பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை

இந்தத் தொகுப்பில் பூனையைப் பற்றிய ஒரு கதையும் இல்லையே என்று  ஷீயிங் சொன்னபோது, எதிரே அமர்ந்திருந்த அவள் முகத்தில் எங்காவது சிரிப்பு ஒளிந்திருக்கிறதாக என்று  கூர்ந்து பார்த்தாள் அனா. வழக்கத்திற்கு மாறாக அதிகாரியின் தோரணைதான் தெரிந்தது.

“குழந்தைப் பிறப்பு குறைவாக இருக்கும் நாட்டில் பூனைகள் அதிகமாக இருக்கும் என்று  ஓர் ஆய்வில் படித்த நினைவுள்ளது. நாய்களைவிட பூனைகள் சமூகத்தில் தனித்து வாழ்வதற்கான வலுவைப் பெற்றவை என்றும் அதே ஆய்வு குறிப்பிட்டிருந்தது என நினைக்கிறேன்,” என்றாள் ஷீயிங்.

ஷீயிங்கின் அலுவலக அறைக் கண்ணாடிச் சுவர் வழியாக அறைக்குள் நீண்டுகொண்டிருந்த மாலை ஒளியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அனா. அவளால் ஆய்வுகளின் அடிப்படையில் எல்லாம் கதை எழுத முடியாது.

“எங்களது இளையர் படைப்பூக்கத் திட்டத்தில் இடம்பெறும் முதல் சிறுகதைத் தொகுப்பு உன்னுடையது என்பது உனக்குத் தெரியும்தானே?”

அது அவளுக்குத் தெரியும்தான். எட்டுக் கதைகள் தருவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டிருப்பதுடன், ஊக்கத்தொகையில் பாதியை வாங்கிச் செலவழித்தும் விட்டாள்.  கதைகளை அவள் முடித்துக் கொடுக்க வேண்டிய ஆறு மாத அவகாசம் இன்னும் ஒருவாரத்தில் முடிகிறது. அறைக்குள் படிந்துகொண்டிருந்த மாலை ஒளி, பூனை போல ஷீயிங்கின் கால்களை நோக்கி நகர்வதுபோலத் தோன்றவும் அனாவுக்கு மெல்லிய நடுக்கம் ஏற்பட்டது. தனிச்சையாக அவளது கால்கள் தரையிலிருந்து மேலெழும்பின.

“எனக்கு பூனைகளைப் பிடிக்காது,” என்றாள்.

“குறைந்தபட்சம் பூனைக்கு உணவு கொடுக்கும் முதிய பெண்கள் பற்றியாவது யோசிக்கலாம்.”

“எனக்கு அவர்கள் மீதும் ஆர்வமில்லை. ஒன்று அறிவுரை சொல்கிறார்கள்… இல்லாவிட்டால் தங்களது பழைய கால கதைகளைச் சொல்லி சிலாகிக்கிறார்கள்.”

“எது எப்படியிருந்தாலும், இந்த நாட்டில் கதை எழுதுபவர்கள் பூனைகளைப் பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற எழுதா விதி இருக்கிறது. பூனைகளைப் பற்றி ஏதாவது ஓர் இடத்தில் நீங்கள் குறிப்பிட்டு விடுவது நல்லதென்றே நினைக்கிறேன். இன்னும் இரண்டு வார அவகாசம் தருகிறேன். பூனைகளைப் பற்றி ஏராளமான கதைகள் உள்ளன. வாசித்துப் பாருங்கள். உங்கள் பார்வையில் ஏதாவது தோன்றும்.”

தெனாலி ராமனின் சூடு கண்ட பூனைக் கதை,  எழுதும் ஆற்றல்கொண்ட அதிசயமான ‘சியாமிய பூனை’ கதை, மனைவியைக் கொலை செய்து சுவருக்குள் புதைக்க வைத்த  எட்ஜர் அலன் போவின் ‘கறுப்புப் பூனை’ கதை, ஹரூக்கி முராகாமி உள்ளிட்ட ஜப்பான் எழுத்தாளர்களின் பூனைக் கதைகள், பூனை வடிவில் வந்து அம்மனுக்கு பூஜை செய்யும் முனிவர்கள் பற்றி புராண கதைகள்  வரை இணையத்தில் வாசிக்கக் கிடைத்த எல்லாப் பூனைக் கதைகளையும் அவள் கடந்த சில மாதங்களில் வாசித்திருந்தாள். அப்போதெல்லாம் அவளுக்கு ஏற்பட்டது மனதைக் கௌவும் கடுமையான அச்சம்தான். அவற்றைப் படித்த இரவுகளில் வீடு முழுவதும் ஏதோ ஒன்று பஞ்சுப் பாதங்களுடன் பதுங்கி பதுங்கி நடப்பதாகவே அவளுக்குத் தோன்றி தூக்கமிழக்க வைத்தது.

“உங்கள் ஆலோசனைக்கு நன்றி!” என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

ஷீயிங்கிடம் பேசி முடித்த சோர்வில் அருகில் இருந்த தேசிய அரும்பொருளகத்திற்குள் நுழைந்தாள் அனா.  நவீன தொழில்நுட்பமும் கண்ணாடித் தரையுமாகப் புதுப்பிக்கப்பட்ட பிறகு, 150 ஆண்டுகால பழமையான அந்தக் கட்டடத்துக்குள் நுழையும் போதெல்லாம் உயர்தரமான நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்வது போன்ற பதற்றம் அவளுக்கு ஏற்படும். நேரே கழிவறைக்குச் சென்று தலைமுடியையும் உதட்டுச் சாயத்தையும் சரிசெய்து கொண்டாள்.ஆளுயரக் கண்ணாடியில் ஒருமுறை சரிபார்த்துவிட்டு, முதல் தளத்திலிருக்கும் ஓவியக் கூடத்திலும் உள்ளூர் வரலாற்றுக் கூடத்திலும் சுற்றி வந்தாள். அரும்பொருளகத்தை ஏழு மணிக்கு மூடிவிடுவார்கள். மணி ஆறே காலாகியிருந்தது. வேக வேகமாக இரண்டாவது தளத்திலுள்ள ஒவ்வொரு காட்சிக்கூடத்திலும் பூனையின் எலும்புக்கூடோ சிங்கப்பூரில் அது சம்பந்தப்பட்ட வரலாற்று குறிப்புகளோ இருக்கிறதா என பொறுமையோடு தேடிப்பார்த்தாள். எதுவும் கிடைக்கவில்லை.

இதனாலெல்லாம் சோர்ந்துபோய் பன்னிரண்டு வெள்ளி தேநீரை பாதியிலேயே வைத்துவிட்டு வருபவளல்ல அவள். வீட்டுக்குச் செல்லப் பிடிக்காமல் அவளது அடுக்குமாடி வட்டாரத்தில் புதிதாகக் திறக்கப்பட்டுள்ள கஃபே கண்ணாடி வழியாகப் பார்த்த கறுப்புப் பூனைதான் அவளது அந்த நட்டத்துக்குக் காரணம். தேநீர் குடிப்பதற்கு ஏற்ற பதத்தில் இல்லாவிட்டாலும் முடித்துவிட்டுக் கிளம்பலாம் என்றுதான் நினைத்திருந்தாள். அதற்குள் பாதிப் பார்வையோடு அந்தப் பூனை பாய்ந்தோடி ஒரு கணத்தில் மறைந்தது. புல்தரையில் யாரோ தூவிவிட்டுச் சென்றிருந்த ரொட்டித் துகள்களைக் கொத்திக்கொண்டிருந்த புறாக்கூட்டம் சடசடவென கலைந்து பறந்தது.

அவளால் அந்தப் பூனையைச் சரியாக அடையாளம் சொல்ல முடியும். ஊரில் நிறைய கறுப்புப் பூனைகள் இருந்தாலும் இதற்கு மட்டுமே பச்சைக் கண்கள். சராசரி பூனைகளின் உயரத்தைவிட சற்று உயரமாகவும் உடல் அகன்றும்  மெலிந்த தோற்றத்துடனும் இருக்கும் அதற்கு எப்போதும் ஒரு அலட்சியமான நடை. துளிக்கூட சத்தமே இல்லாமல் வந்தாலும், தூரத்தில் வரும்போதே அதன் மேல் வீசும் ஒருவித மரவாசனை அதைக் காட்டிக்கொடுத்து விடும். முகத்தைவிடப் பெரிதாக தனித்துத் தெரியும் அதன் மீசை அதை முரட்டுப் பூனையாகக் காட்டுகிறதா அல்லது அது முரடாக இருப்பதால் அதன் மீசை கோரமாகத் தெரிகிறதா அனா யோசித்தாள். 

அது எங்கே இங்கே வந்தது, இப்போது எங்கே போயிருக்கும்… அனாவுக்குத் தலைக்குள் குடைந்தது. புல்தரையில் மீண்டும் புறாக் கூட்டம்.

அவளுக்கு பூனைகளைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் வந்ததற்கும் பூனையே பிடிக்காமல் போனதற்கும் இந்தப் பச்சைக்கண் கறுப்புப் பூனைதான் காரணம்.

அவளது அடுக்குமாடிக் குடியிருப்பில் சுற்றித் திரிந்துகொண்டிருந்த 18 பூனைகளில்  தந்திரமிக்க, சூட்சுமங்கள் நிறைந்த அதிசயப் பூனை அது என்று அவள் உறுதியாக நம்பினாள்.  அனா அப்படி நினைப்பதற்கு பல காரணங்கள் இருந்தன. அதில் முதல் காரணம், அந்தப் பூனை சீனக் கிளைமொழிகளிலேயே மிக மிகக் கடினமான ‘வெங்சு’ பேசுவதுதான். 

சீனாவுக்கும் ஜப்பானுக்கும் சண்டை நடந்தபோது, ரகசிய ராணுவ உரையாடல்கள் இந்த மொழியில்தான் நடைபெறுமாம். அதை சீனர்களாலேயே புரிந்துகொள்ள முடியாது. ரோத்தான் கிழவருக்கு ‘வெங்சு’ மொழி தெரியும். அதற்காகவே அவரை சீனப் பத்திரிகையிலிருந்து அவ்வப்போது நேர்காணல் செய்ய வருவார்கள். அவரும் பூனையும் பேசுவது ‘வெங்சு’ மொழி என்பது, பச்சைக்கண் கறுப்புப் பூனை குறித்து அனா கண்டறிந்த முதல் தகவல். ‘வெங்சு’ மொழி எப்படி ஒலிக்கும் என அவள் குடியிருப்பில் எவரும் அறிந்திராததாலும் கிழவரும் பூனையும் பேசும் சீனம் எவருக்கும் புரியாததாலும் அது ‘வெங்சு’ மொழி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆறு மாதங்களுக்கு முன் ஷீயிங்கின் அவளிடம் காசோலையைக் கொடுத்தபோது, இளையர் படைப்பூக்கத் திட்டத்தின் கீழ் உருவாகும் தொகுப்பில் கட்டாயம் பூனை  பற்றி கதை இடம்பெற வேண்டுமென மென்மையாக அழுத்திச்சொன்னபோது அவளுக்கு முதலில் நினைவுக்கு வந்ததே வெங்சு மொழி பேசும் இந்தக் கறுப்பு பூனைதான். உண்மையில் அறிய மொழி பேசும் ஒரு பூனையைப் பற்றி தொகுப்பில் வந்தால் அக்கதை நல்ல வரவேற்பை பெற்றுவிடும் என்றே நினைத்திருந்தாள். இந்தப் பூனையைப் பற்றி எழுதும் முயற்சியில் இறங்காதிருந்தால், அவள் ரோத்தான் கிழவரைப் பொருட்படுத்தியிருக்கமாட்டாள்.

ரோத்தான் கிழவர் அரைக்கால் சட்டையும் வெள்ளை பனியனும் போட்டிருக்கமாட்டார். உணவங்காடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டே மீ சூப்பும் கோப்பியும் குடிக்க மாட்டார். பீர் குடிக்கமாட்டார். சீனப் பேப்பர் படிக்கமாட்டார். மாண்டரினோ, மலாயோ, ஆங்கிலமோ பேச மாட்டார். சத்தம்போடமாட்டார்  ரேடியா, டிவி எதையுமே ஒலிகூட்டி  வைக்கமாட்டார்.  ‘பசார் மாலாமி’லிருந்து தேர்தல் கூட்டங்கள்வரை எதையமே கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி வேடிக்கை பார்க்கமாட்டார். நடக்கும்போது தும்மமாட்டார். பட்ஜெட்டில் வயதானவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்றால் கெட்ட வார்த்தையில் திட்டமாட்டார்.  அவர், தனியாக அல்லது ஈரறை, ஓரறை, வாடகை வீடுகளில் வசிக்கும் சீனக் கிழவர்களிலிருந்து எல்லாவகையிலும்  மாறுபட்டிருந்தார்.

ஹலோ, ஹாய் என எப்படிக் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்கமாட்டார். எவ்வளவு அன்பாகச் சிரித்தாலும் முறைக்க மட்டுமே செய்வார். வாடிய கத்திரிக்காயாக தோல் சுருங்கியிருந்தாலும் பல வயதான சீன முகங்களில் இருக்கும் கருப்பு, சிவப்பு மருக்களும் மச்சங்களும் அவர் முகத்தில் பார்த்ததில்லை. நிறம் மங்காமல் முகம், கைகள், கால்கள் எல்லாமே ஒரே மாதிரி வெளிர் மஞ்சள் நிறத்திலும் தலைமுடி வெந்நிறமாகவும் இருக்கும். ‘மியாவ்’ எனும் பூனைகளின் மொழியை ஒருபோதும் பச்சைக்கண் பூனை புழங்காததைப் போலவே, ரோத்தான் கிழவரும் சிங்கப்பூரர்கள் பேசும் எந்த மொழியையும் பேசமாட்டார்.

அவள் திரட்டிய இந்த விவரங்கள் எதுவுமே பச்சைக்கண் கறுப்புப் பூனையைப் பற்றித் தெரிந்துகொள்ள அவளுக்கு உதவவில்லை. அதெல்லாம் கிழவரைப் பற்றியே சுற்றிச் சுற்றி போனதால் பூனையைப் பற்றிய  தகவல்களைப் பெறுவது பெரும்பாடானது.

கண்ணுக்கு எதிரே ஓடிய பச்சைக்கண் கறுப்புப் பூனை போனதிசை தெரியாமல், பன்னிரெண்டு வெள்ளி தேநீரையும் பாதியில் வைத்துவிட்டு தெருவில் நின்றபோது உலகப் புகழ்பெறப்போகும் ஓர் எழுத்தாளரின் வாழ்க்கையிலும் ஒரு பூனை புகுந்து விளையாடும் என்பதை அவள் நம்பத்தொடங்கினாள்.

அடித்தளத் தொண்டூழியரான அனா, அவளது குடியிருப்பின் வசிப்போர் குழுவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப்பு நேரத்திலும் உதவுவாள். அவளுக்கு ஆங்கிலம், தமிழோடு, மலாய், ஹாக்கியன் மொழிகளும் பேசத் தெரியும் என்பதால் வருவோரின் புகார்களையும் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டு எழுதுவது அவளது முதன்மைப் பணி. அப்படித்தான் அவள் அந்தப் பூனையைப் பற்றி முதலில் தெரிந்துகொண்டாள். ஒவ்வொருமுறையும் குறைந்தது ஒரு மூதாட்டியாவது பச்சைக்கண் கறுப்புப் பூனைப் பற்றி புகார் செய்வார்.

“நாங்கள் வைக்கும் தீனியை அது சாப்பிடுவதில்லை.”

“அது கூட்டம் சேர்க்கிறது. வேறு சில பூனைகளும் எங்களை ஒதுக்கத் தொடங்கிவிட்டன. “

“அது எங்களை நோட்டம் பார்க்கிறது.”

அவள் வேலை குறைகளைக் கேட்டு எழுதுவது மட்டுமே என்பதால் அவர்கள் சொல்வதை எல்லாம் எழுதி வைப்பாள். சில நேரங்களில் கற்பனையில் இந்தக் கதைகளைச் சொல்கிறார்களா என்று அவளுக்கு சந்தேகம் வரும். அப்போது எழுதுவதை நிறுத்திவிட்டு, “நீங்கள் சொன்னது புரியவில்லை” என்பாள். அதே கதையை அவர்கள் இன்னும் விலாவரியாக விளக்கிச் சொல்வார்கள். அப்போது அவள், “மன்னித்துக்கொள்ளுங்கள் எனக்கு மிகவும் குளிராக இருக்கிறது. காதுக்குள் பஞ்சு வைத்துக்கொள்கிறேன்,” என்று நிறைய பஞ்சை எடுத்துக் காதுக்குள் அடைத்துக்கொள்வாள். அவள் கைப்பைக்குள் எப்போதுமிருக்கும் அவசர உதவிப் பொருட்களில் பஞ்சும் ஒன்று. வயதானவர்களுக்கு எப்போதுமே குளிரும் என்பதால், அவர்களும் “ஆமாம் குளிர் அதிகமாகத்தான் இருக்கிறது” என்பார்கள். ஆனால், அவர்கள் புகார்களை அவள் எழுதியிருக்கிறாளா என்று பார்க்காமல் அங்கிருந்து நகர மாட்டார்கள். 

அன்றைக்கு வந்த மூதாட்டிக்கு முதுகு சற்று வளைந்திருந்தாலும் திடகாத்திரமாக இருந்தார். கழுத்தில் மொத்தமான தங்கச் சங்கிலிலும் கைகளில் ஜேட் வளையும் தங்கநிறக் கைகடிகாரமும் அணிந்திருந்தார். மூக்குக் கண்ணாடியும் புதிதாக இருந்தது. சிவப்பு நிறத்தில் புது டீ-சட்டையும் சிவப்பில் வெள்ளைப் பூக்கள் கொண்ட காற்சட்டையும் ஃபிட்ஃபளொப் செருப்பும் அணிந்திருந்தார்.

அவள் பார்ப்பதை உணர்ந்தவர் உடனே “இந்தப் புத்தாண்டுக்கு பூக்கள்தான் ஃபேஷன்” என்றார். அவள் தனது மடிக்கணினியில் கவனத்தைச் செலுத்தியபடி, “நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?” என்று கேட்டாள்.

“பூனைகள் காணாமல் போன பொருட்களைக் கண்டுபிடிக்கும்,”

“உண்மையாகவா?”

“ஆமாம். என்னுடைய பூனை என் கணவன் ஒளித்துவைக்கும் பியரையும் பணத்தையும் எப்படியும் கண்டுபிடித்துவிடும்.”

“சரி. இப்போது உங்கள் பிரச்சினை என்ன?”

“இந்த பச்சைக்கண் கறுப்புப் பூனை வந்ததிலிருந்து என் வீட்டிலிருந்து ஒவ்வொன்றாகக் காணாமல் போகிறது.”

“நீங்கள் போலிசில்தான் புகார் செய்ய வேண்டும்.”

“இங்கே உள்ள போலிஸ் ஸ்டேஷனில் மெஷின்தான் இருக்கிறது. நான் வயதானவர். என்னால் மெ‌ஷினிடம் எல்லாம் பேசமுடியாது. நீங்கள்தான் உதவவேண்டும்.”

 பொருட்கள் காணாமல் போகத் தொடங்கியுள்ளதாக இதுவரை நான்கு மூதாட்டிகள் புகார் சொல்லிவிட்டார்கள். என்ன காணாமல் போனது என்று அவள் கேட்கவில்லை. அவர்களுக்கும் சொல்லவில்லை.

“வேறு என்ன, ஜேட், தங்கம், முத்து, பணம்தான் போயிருக்கும். வெளியில் சொல்லாதுகள்,” என்பது அவளின் சக ஊழியரான லிம்மின் முடிவு.

“இவர்களைப் பார்த்தால் வீட்டில் ஜேடும் முத்தும் பணமும் வைத்திருப்பவர்களைப் போலவா இருக்கிறது லிம்?”

“உனக்கென்ன தெரியும் அனா. எல்லாருக்கும் வீடு இருக்கிறது. அரசாங்கம் நிறைய சலுகை கொடுக்கிறது. இந்த வயதிலும் மேசை துடைத்து, அட்டை சேகரித்து ஏதோ வேலை சம்பாதிக்கிறார்கள். இரண்டுவாரம் இறுதிச் சடங்கு செய்ய காசு சேர்த்து வைத்திருப்பார்கள். தலைமுடியைச் சுருட்டி, டை அடித்துக்கொண்டிருக்கிறார்கள் பார்.”

“உனக்கு உன் அம்மா காசு கொடுக்கவில்லை என்று கோபம். அதற்காக எல்லாரிடமும் காசு இருக்கும் என்று நினைக்காதே. அது இருக்கட்டும், இந்தப் பூனையை என்ன செய்வது?”

“அனா, எனக்கு புறா பிரச்சினையே தலைக்கு  வெளியே பிதுங்குகிறது. பூனைப் பிரச்சினைக்குள் என்னை இழுக்காதே!”

“புறாவுக்கு உணவு போட்டால் அபராதம் என்று போர்ட் வைத்தால் உன் பிரச்சினை தீர்ந்துவிடும். பூச்சிக் கட்டுப்பாட்டாளர்களைக்கொண்டு  ஏற்கெனவே நிறைய புறாவை கொன்றுவிட்டாய். இன்னும் உனக்கென்ன பிரச்சினை லிம்?”

“நீ ஒருநாள் அந்தப் பூனையை ரகசியமாகப் பின்தொடர்ந்து, அது என்ன செய்கிறது என்று பார். அதன்பிறகு என்ன செய்வது என்று யோசிப்போம்.”

லிம் அதை வேடிக்கையாகத்தான் சொன்னான். ஒருவேளை, அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு அப்போதே அவள் அதனைப் பின் தொடர்ந்திருந்தால் கதை எழுதுவதுதான் எத்தனை எளிமையாகியிருக்கும். மேலும் அவளுக்கு உதவ வேறுவழியில்லாமல் லிம் கூட வரவும் செய்திருப்பான். 

அனா அந்தப் பூனையைப் பின் தொடரத் தொடங்கியது காசோலையில் மாற்றிய பணம் அனைத்தும் காலியான பிறகுதான்.

பச்சைக்கண் கறுப்புப் பூனை எதிர்ப்படும் போதெல்லாம், அதைப் பின்தொடர அனா முயற்சி செய்திருக்கிறாள். அது எப்படியோ திடீரென மறைந்துவிடும். ஒருவேளை கிழவிகள் சொல்வதுபோல அது மந்திரக்காரப் பூனையாக இருக்கலாம் என்று அனா அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வாள். அவள் அப்படி நினைப்பதற்கு ஏற்பதான் சம்பவங்களும் நடந்தன.

அன்று ஒருநாள் காதில் கடிபட்ட பூனையைத் தூக்கிக்கொண்டு வந்த ஒரு குடியிருப்பாளர், அதை அவள் முகத்துக்கு அருகே நீட்டி “பாருங்கள் எப்படிக் கடித்திருக்கிறது,” என்றார். அனா பின்னால் நகர்ந்ததில், நகரும் நாற்காலியிலிருந்து நழுவிக் கீழே விழுந்துவிட்டாள். 

“அதை ஏன் என்னிடம் கொண்டு காட்டுகிறீர்கள்?”

“நான் பத்திரிகையில் செய்தி கொடுக்கப் போகிறேன். இந்தக் காரியத்தைச் செய்த மிருகத்தைக் கண்டுபிடிக்காமல் ஓயமாட்டேன்.”

“பச்சைக்கண் கறுப்புப் பூனைதான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும்,” நினைத்ததை அவள் சொல்லவில்லை. காதருந்த பூனை தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது. “நல்லது. நான் வகுப்புக்குப் போகவேண்டும்,” என்று பையைத் தோளில் மாட்டியபடி  கிளம்பிவிட்டாள்.

 பச்சைக்கண் பூனை அவளது வட்டாரத்தைச் சேர்ந்த பூனையல்ல. கடந்த ஆண்டு சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, அடுக்குமாடிகளுக்கு நடுவே இருந்த சிறிய திடலில் வரவேற்பு சிங்க நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிரே இருந்த மாடியிலிருந்து நேராக சிங்கத்தின் தலையில் திடீரெனக் குதித்த அந்த பச்சைக்கண் கறுப்புப் பூனை கொஞ்ச நேரம் சிங்கத்தின் தலையில் உட்கார்ந்தபடியே கூட்டத்தை நோட்டம் விட்டது. பிறகு கீழே குதித்து வலது கால்களையும் இடது கால்களையும் முன்னும் பின்னும் வைத்து ஆடியது. அப்போதுதான் அப்பகுதி மக்கள் பலரும் அதை முதன்முதலில் பார்த்தார்கள். அத்தொகுதியின் கொண்டாட்டத்திற்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அங்கிருந்த அனைவரும் அது நடனத்தின் ஒரு பகுதி என்றே நினைத்து ரசித்தார்கள். ஊடகங்களிலும் பூனையுடன் கூடிய சிங்க நடனம் என்று செய்தி வெளிவந்தது. அது புலி ஆண்டு. புலி ஆண்டில் வந்த பூனை என்று ஒவ்வொருவரும் அதைச் சொந்தம் கொண்டாட நினைத்தார்கள். ஆனால், பிரம்புக் கோலுடன் சுற்றும் ‘ரோத்தான்’ கிழவரைத் தவிர்த்து வேறு எவராலும் அதனிடம் அணுக்கமாக முடிந்ததில்லை.

லிம் இந்த விவரங்களைச் சொன்னபோது, “எத்தனையோ பூனைகள் இங்கே இருக்க, இந்தக் கறுப்பு பச்சைக்கண் பூனைக்கு மட்டும் ஏன் ரோத்தான் கிழவர் உணவு கொடுக்கிறார்? அதுவும் ஏன் அவர் கொடுப்பதை மட்டுமே தின்கிறது?” எனக் கேட்டாள் அனா.

அவன் வழக்கம்போல, “வசிப்போர் குழுவுக்கு வரும் கிழவிகள் சொன்னார்களா?” என்று கேட்டுவிட்டுப் போய்விட்டான்.

 அதற்குப்பிறகுதான் ரோத்தான் கிழவரைப் பின்தொடர்ந்து தானே அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள அனா முடிவெடுத்தாள்.

எப்போதும் பூட்டியே இருக்கும்  புளோக் 29ன் 10வது மாடி, எண் 38இல் இருக்கும் அவரது ஈரறை வீட்டுக்குள் என்ன இருக்கிறது, யார் இருக்கிறார்கள் என்பது அவருக்கு அவ்வப்போது உதவி செய்யும் ஒரே ஆத்மாவான குடியிருப்பாளர் குழு தலைவருக்கும் தெரியாது. ஒரு கொசுகூட தன் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று வீட்டின் அத்தனை துவாரங்களையும் வலைபோட்டு மூடி வைத்திருக்கிறார் ரோத்தான் கிழவர். ஒரு பகல் முழுவதும் மாடிப்படியில் உட்கார்ந்தபடி அவர் வீட்டைக் கண்காணித்தாள். வீட்டின் கதவோ, சன்னல்களோ திறக்கப்படவே இல்லை. வீட்டிலிருந்து வாசனைகூட வெளியே வரவில்லை. ரோத்தான் கிழவர் வீட்டிலில்லை என்று முடிவுசெய்து

அனா கிளம்பினாள். மின்தூக்கி ஐந்தாவது மாடியில் நின்றபோது, மூக்கைப் பிடித்தடி அவசரமாக உள்ளே நுழைந்த பெண், தலையை ஆட்டி “இப்படியெல்லாம் கொடுமை நடக்குமா?” என்றார். மூடப்போன மின்தூக்கிக் கதவை வலிந்து திறந்தபடி வெளியே பாய்ந்தாள் அனா. கழுத்தை இறுக்கக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்த சிறுமியை தூக்கிக்கொண்டிருந்த ஒரு மாது, கைப்பேசியில் மிகுந்த பதற்றத்துடன் உடனே வா என்று யாரையோ கூப்பிட்டுக்கொண்டிருந்தார். கேவியபடி, சிறுமி தலையை லேசாகத் தூக்கி அரைக்கண்ணால் இடதுபக்கம் பார்த்தாள். சிறுமியின் பார்வை போன திசையை நோக்கின அனாவுக்கு கால்கள் நடுங்கத் தொடங்கின. கழுத்து கடித்துக் குதறப்பட்ட நிலையில் சாம்பல் நிறக் குட்டிப் பூனை ஒன்று கால்கள் நாற்புறமும் விரிந்தபடி. மல்லாந்தநிலையில் கோரமாகக் கிடந்தது. அதன் கண்கள் மேல்நோக்கித் திறந்திருந்தன. உறைந்தும் உறையாமலும் இருந்த ரத்தம், சிறிது நேரத்துக்கு முன்னர்தான் அச்சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்பதை அவளுக்கு உணர்த்தியது.

“இந்தப் பச்சைக்கண் பூனையை உடனடியாக நீங்கள் ஏதாவது செய்தே ஆக வேண்டும். அது என்ன செய்கிறது தெரியுமா?”

“இப்போது புதிதாக என்ன செய்கிறது?”

“புதிதாக இல்லை. எப்போதும் நடப்பதுதான். முன்னர் ஒளித்துச் செய்யும். இப்போது யாரும் தன்னை எதுவும் செய்ய முடியாது என்கிற துணிச்சல் அதுக்கு வந்துவிட்டது…”

“என்ன நடந்தது…”

சற்றும் முற்றும்  பார்த்த அந்தக் கிழவி, அன்றைக்கு பயத்தோடு குசுகுசுத்தது அனாவுக்கு நினைவுக்கு வந்தது.

“அது ஒரு குட்டிச்சாத்தான்! மற்றப் பூனைகளில் கழுத்தைக் கடித்து ரத்தம் குடிக்கிறது….”

“அது கடித்ததை நீங்கள் பார்த்தீர்களா?”

“வேறு எதுவாக இருக்கமுடியும் என நீ நினைக்கிறாய்” என பதில் கேள்வி கேட்டாள் கிழவி.

அனா அதிர்ச்சியோடு மாடிப் படியோரத்தில் கிடந்த பூனையை சற்றுத் தள்ளி நின்றபடியே பார்த்தாள். அதன் கழுத்துப்பகுதியில் பற்களின் தடம் ஆழமாகப் பதிந்திருந்தது. ரத்தவாடை குமட்டியது. மின்தூக்கி திறக்கும் சத்தம் கேட்கவும் வேகமாக மின்தூக்கியை நோக்கி நடந்தாள்.

மீண்டும் 10வது மாடிக்குச் சென்று பார்த்தபோது, ரோத்தான் கிழவரின் வீடு பூட்டியே இருந்தது. ரத்தக் கறை தெரிகிறதா என்று வீட்டு வாசல் தரையை உற்றுப்பார்த்தாள். சுத்தமாக இருந்தது. குனிந்து வாசல் கதவின் கீழ்ப்பகுதியில் இருந்த மெல்லிய இடுக்கு வழியாகப் பார்த்தாள். கதவில் காதை வைத்துப் பார்த்தாள். உள்ளே நடமாட்டம் இருப்பதற்கான சிறு சத்தம்கூட இல்லை. கதவைத் தட்டிப் பார்க்கலாமா என அவள் யோசித்துக்கொண்டிருந்தபோது உர்ர் என உறுமல் கேட்கவும் பதறியபடி பத்தாவது மாடியிலிருந்து படிகளிலேயே இறங்கி கீழே ஓடினாள்.

அந்தக் காலத்தில் சீனாவிலிருந்து படகில் தப்பி வந்த எத்தனையோ சீனர்களில் ரோத்தான் கிழவரும் ஒருவர் என்றாலும் அவர் கொஞ்சம் வித்தியாசமானவர். அவரின் பெயர் இதுவரையில் நாடாளுமன்ற உறுப்பினருக்குக்கூடத் தெரியாது. அடையாள அட்டையை எந்த காரணத்துக்கும் வெளியில் காட்டவேமாட்டார். சிங்கப்பூரில் பெயரை யாருக்கும் தெரிவிக்காமல் ஒருவர் இருப்பது அறவே சாத்தியமில்லை என்பது  உண்மை என்றாலும், அப்படி  ஒருவர் இதுகாலம் வரையிலும் வாழ்வதுதான் உண்மையான உண்மை என்பது லிம் அவளுக்கு மறுவாரம் சேகரித்துக் கொடுத்த தகவல்.

அவள் பச்சைக்கண் கறுப்புப் பூனையைத் தேட தேட புதிது புதிதாக பிரச்சினைகளும் வந்தன. அவளது வீட்டிலும் அவளது அடுக்குமாடியிலுள்ள பல வீடுகளிலும் ஒற்றைக் காலணி காணாமல் போவது அதிகரித்தது. அதில் சில இரண்டு அடுக்குமாடிக் கட்டடங்கள் தள்ளி உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் கீழ்த்தளத்தில் கிழிந்து கிடந்தன. அதுபோல அவளது  வீட்டின் முன்பும் காணாமல் யார் யாருடைய ஒற்றைக் காலணிகளோ இருக்கத் தொடங்கவும் அச்சம் ஏற்பட்டது.

எப்போதும் தன் வீட்டு வாசலில் நசுங்கிப்போன நத்தையைக் கொண்டுவந்து போட்டுச் செல்வது பச்சைக்கண் கறுப்புப் பூனைதான் என அவள் நம்பத் தொடங்கிய அன்றுதான் அவள் மின்தூக்கியின் குறுக்கே அது சென்றது. பூனை இடம் வலமாகச் சென்றால் அதிர்ஷடம் என்பதை அவள் இணையத்தில் அறிந்திருந்தாள். ஆனால், எது இடது பக்கம், எது வலது பக்கம் என்று அந்தக் கணத்தில் அவளால் யோசிக்க முடியவில்லை. அம்மா அவளை கால்படாத இடத்திலிருந்து அருகம்புல் பிடுங்கி வரச் சொல்லியிருந்தார். அனா புல்லில் நடப்பதில்லை. யாரும் நடந்தும் அவள் பார்த்தில்லை. அதனால் அவளது அடுக்குமாடிக்குக் அருகேயிருக்கும் புல்தரையிலேயே அருகம் புல் பிடுங்கலாம் என்று நாலடி நடந்தவளுக்கு யாரோ தன்னை பின்புறமிருந்து உற்றுப்பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. பின்னால் திரும்பிப் பார்த்தாள். எவருமில்லை. யோசனையோடு புல் பிடுங்கக் குனிந்தபோது, திடீரெனக் கேட்ட உர்ரென்ற உறுமலில் பயந்து  தடுமாறிக் கீழே விழுந்துவிட்டாள். விழுந்த நிலையிலேயே உறுமல் வந்த திசையைப் பார்த்தாள். வரிசையாக இருந்த குரோட்டன் செடிகளுக்கு பின்னால் ஏதோ அசைவதுபோலிருந்தது. உற்றுப் பார்த்தாள். சரியாக எதுவும் புலப்படவில்லை. செடிகளுக்குள் ஏதோ அசைவது மட்டும் தெரிந்தது. அது மிக மெதுவாக  அசைந்து அசைந்து, சட்டென அதி வேகமாக உயரப் பாய்ந்ததுதான் தெரியும். அந்தக் கணத்தில் அலறியபடி கண்களை மூடிக்கொண்டதால் அதன்பிறகு என்ன நடந்தது என்று அனாவுக்கு தெரியாது.

“என்ன என்ன” அவளைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியிருந்தது.

“டைகர்… டைகர்…”

“சிங்கப்பூரில் எங்கே டைகர் இருக்கிறது? கடைசி டைகர்வரை தேடிப்பிடித்து வேட்டையாடிக் கொன்றுவிட்டார்களே. டைகர் பிராண்ட் பியர்தான் இருக்கிறது. நீ என்ன பியர் குடித்துவிட்டு விழுந்து கிடக்கிறாயா?”

“ஆமாம், ஆமாம் ஒரு காலத்தில் புலி நிறைய இருந்தது. புலி பிடித்த கூலி இந்தியர் பரம்பரையில் வந்துவிட்டு இப்படிப் பயப்படுகிறாயே…” யாரோ சொல்லிவிட்டுச் சிரிக்கவும் மற்றவர்களும் சிரித்தார்கள்.

“ஒரு வேளை இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக நீந்தி வந்த புலியாக இருக்குமோ…?” ஒரு தமிழ் இளைஞன் கிண்டல் செய்தான்.

அவள் ஒன்றும் தன்னை பாதிக்காததுபோல துடைத்துக்கொண்டு எழுந்து சென்றாலும் ரோத்தான் கிழவரையும் பச்சைக்கண் பூனையையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்தது.

ரோத்தான் கிழவருடைய கண்களும் பூனையின் பச்சைக்கண்களும் ஒரே மாதிரி வெளிர் ஜேட் நிறத்தில் பளபளவென்றிருப்பதையும் பூனைக்கும் அவருக்கும் வயதாகி இருந்தாலும் அந்த நான்கு கண்களும் நீரோட்டத்துடனும் துடிப்போடும் எந்நேரமும் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தபடியே இருப்பதையும் அவள் அறிந்தாள்.

புறாக்களுக்கும் சிறுகாட்டு விலங்குகளுக்கும்தான் உணவு கொடுத்தால் அபராதம் என்று ஆங்காங்கே அறிவிப்பு வைத்திருந்தார்கள். பூனைக்கு உணவு கொடுக்கக்கூடாது என்று சட்டம் இல்லை என்பதால் பூனைகளுக்கு ஆங்காங்கே உணவு வைத்தார்கள். பெரும்பாலும் பூனை இருக்கும் இடம் தேடி, உணவும் தண்ணீரும் வைப்பவர்கள் பெண்களாகத்தான் இருந்தார்கள். வசதி குறைந்தவர்கள், வட்டாரவாசிகளிடம் நிதியோ உணவோ சேகரித்து தங்கள் அக்கம்பக்கப் பூனைகளுக்குக் கொடுப்பார்கள். வசதியுள்ளவர்கள் காரில் தொழிற்சாலைப் பகுதிகள், கட்டுமானத் தளங்கள், வர்த்தகப் பகுதிகள் என்று மற்ற இடங்களுக்கும் தேடிச் சென்று பூனைக்கு உணவு கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் பச்சைக்கண் கறுப்புப் பூனை பற்றிய தேடலில் அனா தெரிந்துகொண்டவை.

உணவளிப்பது பெண்களின் மரபணுவுக்குள் திணிக்கப்பட்டுள்ள குணம். பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாத குறையைத் தீர்க்க பூனைக்குக் கொடுப்பார்கள் என்பது ஒரு முனைவர் பட்ட ஆய்வில் அனா படித்தது. தாங்கள் தனிமையாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த பெண்கள் இவ்வாறு அலைந்து திரிந்து பூனைகளைத் தேடிச் சென்று உணவு கொடுப்பார்கள் என்று மற்றோர் ஆய்வில் அவள் படித்தாள்.  பொது இடங்களில் பூனைக்கு உணவு வைத்தால் குப்பை போடுவதாக அபராதம் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தினால் இரவு நேரங்களில்தான் பெரும்பாலானவர்கள் பூனை உணவு கொடுக்கிறார்கள் என அவள் அறிந்தாள்.

சூரியன் மறைந்த பிறகு விலங்குகளோ பறவைகளோ உணவு உண்ணாது என்பது அனா அறிவியல் வகுப்பில்  படித்தது. ஆனால், பூனைகள் இரவிரவாக சாப்பிடுவதைப் பார்க்கும்போது அவளுக்கு தான் படித்தவற்றின் மீது ஐயம் ஏற்பட்டது. பச்சைக்கண் கறுப்புப் பூனையும் உணவுதேடி இரவில்தான் அலையும் எனத் தீர்மானித்த அனா, அன்று இரவு அதைத் தேடிப்போக முடிவெடுத்தாள்.

ஏழு மணிக்கு கீழே இறங்கியபோதே, அரைக்கால் பேண்டும் கையில்லாத டீ சட்டையுமாக அட்டைகளைத் தூக்கிக்கொண்டு 6வது மாடியில் வசிக்கும் முதியவள் எதிர்ப்பட்டாள்.  83 வயது என இரு மாதங்களுக்கு முன் வசிப்போர் குழுவுக்கு வந்த அவளது அடையாள அட்டையைப் பார்த்து அனா தெரிந்துவைத்திருந்தாள். ஆனாலும், சராசரி உயரத்துடன் கொஞ்சம் சதைப் பிடிப்போடு இருக்கும் அவளுக்கு லேசாகத்தான் கூன் விழுந்திருந்தது. அவள் வட சீனாவிலிருந்து வந்த வாட்டசாட்டமான உயரமான பெண்ணாக இருந்திருக்க வேண்டும் என ஊகித்திருந்த அனா அவளிடம் அதுபற்றிக் கேட்டதில்லை. அவளுடன் நடந்தால் ஒருவேளை பச்சைக்கண் கறுப்புப் பூனையைக் கண்டுபிடிக்கலாம் என அவளுடன் பேச்சுக்கொடுத்தாள் அனா.  

“ரோத்தான் கிழவரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” அனா அப்படிக் கேட்டிருக்க வேண்டாம்.

முதியவள் முறைத்தாள். அவளிடம் எப்படி பச்சைக்கண் கறுப்புப் பூனையைப் பற்றி  பேச்சைத் தொடங்குவது என்று அனாவுக்கு தெரியவில்லை.

மாடிப் படியோரத்தில் சாய்ந்தபடி ஓய்வாகப் படுத்திருந்த சாம்பலும் வெள்ளையும் கலந்திருந்த காலொடிந்த பூனை முதியவள் பேசியது புரியாமல், எங்கோ திரும்பியபடி நெட்டி முறித்துக்கொண்டிருந்தது. அதன் தலையைக் கைகளால் திருப்பி, உணவின் அருகே வைத்தவள், விரல்களால் அதன் உடலை நீவிவிட்டபடியே சொன்னாள், “அவர் ஒருவருக்குத்தான் வெங்சு பேசத் தெரியும் என்று சொல்வார்கள். ஆனால் எவருக்கும் அவரிடம் அதைப் பதிவு செய்து வாங்க வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் போய்விட்டது… இனி என்ன செய்வது….”

“நீங்கள் அவரோடு பேசியிருக்கிறீர்களா?”

“எனக்கு வெங்சு தெரியாது.”

“பச்சைக்கண் கறுப்புப் பூனைக்குத் தெரியுமா?”

“அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால், அதோடு நான் பேசுவதில்லை.”

“ஏன்?”

“விளக்குப்போல ஒளிரும் அதன் பச்சைக்கண்கள் என் கண்களைக் கூசச் செய்யும்… ரோத்தான் கிழவனின் கண்களைப் போல…” என்ற அவள் ஒரு கணம் இமைகளுக்குள் கோடுகள்போல் ஒளிந்திருந்த தனது பழுப்புநிறக் கண்களை அகலத் திறந்துப் பார்த்தாள். பிறகு கால்களை விரித்து அவளைச் சொரிந்துவிடச் சொன்ன பூனையோ பேசத் தொடங்கிவிட்டாள்.

ரோத்தான் கிழவரின் கண்களை அனா அருகில் பார்த்தது அவை உயிரோட்டத்தை இழந்தபிறகுதான். புளோக் 29ல் வசிப்பவர்கள்,  தங்களது குளிர்சாதனத்திலும் காற்றாடிகளிலும் சமையலறையிலும் கடுமையான வீச்சம் வருவதாக நகர மன்றத்துக்கும் காவல் துறைக்கும் வசிப்போர் குழுவுக்கும் மாறி மாறி புகார் செய்ததில் குப்பைக் கிடங்குகள், தண்ணீர்க் குழாய்கள், கழிவுக்குழாய்கள் என்று ஒவ்வொன்றாக நகர மன்றமும் வீவகவும் பல்வேறு சோதனைகளைச் செய்துகொண்டிருந்தபோது, 10வது மாடி, எண் 38வது வீட்டிலிருந்துதான் வாடை வருவதாக அந்தத் தளத்தில் வசிப்பவர்கள் கூறினர். காவல்துறையினர் வந்து வீட்டை உடைத்து உள்ளே சென்ற சமயத்தில் அனா அங்கே இருந்தாள்.

வீட்டுக் கதவு உடைக்கப்பட்டதும், குப்பை லாரியின் வீச்சத்தைவிட பலமடங்கு கடுமையான வீச்சம் வயிற்றை புரட்டச் செய்தபோதும் காவல்துறையினர் வீட்டைச் சுற்றித் தடுப்புப் போடுவதற்குள் முன்னர் அனா மூக்கை இறுக்கிப்பிடித்தபடி எப்படியோ உள்ளே நுழைந்துவிட்டாள்.  ஒற்றையாக வசிக்கும் முதியவர்கள் வீட்டிலிருக்கும் நாற்காலி, காற்றாடி, மேசை, தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைக் கட்டுகள், பிளாஸ்டிப் பைகள், குவளைகள் எதுவுமே இல்லாததால், வீடு பெரிதாக இருந்தது. வெள்ளைச் சுவர்களுடன் மிகச் சுத்தமாக இருந்த அந்த ஈரறை வீட்டின் சன்னல்களை மறைத்துத் தொங்கிய வெள்ளைநிறத் திரைச்சீலைகளும் பளிச்சென்றிருந்தன. ஜப்பானிய ‘டாடமி’ பாய் ஒன்று வரவேற்பறையில் ஒரு மூலையில் நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருந்தது.

 போலிசார் கொஞ்சம் நகர்ந்தபோது கிடைத்த இடைவெளியில், அனா அறைக்குள் எட்டிப்பார்த்தாள். அறையின் ஓரத்தில், கால்களை மடித்து குறுக்கிக்கொண்டிருந்த அந்த உடலின் வலது கை மட்டும் வெளியே நீண்டு, இறுக்கி மூடப்பட்டிருந்தது. புகைப்படம் எடுக்க கையுறை அணிந்த ஒருவர் உடலை நிமிர்த்தியபோதுதான் மண்ணுக்குள் புதைந்திருக்கும் இளம் பச்சைக் குண்டுமணிகளாக ஒளிர்ந்துகொண்டிருந்த அந்தக் கண்களை அனா,  அருகில் பார்த்தாள். அவர் அணிந்திருந்த சட்டை தாறுமாறாக் கிழிந்திருந்தது. சட்டை கிழிந்திருந்த இடங்களில் கீறல்கள் ரத்தம் காய்ந்திருந்தன. அப்போதுதான் கவனித்தாள். அவரது கழுத்தில் ஓரங்குல இடைவெளியில் இரு சிறு குழிகள்… அதிலிருந்து ரத்தம் வடிந்து உறைந்திருந்தது. அவரது பிரம்பு அவருக்கு எதிர்மூலையில் கிடந்தது. குமட்டிக்கொண்டு வந்த வீச்சத்தையும் தாங்கிக்கொண்டு அங்கிருந்தபடியே அனா பலவற்றையும் யோசிக்க விரும்பினாள்.

ஆனால், போலிஸ்காரர்கள் அவளையும் அவளைப்போல் உள்ளே நுழைந்துவிட்டிருந்த இன்னும் சிலரையும் வெளியேற்றிவிட்டார்கள்.  ஆங்கிலப் பத்திரிகை அவர் இறந்து நான்கு நாட்களுக்கு மேல் இருக்கக்கூடும் என்றும் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் போலிசார் கூறியதாக மட்டுமே செய்தி வந்தது. சீன மாலைப் பத்திரிகையில் பக்கம் பக்கமாக வந்த செய்திகளைப் படித்து லிம்தான் அவளுக்கு பல விவரங்களைச் சொன்னான். ரோத்தான் கிழவரின் உடலில் நகக் கீறல்கள் இருந்ததாகவும் ஆனால் அது எதன் நகம் எனக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் கொலையாளி கூரான ஆயுதத்தைக் கொண்டு கீறி போலிஸை குழப்ப நினைத்திருக்கலாம் என்றும் சொன்னான்.

“கறுப்பு பூனையா இருக்குமா?” என்றேன்.

“உளராதே” என்றான்.

“சூனியக்காரிகளுக்கு கறுப்புப் பூனைகள்தான் கையாள். அவை குட்டிச்சாத்தானின் உலகியல் வடிவம்,” என்ற அனாவுக்கு பூனைகளைப் பற்றித் தேடிப்படித்த ஒவ்வொன்றும் நினைவுக்கு வந்தன.

“உனக்கு பூனைப் பைத்தியம் பிடித்துவிட்டது,” எனச் சிரித்தான் லிம்.

“குட்டிச்சாத்தான்களுக்கு தகுந்த சமயத்தில் உணவு கொடுக்காவிட்டால் அது தன் எஜமானரையே கொன்றுவிடும். இப்படி நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. இணையத்தில் பார்ப்பதில்லையா?”  என்றாள் அனா.

“பச்சைக்கண் கறுப்புப் பூனை எங்கிருந்துதான் வந்திருக்கும்? இப்படி ஒரு பூனை சிங்கப்பூரில் இருக்குமா என்பதே  சந்தேகமாக இருக்கிறது” என்றான்.

“வெளிநாட்டிலிருந்து யாராவது திருட்டத்தனமாகக் கொண்டுவந்திருக்கலாம் அல்லது காட்டுக்குள் இருந்து வந்திருக்கலாம்.”

“காட்டுப்பூனையை நான் பார்த்ததில்லை. என்றாலும் காட்டுப்பூனையைவிட இந்தப் பூனை பயங்கரமானதுதான். உன் பயத்தில் ஒரு நியாயம் உண்டு,” என அவன் சொன்னது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. 

கிழவர் இறந்தபிறகு கறுப்புப் பூனையை அவள் பல வாரங்களாகப் பார்க்கவில்லை. அது மெல்ல பூனைகள் மேல் அவளுக்கிருந்த பயத்தைப் போக்கவும் செய்தது. ஆனால் இன்று அதனைப் பார்த்துத் தொலைவாள் என அவள் நினைக்கவில்லை. அதுவும் ஷீயிங் இன்னும் ஒரு வாரத்தில் பூனை கதை கேட்டிருக்கும் இந்த நேரத்தில் அது மீண்டும் கண்ணில் பட்டிருக்க வேண்டாம்.

கஃபே எதிரே தெருவில் நின்றபடி சுற்றிலும் நோட்டமிட்டாள். பச்சைக்கண் கறுப்புப் பூனை எதிரே இருந்த முதியோர் உடற்பயிற்சி இடத்தில் நீள பெஞ்சில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. சிவப்பு விளக்கையும் பொருட்படுத்தாமல் தெருவைக் கடந்தாள். அவள் சற்று தூரத்தில் வந்ததுமே அது பாய்ந்தோடத் தொடங்கியது. அனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் அதற்கு பயந்து ஓடிய சம்பவங்கள் நினைவுக்கு வர, “உன்னை இன்று விடப்போவதில்லை” என சத்தமாகச் சொல்லியபடி துரத்தத் தொடங்கினாள். 

இரண்டு மூன்று அடுக்குமாடிகளைக் கடந்து ஓடிய அது, சாலையைக் கடந்து கட்டுமானம் நடந்துகொண்டிருந்த பகுதிக்குள் நுழைந்தது. இரவு நேரத்திலும் அங்கே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ், பங்ளாதேஷ் ஊழியர்கள் எவரும் அவளைக் கவனித்ததாகத் தெரியவில்லை. யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று பார்த்தபடியே, தரையில் கிடந்த கம்பிக் குவியலில் இருந்து ஒரு கம்பியை எடுத்துக்கொண்டாள். அவர்கள் புதிய கான்கிரீட்டுக தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தார்கள். தண்ணீரைப் பார்த்தும் மீண்டும் வெளியே வந்த அது பக்கதிலிருந்து அடுக்குமாடிப் படிக்கட்டில் ஏறத்தொடங்கியது. அதன் வேகத்துக்கு ஓடவும் படிகளில் ஏறவும் முடியாமல் மூச்சு வாங்கிபோதும் அவள் உடலில் வலு கூடியது போலிருந்தது. பூனையைப் போலவே அவளும் தாவித் தாவி படிகளில் ஏறினாள். அந்தக் கறுப்புப் பூனை அவளுக்கு பயந்து ஓடுவது அதுவரை அவளுக்குள் இறுகியிருந்த அச்சத்திலிருந்து விடுதலை கொடுப்பதாக உணர்ந்தாள்.

13வது மாடிதான் அந்தக் கட்டடத்தின் கடைசி மாடி. அதற்கு மேல் படியில்லை. சுற்றிலும் பார்த்த பூனை, படிக்கட்டின் பக்கவாட்டுக் கம்பி நுனியில் ஏறி நின்றது. பத்து படிகள் கீழே நின்ற அனா, மிக மெதுவாக மேலே ஏறினாள். அவளைப் பார்த்தும் அதன் உடல் விறைப்பானது. தலையை நிமிர்த்தியது. அவளை முறைத்தபடி வாலை பக்க வாட்டில் மெதுவாக ஆட்டியது. பாயப் போவதுபோல நின்ற அதன் பச்சைக்கண்கள் பளபளத்தன. தலையைச் சுற்றி அங்குமிங்கும் பார்த்தது. மாடிப் படியின் கைப்பிடிக் கம்டியில் ஓரடி நடந்தது பிறகு, பின் கால்களை லேசாக மடக்கி முன் கால்களை உறுதியாக்கி, பாய்வதற்குத் தயாராகவும் இரண்டுபடிகள் கீழே நின்ற அனா, சட்டென்று கம்பியால் அதன் கால்களைத் தட்டிவிட்டாள். 

தடுமாறிய அது,  படிகளின் நடுவே இருந்த இடைவெளி வழியாக, 13வது மாடியிலிருந்து கீழே விழுந்தது.  எட்டிப் பார்த்தாள். கீழே நீட்டிக்கொண்டிருந்த ஏராளமான கம்பிகளில் அதன் உடல் செருகிக்கிடந்தது. அது விழுவதற்கு முன் அது ‘மியாவ்’ எனக் கத்தியதில் இனி தன்னால் பூனையைப் பற்றி கதை எழுத முடியாதோ என்ற கவலை அனாவின் மனதைப் பிசையத் தொடங்கியது.

5 comments for “பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை

  1. Sumi rathnam
    January 2, 2022 at 5:18 pm

    எழுத்தாளர் லதா ஆகச்சிறந்த கதை சொல்லி என்பதனை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்…மொழிநடை மெல்ல மெல்ல நம்மை உள் இழுத்துக்கொள்கிறது…

    இனி காணும் பூனைகளிடம் பச்சைக் கண்கள் கொண்ட பூனையைத் தேடுவேனோ என்னவோ!

  2. Pon Mahalingam
    January 2, 2022 at 9:15 pm

    அடேயப்பா! எதிர்பாராத முடிவு. பூனை பற்றி ஏராளமான நுண் தகவல்கள். ஒரிஜினல் சிங்கப்பூர்க் கதை. எப்படி வேண்டுமானாலும் வாசகன் வளைத்துக் கொள்ள வாய்ப்பளிக்கும் கதை. ரோத்தான் கிழவர் சுவாரஸ்யமான மனிதர்தான். நன்று லதா.

  3. வாசுகி
    January 4, 2022 at 6:10 am

    லதா சிறந்த கதைசொல்லி என்பதை மீண்டும் இக்கதைக்கூடாகவும் நிரூபித்துள்ளார். தனிமையின் அவலத்தை முதியவர்களின் செயற்பாடுகளில் இருந்துமட்டுமல்லாது பூனையைக் குறியீடாக்கியும் விளக்குவது கதையை இன்னுமொரு பரிமானத்துக்கு இட்டுச் செல்கிறது

  4. பொன் சுந்தரராசு
    January 4, 2022 at 6:58 am

    உண்மைதான். சுமி ரத்தினம் கூறியிருப்பதைப் போல் பூனையைப் பார்க்கும் போதெல்லாம் பச்சைக் கண் இருக்கிறதா என்ற தேடல் தோன்றுவதைத் தடுக்க முடியாது.
    வித்தியாசமான அருமையான கதை.

  5. January 5, 2022 at 1:35 am

    இந்த நள்ளிரவு நேரத்தில் படித்திருக்கக்கூடாதக் கதை. படிக்கப்படிக்க ஏதோ அமானுஷ்யம் சுற்றிலும் சூழ்வது போல ஒரு பிரமையைக் இக்கதை கொடுத்துவிட்டது. பூனை பற்றியக் கதை எழுத முயன்று முடியாமல் தவிக்கிறாள் அனா. கதை எழுதி கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அதற்கான பாதி பணத்தையும் வாங்கியப்பின்னரும் அவளால் பூனையைப் பற்றி ஏன் கதை எழுத முடியவில்லை என ஆரம்பித்து பூனையிலேயே கதையை முடித்த விதம் சுவாரஷ்யம் குன்றாமல் இருக்கிறது. சிங்கப்பூர் வாழ்வியலோடு நகர்ந்து கொண்டிருக்கும் கதையில் பகச்சைக்கண் பூனையைப் பற்றி அனா நினைக்கும் போதும் அதைத் தேடும்போதும் நமக்கு ஒருவித நடுக்கமும் பதற்றமும் வரும் வகையில் நன்றாகவே கதையைக் கொண்டு சென்றுள்ளார் ஆசிரியர். கண்டிப்பாக வாசிக்க வேண்டியக் கதையாக இதனைச் சொல்லலாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...