
மலேசியத் தமிழர்களும் வரலாறும்
தமிழர்கள் சிறுபான்மை மக்களாக வாழும் மலேசியா போன்ற நாடுகளில் இனத்தின் வரலாறு எப்போதும் புத்துணர்ச்சிமிக்க பேசுபொருளாக இருக்கிறது. இந்நாட்டின் மண்ணோடும் அரசியலோடும் தங்களைப் பிணைத்துக் கொள்ள வரலாற்றுச் சுவடுகளை நோக்கிய தேடலை பலர் முன்னெடுக்கின்றனர். தேசிய வரலாற்று வரையறைக்குள் வராத பல முக்கிய குறிப்புகளையும் உண்மைகளையும் தொகுத்துக் கொள்வதன் வழி தங்களின் நிலம் சார்ந்த உரிமைகளை நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கை பலரிடம் உண்டு. மேலும், இனவாதிகள் முன்வைக்கும் வந்தேறிகள் என்னும் அவப்பெயரை மறுக்கவும் பண்டைய வரலாற்று தகவல்களைப் பொது சமூகத்திடம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
ஆனால் வரலாறு என்று இங்கு முன்வைக்கப் படுவனவற்றில் பலவும் வாய்மொழிகதைகளாகவும் திரிபுகளாகவும் இருப்பது அதன் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மிகப்பழமையான வரலாற்று தகவல்களை இனப்பெருமையோடு இணைத்துக் கொண்டு பேசுவது வழமையாகியுள்ளது. ராஜேந்திர சோழன், கடாரம், பரமேஸ்வரா என வரலாற்றின் வெகுதூரம் பயணம்செய்து வெகுஜன மனம் குளிரும் சித்தரிப்புகள் உருவாக்கப்படுகின்றன. மக்களைத் தாழ்வுணர்ச்சியில் இருந்து மீட்க வீரக்கதை வடிவில் வரலாறு சுருக்கி ஒற்றைப்படையில் கூறப்படுகிறது. இந்நாட்டின் பிற இன மக்களுக்கு முன் தங்களை உயர்த்திக் காட்டும் நோக்குடன் பண்டைய வரலாறுகள் உணர்ச்சியோடு பேசப்படுகின்றன. இது நாட்டார் கதையாடலுக்கு நிகரானதுதான். ஒரு இனப்பிரிவின் எழுச்சியைத் தக்கவைக்க முன்னோரின் வாழ்க்கை பல்வேறு புனைவுகளுடன் சமூகத்தில் நீடிப்பதைப்போல, இங்கு வரலாறு பயன்படுகிறது. மேலோட்டமான ஆய்வுகளின் மேல் கட்டியெழுப்பப்படும் இவ்வகை கதைகள் அரசியல் மேடைகளிலும் தன்முனைப்பாளர் பேச்சுகளிலும் அதிகம் புழங்குவதைக் காணலாம். அவர்களுக்கு வரலாறு என்பது மக்களைக் கவரும் சந்தைப் பொருளாக பயன்படுகின்றது.
வரலாற்றை அறிவுத்துறையாக வாசிப்பவர்களும் ஆய்வாளர்களும் ஆவணங்களின் வழிதான் வரலாற்றுக்குள் பயணம் செய்ய முயல்வர் ஆவணங்களின் துணையோடு சொல்லப்படும் வரலாற்றுக் கருத்துகள்தாம் ஆய்வுலகில் ஏற்கப்படும். ஆவணங்களின் வழிதான் புதிய வரலாற்றுத் திறப்புகளையும் உண்மைகளையும் அடைய முடியும். இந்த வகையில்தான் மா.ஜானகிராமன் அவர்களின் நூல்கள் மலேசியத் தமிழ் எழுத்துலகில் முக்கியத்துவம் அடைகின்றன.
ஆவணங்களும் ஆதாரங்களும்
ஒப்பீட்டளவில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் மலேசியாவில் தோட்டப் பாட்டாளிகளாக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட தென்னிந்திய மக்களின் வரலாறு நமக்கு மிகவும் அருகில்தான் இருக்கிறது. நான்கு தலைமுறைக்கு முன் அவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்த வரலாற்றின் அடிப்படையில்தான் இன்றைய அரசியல் நிலைத்துள்ளது. ஆனாலும் போதுமான ஆவணங்களும் ஆதாரங்களும் இன்றி பல வரலாற்று உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. பல மெல்ல மறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பல்வேறு துறைகளில் வளர்ச்சியும் மாற்றமும் நன்முறையில் ஏற்பட்டது. முரணாகச், சுதந்திரத்துக்கு முன்பிருந்தே நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்த அடித்தட்டு மக்களின் வாழ்க்கைநிலை கவனிப்பாரற்றுக் கீழ்நோக்கிச் சென்றது. நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த மக்களின் மண் பல்வேறு மேம்பாடுகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதன் விளைவாக அவர்கள் வீடற்றவர்களாக புறநகர்களிலும் புறம்போக்கு நிலங்களிலும் குடியேறினார்கள். அவர்களின் நாடோடி வாழ்க்கை நிலையோடு பெரும் வரலாற்று உண்மைகளும் மறைந்து போயின.
மலேசிய இந்தியர்களின் இன்றைய வாழ்க்கைச் சிக்கல்களைப் புரிந்து கொள்ள கடந்த இருநூறு ஆண்டுகால வரலாற்றை நாம் அறிந்திருக்க வேண்டும். மேடைகளில் உணர்ச்சியோடு முழங்கப்படும் தொன்ம வரலாற்றை வைத்து இன்றைய வாழ்க்கையை மாற்றவோ சிக்கல்களைப் புரிந்துகொள்ளவோ முடியாது. மாறாக, இளையோருக்கு ஆங்கிலேயர்களால் இங்கு கொண்டுவரப்பட்ட தங்கள் மூதாதையரின் வாழ்க்கையைப் பற்றிய சரியான புரிதல் வேண்டும். அவர்களின் உழைப்பும் வீரமும் தியாகமும் சரியான வகையில் பதிவு செய்யப்பட வேண்டும். புதிய தலைமுறையினர் இந்நாட்டில் தங்களின் எல்லா முன்னெடுப்புகளுக்கும் கடந்த கால நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொள்ள பலநூறு தகவல்கள் உள்ளன. இந்தத் தெளிவுடன் மலேசியாவில் தனிமனிதனாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் செயல்பாட்டாளர் மா.ஜானகிராமனின் பணிகள் தனிச்சிறப்பு மிக்கன. கோலாசிலாங்கூரில் பிறந்து வளர்ந்த மா.ஜானகிராமன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை மலேசிய தோட்டப் பாட்டாளிகளின் வாழ்க்கையைத் தரவுகளின் துணையுடன் பதிவுசெய்வதில் செலவிட்டிருக்கிறார்.
வரலாற்று சுவடுகளை அதன் அசல் தன்மையுடன் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க ஆதாரங்கள் மிக முக்கியமானவை. ஆதாரங்கள் அற்ற கதைகள் உணர்ச்சி கொந்தளிப்பையும் சார்பு நிலைபாடுகளையும் இளையோரிடம் வளர்த்து விடும். வரலாற்று ஆதாரங்களாகும் தகுதி கொண்ட ஆவணங்களைச் சேகரிப்பதும் பாதுகாப்பதும் வரலாற்று ஆய்வில் அடிப்படையான பணிகளாகும். அலைச்சலும் கால விரையமும் கடின உழைப்பும் கோரும் இப்பணியில் விரும்பி தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மா.ஜானகிராமன்.
மலாய் இன மக்களின் இக்கட்டுகளும் மகாதீரும்
மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவின் The Malay Dilemma என்ற நூலை 1970ஆம் ஆண்டு எழுதியபோது அது பலரின் வாசிப்புக்கும் விவாதத்துக்கும் சென்றது. 1969 மே கலவரத்துக்குப் பின்னர் இந்நாட்டில் பெரும்பான்மை மலாய் இனத்தின் பாதுகாப்பு, மேலாண்மை, வளர்ச்சி பற்றிய சிந்தனைகளை பல அரசியல் தலைவர்கள் காத்திரமாக வெளிப்படுத்தினர். அதில் உச்சமாக மகாதீர் முகமதுவின் நூல் இருந்தது. இந்நாட்டில் மலாய் இன மக்களின் இக்கட்டுகள் என மகாதீர் வருணித்தவற்றை அடிப்படையாக வைத்துதான் அவர் தன் அரசியலைப் பின்னரும் நடத்தினார்.
மலாய் இனம் வரலாற்று காலம் தொட்டு பின் தங்கிய நிலையில் வாழ்வதால் அவர்களுக்கான வசதிகளையும் சிறப்பு ஒதுக்கீடுகளையும் அரசு அமைத்துக் கொடுப்பது இனவாதமாகாது என்பது அவர் கருத்து. 1971-ல் அறிமுகமான புதிய பொருளாதார கொள்கை மலேசியாவில் இனங்களுக்கிடையே பொருளாதார இடைவெளியை நிரப்பும் நோக்கத்தைக் கொண்டது என்றாலும் அதன்வழி பெரும் பாய்ச்சல் பெற்றவர்கள் பெரும்பான்மை மலாய் மக்களே. எனினும் போட்டி மிக்க பல்லின நாட்டில் மலாய்காரர்களின் வாழ்வாதாரச் சிக்கல்களை மகாதீரின் The Malay Dilemma வெளிப்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அக்காலகட்டத்தில் மலேசிய இந்தியர்களின் வாழ்வாதாரச் சிக்கல்களை மையப்படுத்திய அறிவு நூல்கள் எழுதப்படவில்லை. ஒரு சில உயர்கல்வி ஆய்வேடுகள் மட்டுமே வெளிவந்திருந்தன. ஆகவே மலேசியாவில் குடியேறி இருநூறு ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களின் நவீன வாழ்க்கைச் சிக்கல்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
பெரும்பான்மை மக்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தும் அரசு இயல்பாகவே சிறுபான்மை இனங்கள் சார்ந்த திட்டங்களில் மெத்தனமாக நடந்து கொண்டது. அவர்களுக்கான தனித்த திட்டங்கள் எதையும் அரசு முன்னெடுக்கவில்லை. நெல்லுக்கு பாய்ச்சிய நீர் புல்லுக்கும் பாய்ந்த அளவிலேயே, கிடைத்த உபரி சலுகைகளை நம்பி அவர்கள் வாழவேண்டியிருந்தது. குறிப்பாக உடல்உழைப்பு அடிதட்டு மக்களை ஓட்டரசியலுக்கு மட்டுமே அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன.
சீனர்கள் சிறுபான்மையராக இருந்தாலும் வியாபாரத்தின் வழி இந்நாட்டின் பொருளாதாரத்தை அடக்கியாளும் திறன் பெற்றிருந்தனர். அவர்களின் வலிமையான அரசியல் வியூகங்களும் அவர்களுக்கு உதவின. ஆகவே அவர்கள் தங்களைக் கட்டமைத்துக் கொள்ள சுயப் பொருளாதாரத் திட்டங்களை வெற்றிகரமாகக் கையாண்டனர்.
ஆனால், சிறுபான்மை இந்தியர்களின் நிலை, நாடு சுநத்திரம் பெற்ற பின்னர் மெல்ல விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டது. மலேசிய இந்திய தோட்டப்பாட்டாளிகளின் முதன்மையான பிரச்சனையாக எழுந்தது தோட்டத் துண்டாடலாகும். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் தோட்டங்களை விற்கும் அவசரத்தில் அங்கு குடியிருந்த உழைப்பாளிகளின் வாழ்க்கையை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாமலே தோட்டம் துண்டாடப்பட்டு விற்கப்பட்டது. ஆகவே, தோட்டப்பாட்டாளிகளாக வாழும் சூழலை இழந்து 60-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் நகரங்களுக்குச் சென்ற இந்தியர்கள் நகர்புற ஏழைகளாக இரண்டாம் தர சமுதாயமாக வாழும் நிலை உருவானது. அதோடு அடையாள அட்டை இல்லாமை, வேலை அனுமதி சிக்கல், மலாய் மொழி தேர்ச்சியின்மை என சுதந்திர நாட்டில் அடிப்படை வாழ்வாதாரம் இழந்தவர்களாக அவர்கள் வாழ்க்கை மாறியது.
மகாதீர் போன்று பெரும்பான்மை மலாய் மக்களின் நலனில் அதீத அக்கறை கொண்ட தலைவர்கள் பார்வையில், சிறுபான்மை இந்தியர்களிலும் சிறுபான்மையாக இருக்கும் உயர் உத்தியோகஸ்தர்களும், செல்வந்தர்களும் மட்டுமே தெரிந்தனர். ஒப்பீட்டளவில் இந்திய சமூகத்தில் மருத்துவர்களும், வழக்கறிஞர்களும் அதிகம் இருப்பது இன வளர்ச்சியின் குறியீடாக காட்டப்பட்டது. ஆனால், மலேசிய இந்தியர்களில் தொன்னூறு விழுக்காட்டினர் தோட்டப் பாட்டாளிகளாகவும் பிற அடிதட்டு உழைக்கும் வர்க்கமாகவும், அடிப்படை கல்வி அற்றவர்களாகவும் இருப்பது அறிந்தே, கவனிக்கப்படாமல் கல்வி, பொருளாதார உதவிகள் மறுக்கப்பட்டன.
இப்படி அரசு திட்டங்களில் விடுபட்டுப் பின்தங்கிய ஒரு இனத்தின் சாமான்ய உறுப்பினனின் ஆத்மார்த்தமான வினாக்களில் இருந்து உருவானதுதான் ‘மலேசியத் இந்தியர்களின் இக்கட்டான நிலை’ என்ற மா.ஜானகிராமனின் நூல்.
மலேசிய இந்தியர்களும் அவர்களின் இக்கட்டுகளும்
மா.ஜானகிராமன் சாமானிய தோட்டப் பாட்டாளியாக வாழ்ந்து அரசியலிலும் சமூகத்திலும் இந்தியர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை நேரடியாகவே அனுபவித்தவர். தோட்ட துண்டாடல், அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம் போன்ற ஆவணங்கள் இல்லாத மக்கள், கல்விவசதி இல்லாமை, பொருளாதார சிக்கல் என பல சமூக அவலங்களை நேரடியாக அறிந்ததோடு அவற்றைக் களையும் திட்டங்களையும் வகுத்து நன்முறையில் செயலாற்றியுள்ளார். உயர் கல்வி கற்காத அவரின் ஆய்வு தேடல்களின் ஊற்றுமுகம் களப்பணிகளில் இருந்தே தொடங்கியுள்ளது. அவரை சமூகச் சேவையை நோக்கி வழிநடத்திய கிருஸ்துவ மதப் போதகர் அருள் தந்தை மறைதிரு. ஈவ்ஸ் கரோப் அடிகளார் (Rev.Fr.Y.Carof) அவர்களைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டுள்ளார். அருள் தந்தை ஈவ்ஸ் கரோப் அடிகளார் ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து மலேசியாவுக்கு சமயத் தொண்டு ஆற்ற வந்தவர். மா.ஜானகிராமன் இளம் வயதில் அவரைத் தன் தோட்டத்தில் சந்தித்து பழகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அதே போல தனக்கு ஆரம்ப கல்வியறிவை ஊட்டியதோடு எழுத்துத்துறையில் முன்மாதிரியாக இருந்த மூத்த எழுத்தாளர் திரு.பெ.மு.இளம்வழுதியை தனது ஆசானாகவே கொண்டுள்ளார்.
மா.ஜானகிராமன் தனது சமூகப் பார்வையை இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டே வைத்துள்ளார். அவரது ஆய்வுகள் எந்த வகையிலும் இன துவேஷத்தைக் கொண்டதல்ல. இயல்பிலேயே பொதுவுடமைச் சிந்தனைத் தாக்கம் கொண்டவர் மா.ஜானகிராமன். பசிப்பிணி, இனம் மதம் வர்க்கம் என்ற எந்த வேறுபாடும் இன்றி, மனித இனத்தின் பொதுவான வாழ்வாதாரப் போராட்டம் என்ற அகண்ட கண்ணோட்டத்திலேயே தமது கருத்துகளை அமைத்துக் கொண்டுள்ளார். அவரது ஆய்வுகள், இந்நாட்டு வளர்ச்சிக்கு பாடுபட்டதோடு பல ஆண்டுகளாக ஆளும் கட்சியின் நிரந்தர வாக்கு வங்கியாக இருந்த இந்திய சமூகம் இன்று ஒதுக்கப்பட்டு விளிம்பு நிலை சமூகமாக மாறியதன் காராணத்தை ஆராயும் வகையிலேயே அமைந்துள்ளது. அத்தேடலில் எவ்வித சமரசமும் இன்றி தனது கருத்துகளை ஆய்வுகளில் பதிவு செய்கின்றார். நாட்டு வளர்ச்சி என்பது உயர்ந்த கட்டிடங்களிலோ நவீன போக்குவரத்து வசதிகளிலோ இருப்பதில் பொருள் இல்லை. மாறாக எந்த ஒரு மக்கள் தரப்பும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் விடுபட்டு விடாத உயர்ந்த மனிதநேயமே வளர்ந்த நாட்டின் அடையாளம் என்பதே அவரின் கருத்தாக உள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக இன பேதமற்று மலேசிய அடிதட்டு மக்களின் வாழ்வாதார சிக்கல்களைக் களையும் மனித மேம்பாட்டு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் மா.ஜானகிராமன். இதன் பொருட்டு அவர் மலேசியாவின் பல்வேறு சிற்றூர்களுக்கும் கம்பங்களுக்கும் புறம்போக்கு குடியிருப்புகளுக்கும் சென்று அந்த மக்களோடு தங்கி ஆய்வுகள் செய்துள்ளார். மலேசிய மக்கள் என்ற அகண்ட பார்வையுடன் அவர் அடிதட்டு மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களை நேரடி அனுபவங்களில் இருந்தே பெற்றுள்ளார். மிக இளம் வயதில் இருந்தே இளைஞர் மணிமன்றம், மக்கள் கூட்டுறவு நாணயச் சங்கம், சமூகச் சேவைச் சங்கம் போன்ற அமைப்புகளின் வழி சமூக சேவைகளிலும் களப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்த அவர் ஒரு கட்டத்தில் தான் பிறந்து வளர்ந்த தோட்ட பாட்டாளி மக்களின் சிக்கல்களின் மூலத்தையும் அதன் எதிர்கால ஆபத்துகளையும் பதிவு செய்து வைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த போதே, தனது ஆய்வுகளையும் ஆய்வுகளை திடமாக நிறுவ ஆவணங்களையும் சேகரிக்கத் தொடங்கியுள்ளார். கல்வியாளர்களின் உயர்கல்வி ஆய்வுகள் போல ஒரு இடுபணியாக தன் ஆய்வுகளையும் வரலாற்று தேடலையும் சுருக்கிக் கொள்ளாமல் தனது வாழ்கையின் அடிப்படையாக அமைந்துவிட்ட சமூகச் சேவையின் ஒரு பகுதியாகவே தன் ஆய்வையும் வகுத்துக் கொண்டுள்ளார்.
தனது ஆய்வுகளை அரிய துணுக்கு தகவல்களாலும் புகைப்படங்களாலும் மேலும் மேலும் மெருகூட்டும் இவர் தனது சமூக ஆய்வுகளின் நோக்கம் பற்றி மிகத் தெளிவான புரிதலுடன் செயல்படுகின்றார். கடந்த கால வரலாறுகளை ‘நொஸ்தால்ஜியா’ (Nostalgia) சுவையுடன் நினைவுத் தொகுப்பாக பதிவு செய்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை. கூடுதலாக, அவ்வகை இலக்கியங்களின் மீதும் அவருக்கு ஒவ்வாமை உண்டு. அவை அறிவார்ந்த விவாதத்துக்கு உதவாது என்று அவர் கருதினார். மாறாக, இந்நாட்டில் இந்திய சமூகத்தின் பங்களிப்பையும் அவர்களின் இக்காலகட்ட நிலையையும் பிற இன மக்களும் உணரும் பொருட்டு தனது கருத்துகளை வலுவான ஆதாரங்களுடன் முன்வைக்கவே அவர் விரும்புகிறார். அதன்வழி தனது கருத்துகள் இனச்சார்பு கொண்டவை அல்ல மாறாக ஒரு மக்கள் குழுவுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரானது என்ற தனது நிலைபாட்டையும் வெளிப்படுத்த முடியும் என்று அவர் நம்புகிறார்.
மா.ஜானகிராமனின் ஆளுமை
மா.ஜானகிராமன் 80-ஆம் ஆண்டுகளில் பல சமூகவியல் கட்டுரைகளை நாளிதழ்களுக்கு எழுதி தன்னை நிலைபடுத்திக் கொண்டவர். தனது எல்லா கட்டுரைகளையும் பெரும் உழைப்புக்குப் பின்னரே முழுமை செய்துள்ளார். தனது சமூக ஆய்வுகளில் உண்மை தன்மையும் சார்பின்மையும் இருக்கவேண்டியது அவசியம் என்று உணர்ந்து, அதற்கேற்ப அவர் எந்த அரசியல் கட்சியிலும் இணைவதை பிடிவாதமாக தவிர்த்து வந்துள்ளார். சமூக சேவையில் உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் அரசியல் கட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பாக உள்ளது. சமூக சேவையில் தீவிர ஈடுபாடு காட்டும் தலைவர்கள் பின்னாளில் அரசியல் கட்சிகளில் இணைவதை ஒரு சமூக இழப்பாகவே கருதுவதை அவரது பல மேடை உரைகளில் காண முடிகிறது.
பல ஆண்டுகளாக களப்பணியாளராகவும் கட்டுரையாளராகவும் செயல்பட்ட மா.ஜானகிராமன் 2006 ஆண்டு தொகுத்து எழுதிய மலேசிய ‘இந்தியர்களின் இக்கட்டான நிலை’ என்ற நூல் மலேசிய இந்தியர்களின் நீண்ட கால வரலாற்றை விரிவாகப் பதிவு செய்திருந்தது. மிக முக்கியமான தகவல்களையும் ஆவணங்களையும் பதிவு செய்துள்ள அந்த நூல் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுச் செம்பதிப்பாக வெளிவந்தது. ஆங்கிலத்தில் The Malaysian Indian Dilemma என பெயரிடப்பட்ட அந்த நூல் பிற இன வாசகர் பலரையும் கவர்ந்த நூலாக அமைந்தது. மகாதீர் எழுதிய The Malay Dilemma என்ற நூலோடு ஒப்பிட்டு விவாதிக்க ஏற்ற நூலாக இது அமைந்தது. இதுவரை நான்கு பதிப்புகள் கண்டுள்ள இந்நூல் ஒவ்வொரு பதிப்பிலும் புது இணைப்புகளையும் தகவல்களையும் சேர்த்து விரிவடைந்துள்ளது.
2016 ஆம் ஆண்டு மா.ஜானகிராமன் தொகுத்து வெளியிட்ட The Malaysian Indian Forgotten History of the colonial Era என்ற நிழல்பட விவரணை நூல் மிகத்தரமான பதிப்பாக வெளிவந்துள்ளது. நூற்றுக்கணக்கான அரிய நிழல்படங்களும் ஆவண நகல்களும் குறிப்புகளும் கொண்ட இந்த நூல் இளம் வரலாற்று வாசகர்களை எளிதில் கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் தமிழ் வடிவம் 2022-ல் வெளியீடு காண்கிறது.
தனது நூல்களுக்கான எல்லா பொறுப்புகளையும் தாமே ஏற்றுக் கொண்டு செயல்படும் மா.ஜானகிராமன் அமைப்புகள் செய்யத்தவறிய சமூகப் பணியைத் தனிநபராகச் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரின் நூல்கள் மலேசியத் தமிழ் அமைப்புகளின் போதிய ஆதரவையோ பாராட்டையோ பெறாமலே இருக்கின்றன. அங்கீகாரங்களின் மேல் ஆர்வம் அற்றவரான மா.ஜானகிராமனின் சமூகச் சேவைகளைக் கூர்ந்து கவனித்து ஐக்கிய நாட்டு சபையின் அமைப்பு 1984 ஆம் ஆண்டு புதுடெல்லியில் ஏற்பாடு செய்த உட்புற பகுதிகளில் சேவையாற்றும் தன்னார்வப் பணியாளர்களின் கருத்தரங்கில் பங்கேற்கவும் அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் செய்தது.
மா.ஜானகிராமன் பல்வேறு மூலங்களில் இருந்து தரவுகளைத் திரட்டி அவற்றை நம்பகத்தன்மை குறையாத விளக்கங்களுடனும் ஆய்வுநூல் ஒழுங்கு சிதையாத முறைமைகளுடனும் தொகுத்து நூலாக்கியுள்ளார். மலேசிய அறிவுச்சூழலில், குறிப்பாக தமிழ்ச்சூழலில் இவரின் நூல்கள் சிறந்த முன்மாதிரிகளாக விளங்குகின்றன. அவரின் எல்லா நூல்களும் பிற ஆய்வாளர்கள் மேற்கோள் கொள்ள தகுதி கொண்ட தரமான படைப்புகளாக அமைந்துள்ளன. வரலாற்றின் மேல் தான் முன் வைக்கும் எல்லா கேள்விகளையும் தரவுகளின் அடிப்படையிலேயே எழுப்புகிறார். பல்வேறு அரிய தகவல்களுடன் சமுதாயத்தின் இன்றைய சிக்கல்களுக்கான மூலங்களை விளக்குகிறார். இவர் ஆற்றும் பணி உண்மையில் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர்கள் செய்யவேண்டிய பெரும் பணிக்கு நிகரானது.
1948 ஆம் ஆண்டு பிறந்த மா.ஜானகிராமன் தனது 74வது வயதிலும் சற்றும் சோர்வின்றி தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான அவர் தன் மனைவி மக்களோடு இருந்த நேரத்தை விட தனது களப்பணிகளிலும் ஆய்வு தேடல்களிலும் செலவிட்ட நேரமே அதிகம் என்று நேர்காணலில் குறிப்பிட்டு உள்ளார்.
மலேசியாவில் தன்னலம் நோக்காது சமூகத்தின் தேவையை மட்டுமே சிந்தித்து அதற்கேற்ப திட்டங்களைத் தீட்டி தன் வாழ்நாளை அதற்கென்றே செலவிடக்கூடிய பெரும் ஆளுமையாக மா.ஜானகிராமன் திகழ்கிறார். அவர் ஆய்வுகளும் கருத்துகளும் விவாதிக்கப்படலாம். மாற்று கருத்துகளும் இருக்கலாம். ஆயினும் அவர் முன் வைக்கும் ஆய்வு கருத்துகள் மிக நேர்மையானவை. ஒரு சாமானிய தோட்ட பாட்டாளி தன் வாழ்வில் சந்தித்த அனுபவங்களில் இருந்து எழும் அக்கேள்விகளும் கருத்துகளும் மிக முக்கியமானவை. அரசு கவனித்துச் சீர்செய்ய வேண்டிய இடங்களை அவர் வெளிப்படையாகச் சுட்டிக் காட்டுகிறார்.
பொதுவாகவே இவ்வகை தனிநபர் பெருமுயற்சிகள் சமகாலத்தில் கவனிக்கப்படாமல் போவது தமிழ்ச்சூழலின் தீயூழ். ஆயினும் அவை எதிர்காலத்தில் பெரும் சமூகப் பொக்கிஷமாகக் கொண்டாடப்படுவதையும் நாம் பார்க்கிறோம். மா.ஜானகிராமன் தன் வாழ்நாளில் இந்த சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமையை வரலாற்றுத் தொகுப்பு பணியில் ஈடுபட்டு நிறைவாக செய்து முடித்திருக்கிறார். அவரது தொகுப்புகளின் வழி இந்நாட்டு தமிழர்கள் கடந்து வந்த கடின பாதையும் அவர்கள் செலுத்திய உழைப்பும் நிரந்தரமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இனங்களின் ஒற்றுமையில் விளையும் பலத்தையும் பிரிவினையின் ஆபத்தையும் வரலாற்றுச் சம்பவங்களில் இருந்து எடுத்துக் காட்டுகிறது. இந்தியர்கள் தங்கள் அறியாமையால் இழந்த வாய்ப்புகளையும் சுமந்த அவலங்களையும் அறிய முடிகின்றது. அவரது ஆய்வுகள் இந்நாட்டில் இந்தியர்கள் தொடர்ந்து செல்ல வேண்டிய வழியையும் காட்டுகிறது. கடந்தகாலத் துயரங்களையும் தவறுகளையும் உணர்வதன் வழி இளைய சமூகம் சமகாலச் சிக்கல்களை எதிர்கொள்ள தங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியும். மா.ஜானகிராமனின் ஆய்வுகள் மட்டும் இன்றி அவரின் அர்ப்பணிப்பும் சேவையும் நிறைந்த நீண்ட வாழ்க்கையும் இளையோருக்கு முன்னுதாரணமாக இருக்கத்தக்கதே. வல்லினம் விருதை அவருக்கு வழங்குவதில் வல்லினம் பெருமை அடைகிறது.
வணக்கம். வல்லினம் குழுவினருக்குப் பாராட்டும்; நன்றியும். பட்டம் பெறுவதற்கும் பாராட்டுச் சான்றிதழ் பெறுவதற்கும் இன்று நம்மில் பலரும் ஆய்வுகள் செய்ய முனைந்துள்ள வேளையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித அங்கீகாரமும் இன்றி, கள ஆய்வாளராகவும் உண்மையானச் சமூகச் செயற்பாட்டாளரகவும் திகழும் மா.ஜானகிராமன் அவர்களுக்கு வல்லினம் வழங்கும் விருதானது மிகவும் போற்றுதலுக்குரியது. சாமானிய படைப்பாளருக்கு வல்லினத்தின் இவ்விருதானது உலகத் தர விருதுக்கு நிகரானது.
நன்றி.
சு.குணசீலன்
ஜானகிராமனைப்பற்றி ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்கிறது பாண்டியனின் கட்டுரை.இதனை முன்னொட்டாகக் கொண்டு அவர் நூல்களை வாங்கி வாசிக்காலம். அவர் உழைப்பின் ஆழமும் சமூகத்தின் மீது அவர் கொண்ட பற்றும், அதன் பொருட்டான உழைப்பும் அவற்றுள் வெளிப்பட்டிருக்கின்றன.