நீர்ச்சுழலின் பாதை

ஜெஇலக்கியத்தின் மகத்தான பணியாக வாழ்க்கைக்குத் தேவையான தன்னறத்தைப் போதித்தலை ஜெயமோகன் மீள மீளக் குறிப்பிட்டிருக்கின்றார். உலகின் சரிபாதி மக்கள் தத்தம் இல்லங்களில் உறைந்து இயல்பு வாழ்வு கெட்டு இருக்கும் கொரோனா காலத்துச் சூழலில் வாழ்வு மீதான நம்பிக்கையையும் அறத்தையும் வலியுறுத்துவது இலக்கியம் ஆற்ற வேண்டிய மிக முக்கியமான பணியாக இருக்கிறது. அத்தகைய சூழலில் ஜெயமோகன் நாள்தோறும் ஒரு சிறுகதையாக 69 கதைகளைப் புனைவு களியாட்டெனத் தம் தளத்தில் பதிவேற்றிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு சிறுகதையும் தம்மளவில் பல கண்ணிகளையும் வாசகர்களுக்குப் பெரும் அறிவுழைப்பின் வாயிலாகப் புரிந்து கொள்ளக் கூடியதுமான தன்மையையும் கொண்டிருந்தன.

எண்ணற்ற திறப்புகளையும் சாத்தியங்களையும் வாசகனுக்கு அளிக்கும் அம்சத்தையே இச்சிறுகதைகளின் பொது அம்சமாகக் காண்கிறேன். ஜெயமோகனே பலமுறை குறிப்பிட்டிருப்பதைப் போன்று வைரத்தின் முடிவற்றப் பக்கங்களை உருட்டிப் பார்ப்பதைப் போன்றுதான் இச்சிறுகதைகளின் வாசிப்பு அனுபவம் அமைந்திருந்தது. ஜெயமோகனின் சிறுகதைகள் அளவில் நீண்டவையாகவும் குறுநாவல் வடிவத்திலும் கூட அமைந்திருந்தது. ஒவ்வொரு சிறுகதையும் தன்னளவில் ஒரு நீர்ச்சுழலைப் போன்று இருந்தது. முதல் பத்து வரிகளிலே நாம் அடையும் அந்நிய நிலம் மீதான சித்திரிப்பும் உரையாடலும் ஒரு வகையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தக் கூடியன. அந்தக் கதைகளை இன்னும் வாசித்து உள்நுழைகிற போது அந்தச் சுழல் நம்மை அறியாத நிலங்களில் புதிய மனிதர்களின் முன் புதிய அனுபவங்களை வாழச்செய்து சுழலிலே விட்டுச் செல்லும் மாயத்தை ஏற்படுத்துகின்றன.

தமிழ்ப் புனைவுச் சூழலில் ஒருசில கதைமாந்தர்கள் மிகவும் அறியப் பெற்றவர்களாக இருப்பார்கள். எழுத்தாளர்கள் ஒருகதையில் தனித்த பாத்திரப்படைப்புடன் நிறுவுகிற பாத்திரங்கள் தொடர்ந்து பல புனைவுகளில் வந்து கொண்டே இருப்பார்கள். அவர்களின் மூலப்பாத்திர வார்ப்பு மேம்பட்ட படியே செல்லும். சுஜாதா கதைகளில் வசந்த் நாஞ்சில் நாடன் புனைவுகளில் கும்பமுனி போன்ற பாத்திரங்களைச் சான்றாக முன்வைக்கலாம். அதைப் போன்றே ஜெயமோகன் எழுதியக் கதைகளில் சில பாத்திரங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. இந்தக் கதைகள் நிகழும் களங்கள் அதன் உரையாடல் தளம் ஆகியவை ஜெயமோகனின் வாழ்வுக்கு நெருக்கமானதாக இருந்ததை அவரின் முந்தைய கதைகளையும் கட்டுரைகளையும் வாசித்தவர்களால் அறிய இயலும். கதை நிகழும் இடங்கள் அல்லது களங்கள் என்பது குமரி மாவட்டம், தென் திருவிதாங்கூர் (கேரள மாநிலத்தின் தென்பகுதி), கேரளா, திபெத் ஒட்டிய இமையமலைப்பகுதி என விரிந்திருந்தது. இளம் வயது ஜெயமோகனின் பார்வையிலும் அவரின் தொலைத்தொடர்பு பணியிலிருந்த போதிலான கதைகள், இந்திய மெய்யியல் தளத்தில் நிகழ்கின்ற கதைகள், கேரளாவின் வரலாற்றுக் கதைகள் என்ற அடிப்படையிலே அமைந்திருந்தன. இந்தக் கதைகளில் பெரும்பாலானவற்றில் தம் துறையில் உச்சம் தொட்ட அல்லது தனித்துவம் வாய்ந்த கலைஞனொருவனைப் பற்றியதாக இருந்தது. இந்த உச்சம் எய்துதல் என்பது பயின்று வரக்கூடியது மட்டுமின்றி பிறவியிலே கைக்கூடியதாகவும் அமைந்தது.

குமரி மாவட்ட மக்களின் நகைச்சுவை என்பது ஜெயமோகன் சிறுகதை மாந்தர்களின் உரையாடலில் எப்பொழுதும் உள்ளிழையாக இருக்கும். இந்தத் தொடர் கதை வரிசையில் வந்த ‘ஆனையில்லா‘ எனும் கதை தமிழில் வெளிவந்திருக்கும் மிகச்சிறந்த பகடிக்கதைகளில் ஒன்று எனக் குறிப்பிடலாம். பொதுவாகவே, தமிழில் வெளிவரும் சிறுகதைகளில் நகைச்சுவை அம்சம் என்பது உரையாடலில் கதைமாந்தர்களின் செயலில் ஆங்காங்கே இருக்கும். சிறுகதைகளின் குறுகிய வடிவத்தாலும் கூறுமுறையாலும் நகைச்சுவை என்பது முக்கியமில்லாததாகக் கருதப்பட்டிருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். பகடிக்கதைகளுக்கும் நகைச்சுவைக் கதைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் உள்ளன. நகைச்சுவை கதைகள் பொழுதுபோக்கு வாசகர்களுக்கானவை. பல உள்ளடுக்குகளைக் கொண்ட பகடிக்கதைகளில் வாழ்வு குறித்து மற்றுமொரு உணர்வுத்தளமும் அதன் அடிநாதமாக இயங்கும்.

‘ஆனையில்லா’ கதையில் யானை ஒன்று வாசல் நிலைப்படியில் சிக்கிக் கொள்கிறது. அதன் பெருத்த உருவத்தால் வாசலிலிருந்து வெளிவர இயலாமல் திமிறிக் கொண்டிருக்கிறது. அந்த ஊரில் இருப்போர் ஒவ்வொருவரும் அதனை வெளிக்கொணர ஒவ்வொரு யோசனைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். வாழைப்பழத்தையும் கருப்பட்டியையும் காட்டி வெளியேற்றுவது, உடல் முழுதும் கீரிஸ் தடவி உடலை பிதுக்கி எடுப்பது என அத்தனையுமே தோல்வியுறுகின்றன. இறுதியாக, மாந்திரீகம் செய்யும் கடுவா மூப்பில் எனும் சிண்டன் காணி அழைத்து வரப்படுகிறார். யானைக்கு அருகில் சென்று கெஞ்சுவது போலவும், ஆணையிடுவது போலவும் மந்திரம் சொல்வதைப் போலவும் சொல்லிக் கொண்டிருக்கிறார். மெல்ல உடல் தாழ்த்தித் தவழ்ந்து பின்னகர்ந்து வாசலிலிருந்து வெளிவருகிறது. யானையை அப்படிச் சிறிதாக்கிய மாயத்தைச் சொல்லும் போது குட்டி யானைகளை அழைப்பதைப் போல அதனை சிண்டன் காணி அழைத்ததும் யானை தன்னைக் குட்டி யானையாகக் கற்பனை செய்து கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியது எனத் தெரிய வருகிறது. அந்த இடமே இந்தக் கதையை மிகச்சிறந்த பகடிக் கதையாக ஆக்குகிறது. வாழ்வில் நேரும் இடர்களைத் தத்தம் தர்க்கத்தால் மண்டையை உடைத்துக் கொண்டு இருக்கும் சூழலில் அதற்கான தீர்வு என்பது மெல்ல அதனைச் சிறியதாக்கிக் கற்பனையால் இல்லாமல் கூட ஆக்கலாம் எனும் படிமத்தை அளிக்கிறது. இந்த வரிசையில் ‘பிறசண்டு‘, ‘வருக்கை‘ ஆகிய கதைகளும் மெல்லிய பகடியும் நகைச்சுவையும் இழையோடும் படைப்புகளாகத் திகழ்ந்தன.

வீட்டிற்குத் திருட வந்த திருடனை அடையாளம் காட்டச் செல்கிறார் வயது முதிர்ந்து நரம்பு தளர்வுற்றவரான சிரோமணி. நேர்மையாக இருந்ததினாலே வேலை இழந்து சிறை சென்ற சிரோமணியைப் பாட்டா என்றழைத்துத் தன்னைக் காட்டிவிட வேண்டாம் எனக் கெஞ்சுகிறான் திருடன். அவனைக் காட்டிக் கொடுக்காமல் ‘அடிக்கடி வீட்டுக்கு வாடே’ எனச் சொல்கிறார். அந்த இறுதி வரி புன்னகையை அளிக்கிறது. வாழ்வு முழுதும் இருந்த இறுக்கம் தளர்ந்து அன்பு ஒளிரும் தருணம் அந்தப் புன்னகை எழுகிறது.

ஜெயமோகன் சிறுகதைகளில் இந்து, கிருஸ்துவ மெய்யியல் குறித்த கதைகள் முன்னரே நிறைய வந்திருக்கின்றன. இந்தத் தொடர் கதைகளில் பெளத்த மெய்ஞான மரபு குறித்து வெளிவந்த ‘கூடு‘ எனும் கதையும் என்னளவில் மிகமுக்கியமான கதையாக இருக்கிறது. நித்ய சைதன்யதியின் குருகுலத்தில் இருக்கும் சுவாமி முக்தானந்தா தனது தொடக்கக் காலத்தின் அலைவில் கண்டதாகச் சொல்லும் கதையே சிறுகதையாகிறது. நில்லாமல் அலைவது பின்னர் நிலைகொள்வதுமாக ஒவ்வொரு மரபிலும் இருக்கும் வாழ்வைத் துறந்தவர்களின் கதையைப் பற்றிப் பேசும் போது அந்தக் கதையைச் சொல்கிறார். திபெத்திய பெளத்த ஞானத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டினால் இமயமலை முழுதும் அமைந்திருக்கும் மடாலயங்களுக்குச் சென்று கொண்டிருந்தார். நான்கு மாதங்கள் மட்டுமே நீடிக்கிறது கோடைக்காலம். உறைந்தது போன்ற இமயமலைப் பகுதிகளில் மிகப்பெரும் மடாலயங்கள் அமைந்திருப்பது அவருக்கு வியப்பை அளிக்கிறது. ஒரு சாகசப் பயணிக்குரிய மனநிலையில் அங்கு கைவிடப்பட்டு இருக்கும் பெரும் மடாலயங்களைக் காணப் பயணம் செய்கிறார் சுவாமி முக்தானந்தா. முதலில் ஸ்பிடுக் கோம்பா எனும் மடத்தில் சில நாட்கள் தங்கியிருக்கிறார். அங்கிருந்து பியாங் கோம்பா எனும் மடத்திற்குச் செல்கிறார். புழுதி நிறைந்த செங்குத்தான மலைப்பகுதியில் கழுதையுடன் ஏறி அங்குச் சென்று அடைகிறார். மிகக்குறைவான மக்கள்தொகை கொண்ட ஊர்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய மடாலயங்கள் என்ற கேள்விக்கு இவை மக்களுக்குரியன அல்ல துறவிகளுக்கு உரியன; கூட்டுப்புழுக்களுக்குக் கூடு போல என்கிறார் ஊரில் இருக்கும் ஊர்த்தலைவர். அங்கிருந்து மீண்டும் உம்லா எனும் பெரிய மடாலயத்தைக் காணப் பயணம் செய்கிறார். எட்டடுக்கு மடாலயத்தில் ஒரே ஒரு புத்தபிட்சு இருக்கிறார். 16 ஆம் நூற்றாண்டில் அந்த மடாலயத்தை எழுப்பிய நோர்பு திரக்பா பற்றி இருவரும் உரையாடி கொள்கின்றனர். அங்கிருக்கும் இருக்கைகள், படுக்கைகள், அறைகள் அத்தனையுமே மிகப்பெரியவையாக இருக்கின்றன. தொடர்ந்து, அதனைப் பெரிதாக்கிக் கொண்டே இருந்திருக்கிறார் நோர்பு திரக்பா. உடலில் தளர்வு ஏற்படத் தொடங்கியவுடன் மெல்ல உள்ளொடுங்க தொடங்கியிருக்கிறார். பெரிய அறைகளிலிருந்து சிறிய அறைகளுக்குச் செல்வது, உணவைக் குறைத்துக் கொள்வது, பேச்சை நிறுத்திக் கொள்வது என மெல்ல உள்ளொடுங்கிக் கொண்டே இருக்கிறார். இறுதியாக, கருவில் இருக்கும் குழந்தையைப் போல உள்ளொடுங்கிக் கூடையொன்றுக்குள் இருள் சூழ் அறையில் இருந்திருக்கிறார். அவர் மரணமடைந்தவுடன் அவரது உடலை மடத்திற்கு மேலிருந்த குறுகிய குகையினுள் வைத்திருந்தனர் என அங்கிருந்தப் புத்தபிட்சு குறிப்பிடுகிறார். அவரை இங்கு வரத் தூண்டியது  இங்கிருக்கும் மலைமுகட்டின் வான்வெளியில் நோர்பு திரக்பாவைக் கண்டதாக ஒருவர் எழுதிய குறிப்பு. அந்தப் புத்தபிட்சுவிடம் நீங்கள் அவரைப் பார்த்தீர்களா என்ற கேள்விக்கு நீண்ட மெளனத்தையே சுவாமி முக்தானந்தா பெறுகிறார். இந்தக் கதையில் இயற்கையுடனான திமிறல்தான் துறவிகள் நிகழ்த்தும் நில்லாத அலைபாய்தலும் நிலையில்லாமையும் என வகுக்க முடிகிறது. எதையோ எண்ணி அலைபாய்கின்ற அனைவருமே இவ்வாறு இயற்கையுடன் திமிறி பேருரு கொள்ளவே முயல்கின்றனர். ஆனால், உள்ளொடுங்கிக் கருக்குழவியாகும் தருணம் அந்த மாபெரும் இயற்கையில் நம் மெய்யான இடம் துலங்கி வரும் இடம். கூடு உறைதல், கூடு நீங்குதல், கூட்டில் உள்ளொடுங்குதலான புத்தபிட்சுக்களின் வாழ்வு பிரமிக்க வைக்கிறது. நாம் சுழற்றாமலே அறச்சக்கரங்கள் சுழலும், ஒத்திசைவும் நெறியும் தன்னிடத்தே கொண்டது எனும் போது ஏற்படுகிற வெறுமைதான் உள்ளொடுங்கும் நிலை. அந்த முற்றொடுங்குதல்தான் ஏதேனும் வகையில் அவர்களை இவ்வுலகில் பேருரு கொள்ளச் செய்கிறது. எத்தனையோ இறப்புகளைக் கண்டப்பின்னரும் மீள் வாழ்வு மீதான மனிதர்களின் நம்பிக்கை உயிர்த்தெழலைப் போன்றே இருக்கிறது.

கிருஸ்துவ மெய்யியலான உயிர்த்தெழல் குறித்து எழுதப்பட்ட ‘லாசர்‘ கதையும் சிறந்த அனுபவத்தை அளித்தது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருநெல்வேலியில் இருக்கும் ராபர்ட் கால்டுவெலின் பொன்னிறமான கடிகாரத்தைக் கண்டெடுக்கும் இரு சிறுவர்கள் அதை வண்டென எண்ணி மண்ணுக்குள்ளும் குடுவைக்குள்ளும் பொத்தி வைத்திருக்கின்றனர்.  அதில் லாசர் எனும் சிறுவனின் தங்கை இறந்துவிடுகிறாள். பெருந்துன்பம் அடைகிறான் லாசர். அதன் பின் செத்துப் போனதாக எண்ணி கடிகாரத்தைக் கால்டுவெலிடம் கொடுக்கிறான். பெருஞ்சோர்வும் துன்பமும் அப்பியிருக்கும் லாசர் முன் கடிகாரத்தைச் சொடுக்கி உயிர்த்தெழ வைப்பதாய்க் கதை முடியும். அத்தருணத்தில் உயிர்த்தெழுவது லாசர்தான். இயேசு உயிர்ப்பித்ததாகப் பைபிளில் குறிப்பிடப்படும் லாசரின் கதையின் நீட்சியே இக்கதை. மனித வாழ்வின் பெரும் விந்தைகளில் ஒன்று மரணம். காலந்தோறும் உற்றாரின் உயிர்ப்பிரிவுகள், நிலையில்லாத வாழ்வு எனத் தெரிந்தே வாழ்க்கையில் மனிதர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அத்தகையச் சூழலில் உற்றார் ஒருவரின் இழப்பிலிருந்து மீள்வது என்பது இன்னொரு வகையான உயிர்த்தெழுதல்தான். அந்த உயிர்த்தெழும் தருணம்தான் இந்தக் கதையில் வெளிப்பட்டிருக்கிறது.

ஜெயமோகனின் கதைகளில் யட்சியர்கள், நீலிகள் குறித்த சித்திரிப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இவ்வகையான கதைகளை மேஜிக்கல் ரியலிச கதைகளாக வரையறுக்கலாம். இந்து மரபில் இஷ்டதேவதைகள் உடன் இருந்து ஒருவரை வழிநடத்துகிறது எனும் நம்பிக்கை இருக்கிறது. அத்தகைய நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதைதான் ‘நற்றுணை‘. ஜெயமோகனின் ‘நூறுநாற்காலிகள்’ சிறுகதையை வாசித்து அடைந்த அலைகழிப்பு இந்தக் கதையின் மூலமும் நிகழ்ந்தது. இன்றைக்குப் பெண்கள் பெற்றிருக்கும் கல்வி, பொருளாதாரம், குடும்பம் ஆகிய தற்சார்பு நிலைக்கு எதையெல்லாம் உடைத்து வரவேண்டியிருந்தது என்பதை உணர்த்தும் கதையாக அமைந்திருந்தது. பழைய தென் கேரளா இன்றைய கன்னியகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கி திருவிதாங்கூர் சமஸ்தானம் என அறியப்பட்டது. கடுமையான பெண் ஒடுக்குதல்களும் தீண்டாமை மரபுகளும் கடைபிடிக்கப்பட்ட இறுக்கமான அரசு அங்கிருந்தது. அந்த ஒடுக்குமுறைகளைத் தாண்டி திருவிதாங்கூரிலிருந்து இரண்டாவது பெண்ணாகக் கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற்று இந்தியாவின் இரண்டாம் பெண் நீதிபதியாகவும் பணியாற்றிய அம்மிணி தங்கச்சியின் நினைவுப் பதிவுகளாகவும் உரையாடலாகவும் அவரை நேர்காணும் பெண்ணின் குரலாகவும் கதை அமைந்திருக்கிறது. நாயர் குடும்பத்துப் பெண்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாக இருந்தனர். நாயர் குடும்பங்களில் இருந்த கற்றப் பெண்களை வேற்றுச் சாதியினர் கடத்திக் கொண்டு மணம் புரிவதால் நிகழும் சாதிசார்ந்த ஏற்பும் உரிமையும் போரையும் தடுக்கவே பெண்களுக்கான கல்வி உரிமை மறுக்கப்பட்டது. அம்மாதிரியான ஆசாரங்களைக் கடைபிடிக்கும் குடும்பத்தில் பிறந்த அம்மிணி தங்கச்சி தங்கள் வீட்டில் குடும்பத்துக்கு வழிகாட்டியாக இருந்துவந்த கேசினி எனும் யட்சியைத் தன்னுள் இறுத்திக் கொள்கிறார். அம்மிணி தங்கச்சி வரித்துக் கொண்ட அந்த நற்றுணை சூழ இருக்கும் அத்தனை தடைகளையும் தகர்க்கச் செய்கிறது. கேசினியாகவே உருமாறி தன் மாமன் நாகத்தான் நாயரையும் கொன்று போடுகிறது. வெறி வந்தவள் போல படிக்கிறார் அம்மிணி. நகரில் கிருஸ்துவ மிஷின் பள்ளியில் படிக்கச் செல்கிறார். வீட்டிலிருந்து மிதிவண்டியால் பள்ளிக்குச் செல்கிறார். அவரின் வண்டி முன்னால் முட்களை இடுகின்றனர். அத்தனையும் மீறி படித்துக் கல்லூரிக்குச் செல்லும் போது அங்கேயும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பெண் கல்வியை ஏற்றுக் கொண்ட வெள்ளையர்கள் கூட பெண்களைக் கல்லூரிக்கு அனுப்பும் வழக்கத்தைக் கேலி செய்கின்றனர். மகாராணியின் பரிந்துரையின் பேரில் கல்லூரிக்குச் சென்று பயின்று மெட்ராஸ் பல்கலைக்கழகத்திலும் பயின்று பட்டம் பெற கவர்னர் வரை சென்று முறையிட்டுப் பெறுகிறார். அதன் பின் சென்னை சட்டக்கல்லூரியில் பயிலவும் வழக்குத் தொடுத்து வெல்கிறார். பார் கவுன்சிலில் சேர்வதற்கும் சட்டப்போராட்டத்தை நடத்தி வெற்றிக் கண்டு நீதிபதியாகப் பணியாற்றி ஒய்வு பெற்று மகளிர் கமிசனிலும் பணியாற்றி முதுமையால் தளர்வுறுவது வரை நற்றுணையாகக் கேசினி உடன்வருகிறாள். யட்சிகள் அல்லது நற்றுணை என்பது ஒரு கற்பனையாகக் கூட இருக்கலாம். ஆனால், பெண்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உயிராற்றலின் வடிவாகவே யட்சியைக் காண்கிறேன். “படி… படித்துக்கொண்டே இரு… யாரும் உன்னை தடுக்கமுடியாது… தடுத்தவர்கள் அழிவார்கள்… அது இந்த இருட்டறைகளில் வாழ்ந்து செத்த உன் மூத்தம்மைகளின் கோபம்… நீ போய்க்கொண்டே இரு… எங்கேயும் நின்றுவிடாதே” என வரும் சிறுகதையின் வரியே மரபின் பெயரால் பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த விலங்குகளை மரபைக் கொண்டே கூர்த்தீட்டி உடைத்தெரிந்ததைப் போன்றே அமைந்திருந்தது யட்சிகளின் கருத்துரு என்பதற்குச் சான்றாகும்.

இந்தப் புனைவுக்களியாட்ட வரிசையில் ‘கரு‘ எனும் குறுநாவலும் என்னை மிகவும் கவர்ந்தது. இந்தக் கதையின் வாசிப்பனுபவம் நம் கனவையும் தொற்றிக் கொள்ளும் அளவு வீரியமிக்கதாக அமைந்திருந்தது. இதுவும் திபெத்தின் இமயமலைச் சரிவுக்குள்  நடக்கும் கதைதான். விடுதலைக்கு முந்தைய இந்தியா பல மர்மங்களையும் சாகச அனுபவங்களையும் அளிக்கும் நிலமாக மேற்கத்திய நாட்டவர்களால் பார்க்கப்பட்டது. இந்திய தாந்த்ரீக மரபு, பெளத்த மரபு ஆகியவை மேற்கத்திய நாட்டவர்களை இந்தியாவுக்கு வரச்செய்து அலையச் செய்து கொண்டிருந்தது. அவ்வாறாகத் திபெத்தில் இருக்கும் ஞானியானவர்களும் மெய்மை அடைந்தவர்களும் உறையும் ஷம்பாலா எனும் ஒளிநகரைக் காண அனைவரும் வருகின்றனர். சுவாமி முக்தானந்தர் இமயமலையில் தான் சந்தித்த ஆடம் எனும் இராணுவ வீரர் ஒருவர் கூறும் கதையாகத் தொடங்குகிறது. ஷம்பாலாவைக் கண்டு கிருஸ்துவ மதத்தையும் பரப்ப எண்ணும் அன்னி எனும் வெள்ளைக்காரப் பெண் தன்னுடைய திபெத் பயணத்தில் தங்களுடைய மகன் சார்லஸ் மேலே இருக்கிறார் என உயிர் துறக்கும் முன் சொல்லும் துறவியின் சொற்களைக் கேட்டுத் திகைப்படைகிறார். அவரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விசையே ஆடமையும் திபெத் நகருக்குச் செல்லத் தூண்டுகிறது. அன்னிக்கும் முன்னால் அங்கு வந்து பாதி வழியிலே கீழிறங்கி சென்ற சூசான்னா என்பவரது மகன்தான் சார்லஸ் என்பவதைத் தெரிந்து கொள்கிறார். சூசான்னாவின் கதையை இன்னொருவர் சொல்லத் தொடங்குகிறார். கிருஸ்துவ மெய்செய்திகளைப் பரப்ப எண்ணும் சூசான்னா பெட்ரூஸ் எனும் சாகச வெறியும் பெண் பித்தும் நிறைந்தவரைத் திருமணம் செய்கிறார். அவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தையே சார்லஸ். ஒரு வயது மட்டுமேயான சார்லஸையும் அழைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் களவு தொழில் செய்யும் திருட்டுக் கும்பல் வழிகாட்ட மலையேறி செல்கின்றனர். வழியிலே திருட்டுக் கும்பல் அவர்களைக் கைவிட்டுச் செல்கிறது. குளிரின் அழுத்தம் மேலிட பனிப்பொறுக்குகளின் மீது மிகவும் கடினமான வழித்தடத்தில் செல்கின்ற போது குழந்தை மூர்ச்சையாகிறது, அந்தக் குழந்தை இறந்ததாக எண்ணி பனியில் புதைத்து விட்டுச் செல்கின்றனர். அந்தக் குழந்தையை இன்னொரு திருடன் கண்டெடுக்கிறான். ஆனால், அவனைக் கைவிட்டுச் செல்கிறான். அந்தப் பனிமலையில் வழிதவறிய சூசான்னாவுக்கு ஒரு வெள்ளைக்கார இளைஞன் வழிகாட்டுகிறான். அவருக்குப் பின்னால் நிறையப் பேர் அந்த வெள்ளைக்கார இளைஞனால் வழிகாட்டப்பட்டு மீண்டிருக்கின்றனர். இந்தக் கதைகளைக் கூறிக் கொண்டு வரும் ஆடமும் ஒருநாள் அந்த இளைஞனால் வழிநடத்தப்பட்டுப் பயணத்தைத் தொடர்கிறான். இந்தக் கதை மேலை மனதையும் கீழைத்தேயத்து மனதையும் இணைத்த ஆன்மீகச் சரடொன்றைக் குறித்துப் பேசுகிறது. சாகசங்களை நிகழ்த்திப் பார்ப்பதில் மேலைநாட்டினருக்கு இயல்பாக எழுந்துவரும் ஆர்வமும் கீழைத்தேயத்து மக்களின் மனத்தில் உள்ளொடுங்கிச் சென்று அல்லது அகவெளிப்பயணம் மூலம் ஆன்மீக அனுபவத்தை அடையும் முரணையும் குறிப்பிடுகிறது. இவ்வாறான ஆன்மீகத்தேடலில் உலகம் முழுவதும் அலைபவர்கள் காணும் விந்தைகளும் அபூர்வங்களும் எங்கிருந்து வருகின்றன என்ற தத்துவக் கேள்வி இவ்விரண்டு மரபுகளையும் ஒன்றிணைக்கிறது. இந்த மெய்யியல் தளத்தை ஒட்டிய கதைகளாகவே ‘சிவம்‘, ‘பலிக்கல்‘, ‘காக்காய் பொன்‘, ‘நிழல்காகம்‘, ‘அங்கி‘ ஆகிய கதைகள் அமைந்திருந்தன.

இந்தப் புனைவு களியாட்டத்தில் ஒளசேப்பச்சன் எனும் ஓய்வுபெற்ற காவல்துறையதிகாரியைக் கதைசொல்லியாகக் கொண்ட துப்பறியும் கதைகளும் எழுதப்பட்டன. துப்பறியும் இரகக் கதைகளுக்குத் தமிழில் நீண்ட வரலாறு உண்டு. தமிழின் தீவிர இலக்கிய வகைமையில் துப்பறியும் கதைகள் இடம்பெறுவதில்லை எனக் கூட சொல்லலாம். வணிக இலக்கியத்துக்கே உரிய நடை, விறுவிறுப்பான கதையோட்டம் ஆகியற்றைக் கொண்டிருக்கின்றன. இந்தத் தன்மையினாலே துப்பறியும் கதைகள் மெல்ல தீவிர இலக்கிய வகைமையில் ஒரங்கட்டப்பட்டிருக்கலாம். ஜெயமோகன் இப்பெருந்தொற்றுக் காலத்தில் பல துப்பறியும் கதைகளை எழுதியிருந்தார். ஒவ்வொரு சரடாகத் தொட்டெடுத்து இறுதியில் குற்றத்தின் காரணத்தையும் அதனைச் செய்தவரையும் கண்டுபிடிப்பது, குற்றவாளியின் உளவியல் தடங்கள் என்றே தமிழில் துப்பறியும் கதைகள் அறிமுகமாகியிருக்கின்றன. ‘பத்துலட்சம் காலடிகள்‘ கதையில் ஒரு இளைஞன் இறந்துகிடக்கிறான். அந்தக் கொலையின் சான்றாகக் கிடக்கும் பட்டுநூலைக் கையில் எடுத்துக் கொண்டு கேரளாவின் குற்றம் செய்யும் குறுங்குழுக்களில் ஒன்றான மாப்ளாக்களைக் கண்டடைகிறார் ஒளசேப்பச்சன். மாப்ளாக்களின் பத்தேமாரி எனும் பெரும் கப்பல் கட்டும் நுட்பம், குற்றம் செய்வதில் காட்டும் திறம் என விரிகிறது. அந்த மாப்ளாக்களின் தலைவரின் மகன் செய்யும் தவறினால் மெல்ல சரிந்து போனது மாப்ளாக்களின் ராஜ்ஜியம் என்று கதையை முடித்திருப்பார். சமூகத்தில் எழுப்பப்பட்டிருக்கும் அறவிழுமியங்களின் சரிவுதான் குற்றங்கள். அதன் வேரைத் தேடிச் செல்லும் துப்பறியும் கதைகள் அதனை மீட்டெடுத்துத் தருகின்றன என எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் குறிப்பிடுகிறார். குற்றம் புரிந்தவர்கள் தங்களுக்கான அறத்தை உருவாக்கிக் கொள்ளும் கதையான கைமுக்கில் இதைக் காண முடியும். கொதிக்கும் எண்ணெய் நிறைந்த குடத்தில் போட்ட அனுமார் சிலையை வெறுங்கையில் எடுத்துக் காட்டினால் நிரபராதிகளாகக் கருதப்படும் முறை இருந்திருக்கிறது. பாதி எண்ணெய் மட்டுமே கொண்ட கலயத்திலே அனுமார் சிலையை எடுத்துக் குற்றத்தில் மீண்டு பெரும் பொறுப்புகளை அடைந்தவர்களும் இருந்திருக்கின்றனர். அந்த வகையே குற்றம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் எழும் குற்றவுணர்வினைக் கைமுக்கு போன்ற சடங்குகளால் நேர்செய்து வாழ்வைத் தொடர்கிறவர்களைப் பற்றிய கதையாக இருந்தது. தமிழறிந்த மலையாளியான ஒளசேப்பச்சன் எனும் புனைவு பாத்திரத்தின் கதை சொல்லல்களாகவும் விவரிப்பாகவுமே விரியும் கதைகளிலே பகடியும் நையாண்டியும் இழையோடுகிறது. ஆகவே, இக்கதைகளின் உள்ளடக்கத்தில் இருக்கும் இறுக்கம் உரையாடலில் எழும் கேலியால் நிகர் செய்யப்படுகிறது.

துப்பறியும் கதை என்ற தளத்தையெல்லாம் தாண்டி ஒரு சமூகத்தின் வீழ்ச்சியைப் பற்றி சொல்வதாய் அமைந்திருக்கும். அவ்வரிசையில் ‘வேட்டு‘, ‘ஓநாயின் மூக்கு‘, ‘வேரில் திகழ்வது‘ ஆகிய கதைகளையும் வைக்கலாம். கிடைக்கும் புறவயச்சான்றுகளும் நிரூபணவாதத் தரவுகளும் முட்டிநின்றுவிடும் தருணம்தான் இந்தக் கதைகளைச் சிறந்ததாக ஆக்குகிறது. ‘ஓநாயின் மூக்கு’ சிறுகதையில் காலந்தோறும் தொடர்ந்து வரும் மூதாதையர்களின் மனச்சான்று அல்லது யட்சியர்களால் மரணம் விளைவதாய் அமையும். நம் சமூக அமைப்புகளின் உருவாக்கத்தில் வேராக இருக்கும் முந்தைய தலைமுறையினரின் வஞ்சம் ஓநாயின் மூக்காகக் காலந்தோறும் பின் தொடர்ந்து வருவதாக உருவகம் செய்யப்படுகிறது.

ஜெயமோகனின் கதைகளில் மீள வரும் இன்னொரு சித்திரம் தம் கலையில் உச்சம் தொட்ட கலைஞர்களின் சித்திரம். கலைகளில் உச்சம் எய்துதல் என்பது பிறரால் சென்று எட்ட முடியாத பெருஞ்சாதனையை நிகழ்த்திப் பார்ப்பதால் மட்டுமே அடையப்படுவதில்லை. அந்தக் கலையின் நுண்மையான இடங்களைச் சென்று தொடும் பொழுதே கலையின் உச்சம் துலங்குகிறது. ‘இறைவன்‘ எனும் சிறுகதையில் சுவரில் உதிர்ந்து போயிருக்கும் பகவதியை மீள வரைய வந்திருக்கிறான் மாணிக்கம் ஆசாரி. அவ்வீட்டில் தம் குழந்தையை இளவயதிலே இழந்த இசக்கியம்மை எனும் கிழவி இருக்கிறாள். சுவரில் மிகத் தத்ரூபமாகக் கண்கள் அசைய முகம் கனிய பகவதி எழுந்து வருகிறாள். அந்தத் தருணத்தில் நெஞ்சுடைந்து தன் மகளையும் மீட்டு அளிக்க வேண்டுகிறாள் இசக்கியம்மை. அந்தத் தருணம் மாணிக்கத்தைப் படைப்புக்கு இறைவனாகக் கொண்டு வந்து நிறுத்துகிறது. அந்தப் பகவதியை வரைந்து முடித்தவுடன் அவன் மனத்தில் எழும் வெறுப்புக் கலந்த வெறுமை என்பதும் கலைஞர்களின் பித்து மனநிலையை விவரிக்கும் மிகச்சிறந்த நுண்மையான பகுதிகளில் ஒன்றாகும். அந்த வரிசையில் சாராயம் காய்ச்சுவதில் இருக்கும் நுட்பம் துலங்கும் மாயப்பொன், வேண்டியவுடனே வரம் அருளும் தேவியென வேண்டிய உருவைத் தாங்கி வரும் நாடக நடிகையின் நுட்பம் உணர்த்தும் தேவி ஆகிய கதைகளும் கலையையும் கலைஞர்களையும் பிரித்தறிய முடியாத சரடொன்றில் முட்டி நின்ற கதைகளாக இருந்தன. கலைஞர்களின் நுட்பம், மன ஒருமை, கலையிலிருந்து பிறிதிலாமை இவையனைத்தையும் கண்டுணர்பவன் அடையும் உணர்வெழுச்சிகளும் இந்தக் கதைகளில் மிக நுட்பமாக அமைந்திருக்கின்றன. ‘தேனீ‘ எனும் கதையில் பெரும் நாதசுவரக் கலைஞரான திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் இசையின் நுட்பத்தைப் பிறர் சொல்ல கேள்வியுறுகிறார் ஆசாரி ஒருவர். ராஜரத்தினம் பிள்ளை இறந்த செய்தியறிந்து பேச்சற்றுக் கண்ணீர் வழிய நிற்கிறார். அவரின் இசை சூழ்ந்ததாக எண்ணி சுசீந்திரம் கோவிலில் நெக்குருகி வாய் நீர் ஒழுகக் கற்பனையில் ஓடும் இசையைக் கேட்டு உட்கார்ந்திருக்கிறார். அந்தக் கேளா இசையின் நிறைவுடன் இறந்தும் போகிறார். இசை முதலிய கலைகளில் கலைஞர்கள் தொடர்ந்து ஒரே வகையான இசையை நெடுநேரம் இசைப்பதாக இருக்கும். ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் கூர்ந்து கேட்பின் அதன் ஏற்ற இறக்கம், நுட்பக்குலைவுகள் தெரியவரும். அவ்வாறு வரையறுக்கப்பட்டு, பயின்று வரும் கலைகளில் கலைஞன் தான் நிகழ்த்திச் செல்கிற உச்சத்தருணத்தை ரசிகன் அடைய வேண்டும் என எண்ணுகிறான். சூழ்ந்திரு கதையில் திருமணப் பந்தி உணவை உண்டு கடுக்காயின் கசப்பை மட்டுமே தனியாகப் பிரித்தறிந்த கரடிநாயர், குருவி கதையில் தூக்கணாங்குருவி வயரால் பின்னியக் கூட்டைப் பார்த்துக் கண்ணீர்விடும் மாடன்பிள்ளை என கலையின் நுண்மையைக் கண்டுணரும் ரசிகரிகளின் கண்டடைதலே அக்கலைகளின் நிறைவாகவும் இருக்கிறது.

தமிழ்ச்சூழலில் வீரநாயக பிம்பங்கள் தொடர்ந்து கட்டியெழுப்பப்படுவதைக் காண்கிறோம். வன்முறை என்பது மனித மனத்தின் ஆதார உணர்ச்சிகளில் ஒன்று. அதனை மடைமாற்றி சமூக விழுமியங்களில் ஒன்றாக மாற்றி வைப்பது நன்றே. ஆயினும், எவ்வித கேள்வியெழுப்புதல்களும் இன்றி வழிபாட்டுக்குரியப் பிம்பங்களாக வீரநாயகர்களைக் கட்டமைப்பதன் அபத்தத்தைப் ‘போழ்வு‘, ‘இணைவு‘ ஆகிய கதைகள் சொல்லிச் சென்றன. திருவிதாங்கூரின் வரலாற்றில் மிகமுக்கியமானவரான தளபதி வேலுதம்பி தளவாய் அந்நிய ஆட்சியை எதிர்த்து மேலெழுந்து பின் பிரிட்டிஷாரின் கீழ் அடிபணிந்து தன்னுடைய ஆளுகையை நிலைநாட்ட எவ்வாறு உடன் இருந்த நண்பர்களையே ஒடுக்கிப் பிளவாளுமையாக மாறிப் போகிறார் என்பதை போழ்வு சிறுகதையின் மூலம் காட்டிச் செல்கிறார். ‘போழ்வு’ சிறுகதையின் நீட்சியான ‘இணைவு’ சிறுகதையில் இந்திய மனங்களில் பழங்குடி மனநிலையிலிருந்து எழுந்து வரும் வீரவழிபாட்டையும் வீரத்தைக் கடமையாக மட்டுமே எண்ணும் பிரிட்டிஷாரின் மனநிலையுமென இருவேறு முரண்களைக் காட்டிச் செல்கிறார். ‘ஆயிரம் ஊற்றுகள்‘, ‘ராஜன்‘ ஆகிய சிறுகதைகளும் கேரளத்தின் வரலாற்றையும் தொன்மத்தையும் இணைத்த கதைகளாக இருந்தன. பரசுராமர் தெற்கு வந்தபோது காய்ந்த சருகைத் தின்று கொண்டிருந்த குட்டி யானையின் பொருட்டுப் பசுமை குன்றாதிருக்க தம் மழுவைக் கடல் நோக்கி எறிந்து மீட்டுக்கொடுத்த நிலமே கேரளம் என்ற தொன்மம் இருக்கிறது. அந்த நிலம் முழுவதுமாக யானைக்கே பாத்தியப்பட்டதாக இருக்கிறது. அந்த நிலத்தில் அமைந்திருக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தன்னால் வாங்க இயலாத யானையைக் கொல்ல பூதத்தான் நாயர் எனும் பாகனிடம் சொல்கிறான் எஜமானன் கண்ணன் குமாரன் நாயரின் காரியஸ்தன். யானையைக் கொல்வதற்கு ஏற்படும் அனைத்து தயக்கங்களுக்கும் நிவர்த்தியைக் கூறுகிறான். //ஆனைக்க நாடு இது…நான் இங்க இவருக்க அடிமை, ராஜாவுக்க படை. ஆனா ஆனைக்க பிரஜையாக்கும்”// என்கிறான் பாகன். பிணைத்திருந்த சங்கிலிகளை உடைத்தெறிந்து கட்டற்றுத் தெருவில் ஒடி காட்டுக்குள் மறைந்து யானை ராஜனாகும் தருணத்தை விவரித்திருக்கிறார்.

இவைத்தவிர ஜெயமோகனின் கதைகளில் பலமுறை வந்திருக்கும் அறம் குறித்த கேள்வியை முன் வைப்பவையாக ‘பலிக்கல்‘, ‘கைமுக்கு‘ ஆகிய கதைகள் அமைந்திருந்தன. உணர்வெழுச்சிக் கதைகளாக ‘பொலிவதும் கலைவதும்‘, ‘பெயர்நூறான்‘, ‘சுற்றுகள்‘ ஆகிய கதைகள் அமைந்திருந்தன. வண்ணப்பொடிகளால் பகவதி தேவியின் உருவை வரைவதும் அதன் பின் அது கலைவதுமான சித்திரிப்புப் பின்னணியில் இளமையின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் தருணமாகப் பொலிவதும் கலைவதும் சிறுகதை அமைகிறது. முதல்குழந்தையின் பிறப்புத்தருணம் பெயர்நூறான் சிறுகதையில் இருக்கிறது. இவ்வகையான கதைகள் கற்பனையால் விரிவடையச் செய்யும் குறுந்தருணங்களை உடைய இயல்புவாத எழுத்துகளாக இருந்தன. மாய யதார்த்தவாதக் கதைகளாக ‘தங்கத்தின் மணம்‘, ‘ஆடகம்‘ ஆகியன அமைந்தன. வாழ்வில் சலிப்புற்றுத் தற்கொலை புரியச் செல்லுமிடத்தில் நாகத்தின் நஞ்சே மருந்தாக மாறி சலிப்பையும் தளர்ச்சியையும் நீக்கி புத்தெழுச்சியை அளிப்பது ஆடகம் சிறுகதையில் காட்டப்பட்டுகிறது. நாகமணியை எடுத்து வீட்டில் வைத்து மனச்சிதைவுக்கு ஆளாகும் சிறுவனைப் பற்றிய கதை. இயல்பாகவே இந்திய மரபில் நாகங்கள் மீதிலான தொன்மங்களும் புனைவுகளும் மிகுதியாகவே இருக்கின்றன. இந்தக் கதைகளும் இந்திய மரபுக்குரிய சிறந்த மாயயதார்த்தவாதப் புனைவுகளாக அமைந்திருந்தன.

இந்தப் புனைவு களியாட்டத் தொடரில் உள்ள சில கதைகளில் எனக்கு அயர்ச்சியை அளிக்கும் தன்மையாக நீண்ட உரையாடல், சித்திரிப்புகளைக் குறிப்பிடலாம். கதையைக் கண் முன் நிகழ்த்துவதற்கான உத்தியாக இருந்தாலும், கதையின் உச்சமான தருணங்களை நழுவச் செய்யும் வகையில் நீண்டு இருப்பதாகவே உணர முடிந்தது. தேவி சிறுகதையில் மையம் என்பது நாடகத்தில் மூன்று பாத்திரங்களையும் செய்து முடிக்கும் நாடக நடிகையின் கலையின் நுட்பம்தான். ஆனால், நாடகத்தை எழுதுகின்ற அனந்தனைச் சுற்றிலும் எழுகின்ற உரையாடல் நீளம் ஆகியவற்றால் கதையின் மையத்தைத் தவறவிடக்கூடும். பத்துலட்சம் காலடிகள் போன்ற கதைகளில் மூன்றடுக்குக் கதை சொல்லல்கள் உள்ளன. ஒளசேப்பச்சன். சொல்லத் தொடங்கும் கதை. அதில் வரும் பாத்திரங்கள் சொல்லும் கதை, கப்பல் கட்டுதல் பற்றிய சித்திரிப்பு மறுபுறம் என மூன்றடுக்குக் கதை சொல்லல்கள் உள்ளன. இம்மாதிரியான கதை சொல்லல் உத்தி முறை கதையைப் புரிந்து கொள்வதில் சற்றே அதிகமான உழைப்பைக் கோரச் செய்வதோடு கதையின் குவிமையம் நெடுகிலும் பின்னப்பட்டிருக்கும் கதைபின்னல்களையும் தரவுகளையுமே ஒட்டி வாசிப்பு கவனம் படியச் செய்கிறது. குறுக்கும் நெடுக்கும் இழையோடும் பல இழைகளைப் பற்றி மையத்தைச் சென்றடைய மறுவாசிப்பு அவசியமாகிறது. இவற்றில் சில கதைகள் அதில் பேசப்பட்டிருக்கும் தளம் குறித்த அறிதல் இல்லாதவர்களுக்கு எளிய கதையாகவே தெரியக்கூடும். சான்றாக, கிருஸ்துவ, இந்திய மெய்மை தளங்களில் நிகழும் கதைகளில் வரும் தத்துவத்தளங்களைப் பயிற்சியின்மையால் நானும் அவ்வாறே கடந்து சென்றேன். சான்றாக, சிவம் கதையில் கதை நிகழும் காசியில் இருக்கும் மனிதர்கள், சம்பவங்கள் அதற்கு அடியில் தொடர்ந்து கொண்டிருக்கும் மெய்யியல் தளமான மரணமும் வாழ்வும் ஒருசேர நிகழ்ந்து கொண்டிருக்கும் களத்தைச் சென்றடைய மரபு குறித்த எளிய அறிவும் பயிற்சியும் அவசியமே.

இந்தக் கதைவரிசை தெரிவில் எந்தவிதமான போதப்பூர்வமான தர்க்கங்களும் இல்லை. என்னைக் கவர்ந்த ஏதாவது வகையில் பாதிப்பு செலுத்திய கதைகளின் வாசிப்பனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். இந்தச் சிறுகதைகளின் வாசிப்பனுபவத்தை வெறும் பைனரி குறியீடுகளாகச் சுருக்கிக் கொள்ளாமல் விரிவான புலத்தில் வைத்துப் பார்க்கும் போது மாபெரும் வாழ்வனுபவங்களை வாழ்ந்து உய்த்த அனுபவமும் கிட்டும். இந்த உள்ளிருப்பு நாட்களில் மாபெரும் அகப்பயணங்களைச் செய்ய வைத்துப் பொருள் உள்ள நாட்களாக மாற்றியமைக்கு ஜெயமோகனுக்கு நன்றி.

ஜெயமோகன் வலைத்தளம்

3 comments for “நீர்ச்சுழலின் பாதை

  1. Manguni
    July 12, 2020 at 11:02 pm

    Super

  2. July 13, 2020 at 1:35 pm

    இந்த காலகட்டத்தில் பல கதைகளை எழுதிய மாஸ்டர் என ஜெயமோகனை சொல்ல விழைகிறேன் அவரின் சர்க்கஸ் கதைகளை நீங்கள் குறிப்பிட வில்லை ஒரு சர்க்கஸினை ப்பற்றிய கதையே எனக்கு தெரிந்து வந்தது இல்லை / குதிரைபந்தயம் பற்றிய கதைகளை துமிலன் எழுதியதை போல யாருமே எழுதவில்லை அது போல ஜெயமோகன் மாஸ்டர் பலப்பல குதிரைகளில் ஏன் யானைகளில் சவாரி செய்து மாஜிகல் ரியலிசம் போல நாகம் தேவதை தெய்வம் ஏன் ராமு கர்னாடிக் வித்வான் பாடல் மேலும் குஸ்தியும் செய்து கொண்டிருப்பவரை பற்றி எள்ளல்/ பகடி நகைச்சுவரி நகை முரண் சேதிகள் வரலாறு தத்துவம் அடங்கிய தொகுப்புகளை தந்தமைக்கு என் உளமார் நன்றிகளும் இனிய பாராட்டுகளும் // ஆரா

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...