பந்தல்

கிணற்றடியிலிருந்து துலா ஏறி ஏறி இறங்கும் வாளிச்சத்தம் தூரத்திலும் கேட்கும் படி அன்றைக்கு பாக்குமரங்கள் சலசலப்பின்றி திமிறி நின்றன. பழைய துலா மரத்தண்டின் மேல் சுற்றி நிற்கும் பெரிய வெற்றிலைகளை குளித்துத் தெறித்த தண்ணீர் துளிகள் ஒட்டி ஒட்டி தளும்பும் இலைகளின் ஆட்டம் ஆவர்த்தனமாயிருக்கும். எனது இறந்த சைக்கிள்களை அளவில் சிறியதிலிருந்து வரிசையாக உள் சுவரில் சாத்தி வைத்திருந்தேன். இறந்த வரிசையின் சைக்கிள் பெடல்லிலிருந்து மஞ்சளாய்த் தெறிக்கும் ஒளி பாக்குமரங்களின் உச்சி வரை பரவி அடிக்கும். கிணற்றடியில் கால் கழுவும் திட்டில் சீமெந்துக்கொழுப்போடு புதைக்கப்பட்ட மார்பிள் உருண்டைகள் வழுவழுப்பாயிருக்கும். வயல் சுரணை வீச்சமடிக்கும் இரவு நேரக்கிணற்றடியில் எப்போதாவது நிலவு நாட்களில் உட்கார்ந்திருப்போம். என் தலையில் ஈர் குத்துகிற உம்மாவின் உச்சுக்கொட்டுதலுக்காக அந்தப் பாயில் ஓடிப்படுத்துக் கொள்வதுண்டு. வாப்பா ஆடை கழுவும் சவர்க்காரம் தான் போட்டுக் குளிப்பார். கிணற்றடியை சுற்றி மறைப்பாக கட்டப்பட்ட சுவர் மட்டுமட்டாக வாசலிலிருந்து வாப்பாவின் தலை தெரியும் உயரமிருக்கும். வாப்பாவின் சவர்க்கார டப்பாவும் மென்சிவப்பு நிற பல்-பொடியும் இருக்குமிடத்தில் சுவர் திரும்பி சைலா மாமியின் பொதுமதிலோடு சேருமிடத்தில் ஒரு பழைய கதவு இருந்த அடையாளங்களோடு அந்த விசாலமான கிணற்றடி திறக்கும். அணில்கள் ஓடியதில் சுவரிலிருந்து விழுந்த சவர்க்கார டப்பாவிலிருக்கும் மண் ஒட்டிய சவர்க்காரத்தை மேனியில் தேய்ப்பதே ஒரு சுகமென்பார் வாப்பா.

” ஏன் மோ நம்முட கெணத்தடி மட்டும் வாசல்ல இரிக்கி”.

” அது இந்த ஊடு கட்டக்கொள சைலா மாமிட பக்கத்து துண்டு நச்சுப் பூமியாமெண்டு அங்கால கெணறு வெக்கலயாம்..”.

அதே பதிலை ஒவ்வொரு முறையும் உம்மாவின் மடியிலிருந்து இதே வாசலில் கிடந்து கேட்டிருப்பேன். அன்றைக்கும் வாப்பா குளித்து சீக்கிரமே காவலுக்கு போயிருந்தார். வாப்பாவும் அவருடைய வாப்பாவும் வயல் செய்ததெல்லாம் அஞ்சாம் கட்டையில் தான். அங்கு யானைத்தொந்தரவோ மேய்ச்சல் மாடுகளோ இருப்பதுவும் இல்லை. மாலையெல்லாம் வாப்பா வீட்டுக்கு வந்து குளிக்கும் போது தண்ணீரில் சேறு மணக்கும். ஆனால் இரவுகளில் வயல் காவலென்று அவர் போனதே இல்லை. இப்போது கொஞ்ச நாளாக வாப்பா பள்ளிக்காவலுக்கு போகிறார்.

” பள்ளிக்கு என்ன மா காவல்..”.

” பள்ளிக்கு இல்ல டா காவல், அப்பாக்குத் தான் காவல் ..”.

” யாரு அப்பா..”.

***

பக்கத்திலிருக்கும் சந்தைப்பள்ளியில் அடக்கப்பட்டிருக்கும் அப்பா ஸ்கந்தர் வொலியுல்லாஹ்வுக்கு ஒரு மகிமையும் கண்ணியமும் இருக்கிறதென்பர். பள்ளி வளவில் தெற்கு முன்றலில் இலவம் மரங்கள் ஒன்றிரண்டுக்கு பின்னால் அப்பா அடக்கப்பட்டிருக்கும் இடத்தை கட்டி சீமெந்து தரையால் செப்பனிட்டு பச்சை நிறப்பந்தல்களும் சாம்புராணி குத்தவென வைக்கப்பட்டிருக்கும் மண் நிரப்பிய பாத்திரமும் அதில் எரிந்த மீதிக்குச்சிகளும் காணிக்கை உண்டியலுமென அப்பா வொலியுல்லாஹ் சியாரமென பச்சையுறுத்தும் வெளிச்ச நிறத்தில் எழுதப்பட்ட கூடம் தனியாகத்தெரியும். தாயத்துக்கட்ட, சுன்னத் வைக்க காணிக்கை போட, நேர்ச்சை வைக்கவென சியாரத்தை தரிசிக்க தினமும் பலரும் வருவதுண்டு. இலவம் காய் வெடிக்கும் பருவங்களில் பந்தலை மூடிய பஞ்சுகளில் மேல் மாம்பழக்குருவிகள் நடந்து குலாவும். மூலைகளில் மண்டியிருக்கும் பஞ்சு காற்றுக்கு சாம்புராணிப்புகையோடு சுருண்டு மேலே கிளம்புவது ஞானத்தின் ப்ரகிருதி போலவிருக்கும். எப்போதும் சியாரத்தடியில் இருப்பவர்களென்று சில பேரை ஊருக்கே தெரிந்திருந்தது. ஈனா காவென்னாவின் முகையது பாவா, பாக்குப்பொறுத்தாரின் ஹசன், லாபிர் வட்டானையென ஒரு கூட்டம் எந்த நேரமும் சியாரத்தை சுற்றியிருக்கும். சியாரத்தை தரிசிக்க வருகிறவர்களிடம் அப்பா வொலியுல்லாஹ்வின் வரலாறு முதற்கொண்டு வரிசையாக யாராவது ஒருவர் சொல்லுவர். அந்த பச்சை நிறப் பந்தல் சுற்றி வர அரைசுவரால் கட்டப்பட்டு பச்சை நிறப்பூச்சால் முலாம் போல பளபளப்பாக மினுக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு வெளிப்பக்கத்தில் பெரிய எழுத்துகளில் ‘அன்பளிப்பு, இ.கா முகையது பாவா’ என எழுதப்பட்டிருக்கும். ஈனா காவென்னா இல்லாமல் சந்தைப் பள்ளி கொடியேற்றத்தை இந்த ஊராரால் நினைக்கவே முடியவில்லை. ஊர்கூடி கொடியேற்ற குழுவுக்கு முதலில் ஈனா காவென்னாவை நியமித்த பிறகு தான் மிகுதி வேலையென இந்த ஊரும் முகையது பாவாவும் அப்பா மௌலானாவும் பிணைந்திருக்கிறார்கள். இத்தனைக்கும் ஈனா காவென்னா சந்தைப் பள்ளி குடிமுறையானவர் கூட இல்லை. சூபியென்பவன் ஆத்மஞானி போல எல்லா ஆன்மாக்களிலிருந்தும் அவனுக்கு எஞ்சுவதெல்லாம் குப்பைதானே. இந்த பாரம்பரிய வழிமுறையிலிருந்தும் ஈனா காவென்னா தன்னை தூரவைத்துக்கொண்டு ஷெய்குமார்கள் என்கிற ஞானிகளே பற்றற்ற வாழ்நெறியின் எல்லையில் உட்கார்ந்திருக்கும் போது நாம் மாத்திரம் என்ன குடிமுறையில் சீரழிவதென்று சொல்லிக் கொள்வார். கொடியேற்ற இறுதி நாட்களில் இஸ்லாமியரல்லாத ஏதிலிகளுக்கென்று தனியாக அன்னதானத்தை பிரித்து வைப்பார். அடிபட்டுத் துடிக்கிற நாய்களைத் தூக்கி கட்டுப்போட்டு குழந்தையின் மிருதுவோடு தடவிக்கொடுப்பார். சியாரப்பந்தலின் தூண்களோடு ஏறி வளர்ந்த மல்லிகைக் கொடிக்கு சாம்புராணி குச்சிகளோடு வருகிற பிளாத்திக்கு உறையை இழுத்து ஞெகிழியாக்கி தூணோடு சரிவர இறுக்கி கட்டி வைப்பார். பந்தல் அரைச்சுவரில் மண்டும் குருவி எச்சிலை கழுவ வாளி மொண்டு தண்ணீர் அள்ள அடுத்த தெருவரை தினமும் நடப்பார். ஷெய்குமார்களுக்கு ஊழியம் செய்வது இறைவனுக்கு தம்மை நெருக்கமாக்குமென்பார். இறைவனின் ஒளியென்பது இந்த பிரபஞ்சத்தின் தரிசனமென எங்கிலும் இறைவனை தேடியலைவார்.

***

எங்கள் வீட்டில் வடக்கு மூலையறை ஆலவூடாக கிட்டத்தட்ட மாறிவிட்டிருந்தது. ஆலவூடு என்பது களஞ்சிய அறை போல நெல்மூடைகள், அரிசி குவித்து மூடிய பெரிய அண்டா, சுவரில் தொங்கிய படி சாத்தியிருக்கும் நெல் அவிக்கும் பெரிய சட்டி, பண் பாய் அடுக்கும் றாக்கை, பனையோலைச் சுளகு, வெண்கலப் படிக்கம், மண்பீங்கான் மேலே எஞ்சிக் கிடக்கும் எலி எச்சங்களுக்கிடையில் அரிசி மா மிளகாய்த்தூள் வைக்கிற வாளிகள், அதற்கு நடுவே பழைய கெரியலென எங்கூளூரின் தனித்துவ அமைப்போடு எங்கள் வீட்டிலும் பாவனையிலிருந்தது. வாப்பா குளித்து வருவதற்குள் ஒரு எலியை அடித்து விடும் படி உம்மா சொன்னதில் தடியோடு உள்ளே ஆராய்ச்சியில் இறங்கினேன். இந்தச் சுண்டெலிகளின் வாழ்வே புதுமையானதும் எதையாவது அறுத்துக் கொண்டே இருக்கிறதும் தான் போல. பழைய இறப்பர் செருப்புத் துண்டு, கொஞ்சம் மிகுதியிருக்கிற பருப்பு பாக்கெட்டின் அடிப்பாகம், பத்திரிகைச் சீவல்களென குவித்து வைத்திருந்தன. இதை விடவும் உம்மா எலிப்பொறியில் வாசத்திற்காக வைத்திருந்த சுடப்பட்ட தேங்காய்த்துண்டையும் எடுத்து வந்து பாய் றாக்கையின் கீழே வைத்திருந்தன. ஆலவூட்டின் ஜன்னலுக்கு கிட்டியதாக வாப்பா குளிக்கிற நீர்ச்சத்தத்தின் மீது கூர்மையாகவிருந்தேன். ஒரு இசைச்சந்தம் போல துலா ஏறுகிற உலோகச்சத்தம் பின்னர் வாளி புதையும் குறுஞ்சத்தமாக மாறி பின்னர் வாப்பாவின் மேனியில் வழிந்தோடும் தாரையாக ஊற்றிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் வரை சப்தமிருக்கவில்லை. இது வாப்பா சவர்க்காரமிடும் நேரம் என்கிற உத்தேசம் வந்தவுடன் வேகமாக எலி வேட்டையை முடுக்கியிருந்தேன். பழைய வாளிகள், கழட்டி வைத்திருந்த அலுமாரி லாச்சுகளென தேடிக் கொண்டிருந்த போது வாப்பாவின் பழைய புகைப்படமொன்று சிக்கியது. எலியறுத்த பகுதிகள் தாண்டி வாப்பாவின் பழைய இளம் முகம் துடித்தபடியிருந்தது.

” இப்ப மாதிரி இல்லடா, ஈனா காவென்னா முன்ன எல்லாம் கணகாட்டுக்காரன்..”.

கையிலிருந்த புகைப்படத்தில்  குழப்படிக்காரனுக்குமுரிய எந்த அடையாளங்களுமில்லை. கீழே விரிந்த கால்சராய், பாதி பொத்தான்கள் திறந்து நெஞ்சு மயிரிடையில் பளபளக்கும் தேகம், சுருண்டு கருகருவென நீளமாக அழுத்தி வாரப்பட்ட முடி, தங்கமுலாம் கைக்கடிகாரமென இளவட்ட ஈனா காவென்னாவுக்கு அப்படி ஒரு ஜாகை.

துலா சர்ரென கீழிறங்கி தொம்மென்று வாளி புதையும் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு தடியை விட்டுவிட்டு கிணற்றடிக்கு ஓடினேன். சுவரைத்தாண்டி வாப்பா நடுங்கிய படி நின்றிருந்தார். தூரத்தே பெருஞ்சப்தமாக வந்த அந்த பேச்சு ஒரு விசம் போல காதுகளைக் கொன்றது. உம்மா துண்டைக் கொடுத்து வாப்பாவை மண்டபத்திற்கு கூட்டிப் போகவும் நெஞ்சுப்பதறலடங்கி அந்த பேச்சு தெளிவாக கேட்டது. ஊர் முழுவதும் புதிய இசுலாமிய சீர்திருத்த சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. சூபித்துவ கொள்கைகளை விமர்சித்தும் மூடநம்பிக்கை, வழிகேடென்ற பேரில் சமூகமே இருளில் இருப்பதாக பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டிருந்தன. சியாரத்தை தரிசித்தல், ஆன்மீகஞானிகளை வழிகாட்டிகளாக ஏற்றல், அவர்களிடம் சிபாரிசுக்கு போதல் என்பன மிகக் கடும்போக்கோடு விமர்சிக்கப்பட்டன. இந்தப் பிண்ணனியில் முஸ்லிம் கிராமங்களிலிருந்த சில சியாரங்கள் உடைக்கப்பட்டிருந்தன. இந்தப் புதிய கிளர்ச்சி அக்கறைப்பற்றிலும் பரவி ஆங்காங்கே கூம்பு ஒலிபெருக்கிகள் இரைந்து கிடந்தன. புதிய சீர்திருத்த வாதிகளிடமிருந்த தர்க்க ரீதியான உரையாடல் மக்களைப் பலவகையிலும் கவராமலில்லை.

” அல்லாஹ்க்கு எதுக்கு டா புரோக்கர், உனக்கு ஏதும் கொறயெண்டா அல்லாஹ்க்கிட்ட கேளேன் டப்பா…”.

வாப்பா சாவகாசமானதும் அவருக்கு பிடித்த மாம்பாஞ்சான் கீரை வதக்கி உழுவை மீன் சதையோடு கிண்டி சுடுசோற்றோடு தின்னக்குடுத்து இருவரும் பக்கத்திலேயே இருந்தோம். அந்தக் கனவு வந்த நாளிலிருந்து வாப்பா இப்படித்தான் உறைந்து நிற்பதாக உம்மா முணுமுணுத்துக்கொண்டாள். வாப்பா நடுநடுங்கி அந்த கனவை சொன்ன போது இது போன்றதொரு நடுக்கம் எனக்கும் பரவாமலில்லை. பச்சையாக புகைபோலக் கிளம்பும் இலவம் பஞ்சுகள் முகில் போலத்திரண்டு சியாரத்தை மூடுவது போல ஒரு அசரீரி திரும்பத் திரும்ப ஒலிப்பதாக வாப்பா சொல்லியிருந்தார். அந்த கனவின் திடுக்கத்திலிருந்து அவரை வெளியே வரமுடியாமல் அந்த அசரீரி அவரைத் தடுத்திருக்க வேண்டும்.

” முகையதே…”.

“விளக்கு அணைந்தாலும் ஒளி நூராது..”.

வாப்பா நிதானமாகவே சாப்பிட்டு முடித்திருந்தார். அவர் காவலுக்கு கிளம்பியதும் எலி வேட்டையை தொடரவேண்டுமென்றிருந்தது. எங்கள் தெருவில் அடுக்கடுக்காக சைக்கிள்கள் நுழைந்ததில் ஆட்கள் கூட்டமாக ஓடுவதைப் போல காலடி நெருக்கி திண்ணை மேசை வரை அதிர்ந்ததும் எட்டிப்பார்த்தேன்.

” காக்கோவ், காவலுக்கு போகல்லியா..”

அறைந்த கூவலில் அது வட்டானை லாபிரென்று தெரிந்திருந்தது. தெருவில் கூடி நிற்கும் ஆட்களை விலத்தி வேகமாக ஓடியதும் பள்ளி மூலையில் புகை, இம்முறை சாம்பலாகக் கவ்விக்கிடந்தது. இலவம் மரத்து உச்சிகளில் இன்னும் கூம்பு ஒலிபெருக்கிகளின் விசம் பிரகாசமாய் பஞ்சுக்காயில் நெருப்பாக மின்னி அணைந்தது. பந்தலை பெயர்த்து நெருப்பு வைத்திருந்தனர். அரைச்சுவர் இடிந்து பிய்ந்த செருப்புகள் மல்லாந்து கிடந்தன. சியாரத்திட்டு தகர்க்கப்பட்டு அப்பா உறங்கிய இடத்தில் மடுவாகத்தோண்டியதில்  தண்ணீர் ஊற ஆரம்பித்திருந்தது. அறுந்த செருப்புகளின் நடுவே ஊற்றிய ரத்தக்குழியை ஈக்கள் ஏற்கனவே மொய்க்கத்துவங்கின. நச்சுப்பூமியிலிருந்து நல்ல துண்டைக் களவாடிய நாளின் அமளிதுமளி வெக்கையான எரிசுடலையின் அருகாமை போலவிருந்தது.

” உம்மாவத் திம்பயாள், கருமம் தாண்டா புடிக்கும்..”.

யாரோ ஒரு உம்மா அழுவது போல இன்னும் அழுகுரல்கள் சந்தடிகளாக பின்னாலிருந்து கிளம்பின. மாம்பழக்குருவிகள் எரிந்து, மல்லிகைக் கொடி நைந்து வழக்கமான காற்று இல்லாமல் குப்பென்றிருந்ததில் வியர்த்த ஒழுக்கு கண்ணில் எரியத்துவங்கியதும் வாப்பாவைத் தேடினேன். மிகுதியாகவிருந்த பள்ளி வெளிச்சுவரோடு அணைத்திருந்த பச்சை அரைச்சுவர்த்துண்டோடு சாய்ந்திருந்தார். கனவுத் திடுக்கத்திலிருக்கும் அதே ஈனா காவென்னா இன்னும் மீளாமலே இருந்தார்.

***

பெர்லினில் அல்டர்சொஃபில் இப்போது கோடைகாலமென்பதால் பெல்கனியில் வருகிற புறாக்களுக்கு தீனி வைக்கிற மூடிகளை கழுவி மாற்றத்துவங்கியிருந்தேன். பக்கத்திலிருக்கும் ப்ரைதொஃப் அல்டர்சொஃப் மயானத்தில் இறுதிகிரியைகளுக்காக வந்திருந்தவர்களில் சிறுமியொருத்தின் சேட்டைகளை இங்கிருந்தபடியே ரசித்துக்கொண்டே தீவன மூடிகளை நிரப்பினேன். குறும்பான அவள் சலனம் மட்டும் வித்தியாசமாக பொருந்தாத அழகுமையில் மயானத்தை நீந்திக் கிடந்தது. வருடங்களாக ஜேர்மனில் இலவம் மரங்களைத் தேடி நாலு சேர்த்தியாக உள்ள இடத்தில் வாடகைப் பந்தலொன்றைப் போட்டு சாம்புராணி பத்தியோடு அப்படியே குந்தியிருக்கலாம் போலத்தோன்றுவதுண்டு. சிலபோது அப்படியே சில்லென்று மூடும் மல்லிகைப் பந்தலும் எண்ணெய் விளக்குத்திரி எரியும் சீலை நெடியுமென மூக்கை சுணைக்கலாம் என்றிருக்கும். எனக்குள் கிணற்றடியும் துலாவும் அப்படியே இருந்துவிட்ட வாப்பாவும் குடும்பமுமென பல மாதங்கள் எப்படியோ பெருத்து முற்றிய கசப்பு வெற்றிலைக்கொடி மீது மழை கொட்டுவதாய் ஏறியிறங்கிக் கொண்டிருந்தன.

 வாப்பாவுக்கு அழைக்கலாமென்று எடுத்த நொடிகளில் அழைப்பில் மறுபக்கம் வாப்பா தயாராகவிருப்பது போல திரைக்கு வந்தார். கலைந்த பழுத்த முடி, உப்பிய கீழிமைகள், தொய்ந்த சட்டைப் பாக்கெட்டுகளில் ஒரு வெற்றிலைக்கட்டென வாப்பா உட்கார்ந்திருந்தார். சியாரமிருந்த இடத்தில் ஒரு அடையாளமாக கொங்கிறீட்டு தரைபோல அடையாளமிடப்பட்ட திண்ணையிலிருந்தே பேசினார். வழக்கமான விசாரிப்புகளின் நடுவே ஒன்றைக் கவனித்தேன். கொங்கிறீட்டு திண்ணை நடுவில் ஒரு இறப்பர் சீற்றுப் போல பளபளப்பாக ஏதோ மூடப்பட்டிருந்தது கண்ணை கூசியதும் அவரிடமே கேட்டேன்.

” இப்ப ஏப்ரல் மாசம், சரியான வெயில்..”.

” அப்பாக்கு ஒரு பந்தல கட்டுங்கடா எண்டு இந்த பள்ளிக்காறனுகளுக்கிட்ட செல்லிச் செல்லி வாய் நோகுது மன..”.

” ஒரு மூனு லெட்சம் அனுப்பன், பந்தல நாம போடுவோம்..”.

சரியென்று அழைப்பை துண்டித்திருந்தேன். வாப்பா இயல்பாகவே இல்லை. அப்பாவின் முகையதுவுக்கு ஒளியின் வீச்சம் தெரிகிறது. அது யாருக்கும் தொந்தரவில்லாத தரிசனமெனப் புரிந்தது. பெல்கனியிலிருந்து உள்ளே வந்ததும் காத்திருந்த புறாக்கள் மூடித்தீவனத்துக்காகப் படபடத்தன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...