பறவையின் உமிழ்நீரில் நனைந்த பணம்

இயற்கை எழில் நிறைந்த மலேசியாவில் சூழலியல் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமானது. சூழலியல் சார்ந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல ஆய்வுகளின் தேடல்கள் அதனால் மனிதனுக்கான நன்மை, தீமைகள், அல்லது நாட்டின் பொருளாதரத்திற்கு அதன் பங்கு என்ற நிலையிலேயே இருக்கும். இயற்கைக்கும் அது சார்ந்த உயிரினங்களுக்கும் உண்டாகும் பாதிப்புகள் குறித்தும் அவற்றைக் கலைவதற்கான வழிகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்வது என்பது மிகவும் அரிது. மலேசியாவில் இயற்கை வழி உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் முதலிடம் வகிக்கும் செம்பனை எண்ணெய் உற்பத்தி, ரப்பர் தொழில் துறை சார்ந்து பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இது போலவே உலக அளவில் மலேசியா முக்கிய இடம் வகிக்கும் உண்ணக்கூடிய சுவிப்லெட்ஸ் பறவைக் கூடுகள் (Edible Swiftlet Birds Nest – EBN) உற்பத்தி துறையைப் பற்றி மிக குறைந்த அளவிலேயே ஆய்வுகள் நிகழ்த்தபட்டுள்ளன. 

சுவிப்லெட்ஸ் பறவைக்கூடு தயாரிக்கும் உலகின் முதல் ஐந்து நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும். உண்ணக்கூடிய பறவையின் கூடு உற்பத்தி தொழில்துறை கடந்த 500 ஆண்டுகளாக மலேசியாவில் நிகழ்ந்து வருவதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றனர். 16ஆம் நூற்றாண்டிலிருந்து மலாய் தீவுக்கூட்டத்திற்கும் (Malay Archipelagos) சீனாவிற்கும் இடையே இந்த வர்த்தகம் இடம்பெற்றுள்ளதையும் குறிப்பிடுகின்றனர். ஒரு பறவையின் கூட்டை உணவாக மாற்றுவதன் அடிப்படைச் சிக்கலை ஆராயும் முன், வர்த்தகமாக இத்துறை வளர்ந்து வந்த வரலாற்றை புரிந்துகொள்ளலாம்.

சுவிப்லெட்ஸ் (Swiftlets) பறவையினம்

ஏரோட்ரமஸ் (Aerodramus), ஹைட்ரோகஸ் (Hydrochous), ஸ்கவுடெடனபஸ் (Schoutedenapus), கொலோகாலியா (Collocalia) ஆகிய நான்கு பேரினப் பறவை கூட்டத்தையே சுவிப்லெட்ஸ் (Swiftlets) என்று குறிப்பிடுவர். இதில் கொலொகானி (Collocaliini tribe) என்ற பறவை, சுவிப்லெட்ஸ் (Swiftlets) பறவைக் கூட்டத்தில் உள்ள அபோடிடே (Apodidae) என்ற பறவை குடும்பத்தைச் சேர்ந்தது. சுவிப்லெட்ஸ் பறவை தமிழில் மழைக்குருவி என்று அழைக்கப்படுகின்றது. மலாய் மொழியில்; ‘Burung Walit’ என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த வகைப் பறவைக் கூட்டத்தில் சுமார் 30 விதமான இனங்கள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை தெற்கு ஆசியா, தென் பசிபிக் தீவுகள், வடகிழக்கு ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் அதிகமாக காணப்படுவதாகச் சொல்கின்றனர். அவை அனைத்தும் வெப்பமண்டல (tropical), துணை வெப்பமண்டல (subtropical) பகுதிகளில் உயிர்வாழ்கின்றன. இந்த வகைப் பறவைகளின் உடல் அமைப்பு சிறியதாகவே இருக்கும். வேகமாகப் பறக்க இலகுவாக பரந்த இடைவெளி கொண்டு குறுகிய இறக்கைகளும், பறக்கும்போது பூச்சிகளைப் பிடிப்பதற்கு இலகுவாக முறுக்குகளால் சூழப்பட்ட சிறிய அலகுடனும் இருக்கும்.

அபோடிடே (Apodidae) என்ற குடும்ப வகையைச் சேர்ந்த சுவிப்லெட்ஸ் (Swiftlets) உலகளவில் 24 இனங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் உண்ணக்கூடிய பறவைக் கூடுகளை உற்பத்தி செய்வது ஏரோட்ரமஸ் ஃபுசிபாகஸ் (Aerodramus fuciphagus), ஏ. மாக்சிமஸ் (A. maximus) ஆகிய வகையைச் சேர்ந்த பறவைகள் மட்டுமே. ஏரோட்ரமஸ் ஃபுசிபாகஸ் (Aerodramus fuciphagus) என்ற வகையைச் சேர்ந்த கூடு வெள்ளை நிறத்திலும், ஏ. மாக்சிமஸ் (A. maximus) வகையைச் சேர்ந்த பறவைக்கூடு கருப்பு நிறத்திலும் இருக்கும். இப்பறவைகளின் தனித்துவமான தன்மையாக கருதப்படுவது உமிழ்நீர் சுரப்பி (salivary gland) கொண்டு கூடு கட்டுவதும் எதிரொலி இடமாக்கம் (Echolocation) தன்மையோடு விளங்குவதும் ஆகும். எதிரொலி இடமாக்கம் (Echolocation) என்பது வௌவால்கள், டால்பின்கள் மற்றும் பிற உயிரினங்களும் பயன்படுத்தக்கூடிய ஒரு நுட்பம். மற்ற விலங்குகளால் பிரதிபலிக்கக்கூடிய எதிரொலிகளைக்கொண்டு அவைகளின் இருப்பிடத்தை தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமே எதிரொலி இடமாக்கம். இது மிருகங்கள் கடும் இருள் சூழ்ந்த பகுதிகளிலும் சுற்றி திரிய உதவுகின்றது. இதன்வழி, இப்பறவைகளால் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லவும், வேட்டையாடவும், நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காணவும், ஆபத்துகளைத் தவிர்க்கவும் முடிகின்றது. எதிரொலியைப் பயன்படுத்தி இருளில் செல்லக்கூடிய திறன் உள்ளதால் சுவிப்லெட்ஸ் (Swiftlets) இனப் பறவைகள் பொதுவாக இருண்ட குகைகளில் அல்லது குகை போன்ற சூழல்களில் தங்கள் கூடுகளைக் கட்டுகின்றன அல்லது தஞ்சம் செல்கின்றன எனலாம். இப்பறவைகள் கிளைக் கோபுரதம் (glycoproteins) உள்ளடக்கிய சிமென்ட் போன்ற தன்மையைக்கொண்ட தங்களின் உமிழ்நீர் சுரப்பிகளைக் கொண்டு தங்களுக்கான கூடுகளைக் கட்டிக்கொள்கின்றன.

இவ்வாறு உருவாக்கப்படும் கூடுகள் அதிக மதிப்பு உடையவைகளாக விளங்குவதற்கு காரணம் அவற்றில் உமிழ்நீர் சுரப்பிகளைத் தவிர புல், மண், மற்றும் பொதுவாக கூடு கட்டப் பறவைகள் பயன்படுத்தக்கூடிய மற்ற பொருள்கள் என வேறு எதுவும் இணைக்கப்படாமல் உருவாகுவதே ஆகும். சுவிப்லெட்ஸ் (Swiftlets) பறவைகளின் குணாதிசயங்களும் வாழ்க்கைச் சுழற்சியும் அவைகள் வாழ்வும் வாழ்விடங்களின் தன்மைக்கு ஏற்றவாறு மாறும் என்கின்றனர். தற்காலத்தில் இது தொடர்பாக பல ஆய்வாலர்கள் வெகுவாக ஆய்வுகள் நிகழ்த்தி வருகின்றனர். சுவிப்லெட்ஸ் (Swiftlets) பறவைகள் ஒரு வயது பூர்த்தி ஆகிய பின் இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன என்று குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், இனப்பெருக்கம் நிகழும் காலங்கள், அல்லது இனப்பெருக்கத்தின்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளான கூடு கட்டுதல், முட்டையிடுதல், முட்டையை அடைகாத்தல் போன்றவை வெவ்வேறு பறவை இனங்கள் மற்றும் புவியியல் பகுதிகளுக்கு தகுந்தவாறு வேறுபடுகின்றன. காலநிலைகளின் விளைவால் இயற்கையில் ஏற்படும் மாற்றங்களான மழையின் அளவு, காற்றின் ஈரப்பதம், உணவுகளின் பற்றாக்குறை ஆகியவை இதுபோன்ற மாறுபாடுகள் ஏற்பட காரணமாகக் இருக்கக்கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பொதுவாக, சுவிப்லெட்ஸ் (Swiftlets) பறவை இனத்தின் இனப்பெருக்கச் சுழற்சி முழுமைப் பெற தோராயமாக 92-120 நாட்கள் ஆகும். சுவிப்லெட்ஸ் (Swiftlets) பறவைகள் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யக்கூடிய பறவைகளாக இருந்தாலும் பெரும்பாலும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை உள்ள காலப்பகுதிகளிலே அதிகமான இனப்பெருக்கங்கள் நடைபெறுகின்றன. இனபெருக்கம் நிகழும் காலத்தில் சுவிப்லெட்ஸ் (Swiftlets) பறவைகள் ஒரு கூட்டைக் கட்டி முடிக்க ஏறத்தாழ 30-45 நாட்களும், இனப்பெருக்கம் நடைபெறாத காலத்தில் தோராயமாக 60-80 நாட்களும் ஆகும்.

கூடு கட்டுவதற்கு உகந்த இடத்தை தேர்ந்தெடுப்பதில் பறவைகளுக்கிடையில் மோதல்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக குகைச் சுவரின் வெவ்வேறு பகுதிகளைக் கண்டறிந்து அவை கூடுகளைக் கட்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பகுதிகளையும் சாதாரணமாக முடிவு செய்யாமல் தங்களுடைய தனித்துவமான குணாதிசயங்களை கொண்டு தேர்ந்தெடுக்கும் என்றும் ஆய்வின் வழி கண்டறியப்பட்டுள்ளது. சுவிப்லெட்ஸ் (Swiftlets) பறவைகள் கூடு கட்டுவதற்கு ஏற்ற வெப்பநிலையாக கருதுவது 26°C முதல் 35°C வரை ஆகும். அதிக வெப்பநிலை முட்டைகளை சேதம் அடையச் செய்யும், அதே வேளையில் குறைந்த வெப்பநிலை இறகு இல்லாத இளம் சுவிப்லெட்ஸ் (Swiftlets) பறவைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். 80% முதல் 90% விழுக்காடு வரை ஈரப்பதம் சூழ்ந்திருக்கும் சுற்றுச்சூழலே இப்பறவைகள் கூடு கட்டுவதற்கு தகுந்த இடமாகக் கருதப்படுகிறது. இதற்கு அதிகமாக ஈரப்பதம் இருந்தால் குகையின் சுவர்ப் பகுதியில் பூஞ்சை ஏற்பட்டு பறவைகள் கூடு கட்டுவதில் சிக்கல் ஏற்படுத்தும். அதேவேளை ஈரப்பதம் குறைவாக இருப்பின் கூடுகள் சுவரின் மேற்பரப்பில் ஒட்டாமல், விரிசல் ஏற்பட்டு தரையில் விழக்கூடும்.

கூட்டின் சுவையும் மருத்துவ குணமும்

சுவிப்லெட்ஸ் பறவைகளின் உண்ணக்கூடிய கூட்டின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் அதனுடைய சுவை. இதுவரை எந்த உணவும் கொண்டிராத ஓர் அரிதான சுவையைக்கொண்டிருக்கும் எனச் சொல்லப்படுகிறது. சுவிப்லெட்ஸ் பறவைகளால் கட்டப்படும் கூடு இரண்டு முட்டைகளை தாங்கக்கூடிய அளவு 6cm நீளம் 1.5cm ஆழம் கொண்டிருக்கும். ஒவ்வொரு சுவிப்லெட்ஸ் ஜோடி பறவைகளும் கூடு கட்டுவதற்கு சுமார் 10 கிராம் உமிழ்நீரைப் பயன்படுத்தும். இப்பறவைகள் கூடு கட்டும் செயலில் ஈடுபடும்போது சுயமாக அவற்றின் உமிழ்நீர் சுரப்பிகள் விரிவடைகின்றன. சூரிய ஒளியில் வெளிப்படும்போது வெள்ளை நிறக் கூடுகள் தங்க நிறத்தைப் பெறும் என்கின்றனர். இதனால் இவ்வகை சுவிப்லெட்ஸ் கூடுகளை ‘white gold’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த ‘white gold’ கூட்டின் மதிப்பு ஒரு கிலோ 4000 டாலர் வரை ஆகும்.

இந்த பறவைக்கூடு நுகர்வு நோய், காசநோய், இருமல், ஆஸ்துமா, இரைப்பை தொல்லைகள், மூச்சுக்குழாய் வியாதிகள் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது. மேலும், பறவைக்கூடுகள் இளமையை புத்துயிர் பெற்று மீட்டெடுக்கவும், சருமத்தை பளபளப்பாகவும் மாற்றும் திறன் கொண்டது. மனித குலத்தால் பயன்படுத்தப்படும் விலங்குகளிடம் இருந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் உலகளவில் மிக மத்திப்புமிக்கவையாக திகழ்வது உண்ணக்கூடிய பறவைக் கூடுகளே ஆகும்.

செயற்கை வாழ்விடங்கள்

சுவிப்லெட்ஸ் (Swiftlets) பறவைகளின் உண்ணக்கூடிய கூடுகளின் தேவை உலகளவில் அதிகரித்ததன் விளைவாக அதை விவசாய முறைப்படி உற்பத்தி செய்து விநியோகிக்க மனிதன் சுவிப்லெட்ஸ் பறவைகள் வாழக்கூடிய இயற்கையான சுற்றுச்சூழல் ஒத்த அப்பறவைகள் கூடு கட்டுவதற்கு செயற்கை வாழ்விடங்களை உருவாக்கியுள்ளனர். இந்தச் செயற்கைக் குகை வீடுகள் குகை போன்ற சூழலையும் அம்சங்களையும் கொண்டு சுவிப்லெட்ஸ் பறவைகளைக் கூடு கட்ட ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். இச்செயற்கைக் குகை வீட்டிற்குள் ஒளியின் தீவிரம், வெப்பநிலை, காற்றின் வேகம், ஈரப்பதம் ஆகிய முக்கிய கூறுகள் பறவைகள் வந்து கூடு கட்ட உகந்த தேவையான அளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். நேரடியாக வரும் சூரிய ஒளியைத் தவிர்ப்பதற்காகவும், கட்டமைப்பின் ஒளி தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்தச் செயற்கைக் குகை வீட்டின் பிரதான நுழைவுத் துளை கட்டமைப்பின் மேற்பகுதிக்கு அருகில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த கட்டிடம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காற்றோட்டத் துளைகளைக் (ventilation holes) கொண்ட ஒரு மூடிய கட்டமைப்பாகக் கட்டப்படும். கட்டிடத்தின் உள்ளே ஈரப்பதம் மற்றும் காற்றின் வெப்பநிலையை குறைக்க காற்று இயக்கம் காற்றாவியை (evaporation) ஏற்படுத்தும். வெப்பநிலை காற்றின் காற்றோட்டத்தால் (air ventilation) கட்டுப்படுத்தப்பட்டு அதே நேரத்தில் ஈரப்பதம் (humidity) நிறுவப்பட்ட ஈரப்பதமூட்டிகள் (installed humidifiers) மற்றும் கட்டமைப்பிற்குள் வழங்கப்பட்டிருக்கும் நீர் விநியோகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும், பறவைகளைச் செயற்கை குகைகளுக்கு வரவழைக்க அவனுடையக் கவனத்தை ஈர்க்க ஒலி ஒரு முக்கிய பங்காக அமைகின்றது. சுவிப்லெட்ஸ் (Swiftlets) பறவைகளின் அதீத தன்மையாகக் கருதப்படுவது ஒலி செலுத்துவழி, வீச்சளவு (sonar system – sound navigation and ranging) போன்ற அமைப்பைப் பயன்படுத்துவதே ஆகும். ஒலி செலுத்துவழி, வீச்சளவு (sonar system – sound navigation and ranging) என்பது நீரில் மூழ்கிய பொருள்களை ஒலி அலைகள் கொண்டு அறியும் முறை. சுவிப்லெட்ஸ் பறவைகள் எழுப்பும் ஒலி மற்றப் பறவைகளால் ஈர்க்கப்பட்டு அவ்விடத்திற்கு வந்தடைவதாக ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் வழி இப்பறவைகள் ஆழமான ஒலியின் உணர்திறன் கொண்டவை என்று புரிந்துகொள்ளலாம். முந்தைய ஆய்வுகளில் சுவிப்லெட்ஸ் பறவைகளின் அதிர்வெண் ஏற்புத் தன்மை 1-இல் இருந்து 16 kHz வரை எனக் கணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 2-இல் இருந்து 5 kHz வரை உள்ள நிலையில் பறவைகளின் ஆற்றல் திறன் அதீதமாக இருக்கும் என்கின்றனர். 1990ஆம் ஆண்டில், ஒலிகளைப் பதிவுசெய்து சுவிப்லெட்ஸ் பறவைகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தரமான ஒலிப்பதிவு கிடைக்காததால் பறவைகளை ஈர்ப்பது சாத்தியமாகவில்லை.

தற்காலத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உண்மையான சுவிப்லெட்ஸ் பறவைகளின் ஒலியை ஒத்த தரமான, தெளிவான, மிகத் துல்லியமான ஒலிப்பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஒலிப்பதிவைப் பயன்படுத்தி செயற்கைக் குகை வளாகங்களுக்கு அதிகமான பறவைகள் ஈர்க்கப்பட்டு அங்கு கூடுகளைக் கட்டுகின்றனர். மேலும், இன்னும் அதிகமான பறவைகளை ஈர்க்க ஒலி மட்டுமின்றி நறுமணம், ஒளி, வெப்பநிலை, ஈரப்பதம் ஆகிய மற்ற விடயங்களும் செயற்கை முறையில் அங்கு உருவாக்கப்பட்டுள்ளன.

மலேசியாவில் சபா, சரவாக் மாநிலத்தில் இருக்கும் சுண்ணாம்புக் குகைகளில் அதிகமான சுவிப்லெட்ஸ் (Swiftlets) பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன. அது மட்டும் இல்லாமல், அங்கு செயற்கைக் குகை வீடுகளும் அதிகமாகக் கட்டமைக்கப்பட்டு உண்ணக்கூடிய பறவைக் கூடுகளை உற்பத்தி செய்து வருகின்றனர். மலேசியாவின் இயற்கை மாற்றங்கள், செயல்பாடுகளைப் பொருத்து சுவிப்லெட்ஸ் பறவைகள் பெரும்பாலும் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலப்பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் என்று குறிப்பிடுகின்றனர். இது பறவைகளுக்கான பூச்சி தீவனம் அதிக அளவில் கிடைக்கும் காலத்தோடு தொடர்புடையது. இதைத் தவிர மற்ற பருவ காலங்களில் அதிக மழை அல்லது வெப்பம் காரணமாகக்கூட பறவைகள் வெளியில் சுற்றித் திரியும் நேரம் குறைவதோடு ஆரோக்கியமான கூடு உருவாக்குவதிலும் சிக்கல் ஏற்படும்.

தீபகற்ப மலேசியாவுடன் ஒப்பிடும்போது போர்னியோ (சபா, சரவாக்) பொதுவாக அதிக மழை பொழியக்கூடிய பகுதியாக இருக்கின்றது. மேலும், இயற்கையான குகையில் இருந்து வரும் சுவிப்லெட்ஸ் பறவைகளுக்கு நீண்ட மழைக்காலம் இருப்பதால் செயற்கைக் குகை வீடுகளில் உருவாகும் சுவிப்லெட்ஸ் பறவைகளுக்குக்கு இருக்கும் உணவுப் பற்றக்குறை சிக்கலையும் இவைகள் எதிர்கொள்வதில்லை. இதனால், இயற்கையான சூழ்நிலையில் உருவாகும் சுவிப்லெட்ஸ் பறவைகளுக்கும் செயற்கைக் குகை வீடுகளில் உருவாகும் சுவிப்லெட்ஸ் பறவைகளுக்கும் உருவ மாறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பறவையின் கூடும் பணப்புழக்கமும்

சுவிப்லெட்ஸ் பறவையின் உண்ணக்கூடிய கூடு உற்பத்தி (Swiftlet bird’s nest farming) மலேசியாவில் மிக முக்கியமான இலாபகரமான ஒரு தொழில் துறையாகக் கருதப்படுகின்றது. பாரம்பரியமாக, போர்னியோ தீவில் உள்ள சுண்ணாம்புக் குகைகளான சரவாகில் உள்ள நியா குகை, சபாவில் உள்ள மாண்டாய், குவாமாண்டோங் குகை ஆகிய குகைகளில் இருந்து கூடுகள் சேகரிக்கப்படுகின்றன. ஆரம்பகாலகட்டதில் பேரரசர்களுக்கு மட்டும் பிரத்தியமாக விநியோகித்து வந்த பறவைக் கூடுகள் தேவை நாளடைவில் ஆசிய நாடுகளில் வளர்ந்து வரும் பணக்காரர்கள் மத்தியிலும் அதிகரித்ததன் விளைவாக பறவைகளின் உண்ணக்கூடிய கூடுகள் உலகச் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்தது. “Caviar of the East” என்று அறியப்படும் பதனிடப்படாத அல்லது பதப்படுத்தப்படாத பறவையின் கூடு RM2,000 முதல் RM6,000 / kg வரை மதிப்பிடப்படுகிறது. அதுபோல், சுத்தம் செய்யப்பட்ட கூடு RM8,000 முதல் RM20,000 / kg வரை விற்கப்படுகிறது. மலேசியப் பொருளாதரத்திற்கு இந்த பறவைக் கூடு உற்பத்தி (Edible Bird Nest – EBN) உலக சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்தது, விவசாயம் மற்றும் வேளாண் தொழில் சார்ந்த அமைச்சகத்தின் (Ministry of Agriculture and Agro-Based Industry) கவனத்தை ஈர்த்தது. அதன் பின், விவசாயம் மற்றும் வேளாண் தொழில் சார்ந்த அமைச்சகம் (Ministry of Agriculture and Agro-Based Industry) வெளியிட்ட அறிக்கையில் உண்ணக்கூடிய பறவைக் கூடுகளின் ஏற்றுமதி மதிப்பு 2018ஆம் ஆண்டில் RM1.3 பில்லியன் மற்றும் 2019ஆம் ஆண்டில் RM 1.1 பில்லியன் எனவும் மதிப்பிடப்பட்டது. மேலும் இது 2020ஆம் ஆண்டில் RM1.5 பில்லியனாக அதிகரிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இன்றுவரை, சீனா, ஹாங்காங், தைவான், லாவோஸ், கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மலேசியா உண்ணக்கூடிய பறவைக் கூடுகளை (EBN) ஏற்றுமதி செய்து வருகிறது. பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

மலேசியாவின் வேகமாக வளர்ந்து வரும் உண்ணக்கூடிய பறவைக் கூடுகள் (EBN) உற்பத்தித் தொழில் துறை அதிக ஈர்ப்பும் கவனமும் செலுத்துவது தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மட்டுமே காணப்படும் ஏரோட்ராமஸ் புசிபாகஸ் (Aerodramus fuciphagus) பறவை இனத்தின் மேல் தான். 2020க்குள் மலேசியாவில் சுவிப்லெட்ஸ் (Swiftlets) பறவைகளின் வளாகங்கள் 63,000 எண்ணிக்கையை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கபட்டிருந்தது. அதன் வழி RM3.5 பில்லியன் மதிப்புடைய 870 மெட்ரிக் டன் பறவைக் கூடுகளை உற்பத்தி செய்ய முடியும் என்றும் கணித்திருந்தனர்.

பறவைக்கூடு உற்பத்தி துறை அதிக திறன் கொண்ட தொழிலாக மாறி வந்த காலக்கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட சபா மாநிலத்தின் பொருளாதர உருமாற்றுத் திட்டத்தில் (Economic Transformation Programme (ETP)) உண்ணகூடிய பறவைகள் கூடு (Edible Bird Nest (EBN)) தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. நீண்ட காலம் பாரம்பரிய முறைப்படி குவா குவமண்டோங் (Gua Guomantong), குவா மடாய் (Gua Madai) உள்ளிட்ட குகைகளிலிருந்து உயர்தர பறவைக் கூடுகளை உற்பத்தி செய்வதாக குறிப்பிடுகின்றனர். ஆண்டுதோறும் சபா மாநிலத்தில் இருந்து ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பறவைக் கூடுகளின் மதிப்பு சுமார் RM13 மில்லியனிலிருந்து RM17 மில்லியன் என்று கணக்கிடப்படுகிறது. பின், இயற்கையான முறையில் குகைகளில் இருந்து மட்டும் பறவைக்கூடுகளைத் தருவிக்காமல், செயற்கை முறையிலும் உற்பத்தி செய்யும் வழக்கம் சபா மாநிலத்தில் உருவாகிற்று. சபா வனவிலங்கு துறையில் கூற்றுப்படி, 2009ஆம் ஆண்டில், சபா மாநிலத்தில் மட்டும் 500 செயற்கைக் குகை வளாகங்கள் இருந்துள்ளன.

செயற்கைக் குகை வீடுகள்

செயற்கைக் குகை வீடுகளில் மிக அவசியமாகவும் அடிப்படையாகவும் இருக்கவேண்டிய உபகரணங்கள் ஒலி பெருக்கி பொருத்திய ஒலி அமைப்பும் ஈரப்பதமூட்டியும் ஆகும். முக்கியமான மூன்று வகை ஈரப்பதமூட்டிகள் நீர், ஈரப்பதமூட்டி இயந்திரம், குழாய் தெளிப்பான் (tube sprayer) ஆகியவை செயற்கைக் குகை வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த காலங்களில் செயற்கைக் குகை வீடுகளை ஈரப்பதம் ஆக்குவதற்காக அதற்குள் ஆழமற்ற குளங்களைக் கட்டி தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த வழக்கம் நீண்ட நாள் நடைமுறையில் இல்லாமல் கைவிடப்பட்டது. காரணம், உள்ளே குளங்கள் இருப்பதால் கொசுக்கள் அதிகரிக்க தொடங்கியது. மேலும், பறக்க கற்றுக்கொண்டிருக்கும் இளம் குஞ்சுகள் தண்ணீரில் விழுந்தால் மூழ்கும் அபாயம் இருப்பதாலும் இந்தப் பழக்கம் நிறுத்தப்பட்டது.

செயற்கைக் குகை வீடுகளில் இரண்டு வகையான செயற்கை ஒலிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று வெளிப்புற ஒலி (external sound). இது வெளியில் இருந்து பறவைகளை ஈர்த்து உள்ளே நுழைய வழி செய்கின்றது. மற்றொன்று உட்புற ஒலி (internal sound). பறவைகள் இருட்டில் சிக்கல் இல்லாமல் பறக்கவும் கூடுகளைக் கட்டவும் உதவுகின்றது. வெளிப்புற ஒலிக்கு ஒன்றில் இருந்து இரண்டு வரையிலான ஒலி பெருக்கிகள் பறவைகளை உள் ஈர்ப்பதற்கு அங்கு அமர்த்தப்படுகிறது. அதுபோல் உட்புற ஒலிக்காக (internal sound) பறவைகள் கூடு கட்டும் பலகைகளின் நடுவிலும் மூலைகளிலும் உயர் அலைவெண் ஒலி பெருக்கிகள் (tweeter speakers) பொருத்தப்படுகின்றன. 20 அடி முதல் 70 அடி வரை உள்ள பரப்பளவின் ஒவ்வொரு மட்டத்திலும் குறைந்தது 40 ஒலி பெருக்கிகளாவது தேவைப்படும் எனச் சொல்லப்படுகிறது.

ஒலி பெருக்கிகள், ஈரப்பதமூட்டிகளில் தொடர்முறை (analog) அல்லது இலக்கமுறை மின்குதைகுழி கடிகை (digital socket timer) ஆகியவை எப்பொழுதும் இணைக்கப்பட்டிருக்கும். ஒலி பெருக்கிகள், காலை 6:00 மணி முதல் காலை 10:00 மணி வரை, பின்னர், மாலை 4:00 மணி முதல் 8.00 மணி வரை தான் செயல்பட வேண்டும் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஈரப்பதமூட்டி இயந்திரங்கள் நெடுநேரம் இயங்குவது அதன் ஆயுட்காலத்தைக் குறைக்கும் என்பதாலும், நீண்ட நேரம் அச்சுற்றுசூழல் ஈரப்பதமாக இருந்தால் கூடுகளில் பூஞ்சை வளரக்கூடும் என்பதாலும் இந்த இடைவேளை எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மேலும், பறவைகளை ஈர்க்க அங்கு வாசனைத் திரவியங்களும் தெளிக்கப்படுகின்றது. அந்தத் திரவியங்கள் பறவைகளை அங்கு வந்து கூடுகளைக் கட்ட ஈர்க்கிறது என்று சொல்லப்படுகின்றது. மேலும், பழமரங்களை நடுதல், அந்த செயற்கைக் குகை வீட்டை சுற்றிப் பழங்களை வைத்தல், பூச்சி வளர்ப்பு, மீன் குளங்கள் கட்டுவது, எண்ணெய் எடுக்கப்பட்ட செம்பனைக் கொத்துகளைச் சுற்றி வைத்தல் என பல விடயங்களை மேற்கொள்வதாக ஒரு கள ஆய்வின் வழி தெரியவருகிறது. பறவைகளை ஈர்த்து கூடுகட்ட வைப்பது மட்டுமின்றி அவ்விடத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்வது முக்கியமாகத் திகழ்கின்றது. அவ்விடத்தில் கொள்ளைச் சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும் சுவிப்லெட்ஸ் பறவைகளையும் அதன் இளம் குஞ்சுகளையும் இரைபிடித்துண்ணிகளிடமிருந்து தற்காக்கவும் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, சுவிப்லெட்ஸ் பறவைகளின் செயற்கைக் குகை வீட்டினுள் ஓர் ஆந்தை நுழைந்துவிட்டால் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு மூடப்பட்டு அதனை முழுவதுமாக சுத்தம் செய்த பின்னே மறுதொடக்கம் செய்ய இயலும் என்கின்றனர். சில சந்தர்ப்பங்களில், இதுபோன்று ஆந்தைகளின் தாக்குதல்கள் நிகழ்ந்த செயற்கைக் குகை வீடுகளை நிரந்தரமாக மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

கூடுகளுக்குத் தடை

உண்ணக்கூடிய பறவைக் கூடுகளில் 70% விழுக்காடு புரதச்சத்துகள் உள்ளன. இதுவே அவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான, சுவையான உணவாகக் கருதப்படுகிறது. ஆனால், 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம், உண்ணக்கூடிய பறவைக் கூடுகளில் அதிகமான நைத்திரைற்று (Nitrite) இருப்பதை கண்டறிந்த சீனா, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுவிப்லெட்ஸ் பறவைக்கூடுகளுக்குத் தடைவிதித்தது. அதனைத் தொடர்ந்து அண்மைய ஆண்டுகளில் மலேசியாவில் இருந்து தருவிக்கப்படும் உண்ணக்கூடிய பறவைக்கூடுகளின் தரம், ஆரோக்கியம், பாதுகாப்பு தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. அதிகமான நைத்திரைற்று (Nitrite), கலப்படம், அதிகமான உலோகத்தின் இருப்பு, நோயியல் நுண்ணுயிரிகள் (pathological microorganism), பூஞ்சை தொற்று (fungal infection) ஆகியவை கூடுகளில் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்கள். இதனால், கூடுகளின் ஆரோக்கியமான தன்மை குறைந்து அதனை உண்பவர்களுக்கு நோய்கள் வரக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதற்கு மலேசிய உண்ணக்கூடிய பறவைகள் கூடு தொழில் நிறுவனம் (EBN) சில காரணங்களை முன்வைத்தனர். அதில் ஒன்று கடந்த சில ஆண்டுகளாக மலேசியா காற்று மாசுபாட்டால் பதிக்கப்பட்டு வந்ததைச் சுட்டிக்காட்டினர். அது ஒருபுறம் இருக்க, சில உற்பத்தி நிறுவனங்கள் உண்ணக்கூடிய பறவைக் கூடுகளை வெளியில் குறைந்த விலைக்கு விற்று இலாபம் பார்க்க எண்ணி சில கலப்படங்களைச் செய்திருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதுபோன்ற பிரச்சனைகளைக் களைய மலேசிய அரசாங்கம் உண்ணக்கூடிய பறவைகள் உற்பத்தி தொழில்துறைக்கு புதிய சட்டதிட்டங்களை விதித்தது. இந்தப் புதிய நெறிமுறை வழி உற்பத்தி செய்யப்படும் பறவைக் கூடுகள் முறையாக வகுக்கப்பட்டிருக்கும் தகுதிகளையும், கூறுகளையும் எட்டியுள்ளதா என்பது உறுதி செய்துகொள்ளப்படுகிறது. மேலும், பறவைக் கூடுகளை ஏற்றுமதி செய்வதற்கு முன் சுகாதார அமைச்சு, கால்நடை சேவகத் துறையின் சான்றிதழ்கள் சமர்பிக்கப்பட வேண்டும். இச்சான்றிதழ் முக்கியமானதாக திகழ்வதற்கு காரணம், இது பறவைக் கூடுகளின் தோற்றத்தை வானொலி அதிர்வெண் (radio frequency) மூலம் கண்டறிந்து, இது போலியில்லாத உண்ணக்கூடிய பறவைக் கூடு மற்றும் உட்கொள்வதற்குப் பாதுகாப்பானது என்பதை உறுதிசெய்ய உதவுகிறது. மலேசியாவில் சுமார் 50,000 பறவைக் கூடு வர்த்தகர்கள் உள்ளனர், ஆனால் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 2,000 பேர் மட்டுமே பதிவு செய்ய அமைச்சகம் அனுமதி வழங்கியது.

மேலும், உரிமம் பெற்ற பறவைக் கூடு வர்த்தகர்கள் ஓர் ஆண்டில் இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று கூடுகளை மட்டும் சேகரிக்க மலேசிய அரசாங்கம் அனுமதிக்கின்றது. பறவைகள் முதல் முறை கட்டும் கூடு கட்டி முடிக்கப்பட்டவுடன் அதை எடுத்து அவை அடுத்த கூடு கட்டுவதற்கு வழிவிட வேண்டும். பின், இரண்டாவதாக கட்டப்படும் கூட்டை அறுவடை செய்வதற்கு முன் சுமார் 120 நாட்கள் முட்டைகளை அடைக்காத்து இளம் குஞ்சுகளுக்கு இறக்கைகள் வளர்ந்து பறக்க முயற்சிப்பதைக் கண்காணித்து வரவேண்டும். இதனால், சுவிப்லெட்ஸ் பறவை இனத்தின் தொகை குறைந்து கொண்டு வருவதை கட்டுப்படுத்தலாம் என்று எண்ணினர். இருப்பினும், அரசாங்கத்திற்கு சட்டவிரோதமாகத் இத்தொழிலைச் செய்து வரும் வர்த்தகர்கள் இதுபோன்ற நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்று ஆய்வுகள் வழி தெரியவருகின்றது.

இதுவரை உண்ணக்கூடிய பறவைக்கூடுகள் சார்ந்து நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள், இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துகள் அதிகமாக பொருளாதார ஏற்றதாழ்வு, கூடுகளின் தரம், இதனால் மனிதர்களுக்கான பாதிப்புகள் என்பதைத் தொட்டே பேசுகின்றன. சில ஆய்வுகளில் மட்டுமே சுவிப்லெட்ஸ் பறவை இனத்தின் எண்ணிக்கை குறைவதைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். அதிகமான இலாபம் கிடைக்ககூடிய தொழில் என்பதால் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்று முற்படும்போது அச்செயல் அந்த குறிப்பிட்ட இனப் பறவைகளை உடல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் பலவாறாகப் பாதிக்கின்றது என்பதை யாரும் ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

கடந்த 2012ஆம் ஆண்டு சுவிப்லெட்ஸ் (Swiftlets) பறவைளின் ஒலி தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்ட கார்த்திக் என்பவரை இதுகுறித்த மேற்கொண்ட விபரங்களுக்கு அணுகியபோது மேலும் அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. இந்த உண்ணக்கூடிய பறவைக்கூடு தொழில்துறையினால் அந்தப் பறவைகள் சந்திக்கும் சவால்கள் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். உலகில் உண்ணக்கூடிய பறவைக் கூடுகளை உற்பத்தி செய்யும் முக்கிய இடங்களில் இரண்டாவது நிலையில் இருக்கும் சரவாக், மிரியில் அமைந்திருக்கும் நியா குகையில் அவர்தம் ஆய்வினை மேற்கொண்டார்.

அவர் கூறுகையில், சுவிப்லெட்ஸ் பறவையின் இயற்கைத்தன்மையானது காலையில் குகையில் இருந்து வெளியில் வந்து எங்கும் நிற்காமலும் இளைப்பாறாமலும் பறந்து கொண்டு இருக்கும். பறந்தபடியே தனக்கான உணவையும் நீரையும் எடுத்துக்கொள்ளும். ஒலியின் ஈர்ப்பினாலே அவை தங்களுடைய வாழ்விடங்களையும் தன் சக பறவைகளையும் கண்டறிகின்றன என்பதால் அவைகள் பறந்துகொண்டிருக்கும்போது செயற்கைக் குகை வீடுகளில் இருந்து வரும் ஒலி கேட்டு அங்குதான் தங்களுடைய கூடுகள் உள்ளன என்று ஏமாந்து அதனுள் செல்கின்றன என்றார். உண்மையில் அப்பறவைகள் ஏமாற்றப்பட்டு பொறியில் மாட்டிக்கொள்வதைப் போல் அந்த செயற்கைக் குகை வீட்டினுள் மாட்டிக்கொள்கின்றன. அந்த ஒலிகள் உற்பத்தியாளர்களுக்கு விற்கப்படுகின்றனவாம். அந்த ஒலியை விற்கின்றவர்கள் அது பொருத்த வேண்டிய இடத்திற்கு நேரடியாகச் சென்று எந்த வகை ஒலிக்கு பறவைகள் ஈர்க்கப்படுகின்றன என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற ஒலி அங்கு பொருத்தப்படுகின்றன. பெரும்பாலும் இந்தோனேசியாவில் இருந்து கிடைக்கப்பெற்ற ஒலியையே அதிகமாக பல செயற்கைக் குகை வீடுகளில் பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகின்றது.

உண்மையான குகை போலவே காட்சியளிக்கும் அவ்விடத்தில் சுவிப்லெட்ஸ் உடனே கூடு கட்ட ஆரம்பித்துவிடும். அது அதனுடைய கூட்டினுள் வந்து அடங்க வேண்டும் என்பதற்காக விரைவாகக் கூடு கட்டும். அப்பறவைகளினால் அதனுடைய கூட்டைத் தவிர வேறு எந்தக் கூட்டிலும் வாழ முடியாது. ஒருமுறை கூடு கட்டி முடித்த பின் அவை வெளியில் செல்லும் வரை காத்திருந்து சென்றபின் அந்தக் கூடுகளை அறுவடை செய்கின்றனர். வெளியில் சென்ற பறவைகள் தங்களுடைய கூடு இருக்கும் இடத்தைத் தேடி வந்து பார்க்கும்போது அங்கு கூடு இருக்காது. அந்தத் தருணத்தில் அவைகளுக்கு உடனடியாக அடங்குவதற்கு கூடு வேண்டும் என்ற பட்சத்தில் மறுபடியும் அப்பறவைகள் கூடு கட்டத் தொடங்கும்.

சுவிப்லெட்ஸ் பறவையின் இத்தன்மையைத்தான் மனிதர்கள் தமக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டு அப்பறவைகளை கூடு உற்பத்தி செய்யும் எயந்திரமாக பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஒருவேளை அப்பறவைகளால் அன்று இரவுக்குள் கூடு கட்டி முடிக்க முடியாமல் போனால் தங்குவதற்கு கூடு இல்லாமல் அவை இறந்து போகுமாம். இது எதையும் உணராத அப்பறவைகள் அந்த ஒலியைக் கேட்டு திரும்பவும் அதுதான் தங்களுக்கான வாழ்விடம் என்றெண்ணி அங்கு சென்று மீண்டும் மீண்டும் கூடு கட்டிக்கொண்டிருக்கும் அதனை மனிதர்கள் அறுவடை செய்து கொண்டிருப்பார்கள்.

பறவை எனும் உயிர்

உலகச் சந்தையில் பறவைக்கூட்டின் தேவை அதிகரித்ததன் விளைவே இந்நிலை. ஒரு சாதாரண பறவையின் இயல்பான வாழ்க்கைக்கும் இயற்கைக்கும் முற்றிலும் எதிரானதாக இது இருக்கின்றது.

மனிதனின் தேவைக்காக ஓர் உயிரினத்திற்கு இயற்கையாக நிகழ வேண்டிய அனைத்தும் பறிக்கப்பட்டு செயற்கை மயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பறவையும் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்து, முட்டைகளை அடைகாத்து தன் இளம் குஞ்சுகளை நல்ல முறையில் பராமரித்துப்பதற்கு பாதுகாப்பான இடம் என்று எண்ணி அடைக்கலம் தேடிச் செல்கின்றது. அதனுடைய அனுமதி இன்றி கட்டப்பட்டிருக்கும் கூடுகளைக் கைப்பற்றி, அப்பறவைகள் மீண்டும் கூடு கட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி, அதன் முட்டைகளையும் குஞ்சுகளையும் அதனிடம் இருந்து பிரித்து மேற்கொள்ளப்படுகின்ற இச்செயல்களை நினைத்து பார்ப்பதற்குப் கொடுமையான ஒன்றாகவே இருக்கின்றது.

மனிதனின் முன்னேற்றத்திற்காக வளங்களைப் பயன்படுத்திக்கொள்வது ஆதியில் இருந்து நடந்து வரும் ஒரு செயலாகவே இருந்தாலும் கூட மனிதனின் பேராசை அதனை மனிதாபிமானம் அற்ற செயலாக மாற்றி வருகின்றது. முதலாளித்துவ ஆதிக்கத்தினால் பாதிக்கப்பட்டு வரும் மனிதனைப் பற்றி பல ஆண்டுகளாக பேசிக்கொண்டும், அதனை எதிர்த்து குரல் எழுப்பிக்கொண்டும் வருகின்றோம். நம்மை அறியாமலேயே, பறவைகள், கால்நடைகள், கடல்வாழ் உயிரினங்கள், காடுகள், மலைகள் என பல இயற்கை அம்சங்கள் நெடுங்காலமாக மனிதனின் ஆதிக்கத்தால் பல கொடுமைகளையும் பாதிப்புகளையும் அனுபவித்து வருவதை அறிய தவறியதை எண்ணி மனம் வேதனை அடைகின்றது. தானும் மனிதனாக வாழ விரும்புவதில்லை இயற்கையையும் இயற்கையாக இருக்க விடுவதில்லை.

மேற்கோள் பட்டியல்

Al Haddad, Abd Rahman, Azhar, M.S. Iqbal, Shaiful Jahari, Mohammad Ali, (2015).
Swiftlets Wave Sound Processing Through Frequency Adomain. Department of Animal Science, Faculty of Agriculture, Universiti Putra Malaysia, 5pg. Retrieved from http://www.dvs.gov.my/dvs/resources/user_1/DVS%20pdf/Aneka%20Haiwan/poster%20papers/4_Al_Haddad_UPM.pdf

C. T. S. Lim, Make Millions from Swiftlet Farming: A Definitive Guide, Truewealth Sdn Bhd, Malaysia, 2006.

Edible-nest Swiftlet. All you want to know about the Edible-nest Swiftlet of Andaman. Retrieved from https://andamanholidays.com/blog/about-andaman-islands/edible-nest-swiftlet-andaman/

Fakulti Perubatan Veterinar, University Putra Malaysia. (2020, December, 12). Sarang Burung Walit : Pengeluaran, Kesihatan dan Kualiti Produk. Retrieved from https://vet.upm.edu.my/research/research_niche_areas/edible_bird_nest_swiftlet_production_health_and_product_quality-83

Jing, T. S. (2020, July, 27). Investment in the Bird’s Nest Industry in Malaysia. Retrieved from https://www.skrine.com/insights/newsletter/july-2020/investment-in-the-bird%E2%80%99s-nest-industry-in-malaysia

Looi, Q. H., Aini Ideris, Md Zuki Bin Abu Bakar, Omar Abdul Rahman, (2015).
Morphology Comparison of Swiftlet Species from Natural and Man-Made Habitats in Malaysia. Sains Malaysiana, 44(4), 497-502. Retrieved from http://www.ukm.my/jsm/pdf_files/SM-PDF-44-4-2015/03%20Looi%20Qi%20Hao.pdf

Looi, Q. H., Omar Abdul Rahman, (2016). Swiftlets and Edible Bird’s Nest Industry in Asia. Pertanika Journal of Scholarly Research Reviews, 2(1), 32-48. Retrieved from https://core.ac.uk/download/pdf/234560109.pdf

M. K. Norhayati, O. Azman, and N. W. M. Wan, “Preliminary study of the nutritional content of Malaysian edible bird’s nest”, Malaysian Journal of Nutrition, vol. 16, no. 3, pp. 389–396, 2010.

M. Oda, S. Ohta, T. Suga, and T. Aoki, “Study on food components: the structure of N-linked asialo carbohydrate from the edible bird’s nest built by Collocalia fuciphaga,” Journal of Agricultural and Food Chemistry, vol. 46, no. 8, pp. 3047–3053, 1998.
Munirah Abd Rahman, Puspa Liza Ghazali, Lian, C. J., (2018). Environmental Parameters In Successful Edible Bird Nest Swiftlet Houses In Terengganu. Journal of Sustainability Science and Management, 13(1), 127-131. Retrieved from https://jssm.umt.edu.my/wp-content/uploads/sites/51/2020/05/bab-11-13.1.pdf

Nurshuhada S., Mastura, Nurul Aini, Norazean, Ismida Hanis, (2019). Overview Of Technologies Used In Swiftlet Housing. Malaysian Journal Of Veterinary Research, 10(1), 51-55. Retrieved from http://www.dvs.gov.my/dvs/resources/user_16/MJVR%20Vol10.%20No.1/MJVR-V10N1-p51-55.pdf

Ramlan M., Aini Ideris, Jalila Abu, Anun, Rosini, (2018). An Overview Of Research And Industry Connectivity For EBN. Malaysian Journal Of Veterinary Research, 9(1), 81-90. Retrieved from http://www.dvs.gov.my/dvs/resources/user_16/MJVR%20Vol9%20No%201/MJVR-V9N1-p81-90.pdf

Siti Nurzalikha Zaini Husni Zaini, Sunardi, Kamarul Hawari Ghazali, Saiful Nizam Tajuddin. (2013, November). International Conference on Artificial Intelligence in Computer Science and ICT, Langkawi, Malaysia. Retrieved from https://core.ac.uk/download/pdf/159181106.pdf

Tan, S. N., Sani, D., Lim, C. W., Aini Ideris, Stanslas, J., Seong Lim, C. T., “Proximate Analysis and Safety Profile of Farmed Edible Bird’s Nest in Malaysia and Its Effect on Cancer Cells”, Evidence-Based Complementary and Alternative Medicine, vol. 2020, Article ID 8068797, 12 pages, 2020. https://doi.org/10.1155/2020/8068797

2 comments for “பறவையின் உமிழ்நீரில் நனைந்த பணம்

  1. Gunalan Balayoothom
    May 1, 2021 at 2:07 pm

    அருமையான பதிவு..

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...