பெட்டகம்

மொத்தம் நான்கு லாக்கர்கள் அந்த வேனில் இருந்தன. அதில் இரண்டு லாக்கர்கள் ஐந்தரை அடி உயரத்தில் கம்பீரமாக இருந்தன. இளம் பச்சை நிறத்திலிருந்த  லாக்கர் நாலடி உயரம் இருந்தது.  சாயம்போன அலுமினிய நிறத்தில் இருந்த மற்றொன்று, மூன்று அடி உயரத்தில் மத்த பெட்டகங்களுக்கு மத்தியில் குட்டித் தம்பியாக பதுங்கி அமர்ந்திருந்தது. காணூர் பங்களாவின் இருட்டான அறைகளில், வெளவால் நாற்றத்துடன், ஒட்டடை சுற்றி கிடந்தபோதும், இழக்காதிருந்த கம்பீரத்தை, அரைபாடி வண்டியில் ஏற்றிவைக்கப்பட்டபோதே அவை இழந்திருந்தன. அடகு கடைக்கு வந்த கடைசி நகை போல் அந்தப் பெட்டகங்கள் அவலத்துடன் மெளனித்திருந்தன. பெட்டகங்களைக் கீழே இறக்குவதற்காக, பெருமாண்டி தலைமையில் ஐந்து லோடுமேன்கள் வந்திருந்தனர்.

வேன் நகராமல் இருக்க கீழே வாகானக் கருங்கல்லைத் தேடி கொண்டு வந்து போட்டார் லாரி ஓட்டுனர். பிறகு, கீழே பழைய லாரி டயர்களை அடுக்கி வேனிலிருந்து ஒவ்வொரு லாக்கராக நகர்த்தித் திட்டாணியில் இறக்கினார்கள். இறக்க வந்த ஆட்களில், பங்க் போல் பின்பக்கம் முடி வளர்த்திருந்த இளைஞன், ஜிகினா தாளில் சுருட்டிவைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் புகையிலையை இரு விரலால் எடுத்து, உள்ளங்கையில் வைத்துத் தேய்த்து, கன்னத்தின் ஓரத்தில் ஒதுக்கிக்கொண்டான்.  மூன்று அடி உயர குட்டி லாக்கரை அவர்கள் சுலபமாகத் தூக்கி வீட்டின் உள்வாரண்டாவில் கொண்டு வந்து வைக்கும்போது, பத்மனாபன் லலிதாவின் கண்களைத் தேடினார். அவள் எங்கிருந்தாவது தன்னை வெறித்துப்பார்ப்பாள் என அவர் உள்ளுணர்வு எச்சரித்துக்கொண்டே இருந்தது.

லலிதா அறையின் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு இருளில் படிந்தபடி நடப்பதைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். காணூர் பங்களாவில் அவளுடைய மாமனார் குமாரசாமி, உடலெங்கும் விபூதி மணம் கமழ, பூஜை முடிந்து கொத்துசாவிகளுடன் பெட்டகம் அருகில் செல்லும் காட்சி, அவளுக்கு  நினைவில் வந்தது.

பெட்டகங்கள் வந்திறங்குவதை வாரண்டாவில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார் பத்மனாபன். இவை என்ன விலைக்கு போகும் என்கிற கவலை அவரைச் சூழ்ந்தது. சேகர் சாயங்காலம் கட்டாயம் வந்துவிடுவானென்று நினைத்தபோதே பயம் ஒரு குமிழியென மெலெழும்பி, அவரது நெஞ்சை அடைத்தது.

இருபதாயிரம் பணத்துக்கு ஏழு வட்டி. ஒவ்வொரு மாதமும் ஆயிரத்து நானூறு ரூபாய் அவனுக்குத் தரவேண்டும். இரண்டு மாதம், அசலிருந்தே ஜோராக தேதி தவறாமல் வட்டிகொடுத்தாகிவிட்டது. பணம் முழுவதும் தீர்ந்ததும், இரண்டு மாதமாக வட்டிதர முடியவில்லை. பத்தரிடம் கைமாத்து கேட்டிருந்தார். கடன் தராவிட்டால் கூட பரவாயில்லை. சேகர் பற்றி சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்ததை அவனிடமே போய் சொல்லிவிட்டானே பாவி? முந்தாநாள் அந்த சேகர் பைக்கில் வந்திறங்கியதும், எப்போதும் போல் அசட்டு சிரிப்புடன்  போய் “வெளிலே கைமாத்து கேட்டுருக்கேன். இரண்டு நாள்லே வந்துடும்” என்று பத்மநாபன் சொன்னார்.

சட்டென்று பைக்கை திட்டாணியில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, இரண்டு படி ஏறியவன் வேண்டுமென்றே விட்டுக்குள்  வராமல், தெருவில் செல்பவர்களுக்குக் கேட்கும்படி கத்தினான்.   ”நா வாட்ச்மேன் மவந்தான். ஒங்கவூட்டுலே எங்கப்பாரு ஒரு காலத்திலே வேலைபார்த்திருக்காருதான். இதோ இப்போ உழைச்சு சம்பாதிச்சு உமக்கே கடன் கொடுக்குறேன்லே? உம்மை மாதிரி உட்கார்ந்து சாப்பிட்டுச் சொத்தை அழிக்கலையே? என்னமோ எங்க வூட்டு வாட்சமேன் மவந்தானேன்னு சொன்னீராமே? அவ்வளோ ரோசமிருந்தா, வாங்கின பணத்தை வட்டியோட இப்பவே திருப்பிகொடுய்யா”, என்றான்.

சத்தம் கேட்டு வீட்டு வாசலில் தேங்காய் கடை வைத்திருக்கும் மாரியப்பன் படியேறி வந்தார். ”தம்பி, விடுங்க. என்ன இருந்தாலும் பெரிய மனுசன், கன்னாபின்னானு பேசாதீங்க, எப்படியும் கொடுத்துடுவாரு”, என்றார்.  ”ரண்டு நாளிலே வருவேன், அசலும் வட்டியும் ரெடியா இருக்கணும்” என்று உருமிவிட்டு பைக்கில் சென்றான் சேகர்.

ஒவ்வொரு லாக்கராக உருட்டுக்கட்டையை கீழே கொடுத்து இறக்கிவைப்பதற்குள் பகல் பதினோரு மணியாகிவிட்டது.  கிளிப்பச்சை நிறத்தில் இருந்த ஐந்தரையடி லாக்கர் அருகில் சென்று பார்த்தார் பத்மநாபன்.  ”மேட் இன் திண்டுக்கல்”  என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.  தன் கையிலிருந்த சாவிக்கொத்திலிருந்து தேடி ஒரு சாவியெடுத்து, அலுமினிய நிறத்திலிருந்த சின்ன லாக்கரை திறந்தார். காணூர் பங்களாவிலிருந்தபோதே இந்த லாக்கருக்கான சாவி கிடைத்துவிட்டது. அந்த லாக்கர், எதிர்பார்த்தது போலவே காலியாக இருந்தது. மற்ற மூன்று லாக்கர்களுக்கான சாவிகளை எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. வீட்டில் கிடைத்த அனைத்து சாவிகளையும் போட்டு பார்த்துவிட்டார் பத்மநாபன். அவருடைய தந்தை இறந்த இந்த முப்பதாண்டுகளில் யாருக்கும் இந்த லாக்கர் பற்றிய ஞாபகம் வரவில்லை. குமாரசாமி இறக்கும்போது, கிராமத்திலிருந்த மூன்று கோவில்களுக்குத் தர்மகர்த்தாவாக இருந்தார். குடும்ப நகைகளுடன் கோவில் நகைகளும் இந்த லாக்கர்களிலேயே பத்திரமாகப் பாதுகாத்து வந்தார்.  திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு சென்று வந்தவர் ஜன்னி கண்டு படுக்கையில் விழுந்தவுடன் எல்லா கோவில் நகைகளையும் அந்தந்தக் கோவில் கணக்கரிடம் ஒப்படைத்தார். படுக்கையில் இருந்த அந்த ஒரு மாதத்திற்க்குள் இரண்டு பிள்ளைகளுக்கும் சொத்துக்களை பிரித்து உயில் எழுதி, நகைகளைப் பெண்களுக்கு எனப் பிரித்துப் பங்கீடு செய்துவிட்டார்.

 ஆட்கள் சத்தம் கேட்டு, வெளியே வந்து, லாக்கர்கள் இறக்குவதைச் சுவாரஸ்யமில்லாமல் பார்த்தார் பத்மநாபனின் தம்பி சுந்தரேசன்.

”இந்த குட்டி லாக்கரை வேணா சேட்டுங்க எடுத்துப்பானுக. வேற எதுக்கும் சாவி இல்ல. பேரிச்சம்பழத்துக்குதான் போடணும். வேன் சத்தம் தெண்டம்”  என்றார் சுந்தரேசன்.

”ராமு  வரட்டும். அவன் மாத்து சாவி போட்டுட்டா, வித்துடலாம்” என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் சொன்னார் பத்மநாபன்.

”என்னமோ செய்ங்க. எனக்கு நைட்டு ட்ரெய்ன்லே மெட்ராசு போய் ஆவணும். ஆடிட்டிங் நேரம். இன்னைக்குள்ள தொறந்து முடிவு கட்டிடணும்” என்றார் சுந்தரேசன்.

உச்சி வெயில் ஏறியிருந்த பொழுதில் கடுமையான பீடி நாற்றத்துடன் உள்ளே வந்தார் ராமு ஆசாரி. தலை முழுவதும் நரைத்துப் பரட்டையாகத் தொங்கியது. எலும்புகள் துருத்திக்கொண்டுத் தெரிந்த தேகத்தின் மேல் கீரிடம் போல் அந்த பரட்டை முடி படர்ந்திருந்தது. அழுக்கு வேட்டியும், மேலுடம்பில் சாயம்போன சிவப்பு ஈரிழைத் துண்டையும் சுற்றியிருந்தார். 

சிறிய வெட்டிரும்பை வைத்து முதலில் கைப்பிடிக்கு மேலிருந்த இடத்தில் சுத்தியலால் தட்டி உள்ளிறக்கினார். ஒவ்வொரு தட்டலும் சரியாக வெட்டிரும்பின் தலையில் விழுந்தது. அதிக சத்தமில்லாது, நச்சென்று தலையில் இறக்கிவிட்டு, உடனே அந்த இடத்தைக் கூர்ந்து பார்த்தார் ராமு ஆசாரி. ஒரு சின்ன ஓட்டை உருவானதும், அதே போல் மற்ற மூலைகளிலும் ரிவிட் அடித்து இறக்கி சிறிய ஓட்டைகளைப் போட்டார். சில்லென்று கிடந்த அந்த இரும்பு லாக்கரில் முட்டுக்கொடுத்து நின்று கொண்டு, ராமு ஆசாரி செய்வதை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான், பங்க் இளைஞன். தான் பூமியில் தோன்றியிருக்காத காலத்தில் கடைசியாகப் பூட்டப்பட்டவை இப்போது திறக்கபோகிறார்கள் என்கிற எண்ணமே அவனுக்குச் சிலிர்ப்பாக இருந்தது. பள்ளிகூட நாட்களில் சேர்த்து வைத்த இரட்டைகிளித் தீப்பெட்டிகளின் அட்டைப் படங்கள் இப்போது எங்கே கிடக்கும் என்று  யோசித்தான் அவன். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ராமு ஆசாரி திரும்ப திரும்ப ஓட்டைகள் போட்டு கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அலுப்புடன் வெளியே வந்து இன்னும் கொஞ்சம் ஹான்ஸை எடுத்து கன்னத்தினோரம் இடுக்கிக்கொண்டான் பங்க் இளைஞன்.

வெகு நேரத்திற்குப் பிறகு, ராமு ஆசாரி கைப்பிடியை நகர்த்தியதும் உள்ளிருந்து கிலிங் என்று மணியோசை கேட்டது. ஒளித்துவைத்த இனிப்பை கண்டுபிடித்தெடுத்த சிறுவன்போல், பின்பக்கம் திரும்பி சிரித்து, “பெல்லு பூட்டு,”  என்றார். அவர் மேலும் கைப்பிடியை திருப்ப, ஒவ்வொரு மூலையிலும் அதேபோல் மணியோசை எழுந்தது. இரண்டு முறை வலதுபக்கம் கைப்பிடியை திருகி, மூன்றாவது முறை எதிர்பக்கம் முழுவதும் திருப்பியதும், க்ளக் என்ற ஒலியுடன் நான்கு மூலைகளிலும் பூட்டுக்கள் திறந்துக்கொண்டன. பிறகு லாக்கரை விட்டு விலகி அமர்ந்து, பெருமாண்டியின் ஆட்களைக் கூப்பிட்டு, ”புடிச்சி இளு” என்றார். பங்க் வைத்த இளைஞன் முன்வந்து முழுபலமும் கொடுத்து இழுத்துபார்த்தான். இம்மியளவு கூட கதவு நகரவில்லை. அவனை நகர சொல்லிவிட்டுக், கதவின் நான்கு பக்கமும் சுத்தியலால், தட்டினார் ராமு ஆசாரி.  பிறகு பங்க் இளைஞனிடம் இழுக்கும்படி சைகை செய்துவிட்டு நகர்ந்துக்கொண்டார். கைப்பிடியைப் பிடித்து இழுத்தவுடன், இரும்பு சக்கரங்களில் மண் நெறிபடும் சத்தம் எழுந்தது. மெதுவாகக் கதவு திறந்தது. உள்ளிருந்து குளிர்ந்த இரும்பின் மணம் பழைய நெடியுடன் கலந்து வீசியது. லாக்கர் முழுவதும் காலியாக கிடந்தது. ராமு ஆசாரி, வலது கையை உள்ளே விட்டு தடவி வெளியே தள்ளினார். தூசி பறந்து நெடியை கிளப்பியது. கீழே விழுந்த ஒட்டடையுடன், சருகு போல் காய்ந்த சம்பங்கி பூக்கள் வெளியே வந்து விழுந்தன.   பங்க் இளைஞன் உற்றுப்பார்த்து “பொன்னு வைக்கிற எடத்துலே பூவுலே வச்சிருக்காங்கே” என்றான். மற்ற லோடுமேன்கள் சிரித்தனர். பத்மநாபன் முறைப்பதைப் பார்த்ததும், பெருமாண்டி தொண்டையைச் செருமி அவர்களை அடக்கினான்.

லலிதா, ஜன்னல் கம்பியிலிருந்து நகர்ந்து ஹாலின் மூலையிலிருந்த கட்டிலில் அமர்ந்தாள். சங்கர்… நூத்துக்கு தொண்ணுத்தேழு, இரண்டாவது ரேங்க், லலிதாம்பிகை.. கணக்கு பாடம், நூத்துக்கு தொண்ணுத்தொம்போது, முதல் ரேங்க். “புள்ளைகளா நல்லா கைதட்டுங்க” என்று செல்வநாயகம் வாத்தியார் சொன்னார். பெண்கள் பக்கமிருந்து பலமான கை தட்டலோசை எழுந்தது. லலிதா மெதுவாக எழுந்து சென்று செல்வநாயகம் சாரிடம் பேப்பரை வாங்கி திரும்பி நடந்தாள். சங்கர் முகத்தைப் பார்த்தாள். அவன் குனிந்துக்கொண்டது, வலித்தது. பேசாம அவனே முதல் ரேங்க் வாங்கியிருக்கலாம் என்று தோன்றியது. இனி சம்பங்கி பூ கொண்டு வந்து கொடுப்பானா? வீட்டுக்கொல்லையில் எத்தனையோ பூக்கள் இருந்தும், அவன் கொண்டு வந்துக்கொடுக்கும் சம்பங்கியில் வீசும் நறுமணம் தனித்துவமானது. தலையில் சூடிக்கொள்ளும்போது பெருமையாக இருக்கும். இனி அவங்கம்மா, பூ கொண்டுப்போய் கொடுக்க சொன்னாலும் வரமாட்டான். இரவெல்லாம் தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டுபுரண்டு படுத்துக்கொண்டிருந்தாள். பால் பாத்திரத்தைக் கொண்டு வந்து நடையில் மாட்டும் சத்தம் கேட்டதும், எழுந்துச்சென்று வாசலில் பார்த்தாள். பிளாஸ்டிக் வாளி நிறைய நந்தியாவட்டை பூக்களுடன் அதே வாசனையுடன் சம்பங்கி பூ வாசலில் இருந்தது.

பத்தாவது படிக்கையில் ஒருநாள் பள்ளியில் இருக்கையிலேயே பெரியமனுசியாகிவிட்டாள் லலிதா. உடனடியாக வீட்டுக்குத் தகவல் போனது. காரில் வந்து அழைத்துக்கொண்டாள் அம்மா. அடுத்த நாளே உறவினர்கள் எல்லாம் வீட்டுக்கு வந்து தலைக்கு ஊற்றினார்கள். ஏகப்பட்ட பாவாடை தாவணிகள் வைத்துக்கொடுத்தார்கள். லலிதாவுக்கு மிகவும் பிடித்த கிளிப்பச்சை நிறத்தில் பட்டுப்புடவை வாங்கி வந்தார் அப்பா. அவளுக்கு மிகவும் பிடித்த புட்டு சுட்டார்கள். இருந்த குழப்பம் எல்லாம் போய், சந்தோசமாக இருந்த நாட்கள் அவை.

லலிதாவின் பூப்படைவு நிகழ்ச்சி முடிந்தபின்பு ஒரு நாள் அவளது அப்பா, முயல் மார்க் ஜுவல்லரியில் இருந்து இரு அன்னப்பறவைகள், ஒன்றை ஒன்று நோக்கி அமர்ந்திருக்கும் பதக்கம் போட்ட தங்கச் சங்கிலி வாங்கி வந்தார். உலகில் வேறு எதையும் விட மதிப்புக்குரியதாக அந்த சங்கிலி மாறியது. தாவணி அணிந்து, அன்னப்பறவைகளை மேலே இழுத்துவிட்டுக்கொள்ளும்போதுதான், அலங்காரம்  முழுமையடைந்ததாக லலிதாவுக்கு தோன்றும்.  வெட்கப்படுகையில் அந்த அன்னப்பறவையை எடுத்துப் பல்லில் கடிப்பது வழக்கமாகியிருந்தது. அந்த இரு பறவைகளில் இடதுபக்கம் உள்ள பறவை தானென்றும், வலப்பக்க பறவை யாரென்று கண்டுபிடிப்பதுதான், வாழ்வின் இனிமையான புதிரென்று லலிதா நம்பினாள். 

பத்மநாபன், ராமு ஆசாரி திறந்த லாக்கரைப் பார்த்துக்கொண்டிருந்தார். கதவு முழுவதும் வெட்டிரும்பு போட்ட பொத்தல்கள் தெரிந்தன. இனி இவற்றை யார் வாங்குவார் என்கிற கவலை தாக்க, மெதுவாக தட்டி அறைக்குள் வைத்த எதையோ தேடும் பாவனையில் உள்ளே நுழைந்தார். பழைய கணக்குகள் வைத்திருக்கும் கார்டுபோடு அலமாரியை ஓசை படாமல் திறந்தார். குவாட்டர் பாட்டிலில் அரைவாசி மீதமிருந்த மானிட்டர் பிராந்தியை அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டார். தொண்டையிலிருந்து வயிறு வரை எரிந்தது. இரண்டு ரூபாய்க்கு வாங்கிய காராமணி பாக்கெட் ஓரம் கிழிந்து கிடந்தது. மீதமிருந்ததை எடுத்து வாயில்போட்டுக்கொண்டார். கரப்பு வாசம் அடித்தது. சட்டென்று அலமாரியை மூடிவிட்டு வெளியே வந்து நின்றார்.

“என்ன ராமு, லாக்கரை உடைக்காம வேற சாவி போட முடியாதா?”, என்று உரக்க கேட்டார்.

ராமு அசிரத்தையாக நிமிர்ந்து, பத்மநாபனை பார்த்து உதட்டை பிதுக்கி முடியாதென்று தலையசைத்தார். ”சரி..சரி சீக்கிரம் ஆவட்டும்”, என்றார் பத்மனாபன். எதற்கும் முயற்சி செய்து பார்ப்போமென்று, வெட்டிரும்பை கீழே வைத்து விட்டு, அவரிடமிருந்த சாவிகளை எடுத்து ராவ தொடங்கினார் ஆசாரி. ஏதேனும் ஒரு லாக்கரில் கொஞ்சம் நகைகள் மீதமிருந்தால் போதும்.  அதிர்ஷ்டமிருந்தால் வைரகற்கள் கூட இருக்கலாம். இப்படி நினைப்பது ஒன்றும் பகல் கனவு அல்ல என்று அவருக்கு தோன்றியது. நீல நிற சுருக்குபையில் அப்படி சில கற்களை சின்ன வயதில் அவர் பார்த்ததுண்டு. அப்படி மட்டும் ஏதேனும் கிடைத்துவிட்டால்,   அந்த சேகரின் முகத்தில் வாங்கிய பணத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, “ஆமாண்டா, யானை படுத்தாலும் குதிரை மட்டம்டா”  என்று சொல்லவேண்டுமென்று கருவிக்கொண்டார் பத்மநாபன். 

இரண்டாவது லாக்கர், நிறைய வேலை வைத்தது. விதவிதமான சாவிகளை ராவி உள்ளே வைத்து திறக்க முயன்று தோற்றிருந்த ராமு, எல்லாவற்றையும் கைவிட்டு வெட்டிரும்பை வைத்து ஓட்டையிட ஆரம்பித்தபோது மணி மூன்றாகியிருந்தது.  உதவிக்கு இரண்டு பேர் இருந்தால் போதுமென்று பத்மநாபன் சொன்னதால் பெருமாண்டியும், பங்க் இளைஞனும் மட்டும் வெளித்திண்ணையில் அமர்ந்திருந்தார்கள். பங்க் இளைஞன் சுவாரஸ்யம் இழந்திருந்தான்.  ராமு ஆசாரியின் சுத்தியல் சத்தமும், ரம்பத்தின் ஓசையும் அவனைப் பொறுமை இழக்கவைத்திருந்தன.  பத்மநாபன் மட்டும் ராமு ஆசாரியை உற்றுப்பார்த்தபடி பெஞ்சில் அமர்ந்திருந்தார்.  நான்கு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு ராமு ஆசாரி வெளியே வந்து பெருமாண்டியைக் கூப்பிட்டார். பத்மநாபனும் டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு லாக்கர் அருகே போய் நின்றார். மூவரும் சேர்ந்து கதவை வெளியே இழுத்து திறந்தார்கள். லாக்கர் காலியாகவே இருந்தது. பெருத்த ஏமாற்றத்துடன் டார்ச் லைட்டை உள்ளே அடித்து பார்த்தார் பத்மநாபன்.  கண்களை இடுக்கிக்கொண்டு உள்ளே பார்த்த ராமு ஆசாரி ”நடுத் தட்டுலே லைட்டை அடிங்க” என்றார்.

உற்றுப்பார்த்தபோது நடுத்தட்டின் வலது மூலையில் சுருக்குபை போல ஏதோ தெரிந்தது. சட்டென்று மகிழ்ச்சியும் பரவசமும் பொங்க கையை உள்ளே விட்டு அதை எடுத்தார். அகல் விளக்கேந்திய பெண் உருவம் பதித்த மரபாச்சி வெளியே வந்தது. கன்னங்கரேலென்ற வண்ணத்தில் முழுவதும் தூசி படிந்து அந்த மரப்பாச்சி இருந்தது. அதை என்ன செய்வது என்று தெரியாமல், பார்த்துக்கொண்டு இருந்தார் பத்மநாபன்.  “பொம்மய போய் பூட்டி வச்சிருக்காங்கே”  என்று சிரித்தான் பங்க் இளைஞன்.

பள்ளி இறுதி முடிந்ததும், உள்ளூரிலேயே வணிகவியல் பட்டபடிப்பில் சேர்ந்தாள் லலிதா. வார இறுதிகளில் மகா டியூசன் செண்டருக்குச் சென்றபோதுதான், மறுபடியும் சங்கரைப் பார்த்தாள். எந்தத் தயக்கமுமின்றி அவனாகவே வந்து உரிமையுடன் பேசியது பிடித்திருந்தது. அழகான ஸ்டெப் கட்டிங் சிகை அவனுக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது. எப்போதும் பூப்போட்ட சட்டையணிந்து அதைப் பெல் பாட்டம் பேண்டில் இன் செய்வான் சங்கர். லலிதாவுடன் பேச அவன் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டான். ஒவ்வொரு வாக்கியத்தையும் கண்களில் சிரிப்புடன் முடிப்பான். ஒவ்வொரு நாளும், இனிமையான விடியல் பொழுதில், பெரிய தடாகத்தில் சுற்றித்திரியும் இரு அன்னப்பறவைகளைக் கனவில் கண்டாள் லலிதா. அதிலொன்று உதட்டில் சிரிப்புடன் அவளைச் சுற்றிச்சுற்றி வந்தது. கண் விழித்துப் பார்த்த தருணத்தில் இதயம் முழுவதும் தேனில் ஊறியதுபோல் இனித்தது.

நான்கரை மணிக்கெல்லாம், அம்மா எழுந்து காபிபோடத்துவங்கிவிடுவாள். அய்யா எழுந்தவுடன் முகம்கழுவி உள்ளே வந்து அந்தக் காபியை வாங்கி குடிக்கும்போதுதான் இருவருக்குமிடையில் சம்பாஷனை நிகழும். லலிதா தூங்குவதுபோல் படுத்திருந்தபோதுதான் கானூர் சம்பந்தம் வந்திருப்பதை பற்றி அய்யா, அம்மாவிடம் சொன்னார். இருவரும் எப்படியும் அந்த சம்பந்தத்தை முடித்துவிடவேண்டுமென்று பேசிக்கொண்டிருந்தபோதுதான் முதன்முதலாக இந்த வீடு நிரந்தரமானதல்ல என்கிற உணர்வை அடைந்தாள் லலிதா.  திருமணத்துக்கு முதல்நாள் இரவு அரித்துவாரமங்களம் ஏ.கே பழனிவேலு மேளம் வாசித்தார். ஊரே திரண்டு நடந்த திருமணத்தில் மாப்பிள்ளை அழைப்புக்கு சாரட் வண்டி ஏற்பாடு செய்தார் அய்யா. மாப்பிள்ளை அழைப்பின்போதுதான், பத்மநாபனை முதல் முறையாகப் பார்த்தாள். அன்று முதல், வலப்பக்க அன்னப்பறவையின் மீது பத்மனாபனை தொடர்ந்து ஒட்டவைக்க முயன்று தோற்றுக்கொண்டேயிருந்தாள்.

மாமனார் இறந்தபின்புதான் கொஞ்சம் கொஞ்சமாக, பத்மநாபனைப் புரிந்துக்கொண்டாள் லலிதா. பத்மநாபன், பணம் சம்பாதிப்பதென்பது சொத்துக்களை விற்பதன் வழியாகவே என்று பழகியிருந்தார்.  அவசரத்திற்குப் பணம் வேண்டியபோதெல்லாம் துண்டு சீட்டு எழுதி கொடுத்து கணக்குபிள்ளையை அனுப்பினார். பிறகு பணம் கொடுத்திருக்கும் நபர்களிடமே, சொத்துக்களை ரிஜிஸ்தர் செய்துகொடுத்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக அனைத்துச் சொத்துக்களையும், நகைகளையும் விற்றுத் தீர்ந்து, இனி எதுவுமே மிச்சமில்லையென ஆனபோதுதான், லலிதாவிடம் அன்னப்பறவைகள் போட்ட தங்க சங்கிலியை அடகுவைக்க கேட்டார் பத்மநாபன். அன்றுதான் பந்தலூர் மாரியம்மன் முதன்முதலாக லலிதா மீது இறங்கியது.

”எந்த சங்கிலியைடா கேக்குற? அதுலே உள்ள அன்னம் யாருன்னு நெனைச்சே?” என்று லலிதா சத்தமிட்டபோது முதலில் குழம்பி போன பத்மநாபன், ஏதோ ஞாபகம் வந்தவர் போல் பூஜையறைக்கு ஓடி விபூதி கிண்ணத்தைக் கொண்டு வந்து லலிதாவிடம் நீட்டினார். உம்ம்ம்…மென்று உருமிக்கொண்டு, விபூதியை இருவிரலால் எடுத்து அவருடைய நெற்றியில் தடவினாள். தாடையில் கைகளையேந்தி பத்மநாபன் பவ்யமாக வாங்கிக்கொண்டார்.  சில நாட்கள் கழித்து, அன்னப்பறவை போட்ட தங்க சங்கிலி சட்டென்று ஒரு நாள் காணாமல் போனது. காணூர் பங்களா முழுவதும் கணவனும் மனைவியுமாகத் தேடியும் அது அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. தன்னிடம் கோபித்துக்கொண்டுதான் அன்னப்பறவைகள் பறந்துவிட்டது என்று அழுதாள் லலிதா. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று வருந்தினார் பத்மநாபன்.

”இதானே கடைசி லாக்கரு. இதையும்தான் தொறந்து பாத்துபுடலாம்” என்ற ராமு ஆசாரி, மூன்றாவது பெரிய லாக்கர் முன்பு அமர்ந்து வெட்டிரும்பை கூர் தீட்டினார்.

மூன்றாவது லாக்கரில் ராமு ஆசாரிக்கு பிடி கிடைத்திருந்தது. ஒவ்வொன்றும் தனது திறமைக்கு கொடுக்கப்பட்ட சவாலென்று அவர் கருத தொடங்கியிருந்தார். தேர்முட்டி அருகே இருந்த அவரது இரும்பு பட்டறையில் பம்பரத்துக்குப் பூண் போட வரும் சிறுவர்கள், விவசாயக் காலத்தில் வரும் மண்வெட்டி ஆர்டர் தவிர இப்போதெல்லாம் பெரிய வியாபாரம் எதுமில்லை.  வேப்பமர ஓரம் போய் பீடி குடித்தவர், வியர்வையும் பீடி நாற்றமுமாய் உள்ளே வந்தார். ஒன்றரை மணி நேரத்தில் நான்கு பக்க ரிவிட்டுகளை வைத்து முடித்து, கைப்பிடி அருகே சுத்தியல் கொண்டு தட்டிக்கொண்டிருந்தார். இதுதான் கடைசி லாக்கர் என்கிற எண்ணமே, பத்மநாபனுக்கு நடுக்கத்தை கொடுத்தது. ஒரு ஜோடி வளையல், ஒரே ஒரு சங்கிலி தாயே என்று அவரது வாய் முணுமுணுத்தது.  ராமு ஆசாரி, பெருமாண்டி பக்கம் திரும்பி, லாக்கரின் கைப்பிடியை இழுக்க சொல்லி  சைகை செய்தார்.

“லாக்கரை வுட்டு வெளிய போடா” என்று கத்தினாள் லலிதா. அவரையும் மீறி வெட்டிரும்பை தவற விட்டார் ராமு ஆசாரி. லோடுமேன் மூன்று பேரும் திகைத்துப்போய் நின்றனர். “லாக்கரைத் தொட்டா உன் குலையை அறுப்பேண்டா”, என்றாள் லலிதா. அவளது உருவத்திலிருந்தா அவ்வளவு கணீரென்று சத்தம் வந்தது என்று ராமு ஆசாரி திகைத்தார்.  பத்மநாபன் உள்ளே ஓடி விபூதியை தேடினார். கையில் விபூதி கிண்ணத்துடன் அருகே சென்று ”லலிதா”  என்று கையை நீட்டினார். ”சீ..போடா கொலமறுத்த பாவி” என்றாள் லலிதா. செய்வதறியாமல் நின்ற பத்மநாபன் சுதாரித்துக்கொண்டு வெளியே வந்து, ராமு ஆசாரியைக் கண்ணீர் ததும்பும் கண்களால் பார்த்து வெளியே செல்லும்படி செய்கை செய்தார். பங்க் வைத்த இளைஞன் திரும்ப திரும்ப பார்த்தபடி வெளியே போனான்.   

2 comments for “பெட்டகம்

  1. Logamadevi
    January 4, 2022 at 8:44 pm

    .வாழ்ந்து கெட்ட குடும்பத்தீன் வெகுநாட்களாக திறக்கப்படாத இரும்புப்பெட்டகங்கள் திறக்கப்படுகின்றன. லலிதாவின் மனப்பெட்டகமும் திறந்து கொள்கிறது.சிறப்பான கதையமைப்பு. பாத்திரங்களின் விவரிப்பு கதைக்கு கூடுதல் பலம்.ஆசாரி பீடி நாற்றத்துடன் பங்க் இளைஞன் குட்கா மெல்லுவது சங்கரின் ஹேர் கட்டிங் என்று கதாபாத்திரங்கள் கண்முன்னே உலவுகிறார்கள்.பொன் வைத்த இடத்தில் பூ வைத்தது சொல்லப்பட்டதும் லலிதா பழைய நினைவுகளில் மூழ்குவதை சொல்லியிருப்பதும், காணூர் பங்களாவில் மாமனாரை நினைவுபடுத்திக்கொள்வதும் கதையோட்டத்தில் வலுவான பிடிப்பை வாசகர்களுக்கு உண்டாக்குகிறது. அன்னப்பறவையில் மற்றொன்றாக யாரிருப்பார்களென்னும் புதிரை லலிதா நினைத்துக்கொள்வது அழகு.வாசகர்களை முடிவை யூகிக்கும்படி விட்டிருக்கிறார் செந்தில். மர்மமாக காணாமல் போனசங்கிலி , கடைசி லாக்கரை திறக்கையில் கத்தும் லலிதா என்று நல்லசுவாரஸ்யமான முடிவு. கடைசி வரியில் பங்க் இளைஞன் திரும்ப திரும்ப பார்த்தபடி போவது குறும்படம் பார்த்த உணர்வை அளித்தது.சிறப்பான கதை

  2. padmantamil
    June 14, 2024 at 12:12 am

    சிறுகதை எதிர்பாராத ஒரு திருப்பத்தில் முடிகிறது, அபாரமான கதை!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...