சை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம்

1567261962_tmp_சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது வழங்க வேண்டும் என முடிவெடுத்தது மே 12 ஆம் திகதி. அ.பாண்டியன்தான் அவர் பெயரைப் பரிந்துரை செய்திருந்தார். சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது கொடுப்பதின் அவசியங்களை கொஞ்சம் அலசினோம். குழுவில் மறுப்பெதுவும் எழவில்லை. எழ வாய்ப்பும் இல்லை.

வல்லினம் தொடங்கப்பட்டது முதலே சை.பீர்முகம்மது அவர்களுடன் இணக்கமும் பிணக்கமும் தோன்றித்தோன்றி மறைந்துள்ளன. விருதென்பது எல்லா விமர்சனங்களையும் அழித்துவிட்டு வழங்கப்படும் ஒன்றல்ல. ஓர் ஆளுமையை அவர்மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களுடன் அணுகி; அவற்றுடனேயே அவரை ஏற்றுக்கொண்டு கௌரவிப்பது. அத்தனை விமர்சனங்களுக்கும் அப்பால், விருது பெறும் துறையில் ஒருவரது ஆளுமை மேம்பட்டு இருக்க வேண்டும். சை.பீர்முகம்மதுவின் ஆளுமை அத்தகையதுதான் என்பது எங்களின் பொதுவான அபிப்பிராயமாக இருந்தது.

1942இல் பிறந்தவர் சை.பீர்முகம்மது. தனது பன்னிரெண்டாவது வயதிலேயே அவருக்கு இலக்கிய வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டிருந்தாலும், அவ்வார்வம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நவீன இலக்கியத்தின் பக்கம் திரும்பி அவரை எழுத்தாளராகப் பரிணமிக்க வைத்தது. மிகக் காலத்தாமதமாகத்தான்  (1984இல்) அவரது முதல் சிறுகதை தொகுப்பான ‘வெண்மணல்’ வெளியீடு கண்டது. அந்த வெளியீட்டுக்குப் பிறகு  சுமார் பதினான்கு ஆண்டுகள் (1984 – 1997) அவர் எழுத்தில் கவனம் செலுத்தாமல் வாசகனாக மட்டுமே தன்னைப் புதுப்பித்து வைத்திருந்தார். தொழில் நிமித்தமாக 1977, 1978ஆம் ஆண்டுகளில் இளையராஜா, ஏ.எம்.ராஜா, ஜிக்கி போன்றவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.

மலேசிய இலக்கியத்தில் 1990கள் சை.பீர்முகமதுவின் இரண்டாவது பிரவேசம் நிகழ்ந்த காலம். சோம்பிக் கிடந்த மலேசிய நவீன இலக்கியச் சூழலைத் தனி மனிதனாக இழுத்துச் செல்லும் பெரும் வீரியத்துடன் அவரது நுழைவு இருந்தது.  தொழில் காரணமாக அத்தனை ஆண்டுகள் எழுதாமல் இருந்தவர், மீண்டும் தொடையைத் தட்டிக்கொண்டு ஒரு மல்யுத்தவீரனைப போல மலேசிய இலக்கியச் சூழலில் குதித்தார்.  1997 முதல் 1999 வரை அவரது பெயர் கவனப்படுத்தப்பட்டு நாளிதழ்களில் தொடர்ந்து வந்துகொண்டிருந்ததை நான் வாசித்ததுண்டு.

நான் அப்போது இடைநிலைப்பள்ளி மாணவன். ஒவ்வொரு வாரமும் வீட்டில் தமிழ் நேசனும் மலேசிய நண்பனும் வாங்கிவிடுவார்கள். மலேசிய நண்பனில் சை.பீர்முகம்மதுவின் இலக்கியச் செயல்பாடுகள் நன்கு கவனப்படுத்தப்பட்டன. 1997இல் வெளிவந்த அவரது ‘பெண் குதிரை’ நாவல் குறித்த பேச்சுகள் கெடா மாநிலத்தில் உள்ள ஒரு கம்பத்தில் வாழ்ந்துகொண்டிருந்த என் வரை வந்து சேர்ந்தது. அப்போது எனக்கு வயது 15. ஒரு மலேசிய எழுத்தாளர் அவ்வளவு பிரபலமாகப் பேசப்பட்டதை நான் அறிந்தது அதுவே முதன்முறை. எழுத்தென்பது பிரபலத்திற்கான ஒரு வழி என மட்டுமே நம்பியிருந்த வயதில்  அந்நிகழ்வு பெரும் ஊக்கத்தைக் கொடுத்தது.

1999இல்தான் சை.பீர்முகம்மதுவை முதன்முறையாக நேரில் பார்த்தேன். எம்.ஏ.இளஞ்செல்வனின் இரு நூல்களின் பதிப்பாசிரியர் என்ற முறையில் வந்திருந்தார். நல்ல உயரம். தடிமனான மீசை. அவரைப் பற்றி அறிமுகம் செய்யும்போது  “நோன்பு மாதம் மட்டுமே நல்ல முஸ்லிமாக இருக்கும் சை.பீர்முகம்மது” என அவைத் தலைவர் சொல்லவும் அரங்கில் சிரிப்பொலி கேட்டது. எம்.ஏ.இளஞ்செல்வன் சை.பீர்முகம்மது என்ற பெயரில் பீர், மது என எல்லாம் இருப்பதாகவும் கொஞ்சம் மரியாதையாக விளித்தால் ‘அவர்கள்’ என்பதில் கள்ளும் வந்துவிடும்; எனவே அவர் எப்போதும் தனக்கு  நெருக்கமானவர் என்று கூறினார்.  சை.பீர்முகம்மது குதூகலமாகச் சிரித்துக்கொண்டிருந்தார்.

அது நான் கலந்துகொண்ட முதல் புத்தக வெளியீடு என்பதால் எல்லாமே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. சை.பீர்முகம்மதுவின் தோற்றத்துக்கும் அவரது குழந்தைத்தனமான சிரிப்புக்கும் பொருத்தமே இல்லை. எம்.ஏ.இளஞ்செல்வன் படைப்புலகை முன்வைத்து அன்று சை.பீர்முகம்மது இலக்கியத்தில் உள்ள ஒழுக்க மீறல்கள் பற்றிப் பேசினார். எஸ்.பொவினுடைய சில புனைவுகளை மேற்கோள்காட்டி இளஞ்செல்வன் எழுத்துகளில் உள்ள பாலியல் தெறிப்புகள் இலக்கிய வாசகன் மட்டுமே அறியக்கூடியவை என்றும்; இலக்கியத்தின் தன்மை அறியாதவர்கள் அவை கொடுக்கும் அதிர்ச்சியைப் பொருட்படுத்த வேண்டியதில்லை எனவும் அவர் பேச்சு அமைந்தது. எழுத்தாளன் சமூகம் கட்டமைத்த ஒழுங்கை ஒப்புவிப்பவன் அல்ல என்ற அவரது சிந்தனை ஆரம்பநிலை வாசகனாக இருந்த எனக்கு பெரும் மன எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.

நிகழ்ச்சி முடிந்தவுடனேயே வெளியே சென்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து ஸ்டைலாக இழுத்துக்கொண்டிருந்தவரைப் பார்த்தபோது வியந்தேன். அவர் மீது ஈர்ப்பை ஏற்படுத்திய காட்சி அது. நான் அப்போதுதான் மு.வ வை வாசிப்பதை விட்டுவிட்டு ஜெயகாந்தனை அணுகியிருந்தேன். ஒரு குழப்படியான மனநிலையில்தான் சுற்றிக்கொண்டிருந்தேன். எழுத்தாளன் என்பவன் நல்லனவற்றை போதிக்கும் ஓர் அவதார புருஷன்போல பவனிவர வேண்டுமென மு.வ உருவாக்கிய மனநிலையை ஜெயகாந்தன் மாற்றிக்கொண்டிருந்தார். அன்று நிகழ்ச்சியில் சை.பீர்முகம்மதுவின் பேச்சும் செயலும் ஜெயகாந்தனை வலியுறுத்துவதாகவே அமைந்தது. வினுசக்கரவர்த்திபோல இருந்த அவரை நெருங்கிபேசத் தயக்கமாக இருந்தது. ஆனால் எழுத்தாளனிடம் இருக்க வேண்டிய நிமிர்வையும் கம்பீரத்தையும் நான் முதன்முதலாக சை.பீர்முகம்மதுவிடம் அறிந்துகொண்டேன்.

2000இல் ‘வேரும் வாழ்வும்’ சிறுகதைத் தொகுப்பை வெளியீடு செய்ய ஜெயகாந்தனை அழைத்து வந்து நாடு முழுவதும் இலக்கியக் கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார் சை.பீர்முகம்மது.  ஜெயகாந்தனே எனக்கு அப்போது முதன்மை நாயகன். அதனாலேயே சை.பீர்முகம்மதுவை  எனக்கு மேலும் பிடித்துப்போனது. ஒரு பெரும் ஆளுமையை முன்னிறுத்தி, தனது நூலை வெளியிடாமல் மலேசிய எழுத்தாளர்களின் பெருந்தொகுப்பான ‘வேரும் வாழ்வும்’ நூலை வெளியிடுவது ஆச்சரியமாக இருந்தது.  எம்.ஏ.இளஞ்செல்வனுடன் எனக்கு நேரடிப் பழக்கம் இருந்ததால் அவரது அப்பணி எத்தகைய அலையை ஏற்படுத்தக்கூடியது என்பதை அவர் விளக்கம் வழி ஓரளவு புரிந்துகொண்டேன்.

அதன் பின்னர் தனது ‘மண்ணும் மனிதர்களும்’ நூல் வெளியீட்டுக்காக எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, வாசந்தி போன்றவர்களை தமிழகத்திலிருந்து அழைத்து வந்தார். நாட்டின் சில இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார். சிங்கப்பூர் இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்த சிற்பி பாலசுப்பிரமணியம், அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன் போன்றவர்களையும் மலேசியாவுக்கு அழைத்து வந்து இலக்கியக் கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்தார்.  இதையெல்லாம் ஏன் செய்கிறார் எனப் புரியாமல் தூரத்திலிருந்தே அவரைக் கவனித்து வந்தேன்.

படிவம் ஐந்து முடித்தவுடன் முதன்முதலாக கெடாவிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதெல்லாம் கெடாவிலிருந்து கோலாலம்பூர் செல்வது வேறு நாட்டுக்குச் செல்வதுபோல. வழக்கமான சுற்றுலாவாக இல்லாமல் அனைத்து நாளிதழ்களிலும் நுழைந்து பார்த்துவிட வேண்டுமென்ற தீராத வேட்கையில் இருந்தேன். எழுத்தாளராவதற்கான களம் நாளிதழென தவறாக நினைத்துக்கொண்டிருந்த வயது அது. அப்போதுதான் ஒரு சாலையோரக் கடையில் ‘பெண் குதிரை’ எனும் நாவலைப் பார்த்தேன். அது சை.பீரின் நாவல். அந்த நாவலின் பெயர் என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததால் அப்பாவிடம் பத்து ரிங்கிட் பெற்று அந்நாவலை வாங்கினேன். உடனடியாக வாசித்தும் முடித்தேன். அந்நாவல் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியையும் கிளுகிளுப்பையும் கொடுத்தது. கமலவேணி என்ற பெண்ணின் பாலியல் வேட்கையை மையப்படுத்திருந்த நாவல் வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தது. ‘இப்படியெல்லாம் மலேசியாவில் எழுதிவிட முடியுமா’ என்று ஆச்சரியத்தையும் ‘எழுதலாம்’ என்ற துணிச்சலையும் ஒருங்கே உருவாக்கினார்  சை.பீர்.

27.1.2001இல் மீண்டும் சை.பீர்முகம்மதுவை கெடாவில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல’ நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி. அவர்தான் அந்நாவலின் பதிப்பாளர். அப்போது படிவம் 6 படித்துக்கொண்டிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சை.பீர்முகம்மதுவின் ‘மண்ணும் மனிதர்களும்’ நூலை வாங்கினேன். சை.பீர்முகம்மதுவின் அன்றைய பேச்சு இலகுவாக இருந்ததால் நெருங்கிச் சென்று நூலில் கையொப்பம் வாங்கும் மனநிலையைக் கொடுத்தது. அப்போதெல்லாம் ஒவ்வொரு வாரமும் நயனத்தில் என் கவிதை வெளிவரும். நயனத்தில் அவ்வாறு கவிதை வந்துவிட்டாலே அவர் மலேசிய இலக்கிய உலகில் பிரபலம் என்று நம்பிய குழுவில் நானும் இருந்தேன். என் பெயரைச் சொன்னேன். அவருக்குத் தெரியவில்லை. அதற்குமேல் என்னை அறிமுகம் செய்துக்கொள்ள சங்கடமாக இருந்தது. அவரது ஆளுமைக்கு முன் நான் மிகச் சிறியவன் எனத் தோன்றியது. உரையில் அவர் குறிப்பிடும் எழுத்தாளர்கள் பலரையும் நான் கேள்விப்படாமல் இருந்தேன்.  நெரித்துக்கொண்டே இருந்த புருவம் அவரைக் கோபக்காரராகக் காட்டியது. சிறு புன்னகையுடன் விடைபெற்றேன்.

எழுதுவதிலும் வாசிப்பதிலும் ஆர்வம் தொடர்ந்து அதிகரிக்கவும் படிப்பெல்லாம் ஒன்றும் வேண்டாம் என படிவம் ஆறை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதே ஆண்டில் கோலாலம்பூரில் குடியேறினேன். படிவம் ஆறு படிக்கும் வாய்ப்புக் கிடைப்பது அரிதென்பதால் நான் அதைத் தொடராதது குடும்பத்திலும் நண்பர்கள் மத்தியிலும் அதிருப்தியைக் கொடுத்திருந்தது. பெ.ராஜேந்திரனின் வீடு (இன்று எழுத்தாளர் சங்கத் தலைவர்) கோலாலம்பூரில் நான் குடியிருந்த பகுதியில் இருந்ததால் அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்போது அவர் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர்.

அப்படி ஒரு தரம் சென்றபோது அவர் வீட்டின் வாசலில் சிகரெட்டை ஊதியபடி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். நெருங்கிச் சென்றபோது அவர் பீர்முகம்மது எனத் தெரிந்தது. நான் முதன்முதலாக அவரிடம் பேசியது அங்குதான். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். மன்னன் மாத இதழில் என் தொடர்கதை வெளிவருவதைச் சொன்னேன். அதுபோன்ற இதழ்களையெல்லாம் தான் படிப்பதில்லை என்று கூறியவர் தமிழகத்திலிருந்து வரும் நல்ல இலக்கிய இதழ்களை வாசிக்கச் சொன்னார். எது நல்ல இதழ் என்றேன். ‘காலச்சுவடு தெரியுமா?’ என்று கேட்டார். எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நிச்சயம் தான் மன்னன் மாத இதழை வாசிப்பதாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.

***

சை.பீர்முகம்மதுவை மீண்டும் நான் சந்தித்தது 2003இல். அதை என்னுடைய இரண்டாவது காலகட்டமாகச் சொல்லலாம். அப்போது நான் தீவிர கவிதை வாசகனாக இருந்தேன். பிரமிள், ஆத்மாநாம், பசுவைய்யா, தேவதச்சன், தேவதேவன் தொடங்கி அப்போது பிரபலமாக இருந்த மனுஷ்யபுத்திரன், யுவன், மாலதிமைத்ரி, சல்மா என இடைவிடாத வாசிப்பைக் கொண்டிருந்தேன். பல கவிதைகளை நினைவிலிருந்து ஒப்புவிக்கவும் மூளை பழகியிருந்தது.  1.5.2003இல் தொடங்கப்பட்ட தென்றல் வார இதழ் ‘விருட்சம் மாலை’ எனும் இலக்கியச் சந்திப்புகளை மாதம் ஒருமுறை நடத்தத் தொடங்கியிருந்தது.

அந்தக் கூட்டத்தை முன்னின்று வழி நடத்துபவராக சை.பீர்முகம்மது இருந்தார். அன்றைய சூழலில் தமிழ் இலக்கியத்தின் போக்குக் குறித்து அவரால் எளிமையாக விளக்க முடிந்தது. பல நல்ல கவிதைகளை நகல் எடுத்துப் பகிர்ந்து; வாசித்து அதன் கவித்துவத்தை விளக்குவார். அவ்விளக்கம் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். நானும் பா.அ.சிவமும் அவருக்கு சிற்சில மறுப்புகளை அவ்வப்போது வழங்குவோம். அது புதிய தலைமுறை எழுத்தாளர்கள் எழுந்து வந்த காலகட்டம். சை.பீர்முகம்மது அதை உற்சாகத்துடன் வரவேற்றார். தமிழில் தீவிரமாக இயங்கும் படைப்பாளிகள் பலருடன் அவருக்கு நல்ல தொடர்ப்பு இருந்தது. அவர்களில் யாரையெல்லாம் வாசிக்கலாம் என பரிந்துரைப்பவராக இருந்தார்.

விருட்சம் மாலையின் ஜனரஞ்சகமான போக்கில் காலவோட்டத்தில் உடன்படாமல் விலகிவிட்டாலும் சை.பீர்முகம்மது போன்ற படைப்பாளிகளுடன் உரையாடுவதற்கான அவர்கள் சிந்திக்கும் விதத்தை அறிவதற்கான சூழலை அமைத்துக்கொடுத்த வகையில் அம்முயற்சி முக்கியமானதே.

தொடர்ந்து பல பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போதெல்லாம் எனது படைப்புகள் ஏதாவது ஒன்றைக் குறித்து பாராட்டுவார். சமகாலத்தில் மலேசிய இலக்கியப் போக்கை அறியும் ஆர்வம் அவருக்கு எப்போதும் இருந்தது. புதிதாக யார்  மலேசியாவில் எழுதினாலும் அதை வாசித்து தன் கருத்துகளைப் பகிரவும் ஊக்கமூட்டவும் அவர் சுணக்கம் காட்டியதில்லை.

காதல் இதழை 2006இல் தொடங்கியபோது முதலில் சை.பீர்முகம்மதுவின் நேர்காணல் வர வேண்டுமென விரும்பினேன். அவரிடம் விரிவான உரையாடல் நடத்த அது ஒரு வாய்ப்பாக அமையக்கூடுமென நினைத்தேன். காதலில் இடம்பெற்ற சை.பீர்முகம்மதுவின் நேர்காணல் அவ்விதழுக்கு நல்ல தொடக்கமாக இருந்தது. அவரது இலக்கியத் தொடர்புகள் விரிவாக இருந்ததால் காதல் இதழுக்கும் தொடக்கத்திலேயே நல்ல அறிமுகம் கிடைத்தது.

காதல் நின்று வல்லினம் அச்சிதழ் தொடங்கியபோது மீண்டும் சை.பீர்முகம்மதுவின் பங்களிப்பை அதில் எதிர்பார்த்தேன். முதலில் படைப்பு ரீதியானது; அடுத்து பொருளாதார ரீதியானது. 30 எழுத்தாளர்களிடம் 100 ரிங்கிட் பெற்று வல்லினம் அச்சிதழைக் கொண்டுவருவதாகத் திட்டம். சை.பீர்முகம்மதுவின் குத்தகைத் தொழிலை அவரது பிள்ளைகள் கையிலெடுத்துத் தொடர்ந்ததால் பணம் கொடுப்பது சிரமம் எனச் சொல்லிவிட்டார். முதல் இதழ் வெளிவந்த பிறகு மீண்டும் சென்று பார்த்தேன்.  இதழைப் பார்த்த பிறகு வல்லினத்தின் மேல் நம்பிக்கை வந்திருக்க வேண்டும். மூன்றாவது இதழ் தொடங்கி நூறு ரிங்கிட் வழங்கும் நண்பர்கள் பட்டியலில் அவரும் இணைந்துகொண்டார். அவ்வகையில் ஒவ்வொரு இதழும் அவருக்கு 25 பிரதிகள் வழங்கப்பட்டன. அது பல மூத்த எழுத்தாளர்கள் கைகளில் கிடைக்க பீர்முகம்மதுவின் தொடர்புகள் உதவின.

ஐந்தாவது இதழில் (2008) தமிழகத்தில் அவர் பார்த்த நாடகம் குறித்த கட்டுரை ஒன்றை எழுதினார். நான் பார்த்து ரசித்த ஓர் எழுத்தாளரின் படைப்பை வல்லினத்தில் பிரசுரிக்க கிடைத்தது மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.  அதன் பிறகு வல்லினம் எட்டாவது இதழில் (இறுதி அச்சிதழ்) சை.பீர்முகம்மதுவின் படைப்பு பிரசுமானது.

வல்லினத்துடன் அவருக்கு இருந்த உறவில் கசப்பு ஏற்பட்டதும் அந்த இதழுக்குப் பிறகுதான்.

***

வல்லினம் அச்சு இதழ் தொடங்கியது முதல், திட்டவட்டமாக சில நிபந்தனைகளை எங்களுக்குள் விதித்துக்கொண்டோம். இலக்கியச் செயல்பாடுகளில் எப்போதும் அரசியல் தலைவர்களையோ தனவந்தர்களையோ முன்நிறுத்தக்கூடாது என்பது அதிலொன்று. ஒரு படைப்பிலக்கியவாதியின் இடம் அந்தச் சமூகத்தில் என்ன என்பது பற்றி பெரும்பாலும் அவர்கள் பெரிதாக ஒன்றும் அறிந்திருக்கப்போவதில்லை. அந்த மேடையில் வியாபித்திருக்கப்போவது  பணமும் அதிகாரமும்  மட்டுமே. புலவர்களுக்குக் கொடையளிக்கும் மன்னன் தோற்றத்தில் அமர்ந்துகொண்டு இலக்கியம் குறித்து அவர்கள் எடுக்கும் வாந்தியை ஏந்திச் செல்வதெல்லாம் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தோம்.இதன் பொருள் அரசியல்வாதிகள் கலந்துகொள்ள கூடாது என்பதல்ல. அவர்களில் நல்ல இலக்கிய வாசகர்கள் இருக்கலாம். ஆனால் கலை இலக்கிய மேடையில் கலைஞனே பிரதானமானவன்.

இந்தச் சூழலில்தான் 29.7.09இல் சை.பீர்முகம்மதுவின் ‘பயோஸ்கோப்காரனும் வான்கோழிகளும்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு கண்டது. நிகழ்ச்சியில் வல்லினம் குழுவினரைக் கண்ட அவர் மகிழ்ந்து போனார். அது உண்மையான மகிழ்ச்சி. யார் தனது வாசகன் என அவர் அறிந்தே வைத்திருந்தார்.

நிகழ்ச்சிக்கு  ம.இ.கா கட்சியின் அப்போதைய தலைவர் சாமிவேலு தலைமை தாங்கினார். அதுவே கொஞ்சம் சங்கடமாக இருந்தது. சை.பீர்முகம்மது அந்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் ‘சாமிவேலுவிற்கு எழுத்தாளர்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்’ என்று கூறியது கடும் அதிர்ச்சியாக இருந்தது.  ஜெயகாந்தனை மலேசியாவுக்கு அழைத்து வந்தவர், பாரதியை தன் ஞான ஆசானாகச் சொல்பவர் உதிர்க்கும் வார்த்தைகளா அவை என சங்கடம் ஏற்பட்டது. நிலையான எழுத்தாளன் எனும் கம்பீரத்துடன் மட்டுமே நான் பார்த்த சை.பீர்முகம்மது, பதவிகளால் அடையாளத்தை உருவாக்கிக்கொள்பவர்களை முன்னிறுத்துவது கடும் மனஉளைச்சலைக் கொடுத்தது. நிகழ்ச்சி முடிந்ததும் புறப்பட்டுவிட்டோம். மனம் முழுவதும் ஆற்றாமை. சிவம் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. அழைத்துப் பேசினேன்.  அவர் அது பெரும் பிழையல்ல என்பதாக வாதாடினார். எங்களுக்குள் வாக்குவாதம் முற்றி மனக்கசப்பு உருவானது.

ஒரு நவீன படைப்பாளி எப்போதும் அதிகாரத்துக்கு கடமைப்பட்டவனல்ல. மதம் / அரசாங்கம் போன்ற சமூக நிறுவனங்களிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, மக்கள் அல்லது ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்துவிட்ட, நவீன இலக்கியச் சூழலை அறிந்துகொண்ட ஒருவர் ஒருபோதும் அந்த வார்த்தையைச் சொல்லமாட்டார்.

படைப்பாளனைப் பாதுகாப்பதும் அவனுக்கான தேவைகளை நிறைவேற்றுவதும் முதிர்ந்த சிந்தனைகொண்ட அரசின் கடமை. அதற்கு அரசியல்வாதிகளின் வரம் தேவையில்லை. மலேசியாவில் தமிழ் இலக்கியத்துக்கு அத்தகைய சூழல் இல்லாதபட்சத்தில் அவர்களைப் பிரதிநிதிக்கும் கட்சிகள் அரசின் மானியம் கொண்டு கலை இலக்கியத்துக்கான தேவையை லாப நோக்கம் இல்லாமல்  நிறைவேற்ற வேண்டும். அம்மானியத்தை வழங்க நிபுணத்துவமான ஊழியர்களைக் கொண்ட அமைப்பு தேவை. இப்படி எழுத்தாளர்களின் இலக்கிய வளர்ச்சிக்கு துணை நிற்க கட்சியின் கீழே பொருத்தமான அமைப்பொன்றை உருவாக்கிவிட்டால் (தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் கலை இலக்கிய அறவாரியம் போல) அரசியல்வாதிகள் தாங்கள் செய்யும் கடமையை உதவியாகவோ சேவையாகவோ உருமாற்றம் செய்யும் வாய்ப்பு கிடைக்காது. இதன் காரணமாகவே அப்பெரும் பணியை யாரும் அமைக்கப்போவதில்லை. பிரச்னை இருக்கும்வரைதானே அரசியல் செய்ய முடியும்.

இப்படிக் கடமையைச் செய்வதற்காக அரசியல்வாதிகள் இலக்கிய மேடையைப் பயன்படுத்தி மொழிக்காப்பாளர்கள் தோரணையில் உலாவுவதும்; அந்தத் தோரணைக்கு எழுத்தாளர்கள் சாமரம் வீசுவதும் எனக்கு உவப்பானதாக இல்லை. நவீன கலைஞர்களாகத் தன்னை நிறுவிக்கொள்பவர்கள் எந்த அதிகாரப் பீடங்களுக்கும் நன்றியுடையவனாக இருக்கவேண்டிய அவசியமே இல்லையென உறுதியாகத் தோன்றவும் சை.பீர்முகம்மதுவிடம் இனி வல்லினம் அச்சு இதழுக்கான பணத்தைப் பெறுவதில்லை என முடிவெடுத்தேன்.

அந்தச் சிந்தனை அவ்விரவில் விரிந்துகொண்டே சென்றது. அதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் பேராசிரியர் ஒருவர், மலேசிய எழுத்தாளர் சங்கத்தை விமர்சிக்கமாட்டேன் என உறுதிகொடுத்தால் தன் பங்குப் பணமான நூறு ரிங்கிட்டை வல்லினம் அச்சிதழுக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். எனக்கு சுற்றிலும் இருந்த இலக்கியச் சூழல் முற்றும் முழுதாகக் கசந்தது.

இப்படி நூறு ரிங்கிட் கொடுக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கான நிபந்தனைகளுடன் இனி பேரம் பேசக்கூடும்; ஒரு காலகட்டத்தில் வல்லினம் அச்சு இதழை நடத்துவதை நிறுத்த முடியாது; அந்தப் பிடிவாதத்தால் எல்லா சமரசங்களுக்கும் உடன்பட வேண்டி வரலாம் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. அவ்விரவில் வல்லினம் நடத்துவதை நிறுத்திவிடலாம் என கடும் மனஅவஸ்தைகளுக்கிடையில் முடிவுசெய்தேன். மறுநாள் நண்பர்களிடம் அதை அறிவித்தேன்.

செப்டம்பர் 2009 தொடங்கி இணைய இதழாக வெளிவந்த வல்லினத்தில் சை.பீர்முகம்மதுவின் உரை கடுமையாக விமர்சிக்கப்பட்டு இரு கட்டுரைகள் இடம்பெற்றன. அது வல்லினத்தின் முதல் இணைய இதழ்.

சை.பீர்முகம்மது இதனால் கடும் சினம் அடைந்திருந்தார். முற்றாக வல்லினத்தின் உறவைத் துண்டித்துக்கொண்டார். பல மேடைகளில் வல்லினத்தைச் சாடியும் பேசினார். லண்டன் தீபம் தொலைக்காட்சி நேர்காணலில் வல்லினம் இணைய இதழாக வந்த பிறகு சரிவை நோக்கிச் செல்வதாகக் குறிப்பிட்டிருந்தார். வல்லினத்துக்கும் அவருக்குமான விலகல் விரிந்துகொண்டே சென்றது.

காலம் செல்லச் செல்ல சை.பீர்முகம்மது இலக்கியச் செயல்பாடுகள் மீது எனக்கு முற்றும் முரணான கருத்துகளே மிகுந்திருந்தன. மலேசிய இலக்கியத்தை யார் முன்னெடுக்க வந்தாலும் அவர்களுக்குத் துணை நிற்கலாம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. முன்னெடுக்க வருபவர்களுக்கு உள்ள மறைமுக அரசியல், வணிக தேவைகள் குறித்து நான் சிந்திப்பவனாக இருந்தேன். சை.பீர்முகம்மது போன்ற ஒரு மூத்த படைப்பாளி தனது எதிர்வினையை இலக்கியச் சுரண்டல்களுக்கு எதிராக வலுவாக வைப்பவராக இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பாக இருந்தது. தங்கள் சுயலாபத்துக்காக மொழி, இலக்கியம் என வருபவர்களை ஆதரிப்பது இலக்கியச் சூழல் அழிய வழிவகுக்கும் மறைமுக ஆதரவே எனத்தோன்றியது.

சை.பீர்முகம்மது பல ஆண்டுகளாக உழைத்து, மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் தான் உருவாக்கிய அலையை தானே நிறுத்துவதாகத் தோன்றியது. அதை அவர் செய்யக்கூடாது எனச் சொல்ல ஒருவரும் அவர் அருகில் இல்லாத நிலைதான் பரிதாபமானது.

***

சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மூன்றாவது காலகட்டத்தில் நான் சை.பீர்முகம்மதுவைச் சந்தித்தபோது மிகவும் தளர்ந்திருந்தார். வயோதிகம் எப்போதும் புலிபோல பதுங்கி ஒருவரை தாவிக் கௌவுகிறது என அவரைக் கண்டவுடன் தோன்றியது. அப்போது அவர் மருத்துவமனையில் இருந்தார். வீட்டில் சோற்றுப் பானை வெடித்தபோது சத்தம் கேட்டு ஓடியவர் வெந்த அரிசியில் கால் வைத்து வழுக்கி விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டிருந்தார்.

மருத்துவமனை வார்டில் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்த சை.பீர்முகமதுவை அன்று நான் பார்த்தேன்.  அது சின் பெங் குறித்த ஆங்கில நூல். இன்னும் சில நூல்கள் இருந்தன. இராணுவத்தில் பணிபுரிந்த அவருக்கு சின் பெங் மீதும் கம்யூனிஸ்டுகள் மீதும் பிடிப்பு இருந்தது தெரியவந்தபோது ஆச்சரியமாக இருந்தது. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். எந்தப் பகைமையும் இல்லாமல் பேசினார். உண்மையில் அவரிடம் பகை உணர்ச்சி தங்குவதே இல்லை. கோபத்திற்குப் பின் குழந்தையாகி விடுவார். கொஞ்ச நேரம் சின் பெங் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். எல்லா நிலையிலும் உரையாடுவதிலும் வாசிப்பதிலும் வற்றாத ஆர்வத்துடன் இருந்த அவரை நோகச் செய்தது சங்கடமாக இருந்தது. ஆனால் நான் எக்கருத்தையும் மீட்டுக்கொள்ள விரும்பவில்லை.

குணமான பின் சை.பீருக்கு இணையத்தில் வாசிக்க வேண்டுமென்றும் எழுத வேண்டுமென்றும் ஆர்வம் வந்திருந்தது. அதற்கு தேவையான சாதனங்களை என்னிடம் கேட்டு வீட்டில் தயார் செய்தார். அப்போதெல்லாம் திறன் கைத்தொலைபேசி அறிமுகமாகியிருக்கவில்லை. அழைப்பின் பேரில் ஒருமுறை அவர் வீட்டுக்குச் சென்று அவருக்கான மின்னஞ்சல் கணக்கைத் திறந்து கொடுத்தேன். தமிழில் தட்டச்சு செய்வது பற்றியும் தமிழ் இணைய இதழ்களைத் தேடி வாசிப்பது குறித்தும் ஓரளவு சொல்லிக்கொடுத்தேன். அவர் ஒரு மாணவனைப்போல எலியனை நகர்த்தி இணைய இதழ்களின் ஆச்சரியங்களை உள்வாங்கத் தொடங்கினார்.

சை.பீர்முகம்மதுவிடம் தொடர் தேடல் இருந்தது. யாரிடமும் எதையும் தேடிக் கற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்தார். தொடர்ந்து வாசிப்பதை விடாத பழக்கமாகக் கொண்டிருந்தார்.  அவர் வயதை ஒத்த பலர் எழுதுவதில் சலிப்படைந்தபோதும் அவர் எழுத்தியக்கத்தில் தன்னை இணைத்தே வைத்திருந்தார்.

ஆனால் ஒரு வாசகனாக அவர் புனைவுலகம் என்னைப் பெரிதாகக் கவர்ந்ததில்லை.

***

Untitledசை.பீர்முகம்மதுவின் எழுத்துலகம் பல தளங்களில் சஞ்சரிப்பது. சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், பயணக்கட்டுரை, நாவல், வரலாறு என பலவற்றிலும் கவனம் கொள்ளும் அளவில் பங்களிப்புச் செய்துள்ளார்.  மலேசிய நவீன இலக்கிய முன்னோடிகளில் பலரிடம் இல்லாத உழைப்பை வழங்கி வருபவர் அவர். நவீன இலக்கியத்தில் அவ்வப்போதும் எழுந்து அடங்கும் அலைகளையும் அவர் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் கவனப்படுத்தி பேசி வந்தவர். மார்க்ஸியம், பெண்ணியம் தொடங்கி 1990களில் அதிகம் பேசப்பட்ட மாய எதார்த்தம், பின் நவீனத்துவம் வரை பல கூட்டங்களில் அவர் பேசவும் அவற்றை உள்வாங்கி புனைவாக்கவும் முயன்றுள்ளார்.

புனைவுலகைப் பொறுத்தவரை சை.பீர்முகம்மது ஒரு சிறுகதையாசிரியர் மட்டுமே என்பது என் அபிப்பிராயம். அவரது கவிதைகளோ, பெண் குதிரை நாவலோ இன்று என்னை ஈர்க்கவில்லை. அவரது ஆளுமை முழுமையாக வெளிப்படுவது கட்டுரைகளில்தான். இதற்கு அவரது மன அமைப்பே காரணம் என நினைக்கிறேன்.

சை.பீர்முகம்மது புனைவுகளை ஒட்டிப் பேசும்போது படைப்பில் சொல்லப்பட்டுள்ள தகவல்களை நோக்கியே அவர் கவனம் செல்வதைக் காண முடியும். அவரது விமர்சனம் என்பதும் தகவல்களின் புதுமைகள்தான். ஒரு படைப்பில் புதிதாகச் சொல்லப்படும் தகவல்களையே அவர் சிலாகிப்பதைக் காணலாம். ஒரு புனைவு தன்னுள்ளே கொண்டுள்ள தகவல்களால் மேம்பட்டதாக உள்ளது என அவர் மனம் சிந்திப்பதால் புனைவில் கலைவடிவம் குறித்த கவனம் இல்லாமல் உள்ளது. இந்தத் தன்மையே அவர் கட்டுரைகளுக்கு வலு சேர்ப்பதாகவும் மாறிவிடுகிறது. ஆச்சரியமாக நுண்சித்தரிப்பையும் மனதின் அரூபமான உணர்வுத்தருணங்களையும் அவரது சில சிறுகதைகளில் காண முடிகிறது. ஆனால் சை.பீர்முகம்மதுவின் பங்களிப்பு அவரது எழுத்துலகைத் தாண்டி ஒட்டுமொத்த மலேசிய இலக்கிய வளர்ச்சிப்போக்கில் உள்ளது.

மலேசிய இலக்கிய வளர்ச்சிக்கு தொடக்க காலத்தில் உறுதுணையாக இருந்த முத்தமிழ்ப் படிப்பகம், தமிழ் இளைஞர் மணிமன்றம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், என பல இயக்கங்கள் தொடங்கப்பட்ட காலத்திலேயே அவற்றில் இணைந்து செயல்பட்ட மூத்த உறுப்பினர்களில் ஒருவர் சை.பீர். தரமான இலக்கியங்களை கவனப்படுத்த  ‘முகில்’ எனும் பதிப்பகத்தை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி பல நூல்களைப் பதிப்பித்துக் கவனப்படுத்தியுள்ளார். பல எழுத்தாளர்கள் நூல் வெளியிடத் துணை நின்றுள்ளார். ஏதோ ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டு அதன் பயணம் தீவிரமடைய ஓயாமல் நகர்ந்த கால்கள் அவருடையவை.

2018இல் ‘சடக்கு’ தளத்தில் புகைப்படம் தொகுக்கும் பணியைத் தொடங்கியபோதுதான் அவரிடம் அந்தத் தீவிரம் இன்னும் குறையவில்லை என்பது புரிந்தது. பல மூத்த எழுத்தாளர்கள் இறந்துவிட்ட நிலையில் அவர்கள் சேமிப்பில் உள்ள படங்களைக் கேட்டுப் பெறுவதில் சிக்கல் இருந்தது. மூத்த எழுத்தாளர்களுடன் அணுக்கமாகத் தொடர்புள்ள ஒருவரால்தான் இச்சிக்கலைக் களைய முடியுமென முடிவெடுத்தோம். சை.பீர்முகம்மதுவை அணுகியபோது அது தன் பணி போலவே எண்ணி எங்களுடன் (நான் மற்றும் விஜயலட்சுமி) பயணப்பட்டு சிலர் வீடுகளில் படங்களைப் பெற உறுதுணையாக இருந்தார். படத்தில் உள்ளவர்களை அடையாளம் காட்டவும் படம் குறித்த தகவல்களைத் துல்லியமாகக் கூறவும் அவரால் முடிந்திருந்தது. மலேசிய இலக்கியம் என்றால் தன் உடல்நலனைப் பற்றிக்கூடப் பொருட்படுத்தாது ஓர் இளைஞனுடைய வேகத்துடன் இயங்கும் அவரது தீவிரம் என்னை எப்போதும் வசீகரிப்பது.

***

வல்லினம் விருது முடிவான அவ்விரவே நான் அவரை வீட்டில் சென்று கண்டேன். அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இலக்கியம் சார்ந்த சிறு கருத்து வேறுபாட்டினால் அவரது செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்தும் இருந்தேன். எங்களுக்குள் திரண்ட மௌனம் நிலவியது.  ஆனாலும் அன்பு மாறாமல் வரவேற்றார்.

விருது குறித்துக் கூறினேன். விருதைப் பெற்றுக்கொள்ள அவர் சம்மதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன். அப்படிக் கேட்பதே முறையெனப்பட்டது. ஒரு விருது விழாவில், பெறுபவரின் முடிவே முக்கியமானது. விருது கொடுப்பவர் எப்போதும் பெறுபவருக்குப் பணிந்தவரே. முகத்தில் பெரிய மாற்றம் இல்லை. ‘நீங்கள் கொடுக்கிறீர்கள் நான் பெற்றுக்கொள்கிறேன். அவ்வளவுதானே’ என்றார்.

வல்லினம் விருது சடங்காக ஆண்டுதோறும்  ஒருவருக்கென வழங்கப்படுவதல்ல. மலேசிய படைப்புலகில் தீவிரமாகப் பங்களித்த ஒருவரை தேர்ந்தெடுத்து ஐயாயிரம் ரிங்கிட் விருது தொகையாக வழங்குகிறோம். அவ்வகையில் 2014இல் அ.ரெங்கசாமிக்கு வல்லினம் விருது வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் கழித்து இம்முறை சை.பீர்முகம்மது அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் மலேசிய இலக்கியத்திற்கு உழைத்த ஒருவரை கவனப்படுத்தும் விருதாகவே இதை வடிவமைக்கிறோம். அ.ரெங்கசாமியின் வாழ்க்கை வரலாற்றை அவர் மூலமே விரிவாக எழுதி நூலாகத் தொகுத்ததுபோல இவ்விருதை ஒட்டி சை.பீர்முகம்மது அவர்களின் ‘அக்கினி வளையங்கள்’ நாவலும் பதிப்பிக்கப்படுகிறது.

‘அக்கினி வளையங்கள்’ நாவலில் வழக்கம்போல செறிவாக்கும் பணிகள் நடந்தன. அனைத்திற்கும் ஒத்துழைத்தார். நாவலில் கம்யூனிஸ்டுகள் குறித்து எழுதப்பட்டுள்ளதால் கம்யூனிஸ்டுகள் சுயமாகத் தயாரித்த ஆயுதங்கள் பற்றி கூறினேன். அது நாவலில் இணைக்கப்பட்டால் இன்னும் வலுவாக இருக்கும் என்றேன். அவற்றில் சில கோலாலம்பூரில் உள்ள காவல்துறையின் அருங்காட்சியகத்தில் உள்ளதென நினைவுகூர்ந்தேன். அடுத்த சில வாரத்தில் அவ்விடத்திற்குச் சென்று கூடுதல் தகவல்களைத் தேடத்தொடங்கினார் சை.பீர். தன் புனைவைச் செறிவாக்க தனது 77வது வயதில் ஒரு மூத்த எழுத்தாளர் வழங்கும் உழைப்புதான் இன்றைய தலைமுறைக்கான பாடம்.

அப்படி தன் வாழ்வின் மூலமாகவே இளைஞர்களுக்குப் பயிற்றுவிக்கும் சை.பீர்முகம்மதுவுக்கு இவ்விருதைக் கொடுப்பதில் வல்லினம் பெருமையடைகிறது.

5 comments for “சை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம்

 1. Inbachudar Muthuchandran
  September 1, 2019 at 12:56 pm

  வல்லினம் நல்ல ஒரு தமிழ்ப் பணியாளருக்கு விருது வழங்கியது பாராட்டதக்கது

 2. சை.பீர்முகம்மது
  September 4, 2019 at 5:14 am

  இந்த பதிவில் அப்போதைய அமைச்சர் துன் சாமிவேலுவைப்பற்றியும் எனது உரைபற்றியும் வந்துள்ளது. அது பற்றி ஒரு விளக்கமளிக்க வேண்டும். துன்சாமிவேலு அமைச்சராவதற்கு முன்பே எனக்கு நல்ல நண்பர். அப்பொழுது ஒரு மோட்டார் சைக்கிளை மட்டுமே வைத்திருந்தார். அவர் மிகஅடித்தட்டிலிருந்து வந்தவர். தமிழ், தமிழன் என்பதில் உணர்வுபூர்வாமாக இருந்தார். அவர் மேல் கட்டமைக்கப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அப்பால் அவரின் மனிதாபமும் கொடைநெஞ்சமும் பலருக்குத் தெரியாது. வெ.விவேகானந்தன், கு.சா. பெருமாள் போன்றவர்களின் இருதய சிகிச்சையின் முழுச்செலவையும் அவரே ஏற்றது பலருக்குத் தெரியாது. இன்னும் பலரின் மருத்துவ செலவை அவரே ஏற்றிருந்தார்.

  நவீனுக்கு நெருக்கமான ஒருவர் துன் சாமிவேலுவைத் தாக்குவதே குறிக்கோலாகக் கொண்டவர் கடைசியில் கடன் தொல்லைகளால் அவதிப்பட்ட பொழுது சாமிவேலுவே அவரை அழைத்து RM 200,000/-இலட்சம் கொடுத்து அவருடைய கடன் முழுதும் அடைத்தார்.பலரின் பிரச்சனைகளை அவர் தீர்த்து வைத்ததை நான் நேரில் அறிவேன். இந்த குத்தகையாளர் சங்கத்தில் நான் செயலாளராக இருந்த காலகட்டத்தில் இந்திய குத்தககையாளர்களுக்கு அரசாங்கப் பெரிய குத்தகைக் கேட்டு இடைவிடாது நான் நச்சரித்தேன். அது எனக்காக நான் கேட்கவில்லை என்பது அவருக்கு நன்கு தெரியும். அப்பொழுது மகாதீர் பிரதமராக இருந்த நேரம். இந்தியர்களால் பெரிய அரசாங்க வேலைகளைச் செய்ய முடியாதென்ற மன நிலை இருந்தது.
  மலாய் குத்தகையாளர் சங்கத்தோடு இணைந்து ஒரு நிறுவனத்தை அமைக்கும்படி சாமிவேலு ஆலோசனை கூறினார். அப்படியே அமைத்தேன்.

  மகாதீரிடம் போராடிMRR2 வேலையை 260/-மில்லியனுக்கு வாங்கிக் கொடுத்தார். அதில் 30/%இந்திய குத்தகையாளர் சங்கத்துக்குக் கிடைத்தது. அதில் வந்த லாபம் 3.6மில்லியன். இப்பொழுது மலேசிய நண்பன் இருக்கும் கட்டிடமும் பக்கத்துக் கட்டிடமும் சேர்த்து குத்தகையாளர் சங்காத்துக்கு 2.2 மில்லியனுக்கு கறைபடாத கைகளோடு வாங்கிய கையோடு செயலாளர் பதவியை விட்டு வெளியேறினேன்.

  என்னிடம் சாமிவேலு நான் செயலாளர் பதவியை விட்டு விலகியதைக் கண்டித்தார். இப்பொழுது கோர்ட்டு கேஸ்ஸென்று குத்தகையாளர் சங்கம் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது.பாயாஸ்கொப்புக்காரனும் வான் கோழிகளும் தொகுப்பை வெளியிட நான் சாமிவேலுவிடம் கேட்டுக் கொள்ளவேயில்லை. என் நீண்டகால நண்பர் என்ற முறையிலும் அவர் வாசிப்புப் பழக்கம் அதிகமுள்ளவரென்ற முறையிலும் அவரிடம் நூலைக் கொடுக்கச்சென்ற பொழுது அவர் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் போயிருந்தார். நான் நூலை அவரிடமே கொடுக்கும்படி சொல்லிவிட்டு வந்துவிட்டேன். பிறகு அதுபற்றிய சிந்தனையே இல்லாமலிருந்த பொழுது ஒருவாரம் கழித்து என்னை போனில்அழைத்து உற்சாகமாக நூலைப்பற்றிப் பேசினார். முதலில் அவரை அதிகம் கவர்ந்தது ஓவியர் மருதுவின் அட்டைப்படம் தான்.

  துன் சாமிவேலு சிறந்த ஓவியரென்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதன் பிறகு கதைகளும் மருதுவின் கோட்டோவியங்களும் அவரைக் கவர்ந்துள்ளன. “நாமே ” இதை வெளியிடுவோமென்று உற்சாகமாகக் கூறினார். “நாமே “என்ற சொல்லை மீண்டும் இரண்டு முறை அழுத்தமாகக் கூறிய பிறகே நான் வெளியிட்டு வேலைகளைச் செய்தேன்.65, 000/- வெள்ளி வசூல் செய்து கொடுத்தார் .

  அவருக்கு நன்றிகூட சொல்லவில்லை.பிறகு நன்றி சொல்லிய பொழுது உங்களுக்குச் செய்யாமல் யாருக்குச் செய்யப்போகிறேன் என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார். அன்று எழுத்தாளர்கள்ளுக்கு நான் வேண்டுகோள் வைத்தது பல எழுத்தாளர்களின் நூல் வெளியிடுகளில் கலந்து அவர்களின் அச்சு செலவாவது கிடைக்கச் செய்திருக்கிறார்.பெரும் பொருளாதார சிக்கலிருந்த சீனிநைனாமுகமதுவின் நூலை வெளியிட்டு ஒரு இலட்சம் வெள்ளித் திரட்டிக் கொடுத்தார். துன் சாமிவேலு தன் காரில் ஒரு நூலம் வைத்திருக்கிறார்.பிரயயாணங்களில் நிறைய வாசிக்கிறார்.அதில் மலேசிய இலக்கியங்களும் அடக்கம்.

  • விஜயலட்சுமி
   September 10, 2019 at 9:54 pm

   சைபீர் சார்,
   தனிமனிதனாக சாமிவேலு என்பவர் பற்றி எவ்வித விமர்சனமும் இவ்விடம் இல்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். அவர் உழைப்பாளி, கொடை நெஞ்சர், இலக்கிய வாசகர், உங்களிடன் அன்பும் நட்பும் பாராட்டுவது குறித்தெல்லாம் பேச ஒன்றுமில்லை.

   ஒரு மந்திரியாக, இந்திய சமூகத்தைப் பிரநிதிக்கும் தேசிய அளவிலான கட்சியின் தலைவர் எனும் அடிப்படையில் இலக்கியத்தை தன் அரசியல் தேவைக்கு பயன்படுத்திய அரசியல்வாதி என்பது மட்டும்தான் அவர்மீது உள்ள விமர்சனம். அப்படியானவரை நீங்கள் முன்னிலைப் படுத்தியதை மட்டும்தான் இக்கட்டுரை சொல்கிறது. இரண்டே விடயங்கள்தான் சைபீர் சார்.

   1. தனக்கிருக்கும் பதவியைப் பயன்படுத்தி இலக்கியத்திற்கென நிலையான அமைப்பையோ, அல்லது அப்போது இயங்கிய தமிழ் எழுத்தாளர் சங்கங்களுக்கு தேவையான நிரந்தர மானியத்தையோ பெற்றுத்தர வில்லை, குறைந்தபட்சம் அதையொட்டிய நகர்ச்சியையும் முன்னெடுக்கவில்லை அவர்.

   2. எழுத்தாளர்களுக்கான தேசிய அங்கீகாரங்கள், அடையாளங்கள் போன்றவற்றில் எவ்வித மேல்மட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை அவர்.

   இக்கட்டுரையில் நவீன் குறிப்பிடுவது இலக்கிய சூழலில் எழும் சிக்கல்களுக்கான தீர்வு நோக்கி நகராத ஒரு சராசரி அரசியல்வாதியை ஏன் ஓர் இலக்கிய மேடையில் முன்னிலைப் படுத்தினீர்கள் என்பதான திகட்டலை. உங்களுக்கு நிச்சயம் இது புரியாமல் இருக்காது என்றே நம்புகிறேன்.

   ஆம், சாமிவேலு வரும் கூட்டங்களுக்கு அவரைச்சுற்று பெரும்படை அணிதிரண்டு வரும். பணம் திரளும். ஆனால், உங்களைப்போல் சாமிவேலுவின் நெருங்கிய நட்பு, அன்பு பெறாத ஒரு எழுத்தாளரின் நிலை என்ன?… சாமிவேலுவின் கடைக்கண் பார்வை படாத ஒரு எழுத்தாளரின் நிலை என்ன?

   தலைவர் என்பவர் எல்லாருமானவர் தானே. அவர் பொதுநலனுக்காக ஒட்டுமொத்த சமூகப் பார்வையோடு தீர்வு நோக்கி இயங்க வேண்டியவர் தானே? இலக்கிய சூழலில் அவர் அதை செய்யவில்லை என்பதே நிதர்சனம்.

   அப்படியானவரை உங்கள் நண்பர், வாசகர் என்ற காரணங்களுக்காக உங்கள் இலக்கிய மேடையில் முன்னிலைப் படுத்தப்பட்டது நிச்சயம் தவறுதான். இதில் நவீன இலக்கியவாதி என்ற பேச்சுக்கெல்லாம்கூட போக வேண்டாம். கொஞ்சம் கூர்மையாக கவனித்தால் இதெல்லாம் புரிந்துவிடுமே.

   எல்லாக் காலங்களிலும் இலக்கிய மேடைகளுக்கு என ஒரு தனிவெளிச்சம் உண்டு. அந்த வெளிச்சத்தில் தன் அடையாளங்களை நிரப்பிவிட எல்லாக் காலமும் நட்பு, நன்கொடை, அன்பு, உறவு என்று பல்வேறு அடையாளங்களுடன் ஆட்கள் வந்துகொண்டே இருப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அது உங்கள் மேடையிலும் நடந்தது இன்னமும்கூட ஆச்சரியம்தான்.

   இப்போதும்கூட பசித்திருப்பவனுக்கு அவ்வப்போது இறைப்பட்ட பருக்கைகளைக் கணக்கெடுத்துக் காட்டுவது சரிதானா சைபீர் சார்.

   இறுதியாக, நட்பு அன்பெனும் காரணம் சொல்லி நீங்கள் ஒன்றுக்கு மூன்று முறை அழுத்தமாக கேட்டிருந்தால்கூட சாமிவேலுவின் அரசியல் மேடையிலோ நாடாளுமன்றத்திலோ நிற்க உங்களுக்கு அனுமதியில்லை என்பதுதான் நிதர்சனம்.

   -விஜயலட்சுமி.

 3. perumalmurugan
  September 5, 2019 at 12:42 pm

  எழுத்தாளர் சை.பீர்முகம்மது பெருமகனார் அவர்களுக்கு வாழ்த்துகள். விருது என்பதை வெறும் நிகழ்ச்சியாக இல்லாமல் அதை பெருபவரின் குறை நிறைகளை தெளிவாகச் சொல்லியுள்ளது. இக்கட்டுரை. இதன் வழி இவ்விருதின் மீது மதிப்பும் மரியாதையும் அடியேனுக்கு அதிகரிப்பது உண்மை. இந்த விமர்சனங்களை ஏற்கும் பக்கும் கொண்ட அந்த பெருமகனாருக்கும் வாழ்த்துகள்.

  • சை.பீர்முகம்மது
   September 22, 2019 at 6:32 pm

   நன்றிங்க பெருமாள் முருகன் சார்.
   எப்பொழுதுமே பாராட்டுகளைவிட என்னை விமர்சனங்களிலே வளர்த்துள்ளன. என் பெரியத்தா மாதமொருமுறை வாழைமரங்களை “தலைதட்டுவார். ” அதாவது இரண்டிவிட்டு வழைமரத்தை மொட்டையாக வெட்டிவிடுவார். ஏனென்று கேட்டேன்.மரம் உறுதியாகவும்
   வாழைத்தார் வழமாகவும் இருக்குமென்றும் அதிக பழங்கள் விளைச்சலாக அமையுமென்றும் கூறினார். ஆக தலைதட்டுவதை நான் எப்பொழுதும் அதிகம் விரும்புவேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *