பொந்து

1

“அந்த ஊமச்சி இன்னைக்காச்சும் வரட்டும் கேட்டுப்புடுகேன். இவனுக்க புடுக்குதான் வேணுமான்னு. எனக்க தாலியறுக்கல்லா நிலையழிஞ்சு நிக்கா. என்ன மந்திரம் போட்டாளோ, அவளுக்க பொறத்தாலையே போயிட்டான்… பலவட்டற சண்டாளி. நாசாம போவா, கட்டழிஞ்சு போவா. அவ  சீரழிவா. புழுத்துதான் சாவா… வீடு மூணு நாளா பூட்டிக் கெடக்கு… எங்க போனாங்களோ?” ராசம் ஆட்டோ ஸ்டாண்ட் இறக்கத்திலிருந்த மேரியின் ஓலைக் குடிசையின் முன்னே நின்று கத்தியபடி நிற்க, அந்த வழியே சென்றோர் வேடிக்கைப் பார்த்தபடியே சென்றனர்.

ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் இதை வழக்கமான ஒன்றாய் கருதி செய்திதாள் படித்துக் கொண்டும், அவர்களுக்குள் கதை அடித்துக் கொண்டும் கடந்து போயினர். கூடவே எங்கிருந்தோ ஜோசியம் பார்க்க நகரத்திற்கு வந்து, ஆற்றங்கரை ஓரம் தங்கியிருந்த ஜோசியம் அறிந்த குழுவர்களும் இதைக் கண்டும் காணாமலும் இருந்தனர்.

ராசத்திற்கு மேரி வீட்டின் முன்னே பெகலம் நடத்துவதெல்லாம் மூன்று நாட்களாக சாதாரணமாகி விட்டது.

2

“நூத்தி இருவது ரூவா சரக்குக்கு, நூத்தி இருவத்தஞ்சு கேக்காண்டீ… அஞ்சு ரூவா அவனுக்க அம்மைக்க அண்டைல போடவா..” ராசம் குவாட்டர் பாட்டிலின் மூடியை, ஒரு சுற்றில் கழட்டி, முன்னே இருந்த இரண்டு கப்பில் சரிபாதியாய் ஊற்றி மேரியிடம் நீட்டினாள். மேரி எதுவும் சொல்லாமல் அமைதியாய் கப்பை எடுத்து ஒரே மடக்கில் குடித்தாள். “எட்டி… பலவட்டற… தண்ணி ஊத்தி குடின்னு சொன்னா கேக்கியா… சரியான முண்ட தாண்டி நீ… எப்பா முழியப் பாரு… வெதக் கொட்டைய முழுங்குன மாறி”. மேரி கண்களை சுருக்கி, உதட்டை சுழித்து, கைகளால் வயிற்றையும் நெஞ்சையும் மாறி மாறி தேய்த்துக் கொடுத்தாள். “சினிமா நடிக தோத்துருவா… ஒனக்க அம்மையும் அப்பனும் நல்ல ஆர்ட்டிஸ்ட்ட கொடுத்து உன்ன வரைஞ்சு பெத்தாங்களா?” ராசம் கேட்டாள்.  மேரி மேல்நோக்கி கைக்காட்டி சிரித்தாள். இரண்டு ரவுண்டு சென்றதும், ராசம் எழுந்து சேலையை கொஞ்சம் இறக்கி கட்டினாள். அவளின் உடம்பு கொஞ்சம் சதைப் போட்டிருந்தது. மேரிக்கோ எந்தப் புடவை கட்டினாலும் எடுப்பை கூட்டிக் காட்டும்.

அவர்கள் அமர்ந்திருந்த பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் உள்ள கிழட்டு வேப்பமரத்தின் அருகே ஆள் நடந்து வரும் சத்தம் கேட்க இருவரும் உடைகளை சரிப்படுத்தி எழுந்தனர். வந்தவனைப் பார்த்ததும் “ஓட்டக் குண்டி ராமசாமிலா வந்துருக்கான்… உக்காரும்வே… சரக்கு இருக்கா”, “எம்மோ… ராசாத்துக்கு வாயி இருக்கே… என்ன இருந்தாலும் போலீஸ்காரன் மக்கா… கொஞ்சம் மரியாத தரப்படாதா…” ராமசாமி கெஞ்ச, “நாய் சும்மானாட்டுக்கு வால ஆட்டாதே… வாரத்துக்கு உள்ள சக்கரம் தான் வாங்கியாச்சே… என்னா இந்தப் பக்கம்”. மேரி இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கையில் இருந்த செய்தித் தாளில் மூழ்கி இருந்தாள். “அவ அங்க அம்மை வீட்டுக்கு போய் இருக்கா… பங்குனி உத்திரம் வருதுலா… எழவு நமக்க நேரப்புண்ட… எங்கயும் போ முடியாது. நாரோயில் மொத்தப் பாதுகாப்பு எனக்க குறுக்குலல்லா ஏறி நிக்கி…” ராமசாமி மெதுவாக மேரியைப் பார்த்தான். ராசம் புரிந்தவள், “மோழ வந்த நாயி எந்த மரத்து மூட்டுல அடிச்சா என்ன… சந்தன மரம் தான் வேணுமோ…” சிரித்துக் கொண்டே அவன் கொடுத்த குவார்ட்டர் பாட்டிலை மூன்று பங்காய் பிரித்தாள்.

“பெரிய போலீசு.. கொஞ்சம் கூடுன ஐட்டம் வாங்கிருக்கப் படாதா? அதே நூத்தி இருவத்தஞ்சி.”

“சர்க்காரா இருந்தாலும் பைசா கொடுத்துதான் வாங்கணும் மக்ளே.. எனக்கும் அஞ்சு ரூவா, பத்து ரூவா கூட கூட்டித்தான் வாங்குகான். தள்ளயவோளி எப்போவாச்சும் வசமா மாட்டுவான், அன்னைக்கு மொத்தமா பைசல் பண்ணி விட்டுருவேன்லா. உன்ன மாறி எனக்கென்ன டெய்லி கைல காசு பொறலுகா? இதுவே நம்ம நேரத்துக்கு ஒருத்தன் ஹெல்மெட் போடாம ஆப்போசிட்ல வந்தான் அவனுக்க புண்ணியமாக்கும்.”

“ஆமா, கைல லட்சம் லட்சமா பொறலுகு… இது என்ன ஒடம்பா? இல்ல மெஷினா? வாரத்துக்கு மூனு நாளுதான் டூட்டி. அதுவும் ஒரு நாளைக்கு ஒரு கஸ்டமர்தான். செலப்பம் ரெண்டு பேரு. அதுக்கு மேல கெடயாது கேட்டிங்களா. நாரோயில் அதாக்கும் நம்மள ராணிய கணக்கா வச்சுருக்கு. நெனச்ச உடன கிடைச்சா அதுக்கு மதிப்பில்ல ராமசாமி சார்”

“சரி சரி, அப்புறம் ராசம், எலிப் பயல கண்டா கொஞ்சம் பொத்தி நடக்க சொல்லு கேட்டியா. உனக்க மொகத்துக்காண்டி சொல்லுகேன்.. புது சூப்பிரண்டு போன சென்மத்துல நாயா பொறந்துருப்பான்னு நினைக்கேன். வல்லு வல்லுனு விழுகான். பழைய கேசுலாம் இப்போ அவனுக்க மேஜைலாம்தான் கெடக்கு. நீ கொஞ்சம் தள்ளி போயேன். நேரம் ஆச்சு, நா சீக்கிரம் மணிமேட வரப் போகணும்.” பேசிக் கொண்டே ராமசாமி மேரியின் அருகே செல்ல, அவள் கையில் இருந்த ஜமுக்காளத்தை விரிக்க ஆரம்பிக்க, ராசம் அங்கிருந்து நகர்ந்தாள்.

மேரிக்கு நாகர்கோயில் முழுக்க கடும்கிராக்கி. “எப்பா.. வனப்பும் தனப்பும்.. இவள எப்படியாக்கும் வெடிவழிபாட்டுக்கு ராசம் கொண்டாந்தா. ராசத்துக்கு முன்ன மாறி ரசிகக் கூட்டம் இல்ல. இருந்தாலும் ஆன்டிக் கள்ளன்மாறுக்கு ராசம்தான் பர்ஸ்ட் சாய்ஸ். வயசு ஆனாலும் பொம்பளைக்க மொக லட்சணம் ரதிக்க சாயல் ஆக்கும். ஆனாலும் மேரிட்ட இருக்கப்பட்ட வொளி இவள்ட்ட கெடயாது, கேட்டியா மக்கா. அதாக்கும் ராசம் ஒட்டிட்டே திரியா” ஆட்டோ ஸ்டாண்டில் பீடி வலித்தபடியே சுப்பையா சொல்ல, “கதக் கொள்ளாம்… எலிப் பயலாக்கும் இந்த மேரிய ராசத்துட்ட கொண்டு விட்டான். மேரிக்க பூர்வீகம்லாம் யாருக்கு தெரியும். கூட ஊமச்சி வேற. நம்ம என்னவோ கேட்டா? அது எந்த எளவையோ கைக்காட்டி சொல்லும். ஆளு கெட்டிக்காரிதான். அவளுட்ட ஒருவாட்டி போயிட்டா பொறவு பொண்டாட்டியும் வேண்டாம் மக்கா. கேட்டதுக்கு கூட கொடுக்க ஆம்பளமாறு உண்டு. ஏதாச்சும் மந்திரம் கிந்திரம் தெரியுமோ! மேக்க உள்ள பொம்பளையா இருப்பா. மொகத்த பாத்தா தெரியில்லா” தாமஸும் அவன் பங்கிற்கு சொல்ல, “என்ன இருந்தாலும் மக்கா… அனக்கம் இல்லாம கெடப்பா. புழுங்கிக் கிடக்க லைப்ல, என்னத்தயோ பொலம்பிட்டு, கண்டவனையும் அறுத்து கிழிச்சுட்டு கூட படுத்தாலும், அதுக்க மொகத்துல தெரிய சிரிப்புக்கு ஒரு கொற இருக்காது. சமயத்துல அதுவே டென்ஷன இறக்கி விட்டுடும்ல்லா..” மீண்டும் சுப்பையா சொல்ல, “சரியா சொன்னேடே. அதாக்கும் எல்லா பயலுகளும் அவளுக்கிட்டையே போறான். ஊமைச்சினாலும் ஒருவிதத்துல நமக்கு உபகாரம்தான். நாம பேசது அதுக்கு கேக்காது. வாயில அப்போதான் எல்லாவத்தையும் கிழிச்சி நாம ஒர்ரிய கொறைக்கலாம்” தாமஸ் பதிலுக்கு கூறினான்.

‘எலிப் பயல்’  வட்டப் பெயர். நிஜப்பெயர் ‘பெருச்சாளி’. ராசமோ, மேரியோ யார் வேண்டும் என்பதை அந்த நாள் இரவே அவனுக்கு முடிவு செய்யும். இவர்களைத் தாண்டியும் சப்த கன்னிகளின் தொடர்புண்டு என ஊரில் ஒரு பேச்சுண்டு.

அந்தக் குடிசையில் மூன்று பேர் இருக்கலாம், ஆனால் முட்டியும் தள்ளியும் இருக்க வேண்டும். எலிப் பயல் எங்கே சென்றானோ, ஒரு வாரம் நாகர்கோயிலில் இல்லை. “எங்க தங்கம் போன… போன் அடிச்சு சொல்லக் கூடாதா… என் நம்பர் தெரியும்லா… உனக்கு தான் போனு கெடயாது… காணும்ன்னு உன்னைய தேட ஆரம்பிச்சுட்டேன்…”, முண்டக் கண்ணும், சுருட்டை முடியும் தாடியும், வெளுத்த தோளும், துருத்தி நிற்கும் நெஞ்செலும்பு திறந்திருந்த சட்டைப் பட்டனால் வெளியே தெரிந்தது. கழுத்தில் சிறுசிறு ருத்திராட்சங்கள் சேர்ந்த மாலை தொங்கியது. அவனின் குரல் சமைந்த பெண்ணின் குரலைப் போல இனிக்கும், “போன வாரம் பேப்பர் படிச்சியா ராசம்ம… பத்திரகாளியம்மன் கோயிலுல நகை களவுன்னு. நான்தான் போனேன். அதான் ஒரு வாரம் எஸ் ஆயிட்டேன்.”. மேரியின் கண்கள் அவனையே மொய்த்தன.

மேரி கைகளால் காற்றில் எதையோ கேட்டாள். புரிந்தவன் “கோயிலு பக்கம் தானே போப்பிடாதுன்னு சொன்ன… நா சர்ச்சுக்குன்னு நினச்சேன்… அதான்”, மேரி மீண்டும் கைகளை சுழற்றினாள். “இனி போ மாட்டேன் தாயி… சாமி கொடுக்கலாம்… ஆனா நாம எடுக்கப்பிடாதோ? கேட்டியா ராசம்ம இவளுக்க பாலிசிய”

“நகைய எடுத்தியா?” ராசம் கைகளை தேய்த்துக் கொண்டே கேட்டாள்.

“கள்ள தேவிடியா பயக்க ராசம்ம… ஒரு சொட்டு தங்கம் உள்ள கிடையாது. எல்லாம் செம்பும் பித்தளையும். எவன் எடுத்தானோ. என் தலைல கெட்டப் பாக்கான். பிடி கொடுப்பனா… ஒரு வாரம் ஆச்சுல்லா… கொஞ்சம் கெடுபிடி கொறஞ்சு இருக்கும். ராசம்மா நீ போய் நல்ல சரக்கும், திங்க கொத்து பொராட்டா வாங்கிட்டி வாட்டி, என் தங்க ராசம்ம”

“லேய் என்ன கழட்டி விட்டுட்டு உனக்கு மேரி வேணுமா? கத கொள்ளாம்டே. சரி செப்பும் பித்தளையும் எங்க ஒளிச்சு வச்சுருக்க”.

“அது கிடக்கு. சப்பும் சவரும். ஐநூறு கூட தேறாது. அப்புறம் லேக சொல்லுகேன். நீ இப்போ சீக்கிரம் போய்ட்டு வா ராசம்ம. மருந்து உள்ள போனாத்தான் உறக்கம் வரும். ரெண்டு மூனு நாளாட்டு பேய் பறத்தம், நாய் பறத்தம்தான். உறங்குனா சரி ஆயிடும்.” சொல்லிக் கொண்டே அவன் மேரியைப் பார்க்க, மேரி கள்ளச்சிரிப்போடு ராசத்தைப் பார்த்தாள்.

“அரமணிக்கூறு கழிச்சே வாரேன். இதையெல்லாம் பாக்க எனக்க சீவன் இல்லடே. என் தங்க எலிக் குட்டி, அப்போ உனக்கு இனி நா வேணாம் அப்படித்தானே டே. சலஞ்சு போய்ட்டேனா எலிக் குட்டி.”. சொல்லிவிட்டு ராசம் வெளியே போய்விட்டாள்.

எலிப் பயலுக்கு சொந்த ஊர் இதுதான். தண்டவாளம் இறங்கி செல்லும் ஆற்றங்கரையோரம் வீடுண்டு. அம்மையும் அப்பனும் யாரென்று தெரியாது. வளரும் போது திருதிருவென்று முழிப்பதாலும், நிலையழிந்து நிற்கும் கால்களாலும் ‘பெருச்சாளி’ எனும் பெயரில் அழைத்தனர். பிறகு வளர வளர ஆளும் சேட்டையும், யார் கண்ணிலும் மாட்டாத கெட்டிக்காரத் தனமும் சேர்ந்து பெயர் மீண்டும் ‘எலிப் பயல்’ என மாறியது. திருடி முடித்து கொஞ்ச நாளைக்கு ஆள் எங்கேயோ போய்விடுவான். பிறகு இரண்டு மூன்று மாதம் கழித்துதான் நாகர்கோயில் வருவான். இங்கிருந்தால் அதிகம் ராசம் வீட்டில் தான் கிடை.

3

“ராசம்ம என்கிட்ட மட்டும்தான் பைசா வாங்க மாட்டியா… இல்ல வேற ஆளும் உண்டா…” நெஞ்சில் சாய்ந்து கிடந்த முகத்தில் விரல்களால் ஓவியம் வரைந்தபடியே எலிப் பயல் கேட்டான்.

“தங்கக் குட்டி.. கஸ்டமரும் நீயும் ஒன்னா மக்கா… அவனுக தொடதுக்கும் நீ தொடதுக்கும் உள்ள டிபரென்ஸ் நா அறியாததா… கெடச்ச சதன்னு பலமா பெசஞ்சு, கொடுத்த பைசாக்கு ஒரு சொட்டு மிச்சம் வைக்க கூடாதுன்னு மல்லுக்கு நிக்க பயக்க… அவனுக ஆத்திரம் நமக்கு நல்லதுதான். எத இழுத்தா, எது வரும்னு தெரியும்லா. அது தொழிலுக்குன்னு கெடக்குது. இருந்தும் சொல்லுகேன். ஆனா என் தங்கக் குட்டி… பூவப் போல தொட்டு தூக்கி, பிள்ளைய போலலா கெடத்துவ. இதுக்கு நானாக்கும் பைசா கொடுக்கணும். ரசமா பேசி, இன்னா பாரு இப்படி என்ன யாரு கொஞ்சி இருக்கா… என் எலிக் குட்டி” அவன் மார்பிலே முத்தமிட்டு இறுக்க அணைத்தாள்.

“உனக்க பிள்ளைகளு அறியுமா கதைய… மூத்தவ எத்தனாப்பு படிக்கா?”

“இப்போ சின்னதுல என்ன தெரியும்… அம்மைக்க கூட இருக்கதுனால எனக்கு தலைக்கடியில்ல. மூத்தவ ஒன்னாப்பு படிக்கி. இளையதுக்கு நாலு வயசு தானே ஆச்சு. நேரம் வரும்போது தெரியும். தேவிடியான்னாலும் பிள்ளைகளுக்கி அம்ம தான்டே. நேரம் வரும்போது தெரியட்டும். நம்ம கணக்க நம்ம தீத்து வச்சிரனும். பொறவு அதுகப் பாடு”

“ராசம்ம ஒர்ரி பண்ண வேண்டாம். ஒம்மனசுக்கு எல்லாம் நல்லபடியாட்டுத்தான் நடக்கும். பொறவு உன் மாப்பிள கம்பளத்துலயாக்கும் திரியான். வந்து பாப்பானா?”

“சமயத்துல வருவான். குடிக்கனும்லா… ரெண்டு பேரும் குடிப்போம். குடிச்சிட்டு கால்மாட்டுல விழுந்து அழுவான். அவன கட்டித்தானே இந்த கோலத்துல நிக்கேன்.  அவனுக்க கண்ணீரும் நடிப்பும்… கண்ணீருல உண்மவுண்டு, ஆனா சில மயிராண்டிக்கு அதுலயும் பொய்யும், பிராடுத்தனமும் இருக்கும். இப்படி கெடந்து அழதுக்கு… பிள்ளைகளுக்கு அப்பப்போ கொஞ்சம் பைசா கொடுக்கலாம்லா… இல்ல வந்து பாத்துட்டு போலாம்… பிள்ளைக சந்தோசப்படும்.. அவனப் பத்தி பேசாத என் தங்க எலிக் குட்டி”.

4

“என்னா ராசம்… உங்க மகராசா மேரி வீட்டுல விஜயம் போல. காக்கி இங்க அலையானாக்கும். அவன்ட்ட சொல்லு… கொஞ்ச நாளைக்கு எலி பொந்துல இருக்க. இப்போ நாரோயில் முழுக்க களவு கொஞ்சம் கூடியாக்கும் இருக்கு. எவன் அகப்படுகானோ மொத்தத்தையும் தலைல கட்டி விட்ருவானுக சண்டாளப் பயக்க. நம்ம எலிய தெரியாதா? அவனுக்க கை அகப்ப ஒன்னும் அவ்வளவு நீளம் கெடையாது. புது சூப்பிரண்டு பொல்லாத்த ஆளாக்கும். கேள்விப்பட்டேன். சரி அவனுக்க மூத்த பொண்டாட்டி நீ, ரெண்டாவது மேரி. திருநவேலில மூணாவது ஒரித்தி இருக்கான்னு பாடு அறிஞ்சேன் நெசமா?” புரோட்டா கடை ஐயப்பன் கூறவேண்டியதைக் கூறிவிட்டு, நளியாய் கேட்டார்.

“ஒமக்க குஞ்சுக்க சைஸ மட்டும் பாரும்.. அடுத்தவன் குஞ்சுக்க நீளம் ஒமக்கு எதுக்கு. துப்புக்கு தேங்க்ஸ்.” ராசம் மூஞ்சை சுழித்துக் கொண்டே சொன்னாள். 

“துப்புக்கு ஏதாச்சும்  ஆஃபர் கொடுக்கப்பிடாதா?”

“நீரு தாங்குற பத்து நிமிஷத்துக்கு ஆஃபர் வேற? அடுத்த வாட்டி பாதி ரூவா  கொடுத்தா போதும். ஆனா சரக்கு மட்டும் கொஞ்சம் வெலக் கூடுன ஐட்டமாட்டு வாங்கும். கிழடுக்க முழியும் மொகரையும்”.

“நாகம் சொன்னா சரிதான்” கூறியபடியே, ஐயப்பன் வழுக்கையில் வழிந்த வியர்வையை துவர்த்தால் துடைத்தார்.

வீட்டுக் கதவு திறந்தே கிடந்தது. மேரி ஒருமுக்கில் இருந்தாள். எலிப் பயல் பீடி வலித்துக் கொண்டு பாயில் கிடந்தான். உள்ளே நுழைந்த ராசம் ஓரிரு நொடி இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்,

“ராசம்ம ஒன்னும் நடக்கல. நீ கொழப்பம் இல்லாம உக்காரு”.

“இப்போ களவு கொஞ்சம் கூடிப் போகு. சேத்து வச்ச எதையும் கண்ணுல காட்டல. என் தங்கம் எல்லாத்தையும் எனக்க முன்ன மறைக்கே”.

“அம்மா சத்தியமாட்டு சொல்லுகேன். பத்திரகாளியம்ம கோயிலுக்கு போனது நான்தான். மத்ததெல்லாம் நான் கெடயாது. போக வர ஈசியாட்டு உள்ள இடம்தான் நமக்கு பிக்ஸ் ஆன இடம். இன்னொன்னு கூட கூட்டு வச்சு போற ஆளு நா இல்லட்டி”. ராசம் எதுவும் பதில் கூறாது இருந்தாள்.

மேரி அவர்களிடையே வந்து அமர, “சேந்து இருக்கது எப்போவாச்சும், அதிலயும் இடையிலே வாரயே சண்டாளி” ராசம் கூற, மேரி வழக்கமான சிரிப்புடன் ராசத்தின் முகத்தில், சிறுபிள்ளை போல மென்மையான குத்து விட்டாள்.

“கொஞ்சம் அடங்கி இருக்கனும் கேட்டியா… வெளிய எல்லாம் கருத்தாப்புல கெடக்கு. உனக்க மேல கண்ணு வச்சாச்சு. இங்க போலீஸ் காலடி சத்தம் கேக்காம், நான் அறிஞ்சு நடமாட்டம் தெரியி..” ராசம் மடியில் இருந்த குவாட்டர் பாட்டில்களை கீழே வைத்தாள். மொத்தமாய் நான்கு இருந்தன. கொத்து புரோட்டா சூடாக இருந்தது, கூடவே தேங்காய் எண்ணெய்யை கடைசி கொஞ்சம்  கரியடுப்பின் மேலே கல்லில் கிடக்கும் போதே தெளிப்பதால் அதனோடு சேர்ந்த கருவேப்பிலையின் வாசம் எலிப் பயலின் மூக்கைத் துளைத்தது. உடனே பொட்டலத்தைப் பிரித்து கொஞ்சம் அள்ளி வாயில் போட்டான்.

மூவரும் குடிக்க ஆரம்பிக்க ராசத்தின் எலிப் பயலின் பேச்சரவத்தை விட, மேரியின் சிரிப்பொலியே அதிகம் அந்த அறையில் மோதி சிதறி எங்கும் ஒலித்தது. எலிப் பயல் மேரியை அழைத்து வந்த நாள் பழையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாலம் தாண்டி நீர் ஓடியது. அதுவே மேரி வந்த நாளை என்றைக்கும் மறக்காதபடி ராசம் ஞாபகம் வைத்திருக்க உதவுகிறது.

“லேய் இந்த சின்னப் பிள்ளைய எங்கிருந்து கூட்டிக் கொண்டாந்த. எந்த ஊரு இவளுக்கு.”

“ராசம்ம, இவள பாம்பேல பாத்தேன். நம்ம ஊருக் காரிதான். வசமா அங்க போய் மாட்டிருக்கு. இதுவும் தொழிலுக்கு தான் போகுது. ஒரு நாள் போயி, இதுக்க கதைய கேட்டு கூட்டி வந்துட்டேன். சொன்னா நம்ப மாட்ட. ஆம்பளைகள்ள நா பேசுனா மட்டும்தான் இதுக்கு கேக்கு. வேற ஆம்பள யாரும் பேசுனா இதுக்கு கேக்காது. பொம்பளக பேசுனா கேக்கும். என்ன எழவு சோக்கேடோ!”.

ராசத்திற்கு இதை நம்பமுடியவில்லை, அவள் கேட்ட கேள்விகளுக்கு சரியாக மேரி பதில் அளித்தாள். மேரியின் குரல் கனமான இரும்பால், காதில் அடிப்பது போல கணீரென்று ஒலிக்கும். அவளின் வடிவுக்கும், குரலுக்கும் சம்பந்தமே இருக்காது. மேரியும் தொழில் தெரிந்தவள். கூடவே இந்த மாதிரி ஒரு அழகியை நாகர்கோயிலில் எங்கு காணமுடியும். தொகையும் கொஞ்சம் கூட வசூலிக்கலாம். ஆக நாகர்கோயில் முழுக்க ராசம் போட்டது இந்த ஊமைச்சி படம்.

“ஊரு அடங்கி நேரமாச்சு.. உனக்க வெங்கல குரல அவுத்து விடு” ராசம் மேரியை நோக்கி சொல்ல, “என்னத்த சொல்லக்கா… ஒரே ஒரு ஹெல்ப்பு மட்டும் பண்ணுக்கா. அந்த ராமசாமி வந்தா இனி நா போ மாட்டேன்..”

“ஏன் தங்கம், போட்டு பொலக்கானோ”

“நீ வேற சுத்த வேஸ்ட் அவன்..” மேரி பலமாக சிரித்தாள். “எவன் பேசதும் எனக்கு கேக்காதா! வாறவன்லா சாமி மாறுலா நல்லதையே பேச, புண்டாமக்க எல்லாம் கெட்டவார்த்தைதான பேசும், பின்ன என்னைய கொஞ்சியா பேசும்… சரிதான ராசம்மா ..”,

ராசம் ஆமாம் என்பதைப் போல தலையை ஆட்டினாள். மீண்டும் மேரி ஆரம்பித்தாள் “நேரத்த பாப்பேன்.. விட்டுப் பிடிப்பேன்.. சிரி மட்டும் மூஞ்சுல இருக்கும்… எப்போ முடிக்கலாம்னு இருப்பேன். கொஞ்சம் அவனுக ஏற ஆரம்பிச்சா, மாறி கமுத்தி நா ஏறி அடக்கிருவேன்லா. அப்புறம் பாம்பு படுத்துரும். அடக்குற வித்த பாம்பேல படிச்ச பாடம்லா” மேரி சொல்லிமுடித்தாள்.

“எப்போ சாமி… உனக்க சீக்ரெட் இப்போல்லா தெரியு. அதான் எல்லாவனும் அவுத்து போட்டுட்டு உனக்க பொறத்தாலையே வாரான். சரியான டேலன்ட் காரிதான்மோ நீ. உன்ன ஜெயிக்க முடியுமா”. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே இருந்தார்கள். எலிப் பயல் சொன்னமாதிரியே மூன்றாம் ரவுண்டில் உறங்கிவிட்டான்.

அடுத்த நாள் விடிந்து ராசம் அவள் வீட்டிற்கு சென்றாள். மேரி அன்றைக்கு பேருந்து நிறுத்தம் பின்னால் இருக்கும் கிழட்டு வேப்பமரத்தின் அருகே வரவில்லை. எலிப்பயலும் எங்கேயும் காணக் கிடைக்கவில்லை.  இரண்டு நாள் கழித்தே ராசம் இப்படி மேரி வீட்டின் முன்வந்து, தினமும் காலையும் மாலையும் கத்த ஆரம்பித்தாள்.

காலையிலே மழை கொஞ்சம் கொஞ்சமாய் தூறி, வலுவாக அடித்தது. ராசம் வீட்டில் இருக்கும் போதே எஸ்.ஐ ஒருவரும், ராமசாமியும் அவள் வீட்டிக்குள் நுழைந்தனர். “நீ தான் ராசமா?” எஸ். ஐ மரியாதையோடு ஆரம்பித்தார். “ஆமா சார்.” ராசம் மெதுவாக சொன்னாள். “எலிப் பய இப்போ எங்க இருக்கான்னு தெரியுமா?”

“எம்பிள்ளை மேல சத்தியாமாட்டு சொல்லுகேன். அவன் எங்க போனான்னு தெரியல.. ராமசாமி அண்ணாச்சிக்கே எங்கத தெரியுமே. நாங்க சேந்துதான் இருந்தோம். இப்போ அந்த சண்டாளி மேரி கூட எங்கயோ ஓடி போய்ட்டான். நானே அவன தேடிட்டு தான் சார் இருக்கேன்.” விசும்பலும் புலம்பலும் தொடர்ந்தது.

“சார், நா சொன்னேன்லா.. அவனுக்கு அவ்வளவு டேலன்ட் கெடயாது. பொடி பய. பெரிய திருட்டுலாம் பண்ணுற ஆளு இல்ல. பாத்திங்களா பயல, இவ கூட சுத்துனவள கூட்டிட்டு ஓடி போய் இருக்கான். சூப்பிரண்டு சார் நா சொன்னா எங்க கேக்காரு. நாரோயில்ல யாரு என்ன திருடுவான்னு எனக்கு தெரியாதா. எலிப் பயல பத்தி நா சொன்னேன் நீங்க கேக்கல.”

“ஆமா சார்… உங்க எக்ஸ்பீரியன்ஸ் அப்படி. நா வெளிய நிக்கேன். நீங்க ரிட்டன் ஸ்டேட்மென்ட் மட்டும் வாங்கிட்டு வாங்க,” எஸ். ஐ இளைஞனாய்த் தெரிந்தார். அவர் வெளியே செல்லவும் “ராசம்ம எங்க போய் இருக்கான் உனக்க மாப்புள… மேரியையும் காணும்… அவன் எங்கயோ போய் தொலையட்டும்… எப்படியாவது மேரிய கூட்டிட்டு வந்திரு மக்கா. சரி நா எழுதி தரதுல கையெழுத்து போட்டு கொடு” ராமசாமி போகும் போது அவன் முகத்தில் பெரும்கவலை அப்பியிருந்தது.

அவர்கள் சென்றதும் ராசம் தனியாய் இருந்தாள். வெளியே மழை இன்னும் வலுத்துக் கொண்டிருந்தது. அவள் மொபைலுக்கு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அவள் எடுக்கவும் “செல்ல ராசம்ம, தங்க ராசம்ம… என்ன நடக்கு அங்க… போலீஸ் தேடி வந்தானா?” எலிப் பயல் கேட்டான்.

“வந்தான் வந்தான்… இன்னும் ஒரு மாசம் போட்டும்… நா சொல்லுகேன் அப்புறம் வா. நீ ஜாலியா தான கெடப்ப, கூட மேரி இருக்காளே… அவளுட்ட கொடு”, மேரி கையில் வாங்கவும் “சின்ன புடுக்கு ராமசாமி வந்தான்… அந்தப் பய எலிய தேடி வரல… உன்ன தேடி வந்திருக்கான்… அவனுக்க சோகமும் தீனமும்… உட்டா அழுதிருவான். ஊருல எல்லாவனும் உனக்க பொந்த தாண்டி தேடுகான்” ராசம் சிரித்துக் கொண்டே சொல்ல, “ஆமா ஆமா, ஒரு நாளு எல்லாவனையும் என் பொந்துக்குள்ள அடச்சு வைக்கேன் பாரு” மேரியும் ராசத்துடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

2 comments for “பொந்து

  1. Aravin Kumar
    March 11, 2022 at 10:18 am

    கள்ளனிடம் வெளிப்படும் களங்கமின்மை என்னும் பொந்தில் மேரியும் ராசமும் மறைந்து கொள்கிறார்கள். மேரியிடம் வரும் ஆண்கள்
    தங்களை முழுதும் கொடுத்துத் தோற்றுப் போகும் பொந்துக்காக வருகின்றனர்.

    ஆழ்மனம் அறிந்த தன்னை முழுதும் வெளிப்படுத்திக் கொள்ளும் பொந்தைத் தேடும் பொந்தைப் பற்றிய கதை.

    வாழ்த்துகள்

  2. March 26, 2022 at 10:09 pm

    வாய் தோராம பேசுத, எனக்குத் தெரிந்த … மேரியை ஊமையாக்கிட்டிங்களே? ஒழுகினசேரி ரெயில்வே பாலத்துக்கக் கீழ வரதுக்கு முன்னால … மேரி, மாவட்ட மைய நூலகத்துக்கு எதிர்ல இருந்தா தெரியுமா? அப்ப வளந்துகெட்ட சாயிபு ஒருத்தனை வெச்சிருந்தா… என்னிய … னுங்க ஓட்டுப் போட்டாகூட போரும்… நான் கவுன்சிலர் ஆயிருப்பேன்னு அவ சொன்னது உள்ளதோ இல்லையோ, ஆனா, அன்னைக்கு நாகர்கோவிலில் புகழ்பெற்றிருந்தது அப்படியொரு சொற்றொடர்….

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...