நாவல் முகாம்: புதிய பங்கேற்பாளர்களின் அனுபவம்

கடந்த 26/2/2022-ஆம் திகதி தொடங்கி 27/2/2022-ஆம் திகதி வரை வல்லினம் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்ட நாவல் முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இதுவே நான் பங்கேற்கும் முதல் நாவல் முகாமாகும். அதிகம் சிறுகதைகள், கவிதைகளைச் சார்ந்த பட்டறைகளில் பங்கெடுத்துக்கொண்டிருந்த எனக்கு, நாவலைக் குறித்து நடத்தப்பட்ட இந்த முகாம் முற்றிலும் பல புதிய அனுபவத்தையே தந்தது.

‘நாவல் என்றால் என்ன?’, ‘நாவலின் வடிவம் என்றால் என்ன?’, ‘நாவலின் உட்கூறுகள் யாவை?’, ‘நாவலின் வகைகள் யாவை?’, ‘நாவலை எவ்வாறு திறனாய்வு செய்வது?’ என பல கேள்விகளுக்குப் பொதுவான விளக்கங்களை இதற்கு முன்பே நான் அறிந்திருந்தாலும், இவ்வினாக்களுக்கான மற்றொரு புதிய பார்வையையும், பார்க்க தவறிய சில உட்கூறுகளையும் எழுத்தாளர் சு.வேணுகோபால் மற்றும் எழுத்தாளர் ராஜகோபால் அவர்கள் வழங்கிய விளக்கங்களின் வழி என்னால் மேலும் புரிந்துகொள்ள முடிந்தது.

எனது பார்வையில் இந்த முகாமில், நான் புதியதாக அறிந்த கூறுகளிள் ஒன்று நாவலின் உள்ளீடுகளான அனுபவங்கள், தரிசனங்கள் மற்றும் தத்துவங்களே ஆகும். அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே கதைகளை எழுதிவிடலாம் என்ற எண்ணம் எனக்குள் பல நேரங்களில் எழுந்துள்ளது. கதைகள் எழுதுவதற்கு மூலதாரமே அனுபவம்தான் என்ற எண்ணமும் எனக்கு இருந்தது. ஆனால், எழுத்தாளர் ராஜகோபால் அவர்கள் வழங்கிய விளக்கம் எனது எண்ணத்தை மாற்றியமைத்தது. நாம் பார்க்கும் அல்லது அனுபவித்த அனுபவத்தைப் புனைவுகளாக எழுதினால், அது நாவலாக அமையாது, மாறாக அனுபவப் பகிர்வாக மட்டுமே அமையும் என்பதனை உணர்ந்து கொண்டேன். நாம் பார்த்து உணர்ந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பல வினாக்களை எழுப்பி, அதற்கான விடைகளைத் தேடிச் செல்லும் பயணமே புனைவுலகத்தில் நல்லதொரு நாவலை உருவாக்கிட முடியும்.

அதோடு, தரிசனம், தத்துவம் போன்ற சொற்களை அன்றாட வாழ்வியலில் பயன்படுத்திருந்தாலும், நாவலின் அடிப்படையில் தரிசனம் என்றால் என்ன, தத்துவம் என்றால் என்ன என்பதனையும் அறிந்து கொண்டேன். தத்துவம் என்பது நாவலில் பயணிக்கும் கதாபாத்திரங்களின் வெவ்வேறு முரணான எண்ணங்களின் விவாவதமாகும். அந்த விவாதங்களின் வழி அடையக்கூடிய உண்மையே நாவலில் தரிசனம் எனப்படுகிறது. இதுவரையில் வாசித்த நாவலில் கண்டறிந்த தரிசனம், தத்துவத்தைக் குறித்து வினா எழுப்பும் பொழுதான்,   இதுவரையில் நான் இக்கூறுகளுக்கேற்றவாறு நாவல்களை அணுகவில்லை என்பதனை உணர்ந்தேன். இனி வரும் காலங்களில் நாவலை வாசிக்கும் பொழுது, இக்கூறுகளை நினைவில் கொண்டு ஒரு நாவலை அணுக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

தொடர்ந்து, ஐந்து நாவல்களைக் குறித்து நிகழ்த்தப்பட்ட கலந்துரையாடல் மேலும் எனக்குள் புதிய சிந்தனையை உருவாக்கியது. வாசிக்கும் பழக்கத்தைச் வழக்கமாக்கிக்கொண்டிருந்தாலும், அதனை வாசித்து விவாதிக்கும் முறையை இக்கலந்துரையாடல்களின் வழி அறிந்தேன். ஒவ்வொரு நாவல் அல்லது நூல்களை வாசிப்பதை நான் பழக்கமாகக் கொண்டிருந்தாலும், வாசித்த நாவல் அல்லது நூல்களைச் சார்ந்த கருத்துகளை முன்வைக்கும் பொழுது, கரு, துணைக்கரு, படிப்பினை, மொழிநடை, பின்னணி போன்ற அடிப்படை கூற்றுகளை மையமாகவே கொண்டு பொது கருத்தினை நான் முன்வைப்பேன். ஆனால், நாவலைக் குறித்து இம்முகாமில் கலந்துரையாடிய சமயத்தில் சிலர் துல்லியமாகவும் நுட்பமாகவும் கருத்துகளை முன்வைக்கும் பொழுதுதான், நான் நாவலில் பார்க்கத் தவறிய சில இடங்களை அறிந்துகொண்டேன். அதில் முக்கியமாக நாவலில் காணப்படும் நுண்தகவல்களும் ஏரணச் சிந்தனைகளையும் நான் காண தவறவிட்டுள்ளேன் என்பதனை உணர்ந்தேன். நாவலை வாசிக்கும் பொழுது அதனை உய்த்துணர்ந்து இடையிடயே கேள்விகள் எழுப்புவதும் மறுவாசிப்புச் செய்வதன் அவசியத்தையும் உணர முடிந்தது.

படைப்பாளர்கள், வாசகர்கள், புதிய வாசகர்கள், புதிய படைப்பாளர்கள் என கூடியிருந்த இந்த முகாமை மேலும் சுவாரஸ்யப்படுத்தியது இருவழி தொடர்பாடல்தான் என நான் கருதுகிறேன். ஒருவர் கூறும் கருத்திலிருந்தே வினாவைத் தொடுத்து வினா எழுப்பிய முறை என்னை அதிகமாகவே சிந்திக்க வைக்கச் செய்தது. திடீரென்று கேள்விகளை என்னிடம் கேட்கும் பொழுது தடுமாறிய நிலையிலேதான் நான் எனது கருத்துகளை முன்வைத்தேன். இருப்பினும், கலந்துரையாடலின் பொழுது கையாண்ட இந்த முறை பங்கேற்பாளர்களின் பலதரப்பட்ட பார்வைகளையும் கருத்துகளையும் வெளிக்கொணர வைத்துச் சிந்திக்கச் செய்ய வைத்தது.

இந்த முகாமின் மற்றொரு சிறப்பாக நான் பார்த்தது, இளம் படைப்பாளர்களுடன் நடந்தப்பட்ட கலந்துரையாடல்தான். இளம் படைப்பாளர்கள் அவர்களின் கருத்துகளை முன் வைக்கும் முறையில் தன்நம்பிக்கையோடு தைரியமும் காணப்பட்டது. கேட்கப்படும் கேள்விகளுக்கு மிக தெளிவான விளக்கத்தைக் கூறியது இந்தக் கலந்துரையாடலை மேலும் பயனாக்கியது. அதோடு, அவர்கள் எடுத்துரைத்த சிந்தனைகளை, அடுத்த முறை ஒரு படைப்பினை வாசிக்கும் பொழுது, அதனை நாமும் கையாள வேண்டும் என்ற எண்ணமும்  எனக்கு உதித்தது.

இலக்கியப் படைப்புகளை எழுத்துவதற்கு முன், நான் ஒரே வகையான நாவலையோ நூலையோ வாசிக்காமல், பலதரப்பட்ட நூல்களை வாசித்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திண்ணமாக இருக்கும் இக்காலக்கட்டத்தில், இந்த நாவல் முகாமில் கலந்து கொண்டது எனக்கு பல வகையில் பயனாகவே அமைந்தது. வாசிப்பதோடு நிறுத்திவிடாமல், நாவலின் உட்கூறுகளை அலசி ஆய்வதும், அதனை விவாதிப்பதும், விவாதிக்கும் பொழுது எதன் அடிப்படையில் விவாதிக்க வேண்டும் என்பதனைக் குறித்து இந்த முகாமில் நான் அறிந்து கொண்டேன். இனி வரும் காலங்களில் நான் வாசிக்கும் நாவல்களில், இத்தனை நாட்களாக நான் காண தவறிய கூறுகளை இனிமேல் கண்டறிய முயற்சி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாகவும் உள்ளேன். ஆகவே, எந்தவொரு இறுக்கமான சூழ்நிலையின்றி நடத்தப்பட்ட இந்த நாவல் முகாம், வாசகனான எனக்கு பல வகையில் பயனுள்ளதாகவே அமைந்தது.

ஷாலினி

கடந்த 26, 27 பிப்ரவரி வல்லினத்தின் ஏற்பாட்டில் மிகவும் பயனுள்ள நிகழ்வாக நாவல் முகாம் நடந்தேறியது. பெருந்தொற்றுக்கிடையில் பாதுகாப்பாக நிர்ணயித்துள்ள நிர்வாக நடைமுறையைப் பின்பற்றி, தைப்பிங்கில் அமைந்திருக்கும் தங்கும் விடுதி ஒன்றில் இம்முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 28 பங்கேற்பாளர்கள் இடம்பெற்றனர். பலரும் இளைஞர்கள்.

இரண்டு நாள் பயிலரங்கான இதில் முழுமையாகவே நாவலை மையமாகக் கொண்டு அரங்கேறியது. இந்தப் பயிலங்கம் ஐந்து நாவல்களை ஒட்டி வாசகர்களின் கலந்துரையாடலாக இருந்தது. மிச்சமிருப்பவர்கள், ரிங்கிட், கையறு, அக்கினி வளையங்கள் மற்றும் சிகண்டி ஆகிய நாவல்கள் பேசப்பட்டன. இந்த ஆய்வுபூர்வமான அறிவார்த்தமான உரையாடல், வாசகர்களின் பல ஐயங்களைக் களையெடுத்ததோடு புதிய தகவல்களையும் பரிமாறும் அங்கமாக அமைந்திருந்தது. இறுக்கம் இல்லாமல் கருத்து சுதந்திரத்துடன் நடைபெற்ற இந்த அங்கம்,  படைப்பாளிக்கும் வாசகனுக்குமே இருக்கும்  திறந்த மனதுடன் கருத்துகளை ஏற்கும் தன்மையைக் காட்டியது. குறை நிறைகளை ஏற்றுக்கொள்ளும் மனமே குறையற்ற நிறைவான படைப்புகளை உருவாக்கும்.

அடுத்ததாக, பயிலரங்கின் முத்தாய்ப்பாக விமர்சகர் இராஜகோபாலன் அவர்களின் நாவல்பற்றிய பார்வையும் எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களின் நாவல் விமர்சனமும் அமைந்திருந்தது. இராஜகோபாலன் நாவல்பற்றிய செறிவான விளக்கம், நாவல் திறனாய்வுக்குப் புதிய பார்வையைக் கொடுத்தது. நாவலில் இருக்கும் அனுபவம், தத்துவம், தரிசனம் எனும் கூறுகளை அவர் விவரித்த முறை, வாசகனுக்கும் படைப்பாளிக்கும் கூர்மையான பார்வையைக் கொடுக்கூடியது. நாவல் முழுவதும் வரும் காட்சிகளானது எழுத்தாளனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவங்களின் தொகுப்புகள். அவை வெறுமனே மனப்பதிவுகள் அல்ல.  இந்த அனுபவத்தை ஒட்டி திரளும் கருத்துகளின் மோதலில் தத்துவங்கள் தோன்றுகின்றது. தொடர்ந்து, கதாப்பாத்திரங்களின் முரண்பாடான தத்துவங்களின் முரணியக்கத்தில்  பிறப்பதே தரிசனமாகும். தரிசனம் என்பது நாவலில் துலங்கி வருவது. அது வெளிப்படையாக ஒரு கருத்தாக அல்லது கூற்றாக வெளிப்படுவதல்ல. நாவலின் தரிசனமே நாவலின் முழு கதைநடைக்கும் காரணமாக அமையும் என அவரது விளக்கம் அமைந்திருந்தது. இவ்வளவு கூரிய கருத்துகளை விவரித்துப் பங்கேற்பாளர்களுக்கு நாவல்பற்றிய தெளிவைப் பிறக்க வைத்தார் இராஜகோபாலன் அவர்கள்.

தொடர்ந்து, சு.வேணுகோபால் முகாமில் கலந்துரையாடப்பட்ட நாவல் குறித்து மிகவும் செறிவான விளக்கத்தை வழங்கினார். அவர் ஒவ்வொரு நாவலின் ஆதி முதல் அந்தம் வரையில் கோர்வையான கருத்துகளை வெளிப்படுத்தினார். அவர் நாவலில் காட்டப்பட்ட நுண்ணிய புள்ளிகளையும் அறிவுப்பூர்வமாகக் கவனித்து கருத்துகளை நிறுவுவது ஆச்சரியத்தை வழங்கியது. இவ்வகையில் வாசகனான எனக்கும் ஒரு நாவலைப் எப்படி அணுகுவது என்ற சிந்தனைப் பிறந்தது.

இரண்டாம் நாள் நிகழ்வில், புதிய பங்கேற்பாளர்களின் அறிமுகம் நடைப்பெற்றது. புதிய பங்கேற்பாளர்களின் பங்கேற்பதோடு விட்டுவிடாமல், அவர்களின் கேள்விகளுக்கும் தயக்கங்களுக்கும் பதில் கிடைக்கவும் ஒரு வாய்ப்பாக இவ்வங்கம் அமைந்தது. அதனைத் தொடர்ந்து, இராஜகோபாலன் மற்றும் திரு சு.வேணுகோபால் அவர்களின் நேரலை சந்திப்பு நடந்தேறியது. எவ்வகை கேள்விகளுக்கும் சீரிய கருத்துகளைக் கூறி ஐயங்களைத் தெளிவு பெற செய்தனர்.

இறுதியாக, முக்கியமான அங்கமாக வல்லினத்தின் விருது விழா நடந்தது. மா. ஜானகிராமன் அவர்களுக்கும் அபிராமி கணேசன் அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மா. ஜானகிராமன் அவர்களின் நெஞ்சை உருக வைக்கும் உரை பலரைக் கண்கலங்க வைத்தது. தமிழ் சமூகத்துக்கு தாம் ஆற்றிய தொண்டானது எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் செய்கின்ற சேவையாக அவர் குறிப்பிட்டார். அதோடு அபிராமி கணேசன் தனது ஆய்வியல் கட்டுரைகள் மூலம் சாதனை படைத்துள்ளதும் அறிய முடிந்தது. அவர் தனது ஆய்வியல் கட்டுரைகளை சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வழங்கும் வண்ணம் அமைதிருந்ததை அவர் உரையில் குறிப்பிட்டார்.

இந்த இரண்டு நாள் அறிவுக்கடலில் நீந்துவதற்குக் கிடைத்த வாய்ப்பு, நாவலின் பெருங்கடலில் சிறு துளியைப் பருகியதுப் போல் இருந்தது.

மீரா சீனிவாசன்

தலைநகரில் ஒரு தேசியப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரியும் நான் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, அவ்வப்போது நடைபெறும் சில நிகழ்வுகளில் கலந்து கொள்வதுண்டு.

அதைப்போல, கடந்த 26-ஆம் திகதி பிப்ரவரி மாதம் வல்லினம் ஏற்பாட்டில் நடந்த  ‘நாவல் முகாம்’  ஒன்றில் கலந்து கொண்டேன். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக ம.நவீன் அவர்கள் செயல்பட்டார்.

நாவல் முகாமிற்குச் செல்வதற்கு முன் நாவல் குறித்த அறிவு எனக்குள் குன்றியதாகவே இருந்தது. ஒரு நாவலை வாசித்தப் பிறகு நானும் பிறரைப் போலவே கதைக் கருவைப் புரிந்து கொண்டு கதையின் சாரத்தை உள்வாங்கிக் கொள்வேன். பிறகு, அந்நாவலில் காணப்படும் சில விவரங்களையும் புரிந்து கொள்ள முற்படுவேன். ஆனால், இம்முகாமில் கலந்து கொண்ட பிறகு நாவலுக்கான சில அடிப்படைக் கூறுகளைக் கற்றுக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நாவலில் காணப்படும் கதையில் அனுபவம், தத்துவம், தரிசனம் ஆகிய மூன்று கூறுகளை எப்படி அறிந்து புரிந்து கொள்ளலாம் என்பதைப் பற்றித் தெளிவடைந்தேன்.

ஐந்து குறுநாவல்களைப் பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தேன். காரணம் அறிவுத் தேடலுக்கான உரத்தை அக்கலந்துரையாடலின்வழி பெற்றுக் கொள்ள வழி கிடைத்தது. ஒரு நாவலில் உள்ள கதையையும் கதையோட்டத்தையும் எவ்வாறெல்லாம் உள்வாங்கிக் கொள்ளலாம் என்பதை மற்றவர்கள் கலந்துரையாடியதன்வழி கற்றுக் கொண்டேன். மேலும், ஒரு நாவலைத் திறனாய்வு செய்வதற்கு நமக்குப் போதிய அளவிலான வாசிப்புப் பழக்கங்களும் மிக முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டேன். சிறுகதை, நாவல் ஆகிய படைப்புகளைப் படைப்பதற்கும் வாசிப்புப் பழக்கமானது மிகவும் முக்கியம். ஆக, சில மாதங்களாக வாசிப்புப் பழக்கத்தைவிட்டுத் தள்ளியிருந்த எனக்கு இந்த முகாம் மீண்டும் வாசிப்பதற்கான ஆவலைத் தூண்டியது. வேலைப்பளு குறைவாக இருக்கும் பட்சத்தில் வாசிக்க வேண்டும் எனக் கொள்கை கொண்டுள்ளேன்.

ஆக மொத்தத்தில், இந்த முகாமானது என்னுள் சில நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற முகாம்கள் வரக்கூடிய காலங்களில் நடக்குமேயானால் நிச்சயம் கலந்து கொள்ள முயற்சிப்பேன்.

தினேஸ்வரி தங்கையா

பிப்ரவரி 26-27 ஆகிய இரண்டு நாள்கள், தைப்பிங் நகரில் நாவல் முகாம் வல்லினக் குழுவால் நடத்தப்பட்டது. அந்த இரண்டு நாள் நாவல் முகாம், மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் நடந்தது. இதில் ஒரு பல்கலைக்கழக மாணவனாக நாவல் பற்றிய புரிதலை ஒரு வாசகனாக இருந்து எவ்வாறு பார்ப்பது என்பதை ஆழமாகவும் தெளிவாகவும் அறிந்து கொண்டேன்.

ஓர் இலக்கியம் அதிலும் குறிப்பாக நாவல் இலக்கியம் என்பதற்கு ஒரு வரையறையோ விதிமுறைகளோ கிடையாது என்பதாகவே எண்ணமிருந்தது. ஆனால், நாவல் என்பது தத்துவத்தின் கலைவடிவம் என்பதை அங்குதான் அறிந்துகொண்டேன்.  சமூகம் கொண்டுள்ள கூட்டு விவாதத்தின் வெளிபாடாக நாவல் உருவாவதை மெல்ல உள்வாங்கி கொண்டேன்.

விமர்சகர் ராஜகோபாலன் வழங்கிய நாவலின் உட்கூறுகள், புற வடிவம் போன்ற தகவல்கள் ஒரு நாவலை எவ்வாறு எல்லாம் ஒரு வாசகன் அணுக முடியும் என்பதை அழகுற எடுத்துரைத்தது. ரிங்கிட், அக்கினி வளையங்கள், கையறு, மிச்சமிருப்பவர்கள் ஆகிய நாவல்களை வேறொரு பார்வையில் நானே சிந்திக்காத பார்வையில் சு. வேணுகோபால் அவர்களின் பகிர்வு என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்த நாவல் முகாமுக்கு முன்னமே நாவல்களை வாசிக்கப் பணிக்கப்பட்டிருந்ததால் நான் வாசித்துவிட்டே சென்றிருந்தேன்.

அடுத்து, முகாமில் அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர். வட்ட வடிவில் அமர்த்தப்பட்டு  மூத்த எழுத்தாளர்கள் முதல் இளையோர் வரை தத்தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இதில் வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப் பக்குவம்  எல்லோருக்கும் இருந்தது. அந்த முதிர்ச்சியைக் காண மிகவும் நன்றாக இருந்தது.

புதிய வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில்  வழங்கும் அங்கமாக ஒரு அங்கம் இருந்தது. அதில் எனது கேள்விகளையும் முன்வைத்தேன். அதற்கான தெளிவான பதில்கள் கிடைத்தன.

இம்முகாமில் எனக்கும் பல இலக்கிய வாசக நண்பர்கள் கிடைத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல், இரண்டாம் நாள் வல்லின விருது விழாவில் மா. ஜானகிராமன் என்ற ஒரு மலேசியத் தமிழ் எழுத்தாளரை அடையாளம் கண்டு அவருக்கு விருது வழங்கியது பாராட்டுகுரியது.  

திவாகர், உப்சி பல்கலைக்கழகம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...