2020இன் குமரகுருபரன் விருது பெற்ற கவிஞர் வேணு வேட்ராயன் கவிதைகள் இவை. தொழில்முறை மருத்துவரான இவர் தத்துவம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். இவரது ‘அலகில் அலகு’ எனும் கவிதை தொகுப்பு விருட்சம் வெளியீடாக வந்துள்ளது. வேணு வேட்ராயன் அவர்களுக்கு வல்லினத்தின் வாழ்த்துகள்.
(1)
ஒடுங்குதல் நிகழ்கிறது.
ஓவ்வொரு சாளரமாய் தன்னை சாத்திக்கொள்கிறது.
நாட்கணக்கில் வனத்தில் திமிறிய களிறு
வெண்இதழ் மலரை கொய்து மெல்ல நீல வெளியில் வீசுகிறது
*
அந்தரவெளியில் தணித்து நீந்தும் வெண்மலர்
*
புல்வெளியில் கூடடைந்த நத்தை
தன் மன ஓட்டங்களை பின் தொடர்கிறது
*
இருத்தல் முதல் என ஆகிறது
(2)
நீர்த்துளிகள் தெறித்து சிதற
கடல்பரப்பில் சுழன்றோடி விழையாடிடும் சிறுமீன் கூட்டம்.
துளியென
வெளியென
அலைகடலென
ஆழ்நிலையென.
முடிவிலி இழையில் ஆடிடும் நனவிலி.
அறுபடும் இழையில் உதிரும் ஆழ்கடல் முத்துக்கள்.
கிளர்ந்தெழுந்தாடும் மனம் வனையும் விசித்திர பாவைகள்.
நிலைகொள்ளாமல் கிளைமேல் சிறகடிக்கும் பறவை.
திரியில் காற்றில் துடிதுடிக்கும் சுடர்.
(3)
சரேலென பறந்து
சரிந்து இறங்கி
நிலைத்த நீரின்மேல் நின்றது
ஒரு நிறமற்ற பறவை.
அலகில் அலகு பொருத்தி
அலைகளிலாடும் தன்னை
அது
அருந்திவிட்டுச் சென்றது.
(4)
நீரினில் விழும்
ஒரு துளி நீலம்.
உடைந்து சிதறும்
கண்ணாடி குடுவை.
வெளியினில் நீந்தி
விளையாடும் மீன்கள்.
(5)
சிறு சிறு குட்டைகளில்
தேங்கி நிற்கிறது
முன்னொரு காலத்தின் பெருநதி.
அவை ஒவ்வொன்றிலும்
உதித்தெழுகிறது
அதிகாலைச் சூரியன்.
(6)
அசடனாக இருக்கிறாய்.
விலகி விலகி
ஓடி ஒளிந்து கொண்டு
ஒரு குழந்தை வந்து உன்னை கண்டுபிடிக்கும் என
கற்பனையில் காத்திருக்கிறாய்.
அசடன் அசடன்.
குழந்தைகளோ தங்களுக்குள்
வேறெங்கோ கண்ணாமூச்சி அடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பூதத்தின் முரட்டு கரங்கள் மீண்டும் உன்னை
வெளிச்சத்தில் வீசும் போது
இவ்வுலகம் ஏன் இவ்வளவு கொடுமையானதாய் இருக்கிறது என
மேலும் ஒரு அசட்டு கேள்வி கேட்கிறாய்.
ஒரு வாழ்வை
வெறும் காலம் கடத்தும் கேலிக்குரியதாய் ஆக்குகிறாய்.
வாழ்வோ உன்னை கேலிக்குரியவனாய் ஆக்குகிறது.
அசடன் அசடன்.
இருள் நீக்கும் இச்சிறு நெருப்பின் மேல்
காரணங்களின் ஒற்றை பெருமூச்செறிகிறாய்.
அதுவோ நீ இதுவரை அறியாத காரணங்களால் எரிந்துகொண்டிருக்கிறது .
அசடாய் இருக்கிறாய்.
வேறென்ன சொல்ல?