யாருக்காகவும் பூக்காத பூ

வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து செல்லும் போதே ரூபன் “டேய், இந்த வாரம் கிளாஸ் இல்ல… நேத்தைக்குத்தான் தாஸ் அங்கிள் வந்து வீட்டுல சொல்லிட்டுப் போனாரு… சொல்ல மறந்துட்டேன்” என்றான். 

“அப்ப அந்த வெள்ளைக்காரன் வர்ரான்னு சொன்னாரு” எனக் கேட்டேன்.

“அவுனுங்க இன்னும் வரலை, அடுத்த வாரம்தான் வருவாங்களாம்” என மிதிவண்டியை உருட்டிக் கொண்டே சொன்னான். மிதிவண்டியின் சிவப்புச் சாயத்துடன் துருவேறிப் போயிருந்த இரும்புக் காரைக் காரையாகப் பெயர்ந்து போயிருந்தது.

அவன் சொல்லும்போதே வித்தியாசமான தமிழ் உச்சரிப்பில் பேசும் தாஸ் அங்கிள் இதை எப்படி சொல்லியிருப்பார் என யோசித்தேன். தமிழ் பேசும்போது மட்டும் கைகளை அதிகமாக அசைத்து, ஒவ்வொன்றையும் பேசியும் கைகளில் காட்டியும் உணர்த்தும் அவரால் அதைச் சொல்லியிருக்க முடியாது என எண்ணிக்கொண்டேன்.

ரூபனின் வீட்டில் அவனுடைய அப்பா, பாட்டி என மூவர் மட்டுமே இருந்தனர். அவனுடைய பாட்டிக்கு நினைவு பிறழ்ந்து போய்விட்டதால் எப்போதும் எதையாவது சொல்லி முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். அவரைக் கம்பத்தில் எல்லாரும் முணுமுணுத்தா கிழவி என்றுத்தான் அழைப்பார்கள். சமீபத்தில்தான் அவனுடைய அம்மா யாரோ ஒருவருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகக் கம்பத்தில் எல்லாரும் பேசிக்கொண்டார்கள். ரூபனின் வீடு கம்பத்துக் கடைசி மூலையான பெரிய கால்வாய்க்கு இரண்டாவது வீடாக இருந்தது. அந்தச் சம்பவம் நடந்ததிலிருந்து ரூபனின் அப்பா கால்வாய்க்குப் பக்கத்தில் இருந்த லாலான் புதரிலே நடந்து வெளியே சென்று வந்து கொண்டிருந்தார்.

“எங்க அம்மா வெளியூருல இருக்காங்கடா… கிருஸ்துமஸ்க்குப் போயி பாப்போம்” என என்னைப் பார்க்கும்போது ஒவ்வொரு தடவையும் சொல்வான் ரூபன். ரூபனின் வீட்டில் சிறிய மேரி மாதா சிலையொன்றும் ஏசுநாதர் ஆட்டுக்குட்டியுடன் இருக்கும் காலண்டரின் தடிமனான அட்டையும் வைக்கப்பட்ட சிறிய மேடையொன்று இருக்கும். கிருஸ்துமஸ் நாளின்போது ரூபனின் வீட்டு முன்னால் அலங்கார விளக்குகள் வைக்கப்பட்ட மரத்தை வைத்திருப்பார்கள். கிருஸ்துமஸ்க்கு ஒரு வாரத்துக்கு முன்னாலே ரூபனின் வீட்டுக்குக்கார்களில் வரும் சீனர்களும் இந்தியர்களும் பிஸ்கட்டுகளையும் சாக்லெட் பெட்டிகளையும் தந்து செல்வார்கள். கிருஸ்துமஸ் நாளன்று ரூபனின் வீட்டுக்குச் சென்றால் கார்ட்டுன் பார்த்துக் கொண்டே சாக்லேட்களைச் சாப்பிடலாம். அவன் அம்மா சுவையான தேனீர் கொடுப்பார். அது இம்முறை கிடைக்காது என்பது வருத்தமாக இருந்தது.

ரூபனின் அப்பா சந்தையில் இருக்கும் பழக்கடையில் சுமை ஏற்றுவது இறக்குவது என உதவியாளராக வேலை செய்தார். எப்போதும் நாள்பட்ட வாழைக்கறை படிந்து ஓட்டை விழுந்து போயிருக்கும் வெள்ளைச் சட்டையைத்தான் அணிவார். அவர் வேலை செய்யும் கடை முதலாளியின் நண்பர்தான் தாஸ் அங்கிள். சர்ச்சில் சமூகச் சேவை பொறுப்பாளராக இருக்கிறார். நாங்கள் இருந்த கம்பத்து வீட்டிலிருந்து பத்து நிமிட நடைத்தூரத்தில்தான் சர்ச் இருந்தது. மருத்துவமனைக்குச் செல்லும் பெரிய சாலையைக் கடந்து தெரியும் லாலான் புதரோரம் நடந்தால் பெரிய மரங்கள் இரண்டை ஒட்டி சர்ச் இருந்தது. மரங்களையும் விட உயரமான வெள்ளை நிற முக்கோண வடிவக் கூரையுடன் கூடிய கட்டிடத்தில் கரிய நிறத்தில் சிலுவையும் ஆங்கில எழுத்துகளில் சர்ச்சின் பெயரும் 1928 என்று இடப்புறம் சர்ச் தொடங்கப்பட்ட ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும். 

சர்ச்சின் முன்புறம் நீண்ட புல்வெளியும் சிறிய மரங்களும் அதனைத் தாண்டி சிமெண்டு தரையில் திறந்தவெளி மண்டபமும் இருக்கும். வளர்ந்திருக்கும் புற்களையும் மரங்களையும் குட்டையாக வெட்டவும் ரூபனின் அப்பாவை அங்கிள் மாதத்திற்கொருமுறை அழைத்துச் செல்வார். அவருக்கு உதவியாகத்தான் ரூபனும் சர்ச்சுக்கு வேலைக்குச் செல்வான். ரூபன்தான் என்னையும் சர்ச்சுக்கு அழைத்துச் சென்றான். ரூபனின் அப்பா வேலை செய்யும்போது எங்கள் இருவருக்கும் ஒரிரண்டு ஆங்கில வார்த்தைகள் கற்றுக் கொடுக்க தாஸ் அங்கிளால் தொடங்கப்பட்ட வகுப்புத்தான் மெல்ல விரிவடைந்து பதினைந்து பேர்கள் கொண்ட சண்டே கிளாஸாக மாறியது. ஒவ்வொரு சண்டே கிளாஸின் இறுதியிலும் காப்பியும் பழ ஜாமும் வெண்ணெய்யும் தடவி கொடுக்கப்படும் ரொட்டிகள் அளிக்கப்படும். நான் அங்கு விருப்பத்துடன் செல்வதற்கான முதன்மைக் காரணமாக ஆங்கிலத்தை விட ரொட்டித்தான் இருந்தது. 

வகுப்பு முடிந்தவுடன் அனைவரும் சர்சின் வளாகத்தில் வரிசையாக நிற்போம். ரூபனின் வீட்டிலிருக்கும் மேரி மாதாவைப் போலவே நீண்ட வெள்ளையாடை அணிந்த வெள்ளைக்காரக் கன்னியாஸ்திரிகள் ஒவ்வொருவருக்கும் தட்டில் இரண்டு ரொட்டிகளையும் காப்பியும் தருவார்கள். சென்ற ஞாயிறு வகுப்பில் ரொட்டிகளைச் சாப்பிட்டுக் கொண்டு அமர்ந்திருந்தபோது, அங்கிள் அடுத்த வாரம் கப்பலிலே உலகம் சுற்றும் வெள்ளைக்காரர் ஒருவர் சர்ச்சுக்கு வரப்போகிறார் எனச் சொன்னார். இப்படியாக விருந்தினர்கள் வரும் போதெல்லாம் சர்ச்சில் நல்ல விருந்து ஏற்பாடு செய்வார்கள். அவர்களின் முன்னால், சர்ச்சில் சொல்லித்தரப்படும் ஆங்கிலப்பாடல், நடனம் ஆகியவற்றை ஆடிக்காட்டுவோம். இந்த முறை வெள்ளைக்காரர் வருகிறார் என்பது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது. ‘’எல்லா இங்கிலிஸ்லேதான் பேசனும்…டோன்ட் யூஸ் மதர் தங்க்… எல்லா  ரண்டு கேள்வியும் ஏதாவது பெர்பமன்ஸ் ஒன்னும் ரெடி பண்ணுங்க’’ என்றார்.

ஒவ்வொரு வகுப்பின் போதும் சிறப்பாகச் செயல்படுகின்றவருக்கு தாஸ் அங்கிளும் சிஸ்டர்களும் பரிசுகள் தருவார்கள். அங்கிளுக்கு உடனுக்குடன் பரிசு தருவதற்கு நிறைய பொருட்கள் காரில் எப்பொழுதும் இருக்கும். சென்றாண்டு நடைபெற்ற ஆங்கிலக் கட்டுரை எழுதும் போட்டியில் முழுமையாக இரண்டு பத்திகள் எழுதியதற்காக அங்கிள் வரைப்படத்தைப் பரிசாகத் தந்தார். பத்து முதல் பன்னிரண்டு வயது வரையிலான மாணவர்களுக்கு ஒரு மணி நேரத்தில் ஆங்கிலத்தில் சுயக்குறிப்பு ஒன்றை எழுதும் போட்டியை ஏற்பாடு செய்திருந்தார். சுவர் கடிகாரத்தை மேசையில் பாட்டிலுக்கு முன்னால் வைத்து அனைவருக்கும் தாளைக் கொடுத்தார்.

ரூபனும் குமரனும் தாள் கிடைத்த கொஞ்ச நேரத்திலே அங்கிளின் கவனத்தைத் திசைத்திருப்ப கேள்விகள் கேட்கத் தொடங்கினார்கள். அங்களுக்கு 60 வயது தாண்டியிருக்க வேண்டும். பிள்ளைகள் எல்லாம் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். ஒரு கேள்வியைக் கேட்டால், அதைப் பற்றிக் கொண்டே ஒரு மணி நேரம் ஆங்கிலத்தில் பேசி விடுவார். அதற்கு முந்தைய வாரம், சர்ச்சின் சமையலறையில் இருந்த கண்ணாடிக் குடுவையை ரூபனும் குமரனும் உடைத்ததில் அங்களுக்குப் பெருங்கோபம் இருந்தது. அதனாலோ என்னவோ, இருவரையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்துவிட்டார். கடைசியாக, நான் மட்டும்தான் இரு பத்திகளை முழுமையாக எழுதியிருந்தேன். என் கட்டுரையை வாசித்துவிட்டுக் காருக்குச் சென்றவர் முனை மழுங்கி, முன்பக்கம் பழுப்பேறிப் போயிருந்த உலக வரைப்படப் புத்தகம் ஒன்றை எடுத்து வந்து அன்பளிப்பாகத் தந்தார். அதுதான் அவரிடமிருந்து நான் பெற்ற முதல் பரிசு.

அதன் பிறகொரு நாள், சிவப்பு நிறத்தில் பீங்கானால் செய்யப்பட்ட குடுவையையும் பெரிய அளவு தொடங்கி சிறியது வரையிலான 6 குவளைகளையும் சீன நாளிதழ் காகிதத்தில் சுருட்டித் தந்தார். அவர் கொடுக்கும் பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஒவ்வொரு முறையும் அம்மா அதை வாங்கி பார்த்து அழகாகக் முன்பக்கக் கண்ணாடி கதவில் கொடியும் பூவுமாகச் செதுக்கப்பட்டிருக்கும் அலமாரியில் அடுக்கி வைப்பார். அடுத்த முறை நான்கறைகள் கொண்ட பெரிய அலமாரி வாங்க வேண்டுமென அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

ரூபனுக்குப் பரிசுகள் கிடைத்து நான் பார்த்ததில்லை. ஒரு டிசம்பரில் கிருஸ்மஸ் தாத்தா வந்தபோது அவனுக்கு கிடைத்த பரிசை எல்லாருக்கும் பெருமையாகக் காட்டினான். அப்போதுதான் அவன் போட்டிகளில்  இதுவரை ஜெயிக்காததைப் பிற நண்பர்கள் கேலியாகப் பேசினர். அப்போது ஏன் அவன் என்னைப் பார்த்து காரணமின்றி முறைத்தான் என இன்றும் எனக்குத் தெரியவில்லை.

ஸ்கேரபல் எனப்படும் ஆங்கில எழுத்துருக்கள் பொறித்த காய்களைப் பொருள் தருமாறு சரியாக அடுக்கி வைத்து ஆடும் விளையாட்டில் பல முறை என்னுடன் போட்டி போட்டுள்ளான். சில சமயங்களில், கை போன போக்கில் அடுக்கி வைத்த எழுத்துகளுக்கு அங்கிள் எதாவது பொருள் சொல்லி என்னை வெற்றி பெற வைத்துவிடுவார். நான் அப்படித்தான் சில ஆங்கிலச் சொற்களைக் கற்றுக்கொண்டேன். அவனுக்குப் பரிசுகள் கிடைக்காத நாட்களில் சர்ச்சின் சமையலறையின் அலமாரியில் மேல் வைக்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற வைனைக் கொஞ்சமாக ஊற்றிக் குடித்துவிடுவான். 

ஞாயிறு வகுப்பு முடிந்து வீடு திரும்பியவுடன் சர்ச்சில் ஏற்கனெவே கற்றுத்தரப்பட்ட nobodys child என்ற பாடலைப் படைப்பாக வெள்ளைக்காரர் முன்னால் பாடலாம் என்று முடிவு செய்திருந்தேன். சர்ச்சில் இருந்த  சிஸ்டர் பிலோமினா எனும் தமிழ் தெரிந்த கன்னியாஸ்திரித்தான் அந்தப் பாடலைச் சொல்லித் தந்தார். அனாதை ஆசிரமத்தில் இருக்கும் கண் பார்வையற்ற சிறுவனொருவன் தன்னை அனைவரும் ஒதுக்குவதைச் சொல்லி வருந்துவதான பாடலது. அந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளையும் விளக்கிப் பாடும்போது சிஸ்டர் பிலோமினா கண்களில் நீர் நிறைந்திருந்தது. ‘யாருக்காகவும் பூக்காத பூவைப் போல அம்மாவின் முத்தங்களின்றி அப்பாவின் சிரிப்பின்றி யாரும் வேண்டாதவனாகப் பிறந்திருக்கிறேன்’ என முடியும் பாடல் முழுமையாகவே நினைவிலிருந்தது. என்னால் எப்பொழுதும் பாடல் வரிகளை இசையுடன் கூடிப் பாட முடிந்ததேயில்லை. எப்பொழுதும் மற்றவர்கள் பாடுவதற்கு முன்னரோ, தொடங்கியப் பின்னரோதான் கூடச் சேர்ந்து பாடுவேன். அன்றே அந்தப் பாடலை கண்ணாடி முன் நின்று முழுமையாகப் பாடிப் பார்த்தேன். பாடலைப் பாடிக் கொண்டிருக்கும் போதே, ரூபன் வீட்டுக்கு முன்னால் வந்தான்.        

“டேய், என்னடா செய்ய போற சண்டே கிளாசுல…” என்று கேட்டான்.

“எனக்கும் தெரியலடா…” என்று சொன்னேன். நான் பாடப்போவதைச் சொல்ல ஏனோ எண்ணம் தோன்றவில்லை. மேலும் நானே அதுபற்றி முடிவெடுத்திருக்கவில்லை.

“நீ எதுனாச்சும் ரெடி பண்ணியா” என்று கேட்டேன்.

“இல்லடா யோசிச்சுக்கிட்டு இருக்கேன்” என்றான். அவன் நிச்சயமாக எதாவது தயார் செய்து வைத்திருப்பான்.

அதற்கடுத்தடுத்த நாட்களில், ஒவ்வொரு நாளும் கண்ணாடி முன் நின்று பாடலைப் பாடிப் பார்த்தேன். ஒவ்வொரு நாளும் பாடலைப் பாடி முடிக்கும்போது எதையாவது தவற விட்டதைப் போலவே இருக்கும். பள்ளி முடிந்த கொஞ்ச நேரத்திலே ரூபன் வீட்டுக்கு வந்துவிடுவான். அவனுடன் சேர்ந்துதான் பக்கத்திலிருந்த ஈயக்குட்டையருகே மீன்பிடிக்கச் செல்வேன். மலாய்க்காரர்கள் கம்பத்திலிருந்த திடலுக்குப் பந்து விளையாடிவிட்டு வருவோம். அவன் வருவதற்குள் அவசரமாகப் பாடலைப் பாடுவேன். ரூபன் கேட்கும் போதெல்லாம் இன்னுமில்லை என்றே சொல்லி கொண்டிருந்தேன். புதன்கிழமையுடன் பள்ளி முடிந்து ரூபன் வீட்டுக்கு வராதபோது மெல்ல சந்தேகம் எழுந்தது. அவன் வீட்டுக்குச் சென்று பார்த்தப்போது, ‘இல்லடா பாட்டி ஏசுறாங்க… அதான் எங்கும் வரல..’. என்று சொன்னது நம்பும்படியாக இல்லை. ஒரு வேளை நான் தனியாக நின்று பாடுவதைப் பார்த்திருப்பானோ என நினைத்துக் கொண்டேன்.

வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு மிதிவண்டியில் செல்லும்போதே பேசாமல் இருந்தான். பள்ளி முடிந்தவுடன் எப்பொழுதும் எனக்காகக் காத்திருந்து செல்பவன், இன்று வெகு முன்னால் சென்று கொண்டிருந்தான். அவன் பின்னால் வேகமாக ஒடி இணைந்து கொண்டேன். நெடுநேரம் அமைதியாக நடந்தவன், டயர் கடை திருப்பத்தில்தான் ‘வகுப்பு இல்லை’ என்பதைச் சொல்லி கம்பத்துச் சாலையில் மிதிவண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான். 

நிச்சயமாகப் பொய்த்தான் சொல்கிறான் என ஊகித்துக் கொண்டேன்.

ஞாயிறு காலையில் வழக்கத்தைப்போல எழுந்து குளித்துக் கிளம்பி அம்மாவிடம் சொல்லிவிட்டுச் சென்றேன். அம்மா காலில் இருந்த சேற்றுப்புண்ணுக்கு களிம்பு தடவி கொண்டிருந்தார். அம்மாவுக்குச் சீன உணவுக்கடையில் மங்கு கழுவும்போது தரையில் தேங்கிக் கிடக்கும் சவர்க்கார நீரில் ஊறிக் கால் விரல்களின் இடுக்குகளில் சேற்றுப்புண்கள் கண்டிருக்கும். வேலை முடிந்து வீடு திரும்பியவுடன் கணுக்கால் மறைக்கும் பெரிய கித்தா சப்பாத்துகளை வீட்டுப் பின்புறம் கவிழ்த்து வைப்பார். சவர்க்காரம்  நீரும் எண்ணெய் வாடையும் கலந்த நீர் வெளியேறி தரையில் பரவிக்கிடக்கும்.

“அவன் வரல… அதுக்குள்ள போற” என அம்மா கேட்டார்.

“அவன் அவுங்க அப்பா கூட வந்துருவான்…” எனச் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினேன். அம்மா தனக்குள் எதையோ முணுமுணுத்துக் கொண்டே ‘பாத்துப் போ…ரோட்டுல பராக்குப் பாத்துக்கிட்டுப் போவாத’ என்றார். சர்ச்சில் இரவு விருந்துகளுக்குச் செல்ல அம்மா அனுமதிக்கமாட்டார். அப்பாவும் இரவு விருந்துகளுக்குச் செல்ல கூடாது என்று சொல்லியிருக்கிறார். அப்பாவின் நண்பரொருவர் “கொஞ்சம் கொஞ்சமா மனச கரைச்சுருவாங்க… பேரு மாத்தி வச்சாத்தான் தெரியும்,” எனச் சொன்னதிலிருந்தே என்னைச் சர்ச்சுக்கு அனுப்புவதே பிடிக்காமல் போயிருந்தது. அங்கிருந்து எடுத்துவரும் பரிசுகளும், பழகிக் கொண்ட ஆங்கிலமும்தான் இன்னும் சர்ச் செல்வதற்கான அனுமதியாக இருக்கிறது.

என்னால் செல்ல முடியாத இரவுகளின் மறுநாள் பள்ளிக்கு வரும்போது விருந்தை பற்றி ரூபன் நிறைய சொல்வான். ‘டேய்…எல்லா சீனப் பிள்ளைங்க அழகா ஆடுனாங்க….வெள்ளைச் சட்டை கவுனு போட்டுக்கிட்டு…பட்டர்பிளை மாரி… நான் ரெட் வைன் குடிச்சேன்… குடிச்ச வீட்டுக்குப் போய் படுத்தா சீனப்புள்ளைங்க தலையே சுத்தி வட்டமா ஆடி வர மாதிரியே இருந்துச்சு….அங்களு எல்லாத்துக்கும் சாப்பாடு புங்குஸ் பண்ணிக் கொடுத்தாரு எனக் கதை கதையாய்ச் சொல்வான். இன்றைய நிகழ்ச்சிக்கு எப்படியும் தவற விடாமல் சென்று விட வேண்டும். இன்றுடன் ரூபனுடன் பேசுவதைக் கூட நிறுத்தி விட வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

சர்ச்சின் முன்னால் இருக்கும் மரத்தில் ரூபனின் மிதிவண்டி இல்லை என்பது கொஞ்சம் சந்தேகத்தை எழுப்பியது. சர்ச்சின் வலப்புறத்தில் இருக்கும் திறந்த மண்டபத்தில் வெள்ளைக்காரர் ஒருவர் நடுவில் அமர்ந்திருக்க சுற்றிலும் மற்றவர்கள் வட்டமாக அமர்ந்திருப்பதைக் கண்டதும் ரூபன் மேல் இன்னும் கோபமாக இருந்தது. சுற்றிலும் அமர்ந்திருந்தவர்களை நோட்டமிட்டேன். அதிலும் ரூபனைக் காணவில்லை. என்னைப் பார்த்தவுடன் தாஸ் அங்கிள் வெள்ளைக்காரருக்கு நேர் பின்னால் அமர வைத்தார். அனைவரும் சேர்ந்து ‘குட் மார்னிங் சார்’ எனச் சொன்னபோது என்னை மிஸ்டர் பிட்சர் என்றே கூப்பிடுங்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டார். தலை முடி, தாடி எல்லாம் பழுப்பு நிறத்தில் இருக்க, திரைப்படத்தில் பார்ப்பதைப் போலவே வெள்ளை வெளேர் என ஒட்டிப் போன உடலுடன் கிடந்தார். கொடிகளில் பச்சை நிறப் பூக்கள் பூத்திருப்பதான சட்டையும் கருப்புக் கண்ணாடியும் அணிந்திருந்தார்.

ஒவ்வொருவரும் இரண்டு வரிகளில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பாடலையோ அல்லது நடனத்தையோ ஆடிக்காட்டினர். ஒவ்வொருவரும் ஆங்கிலத்தில் படைப்புகள் செய்யும்போது  மற்ற புறத்தில் குசுகுசுப்பும் மெல்ல அடங்கிய சிரிப்பொலியும் எழுந்தது. பீட்சர் ஒவ்வொருவரும் படைப்புகள் செய்து முடிந்த பின்னர், தன் பக்கத்திலிருக்கும் துணிப்பையில் கை விட்டுத் துளாவிப் பரிசுப் பொருட்களைக் கொடுத்தார். எனக்கு மூன்று இடங்கள் தள்ளி அமர்ந்திருந்த ஹேமா ஆங்கிலத்தில் திக்கித் திணறி கேள்வி கேட்டாள்.  ஹேமாவின் குரல் ஏற்கனவே உள்ளடங்கி போயிருக்கும். அத்துடன் ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்கிற பயமும் சேர்ந்து அழுகையே வந்துவிடுவதைப் போன்று கேள்வி கேட்டாள். வெள்ளைக்காரர் அவளருகே சென்று, அவள் கேட்டதாக கேள்வியொன்றுக்குப் பதிலளித்தார். அவருக்கு வீடில்லையா என்பதாகக் கேள்வி இருந்தது. அவர் அதைக் கேட்டுச் சிரித்தார். வீட்டை அடிக்கடி மாற்றிக் கொள்வேன் எனப் பதிலளித்தார். மூவர் கேள்வி கேட்டதும் கையில் வைத்திருக்கும் ஹர்மோனிக்காவை இசைத்துப் பாடல் பாடினார்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் கற்றுத்தந்த பாடல் என கிருத்துவக் கீர்த்தனையொன்றைத் தமிழில் பாடினார். வாய் நிறைய நீரை அடக்கிக் கொண்டு பேசுவதைப்போல பாடினார். நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். ஹேமா எங்களைப் பார்த்து முறைத்துவிட்டுக் கைகளை நெஞ்சுக்கு நேராக கூப்பி வைத்துக் கொண்டு பீட்சருடன் இணைந்து மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தாள். ரூபனின் சைக்கிள் சர்ச்சின் வாசலில் வருகிறதா எனப் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தேன். பீட்சர் ஒவ்வொருவரின் கேள்விக்கும் நிதானமாகப் பதில் சொல்லி வந்தார். கையில் வைத்திருந்த ஹர்மோனிக்காவை ஊதிக் கொண்டும் தம்போரினைத் தட்டிக் கொண்டும் பல மொழிகளில் பாடல் பாடிக் கொண்டிருந்தார். ரூபனிடம் பாடிக் காட்டுவதற்குச் சில பாடல்களின் வரிகளை நினைவு செய்ய முயன்றேன். அடுத்தடுத்த பாடல் பாடும்போது, முந்தைய பாடலின் வரிகள் மறந்து போயிருந்தன.

என்னுடைய முறை வந்தது. காற்சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த கசங்கிபோன தாளை அவசரமாகப் பிரித்துப் பாடல் வரிகளைப் பார்த்துப் பாடினேன். பிட்சரைப் பார்த்துப் பாடத் தொடங்கியவுடன் ஏனோ குரல் வெளிவர மறுத்தது. கொஞ்சம் உரக்கப் பாடினால் இசை விட்டுப்போகும் எனக்கவனத்துடன் மெல்லிய குரலில் பாடினேன். பாடத் தொடங்கிய சில நொடிகளிலே தாஸ் அங்கிள் பதற்றத்துடன் அருகில் வருவதைப் பார்த்தேன். மிஸ்டர் பீட்சரிடம் எதையோ சொல்லிவிட்டு நிகழ்ச்சியை விரைவாக நிறைவு செய்தார். பீட்சரையும் மற்றவர்களையும் விருந்து உண்பதற்கு அழைத்துச் சென்றார். மூன்று மேசைகள் வரிசையாக அடுக்கப்பட்டு அதன் மேல் துண்டுகளாக வெட்டப்பட்ட கேக்குகளும், பழத்துண்டுகளும், பிரட்டிய மீ, சோறு, பழச்சாறு எனப் பல வகை உணவுகளால் நிறைந்திருந்தது. கேக்கை எடுத்து உண்டு கொண்டிருக்கும் போது, தாஸ் அங்கிள் அருகில் வந்து வெளியே வருமாறு அழைத்தார்.

“ரூபன் அப்பா காலையில் தற்கொலை செய்துக்கொண்டார்… வீட்டுக்குச் செல்லலாம் வா” என ஆங்கிலத்தில் சொன்னார்.

ரூபன் வீட்டின் முன்னறையில் மெத்தையில் ரூபனின் அப்பா கிடத்தி வைக்கப்பட்டிருந்தார். அவரின் உடையில் எப்பொழுதும் இருக்கும் ஓட்டைகள் இல்லாமல் இருந்தது. அவரை அப்படியான தோற்றத்தில் பார்க்க வித்தியாசமாக இருந்தது. அவனருகில் ரூபனின் பாட்டி அமர்ந்திருந்தார். ரூபன் முழங்கால்களில் முகம் வைத்து அருகில் அமர்ந்திருந்தான். அழுது வீங்கி கண்கள் சிவப்பேறி இருந்தன. அவனைப் பார்த்துவிட்டுச் சட்டெனப் பார்வையை விலக்கிக் கொண்டேன். தாஸ் அங்கிள் வாங்கி வந்த பூங்கொத்தை வைத்துவிட்டு வாய்க்குள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் அங்கிருந்து எழுந்து வந்தவன், “டேய், வெள்ளக்காரரு வந்தாரா… பாட்டு ஒழுங்கா பாடிக் காட்டுனியா… என்ன பரிசு கெடச்சுச்சு…” எனக் கேட்டான். நான் பாடலைத் தயார் செய்தது அவனுக்குத் தெரிந்திருந்தது வியப்பாக இருந்தது. சட்டென, நீண்ட நாட்களுக்குப் பின்னர் வெளிப்படும் குரலில் இருக்கும் கார்வையுடன் ரூபனின் பாட்டி “எம் புள்ள ரொம்ப நாளைக்கு அப்புறமா தொட்டியில ஆடுனான்” என்றார். அவரைத் திரும்பி பார்த்த ரூபன், அழுகை முற்றிய குரலில் எதையோ சொல்லி அழுதான்.

நான் பாடிய பாடலில் குறைந்திருந்த எதோ ஒன்றை, அவனது குரல் நிகர் செய்திருந்தைப் போன்று இருந்தது. யாருக்காகவும் பூக்காத பூவொன்றைப் பற்றிச் சொல்லும் போது சிஸ்டர் பிலோமினா கண்களில் கண்ணீர் வந்ததைப் போல எனக்கும் அழுகை வந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...