“உன் சோகங்களை
யாரிடமும் சொல்லாதே
துயர முகம் பார்த்துப் பேச
தோன்றாது எவருக்கும்…”
அம்மா…
உண்மையிலேயே
உற்சாகத்தில் இருக்கையில் மனம்
உள்ளொடுங்கிகொள்கிறது
நகைச்சுவை உணர்வு
தடுத்துக்கொள்கிறது
திறமையோ மிரட்டுகிறது
கட்டுப்பாடுகள் பிளவுபடுகிறது
ஆனால் சோகம்…
சோகம்தான்
நமக்கு நம்மை
வெளிப்படுத்தி காட்டுகிறது
மூலம்: Rachel Naomi Remen
2.
அந்த ஒரு கணம் வரும்
சந்தித்துக் கொள்ளும்
உங்களிருவரின் இதழ்களிலும்
புன்னகை மலரும்
அன்பொழுக நீ
அவனை அமரச் செய்வாய்
அதுவரையில் அந்நியனாயிருந்த அவனை
நெஞ்சாழத்திலிருந்து நேசிப்பாய்
பழமும் பழரசமும் தருவாய்
அதுநாள் வரையில்
புறக்கணிக்கப்பட்ட அவனை
உன் இதயத்தின்
அத்தனை அறைகளையும்
அறிந்திருந்த அவனை
வாழ்நாள் முழுவதும்
உன்னுள் ஒன்றாகிப்போன அவனை
காலம் கடத்திவிட்ட
காதல் கடிதங்களோடும்
மங்கிப்போன
பழைய புகைப்படங்களோடும்
பதற்றத்தில் பதிவுசெய்த
எழுத்துகளோடும்
உன்முன்னிருக்கும்
கண்ணாடியில் தெரியும்
அவன் பிம்பத்தையும்தான்
உரித்தெடுத்து உட்காரவைத்து
அவனோடு
இந்த வாழ்வை கொண்டாடுவாய்
என்றாவது ஒருநாள்
அந்தவொரு கணம் வரும்.
மூலம்: Derek Walcott
அதனதன் அழகை
அதனதனிடமே
சொல்லிப்பாருங்கள்
மலரின் விரிந்த இதழ்களை
மெல்ல வருடியவாரே
வார்த்தைகளாலும் விரல்களாலும்
“ஏய் நீ அழகாய் இருக்கின்றாய்”
சொல்லிப் பாருங்கள்
உள்ளிருந்து மீண்டுமொருமுறை
அது மலரும்
இந்த மலர்ச்சி
தனக்கானதாக மட்டுமே இருக்கும்.
மூலம்: Galway Kinnell