கே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல்

36950874_2014690675210667_8402146561550712832_nபரந்த இவ்வுலகத்தில் பலவிதமான மக்கள் மொழி, இனம், மதம், கலாச்சாரம், பழக்கவழக்கம் என்று பிளவுப்பட்டுள்ளனர். இவையனைத்தும் ஆதியிலிருந்து உருவாகியவை அல்ல. தொடக்கத்தில் மனிதன், மிருகம், இயற்கை இம்மூன்றைக் கொண்டு இவ்வுலகம் இயங்கியது. நாளடைவில் மனிதன் பரிணாம வளர்ச்சியை நோக்கி செல்லும்போது தனக்கான தேவைகள் என்னவென்று உணரத் தொடங்குகிறான். அதன்பின், மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்டதுதான் மொழி, இனம், பண்பாடு போன்றன. மனிதன் தனக்கென்றும் தன் குழுவுக்கென்றும் ஒரு அடையாளத்தை நிலைநிறுத்த எண்ணியதன் நீட்சியாக சமுதாயம் உருபெற்றது.

நாடோடிகளாக இருந்த மனிதர்கள் நிரந்தரமாக தங்களுக்கென்று ஒரு இடத்தை ஆக்கிரமைத்துக் கொண்டு, பின்னர் அதை ஒரு நாடாகக் கட்டமைக்கும் போக்கு உருவானது. இச்சுழற்சியின் தொடக்கப்புள்ளிக்கு வந்து நின்ற மனிதன் மீண்டும் அதே நாடோடி நிலைக்கு திரும்பினான். தான் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு வறுமை, போர் என எண்ணிலடங்கா காரணங்களினால் வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டான்.

இவ்வாறு உலகெங்கும் எல்லா காலக்கட்டத்திலும் பல்வேறு இனங்கள் பரவிச்செல்வது நடந்து கொண்டுதான் உள்ளன. இந்தியர்கள், சீனர்கள், இந்தோனேசியர்கள் என இன்னும் பல இன மக்கள் தங்கள் முன்னோர்கள் பிறந்து வாழ்ந்த நாட்டை விட்டு குடியேறிகளாக மற்ற நாடுகளுக்குச் சென்றுள்ளனர். குடியேறிகளாக சென்றவர்கள் நாளடைவில் குடிமக்களாக மாறிவுள்ளதையும் வரலாற்று சான்று பகரும். ஆயினும், பல தலைமுறைகள் கடந்துவிட்ட பின்னும் தங்களுக்கான அடையாளத்தையும் உரிமைகளையும் நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சிக்கு எதிராக தங்கள்மீது ஏவப்படும் ‘குடியேறிகள்’ எனும் சொல்லைப் புலம்பெயர்வுக்கு உட்பட்ட சமூகங்கள் எல்லா காலங்களிலும் எதிர்கொண்டுவந்துள்ளன.

இந்தச் சமயங்களில்தான் தனக்குள் தடுமாற்றம் ஏற்பட்டு ‘தான் யார்?’, ‘தன்னுடைய அடையாளம் எது?’ என்று மனிதன் தேட விளைகிறான்.

கடந்து போன வரலாற்றைக் காரணம் காட்டி  பிறந்து வளர்ந்த நாட்டில் குடியேறிகள் என்று ஒருவர் அடையாளப்படுத்துவது அர்த்தமற்றது. இதுகுறித்து உலகெங்கும் பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் பேசியுள்ளனர். அவர்களில் வி.எஸ்.நைபால், கேரில் பிலிப்ஸ், பாரதி முகர்ஜி, ஜும்பா லஹிரி, ஆமி டான், ஷெர்லி லிம், டோனி மோரிசன், கே.எஸ்.மணியம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களிடம் பொதுவாகக் காணப்படும் ஒற்றுமை என்னவென்றால் அவர்கள் அனைவரும் தங்கள் தாய்நாட்டிற்கு அந்நியமான ஒரு நாட்டின் குடியுரிமையைக் கொண்டுள்ளனர் (Hardev Kaur & Manimangai, 2012, ப.68).

இந்த வரிசையில் தவறாமல் குறிப்பிடப்படும் கே.ஸ்.மணியம் மலேசிய எழுத்தாளர் ஆவார். கிருஷ்ணன் சுப்ரமணியம் 1916-இல் இந்தியாவிலிருந்து மலாயாவுக்குக் குடிபெயர்ந்த அவருடைய பாட்டியின் வழி மலேசியாவில் தோன்றிய இரண்டாவது மலேசிய இந்தியர் தலைமுறை ஆவார். இவருடைய படைப்புகள் அனைத்தும் இடமாற்றம், இடப்பெயர்வு, குடியேறிகள், மலேசியாவில் இந்தியர்களின் நிலை குறித்தே ஆழமாகப் பேசப்பட்டுள்ளது. மலேசியா போன்ற பல்லினம் வாழும் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு தரப்பு மக்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகளும், மண்ணின் மைந்தர்கள் என்ற அடையாளமும் கொடுக்கப்படுகிறது. இதனால் சிறுபான்மை என்று சொல்லப்படும் மக்கள் தங்களுடைய அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ள போராட வேண்டியுள்ளது.

கே.ஸ். மணியம் போன்ற வளமிக்க எழுத்தாளர் ஒருவர் இந்திய கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் தன்னுடைய எழுத்துகளில் முன்னெடுத்துக் காட்டுவது முக்கியம் என்று நினைக்கிறேன். மலேசியாவில் உள்ள இந்திய மக்களைப் பற்றி கே. எஸ். மணியம் வலியுறுத்தி தன் எழுத்தில் கொண்டு வந்திருப்பது அவருக்கு தன் இனத்தின் மீது உள்ள குருட்டு விசுவாசம் என்று சொல்வது பொருந்தாது. மாறாக தன்னுடைய மனதுக்கு மிக நெருக்கமாக சுவாசித்த ஒரு சமூகத்தைப் பற்றிய அனுபவம் சார்ந்த பதிவாகவே காண வேண்டும்.

சுப்பிரமணியம் கிருஷ்ணன் (கே.ஸ்.மணியம்) 1942-ஆம் ஆண்டு மலேசியாவில் வடக்கில் அமைந்திருக்கும் பீடோங் என்ற சிறுநகரில் உழைக்கும் வர்க்கப் பின்னணியைக் கொண்டு பிறந்துள்ளார். இவரின் பெற்றோர் மருத்துவமனையில் சலவைத் தொழில் செய்பவர்களாகவும் மற்ற நேரங்களில் அருகில் உள்ள தோட்டத்தில் பால் மரம் வெட்டும் தொழிலாளியாகவும் பணிபுரிந்துள்ளனர். அச்சமயங்களில் கே.ஸ்.மணியம் பெற்றோருக்கு உதவியாக சென்றுள்ளார். இதன் மூலம் அவருக்குத் தோட்டப்புற மக்களும் தோட்டப்புற சூழ்நிலையும் நன்கு பரிட்சயமாகி உள்ளது. தோட்டத் தமிழ் பள்ளியில் பயின்ற அவர் ஒரு வருடம் கழித்துச் சுங்கை பட்டாணி பட்டணத்தில் அமைந்திருக்கும் இப்ராஹிம் ஆங்கில பள்ளிக்கு மாற்றப்பட்டார். ஓராண்டு காலம் படித்த பீடோங் தமிழ்ப்பள்ளியின் தனிமைப்படுத்தப்பட்ட நிலை தனக்குப் பயத்தையும் நடுக்கத்தையும் மட்டுமே தந்ததாக குறிப்பிடும் கே.ஸ்.மணியம், ஆங்கில பள்ளியில் படிக்கும் போது இதற்கு நேர்மாறான உணர்வை அடைந்ததாக குறிப்பிடுகிறார்.

1960-இல் பள்ளிப் படிப்பை முடித்த அவர் சில மாதங்கள் மாணவ ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். பின்னர், மருத்துவ படிப்பிற்காக இந்தியாவுக்கும், 1962 முதல்  1964 வரை வோல்வெர்ஹாம்டனில் உள்ள மலாயா ஆசிரியர் கல்லூரியில் பயில இங்கிலாந்துக்கும் சென்றார். அப்போது பலதரப்பட்ட இனத்தினருடன் பழகும் சூழல் அவருக்குப் புதிய அனுபவத்தை அளித்தது. மலேசியாவுக்குத் திரும்பிய கே.ஸ். மணியம் கெடாவில் உள்ள பல கிராமபுற பள்ளிகளில் பாடம் போதித்து வந்தார். அதற்குப் பின், அவர் 1970-ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பை ஆங்கில துறையிலும் முதுகலைப் பட்டக் கல்வியை மலேசியா மற்றும் சிங்கப்பூர் கவிதைகள் குறித்தான ஆய்விலும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். 1979-ஆம் ஆண்டு அதே பல்கலைகழகத்தில் ஆங்கில விரிவுரையாளராகப் பணிபுரிய தொடங்கி, 1997-ஆம் ஆண்டு ஆங்கிலத் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இளம் வயதில் எழுதத்தொடங்கிய கே.ஸ். மணியம் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துத்துறையிலும் இலக்கிய வாசிப்பிலும் தீவிர ஈடுபாடுடன் இயங்கி வருபவர். ‘இரத்தனமுனி’ அவரது முதல் சிறுகதையாகும். இவருடைய படைப்புகள் அனைத்தும் இந்தியர்களைச் சார்ந்து உள்ளதாக இருந்தாலும்கூட கூறும் முறையாலும் கதாபாத்திர வார்ப்பாலும் தனித்தன்மை வாய்ந்ததாக திகழ்கிறது. சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்குப் பின், மற்றும் மலாயா நாடு மலேசியாவாக மாற்றம் அடைந்த காலம் என இம்மூன்று காலக்கட்டத்தில் இந்தியர்களின் நிலை, மனப்பாங்கு, எதிர்நோக்கிய சிக்கல், அவர்கள் புதிய கலாச்சாரத்தோடு ஒன்றி வாழ எடுத்த முயற்சிகள், தன் சுயத்தை இழக்க முடியாமல் தடுமாறிய நிலை போன்றவற்றை தனது நாவல்களிலும் சிறுகதையிலும் பேசியுள்ளார். இவருடைய கதைகள் உலகளவில் ஏராளமான பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

நம் நாட்டின் ஆங்கில இலக்கிய உலகில் நாம் அங்கீகரிக்க வேண்டிய முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் கே.ஸ்.மணியம் என்று சொல்லப்படுகிறது. அவருடைய சில படைப்புகள் பள்ளி மாணவர்களுக்குப் பாடப்பகுதியாக போதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அவருடைய படைப்புகள் சார்ந்தும், கதைகளில் அவர் கையாண்டுள்ள உத்திகளைப் பற்றியும் பல்கலைகழகங்களில் நிறைய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நாட்டின் ஆங்கில இலக்கிய துறையில் நன்கு பரிட்சயமான கே. எஸ். மணியம் தமிழ் சூழலுக்கு அறிமுகமாகாமல் இருந்துள்ளது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

மலேசியத் தமிழ் இலக்கிய சூழலிலும் இந்தியர்களுக்கு மத்தியிலும் அவருக்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய படைப்புகள் அனைத்தும் இந்தியர்கள் தொடர்பானதாக இருந்த போதிலும் அவரது இலக்கியப் பிரதிகள் தொடர்பான அறிமுகமின்மையானது இந்நாட்டு இந்தியர்களிடயே, குறிப்பாக இலக்கிய சூழலில் இயங்குபவர்களிடையே இருக்கும் குறுகிய வாசிப்பைக் காட்டுகிறது. மறுநிலையில், படிவம் ஐந்து, ஆறு தமிழ் இலக்கியப் பாடப்பகுதியில் மலேசிய இந்தியர்கள் தோட்டப்புறத்தில் வாழ்ந்த சூழ்நிலைச் சார்ந்து எழுதிய எழுத்தாளர்கள், அவர்தம் சிறுகதைகள், நாவல்கள் பற்றி போதிக்கப்படுகிறது. ஆனால், இந்தியர்களின் நிலையை உளவியல் ரீதியிலும், சமூகவியல் அடிப்படையிலும் மிகவும் ஆழமாக எழுதியுள்ள கே.ஸ்.மணியம் பற்றிய சிறு அறிமுகம்கூட மாணவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. இதற்கு மொழியை ஒருபோதும் காரணமாக சொல்லக்கூடாது என்றே நினைக்கிறேன்.

கே. எஸ். மணியம் தன் படைப்புகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளதன்வழி மொழி, இனம், பண்பாடு என்ற பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடையும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது. மலாய்க்காரர், சீனர் என மலேசியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்கள்கூட அவருடைய படைப்புகளை வாசித்து ஆய்வுகள் செய்கின்றனர். இந்தியர்கள் தமிழகத்திலிருந்து மலாயாவுக்கு வந்தபோது எதிர்நோக்கிய சவால்கள், அடையாள நெருக்கடிகள், புதிய சூழலோடு ஒன்றி வாழ முடியாமல் தடுமாறிய நிலை என இந்தியர் அல்லாதவர்கள் தெரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

மலேசியச் சூழலில் தமிழில் வெளிவந்துள்ள சிறுகதைகளிலும் நாவல்களிலும் பெரும்பாலும் தோட்டபுற வாழ்வில் இந்தியர்கள் எதிர்கொண்ட இன்னல்கள், முதலாளித்துவ ஆதிக்கம், வறுமை, கங்காணிகளின் கொடுமைகள் தொடர்பான விடயங்கள் உணர்ச்சிவயமாகவும் பன்முகத்தன்மையற்றும் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். அதிகாரத்திற்கு எதிராக, அரசியல் ஒடுக்குமுறைகளின் எதிர்ப்புக்குரலாக மற்றும் இனரீதியான பாரபட்சங்களுக்கு எதிர்வினையாக வெளிப்படும் கதைகளும் எழுத்தாளர்களும் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் குறைவாகவே காணப்படுகின்றனர். கே.எஸ்.மணியத்தின் படைப்புகள் தனித்தன்மை வாய்ந்தது என சொல்லக் காரணம் இதுவே.

மேற்குறிப்பிட்ட அனைத்து கூறுகளும் அவருடைய படைப்புகளில் காண முடியும். வளர்ந்து வரும் இளம் இந்திய சந்ததியனருக்கு வெறுமனே முன்னோர்கள் பட்ட துயர்மிகு வாழ்க்கையைச் சொல்லி, மனதில் அவர்கள் மீது பரிவையும் மின்னல் கீற்றுபோல் தோன்றி மறையும் உணர்வெழுச்சியையும் ஏற்படுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. நிதர்சனமான உண்மைகளையும், எதார்த்தத்தையும், அறிவார்ந்த வகையில் சிந்திக்க வைக்குமாறான கதைகளே இளைய சமுதாயத்தினரிடையே கவனம் பெறும். அவ்வகையில் மாணவர்களிடையே கே.ஸ்.மணியத்தைப் பற்றியும் அவருடைய படைப்புகள் பற்றியும் அறிமுகம் அவசியம் என்றே உணர்கிறேன். இல்லையேல் கிணற்றுத் தவளைப் போல அவர்களது சிந்தனையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளே சுருங்கிவிடும்.

இச்சூழலில்தான் கே.ஸ்.மணியம் எனும் எழுத்தாளுமையைத் தமிழ் இலக்கிய, வாசக சூழலில் அறிமுகப்படுத்தும் பொருட்டு அவரது சில சிறுகதைகள் தமிழ் மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டு வல்லினம் பதிப்பாக 2018ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. எழுத்தாளர் விஜயலட்சுமி சில முக்கியமான கருப்பொருள்களைக் கொண்ட ஆறு சிறுகதைகளைத் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்.

பல்வேறு இனம் கலாச்சாரம் அடங்கிய ஒரு தேசத்தில் வாழும் இந்தியர்களின் உண்மையான அவலம் என்ன என்று சிந்தித்தவர்களும் எழுதியவர்களும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் மிகச் சிலரே. அப்படி எழுத வருபவர்களின் பிரச்சாரத் தொனியாலும் சமூகத்தில் நிலவும் ஒரு அவலத்தில் உளவியலை ஆழமாக அறியாததாலும் பரந்த அரசியல் இலக்கியம் பார்வை இல்லாததாலும் பல புனைவுகள் தட்டையான மொழியில் ஆழமின்றி மீந்துவிடுகின்றன. முற்போக்கு, புரட்சி, எதிர்வினை என்பதெல்லாம் மலேசியத் தமிழ் இலக்கியங்களில் தங்கள் சமூகத்திற்கு மட்டுமேயான உரையாடலாகச் சுருங்கிவிட்டன. இத்தகைய சூழலில்தான் கே.ஸ்.மணியத்தின் சிறுகதைகள் மொழிப்பெயர்க்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்தேன்-முன்னுரையிலிருந்து (விஜயலட்சுமி, 2018) என்று அவர் கே.ஸ்.மணியத்தின் சிறுகதைகளை மொழிப்பெயர்த்ததற்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

விஜயலட்சுமி

விஜயலட்சுமி

கே.ஸ்.மணியம் சிறுகதைகள் எனும் இம்மொழிபெயர்பு முயற்சியை அவசியமானதாகவும் காலத்தின் தேவையாகவும் கருதுகிறேன். காரணம் மொழிபெயர்பு என்பது வெறுமனே ஒரு மொழியில் உள்ள எழுத்தை வேறு மொழிக்கு மாற்றுவது இல்லை. மற்ற மொழியில் இருக்கும் சிறந்த ஆக்கங்களை ஒருவர் தன்னுடைய தாய்மொழியில் தன் மொழியினரும் படித்துப் பயனுற வேண்டும் என்பதாலும் அல்லது தனது தாய்மொழியில் வெளிவந்துள்ள படைப்புகளை வேற்று மொழியினர் வாசிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துதல் ஆகியவையே மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் உருவாகுவதற்கான ஒரு நேர்பாடை உண்டாக்குகிறது. ஒரு நாட்டின் ஒருமைப்பாடு, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் பரிமாற்றத்திற்கு மொழிபெயர்பு துணை நிற்கின்றது எனும் அடிப்படையில் நம் நாட்டிற்கு மொழிபெயர்பு இலக்கியம் அவசியமான ஒன்றாக தோன்றுகிறது. மேலும், நேரடியாக தமிழில் எழுதப்பட்ட இலக்கியப் பிரதிகளில் உள்ள பல தரப்பட்ட தேக்கங்களை அடையாளம் காணவும் அடுத்துவரும் படைப்புகளில் நிவர்த்தி செய்துகொள்ளவும் இத்தகைய மொழிபெயர்பு அத்தியாவசியமாகிறது.  கே.ஸ்.மணியத்தின் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட சிறுகதைகளை வாசிக்கும்போது இன்னமும் ஆழமாக அக்கதைகளினுள் நுழைந்துவிடும் சாத்தியத்தையும் இம்மொழிபெயர்பு கொடுக்கிறது.

மொழிப்பெயர்க்கப்பட்ட கே.எஸ்.மணியம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பில் க்ளிங் க்ளிங் பெண், குடியேறிகள், வசந்தாவின் கனவுகள், மாயமான், பலி மற்றும் புலி வேட்டை என வெவ்வேறு காலப்பகுதிகளைக் கொண்ட, மாறுப்பட்ட கருபொருள்களை உள்ளடக்கிய முக்கியமான சிறுகதைகள் உள்ளன. மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள் என்று வாசகர்கள் உணராத வண்ணம் மிக துல்லியமாகவும் நுட்பமாகவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் கூறப்பட்டிருப்பவைத் திரிபடையாமல் உள்ளதை உள்ளபடி சொல்லி தமிழில் வாசிப்பவர்களுக்கு அதனுடைய சுவாரசியம் குறையாமல் இருப்பதை மொழிபெயர்ப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கதைகளாக இருந்தாலுமே கூட மலேசிய இந்தியர்கள் சார்ந்த கதைகள் என்பதால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது இதற்கு சாதகமாக அமைந்துள்ளது என்றும் கூற இடமுண்டு. மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகளில் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் தகுந்த வட்டாரமொழி வழக்குகளையும், சொற்றொடர்களையும் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியுள்ளது கதைகளுக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கிறது. பெரும்பாலும் இருமுறை வாசித்த பிறகே கதையின் சாரத்தை ஆழமாக புரிந்து கொள்ள முடிகிறது. இது நிச்சயம் மொழிபெயர்ப்பின் சிக்கல் இல்லை. அதிகமும் நேரடி கூறுமுறையில் இருக்கும் இலக்கியப் பிரதிகளை வாசித்து பழகியவர்களுக்கு உள்படிமங்களையும், துல்லியமான காட்சியமைப்புகளையும் கொண்ட இக்கதைகளை வாசிக்க சற்று கடினமாகதான் இருக்கும்.

க்ளிங் க்ளிங் பெண் எனும் முதல் சிறுகதையை வாசிக்கும்போது எனக்கு இரண்டு விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒன்று பொதுவாக வரலாற்றைப் படிக்கும் போதும் சரி, சுதந்திரத்திற்கு முன் நிகழ்ந்தவற்றைப் பேசும் இதர சிறுகதைகளிலும் சரி பெண்கள் இரயில் தண்டவாளம் உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தது குறித்து கூறப்படுவதில்லை. இரண்டு, அக்காலக்கட்டத்திலே ஒரு பெண் தன் சுயத்தை யாருக்காகவும் இழக்க கூடாது என்பதற்காகவும் தன் உரிமைக்காகவும் சமரசமின்றி வாழ முற்பட்டிருப்பது பிழைப்புதேடி வந்த நாட்டிலும் நடந்திருக்கக்கூடும் என்பது நிதர்சனம். இக்கதை மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. சுமதி எனும் கதாப்பாத்திரம் தன் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்றும் தன் அம்மாவைப் போல இருக்கக்கூடாது என்ற தெளிவான சிந்தனையோடு இருக்கிறாள்.  தன் கொள்ளுப்பாட்டியின் நினைவலைகள் அவள் கண் முன் தோன்றியபோது அதுவரை கதைகளாக மட்டுமே கேட்டிருந்த அவ்வாழ்க்கை அவளுக்கு புது உத்வேகத்தை கொடுக்கிறது. சுமதியும் அவள் கொள்ளுப்பாட்டியைப் போல இருக்கவே விரும்புகிறாள் என்பதாக கதை முடிகிறது.

க்ளிங் க்ளிங் பெண் கதையில் பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்களைப் பற்றியும் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களை ஆழமாகவும் மிகையுணர்ச்சியற்று ஆசிரியர் பேசியுள்ளார். மற்றவர்களால் சிக்கல்கள் உண்டாகும் என்று தெரிந்தும் சுமதியின் கொள்ளுப்பாட்டி தனக்கு விருப்பமான ஒன்றைச் செய்வதை நிறுத்தவில்லை. ஆண்களின் அத்துமீறல்களாலும் இரக்கமற்ற செயல்களாலும் தொல்லைகளை அனுபவிக்கும் மற்ற பெண்களுக்கு அவள் தைரியம் ஊட்டுபவளாகவும், எச்சூழலிலும் முடங்கிப் போகாமல் தீர்வை நோக்கி நகர்பவளாக காட்டப்படுகிறாள். இரயில் சடக்கு தொழிலாளியாக இருந்தவர்கள் தங்கள் வாழ்க்கை முறையையும் பாதுகாப்பையும் நிலை நிறுத்திக்கொள்ள போராடிய துயர்மிகு கணங்களை இக்கதைவழி அறிய முடிகிறது. இதுவரை ரப்பர் காடுகள், சயாம் மரண ரயில் பாதைகள் என்பதாக மட்டும் இருந்த கதைகளத்திலிருந்து மாறுபட்டு உள்நாட்டிலேயே காடுகளை அழிக்கவும் வழித்தடங்கள் உருவாக்கவும் உழைத்து ஒடிந்துபோன வாழ்வு குறித்தான இப்பதிவு இங்குள்ள இலக்கிய வாசகர்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும்.

மாயமான் சிறுகதையில் இந்தியர்கள் அதுவரை வசித்து வந்த தோட்டங்களைவிட்டு ஒதுக்குபுறமான/புறநகர் பகுதிகளுக்குத் தள்ளப்பட்டு பின் வெளி உலகத்தோடு தங்களை இணைத்துக்கொள்ள விரும்பாத/முடியாத சூழலில் எவ்வாறு தங்கள் வாழ்க்கையைக் கடத்தி செல்கிறார்கள் என்பதைப் பற்றி கூறுகிறது. அம்மக்கள் தங்களுடைய குடியிருப்பைச் சுற்றி மட்டும் இல்லாமல் மனதளவிலும் ஒரு வேலியைப் போட்டுக் கொண்டு வாழ்கிறார்கள். கடவுள் பெயரில் மூட நம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கிறார்கள். தோட்டத்திலேயே இருந்த மக்கள் நகரத்திற்கு வந்த பிறகும் அதனுடைய சூழ்நிலையோடு ஒன்றி வாழ முடியாமல் தோட்டத்தில் வாழ்ந்தது போலவே இங்கும் வாழ நினைக்கிறார்கள். உலக போக்கு எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றி பிரக்ஞையற்று பொருளற்ற செயல்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள். ஆண்கள் பயத்தைக் காரணம் காட்டி தங்களுடைய சோம்பேறி தனத்தை மறைத்து வாழ்கிறார்கள். கோவிந்தசாமி கதாபாத்திரம் கடவுள் பெயரைச் சொல்லியும் இதிகாச கதைகளைச் சொல்லியும் அக்குடியிருப்பு மக்களின் மீது செல்வாக்கைச் செழுத்தி அவர்களிடம் மூடநம்பிகையின் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். விமலா பாத்திரம் அந்தச் சூழ்நிலையோடு தன்னைப் பொருத்திக் கொண்டு இதுவே சரி என்று வாழ்கிறாள். அவள் வாழ்க்கையில் நெருக்கடிக்கு உள்ளாகும் போது தன்னுடைய இருப்பில் இருந்து விலகி பாண்டியனிடம் உதவி கேட்கிறாள். ஆரோக்கியன் பாத்திரம் வலுக்கட்டாயமாக ஒரு விடயத்தைச் செய்யத் தூண்டப்படுகிறான், எதிர்ப்புகளற்று வாழ்க்கை ஓட்டத்திற்கு ஏற்ப ஓடுகிறான். ஆனால், பாண்டியன் கதாபாத்திரம் சற்றும் அவர்களோடு ஒட்டாமல் தன் வேறொன்றாக இருக்கிறது. தன்னை விடுவித்துக் கொள்ள அவன் முயற்சித்து முடியாத பட்சத்தில் அங்கேயே வாழ்கிறான்; குடியிருப்பு மக்களுடனான தொடர்பைக் குறைத்துக் கொள்கிறான். இச்சிறுகதையை நாம் இன்றைய சூழலுடனும் பொருத்திப் பார்க்க முடியும். இக்குடியிருப்பு மக்கள் தங்களுக்கு சாதகமான ஒரு வட்டத்துக்குள்ளே தங்களைப் பழக்கிக் கொண்டனர். இதனால், வெளிஉலகத்தைப் பற்றிய அக்கறையும் அவசியத்தையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. இன்னமும் இப்படி பல இந்தியர்கள் தங்களைக் குறுகிய எல்லைக்குள் சுருக்கிக் கொண்டு வெளிவராமல் இருக்கிறார்கள்.

புலி வேட்டை கதை சாகக் கிடக்கும் முத்து கதாபாத்திரம் தமிழகத்திலிருந்து கொண்டுவரப்பட்டவர்களின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவன். தன் அப்பாவின் பிடியில் இருந்து உடைப்பட்டு வரவே எண்ணுபவன். அவனுடைய அப்பாவிற்கும் அவனுக்கும் நிறைய வேறுபாடுகள் காட்டப்படுகிறது.  இக்கதையில்  முத்து அடையாளத்தைத் தேடி ஓடுபவனாகவும், அப்பயணத்தில் உடன் செல்பவனாகவும் சுல்கிப்லி காட்டப்படுகிறான். இக்கதையில் பூடகமாக சொல்லப்படும் அடையாளம் என்பது மலேசிய நாட்டில் புலம்பெயர்ந்தவர்களுக்கான தேசிய அடையாளம் என்பதாக புரிந்துகொள்ள முடியும். தேசிய அடையாளத்தை அடைய அந்நியமாகத் தெரியாத ஒரு அடையாளத்தை முழுமையாக ஏற்றுக் கொள்வது, அல்லது சொந்த அடையாளத்தில் இருந்து கொண்டே மற்றதையும் ஏற்பது என இருவேறு விடயங்களும் கதையில் பேசப்பட்டிருக்கும். கதையில் வரும் முத்து தன்னுடைய அடையாளத்தையும் தக்க வைத்து புதிய ஒரு விஷயத்தையும் தன்னோடு இணைத்துக் கொள்ள முற்படுகிறான். ஆனால், இறுதிவரை அவ்வாறு முழுமையாக ஆக முடியாமல் தட்டுத்தடுமாறி போகிறான். ’வாழாமலேயே இருந்தது, அதுதான் மரணம்.’ எனும் கதையின் கடைசி வரி இதை வாசகர்களுக்குப் புலப்படுத்தும்.

IMG-20190826-WA0010

அபிராமி

இத்தொகுப்பில் குடியேறிகள் என்ற சிறுகதையை முக்கியமான கதையாகப் பார்க்கிறேன். சொந்த நாட்டிலிந்து புலம்பெயர்ந்து இங்கு வந்த தலைமுறைகள் கடந்துவிட்ட பிறகும் “பெண்டாத்தாங்” (குடியேறிகள்) எனும் சொல் அவர்களை விடாமல் துரத்திக் கொண்டுதான் உள்ளது. இன்றும்கூட இச்சூழல் மாறவேயில்லை. கதையில் வரும் மணியம் பாத்திரம் தன்னை இந்த நாட்டின் முழுமையான குடிமகனாக நினைத்து தன் வாழ்நாளில் பாதியை வாழ்ந்து முடித்துவிட்டவர். அவருடைய தந்தை அவர் சொந்த நாட்டிலிருந்து இங்கு வர கடந்துவந்த பாதையையும் போராட்டமும் தனக்கு அவசியமற்றதாகவே மணியம் கருதுகிறார். இங்கேயே பிறந்து, வேலை செய்து, திருமணமாகி, வீடு வாங்கி தனக்கு உரிமையான ஒரு நிலத்தில் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தவரை ‘பெண்டாத்தாங்’ என்ற ஒரு வார்த்தைப் பித்துப் பிடிக்கச் செய்கிறது. மாட் அவரை ‘பெண்டாத்தாங்’ என்று சொன்னது அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனக்குள்ளே குழம்பி, தடுமாறி, தனக்குத்தானே பல கேள்விகளைக் கேட்டுக் கொள்கிறார். எந்த வகையிலும் அவரால் மனதைச் சமாதானப் படுத்திக்கொள்ள முடியவில்லை. இறுதியில் நீண்ட ஆழமான யோசனைக்குப் பின் தனக்கான தெளிவைத் தேடியடைகிறார் மணியம்.

தென்னிந்தியாவிலிருந்து மலாயாவிற்கு வந்த முதல் இந்திய தலைமுறையினர் மட்டுமே இங்கு குடியேறிகள். ஆனால், இங்கேயே பிறந்து, குடியுரிமையும் பெற்று, வாக்குரிமையுடையவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் அதற்கடுத்த தலைமுறையையும் குடியேறிகள் என்று சாடுவது முறையற்றதாகும். நாட்டின் ஒரு தரப்பு மக்களை மட்டும் மண்ணின் மைந்தர்களாக குறிப்பிட்டு அவர்களுக்கென்று சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதும், பெரும்பான்மையினருக்கு சிறும்பான்மையினர் விட்டுகொடுக்க வேண்டும் என்பதும் இங்கு வழக்கமாகிவிட்ட ஒன்று. இதை கே.ஸ்.மணியம் தனது ‘பலி’ சிறுகதையில் குறிப்பிட்டிருப்பார். சிறப்பு சலுகைகள் பெரும்பான்மையினருக்கு மட்டும் கொடுத்துவிட்டு நாட்டின் வளத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மூவின மக்களாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று சொல்லும் வேடிக்கையான கூற்றை இக்கதை சாரம் கொண்டுள்ளது.

கே.ஸ்.மணியம் அவர்கள் மலேசிய நாட்டின் அனைத்து இந்தியர்களுக்காகவும் தனிமனிதனாக நின்று தன் படைப்புகள் வழி பேசியுள்ளார். இந்தியர்களின் வாழ்க்கையை எழுதியுள்ள எழுத்தாளர்களில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியவர்களுள் கே.ஸ்.மணியம் அடங்குவார். நீண்ட கால தாமதத்திற்குப் பிறகே தமிழ்ச்சூழலில் அவருடைய சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியதாக இருப்பினும் அதை இன்னமும் தாமதிக்காமல் செய்திருப்பது மகிழ்ச்சியே.

ஒவ்வொரு கதையிலும் நான் யார் என்கிற அடையாளத் தேடல் முன்வைக்கப்படுகிறது. அதையொட்டி ஒரு சிக்கல் முன்வைக்கப்பட்டு, ஏதாவது ஒரு கதாபாத்திரம் அந்த அடையாள நெருக்கடியை உணர்வதாகவும், அதை மீறி வர முயல்வதாகவும்  காட்டப்படுகிறது. ‘குடியேறிகள்’ கதையில் மணியம் மற்றும் ‘புலிவேட்டை’ கதையில் முத்து கதாபாத்திரங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அப்படிப் பார்க்கும்போது மணியம் வெறும் சிக்கல்களை பேசவில்லை. தீர்வை நோக்கி வாசகனை நகர்த்துகிறார். நான் யார் என சிந்திக்க சொல்கிறார். மனிதன் ஒரு சமூக விலங்கு என்றும் அவன் தனித்து வாழமுடியாது, அதேசமயம் தன்னை இழந்தும் வாழ முடியாது என்கிறார். மனித பரவலாக்கம் இருக்கும் வரை, பெரும்பான்மை சிறுபான்மை என்கிற பேதம் இருக்கும்வரை மணியத்தின் கதைகள் நிலைக்கும், பொருந்தும். அதை கடந்தும் அகம் நோக்கிய தேடல்களுக்கும் மணியத்தின் கதைகள் வித்திடும்.

நான் ஒரு வாசகனாக, கே.எஸ்.மணியத்தின் ஆளுமையை வியக்கிறேன். தன் பார்வையை முன்வைப்பதில் அவரிடம் சமரசமில்லை. விருதுகள், பரிசுகள் நோக்கி அவரது கவனம் இல்லை. அடையாளம் என்ற ஒற்றை சரடில் பல கதைக்களங்களை உருவாக்கி மீண்டும் மீண்டும் அந்த இருள்படிந்த பகுதிகள்மீது வெளிச்சத்தை பரவவிடுகிறார். எழுத்தாளனும் அவனது எழுத்தும் வேறு வேறு அல்ல என்பதாகவும் புரிந்துகொள்ள இந்த மொழிபெயர்ப்பு சிறுகதைகள், நேர்காணல்கள் வழிவகுக்கின்றன.

நூற்பட்டியல்

_______________________________________________________________________________

விஜயலட்சுமி (மொழிபெயர்ப்பாளர்). 2018. கே.எஸ். மணியம் சிறுகதைகள். கோலாலம்பூர்: வல்லினம் பதிப்பகம்.

Hardev Kaur Jujar Singh, Manimangai Mani, 2012, ‘K.S. Maniam, Jhumpa Lahiri, Shirley Lim: A Reflection of Culture and Identity, International Journal of Applied Linguistics & English Literature, Vol. 1, No. 3, pp. 68-71.

Maniam, K.S. (April 1994). In Search of a Centre. Retrieved 17.Jul.2012 http://www.ucalgary.ca/uofc/eduweb/engl392/maniam-cent.html.

Wicks, Peter (2007). K S Maniam (1942-). The Literary Encyclopedia, 16 April 2007. ISSN 1747-678X.

பிற கட்டுரைகள்

2 comments for “கே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *