வேதாளம்

“வேதாளச் சனியன வேற தூக்கவேண்டியிருக்கு” என்று சடாட்சரம் சொன்னார்.

இன்ஸ்பெக்டர் கோப்பில் இருந்து தலை தூக்காமலேயே “பின்ன வெறுங்கையோடையா போகப்போறீரு? சட்டம்னு ஒண்ணு இருக்குல்லா வே?” என்றார்

“அது இருக்கு…” என்றார் சடாட்சரம் “எங்கிட்டு இருக்குன்னுதான் தெரியல்ல. இருந்து தாலியறுக்குது.”

“இந்த நொரநாட்டியம்லாம் இங்க பேசப்பிடாது. மனுசன் இங்க தாடியிலே தீப்பிடிச்ச மாதிரி நின்னுட்டிருக்க நேரம்…போவும் வே…”

“போவாம பின்ன இங்க நின்னு அவுத்துப்போட்டு ஆடுதோமா? பில்லு பலதும் பெண்டிங் நிக்குது…சொந்தப் பைசாவிலே போயிட்டு வாறது. செலவளிச்ச பைசாவ கேட்டா ஆமணக்கெண்ணையிலே குண்டி களுவின மாதிரி பதிலு…”

இன்ஸ்பெக்டர் சீற்றத்துடன் ஃபைலை மூடி “அப்ப நான் என்ன உம்ம பைசாவ வைச்சு தின்னுட்டிருக்கேனா?என்னவே பேசுதீரு? வேணுமானா வந்து தேடிப்பாரும்வே…நானும் அவுத்துபோட்டு நிக்குதேன். தேடிப்பாரும்…” என்று கூச்சலிட்டார்.

“வாறானுக…பேச்சு பேசிக்கிட்டு. நான் எளுதி அனுப்பிச்சாச்சு…நீரு போயி மேலே உள்ளவன்கிட்ட கேளும்வே…கேக்குதீரா? போனு போட்டு தாறேன்…கேக்குதீரா வே?”

“நான் என்னத்துக்கு கேக்குதேன்….நம்ம பொளைப்பு நாறப்பொளைப்பு. இனிமே ஒரு ஆறு மாசமோ ஏளுமாசமோ. தொப்பிய களட்டி வைச்சுட்டு போனா பென்சன்ல மானமா வாழலாம்.”

“என்ன எளவோ செய்யும்…எனக்ககிட்ட கேக்கவேண்டாம்… பிடிக்கல்லேன்னா அவன கூட்டிட்டு போகவேண்டாம். கோர்ட்டுலே பிபி நம்ம அம்மைக்க ஆம்புளையப் பத்தி பேசுவான். மேலே உள்ளவனுக அம்பிடு பேரும் என் மேலே பேளுவானுக.”

“நீரு என் மேலே பேளுவீரு,” என்றார் சடாட்சரம். “அது எப்பமும் அப்டியாக்கும். பூமிதாங்குத ஆமையாக்கும் கான்ஸ்டபிளுன்னு சொல்லப்பட்டவன். அவனாக்கும் கடைசி. அவனுக்க மேலேதான் அம்பிடுபேரும் இருந்து பேளுவாங்க…மேலே இருக்கானுகள்லா, சூப்ரண்டண்டு, ஐஜி, கவர்னரு, சனாதிபதின்னு…”

இன்ஸ்பெக்டர் ஒன்றும் சொல்லவில்லை

“இந்த ஒருவாட்டி இப்ப போறேன். இனிமே எனக்க சொந்தப் பைசாவ செலவளிக்கமாட்டேன். கண்டிசனா சொல்லியாச்சு. வாற சனிக் கெளமைக்குள்ள எனக்க பில்லுகள் செட்டிலாகணும்”

இன்ஸ்பெக்டர் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை.

சடாட்சரம் தொப்பியை கழற்றி கையிலெடுத்து வழுக்கை மண்டையைத் தடவியபடி ரைட்டர் ஆறுச்சாமியிடம் போய் “மெம்மோவக் குடும்வே. நான் கெளம்புறேன்,” என்றபடி ஸ்டூலில் அமர்ந்தார்.

“என்னவாக்கும் சண்டை?”

“பில்லு நிக்குதுன்னு சொன்னா தாடியிலே தீப்பிடிச்சிருக்குன்னு சொல்லுதாரு.”

“அண்டியிலே அட்டை கடிச்ச மாதிரின்னு எங்க குத்தாலம் பக்கம் சொல்லுவோம்.”

“நாசமா போவும்.”

அவர் கார்பன் தாள் வைத்து மெமோவை எழுதி ரப்பர் ஸ்டாம்பு ஒட்டி ஒரு பிரதியை சடாட்சரத்திம் தந்தார். ஏற்கனவே அதில் எஸ்.ஐ கையெழுத்திட்டிருந்தார்.

“பய என்னமோ அனத்திட்டே இருந்தானே ராத்திரி?” என்றார் ரைட்டர்.

“ஆரு?”

“இவந்தான்வே, தாணுலிங்கம்…”

“அவன் ஆளு தேறின திருடனாக்குமே…”

“இல்லவே, அவனுக்கு என்னமோ மேலு சொகமில்ல.”

“அதுக்கென்ன? கோர்ட்டிலே ஆஜராக்கினா அப்படியே ஆசுபத்திரிக்கு போயி காலுநீட்டி படுத்துக்கிடலாமே. நீலவிரிப்புள்ள மெத்த. பாலு, ரொட்டி, சோறு, கறி, அவியலு…வே, இப்பம் காலம்பற முட்டை உண்டு. அவிச்ச முட்டை…”

“அவனுக்கு காய்ச்சலுன்னு நினைக்கேன்…நனைஞ்ச நாயி மாதிரி அனத்துறது கேட்டுது.”

“அடி உண்டோ?”

“அடியா? அதெல்ல்லாம் அப்ப. இப்பம் அடிச்சா நாம போயி செயிலிலே கிடக்கணும். எஸ்.ஐய பாத்தாக்கூட எந்திரிக்கல்ல. அவரு நாலஞ்சு கேள்வி கேட்டாரு. வக்கீலுகிட்ட கேக்காம வாயத்திறக்க மாட்டேன்னு சொல்லிட்டான்.”

“பாரும்வே, வீடு பூந்து திருடுறவன் சட்டம் பேசுதான்”

“காலம் அப்டி… எஸ்.ஐ எங்கிட்ட செரி வளமைபோல கேஸ போட்டிரும்னாரு. தொண்டிமுதலும் சாட்சியும் போட்டு ஒரு மாதிரி எளுதியாச்சு.”

சடாட்சரம் எழுந்துகொண்டு “பெரிய பஸ்ஸு இங்க நிப்பாட்ட மாட்டான். யூனிஃபாம கண்டா டபிள் விசில் அடிக்கான். வெயிலு வாறதுக்குள்ள போனா நல்லது. இல்லேன்னா வேர்த்து நாறணும். இதில சனியன வேற தூக்கணும்.”

“அது டூட்டில்லா? வே, அது என்னான்னு நினைச்சீரு? உலகமகா யுத்தம் கண்ட பாட்டாவாக்கும். அந்தக் காலத்திலே  பாயிண்ட் த்ரீ நாட் த்ரீ என்ஃபீல்டுன்னு சொன்னா மகாராஜா கணக்காக்கும். அதுக்க தேக்கு கடைஞ்ச கட்டையும் பாளீஷ் போட்ட பேரலும் பித்தளை டிரிக்கரும்…” நாற்காலியில் சாய்ந்து கைகளை தூக்கி சோம்பல் முறித்தார். “எங்க அப்பா கொண்டு வருவாரு. சுவரிலே சாய்ச்சு வைச்சுகிட்டு கஞ்சி குடிப்பாரு. பக்கத்திலே போகக்கூடாது. தள்ளி நின்னு பாப்போம் நானும் அண்ணனும். வீட்டிலே சுடலைமாடன் மாதிரி ஒரு சாமி வந்து நின்னுட்டிருக்கிறது மாதிரியாக்கும். அப்டி ஒரு கெத்து ஒரு லுக்கு. அப்ப முடிவெடுத்தாச்சு போலீசாகணும்னு. அண்ணன் பட்டாளத்துக்கு போனான். நான் இங்க வந்தேன்.”

“வராம முடியுமா? தலையெளுத்துல்லா?”என்றார் சடாட்சரம். “பீயிலே ஈ முட்டையிட்டா அதுக்க புளு அங்கதானே பொறந்தாகணும்?”

“நீரு அதை வேதாளம்னு சொன்னீருல்லா அதுக்காகச் சொன்னேன். அப்பல்லாம் இங்க மலை மேலே சந்துக்குச் சந்து சண்டியனுங்க. மலைக்கொள்ளைக்காரனுக. குடிகாரப்பயக்க வேற. அப்பா அந்த ரைஃபிளை தோளிலே சாய்ச்சுட்டு வருவாரு…அப்டியே பம்மிருவானுக. சுடலையக் கண்டா மலைவாதைகள் ஓடிருமில்லா, அது மாதிரி. ஒத்த ஒரு குண்டு வெடிச்சதில்ல. அத தூக்கிட்டு சும்மா அந்தால இந்தால லாந்தினதனாலேயே இங்கிட்டு சட்டம் ஒளுங்கு அமைஞ்சு போச்சு பாத்துக்கிடும்.”

“அப்ப அது துப்பாக்கி. இப்பம் வெத்து கட்டையில்லா?”

“அப்பமே அப்டித்தான் இருந்திருக்கும். ஆரு கண்டா?”

ரைட்டரிடமிருந்து சாவியை வாங்கிக்கொண்டு சடாட்சரம் ஆயுத அறைக்குப் போய் ரிஜிஸ்டரில் தன்பெயரையும் சர்வீஸ் மெமோ எண்ணையும் நுணுக்கி எழுதினார். ஒரு ரைஃபிளை எடுத்து அதன் எண்ணை கண்ணைச் சுருக்கி உற்று உற்றுப் பார்த்து எழுதினார். 

சாவியை திரும்பக் கொடுத்துவிட்டு அலமாரியில் இருந்து தந்திபேப்பரில் சுற்றி வைக்கப்பட்டிருந்த சட்டை லுங்கியுடன் லாக்கப்புக்குச் சென்றார். உள்ளே தாணுலிங்கம் நீல அண்டர்வேருடன் சுவர் மூலையில் குந்தி சாய்ந்து அமர்ந்திருந்தான். சடாட்சரம் பூட்டை திறந்து கதவருகே நின்று “டேய்” என்றார்.

அவன் உடம்பு மெல்ல அதிர்ந்தது.சடாட்சரம் கம்பியில் தட்டி “ஏலே, எந்திரிலே,” என்றார்

அவன் முனகினான்.

“ஏலே இந்தா போட்டுக்கோ…கெளம்பு,” என்று பொதியை அவனருகே வீசினார்.

அவன் கண் விழித்தபோது எதையும் அடையாளம் காணவில்லை. “ம்?” என்றான்.

“என்னலே செய்யுது?”

“ஒருமாதிரி இருக்கு.”

“லாக்கப்பிலே பின்ன ரெண்டுமாதிரியா இருக்கும்? கெளம்பு, கோர்ட்டுக்கு போகணும்…”

“என்னாலே முடியல்ல.”

“ஏலே எந்திரிலே…”

“முடியல்லண்ணு சொன்னேன்லா? ஏன் தொண்டைய கீறுதீரு?” என்றான்.

“லே மக்கா. உன்னைய கோர்ட்டிலே ஆஜராக்கினா நீ அங்க மயிஸ்ட்ரேட்டு எஜமான்கிட்ட சொல்லு மேலுக்கு முடியல்லன்னு. ஆசுபத்திரிக்கு அனுப்பிருவாங்க… இங்க இருந்து என்ன செய்யப்போற?”

அவன் “என்னைய நேத்து காலம்பற கூட்டிட்டு வந்தாக…இருபத்துநாலு மணிக்கூர் நேரம் லாக்கப்பிலே வைச்சிருக்கு. இது குற்றமாக்கும்,” என்றான்

“ஆமா, கோர்ட்டிலே சொல்லு. உடனே மயிஸ்ட்ரேட்டு அப்டியே கண்ணீரு விடுவாரு. எறும்பு மூத்தா ஈசலு. அவரு எஸ்ஸையா இருந்து மேலே போனவராக்கும்….எந்திரிலே.”

அவன் சுவரைப் பிடித்துக்கொண்டு எழுந்தான். கஷ்டப்பட்டு குனிந்து லுங்கியை எடுத்தான். உண்மையிலேயே உடம்பு முடியவில்லை போலிருக்கிறது என்று சடாட்சரம் நினைத்துக்கொண்டார்.

அவன் வெளியே வந்து “போறவளியிலே ஒரு சாய குடிக்கணும்,” என்றான்.

“சாயையும் வடையும் பளம்பொரியும் எல்லாம் உண்டு. நீ வா… நீ இப்ப சர்க்காருக்க மருமகன்லா?” என்றார் சடாட்சரம்.

அவன் சட்டைக்கையை சுருட்டி விட்டுக்கொண்டான். ?ஒரு பாக்கெட் சிசர்ஸ் வாங்கி குடுத்துப்போடும்… அங்க எம்பிடு நேரம் காத்திருக்கணும்னு ஆரு கண்டா?”

“உங்கையிலே காசிருந்தா எனக்கு சிகரெட்டு வாங்கி குடுலே… இங்கபாரு, பஸ்ஸுக்க பைசாவ சொந்தப் பாக்கெட்டிலே இருந்து போட்டாக்கும் நான் உன்னைய கூட்டிட்டுப் போறது. நீ சாயையும் வடையும் கேட்டது நியாயம். நாம நாளைக்கும் ஆளுக்காள் முகம் பாத்துக்கிட வேண்டிய ஆளுங்க…”

“அப்ப ஒரு கெட்டு பீடி வாங்கி தாரும்வே.”

“பீடின்னா செரி.”

சடாட்சரம் மேஜை மேலிருந்த கைவிலங்கை எடுத்து அவன் கையில் மாட்டினார்.

“இது எதுக்கு? நானே சாவுறனா இருக்கிறனான்னு நிக்கேன்.”

“அது வேற கத…வெளியப்போயி நல்ல காத்த பாத்தா உனக்கு குதிரக்காலாக்கும் வாறது….நாம இதெல்லாம் பாக்கத் தொடங்கி வருசம் முப்பத்திமூணாச்சுலே.”

அவர் மறுமுனையை தன் கையில் மாட்டிக்கொண்டார். ரைட்டர் “வே அவனுக்க ரெண்டு கையையும் சேத்து போட்டாப் போரும்வே,” என்றார்.

“நமக்கு அது பளக்கமில்ல… நான் எப்பவும் இப்டியாக்கும், தெரியும்லா?”என்றார் சடாட்சரம் “போலீஸுகாரன் எப்பவும் திருடனுக்க மனசோட இருக்கணும்னு நம்ம பளைய  பென்னி சாரு சொல்லுகதுண்டு.”

“அவரு பக்கா திருடன்லா?”

விலங்குபோட்ட கையை மேலே தூக்கி தாழ்த்தி “இப்ப நாம ரெண்டுபேரும் சொந்தமாக்கும்,”என்றான் தாணுலிங்கம்.

“வாய மூடுலே, வகுந்துருவேன்,” என்றார் சடாட்சரம்.

“அவன் சொல்லுகது செரி… இதுபோல ஒரு பந்தம் வேற உண்டும்னா அது கல்யாணபந்தம் மட்டுமாக்கும்,” என்று ரைட்டர் சிரித்தார்.

“சிரிப்பேரு… உமக்கு நிளலிலே ஃபேன் கீளே இருக்கப்பட்ட வேலையில்லா?”என்றார் சடாட்சரம் “வாடே!”

“ஏம்வே அங்க என்ன சிரிப்பு? போகலியா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“போறம்…போகாம இங்க என்ன ரெக்கார்டு டான்ஸா ஆடுதோம்? எனக்க பில்லு சனிக்கிளமை ரெடியா இருக்கணும்…” என்றார் சடாட்சரம்.

இன்ஸ்பெக்டர் அதை கேட்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

“வாடே நின்னு இளிக்காம,” என்று சடாட்சரம் சீறி விலங்கு போட்ட கையை இழுத்தார்.

“பளைய காலத்திலே ராஜாக்கள் செய்யுத ஒரு வேலை உண்டுடே. ஒருத்தனுக்கு தண்டனை குடுக்கணுமானா இன்னொருத்தனுக்க பொணத்தோட அவனை சேத்து கட்டி தூக்கி ஆத்திலே போட்டிருவாங்க. அவன் பொணத்தோட நீந்தி கரைசேந்தா தப்பிச்சிடலாம்…”

“இப்ப என்ன சொல்ல வாறீரு?”

“இல்ல, போற வளியிலே ஆறு உண்டு…பஸ்ஸும் பளசு, பாலமும் பளசு.”

“நீரெல்லாம் வெளங்க மாட்டீரு,” என்று சடாட்சரம் படிகளில் இறங்கினார்.

தாணுலிங்கம் மெல்லிய தள்ளாட்டத்துடன் வந்தான். ஆனால் உடலில் காய்ச்சல் இருப்பதுபோலவும் தெரியவில்லை. அவனைப் பத்தாண்டுகளாகவே சடாட்சரத்துக்கு தெரியும். பதினாறு வயதிலேயே வீடுபுகுந்து திருட ஆரம்பித்துவிட்டான். மென்மையான காய்ந்த புல்பாசி போல மீசையும் தாடியும். அடர்ந்த கொத்துத் தலைமுடி. கொஞ்சம் பூனைச்சாயல் கொண்ட கண்கள். மெல்லிய உதடுகள். பெண்மைச்சாயல் கொஞ்சம் உண்டு என்பதனால் சிறுவனாகவே தெரிவான்.

“பீடி தாரும் வே.”

“இப்பதானே கெளம்பியிருக்கே…கடை அந்தாலேதான். வா.”

போலீஸ் ஸ்டேஷன் ஊருக்கு மிகவும் தள்ளி அந்தக் காலத்தில் மகாராஜா கட்டிய பழைய ஓட்டுக் கட்டிடத்தில் இருந்தது. அங்கிருந்து மண்சாலைக்குச் செல்லவே ஒரு ஃபர்லாங் ஆகும். அதன் பின் மண்சாலையில் ஒரு கிலோமீட்டர் நடந்தால் தார்ச்சாலை. அதிலும் அரைக் கிலோமீட்டர் சென்றால்தான் ஆலமரத்தடி பஸ் ஸ்டாப். அங்கே சண்முகதாஸின் டீக்கடையும் பெட்டிக்கடையும் தொழுவமும் இணைந்த வீடு.

சடாட்சரம் ரைஃபிளை தோளில் சாற்றிக்கொண்டு நடந்தார். அதன் எடை முதலில் சாதாரணமாகத் தோன்றும். ஆனால் கொஞ்சநேரம் வைத்திருந்தால் தோள் கடுக்க ஆரம்பிக்கும். மடித்து வைத்திருக்கும் கையிலும் வலி எடுக்கும். மறுகையை தாணுலிங்கம் கையுடன் சேர்த்து விலங்கிட்டிருந்தார். ஆகவே தோள் மாற்றிக்கொள்ளவும் முடியாது.

“கைவெலங்க அவுத்தாக்க தோள் மாத்தி வச்சுக்கிடலாம்ல?” என்றான் தாணுலிங்கம்.

“அந்த வேலைய உன் கையிலே வச்சுக்க, என்னலே…வெலங்கு நீ கோர்ட்டு வராந்தாவுக்கு போன பொறவுதான் அவுரும்.”

“சின்னப்புள்ளைக பாத்தா உம்மையும்தானேவே திருடன்னு சொல்லும்? அதுக்காச் சொன்னேன்.”

“டேய், சின்னப்புள்ளைக முதல்ல தெரிஞ்சுகிடுறது அப்பா, அம்மா. அடுத்து காக்கா. அப்றம் யாரு? போலீஸு… என்னான்னுடே நினைச்சே. போலீசாக்கும் இந்த சமூகத்த சமூகமா வச்சிருக்கது.”

”இல்லேன்னா தேவலோகமா ஆயிருமோ?”

“நக்கலு? இடுப்போட ஒரு சாத்து சாத்தினா குண்டுமணி உடைஞ்சுபோயிரும் பாத்துக்க.”

“இல்ல கேக்கேன், அந்த துப்பாக்கி என்னத்துக்கு? வெலங்கு இருக்குல்ல?”

“அது வெள்ளக்காரன் காலத்து சட்டம்…இந்த துப்பாக்கி வெள்ளக்காரன் காலத்து ஐட்டம். முதல் உலகமகா யுத்தத்திலே இருந்து வந்ததாக்கும்…”

“அப்ப வெலங்க அவுத்தா என்ன? நான் ஓடினா நீரு சுடும் வே.”

“யாரு, நான்? இத வச்சு சுடணும்? டேய், இத என்னான்னு நினைச்சே? இது வெறும் மட்டை… உசிரில்லா பொணமாக்கும்.”

“உம்மாணை?”

“கண்ணாணை…வெறும் மட்டைடே. இங்கபாரு, ஒரு துப்பாக்கியிலே என்ன இருக்கு? வெளியே காணுகது இந்த மரமட்டை, நல்ல பர்மாத் தேக்குல கடைஞ்சு செஞ்சதாக்கும். பின்ன இந்த பேரல்.…இது ரெண்டுக்கும் உள்ள இருக்கப்பட்டதுதான் துப்பாக்கிக்க உண்மையான எந்திரம். அதாக்கும் ரைஃபுளுக்க உசிரு… இந்தா இது டிரிக்கர். இதோட சேந்து உள்ள ஒரு ஸ்ட்ரைக்கர் உண்டு. அதுக்கு முன்னாடி ஒரு சிலிண்டர். அதிலேதான் கார்ட்ரிட்ஜ வைக்கணும்…”

“கார்ட்ரிட்ஜுன்னா?”

“குண்டுடே…குண்டும் அதுக்குண்டான வெடிமருந்தும் சேந்ததாக்கும் கார்ட்ரிஜ்.”

“ஓகோ.”

“துப்பாக்கி வெடிச்சபிறவு கீள விளுந்து கிடக்கும்லா, அது.”

“நான் எங்க பாத்தேன்?”

“நானும் பாத்ததுதாண்டே… சுடுறதுக்குச் சொல்லிக்குடுத்தாங்க…அதெல்லாம் அப்ப. அத அப்பவே மறந்தாச்சு.”

“இப்ப இதவச்சு சுட முடியாதோ?”

“எப்டி சுடுகது?டேய், சொன்னேன்ல, இதுக்க உசிரு போயி நெறைய காலமாயாச்சு. அசல் முந்நூத்திமூணுக்க டிரிக்கர், ஸ்டிரைக்கர், சிலிண்டர் எல்லாம் நல்ல பித்தளையிலே வார்த்து செஞ்சிருப்பான். வெண்ண மாதிரி வளுக்கும். சத்தமே கேக்காது. எண்ணை போடவேண்டியதில்லை. எவ்ளவு காலம் வச்சு அடிச்சாலும் உள்ள தேய்மானமே இருக்காது…வெள்ளக்காரன் ஐட்டம்டே. என்ஃபீல்டுன்னு பிரிட்டன்லே ஒரு எடம். அங்க செஞ்சது… இப்ப இங்க உள்ளவனுக உருட்டுறது மாதிரி இல்ல.”

“ஓகோ.”

“இதெல்லாம் இங்க வந்து நூறு வருசம் தாண்டியாச்சு. இங்க போலீஸுக்கு வந்தே அம்பது வருசம் போயாச்சு. வந்தப்பமே கண்ணு வச்சிட்டானுக. எப்ப எடுத்தானுகண்ணு தெரியாது. ஸ்டேசன்ல இருக்கிற பதிமூணு ரைஃபிளிலயும் மட்டையும் பேரலும் மட்டும்தான் இருக்கு. இரும்பிலே சும்மா டிரிக்கர் மாதிரி ஒண்ணை ஒட்டி வச்சிருக்கான். மதபடி உள்ள ஒண்ணுமில்ல.”

“உம்மாண?”

“கண்ணாணடே….நான் எதுக்கு பொய் சொல்லுதேன்? அதுவும் உன்னைய மாதிரி திருடன்கிட்ட?”

அவன் கூர்ந்து பார்த்தபின் “வெறும் மட்டை,” என்றான்

“ஆமா…இதுக்க நம்பர் இருக்கப்பட்டது பேரலிலேயாக்கும். அதனாலே ரிஜிஸ்டர்லே இருக்கிற நம்பர் உள்ள துப்பாக்கி ஸ்டேசன் ஸ்டாக்லே இருக்குன்னு கணக்கு…”

“பாக்க மாட்டாகளா?”

“எப்பவோ ஆரோ கையெளுத்து போட்டு ஸ்டாக் வாங்கியாச்சு…. இப்ப பிடிக்கப்போனா ஆரையின்னு பிடிக்க? அதனாலே அப்டியே விட்டாச்சு.”

“இத நீரு சொமக்குதீரு?”

“சுமந்தாகணும்லா?”

“பல்லில்லா பாம்பு மாதிரி.”

“நாங்க வேதாளம்னு சொல்லுகது… தோளிலே தொங்குதுல்லா?”

“நீரு ஆரு, விக்ரமாதித்யனா?”

“அவனாவது காடாறுமாசம் நாடாறுமாசம்…ஏலே நமக்கு எப்பமும் காடுல்லா?”

சண்முகதாஸ் கடையில் இல்லை. எருமைக்கு புல் பறிக்கச் சென்றிருப்பான். அவன் வீட்டுக்கு நேர்பின்னால் பெரிய குன்று. அது ரிசர்வ் ஃபாரஸ்ட். கமலம்மைதான் இருந்தாள்.

“டீ சொல்லும்வே,” என்றான் தாணுலிங்கம். “பீடியும் வேணும்.”

“இருடே, கோமணத்த அவுக்குறதுக்குள்ள கோணச்சி புள்ளைபெக்க நின்னாங்கிற சேலாட்டுல்ல இருக்கு. சொல்லுதேன்.”

சடாட்சரம் அவனுக்கு ஒரு டீ சொன்னார். தனக்கு ஒரு பாலில்லாத டீ. பால்டீ குமட்ட ஆரம்பித்து நீண்டநாட்களாகிறது. போலீஸ் வேலையிலும் டிரைவர் வேலையிலும் முதல் ஒரு ஆண்டுக்காலம்தான் பால்டீ குடிக்க முடியும். வேளைகெட்ட வேளையில் டீ குடித்து வயிற்றில் அமிலம் ஊறிவிட்டால் அதன்பிறகு பாலைக் கண்டாலே வாயில் புளிப்பு தோன்றும். போதையை வயிற்றுக்குள் ஊற்றாமல் தூக்கமும் வராது.

“ஒரு பீடிக்கெட்டு,” என்றான் தாணுலிங்கம்

“முதல்ல டீயக்குடிடே.”

“பீடியில்லாம டீ குடிக்கது ஒருமாதிரி தந்தையில்லாத்தனம்லா?”

“வெளங்கீரும்…நல்ல சொகுசுடே.”

“உள்ளதச் சொல்லட்டா? எனக்கு எல்லாத்திலயும் ஒரு சொகுசு வேணும். வேலைக்கு போகாம திருடப்போறது அதுக்காக்கும்.”

“திருடுறது சொகுசா?”

“வேய், நீரு போலீஸு… நான் கேக்கேன். உள்ளதச் சொல்லும். நீரு எந்த வேலையும் பாக்காம தொடர்ச்சியா எம்பிடு நாளு சந்தோசமா இருந்திருக்கேரு?”

“வேலை செய்யாமலா? லீவு குடுக்கமாட்டானுக அம்மைபெக்காத அடகோடனுங்க… கல்யாணம் கட்டின புதிசிலே நானும் கோமதியும் திருச்செந்தூரு போயி ஒருவாரம் இருந்தோம்.”  

“நான் போன ஒண்ணர வருசம் முளுக்க ஒரு நாள் ஒரு மணிக்கூர் கூட ஒரு வேலையும் செய்யல்ல. சாப்பாடு, தூக்கம், சினிமா….நமக்கு பாட்டிலே நல்ல ஆர்வமுண்டு…பாடட்டா?”

“வேண்டாம்,” என்றார் சடாட்சரம். “ஐஸ்வரியமான ஜீவிதம்டே… நெஞ்சறிஞ்சு சொல்லுதேன். நீ அனுக்ரகம் வாங்கி வந்த ஆளாக்கும். அடுத்த சென்மத்திலே உன்னைய மாதிரி திருடனா பொறக்கணும்.”

“ஏன் இப்ப திருடுறது?”

“அதுக்கெல்லாம் ஒரு தைரியமும் நேக்கும் வேணும்டே…நாம பொதி சுமக்குத களுதையாக்கும்…பாத்தேல்ல. இதாக்கும் பொதி. வேதாளம்லா?”

துப்பாக்கியை கடைமுன் சாய்த்து வைத்துவிட்டு கட்டன் சாயாவை வாங்கிக்கொண்டார்.

“அத எதுக்கு இங்க சாய்ச்சு வைக்கேரு? பிள்ளைகள் உள்ள வீடாக்கும்,” என்றாள் கமலம்மை

“கமலாக்கா, அது கிளவனாக்கும். தண்டு தளர்ந்துபோன கெளவன்…ஒண்ணுக்கும் எடுக்காது,” என்றான் தாணுலிங்கம்

“என்ன ஆனாலும் வெடிக்கப்பட்ட சாதனமாக்கும்.”

“வெடிச்ச காலம்லாம் போச்சுல்லா?” என்று சடாட்சரம் சொன்னார்.

“அந்தால மாற்றி வையும்…”

“இப்ப எடுத்துக்கிடுதேண்டி…சும்மா கெட,” என்றார் சடாட்சரம் “உனக்க கெட்டினவன் எங்க?”

“புல்லு பறிக்க போனாரு.”

“புல்லுக்ககூட அவன் கஞ்சாவும் கொண்டு வாறான்னு ஒரு பேச்சு உண்டு.”

“பேசும்…இந்தா பெஞ்சு கிடக்குல்லா? இருந்து நல்லா பேசும்…”

“ஒருநாளைக்கு வந்து நல்லா இருந்து பேசுதேண்ட்டீ.”

“வாரும்…நறுக்கி விடுதேன்.”

“அப்டி பலரும் நறுக்கிட்டுண்டுடீ,” என்று சடாட்சரம் சிரித்தார். டீ கொஞ்சம் புரைக்கேற இருமிக்கொண்டார்

“அதென்னவே ரப்பர் மரமா? சீவிச் சீவி விடுகதுக்கு?” என்றான் தாணுலிங்கம்

“நீ சும்மா இருடே,” என்று சடாட்சரம் சிரித்தார்.

தாணுலிங்கம் பீடிக் கட்டை அவனே எடுத்து ஒரு பீடியை கயிறுச்சுருளில் எரிந்த கனலில் பற்றவைத்து ஆழ இழுத்தான். விலங்கிட்ட கையால் டீயைக் குடித்தபோது கூடவே அவர் கையும் எழுந்து அமைந்தது.

“நான் ரெண்டு கையாலே டீ குடிக்குதது இப்பமாக்கும்,” என்றான் தாணுலிங்கம்.

”அடிகள வாங்கப்பிடாது…” என்றார் சடாட்சரம்.

“இப்பம் எங்க போறீரு?” என்று கமலம்மை கேட்டாள்.

“கண்டா தெரியல்லியா? கோர்ட்டுக்கு. இந்த ஐட்டத்த அங்க ஹேண்டோவர் செய்யணும்.”

“இப்ப பஸ்ஸு இல்லல்லா?”

“என்னது பஸ்ஸு இல்லியா?” என்று சடாட்சரம் அதிர்ச்சி அடைந்தார்.

“காலம்பற மலைக்கு மேலே அணைக்கு போன பஸ்ஸு அங்க உடைஞ்சு நின்னுபோச்சு…பிரேக்டவுனு. இனி அடுத்த பஸ்ஸு மத்தியான்னம் ஒண்ணரைக்காக்கும்.”

“அய்யோ…” என்றார் சடாட்சரம்

“ஆனா இப்டியே காட்டுவளியா இறங்கி கீளபோனா கோதையாறு பஸ்ஸு வரும்…”

“அந்தா தொலைவு போகணுமே?” என்றான் தாணுலிங்கம்

“என்ன ஒரு ஆறு கிலோமீட்டர்… விறுவிறுன்னு போனா அரமணிக்கூர் நேரம்…”என்றாள் கமலம்மை.

“அரமணிக்கூர்லே உனக்க கள்ளப்புருசன் போவான்…நான் நடக்க மாட்டேன்,” என்றான் தாணுலிங்கம்.

“லே, கள்ளபுருசன் உனக்க அம்மைக்கு…லே,” என்றாள் கமலம்மை.

“நான் இல்லேன்னு சொன்னேனா?” என்றான் தாணுலிங்கம்.

“லே, சொன்னாக்கேளு. இப்ப போனாத்தான் கோர்ட்டுக்கு போகமுடியும்…”என்று சடாட்சரம் சொன்னார்.

“அதுக்காக நடக்கச்சொல்லுதீரா? காட்டுவளி… என்னால முடியாது.”

“லே மெல்ல நடந்தாப்போரும்லே… அஞ்சு கிலோமீட்டர்… இறக்கமாக்கும்.”

“என்னாலே முடியாது.”

“சொன்னாக் கேளுலே.”

“எனக்கு நெஞ்சு நோவுது… என்னன்னோ இருக்கு…என்னாலே முடியாது.”

“இங்கபாரு… இப்ப நீ வந்தா உன்னைய கோர்ட்டிலே கொண்டுபோயி நிப்பாட்டி அந்தாலே அப்டியே ஆஸ்பத்திரிக்கு அனுப்புவேன். வரலேன்னா திரும்ப போலீஸ் ஸ்டேசன். மறுக்கா லாக்கப்பிலே இருக்கணும்….கொசு கடிக்கும். பாயோ, தலகாணியோ, போர்வையோ கெடையாது… உனக்கும் மேலுக்கு சுகமில்ல…ஏலே, அந்த லாக்கப்ல கிடக்கிறதுக்கு எண்ணி எண்ணி நடந்தாக்கூட அஞ்சுகிலோமீட்டர் நடக்குறது ஈஸிதாண்டே.”

“வாறன்…வளியில நான் அந்தாலே ஓடிருவேன்.”

“ஆமா ஓடுதே…நடக்க முடியாதவன் ஓடுவியோ?”

“அந்த துப்பாக்கியாலே உம்மைச் சுட்டுப்போட்டு ஓடிருவேன்.”

“இந்த துப்பாக்கியாலே சுட்டா உனக்கு கேஸ் இல்ல பாத்துக்க.”

“ஏன்?”

“மயிஸ்ரேட் நம்ப மாட்டாருல்லா?” சடாட்சரம் அவரே தன் நகைச்சுவைக்கு தொப்பை குலுங்கிச் சிரித்தார்.

“நான் விளுந்தா என்னைய தூக்குவேரா வே?”

“தூக்குதேன்.”

“உம்ம தோளிலே ஒரு வேதாளம் கிடக்குல்லா?”

“நீ இன்னொரு வேதாளம்…வாடே.”

“அப்ப இன்னொரு கெட்டு பீடி வாங்கி குடும்.”

“பீடிப்புகை இருந்தாத்தான் வண்டி போவுமோ….எளவு அந்தச் சனியனை குடுடீ அவனுக்கு. பொகைஞ்சு நாசமா போவட்டும்.”

பீடியை இழுத்தபடி தாணுலிங்கம் நடந்தான். அவர்கள் காட்டுப்பாதைக்குள் இறங்கினார்கள்.

“என்ன எறக்கம்!” என்றான் தாணுலிங்கம்

“நீ என்னடே, திருடன்னு சொல்லுதே…எறக்கத்துக்கு பயருதே?”

“நான் எங்க எறங்கினேன்?”

“பின்ன நீ என்ன ஆப்பீஸு வேலையா செய்யுதே?”

“நான் ஓடுகதும் சாடுகதும் இல்ல… வீட்டுக்கு வெளியிலே ஒளிச்சிருப்பேன். பொம்புளையாளுக ஒண்ணுக்குப்போக வெளிய வாற நேரத்திலே திறந்த கதவு வளியா உள்ள போயிருவேன்… உள்ளத எடுத்துக்கிட்டு மெதுவா நடந்து வந்திருவேன்… பைசாவும் பொன்னும் மட்டும்தான் எடுக்குதது…நம்மாலே ஓட எல்லாம் முடியாது…”

துப்பாக்கி ஒரு செடியில் மாட்டியது. “எளவு” என்றார் சடாட்சரம்.

“அந்தச் சனியன நீரு தூக்கணும்னு விதியிருக்கு பாரும்.”

“இத எவனெவனோ தூக்கிட்டு சண்டைக்கு போயிருப்பான். கட்டிப்பிடிச்சுட்டு தூங்கியிருப்பான்… அந்தக் காலத்திலே நம்மாளுக அரேபியப் பாலைவனத்திலே எல்லாம் சண்டை போட்டிருக்கானுக.”

“பல பேர கொன்னிருக்கும்லா?”

“ஆமா…இதெல்லாம் ரெத்தபலி கேக்குத தெய்வங்களை போலயாக்கும்…கொடூர தெய்வமாக்கும், ஆனா நாம காவலுன்னு நினைப்போம்…”

“வேதாளம்!” என்றான் தாணுலிங்கம் “அதுகிட்ட நாலு கதையச் சொல்லச் சொல்லும்வே”

“நம்ம கதையே புராணமா கெடக்கு… அதுக்குமேலே இது சொல்லணுமாக்கும்?”

“என்ன கத?”

“போனமாசம் காட்டுக்குள்ள ஒரு பொணம்…செத்து ஒரு நாள் ஆகியிருக்கும். நாயும் நரியும் கிளிச்சுபோட்டு. அதுக்கு ராத்திரி முளுக்க காவலிருந்தேன்.”

“தனியாவா?”

“இல்ல, எனக்க வீட்டுக்காரியும் கூட இருந்தா…கேக்கான் பாரு.”

“பொறவு?”

“பொறவு என்ன? விடிய விடிய பொணத்தச் சுத்தி பந்தம் கொளுத்தி வச்சுகிட்டு காவலிருந்தேன். செந்நாயும் நரியும் ஊளைபோடுது. என்னென்னமோ சத்தம்… இந்தா இதை பிடிச்சுகிட்டு உக்காந்திட்டிருந்தேன்.”

“இது என்ன செய்யும்வே? வெடிக்காதுல்லா?”

“ஆமா, ஆனா அப்ப அந்நேரத்திலே இதானே துணை?”

“விக்ரமாதித்யனுக்கு வேதாளம் தொணை.”

“அப்டி பல எடங்களிலே இது தொணையா இருந்திருக்கு…இந்தா இந்த ரைபிளத்தான் நான் எப்பமும் எடுப்பேன்…இதுக்க வாரிலே ஒரு முடிச்சு உண்டு….”

“இது வெயிட்டு குறைவா?”

“எல்லாம் ஒரு வெயிட்டுதான்…பின்ன இதுக்குமேலே ஒரு அபிமானம். என்ன இருந்தாலும் நம்ம கூட இருந்தது…பல இடங்களிலே துணைக்கு வந்திருக்கு…கொஞ்சம் நிப்பம்டே”

“ஏன்?”

“தோளு கடுக்குது”

அவர் துப்பாக்கியை வைத்துவிட்டு அமர்ந்தார். தாணுலிங்கம் சற்று அருகே அமர்ந்து ஒரு பீடியை பற்றவைத்துக்கொண்டான்.

”ஏம்டே பீடிய இளுத்துக்கிட்டே இருக்கே?” என்றார் சடாட்சரம்

“நெஞ்சு ஒருமாதிரி இருக்கு.”

“அதுக்கு புகைய இளுக்குதியாக்கும்?”

“வேற என்னத்தச் செய்ய? நமக்கு சின்ன வயசிலே இப்டி நெஞ்சிடிப்பு உண்டு…. ஒரு வேலையும் செய்ய முடியாம இருக்கதனாலே திருடுறதுன்னு எறங்கிட்டேன்… சோறு திங்கணும்லா? சாவ முடியாதுல்லா?”

சடாட்சரம் துப்பாக்கியை எடுத்து தரையில் இருந்த புழுதியை அள்ளிப் போட்டுத் துடைத்தார்.

“என்ன செய்யுதீரு?”

“கையிலே இருக்குத எண்ணை பட்டு வளுக்குது…பிடி நிக்கல்ல.”

“வேதாளம்னா பொணமா?”

“அப்டியாக்கும் கதை.”

“இங்கேருந்து பாத்தா மனுசத்தோலுக்க நிறமாக்கும் கட்டைக்கு.”

சடாட்சரம் அதை மீண்டும் மடிமேல் வைத்துக்கொண்டார்.

“இத இப்டியே சுமந்துகிட்டு போகணும்… இன்னும் இருக்கும் ஒரு மூணு கிலோமீட்டர்.”

“ஆமடே, கெளம்பிருவோம்…கோர்ட்டுல சோத்து நேரத்துக்குள்ள போகணும்.”

“இத சுமக்கணும்லா?”

“ஆமா, நான் இத முப்பத்தஞ்சு வருசமா சுமக்குதேன்…இப்டி நாடு முளுக்க ஆயிரக்கணக்கானவனுக சுமக்கானுக.”

“ஆனா ஒண்ணும் வெடிக்காது?”

“ஆயுதப்படைக்காரன் வச்சிருக்கிறது வெடிக்கும்…”

“பின்ன எதுக்கு இதெல்லாம்?”

“சனங்க பயப்படுவாங்கள்லா?”

“காட்டிலே ஒரு மட்டைய தோளிலே வச்சுகிட்டு போனாக்கூட குரங்குகள் பயப்படும்…வேட்டைத் துப்பாக்கிகளை அதுகளுக்கு தெரியும்…”

சடாட்சரம் எழுந்துகொண்டார். “வாடே போலாம்,” என்றார்.

அவன் எழப்போனவன் இடக்கையால் நெஞ்சை அழுத்தி பிசைவதுபோல நெரித்தான்.

“என்னலே?”

அவன் நன்றாக வியர்த்திருப்பது தெரிந்தது. கண்கள் மேலே செருகியிருந்தன.

“லே, இஞ்சபாரு…லே.”

அவர் அவனை உலுக்க அவன் வாயை திறந்து மூச்சுத் திணறுவதுபோல அசைத்தான். கழுத்தில் தசைகள் இழுபட்டு துடித்தன. கண்கள் மேலேறி வெண்விழி தெரிந்தது.

“லே…தாணு, லே…” என்று அவனை சடாட்சரம் உலுக்கினார். ஒரு வாய் தண்ணீர் கொடுக்கலாமென்றால் அங்கே ஓடை என ஏதுமில்லை.

அவன் கை பாம்பு விழுவதுபோல ஓசையுடன் மறுபக்கம் மண்ணில் விழுந்தது. அவன் தலை பக்கவாட்டில் தொய்ந்தது.

அவர் அவன் முகத்தைப் பிடித்து உலுக்கிப் பார்த்தார். “லே…லே மக்கா..லே”

அவர் தூக்கியபோது அவன் தலை முன்னால் சரிந்தது. நாக்கு வெளியே தொங்கி எச்சில் வழிந்தது. அவருடைய அனுபவத்தில் தெளிவாகவே தெரிந்துவிட்டது, ஆள் போய்விட்டான்.

இருந்தாலும் அவர் அவனை உலுக்கி உலுக்கி அழைத்தார். அந்த உடலில் வியர்வை வழிந்துகொண்டிருந்தது. நெற்றி வியர்வை மூக்குநுனியிலும் தலைவியர்வை செவிமுனையிலும் சொட்டியது. அவன் சட்டை நனைந்து முழுஈரமாக உடலோடு ஒட்டியிருந்தது.

அவன் இறந்து அந்த உடல் பிணமாக ஆகிவிட்டதை அவர் உடலே உணர்ந்து அவருக்கு சொல்லிக் கொண்டிருந்தது. அவர் மலைத்துப்போய் எந்த எண்ணமும் இல்லாமல் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தார். பின்னர் வந்த வழியை திரும்பிப் பார்த்தார். இறங்கிப் போகவேண்டிய வழியை பார்த்தார்.

பிணம் சட்டப்படி அவருடைய பொறுப்பில் இருக்கிறது.  அதை அங்கேயே விட்டுவிட்டுப் போகமுடியாது, கொலைக்கேஸ் கூட ஆகிவிடும். துப்பாக்கியை ஊன்றி உடலை உந்தி எழுந்தார். கீழே அவர் கையை இழுத்தபடி பிணம் கிடந்தது.  சின்னப்பிள்ளைகள் தூக்கச்சொல்லி செல்லமாகக் கூப்பிடுவதுபோல அதன் கை தூக்கப்பட்டிருந்தது.

மீண்டும் வந்த பாதையை பார்த்தார். அவ்வளவு தூரம் தூக்கிக்கொண்டு மேலேற முடியாது. தூரம் கூடுதலென்றாலும் இறங்குவது எளிது. தூக்கிக்கொண்டு மெல்ல மெல்ல இறங்கி தார்ச்சாலையை அடைந்தால் யாரையாவது பார்க்கமுடியும். சொல்லி அனுப்பினால் ஸ்டேஷனில் இருந்து ஆள் வருவார்கள்.

அவர் குனிந்து பிணத்தை தூக்கி தோளில் போட்டுக்கொண்டார். மறுகையால் துப்பாக்கியை ஊன்றியபடி எடையால் நடுங்கிய கால்களை தூக்கி வைத்து நடந்தார்.

1 comment for “வேதாளம்

  1. January 4, 2022 at 12:49 am

    இவ்வாண்டின் முதல் சிறுகதையாக வாசித்த கதை. வாசித்து முடிக்கவும், அவ்வேதாளம் என்னிடம் தொற்றிக்கொண்டதொரு உணர்வு.

    அபத்த நகைச்சுவையாக தொடர்ந்த கதை, அதன் முடிவில் கொடுத்திருக்கும் அதிர்ச்சியைக் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. வலது கையின் அழகையும் அதன் வடிவையும் காட்டியவாரே நாம் அசந்த நேரம் இடது கையால் சட்டென நம் கையைத் தட்டிவிட்ட போன்ற உணர்வு.

    காவல் நிலையத்தில் இருக்கும் கைதி தாணூலிங்கத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பு காண்ஸ்டபல் சடாட்சரம் கைக்கு வருகிறது. கைதியுடன் பேருத்து நிறுத்தத்திற்கு செல்கிறார்கள். அதற்கு முன் டீ கடைக்கு செல்லவும் இன்று பேருந்து வராது என தெரிந்ததும் வேறு வழியின்றி அடுத்த நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு ஆறு கிழோ மீட்டர் நடக்க வேண்டும். பாதி வழி நடந்ததும் ஏற்படும் அசம்பாவிதம் நமக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

    கதைகளுக்கு வசனம் எவ்வளவும் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இக்கதை வழி அறிய முடிகிறது. இக்கதையில் காண்ஸ்டபிலுக்கும் திருடனுக்கும் இடையே நடக்கும் உரையாடலை சிரிக்காமல் கடக்க முடியவில்லை. இந்த சிரிப்புத்தான் கதை முடிவில் நமக்கு வலியாக மாறி விளையாட்டு காட்டுகிறது.

    “சின்னப்பிள்ளைகள் தூக்கச்சொல்லி செல்லமாகக் கூப்பிடுவதுபோல அதன் கை தூக்கப்பட்டிருந்தது.” என்ற வாக்கியத்தை வாசித்ததும் ஏனோ குற்றவுணர்ச்சி நம்மையும் பிடித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...