாத மலாய் மாநிலங்கள் என இருபிரிவுகளைச் சேர்ந்த சுல்தான்கள் மட்டுமே அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்திலேயே மலாய் மக்களின் சிறப்புரிமைகள் இடம்பெற்றுவிட்டன. இதனை அடியொற்றித்தான் பின்னாளில் அரசமைப்புச் சட்டம் அமைக்கப்பட்டது. நாட்டின் சுதந்திரப் பேச்சுவார்த்தையின்போது மலாய் மக்களின் பிரதிநிதியாக அம்னோவும் சீனர்களின் பிரதிநிதியாக ம.சீ.சவும் மட்டுமே முதலில் இடம்பெற்றன. பின்னாளில், அன்றைய மலாயா இந்தியர் காங்கிரசின் (ம.இ.கா) தலைவர் கே.எல் தேவசரின் முயற்சினாலேயே ம.இ.காவுக்கு இந்தியர்களின் பிரதிநிதியாகச் சுதந்திரப் பேச்சுவார்த்தையில் பங்குபெறும் வாய்ப்புக்  கிடைத்தது. இலண்டனில் நடைபெற்ற முதல் சுதந்திரப் பேச்சுவார்த்தையின் போதே 1948ஆம் ஆண்டு கூட்டரசு மலாயாவின் ஒப்பந்தத்தில் இருந்ததைப் போன்ற மலாய் மக்களுக்குச் சிறப்புரிமை, அதிகாரபூர்வ சமயமாக இஸ்லாம் ஆகிய விதிகளை உள்ளடக்கிய ‘மெர்டேக்கா ஒப்பந்தம்’ கையெழுத்தாகிறது. அந்த ஒப்பந்தத்தில் அம்னோவும், ம.சீ.சவும் கையெழுத்திட்டிருக்கின்றன. அந்தப் பேச்சுவார்த்தைக்கு குழுவில் ம.இ.காவின் தலைவர் துன் சம்பந்தன்  முதலில் அழைக்கப்படவில்லை. ம.இ.காவின் முன்னாள் தலைவர் கே.எல்.தேவாசர் கொடுத்த நெருக்கடி காரணமாக இறுதியில் அக்குழுவில் துன் சம்பந்தன் இணைத்துக் கொள்ளப்படுகிறார். இருப்பினும், கே.எல்.தேவாசரின் வற்புறுத்தலின் பொருட்டே தான் சேர்த்துக்கொள்ளப்பட்டதால், துன் சம்பந்தன் முதலாவது சுதந்திரப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெறுவதைத் தவிர்த்துவிட்டார் எனத் தெரிகிறது. காரணம் என்னவாக இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டம் உருவாக அடிப்படையாக இருந்த மெர்டேக்கா ஒப்பந்தத்தில் இந்தியர்களின் பிரதிநிதி கையெழுத்திடாமல் போய்விட்டார் என்பது வருத்ததிற்குரியது.

நோய்மை, தனிமை, வறுமை என பல்வேறு சூழலிலும் உங்கள் பணியை விடாது தொடர்கிறீர்கள். எது உங்களை இழுத்துச் செல்கிறது?

மா.ஜானகிராமன்: நான் இன்னும் பொருளியல் நிலையில் மேம்பட்டுவிடவில்லை. சமூகச் சிக்கல், ஆய்வுகள் எனும் சிந்தனையிலே இருந்ததால், காப்புறுதி எடுக்கவோ, வர்த்தகம் செய்யவோ எண்ணம் செல்லாமல் போய்விட்டது. எனினும், வறுமையில் வாடும் மக்கள் குறித்த ஆய்வு என்பது,  உலகில் வறுமையில் உழலும் அத்தனை மக்களினதும் வாழ்க்கைநிலை மேம்படவும் என்னால் ஆன சிறு பங்காக இருக்குமென நம்புகிறேன். “உன்னால் அந்த மக்களின் வாழ்க்கைப்பாடுகள் உலகத்துக்குத் தெரியவரும்” என்று உள்ளுக்குள் ஒரு குரல் என்னுள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

நேர்காணல் : அரவின் குமார்

புகைப்படம் : ம.நவீன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...