மனித இனத்தின் வாழ்வியல் இருத்தல் தடங்கள்தான் வரலாறு ஆகிறது. அவ்வரலாறுகளைப் பதிவு செய்து ஆவணப்படுத்தும் செயல்பாடுளில் மிக முக்கியமானது வரலாற்று இலக்கியப் புனைவுகள். எல்லாப் புனைவுகளும் ஏதோ ஒருவகையில் ஏதாவதொன்றின் வாழ்வியலைப் பதிவு செய்துகொண்டுதான் வருகின்றன. அவை கலைநுட்பமாகக் காட்சிப்படுத்தப்படும்போது இலக்கியம் எனும் தகுதியைப் பெற்று மிளிர்வதைக் காணமுடிகிறது.
1970கள் தொட்டே கவிதை, நாவல், சிறுகதைகள் போன்ற பல இலக்கியங்களில் மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலைகள் புனைவுப் பொருளாகப் பேசப்பட்டுவந்துள்ளன . இவை ஆ. நாகப்பன், சா.ஆ. அன்பானந்தன், அ.ரெங்கசாமி, சீ. முத்துசாமி, ஐ.இளவழகு போன்ற பழம் பெரும் எழுத்தாளர்களால் மிக துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இக்குறுநாவலையும் இணைத்துக் கொள்ளலாம்.
மிச்சமிருப்பவர்கள் என்ற இந்த வரலாற்றுப் புனைவில் மலேசிய இந்தியர்களின் 60 ஆண்டுகால வாழ்க்கைப் பயணத்தின் போராட்டங்கள் எதையும் மிச்சம் வைக்காமல் மிகச் அடர்த்தியாக 104 பக்கங்களில் நெருக்கிக் கொடுத்துள்ளார் செல்வன் காசிலிங்கம். அரசியல் அதிகாரமும் பொருளியல் பலமும் போடுகின்ற ஆட்டத்தில் சிக்கித் தவித்துத் தடுமாறி தன் வாழ்வாதாரத்தை நிறுவ முயலும் இந்தியச் சமூகத்தின் படப்பிடிப்புதான் இந்த நாவல்.
‘மிச்சமிருப்பவர்கள்’ யார்? நாவலில் காட்டப்பட்ட இந்தியச் சமூகத்தின் வார்ப்புகளா? இல்லை என்பதுதான் உண்மையாகப்படுகிறது. நாவலில் சித்தரிக்கப்பட்ட அனைத்துச் சிக்கல்களையும் கடந்து, வாழ்க்கை இடர்பாடுகளில் உதிர்ந்து விடாமல் இன்னமும் இந்த மண்ணில் போராடிக் கொண்டிருக்கும் நம்மைதான் கதாசிரியர் ‘மிச்சமிருப்பவர்கள்’ என்கிறார். இனி இந்த மண்ணில் மிச்சமிருப்பவர்கள் எதிர்கொள்ளப்போகின்ற வாழ்க்கை எத்தகையது? என்பதை உணர்த்தும் வகையில்தான் தலைப்பு அமைந்துள்ளது.
சொந்த மண்ணில் வாழ்வாதாரம் இல்லாத நிலையில் வெளிநாட்டுக்குச் சென்று பிழைத்துக் கோணியில் பணம் அள்ளி வரலாம் எனப் பலக் கனவுகளோடு வந்த தமிழினத்தின் அடுத்தடுத்த தலைமுறைகள் தோட்டப்புறத்தில் எதிர்நோக்கிய போராட்டம் ஒன்றனைத்தான் தொடக்கமாக கொண்டுள்ளது இந்நாவல். மலாய்க்காரர்களுக்கான பெல்டா நிலக் குடியெற்றத் திட்டம்போல் இந்தியத் தோட்டப்பட்டாளி மக்களை நில உரிமையாளர்களாக ஆக்கப் போவதாகக் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வரப்பட்டவர்களின் அவலநிலையை முன்வைத்தே கதைத் தொடங்குகிறது. 18ஆம் நிரையில் தோட்ட மக்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற வாசலில் நிற்கின்ற பாட்டாளி மக்களின் புலம்பலில் தொடங்கிய கதை சட்டென பாய்ந்து அடுத்தச் சிக்கலுக்குள் தாவுகிறது.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மகேஸ்வரன் போலீஸ் காவலில் மரணமடைந்து விடுகிறான். கழிப்பறையில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மரணத்தில் ஐயம் இருப்பதாகச் சொல்லி பொன்னுசாமியும் சிலரும் சேர்ந்து சட்ட நடவடிக்கையில் இறங்குகின்றனர்.
அடுத்ததாக கதை பொன்னுசாமியின் வாழ்க்கையின் விவரணைகளுக்குள் செல்கிறது. அவரின் இயல்பு சுட்டப்படும் நிலையில் ஒருங்கே தமிழர், சீனர், மலாய்க்காரர்களின் ஒற்றுமையாக வாழ்ந்த நிலையையும் தற்போது வேற்றுமைகள் பாராட்டி வாழ்கின்ற நிலையையும் சட்டெனக் காட்டி கடந்து செல்கின்றார் கதை ஆசிரியர். தொடர்ந்து பொன்னுசாமியின் குணவியல்பு உணர்த்தும் நிலையிலே அடுத்தப் போராட்டமும் தொற்றிக் கொள்கிறது. 1978 அல்லது 1979களில் கெர்லிங் தோட்டத்து முருகன் கோவில் சிலை உடைப்புச் சிக்கலையும் மேலோட்டமாகக் காட்டிச் செல்கின்றார்.
தொடர்ந்து செல்வாவின் நினைவில் அடிக்கடி வந்து போகின்றான் கனகசபை. மறுகணமே அண்ணாச்சிக் கடையின் மீன் குழம்பு சுவை செல்வாவை மிரள வைக்கிறது. அங்கு வங்காளதேசி, இந்தோனிசியப் பணியாளர்களின் இருத்தலும் மிக மேலோட்டமாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து செல்வாவின் மனம் தன் அம்மா, பழைய வீடு, அப்பாவின் பன்றி வேட்டை, அவரின் காற்பந்து ஆர்வம் என எங்கெங்கோ கிளைத்து மீண்டும் கனகசபையின் கதைக்குத் திரும்புகிறது.
கனகசபை எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்றும் அரசுப் பல்கலைக்கழத்தில் இடம் கிடைக்காமால் தளர்ந்து போகின்றான். எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் இறுதியில் Duka cita என்றே பதில் வருகிறது. விருப்பமின்றி தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றான் கனகசபை. இதற்கிடையே ராஜதுரை-தேன்மொழி காதல் சிக்கல் நுழைகிறது. சாதி வேற்றுமையால் இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்கின்றனர். பின் குழந்தையோடு திரும்பி வந்து குடும்பத்தோடு சேர்ந்து வாழ்கின்றனர்.
பட்டணத்தில் தனியார் கல்லூரியில் சேர்ந்த கனகசபை போதைப் பொருளுக்கு அடிமையாகின்றான். பின் கோவில் திருவிழாவில் மயங்கி விழுந்து மரணமடைகின்றான்.
லோரி ட்ரைவராகப் பணியாற்றும் செல்வாவின் விழிவழி புறம்போக்குக் குடியிருப்புச் சிக்கலும் போதைப் பொருள் சிக்கலும் காட்டப்படுகின்றன. இதற்கிடையில் ரகு என்கிற குண்டர் கும்பல் தலைவன் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவமும் தொற்றிக் கொள்கிறது.
ம.இ.கா அரசியல் கட்சியின் நிலையையும் இந்நாவலில் விமர்சனப் பொருளாக்கியுள்ளார் கதாசிரியர். தோட்டச் சிக்கல் தொடருகின்ற நிலையில் ம.இ.கா இடைத்தரகராகச் செயல்படுகிறது. அக்கட்சியின் தில்லுமுல்லுகளை அறிந்த பொன்னுசாமியும் அவரைச் சார்ந்தவர்களும் ம.இ.காவை மிகச் கடுமையாகத் திட்டித் தீர்க்கின்றனர். இவை அனைத்தையும் அடுத்தடுத்து வாரி கொண்டுவந்த நாவலின் கதையோட்டம் இறுதியாக ஹிண்ட்ராப் எழுச்சிப் பேரணியில் மூட்டையாகக் கட்டப்படுகிறது.
அடுக்காக எங்கும் நிறுத்தம் இல்லாமல் தொடர்ச்சியாகப் போராட்டங்களே இக்குறுநாவலை ஆக்கிரமித்து நகர்வதைக் காண முடிகிறது. தோட்டப்புற நில உரிமைப் போராட்டச் சிக்கலில் தொடங்கி கோயில் சிலை உடைப்பு, சாமிவேலு அரசியல் வழி, ம.இ.கா, உயர்க்கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, சிறைச்சாலை மரணங்கள், சீனர்களின் கைக்கூலிகளான இந்தியர்கள், போதைப் பொருள் கடத்தல், கொலை, வன்முறை, புறம்போக்குப்பகுதியின் அவலம் என்றே கதை வளர்ந்து முடிந்து விடுகிறது.
தொடக்கத்திலும் இறுதியிலும் கதை எழுத்தாளரின் பார்வையில் படைக்கப்பட்டிருகின்ற நிலையில் கதையின் இடையில் செல்வாவே கதைச் சொல்லியாக மாறி கதையில் பங்கேற்கின்றான்.
இயல்பாகவே கதைப்புனைவுகளில் முக்கிய கதைப்பாத்திரத்தை மையப்படுத்தியே கதை
நிகழ்வதைக் காணலாம். அதனைச் சார்ந்துதான் துணை, கிளைக் கதைகளென கதை வளர்ச்சி நீளும். ஆனால் இக்குறுநாவலில் இந்த இயல்பு நிலை மீறப்பட்டுள்ளது. இந்நாவலை வாசிக்கும் பொழுது யார் முதன்மைக் கதைப்பாத்திரம் என்ற வினா நம்முள் எழாமலில்லை. செல்வா, பொன்னுசாமி, அண்ணாச்சி, சந்துரு, கனகசபை என நாவலில் கதைபாத்திரங்களின் பட்டியல் நீளும் நிலையில், இவர்களில் யார் முதன்மைப் பாத்திரம்? கண்டிப்பாகச் செல்வாதான் என்ற முடிவுக்கு வந்தாலும் கதை வளர்ச்சியில் எங்கும் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்துபவனாக அவன் இல்லை. அவன் விழிவழி நகருகின்ற சம்பவங்களிலும் சில அத்தியாயங்களில் செல்வாவின் மிக மேலோட்டமான இருத்தலும்தாம் கதையில் அவனின் வியாபகத்தை உறுதிச் செய்கிறது. மேலும் செல்வா இல்லாமலேயே இக்கதை இயங்க முடியும். செல்வா இக்கதை முழுவதும் பயணிக்க, பிற பாத்திரங்கள் சில பக்கங்களில் வாழ்ந்து செல்லும் நிலையைதான் காணமுடிகிறது. செல்வா என்ற நாரில் கோர்க்கப்பட்ட பிற பாத்திரங்கள் சில கணங்களில் உதிர்ந்தாலும் கதை முடிந்தும் மணம் வீசி கமழுகின்றனர்.
இருப்பினும், நாவலில் துண்டங்களாக உடைந்து கிடக்கும் போராட்டங்கள், செல்வாவைக் கொண்டே இணைக்கப்படுகின்றன.
நுகர்வோரின் புரிதல் சார்ந்தும் செல்வாவின் கதாபாத்திரத்தின் நிறுவல் இந்நாவலில் உறுதிச் செய்யப்படுகிறது. போராட்டங்களை மையப்படுத்தி மட்டுமே கதை வாசிப்பு நிகழும் வேளையில் செல்வா முக்கியத்துவம் பெறத் தவறுகிறான். போராட்டங்களைக் எதிர்கொண்டு வென்றோ அல்லது வீழ்ந்தோ அடையாளம் பெறுகின்றனர். பிற பாத்திரங்களைப் போல அல்லாமல் செல்வா எந்தப் போராட்டத்திலும் தீவிரம் காட்டாமல் விலகிக் கொள்ளும் தன்மையினனாகப் படைக்கப்பட்டுள்ளான்.
இருப்பினும் இந்நாவலில் செல்வாவை முன்னிலைப்படுத்தி வாசிக்கும்போது, மேலும்மொரு புதிய புரிதலைக் காணமுடிகிறது. கதையின் தொடக்கத்திலிருந்து செல்வா தன்னைச் சுற்றி நடக்கின்ற இந்தியர்கள் சார்ந்த போராட்டங்கள் அனைத்தின் மீதும் அதிருப்தி கொண்டவனாகவே இருக்கின்றான். இருப்பினும் அவை அனைத்தையும் அழுத்தமில்லாமல் கடந்து செல்கின்றான் செல்வா. அவை அவன் மனவெளியில் மிகப் பூடமாகக் கூடுக் கட்டிக் கொள்கிறது. மனம் இறுக்கம் அடைந்து விடுதலைக்காக ஏங்கி நிற்கின்ற நிலையில் இந்தியர்களின் ஹிண்டிராப் பேரணி அவனுக்கு மாபெரும் எழுச்சியைத் தூண்டிவிடுகிறது; கதையும் முடிகிறது. அந்த முடிவில்தான் செல்வாவின் புதிய முகம் உயிர்த்தெழுந்து அச்சில் இல்லாமல் மிச்சமிருப்பவர்களோடு போராடத் தொடங்கி விடுகிறது.
இக்குறுநாவலை வாசிக்கும்பொழுது கதைச் சம்பங்கள் அனைத்தும் கலைத்துப் போட்ட நிலையில் ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் நகர்வதாகத்தான் தோன்றுகிறது. முதலில் தோட்டப்புற மக்களின் நில உரிமைப் போராட்டத்தில் தொடங்கிய கதை சட்டென அடுத்த அத்தியாயத்தில் புதிய சிக்கலை முன்னெடுத்து செல்லுகையில் வாசகன் சற்றே குழம்பி நின்று, மீண்டும் முதல் அத்தியாயத்தின் சில பக்கங்களைப் புரட்ட வேண்டியுள்ளது. இப்படியே நாவலில் பல போராட்டங்களே அடுத்தடுத்து காட்டப்படுவதால் வாசகன் வாசிப்பில் ஓர்மை பண்பு சீர்குலைகிறது.
முதலில் பதிந்த வாசக அனுபவத்தை விட்டு அடுத்த அத்தியாயத்திற்குள் நுழைந்து புதிய அதிர்ச்சிக்கு உள்ளாகின்றான் வாசகன். அங்கு மாறுபட்ட சிக்கல், புதிய கதைக் களம், புதிய கதாபாத்திரம் என்று வரும்போது வாசகன் மீண்டும் முதலிலிருந்தே தன்னைப் தயார்படுத்திக் கொண்டு வாசிப்பிற்குள் நுழைய நேருகிறது. இருப்பினும் இந்நாவலில் இந்தியச் சமூகத்தின் இக்கட்டான நிலை என்ற கரு மையமாக அமைந்து செயல்படுவதால் கலைத்துப் போடப்பட்ட அனைத்தும் ஒரு புள்ளியில் சமரசமாகி ஓர்மையைத் தக்கவைத்துக் கொள்கிறது.
கடந்த 60 ஆண்டுகளில் இந்தியச் சமூகம் எதிர்நோக்கிய அத்துணைச் சிக்கலைகளையும் 104 பக்கங்களிலே காட்டிச் செல்வது அசாதாரணம். அதை இந்நாவல் செய்திருக்கிறது என்றால் மேற்கூறிய சிக்கல்களின் அடர்த்தி கேள்விகுறியாகின்ற நிலையில் கதாசிரியர் மிக நுட்பமாக அதாவது தேவையான அளவு மட்டும் காட்டிச் சென்று மிச்சத்தை வாசகனின் அகவெளியில் நீளச் செய்கிறார். இது இந்நாவலின் சிறப்பாக அமைகிறது.
இலக்கியப் படைப்புகள் வாசக இடைவெளியை ஏற்படுத்தி வாசகனை அப்புனைவில் பங்கேற்கும் நிலையை உறுதிச் செய்யவேண்டும். மேலும் புதிய அனுபவங்களை வாசகன் நுகரும் வண்ணமாக படைப்புகள் அமையவேண்டும். மிச்சமிருப்பவர்கள் இவ்விரண்டிற்கும் வழிவிடவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அள்ளித் தெளித்தது போல தொடர்ச்சியாக மலேசிய இந்தியர்களின் கடந்துவிட்ட இக்கட்டான நிலைகளையும் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற சமகால சிக்கல்களையும் செல்வா, பொன்னுசாமி, மகேஸ்வரன், சந்துரு போன்ற கதைமாந்தர்களின் மேல் ஏற்றி வலம் வந்துள்ளர் கதாசிரியர். மலேசிய இந்தியர்கள் அனைவரும் கடந்து வந்த அதே வாழ்வியலைத்தான் எந்தப் புதுமையும் இல்லாமல் மிக அப்பட்டமாக இந்நாவலில் பதிவு செய்திருக்கின்றார். கதை நெடுகிலும் வந்து போகின்ற கதை மாந்தர்களை நீக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு வரலாற்று நூலுக்கான தகுதியை மட்டும் பெறுகிறது இப்புனைவு. இங்குதான் இப்படைப்பின் இலக்கியத் தகுதி கேள்விக்குறி ஆவதாக உணர்கின்றேன்.
தேர்ந்த இலக்கியப் புனைவுகள் கதையைச் சொல்லாது; காட்டிச் செல்லும் என்பார்கள். இந்நாவலில் காட்சிப் படுத்தலைவிட கதைச் சொல்வது மிகுதியாகத் தென்படுகிறது. நாவலில் பல இடங்களில் சம்பவ விவரிப்புகள் மிக அப்பட்டமாக நேரடியாகவே கதாசிரியரின் கூற்றுவழி உணர்ச்சி வார்ப்புகளின்றி தட்டையாகக் கடந்து செல்வதைக் காணமுடிகின்றது.
“இறுதியாக பிப்ரவரியில் நடந்த, போன வருடத்துக்குரிய ஆறாம் வகுப்பு யு.பி.எஸ்.ஆர் பிள்ளைகளுக்கான பரிசளிப்பு விழாவன்று வந்தது ஞாபகம் இருக்கிறது. நிகழ்ச்சியின் முதல் நாள் மழையடித்து ஊற்றியதில்… (பக்கம் 44)”
இவ்வாறான சம்பவ விவரிப்புகள் கதையின் உயிரோட்டத்திற்குத் தடையாக அமைந்து வாசப்பில் தொய்வை ஏற்படுத்தி விடுகிறது.
கருத்துச் சொல்வதற்கு அல்ல கதைக்கலையின் வடிவம் என்ற புரிதல் ஒவ்வொரு படைப்பாளனுக்கும் வேண்டும். கதையின்வழி கருத்துச் சொல்லும் நிலை கதைக்கலையின் நுட்பத்தைச் சிதைத்து வாசகனுக்கு முழுமையான நுகர்ச்சியை ஏற்படுத்தாது.
“மக்களுக்கு நிரந்தரத் தீர்வுகள் எதையும் தர முடியாத நிலையில் யாரைத் திருப்திப்படுத்த இந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று கோபம் வந்தது. என்னைப்போன்ற தனிப்பட்ட மனிதர்களால் சில உதிரியான உதவிகளைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது. … பக்கம் 82”
இதுபோன்ற விமர்சனப் போக்கும் கருத்துச் சொல்லும் முனைப்பும் வாசகனின் பங்கேற்பைக் கட்டுப்படுத்துவதோடு வாசிப்பின் தீவிரத்தைக் குறைத்து வெளியேற்றத்திற்கு வழிவகுத்துவிடுகிறது.
மேலும் இந்நாவலில் செல்வன் காசிலிங்கனின் சமூக அக்கறை மதிப்பிற்குரியது. இந்திய சமூகத்தின் நிலை குறித்த உண்மையான தகவல்கள் அரசாங்க கருப்புப் பெட்டிக்குள் மூடி மறைக்கப்பட்டு உறங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் நம் சமூகத்தில் நிலவும் சிக்கல்களை மிக அசலான வண்ணத்தோடு யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் செல்வன் காசிலிங்கம். சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் கட்சிகள்மீதும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் மிகத் காத்திரமாகவே விமர்சனங்களை முன் வைக்கின்றார் கதாசிரியர்.