ஜாவி-காட்- வனப்பெழுத்தும் வாய்ச்சண்டையும்

127-390x220கடந்த சில வாரங்களாக மலேசியர்களின் கவனம் முழுக்க கல்வி அமைச்சு அறிவித்த ஜாவி-காட் எழுத்தின் மீது குவிந்துள்ளது. தாய்மொழி பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் நான்காம் வகுப்பில் மலாய் மொழி பாடத்தில் ஜாவி காட் எழுத்து ஒரு பகுதியாக இணைக்கப்படும் என்ற தகவல் வெளியானது முதல் சர்ச்சைகள் தொடங்கிவிட்டன. இதன் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்பது உண்மை என்றாலும், மக்கள் இரண்டு பிரிவாக வாதங்களிலும் கண்டனங்களிலும் ஈடுபட தொடங்கிவிட்டனர். அதிலும் சீனர்களும் இந்தியர்களும் கல்வி அமைச்சரின்  இத்திட்டத்தை பரவலாக எதிர்க்கின்றனர். சமூக ஊடகங்களில் பலரும் தங்கள் கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவிப்பதோடு, நாடு தழுவிய நிலையில் கண்டன கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அறிவிப்புகள் பரவுகின்றன.

அரசு முன்வைக்கும் திட்டம் ஒன்றை ஏற்பதும் மறுப்பதும் குடிமக்களுக்கு மக்களாட்சி வழங்கும் சுதந்திரம். ஆனால் எந்த ஒன்றையும் ஏற்கும் அல்லது மறுக்கும் முன்னர் அடிப்படை உண்மைகளைத் தெரிந்து கொள்வதுதான் நாம் தகவல் யுகத்தில் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம். பாதி உண்மைகளை, பிழைகளாலும் அனுமானங்களாலும் நிரப்பி அதையே முழு உண்மை என்று பரப்பும் தரப்பினரின் உள்நோக்கம் பலவாக இருக்கலாம். ஆனால் அந்தக் குழப்பவாதங்களால் வீண் பதற்றங்களும் உணர்ச்சி கொந்தளிப்புகளும் ஏற்படுவது வாடிக்கை.

ஜாவி-காட் கலை எழுத்து சர்ச்சையும் அதே வகையில் குழப்பவாதிகளால் தங்கள் விருப்பத்துக்கு ‘உணர்வுப் பிரச்சனையாக்கப்பட்டு’ பரப்பப்படுகிறது.  கிட்டத்தட்ட ஒரு மதப்பிரச்சனையாக உருவகப்படுத்தப்படுகின்றது. அரசியல் கட்சிகளின் தீவிர ஆதரவாளர்களுக்கு இது தங்கமழை பொழியும் காலம்.  இதுபோன்ற இனம், மொழி, மதம் தொடர்புடைய பிரச்சனைகளை அவர்கள் எப்போதும் கட்சியை முன்வைத்து நன்முறையில் பயன்படுத்திக் கொள்வதைக் காணலாம். மலேசியர்களுக்கு இதுபோன்ற பல முன் அனுபவங்கள் இருந்தாலும், மிக எளிதில் உணர்ச்சிவசப்படும் அவர்களின் இயல்பு அவர்களை அமைதியிழக்கச் செய்கிறது.

கடந்த 27 .6 அன்று ஜாவி காட் எழுத்து குறித்த துணை கல்வி அமைச்சரின் முதல் அறிவிப்பு ஊடகங்களில் வெளிவந்தது. ஒரு சீன நாளிதழில் வெளிவந்த ஜாவி எழுத்து அறிமுகம் பற்றிய செய்திக்கு விளக்கம் கொடுக்கும் பொருட்டு, அவர் நிருபர்களுக்குக் கொடுத்த தகவலைத் தொடர்ந்து கெராக்கான் கட்சியின் தலைவர் டொமெனிக் லாவ் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். துணைக்கல்வி அமைச்சர் தியோ நி சிங் ஊடகங்களுக்கு கொடுத்த தகவல்கள் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் தெளிவற்று இருந்தது உண்மை. இது போன்ற தெளிவற்ற தகவல்கள் அதிலும், அரசியல் கச்சாப்பொருளாகக்கூடிய ஒரு தகவலை கொஞ்சமும் கவனமின்றி அவர் கையாண்டுள்ளார். மத உணர்வை சீண்டும் அம்சங்கள் கொண்ட புதிய திட்டங்களை (அது மிகச்சிறியதாக இருந்தாலும்), உள்நோக்கம் கொண்டவை என்றே மக்கள் கணிப்பர். அவரின் தீர ஆராயாத அவசரச் செயலின் விளைவே இந்த சர்ச்சை வெகு வேகமாக பரவ மூலக்காரணமாகியுள்ளது. ஆகவே ஜாவி காட் எழுத்து அறிமுகம் குறித்த தகவல்கள் பல பரிணாமங்களுடன் வேகமாக பரவத்தொடங்கின.

ஜாவி என்பது ஒரு மொழி என்றும் அது இஸ்லாமிய கல்விக்கான மொழி என்றும் பிழையான தகவல்கள் மிக வேகமாக பரவியுள்ளது. கல்வி அமைச்சு தாய்மொழி பள்ளிகளை இஸ்லாமிய மயத்துக்குள் கொண்டுவரும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகள் மிக எளிதில் மக்களிடம் பரப்பப்பட்டுள்ளது. மலாய் மொழியில் ஏன் ஜாவியையும் காட் எனப்படும் வனப்பெழுத்தையும் சேர்க்க வேண்டும், கலைக்கல்வியில் சேர்க்கலாமே என்கிற ஆலோசனைகளும் தெரிவிக்கப்படுகின்றன. அரசாங்க தேர்வுகள், ஆசிரியர் தயார்நிலை, மலாய் மொழி போதிக்கும் மலாய்க்காரர் அல்லாத ஆசிரியர்களின் நிலை என கல்வி சார்ந்த பதற்றங்களையும் பெற்றோர்கள் முன்வைக்கின்றனர். மேலும் பல கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் உணர்ச்சிகரமாக வாதிடப்பட்டு எல்லா ஊடகங்களிலும் பகிரப்படுகின்றன.

கல்வி அமைச்சிடம் இருந்து வந்த,  பாடத்திட்டம் சார்ந்த ஒரு  தகவலை கல்வி நலனை முன்வைத்து வாதிடுவதுதான் முறை. ஆனால் மலேசியாவில் அது எப்போதும் நடப்பதில்லை. எல்லா திட்டங்களிலும் இனம் மொழி மதம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து ஆராய்வதே வழக்கமானது. நாடு சுதந்திரம் பெற்றது முதலே மலேசியர்களை அரசு பல்வேறு நெருக்கடிகளாலும் இன – மத ரீதியான சார்புநிலைகளாலும் அப்படிதான் பயிற்றுவித்துள்ளது. ஆகவே ஜாவி-காட் எழுத்து சர்ச்சையும் மத சர்ச்சையாக நீண்டுகொண்டுள்ளது.

ஆளும் தரப்பின் மீது, சீன இந்திய சமூகங்கங்களுக்கு ஆழ்மனதில் படிந்திருக்கும் அச்சமும் சந்தேகமும் இது போன்ற சந்தர்ப்பங்களில் எளிதில் வெளிப்பட்டுவிடுகின்றது.  அதே போன்று மலாய்க்காரர்கள் பிற இன மக்களின் மீது கொண்டிருக்கும் காழ்ப்புகளையும் தங்கள் இன மேலான்மையையும் வெளிப்படுத்திக் காட்டிக் கொள்ள இது போன்ற சர்ச்சைகள்  உதவிபுரிகின்றன.  கடந்த 8.8.2019-ல் FMT இணைய இதழில் இது குறித்து எழுதிய எழுத்தாளர் ஃபைசால் தெஹ்ரானி(Faisal Tehrani)  “ மலேசியர்கள் ஜாவி என்னும் அடக்கம் செய்யப்படாமல் காத்துகிடக்கும் பிணத்தை நடுவில் கிடத்திக் கொண்டு முட்டாள்தனமாக அடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் மலேசிய பல்லின மக்களிடையே அண்மைய காலங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பண்பாட்டு இடைவெளியையே இந்தச் சர்ச்சைகள் உறுதிபடுத்துகின்றன.

ஆகவே, ஜாவி காட் எழுத்து அறிமுகம் என்பதன் அடிப்படை சிக்கல்களையும் அது ஏன் இன்று சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றது என்பதையும் நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தெளிவற்ற எதிர்ப்புக் குரல்கள்

ஜாவி எழுத்தை தாய்மொழி பள்ளிகளில் அறிமுகப்படுவதை கடுமையாக எதிர்க்கும் தரப்பினரிடம் பல கருத்து தெளிவின்மைகள் வெளிப்படையாக தெரிகின்றன. அவர்கள் மிகப் பதற்றமான நிலையிலேயே தங்கள் எதிர்ப்பை முன்வைப்பதைக் காணமுடிகின்றது. உண்மைகளை அறிந்து கொள்ள முடியாத அளவு பதற்றம் அவர்களை வழிநடத்துகிறது. ஜாவி எழுத்து என்பதன் வரலாறோ நடைமுறையோ அறியாதவர்கள் பலரும் களத்தில் குதித்து கருத்து சொல்லிக் கொண்டுள்ளனர்.

ஆயினும், இதில் ஒரு தரப்பினரின் தெளிவின்மையை மட்டும் மையப்படுத்துவது பிழையாகும். காரணம், இந்த நவீன காலத்திலும் தமிழ் மொழியை ‘Bahasa India’ என்றும் தமிழ்ப்பள்ளிகளை ‘sekolah India” என்றும் குறிப்பிடும் மலாய் இனக் கல்வியாளர்களை பரவலாக பார்க்க முடிகின்றது. மலேசியர்கள் நெடுங்காலமாக ஒன்றாக வாழ்ந்தாலும் வெளிப்பகட்டுக்குத்தான் மற்ற இனப் பண்பாடுகளை அறிந்தவர்களாக  காட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் பிற இனங்களைப் பற்றிய அக்கறை குறைந்தவர்கள்தான். அரசியல் லாபத்திற்காக மட்டுமே பிற இனங்களை பயன்படுத்திக் கொள்ளும் இயல்பே மலேசியர்களின் பொதுவான பண்பாடாகிவிட்டது. இதன் பின்னணியில் அரசியல் கட்சிகளும்  இனவாத அரசியல் கொள்கைகளும் இருப்பது வெளிப்படை. ஆகவே இனமோதல்களுக்கு வித்திடும் இது போன்ற சிக்கலில் அரசாங்கத்தின் பங்கு மிகப்பெரியதாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்நாட்டில் சிறுபான்மை மக்களின்  அதீத பதற்றத்திற்கு காரணமாக அமைவது அரசு மதக் கொள்கைகளில் காட்டும் சார்புநிலைதான் என்பதை மறைக்கவியலாது. கடந்த கால வரலாற்றுப் பிழைகளை ஒருபுறம்  ஒதுக்கிவிட்டு, கடந்த பத்து ஆண்டுகளில் இந்நாட்டின் இனம்-மதம் சார்ந்த  அரசாங்கத்தின் நிலைபாடுகளை ஆராய்ந்தாலே சிறுபான்மை மதத்தவரின் பதற்றத்துக்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். குழந்தைகள் மதமாற்ற சட்டங்களில் உள்ள மனித உரிமை மீறல்கள், நாட்டில் பெருகி வரும் இஸ்லாமிய மயமாக்கள்கள், முகநூல்களில் பொறுப்பற்ற மதவாதிகளாலும் இனவாதிகளாலும் பரப்பப்படும்  சிறுபான்மை மக்களுக்கு எதிரான அவமதிப்புகள், ‘பெண்டாதாங்’ என்ற சாடல்கள், போலி மதபோதகர் சக்கீர் நைக் போன்ற நபர்களால் தொடர்ந்து கட்டமைக்கப்படும் சிறுபான்மை இன மத வெறுப்பு, போன்றவை மலேசியாவின் இன, மத நல்லிணக்கப் போக்குக்கு எதிரானவை என்பது வெளிப்படை.

ஆனால், சிறுபான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்கள் தலைதூக்கும்போது அரசின் எதிர்வினைகள் சிறுபான்மை மக்களுக்கு ஏமாற்றம் தரும் விதத்திலேயே இருப்பது கண்கூடு. முடிவில்லாமல் நீண்டு செல்லும் திருமதி இந்திராகாந்தியின் குழந்தை கடத்தல் வழக்கு, மலாய் பைபிளை கைப்பற்றி அழித்தது, ‘அல்லாஹ்’ என்ற சொல்லைக் கிருத்துவர்கள் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை,  சீபீல் கோயில் நிலப்பிரச்சனை, அரசியல் அடைக்கலம் பெற்றுள்ள சக்கீர் நைக்கின் வரம்பு மீறிய பேச்சுகளை அனுமதித்த அரசியல்வாதிகள் என அண்மைய காலங்களாக ஊடகங்களில் வாசித்து அறிய முடிகின்ற அலட்சியப் போக்குகளை அவதானிக்கும் யாரும் சிறுபான்மை மதத்தவரின் பதற்ற மனநிலையை உணர்ந்துகொள்ள முடியும்.

ஆகவே ஜாவி-காட் எழுத்து அறிமுகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் உணர்ச்சிகரமான இனம்-மதம் சார்ந்த பிரச்சனையாக மாறியிருப்பதற்கு சாமானிய மக்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது.  மலாய்க்காரர் அல்லாதாரின் கடும் எதிர்வினைக்குப் பின்புலமாக அதிகாரத்தில் இருப்பவர்களின் சார்புநிலைகளும் அலட்சியப்போக்குமே  காரணிகளாக உள்ளன. இருப்பினும் ஜாவி-காட் எழுத்துகளின் உண்மைகளை அறிய நாம் பதற்றங்களில் இருந்து வெளிப்பட்டு வெளிப்படையாக சிந்திக்க வேண்டியது அவசியம்.

ஜாவி எழுத்தின் தோற்றம்

ஜாவி என்பது ஒரு மொழி அல்ல. அது லத்தின் எழுத்தான ‘ரோமன்’ போன்ற ஒரு எழுத்து வடிவம். தமிழ் மொழிக்கு நாம் தமிழ் நெடுங்கணக்கு வரிவடிவங்களைப் பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் லத்தின் வரிவடிவமான 26 எழுத்துகளைப் (alpheberts) பயன்படுத்துகின்றனர். அதுபோல், ஜாவியில் 37 எழுத்துகள் உள்ளன.  ரோமன் எழுத்துகளைப் பயன்படுத்தி தமிழ்மொழி உட்பட  பல மொழிகளையும் எழுதுவது போல ஜாவி எழுத்துகளைப் பயன்படுத்தியும் மற்ற மொழிகளை எழுதலாம். கடந்த நூற்றாண்டில் மலாய் தீவு கூட்டங்களில் பயன்படுத்தப்பட்ட மலாய், ஆச்சே, பஞ்ஞார், மினாங்கபாங் போன்ற பல இனக்குழு மொழிகளும் ஜாவி எழுத்தையே பயன்படுத்தின.

மலாய் தீவுக்கூட்டங்களை இந்து அரசுகள் ஆண்டபோது பல்லவ எழுத்து வடிவங்களும் பிரம்மி எழுத்து வடிவங்களும் இங்கு பயன்படுத்தப்பட்டன. அக்காலகட்டத்தில் இங்கு பெளத்தர்கள் புழங்கிய மொழியான பாலி மொழியையும் ஆதிமலாய் (Melayu kuno) மொழியையும் எழுத பல்லவ எழுத்துருக்கள், தேவநாகிரி எழுத்துருக்கள், காவி எழுத்துருக்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. 7ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டுவரை இவ்வெழுத்து முறையில் ஆதிமலாய் மொழி எழுதப்பட்டது.

ஆனால் ஶ்ரீவிஜய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாசாய் இஸ்லாமிய நாடாக வளர்ந்துwhy-not-allah அதிகாரம் பெற்றது. முன்னைய ஆதிமலாய் மொழி பெரிதும் சமஸ்கிருத மொழியின் கலப்பைக் கொண்டிருந்ததோடு இந்து சமய நடைமுறைகளுக்கு ஏற்ற மொழியாகவும் இங்கு பயன்பட்டது. ஆனால் இஸ்லாம் மதம் மலாய் தீவுகளில் பரவத்தொடங்கிய போது ஆதிமலாய் மொழியின் தோற்றமும் மாறியது. அம்மொழியில் அதிகம் அரபு மொழி சொற்கள் கலந்தன. இஸ்லாம் தொடர்பான நடைமுறைகளையும் சட்டதிட்டங்களையும் விளக்க முன்பு புழங்கிய ஆதிமலாய் மொழியும் அது பயன்படுத்திய எழுத்துகளும் ஏற்பனவையாக இல்லை. அரபு சொற்களை உச்சரிக்கவும் எழுதவும் பல புதிய ஒலிப்பு முறைகள் தேவைப்பட்டன. ஆகவே அப்போதாமையை உணர்ந்த இஸ்லாமிய மதப்பரப்பாளர்கள், மக்கள் பயன்படுத்தும் மலாய் மொழியில் அரபு சொற்களைச் சேர்ந்ததோடு அரபு எழுத்துகளை அடிப்படையாக கொண்ட புதிய எழுத்துகளை அன்றைய அரண்மனையின் ஒத்துழைப்புடன் வடிவமைத்தனர். அதுவே ஜாவி எழுத்து என்று வளர்ந்தது. ஜாவி எழுத்து முறையும் அதன் இலக்கண விதிகளும் பல பரிணாமங்கள் கண்டுவந்தன.

இதன்வழி ஜாவி எழுத்துகளின் வேர் அரபிய மொழியாக இருந்தாலும் அவை அரபு எழுத்துகளின் திரிபுகள் என அறியலாம். அரபியில் இல்லாத ஐந்து எழுத்துகளை ஜாவி கூடுதலாக சேர்த்துக் கொண்டுள்ளது. அவை மலாய் மொழியில் உள்ள சில ஒலிப்புகளைச் (அரபிய மொழியில் இல்லாதவை) சரியாக எழுதும் பொருட்டு உருவாக்கப்பட்டவை.

இஸ்லாமிய மதகுருமார்கள் மலாய் தீவுக்கூட்ட மக்களை ஜாவி மக்கள் என்ற சொல்லில் குறிப்பிட்டதால் பாசாய் அரசில் அதிகார எழுத்தாக உருவெடுத்த எழுத்து வடிவத்தை ஜாவி எழுத்து என்றே குறிப்பிட்டனர். கி.பி 13ஆம் நூற்றாண்டு முதலே மலாய் மொழி ஜாவி எழுத்தில்தான் எழுதப்படுகின்றது. சென்ற நூற்றாண்டு வரை மலாய் மொழியை ஜாவி எழுத்தில் எழுதுவதுதான் நடைமுறை.

மலாக்கா பேரரசு காலத்தில் மலாய் மொழி செழித்து வளர்ந்த போதும் ஜாவி வரிவடிவமே மலாய் மொழியின் எழுத்து வடிவமாக நிலைபெற்றது.  ஜாவி மொழியிலேயே  மலாய் மொழி காவியங்களும், அரச சாசனங்களும், உடன்படிக்கைகளும் எழுதப்பட்டன. அவை மலாய் செம்மொழி இலக்கியங்களாக (Bahasa Klasik) இன்று வழங்கப்படுகின்றன.  முன்ஷி அப்துல்லாவின் தொடக்கக்கால நவீன மலாய் படைப்புகள் யாவும் ஜாவி எழுத்தில்தான் எழுதப்பட்டன. 1950-கள் வரை ஜாவி எழுத்துகளால் எழுதப்பட்ட மலாய் நூல்களும் utusan melayu, Jawi Peranakan போன்ற இதழ்களும் வந்துகொண்டிருந்தன. ஆகவே ஜாவி எழுத்து மலாய் மொழியின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று என்பது மறுக்கவியலாத உண்மை. மலாய் மொழியை அதன் வரலாற்று சிறப்புகளோடு கற்க விரும்பும் எல்லாருமே ஜாவி எழுத்தையும் அறிந்திருப்பது சிறப்பு.

ஜாவி ரோமனானது

ஆயினும், தென்கிழக்காசியாவிற்கு ஐரோப்பியர் வருகை தொடங்கிய 15-ஆம் நூற்றாண்டு தொட்டே மலாய் மொழியை ஐரோப்பியர் தங்களுக்கு வசதியான லத்தின் எழுத்துருக்களான ரோமன் எழுத்துகளில் எழுதத் துவங்கினர். அதற்கான முதல் கட்ட முயற்சியாக பன்மொழி அகரமுதலிகளும் விளக்க நூல்களும் ஜாவி ரோமன் கலப்பாக எழுதப்பட்டன. அவற்றைக் கொண்டே பிற ஐரோப்பிய ஆட்சியாளர்கள் மலாய் மொழியைப் பயின்றனர்.

பின்னர், காலனியத்துவ காலத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களில் ஒன்றாக,  மலாய் தீவுக் கூட்டங்களில் ஆங்கில எழுத்துகள் தீவிரமாக அறிமுகம் கண்டன.  அக்கால ஆங்கில அதிகாரிகள் மலாய் மொழி அறிந்தவர்களாக இருக்க வேண்டியது தொழில் நிமித்தம் அவசிய தேவையாக இருந்தது. R.O Winstent, W.E Maxwell போன்ற பல மலாய் மொழி ஆளுமை பெற்ற பலரும் முக்கிய அரசாங்க பொறுப்புகளை வகித்தனர். Stamford Reffles தன் அதிகாரத்துவ மலாய் மொழி ஆலோசகராக முன்ஷி அப்துல்லாவை நியமித்துக் கொண்டதோடு அவரிடமே மலாய் மொழியைக் கற்றுக்கொண்டார். 1889 முதல் இங்கு பல பொறுப்புகளையும் பதவிகளையும் ஏற்ற கல்வியாளரும் ஆய்வாளருமான  R.J Wilkinson மலாய் மொழி குறித்த பல ஆய்வுகளையும் இலக்கண விதிகளில் புதிய மேம்பாடுகளையும் கொண்டுவந்தார். அவரின் முயற்சிகளில் ஒன்று ரோமன்(ஆங்கில எழுத்து) எழுத்துகளில் மலாய் மொழியை எழுதுவதாகும். பின்னர் மலாய் மொழி அறிஞரான சாபா(zaaba) மலாய் மொழி புதிய இலக்கண விதிகளை வகுத்தார். அவர் மலாய் மொழிக்கான ஜாவி-ரோமன் எழுத்துக் கூட்டல் முறைகளை மிக விரிவான ஆய்வுகளின் வழி நூலாக்கினார்.

50-ஆம் ஆண்டுகளில் மலாய் மொழி புதிய வேகத்தில் உருகொண்டது. மலாய் மொழி தேசிய நிலைபாட்டுக்கு மிக முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதில் தேசியவாதிகள் முனைப்போடு செயல்பட்டனர். அங்காத்தான்-50 என்னும் முற்போக்கு எழுத்தாளர் இயக்கம் மலாய் மொழியின் எழுத்தை ரோமனாக நிலைநிறுத்தும் படி அரசுக்கு நெருக்குதல் கொடுத்தது. இந்தோனேசியாவும் ஜாவிக்கு மாற்றாக ரோமன் எழுத்துகளை புழக்கத்திற்கு கொண்டுவந்தது. மலாய் மொழியை நாட்டில் உள்ள எல்லா இன மக்களுக்கும் விரைவாக கொண்டு சேர்க்க அதன் ஜாவி எழுத்து முறை தடையாக இருப்பதாக அன்றைய தேசியவாதிகள் நினைத்தனர்.

ரோமன் எழுத்துகளில் எழுதப்பட்டால் ஆங்கில கல்வி கற்ற எல்லோராலும் மலாய் மொழியையும் கற்றுக் கொள்ள ஏதுவாக அமையும் என்பது அவர்களின் கருத்து. கூடுதலாக, ஜாவி எழுத்துகளைக் கொண்டு மலாய் மொழியில் ஏற்கப்படும் ஆங்கில கலப்பு சொற்களை எழுதுவதிலும் குழப்பங்கள் இருந்தன. ஆகவே மலாய் மொழியின் மாண்பை உயர்த்தும் முயற்சியாகவே ஜாவிக்கு பதில் ரோமன் எழுத்தை அக்கால கல்வியாளர்களும் மொழியாளர்களும் முன்னிலைப்படுத்தினர். மலாய் பாரம்பரியத்தில் அதிக பிடிமானம் உள்ள சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் 1963-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு பின்னர்1967-ல் மாற்றங்கள் செய்யப்பட்ட தேசிய மொழி சட்டம் “ Tulisan bagi bahasa kebangsaan ialah rumi: dengan syarat bahawa ini tidak melarang penggunaan tulisan Melayu, yang lebih dikenali dengan nama tulisan Jawi, bagi bahasa Kebangsaan’  என்று மலாய் மொழி தேசிய மொழியாக தகுதி உயர்த்தப்பட ஏதுவாக ரோமன் எழுத்துக்களை முன்னிலைப்படுத்தியது. அதேசமயம் மரபான ஜாவி எழுத்துக்களை முற்றாக நீக்கவும் இல்லை. அதாவது மலாய் மொழி ஒரு இனத்தின் மொழியாக இருந்தபோது ஜாவி எழுத்துரு பயன்படுத்தப்பட்டது, அம்மொழி தேசிய மொழியாக அங்கிகாரம் பெற்ற பின்னர் ரோமன் எழுத்துகளை பொதுவசதி கருதி ஏற்றுக்கொண்டது.

ஜாவியை ஒதுக்கியவர்கள் நவீன நோக்கு மலாய் தலைவர்களே

ஆகவே, நவீன பல்லின மலேசியாவில் ஜாவி எழுத்துகளின் பயன்பாடு மெல்ல குறைந்து அது தேவையில்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. வரலாற்றில் மலாய் மொழியின் முக்கிய உறுப்பாக இருந்த ஜாவி எழுத்துகளை நம்பி மலாய் மொழி இன்று இல்லை. இன்று ஜாவி எழுத்துகளை அறியாதோரும் மலாய் மொழியை தடையற கற்க முடியும். மலாய் மொழி காப்பகமாக செயல்படும் Dewan Bahasa dan Pustaka கூட இந்த மாற்றங்களுக்கு உடன்பட்டே இயங்குகிறது.  ஜாவி தன் முக்கியத்துவத்தை இழந்ததற்கு காரணம் மலாய் மொழியை தேசிய மொழியாக உயர்துவதில் வேகம் காட்டிய தேசியவாதிகளும் மொழி அறிஞர்களும்தான் என்பதை மறுக்க முடியாது.

அதே நேரம் மலாய் மொழியின் மைய பயன்பாட்டில் இருந்து தன்னை ஒதுக்கிகொண்ட ஜாவி எழுத்து மதம் சார்ந்த இடங்களில்  அடைக்களம் பெற்றது. காரணம் சமயவாதிகள் நவீன போக்குகளில் இருந்து ஒதுங்கியவர்களாகவும் பழமை பிடிப்பு உள்ளவர்களாகவும் இருந்தனர். ஆகவே சமயப் பள்ளிகளில் அரேபிய மொழிக் கல்வியும் ஜாவி எழுத்து பயன்பாடும் கட்டாயமாக்கப்பட்டன. ஆகவே ஜாவி எழுத்து இஸ்லாமிய கல்வியாளர்களிடமும் மதகுருமார்களிடமும் தஞ்சம் புகுந்தது.  இதன் காரணமாகவே மக்கள் இன்று ஜாவி எழுத்தை இஸ்லாம் மதத்துடன் மட்டுமே தொடர்புப்படுத்திக் கொள்கின்றனர்.

நாளடைவில் நவீன மலாய்க்காரார்களாலேயே ஜாவி எழுத்து மறக்கப்பட்டுவிட்டது.  KLSR, KBSR கல்வி திட்டங்களின் வழி கல்வி கற்ற தலைமுறை ஜாவி எழுத்துகளை மறந்து விட்டது. அரசாங்க அமைப்புகளும் கல்விக் கூடங்களும் ஜாவி எழுத்துக்கு ஒரு சடங்கான இடத்தை மட்டும் கொடுத்து மரபைக் காட்டிக் கொண்டன.  இஸ்லாம் சமயக் கல்வியின் வழி  பயின்ற  சொற்ப அறிவைக் கொண்டு மலாய்காரர்களில் பெரும்பகுதியினர் தட்டுத்தடுமாறி ஜாவி எழுத்தை வாசிக்கின்றனர். சரளமாக வாசிப்பவர்களை காண்பது அருகிவிட்டது.

காட் எனப்படும் வனப்பெழுத்தும் இஸ்லாமும்

அரபு எழுத்துகளைக் கொண்டு கலைநயத்துடன் சொற்களையும் சொற்றொடர்களையும் எழுதுவது வழக்கமானது. அதை காட் (khat) என குறிப்பிடுவர். வேத வாக்கியங்களை அவ்வாறு கலை நயத்துடன் எழுதுவதை இஸ்லாமிய மரபு ஏற்றுக்கொள்கிறது. அதேபோல ஜாவி எழுத்தைப் பயன்படுத்தியும் வனப்பெழுத்துகள் எழுதும் பழக்கம் மலாய்க்காரர்களிடையே பரவலாக உள்ளது. அதில் பல மரபுகளுடன் உட்பிரிவுகள் உள்ளன.

ஆனால் ஜாவி எழுத்தைப் பயன்படுத்தி எந்த ஒரு சொல்லையும் கலைநயத்துடன் (khat) எழுத முடியும். இஸ்லாமிய மதம் சார்ந்து எழுதுவது சுய விருப்பு சார்ந்தது. மலாய் மொழியை எழுத பயன்படும் ஒரு எழுத்து வடிவமான  ஜாவி எழுத்துக்கு எந்த மதக் கட்டுப்பாடும் இல்லை என்பதே உண்மை. அரசியல் சாசனங்கள், இலக்கியப் படைப்புகள், நாளிதழ் செய்திகள் என எல்லா வகை பிரதிகளையும் ஜாவி எழுத்தில் எழுதலாம். 1940-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பல மலாய் பாலியல் கதைபுத்தகங்கள் ஜாவி மொழியில் எழுதப்பட்டவை என்பதை ஃபைசால் தெஹ்ரானி ஆதாரத்தோடு சுட்டிக் காட்டுகிறார். ஆயினும், பொதுப்பார்வையில் காட் என்பது இஸ்லாமிய மதம் சார்ந்த சொற்களை மட்டுமே எழுதும் ஒரு கலையாக நிலைபட்டுவிட்டது. ஒருவகையில் இஸ்லாமிய மதத்தோடு இறுக பிணைந்துவிட்ட ஜாவி எழுத்தை KSSR கல்வி திட்டத்தின் வழி பிரித்தெடுத்து பொதுவான மலாய் மொழிக்கு கொண்டுவரும் முயற்சியாக கல்வி அமைச்சின் ஜாவி-காட் எழுத்து அறிமுகம் அமைகின்றது.

ஜாவி எழுத்தின் மரபை மீட்டெடுக்கும் திட்டமானது புதிய கல்வித் திட்டத்தில் (KSSR)  இணைக்கப்பட்டுள்ளது. மலேசியர்கள் அனைவரும் ஜாவி எழுத்தை அறிந்திருக்க வேண்டும் என்பதோடு பிற தாய்மொழி எழுத்துகளையும் அறிந்திருக்க வேண்டும் என்னும் நிலைபாட்டை புதிய கல்வி திட்டத்தில் (KSSR) காணமுடிகின்றது.

ஆகவே 2014-ஆம் ஆண்டு முதலே ஜாவி எழுத்துகள் தமிழ் சீனப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  தமிழ்/ சீன பள்ளி 5-ஆம் ஆண்டு மலாய் பாடநூலில் பக்கம் 85 முதல் 88 வரை seni Tulisan (எழுத்து கலை)  என்ற தலைப்பில் ஜாவி எழுத்தோடு சீன தமிழ் எழுத்து வடிவங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இப்போதும் மாணவர்கள் அந்தப் பாட நூலைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆசிரியர்களோ மாணவர்களோ பெற்றோர்களோ  இதுவரை எந்தப் புகாரும் அளிக்கவில்லை. கேஎஸ்எஸ்ஆர் பாடத்திட்டத்தின் மீளாய்வின் ஒரு பகுதியாகத்தான் 2020-ல் நான்காம்  ஆண்டு மலாய் மொழி பாடநூலில் ஜாவி-காட் வனப்பெழுத்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஜாவிகாட் எழுத்து மத திணிப்பின் அடையாளமாகுமா?

ஜாவி எழுத்து தமிழ், சீனப்பள்ளிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கின்றது. ஜாவி எழுத்துகளை ஆசிரியர்கள் வசதிகேற்ப சொல்லிக் கொடுக்கிறார்கள். அல்லது அந்தப் பகுதியைக் கடந்துவிடுகிறார்கள். அதில் எந்த இஸ்லாமிய திணிப்பும் இதுவரை புகாராகவில்லை. தேர்வுகளிலும் அப்பகுதி இதுவரை முன்வைக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு 4ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள தர மற்றும் மதிப்பீட்டு ஆவணம்(DSKP)(பக்கம் 38/39) ‘மொழியின் கலை கூறு’(4.0 Aspek Seni Bahasa) எனும் பகுதியின் உள்ளடக்க தரமாக 4.4ல் Mengaplikasikan, menghayati dan menghasilkan unsur keindahan dalam seni khat. என்ற பகுதி இணைக்கப்பட்டுள்ளது. மலாய் மொழியைப் பயன்படுத்தி கதை சொல்லுதல், கவிதை வாசித்தல், பாடுதல், போன்ற கலை செயல்பாடுகளுடன் காட் வனப்பெழுத்தை எழுதுதல் என்பதும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ‘khat’ என்பதன் விளக்கமாக ‘சிறப்பு உபகரணங்களைக் கொண்டு கையால் எழுதும் கலை’ (பக்கம் 43) என்றே விளக்கப்பட்டுள்ளது. இனம் மதம் சார்ந்த அடையாங்கள் எங்கும் இல்லை. மேலும் ‘simpulan bahasa’வில் (மரபுத்தொடர்/பழமொழி) பயன்படுத்தப்பட்டுள்ள காட் எழுத்துகளை அடையாளம் காண்பதும் காட் கலை எழுத்து நுட்பத்துடன் ‘simpulan bahasa’ (மரபுத்தொடர்/பழமொழிகளை) எழுதுவதும் கற்றல் தரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே DSKP வகுத்த கொள்கைபடி, காட் வனப்பெழுத்தினால் இஸ்லாமிய மதத் திணிப்பு நடைபெறும் என்பதற்கான முகாந்திரம் இல்லை.

மேலும், ஒரு மொழியின் எழுத்து வடிவம் ஒரு மதத்தை திணிக்கக்கூடும் என்று கூறுவது மிகையான கூற்றுதான். உதாரணமாக, தமிழ் மொழி இலக்கியப்பகுதியில் பக்தி இலக்கிய பாடல்கள் இன்றியமையாதனவாகும். தொடக்கப்பள்ளிகளில் இருந்தே சைவ சமய பக்திப் பாடல்களின் பகுதிகள் பாடமாக்கப்பட்டுள்ளன. தமிழ்ப்பள்ளிகளில் பிற மத மாணவர்கள் பயில்வதையும் நாம் அறிவோம். ஆனால் பக்தி இலக்கியம் தமிழ் மொழியோடு மிக நேரடியான தொடர்புடைய செய்யுள்கள் என்பதால் சமயப் பாடல்களாகவோ சமய திணிப்பாகவோ அவற்றை நாம் கருதுவதில்லை. தமிழ்மொழியின் அழகியலை அறிந்துகொள்ள அப்பாடல்கள் பாடநூலில் இடம்பெருகின்றன.   அவ்வகையில் மொழியின் மரபையும் அதன் கலை வடிவத்தையும் சித்தரிக்கும் எழுத்து வடிவத்தை மதத்தோடு தொடர்பு படுத்துதல் தவறாகும். ஆயினும் முன்பே குறிப்பிட்டது போல, அதிகார தரப்பு சிறுபான்மை மதத்தவரிடம் இஸ்லாம் குறித்த அச்சத்தையே தொடர்ந்து விதைத்து வருவதால் சாமானிய மக்களால் இது போன்ற மாற்றங்களை எளிதில் ஏற்க முடிவதில்லை.  ஜாவி-காட் எழுத்து என்பது மலாய்க்காரார் அல்லாதாருக்கு மிகப்பெரிய கலாச்சார அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது.

அதே போன்று இரட்டை மொழி (DLP) பாடத்திட்டதிற்கு நான்கு பாடங்களை ஆங்கிலத்திற்கு தாரைவார்க்க தயங்காத தமிழ்ப்பள்ளிகள், ஒரு சில ஜாவி-காட் எழுத்துகள் அறிமுகத்தால் எதிர்காலத்தில் மலாய் ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்குள் அதிகம் வந்துவிடுவார்கள் என்று கூறுவது அறியாமை. 2010-ல்  மெதுபயில் மாணவர்களை மலாய் ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் உயர்த்தும் பொருட்டு அறிமுகம் கண்ட LINUS திட்டத்தின் போது, சில தமிழ்ப்பள்ளிகளில் புதிய மலாய் இன ஆசிரியர்களின் வருகை சர்ச்சையானது. இப்போது மக்களுக்கு ஏற்படும் பதற்றமும் LINUS விளைவுகளின் தொடர்ச்சியாக இருக்கலாம். உண்மையில் இதுபோன்ற சந்தேகங்களுக்கு கல்வி அமைச்சு விரிவாக விளக்கங்கள் வழங்கியிருக்க வேண்டும். ஜாவி எழுத்தை கொஞ்சம் முயன்றால் எல்லா ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் அளவுக்கு எழுத முடியும். இதற்கென்று சிறப்பு பயிற்சிகள் கொண்ட ஆசிரியர்கள் தேவை இல்லை.  அதிலும் இணைய வசதிகள் மேம்பட்டுள்ள இக்காலத்தில் குறிப்பிட்ட இன ஆசிரியர்கள்தான் ஜாவி-காட் எழுத்துகளை போதிக்க முடியும் என்பதை ஏற்க முடியாது. ரோமன் எழுத்தை ஜாவி எழுத்தாக மாற்றக் கூடிய செயலிகளை இலவசமாகவே தரவிரக்கம் செய்துகொள்ளும் வசதிகள் இணையத்தில் உள்ளன.

ஜாவிகாட் எழுத்துகளும் கல்வி முக்கியத்துவமும்.

ஆகவே ஜாவி-காட் எழுத்து அறிமுகம் எந்த அளவு கல்வி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மட்டுமே நாம் கூர்ந்து நோக்குவதும் விமர்சிப்பதும் அவசியம். ஜாவி எழுத்துகள் முன்பு கல்லூரிகளிலும் உயர்கல்விக் கூடங்களிலும் மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்கப்பட்டது. பாட தேர்வை பொருத்து எல்லா இன மாணவர்களும் ஜாவி எழுத்துகளை கற்றனர்.  நான் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஜாவி எழுத்தைப் பயின்றேன். தேர்வுக்கும் அப்பகுதியில் சில வினாக்கள் கொடுக்கப்படும். ஆனால், பொதுவாக ஜாவி எழுத்தை நாங்கள் விளையாட்டாகவே பயின்றோம். தொடர்ந்து பயன்படுத்தாததால் மறந்தும் விட்டோம். ஆனால், அடுத்த ஆண்டு நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாவி-காட் எழுத்துகள் எந்த அளவு சுமையை ஏற்படுத்தும் என்பதை கவனிக்க வேண்டும்.

பொதுவாகவே, KSSR பாடத்திட்டம் மாணவர்களுக்கு சவாலானதாக உள்ளது என்பதே பரவலாக முன்வைக்கப்படும் விமர்சனமாகும். எதிர்கால சவால்களுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தும் நோக்கத்தையே மலேசிய நவீன கல்விமுறை ஏற்றுள்ளது. ஆசிரியர்களும் 21ஆம் நூற்றாண்டு போதனை முறை, தர மதிப்பீடு, உயர்சிந்தனை ஆற்றலின் வழி சிக்கல் களையும் கற்றல் கற்பித்தல் போன்ற நவீன கல்வி மாற்றங்களுக்கும், யுபிஎஸ்ஆர் போன்ற அரசாங்க தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் மரபான வழிமுறைகளுக்கும் இடையில் போராடிக் கொண்டுள்ளனர். ஆங்கிலம், அறிவியல், கணிதம் (STEM) போன்ற பாடங்களின் முக்கியத்துவத்தை அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளின் வழி பள்ளிகளில்  தொடர்ந்து கவனப்படுத்தி வருகின்றது. அடிப்படை கல்வியறிவு உள்ள பெற்றோர்கள் கூட மாணவர்களின் வீட்டுப்பாடங்களில் உதவுவதில் சிக்கலை எதிர்நோக்கும்  அளவுக்கு இன்றைய கல்வி நுட்பமான மாற்றங்களை அடைந்துள்ளது.       இதில், சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களின் நிலை முழுதும் ஆசிரியர்களையும் வகுப்பறை கற்றல் கற்பித்தலையும் மட்டுமே நம்பி இருக்கும் நிலையில், ஜாவி-காட் போற்ற புதிய சுமைகளை அவர்கள் மேல் ஏற்றுவது ஏற்புடையதன்று.

பொதுவாக, முதல் படிநிலையில் இருந்து இரண்டாம் படிநிலைக்கு நகரும் மாணவர்கள் பாட அதிகரிப்பு, தேர்வு முறை மாற்றம்,  என பல்வேறு மாறுதல்களை சந்திப்பார்கள் என்பதை கல்விச்சூழலை அறிந்தவர்கள் நன்கு உணர்ந்திருப்பர். அது ஆரம்பப்பள்ளி வாழ்க்கையில் ஏற்படும் திடீர் ‘பண்பாட்டு அதிர்ச்சியாகவே’ சித்தரிக்கப்படுகின்றது. ஆகவே, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மேலும் சுமையையும் மனஅழுத்தத்தையும் கொடுக்கும் வகையில் குறிப்பாக ஜாவி-காட் எழுத்துகளை கொஞ்சமும் அறிந்திராத தாய்மொழிப் பள்ளி மாணவர்களிடம் அறிமுகப்படுத்த முயல்வது மாணவர் மனநலனுக்கு எதிரான நடவடிக்கையாகும். மேலும், ஒரே மொழிக்கு இருவேறு எழுத்துகளை அறிமுகம் செய்வது இளம் மாணவர்களுக்கு அதீத குழப்பங்களை உருவாக்கும்.

ஜாவி எழுத்தையும் காட் வனப்பெழுத்தையும் நான்காம் ஆண்டு மலாய் மொழி பாடத்தில் போதிப்பது தாய்மொழி பள்ளிகளுக்கு மட்டுமேயான தனித்த பிரச்சனையாக சித்தரிப்பது, அடிப்படை சிக்கலை திசை திருப்பும் செயலாகும். தேசிய பள்ளிகளுக்கும் இந்தப் புதிய திட்டதால் கற்றல் கற்பித்தல் சார்ந்த சிக்கல்கள் உள்ளன. இதுநாள் வரை மலாய் பள்ளிகளில் ஜாவி எழுத்துகளையும் காட் வனப்பெழுத்தையும் சமய ஆசிரியர்கள் இஸ்லாமிய பாடத்தில் போதித்து வந்தனர். அதாவது மலாய் பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவர்களுக்கு மட்டுமே உஸ்தாட் அல்லது உஸ்தாசா இப்பாடங்களை நடத்திவந்தார். ஆனால், இனி தேசிய மொழி ஆசிரியர் வழக்கமான தனது மலாய் பாட போதனைகளோடு கூடுதலாக ஜாவி-காட் எழுத்துகளையும் போதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மலாய் மொழி ஆசிரியர்கள் அனைவரும் ஜாவி-காட் எழுத்துகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்ல. இது மலாய் மொழி ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை என்பதில் சந்தேகம் இல்லை.

அதோடு,  இஸ்லாம் மாணவர்கள் மழலையர் வகுப்பு தொடங்கியே ஜாவி எழுத்துகளைச் சமய வகுப்புகளில் பயின்ற அனுபவம் உள்ளவர்களாவர். அவர்கள் நான்காம் ஆண்டில் அடிப்படை ஜாவியை அறிந்த நிலையிலேயே இருப்பர். அவர்களோடு ஒரே வகுப்பில் பயிலும் இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்கும் சேர்த்தே மலாய் ஆசிரியர்கள் ஜாவி-காட் அறிமுகத்தை பாடமாக நடத்துவது வெளிப்படையான ஏற்ற தாழ்வுகளை உருவாக்கும். இது இஸ்லாம் அல்லாத மாணவர்க்கு தாழ்வுணர்சியை ஏற்படுத்தும்.   திடீர் ஜாவி எழுத்து அறிமுகத்தின் விளைவால் ஏற்படும் தயக்கத்தால் பிற இன மாணவர்கள் மலாய் மொழி தேர்ச்சியில் பின்னடைவு அடையும் வாய்பும் அதிகம் உள்ளது. ஆகவே இளம் மாணவர்களை,  மலாய் மொழி பேச்சு-எழுத்து-வாசிப்பு என்னும் அடைப்படை திறன்களில் தேர்ச்சி பெறச் செய்யும் ஆசிரியர்களின்  அடிப்படை நோக்கம் ஜாவி-காட் அறிமுகத்தால் பாதிப்புறும்.

ஜாவி–காட் குறித்த கல்வி அமைச்சின் நிலைபாடு அரசியல் சார்ந்து மாறிக்கொண்டுள்ளது. தாய்மொழிப் பள்ளிகளில் காட் வனப்பெழுத்துகளின் முக்கியத்துவத்தை திட்டவட்டமாக சொல்லும் நிலையில் கல்வியாளர்கள் இல்லை. ஜாவி-காட் அறிவு ஒரு நான்காம் ஆண்டு மாணவனுக்கு அவனது மலாய் மொழி ஆற்றலை எவ்வளவு தூரம் வளர்க்க உதவும் என்பதற்கும் விளக்கம் இல்லை. கல்வி அமைச்சின் ஆகக் கடைசி அறிவிப்பின் வழி காட் வருடத்தில் ஒரு மணி நேர பாடமாக இருக்கும் என்று அறிய முடிகின்றது (மூன்று பக்கங்கள்). தேர்வுகளிலும் இப்பகுதி இடம்பெறாது. அதேசமயம் தமிழ் சீனப் பள்ளிகளில் அப்பகுதியைக் கற்பிப்பது பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் முடிவைப் பொருத்தது என்றும் கூறப்படுகின்றது.  அதாவது, மாணவர்களின் அறிவு வளர்ச்சியிலோ மொழி ஆளுமையிலோ காட்டிற்கு பெரிய பங்கு இருக்கப்போவதில்லை என்பதையே கல்வி அமைச்சின் அறிக்கை தெரிவிக்கின்றது.

ஆகவே கல்வி தளத்தில் பெரிய பங்காற்ற முடியாத வெற்றுப் பகுதியை இவ்வளவு முனைப்போடு கல்வி அமைச்சு புகுத்துவது பொருளற்றது.  இதனால் வீண் சர்ச்சைகள் உருவாவதோடு மத இன நல்லிணக்கத்துக்கு தீமை விளைகின்றது. மலேசிய மாணவர்களின் கல்வியாற்றலுக்கு பங்காற்ற முடியாத ஒரு திட்டத்திற்காக மக்கள் பிளவுபட்டு உரத்த குரல் எழுப்புகின்ற நிலையை கல்வி அமைச்சு உருவாக்கியுள்ளது. ஆகவே இன்று அடக்கம் செய்யக் காத்துகிடக்கும் பிணத்துக்காக சண்டையிடும் நவீன மலேசியர்களால் நாடு நிறைந்துள்ளது. வனப்பெழுத்து சர்ச்சை மலேசியர்களின் மன வனப்பை அழித்துக் கொண்டுள்ளது.

http://www.agc.gov.my/agcportal/uploads/files/Publications/LOM/MY/Akta%2032.pdf

https://www.freemalaysiatoday.com/category/opinion/2019/08/08/mayat-jawi-yang-belum-dikafan-dan-muruku-ikan-popo/

https://www.sistemguruonline.my/wp-content/uploads/2019/02/DSKP-KSSR-SEMAKAN-2017-BAHASA-MELAYU-TAHUN-4.pdf

https://www.utusan.com.my/berita/politik/gerakan-selar-nie-ching-umum-laksana-tulisan-jawi-1.945073

http://klikweb.dbp.my/wordpress/?p=4039

https://m.malaysiakini.com/news/486458

6 comments for “ஜாவி-காட்- வனப்பெழுத்தும் வாய்ச்சண்டையும்

 1. Aravin Kumar
  September 1, 2019 at 1:21 am

  அரசின் தெளிவற்ற அணுகுமுறைகளுக்கு அப்பால் பண்பாடு, மொழி அத்தனையும் சமயத்துடன் மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கும் மனநிலை சரியானதாகத் தோன்றவில்லை. ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு சமயத்தின் குறியீடாகக் காணபது தோற்றப்பிழை. இந்த விவகாரத்தில் அதற்கான முகாந்திரம் இருக்கிறது. கல்வியாளர்களும் கருத்து தெரிவிப்பர்கள் மீதும் கடுமையான வன்மம் பகிரப்பட்டதைக் காண முடிந்தது. சீனப் பள்ளிகளில் பயிலும் மற்ற இன மாணவர்கள் மீது சீனம் கற்பதால் எம்மாதிரியான கலாச்சார, பண்பாட்டு, சமய தாக்குறவுகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டும். இதைத் தான் சார்ந்த மத, இன அடையாளத்தை மட்டுமே காரணமாகக் காட்டி நிராகரிக்கும் உணர்ச்சி மேலிடல் தவறான வழிமுறை. கட்டாயம் என்று அல்லாமல் தெரிவாக இருந்தால், இந்தளவான சிக்கலைத் தவிர்த்திருந்திருக்கலாம். தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் முஸ்லிம், கிருஸ்துவ சிறுபான்மையினரும் கற்கிறார்கள் என்பதும் எண்ண வேண்டும். இந்தக் கட்டுரையில் ஜாவி வரலாறு, பின்புலம், அதன் பின் இயங்கும் அரசியல் எனக் கட்டுரையாளர் அளித்திருக்கும் விரிவான கட்டுரை உணர்ச்சி அடங்கி அறிவு தெளிவுடன் இருக்கும் நல்ல கட்டுரை.

 2. Johnson Victor
  September 1, 2019 at 8:30 pm

  ஜாவி-காட்- வனப்பெழுத்தும் வாய்ச்சண்டையும்
  (http://vallinam.com.my/version2/?p=6327)

  நண்பர் அ.பாண்டியன் மேற்கண்ட தலைப்பில் எழுதிய இந்த நீண்ட விளக்கத்தை வாசித்ததின் அடிப்படையில் எனது விமர்சனங்களை எழுதுகிறேன்.

  இதுவரைக்கும் இந்த விவகாரம் தொடர்பில் எழுந்த சர்ச்சை தொடர்பில் நான் வாசித்த அறிவுப்பூர்வமான ஆய்வுக் கட்டுரையாக நான் அவருடைய கட்டுரையை மதிப்பிடுகிறேன். நான் கலந்து கொண்ட ஒரு சில ஜாவி எதிர்ப்புக் கூட்டங்களில்/புலனக் குழுக்களில் பகிரப்பட்ட கருத்துகள், அவர் கூறியது போல் இனவாத உணர்வுகளால் தூண்டப்பட்டிருந்ததை உணருகிறேன்.

  அவருடைய கட்டுரையின் பெரும் பகுதி ஜாவி வனப்பெழுத்தைச் சூழ்ந்துள்ள வரலாற்றுக் கூறுகள் நிறைந்திருந்தன. மேலோட்டமாக வாசிக்கும் போது, அவர் ஏதோ ஜாவி எழுத்துக்கு ஆதரவாகப் பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றியது. கட்டுரையின் பிற்பகுதியில், இதனால் ஏற்படும் பின்னடைவுகளைப் பற்றி எழுதியிருப்பது எனக்கு ஆறுதலைத் தந்தது. ஆசிரியர் பாண்டியன் சராசரி எழுத்தாளர்களைப் போல் சிந்தனையில் தோன்றுவதை எழுதுபவர் அல்லர் என்பதை அவருடைய இந்த ஆய்வு நிறைந்த கட்டுரை காட்டுகிறது.

  ஜாவி எழுத்தின் வரலாற்றையும் அதற்கு எதிராக ஏற்பட்ட கண்டனங்களையும் அவர் பின்வரும் ஒரு உவமானத்தோடு விளக்கியிருக்கலாம்……

  மலேசியாவில் இன்றைய தமிழர்கள் தமிழை ஆங்கிலத்தில் (ரோமானிய எழுத்துகளில்) எழுதுவைக் காண்கிறோம். இன்றைக்கு (என்னைப் போன்ற) மொழி சார்ந்த போராளிகள் பலர் இருப்பதால், ரோமனிய வடிவத் தமிழ் இன்னும் தன் ஆக்கிரமிப்பைச் செலுத்த முடியாமல் தவிக்கிறது. ஆனால், ஒரு காலத்தில் எம்மைப் போன்றோர்கள் படிப்படியாகக் ‘கண் மூடிய பிறகு’ தமிழ் எழுத்துகள் வழக்கொழிந்து, ‘ரோமானிய தமிழ்’ 100 விழுக்காட்டுப் பயனில் இருக்கும். தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழி பாட புத்தகங்கள் கூட ‘ரோமானியத் தமிழில்’ எழுதப்பட்டிருக்கும். இன்று பல தேவாலயங்கள் இதைத்தான் தமிழ் என்று அடையாளப்படுத்துகின்றன. சமய உணர்வுடைய இந்துக்கள் கூட தேவாரம், திருவாசகங்களை ரோமானியத் தமிழில் எழுதுகிறார்கள்.

  சுமார் 50 வருடத்தில் இந்திய சமுதாயத்தினர் தமிழ் எழுத்து வடிவங்களை முற்றிலும் மறந்திருப்பர். அப்போது யாராவது தமிழ் ஆர்வளர் எழுந்து, ‘தமிழிய தமிழ்’ மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று சொன்னால், ஜாவி எழுத்துக்காக ஏற்பட்ட அதே கொந்தளிப்பு 50 வருடத்துக்குப் பிறகு நம் சொந்த மொழிக்கே ஏற்படும். ஒரு வேளை வாதங்கள் சற்று மாறு பட்டிருக்கலாம். ஆனால், இன்றைய தினம் ஏற்படும் அதே அறியாமையை ‘தமிழிய தமிழுக்கும்’ காண முடியும்.

  ஆனால், தமிழையும் ஜாவி மலாய் மொழியையும் ஒப்பிடுவதற்கு எல்லைகள் உண்டு. தமிழ் மொழி தனக்கே உரிய வரி வடிவத்தை 2000 ஆண்டுகளுக்கு மேலாகக் கொண்டிருக்கிறது. நம் இனம் அடுத்தவர் எழுத்துகளை இரவல் வாங்கியது கிடையாது. இளைய தலைமுறையினர் ரோமானிய எழுத்துகளில் தமிழை எழுதுவது இன்றும் கொச்சையாகக் கருதப்படுகிறது.

  இந்தக் கட்டுரை பல வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக ஆசிரியர் பாண்டினுக்கு எனது நன்றியைத் தெரிவத்துக் கொள்கிறேன்.

  – ஜான்சன் விக்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *