கொரோனா காலத்திலும் எந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளுமின்றி இலக்கிய வாசகர்ளுக்கான பயணங்கள் மட்டும் இன்னும் திறந்தே கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதிய நிலத்தில், புதிய மனிதர்களோடு, பல்வேறு அனுபவங்களை, கண்டடைதல்களை வெவ்வேறு திசைகளில் இருந்து இலக்கியங்கள் வழங்குகின்றன. இலக்கிய வாசகர்கள் பூட்டிய அறைக்குள்ளிருந்தே உலகை தரிசிக்கக்கூடியவர்கள். அப்படி என் வாசிப்பை அர்த்தப்படுத்திய படைப்புகளில் மே மாத அந்திமழை இதழில் தொகுக்கப்பட்ட சிறுகதைகளுக்குப் பெரும் பங்குண்டு. இவ்விதழில் தொகுக்கப்பட்ட சிறுகதைகள் ஏற்கனவே அந்திமழையில் இடம்பெற்றவைதான். அவற்றைத் தொகுத்து சிறுகதை சிறப்பிதழாக இந்தக் கொரோனா காலத்தில் வெளியிட்டுள்ளது சிறந்த முயற்சி.
கிட்டத்தட்ட 30 சிறுகதைகளைக் கொண்ட இந்த இதழில் உறவுகளை முதன்மையாக வைத்து பேசக்கூடிய சிறுகதைகள் கணிசமாக இருந்தன. ம.காமுத்துரையின் ‘கிடா வெட்டு’ சிறுகதை ஒரு அண்ணன் தம்பிக்கிடையிலான உறவை கிடா வெட்டும் நிகழ்வோடு பொருத்திச் சொல்கிறது. குடும்ப விழாக்களுக்கென உருவாக்கி வைத்துக்கொண்ட சம்பிரதாயங்களால் ஓர் உறவு எப்படி தன்னைத் தானே மதிப்பிட்டுக்கொள்கிறது என்பதைப் பற்றிய கதை இது. அ.முத்துலிங்கம் அவர்களின் ‘நானும் மகளும்’ கதை அப்பாவுக்கும் மகளுக்குமான உறவையே பேசிச் செல்கிறது. அதைப் போல போப்புவின் ‘ஓர் உருமாற்றம்’ சிறுகதையும் உறவைப்பற்றியதுதான். ஓர் உறவின் பொருட்டே எழும் மிக மிக அந்தரங்கமான முரண்பட்ட மன உணர்வையும் அதன் செயல்பாடுகளையும் இக்கதையில் கூர்ந்து கவனிக்க முடிகிறது. ஒரு போதும் அப்பாவின் பிள்ளையாக இருக்க விரும்பாத ஒரு மகனிடம் அவனது அப்பாவின் பழக்க வழக்கங்களே அதிகம் இருக்கின்றன. அப்பாவின் பிள்ளையாக இருக்க விரும்பாத அவன் இறுதியில் தன் அப்பாவாக உருமாற்றம் கொள்வதுதான் இக்கதை. உறவுகள் பற்றி பேசப்பட்ட கதைகளில் தனித்த சொல்முறையாலும், மொழியாலும், கண்டடைதலாலும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ‘வெண்நுரை’ சிறுகதையே என்னை அதிகம் கவர்ந்தது. ஓர் உறவை ஒரு மணமாக அவதானிக்கக் கற்றுத்தருகிறது இக்கதை.
மகள் தன் அப்பாவுக்குச் செய்யும் சவரத்தில் தொடங்கும் இக்கதையில் அவளது குழந்தைப்பருவத்தின் வாசத்தை நுகரமுடிந்தது. அந்த மணம் எப்படி அப்பாவின் நினைவாக அவளுக்குள் திரண்டுத் தேங்கிவிடுகிறது என்பதைப் பற்றிய கதைதான் இது. உண்மையில் குழந்தைப் பருவத்தை நினைவூட்டும் எலுமிச்சை மணம் அவளது அப்பாவிடமிருந்து தொடங்கி அவரிடமே முடிகிறது. ஒரு மகளுக்கும் அப்பாவுக்குமுண்டான உறவுக்குள் உருவாகியிருக்கும் பெரும் எல்லைக்கோடுகளை கதாசிரியர் ரோகிணியின் மூலம் கடந்து பார்க்கிறார். அப்பாவுக்கும் மகளுக்குமான உறவின் உச்சம் அதிகபட்சமாகக் குழந்தைப் பருவத்திற்கு அப்பால் தொடர்வதே இல்லை. அதை முடிந்த வரை மாற்ற முயல்கிறாள் இந்தக் கதையில் வரும் ரோகிணி. சவரத்தின் மூலம் அப்பாவின் உடலை அவள் கையாளத் துவங்குகிறாள். ஆனால் அதன் பொருட்டே அவள் சவரம் செய்ய தொடங்கவில்லை என்றாலும் கதை நமக்கு அதை உணர்த்துகிறது. அதன் மூலம் பன்னிரெண்டு வயதோடு தொலைந்த தன் அப்பாவுடனான நெருக்கத்தை அவளால் மீண்டும் நெருங்க முடிகிறது. சவரத்தின்போது அவள் விரும்பித் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் ஷேவிங் க்ரீமின் எலுமிச்சை மணம் அவளுக்கு எப்போதுமே அவளது குழந்தைப் பருவ நியாபகத்தை உள்ளுக்குள் கிளர்த்துகிறது. அது அவள் அப்பாவுடன் நெருங்கி இருந்த காலத்துக்குண்டான மணம் என நாமே யூகிக்கலாம். எப்போதும் சோகமாகவே இருக்கும் தன் அப்பாவைச் சந்தோஷப்படுத்த ரோகிணி செய்த பல முயற்சிகளில் ஒன்றுதான் சவரம் செய்தல். இந்தச் சவரத்தால் அப்பாவிடம் அவள் எதிர்பார்த்த எந்த மாற்றமும் இல்லை என்றாலும் அப்பாவுடனான அவளது நெருக்கத்துக்கு அது உதவுகிறது.
அப்பாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட ஓர் இரவில் அவசர அவசரமாக அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயாராகும்போது அவளது அப்பா சவரம் செய்தால் மட்டுமே மருத்துவமனைக்கு வருவேன் என சொன்னதன் பேரில் அவளும் நடுக்கத்தோடு சவரம் செய்துவிடுகிறாள். என்றுமில்லாமல் அப்பா கண்ணாடியில் சவரம் செய்த தன் முகத்தைப் பார்க்கிறார். எப்போதுமில்லாத பிரகாசம். அன்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பா மறுநாள் இறந்துவிட்டார். அப்பாவின் மரணத்திற்குப் பின் அப்பாவின் பொருள்களை எல்லாம் எடுத்து வைக்கும் தருணம்தான் அந்த ஷேவிங் க்ரீமை அவள் மீண்டும் எடுக்கிறாள். அவள் அதைப் பிதுக்கிய போது உண்டான அந்த எலுமிச்சை வாசம் அவளை வெடித்து அழச் செய்கிறது. இப்போது அது அப்பாவின் வாசமாக மட்டுமே அவளுக்குள் நிரம்பி நிற்கிறது.
பருவத்தைக் காரணம் காட்டி விலகலைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு அப்பாவுக்குள்ளும் ஒவ்வொரு மகளுக்குள்ளும் தீராத வாஞ்சை காலந்தோறும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. உடல் என்ற ஒரே ஒரு வேறுபாட்டின் கீழ் இருவரும் அவரவர் எல்லைகளுக்குள் தன் பாசத்தையும் கட்டிவைக்க வேண்டிய சூழலை விரும்பியோ விரும்பாமலோ இந்தச் சமூகம் உண்டாக்கியுள்ளது. அதைப் பெரும் இடைவெளிக்குப் பிறகு கடக்க முயலும் ரோகிணி ஒரு விதத்தில் வெற்றிக் கொள்கிறாள். எனவேதான் அப்பாவுடனான நெருக்கத்தை அவளால் அந்த வயதிலும் ஒரு மணமாகவேனும் சேமித்துக் கொள்ள முடிந்திருக்கிறது.
நம்மில் பலரும் கவனிக்க மறந்த எளிய வர்க்கத்தின் வலியையும் சிக்கலையும் முன்வைக்கக்கூடியதுதான் காரல் மார்க்ஸ் அவர்களின் ‘ஆட்டம்’ சிறுகதை. இந்தக் கதை வாசிக்கும் முன் வரை நான் பார்த்த எத்தனையோ கலைநிகழ்ச்சிகளில் ஆடிய பெண்களின் மீதான எனது சிந்தனை வேறொன்றாகவே இருந்துள்ளது. அதிகபட்சமாக அவர்களின் மணவாழ்க்கைப் பற்றியதாக மட்டுமே அது இருக்கும். அதற்கும் அப்பால் ஒரு பெண்ணாக, தாயாக, உடல் ரீதியாக அவர்கள் எதிர்நோக்கும் சிக்கலை நான் யோசித்ததில்லை. ஓர் ஆட்டத்திற்கும் ஒப்பனைக்கும் பின்னால் ஒரு வலி மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை இக்கதை எனக்கு முதல் முறையாகச் சொல்லியுள்ளது. உடல் அசைவை அவதானிக்கக் காத்திருக்கும் சமூகம் அந்த உடலுக்குண்டான வலியை அவதானிக்க முடியாத தூரத்தில் அவர்களை நிறுத்தி வைத்திருக்கிறது.
சாவு வீட்டுக்கு ஆட வரும் குறவன் குறத்திகள் இந்தச் சமூகத்தின் முன் வெறும் காட்சி பொருள்களாக மட்டுமே இருப்பதையும் அவர்களின் அசைவுகளுக்குப் பின்னால் இருக்கும் பலவீனங்களை, அசதிகளை, வலிகளை ஒரே ஒரு கணம் கூட சிந்திக்கவோ கவலைப்படவோ தயாராக இல்லாத மனிதர்களை நோக்கிய கதை இது. குழந்தைப் பிறந்த சில தினங்களே ஆன ஒரு குறத்தி மார்பில் பால் சுரக்கும் வலி உண்டாகிறது. பால் ஊறிய மார்பு கனக்கிறது. ஆடிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. உறுமியை மெல்ல அடிக்கச் சொல்லி இரகசியமாக உறுமியடிப்பவரிடம் விண்ணப்பிக்கிறாள். சடலத்தைக் குளிப்பாட்டும்போது மட்டும் அதிர்ஷ்டவசமாக ஓய்வும் கிடைக்கிறது. ஆனால், உட்கார இடம் இல்லை. தூணில் சாய்ந்து நிற்கின்றனர். அங்கிருப்பவர்கள் யாருமே அவர்களின் ஓய்வையோ களைப்பையோ பொருட்படுத்தவே இல்லை. கதையின் தொடக்கத்தில் வீட்டுத் திண்ணையின் முன் ஒப்பனைக்கு இடம் ஒதுக்கும் மனப்போக்கை பின் வரும் இதுபோன்ற காட்சிகளைப் படித்தபோது இன்னும் புரிந்துக்கொள்ள முடிந்தது.
பாலைப் பீய்ச்சி எடுத்தாக வேண்டுமென்ற சூழலில் மறைவிடம் போக குடித்துக் கொண்டிருந்தவர்களைக் கடக்க இரண்டு குறத்திகளும் தயங்கி நிற்கின்றனர். நிறைமாத கற்பிணியான இறந்தவரின் மனைவி அவர்களை வீட்டுக்குள் அழைக்கிறாள். அவள் அவளின் வலியை உணர்ந்திருக்க வேண்டும். அவளை வீட்டிற்குள் அனுப்பிவிட்டு மூத்த குறத்தி மீண்டும் ஆடத்தொடங்குவதாகக் கதை முடிகிறது. அந்தக் கர்ப்பிணியிடம் இருந்தக் கனிவைக் கொண்டு கதையின் அவிழ்க்கப்படாத ஒரு இரகசிய முடிச்சை நாம் அவிழ்க்க முடிகிறது. இறந்து கிடக்கும் அந்த வயதானவரை மணந்து கொண்ட அந்த அழகிய இளம் பெண்ணின் (கர்ப்பிணி) பின்புலம் ஊர்மக்களுக்குப் பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இறந்தவர் ஊர்மக்களிடையே தன் குணத்தால் போற்றப்படுகிறார். தன் மனைவி இறந்து 10 ஆண்டுகளில் எந்தப் பெண்ணையும் மணப்பதைப் பற்றி சிந்திக்காத அவர் திடீரென அந்த இளம் பெண்ணை மணந்துகொண்டது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. கதையின் முடிவில் அவளிடமிருந்து எதிர்ப்படும் அந்தக் கனிவைக்கொண்டுதான் அவளும் குறவ குலத்தைச் சார்ந்தவளாக இருக்கலாம் என்ற யூகம் பிறக்கிறது.
இத்தொகுப்பில் எளிய மக்களின் வாழ்வையும் சிக்கலையும் காட்டக்கூடிய சிறுகதைகதைளென எஸ்.கே.பி கருணா அவர்களின் ‘சாமந்தி’ சிறுகதையையும் லஷ்மி சரவணக்குமார் அவர்களின் ‘முகமற்றவன்’ சிறுகதையையும் வகைப்படுத்தலாம். ‘முகமற்றவன்’ சிறுகதை, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் ஒருத்தி சாதியத் தீண்டாமைகளால் தனது தினசரிகளில் எதிர்நோக்கும் சிக்கல்களைக் காட்டுகிறது. ‘சாமந்தி’ சிறுகதை இவ்விதழில் எளிய மக்களின் வாழ்வை காட்டும் இன்னொரு அடர்த்தியான கதை. கார்ல்மார்க்ஸ் அவர்களின் ‘ஆட்டம்’ சிறுகதை ஒடுக்கப்பட்டவர்களின் வலி மீதான இந்த சமூகத்தின் அலட்சியத்தைக் காட்டுகிறது என்றால் சாமந்தி சிறுகதை இன்னொரு கோணத்திலிருந்து அவர்களின் உழைப்பின் மீதும், இழப்பின் மீதுமான அலட்சியங்களைக் காட்டுகிறது.
கரும்பும் சாமந்தியும் நடப்பட்டிருந்த தோட்டத்தில் இரண்டு பயிர்களுக்கும் நேர் குறுக்கே விழுந்து கிடக்கும் பெரும் இராட்சத குழாய் முனுசாமியை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ஒரு ஆள் உள்ளே நின்று கையைத் தூக்கும் அளவுக்குப் பெரிய குழாய் அது. இன்னும் ஒரு வாரத்தில் மொட்டு விடவிருக்கும் சாமந்தி செடிகள் பெரும்பகுதி அந்தக் குழாயின் கீழ் நசுங்கிக் கிடந்தன. குழாயின் இன்னொரு பாதியில் கரும்பு நசுங்கிக் கிடக்கிறது. இயல்பு நிலைக்கு மீளாத அதிர்ச்சியில் இருக்கும் முனுசாமியை நிலத்தில் நிற்பதே ஆபத்தென விரட்டுகின்றனர். தோட்டத்தை ஒட்டிய சாலையில் சென்ற லாரியிலிருந்து விழுந்த குழாய் அது. அந்தக் குழாயை எந்த சேதமுமில்லாமல் கிரேன் வைத்துத் தூக்கத் தகுந்த திட்டங்களும் முயற்சிகளும் மேலதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அதில் ஒரு துளி சிந்தனைக்கூட நசுங்கிக்கிடக்கும் பயிர்களின்மீது திரும்பவே இல்லை என்பதில்தான் இக்கதை எளிய மக்களின் குரலாகிறது.
முயற்சி மேற்கொள்ளப்பட்ட அந்த இரண்டு நாட்களுக்கும் அவர்களுக்கு சமைத்துக்கொடுக்கும் பொறுப்பு முனுசாமியிடமே ஒப்படைக்கப்படுகிறது. மூன்றாவது நாள் காலையில் தன் இழப்பை மறந்த நிலையில் டீ கேணோடு வரும்போது அந்த நிலத்தில் அழுந்தி இருந்த குழாயின் அடையாளம் மட்டுமே இருந்து. அந்தக் குழாய் இரவோடு இரவாக அகற்றப்பட்டிருந்தது. நசுங்கிக் கிடக்கும் ஆவரது பயிர்களைப் பற்றி சிந்திக்காத அவர்கள், பாதிக்கப்பட்ட நிலம் பற்றி கவலையுறாத அவர்கள் பசியாற்றிய முனுசாமிக்குத் தருவதாக சொன்ன பணம் பற்றியும் மறந்து புறப்பட்டிருந்தனர். தன் சக்திக்கு மீறி சமைத்துப் அவருக்குக்கு அதிலும் ஏமாற்றம்தான். எளிய மக்களின் பெரும் உழைப்பை மிக எளிதாகவே உதரிவிடும் பெருமக்களின் அலட்சியம் பற்றிய இக்கதை முக்கியமான பதிவு.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இமையம் அவர்களின் ‘காதில் விழுந்த கதைகள்’ என்ற சிறுகதை ஒரு மாறுபட்ட தோரணையில் அமைந்த கதை சொல்லல்முறை. இக்கதை குறிப்பிட்ட சில பாத்திரத்தின் செயல்பாடுகள் வழி அமைந்த புனைவு அல்ல. பெரியவர் ஒருவர் பேருந்துக்குக் காத்திருக்கும்போது பேருந்தில் பயணிக்கும்போது, மருத்துவமனைக்குள்ளே என காதில் வந்துவிழும் பெண்களின் அந்தரங்க உரையாடல்களால் ஆன தொகுப்பு. இக்கதையில் உரையாடல்களை ஒட்டுமொத்தமாக மனதில் இருத்திப்பார்க்கும்போது அவை ஒரு நூல் போல ஒன்றோடொன்று சார்ந்திருப்பதை கவனிக்கலாம். அதன் மூலமே கதையின் மையச் சரடை நெருங்க முடியும். புதிதாய் மலரவிருக்கும் காதல், கணவனின் மீதான வெறுப்பின் உச்சம், கள்ளக்காதல், திருமணமாகாத இளம் பெண் கற்பம், வெளியூர் சென்றிருக்கும் கணவனுக்கு துரோகம் என அமைந்திருந்த சுய வாக்குமூல தொலைப்பேசி உரையாடல்கள் அவை. கணவன் மனைவி உறவைப் பற்றி சொல்லக் கேட்டிருந்த புனிதத்தன்மை அனைத்தையும் இந்தக் கதையில் கேட்ட பெண்களின் குரல்கள் கலைத்துப்போட்டுள்ளன. பெரும்பாலும் இரகசிய குற்றங்களின் தொடக்கம் ஒரு மிஸ்ட் காலாகவே இருக்கிறது. இந்தக் கதை முழுக்க மிஸ்ட் கால் என்ற சொல்லே அதிகம் வாசிக்கக்கிடைக்கிறது. எனவே, அநேகமான பெண்களின் வாழ்வை திசைத்திருப்பக்கூடிய பெரும் சுழலாக அந்த மிஸ்ட் காலைப் பார்க்கிறேன்.
உடல் ரீதியாக உள்ளத்தின் ரீதியான தனது அந்தரங்க தேவைகளைப்பூர்த்தி செய்யும் பாவனையில் நுழையும் மிஸ்ட் கால்களைதான் கதாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இப்படி ஒரு மிஸ்ட் கால் சிக்கலின் காரணமாக விஷம் அருந்திய தன் அண்ணனின் மகளைக் காண செல்லும் பயணத்தில் அவர் காதில் விழுந்த கதைகள்தான் இவை. இக்கதை முழுக்கவே பெண்களின் குரலால் ஆனது. அவர்களைக்கொண்டே அவர்களின் வாழ்வில் தேவையான ஒன்றையும் கதாசிரியர் இரகசியமாக அறிவுறுத்துகிறார். காலம் காலமாக கற்பின் வடிவமாகப் பெண்களைக் காட்டிக்கொண்டே இருக்கும் நம் புராணங்களும், பண்பாட்டு போதனைகளும் சொல்ல மறந்த போன வாழ்வின் இருண்ட பகுதிகள் இவை. பெண்களை வீட்டின் பதுமைகளாகவே பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நம் முன்னோர்கள் கையாண்ட உத்திகளாகவும் அவை இருக்கலாம். ஆனால் அவை கைப்பேசி காலத்தோடே காலாவதியாகியிருப்பதை நம்மில் பலரும் அறிவதே இல்லை. பேருந்து நிலையத்தில் அவர் சந்தித்த பழக்காரி ஆண்களின் பார்வைக்கு அஞ்சி தன் மகளைக் கடைக்குகூட அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த மகளின் கையில் அதைவிட ஆபத்தான கைப்பெசி இருப்பதை அவள் சிந்திக்கவே இல்லை.
இவ்விதழில் ஆனந்த் ராகவ் அவர்களின் ‘பி.ஜி’ சிறுகதை, பாக்கியம் சங்கர் அவர்களின் ‘வணக்கம்’ சிறுகதை, பா.கண்மணி அவர்களின் ‘மீன்சாப்பாடு’ சிறுகதை, மற்றும் ஸர்மிளா ஸெய்யித் அவர்களின் ‘வாய்மையின் நல்ல பிற’ சிறுகதை ஆகிய அனைத்துமே பெண்களைப் பேசக்கூடியவையே. விவாகரத்தானவள் வீடு தேட படும் சிரமம், உடன் அமர்ந்து சாப்பிட்டப்பிறகு ஒரு பெண்ணின் மீது ஏற்படும் பார்வை மாற்றம், அரசியல்வாதியாகிய பெண்ணின் வாழ்வு என பெண்களின் வெவ்வேறு தளத்திலிருந்து காட்டும் கதைகள் இவை. ஆனால், இமையம் அவர்களின் ‘காதில் விழுந்த கதைகள்’ சிறுகதை இவற்றிலிருந்து சற்றுத் தள்ளித் தெரிந்தோ தெரியாமலோ பெண்களின் வாழ்வில் ஒருமித்திருக்கும் ஒரு தொழில்நுட்பக்கோளாற்றை அடையாளம் காட்டுகிறது.
நான் குறிப்பிட்டுப் பேசியிருக்கும் சிறுகதைகள் அனைத்தும் என்னைத் தனிப்பட்ட முறையில் கவர்ந்தவை. இங்கு பேசி இருக்கும் கதைகளைவிடவும் மேலான சிறுகதைகள் இத்தொகுப்பில் இருக்கவே செய்தன. அவை பெரும்பாலும் என் புரிதலின் வசப்படாத உயரத்தில் பல உள்மடிப்புகளைக் கொண்டிருப்பவை. எனவே, அப்படி அவிழ்க்க முடியாத முடிச்சுகளைக் கொண்ட படைப்புகளின் வழி வாசிப்பில் நான் இன்னும் செல்ல வேண்டிய தூரத்தை அளவிட்டுக் கொள்கிறேன். அதே போல இத்தொகுப்பில் என்னை ஈர்க்காத சில கதைகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றில் தாமிரா அவர்களின் ‘சுகிர்தாணியும் சொர்ணமால்யாவும்’ சிறுகதையும் ராஜேஷ்குமார் அவர்களின் ‘சுடும் தாமரைகள்’ சிறுகதையும் அடங்கும். இவற்றில் சுகிர்தாணியும் சொர்ணமால்யாவும் சிறுகதை தகவல்களின் கோர்வையாக அமையப்பெற்ற ஓர் எழுத்துவடிவம். கட்டுரைக்கும் சிறுகதைக்கும் இடையில் நிற்கும் ஒரு எழுத்து வடிவம். அது ஓர் அனுபவத்தை எந்தப் புனைவுமின்றி ஒப்புவிக்கிறது. அது எனக்கு எந்தவொரு வாழ்வையும் காட்டவில்லை. இரு வேறு மனிதர்களை மட்டுமே சொல்லுகிறது. எனவே, இக்கதை எனது வாசிப்புக்கு உவப்பானதாக இல்லை. ‘சுடும் தாமரைகள்’ சிறுகதை ஒரு நல்ல கண்டடைதலைத் தருகிறது என்றாலும் அதில் அமைந்திருக்கும் காட்சிகளும் சூழல்களும் கதை மாந்தர்களும் ஏற்கனவே பார்த்துப் பழகிய உணர்வையே ஏற்படுத்துகின்றனர். வாழ்வின் இயல்பு நிலையிலிருந்து துளிர்த்துவரும் காட்சிகளால் ஆனதல்ல இக்கதை. பெண்ணியம் பேசும் பல பெரும் ஆளுமைகளின் ஊருக்கும் தனக்குமான இருவேறு குரல்களைக் காட்டும் கதை. பொதுவில் பேசும் நீயாயங்கள் தனக்கென வரும்போது மறந்து போகும் மனிதர்களைக் காட்டுகிறது. ஆனாலும் இதைச் சொல்வதற்குக் கதாசிரியர் தேர்வு செய்திருக்கும் களமும், காட்சிப்புனைவுகளும் வாழ்வின் யதார்த்தத்திற்கு அப்பால் வெகுதூரத்தில் இருக்கிறது. அவை இதற்கு முன்னர் பார்த்துப் பழகிய சூழல்களால் ஆனவை. எனவே, கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியது.
அந்திமழை இதழ் எல்லா வாசகர்களுக்குமானது. அது எல்லா நிலையிலான சிறுகைதைளையும் தொகுத்து வழங்கியுள்ளது. ரசனைக்கு உவப்பான உவப்பில்லாத, அறிவார்த்தமான, தத்துவார்த்தமான என பலதரப்பட்ட சிறுகதைகளை மே மாத இதழில் தொகுத்து வழங்கியிருக்கிறது அந்திமழை இதழ். வாசகர்களின் தேர்வைப் பொருத்தே அவை நம் வாசிப்பைப் பயனடைய வைக்கின்றன. கொரோனா கால வீடடைவு காலங்களில் மனரீதியான வெளிஉலாவலுக்கு நல்ல வாகனமாக இவ்விதழ் உருவாகியுள்ளது.