பேய்ச்சி: அன்னையின் பேய்மையும் அதீதத்தின் திரிபும்

பேய்ச்சி 001‘பேய்ச்சி’ நாவலைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தை எழுதுவதற்கு முன்பு பேச்சியைப் பற்றிய எனது அறிதல்களையும் அனுபவங்களையும் முதலில் எழுத விரும்புகிறேன். என்னுடைய சிறுவயதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அந்தச் சம்பவத்தைப் பார்த்தேன். அம்மாச்சி வீட்டிலிருந்த நாய் ஒன்று குட்டிகள் ஈனுவதைச் சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென்று நாங்கள் எதிர்பார்க்காத வகையில் நாய் தனது குட்டி ஒன்றைச் சாப்பிட ஆரம்பித்தது. நான் ஓடிச்சென்று அம்மாச்சியிடம் விஷயத்தைச் சொல்ல “பெத்தவளுக்கு இல்லாத உரிமையா? தின்னுட்டுப் போகட்டும் விடு” என்று அலட்டிக்கொள்ளாமல் பதில் அளித்ததை அந்த வயதில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தாய்மையின் வேறொரு பரிமாணத்தைப் பற்றிய குழப்பம் முதன் முதலில் அன்றுதான் என் மனதில் நுழைந்தது.

அன்று இரவு அம்மாச்சியின் மடியில் படுத்துக்கொண்டு “மிருகங்க மட்டும்தானே குட்டிகளைக் கொல்லும். மனுஷங்க கொல்ல மாட்டாங்களே?” என்று மனதிலிருந்த அச்சத்தை வெளிக்காட்டாமல் மெல்லிய குரலில் கேட்டபோது அம்மாச்சி நல்லதங்காள் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். “நல்லதங்கா வாக்கப்பட்டு போன எடத்துல கஞ்சிக்கு வழியில்லாம போச்சு. ஏழு புள்ளைகளை வச்சுகிட்டு எங்க போவா. வாழ வக்கத்துப் போய்ட்டா பொம்பளைக்குப் போக்கிடம் ஏது? பொறந்தவீட்டுக்குதானே வரணும். அப்படித்தான் நல்லதங்காவும் அண்ணன்காரனைத் தேடி வந்தா. ஆனால் அண்ணிக்காரி வெரட்டி விட்டுட்டா. எங்க போறதுன்னு தெரியாம, பசியில கத்துன ஏழு புள்ளைகளையும் வரிசையா கெணத்துல தூக்கிப் போட்டுட்டு இவளும் குதிச்சிட்டா” என்று சொல்லி முடித்தவுடன் பெரும் பயம் என்னைச் சூழ்ந்துகொண்டது. “எந்த அம்மாவாவது இப்படி செய்வாங்களா? தப்பில்லையா?” என்று நான் வெகு கோபமாய் கேட்க “அம்மாதான் செய்வா. ஏன்னா அப்போ அவ அம்மாவா இருக்கமாட்டா. ஆத்தாவா மாறிடுவா” என்றபோது எனது குழப்பம் மேலும் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை.

அதன்பிறகு பள்ளிப்பருவத்தில் சிலப்பதிகாரம் அறிமுகமானது. ‘உனது மென் நடையின் முன் தோற்று அன்னங்கள் ஒளிந்து கொள்கின்றன. குழல், யாழ், அமிழ்து மூன்றையும் குழைத்த உன் மழலை மொழியின் முன் தோற்று சிறு பசுங்கிளிகள் வருந்துகின்றன’ என்று காதலோடு கோவலன் கொஞ்சும் அதே கண்ணகி,

அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்

பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி

வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை யல்லள்

அறுவர்க் கிளைய நங்கை இறைவனை

ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்

கானகம் உகந்த காளி தாருகன்

பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்

என்ற பாடலின் வழியாக வாயிற்காப்போன் கண்களுக்குக் கொற்றவையாகவும், பிடாரியாகவும், காளியாகவும், துர்க்கையாகவும் தெரிந்தது எனக்குப் புதிய திறப்பைக் கொடுத்தது. அதுவரை குடும்ப, சமூக அமைப்புகளும் திரைப்படங்களும் கட்டமைத்து எனக்கு வழங்கி இருந்த பெண்மை, தாய்மை போன்ற பிம்பங்களைக் கண்ணகி என்ற காப்பிய நாயகியும் நல்ல தங்காள் என்ற நாட்டார் தெய்வமும் உடைத்துப் போட்டார்கள்.

கல்லூரி விடுதியில் தோழி ஒருத்தியின் அறையில் ஒரு பக்க சுவரில் பாதி அளவுக்குச் சிவனை மிதிக்கும் காளியின் படம் ஒட்டப்பட்டிருக்கும். உக்கிரமான தெய்வங்களின் படங்களை வீடுகளில் வைத்து வணங்குவது எங்கள் குடும்பத்தில் வழக்கமில்லை என்பதால் அந்தப் படம் என்னை மிகவும் வசீகரித்தது. மற்ற தோழிகள் அதைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதென புலம்பியபோது நான் மட்டும் அச்சத்தை மறைத்துக் கொண்டு காளியோடு நெருக்கமானேன். சிங்கப்பூர் வந்த பிறகு வேறோர் அம்மனைச் சந்தித்தேன். அவள் பெயர் பெரியாச்சி (பேச்சி) என்று தெரிந்தவுடன் அதுவரை நான் அறிந்திராத அவளைப் பற்றி விசாரித்து எனது ‘சிறுகாட்டுச் சுனை’ நூலில் ஒரு கட்டுரையாக எழுதினேன்.

இந்த அறிதல் பின்னணி அடிப்படையாக இருந்து நாவலை அணுகுவதில் எனக்கு உதவியது எனச் சொல்லலாம்.

மலாயாவைப் பற்றி எழுதப்பட்டுள்ள நூல்களின் வழியாக நாம் ஒரு வரலாற்றை அறிந்து வைத்திருப்போம். பஞ்சம் பிழைப்பதற்காக நாகப்பட்டினத்தில் கப்பல் ஏறியவர்கள், கப்பல் பயணத்தில் மரித்துக் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டவர்கள்,  பிரிட்டிஷ் அரசு எனும் அரக்கன் ரப்பர் என்ற பணப்பயிரின் வழியாகக் கொள்ளை லாபம் ஈட்ட தங்களது ரத்தத்தை வியர்வையாக்கிய அடிமை சஞ்சிக்கூலிகள், ஐப்பானிய ஆட்சியில் ரயில் பாதை போட சயாமிற்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டு மரணித்தவர்கள், கம்யூனிஸ்டுகளின் அட்டகாசங்களால் எதிர்காலத்தை நினைத்து அஞ்சியவர்கள், கித்தா காட்டுப் பணியிலிருந்து செம்பனை தோட்டச் சூழலுக்குச் சட்டென்று தங்களை மாற்றிக்கொள்ள இயலாமல் சிதறடிக்கப்பட்டவர்கள் என அந்த எழுபது வருடகால ஒட்டுமொத்த வரலாறு இந்த நாவலிலும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அது குளிர்பிரதேசங்களில் அணியும் ஜாக்கெட் போலத்தான் இருக்கிறது. அதற்குள் அணியும் வெப்ப ஆடையைப் போல சாபம், சாராயம், பலி, நஞ்சு, கொலை, குருதி, குலதெய்வம் இவற்றைக் கலந்து நவீன் உக்கிரமான மொழியில் வேறொரு வரலாற்றைச் சொல்கிறார். அந்த வரலாற்றின் நாயகி ‘பேய்ச்சி’.

‘பகுத்தறிவு’ ஒருபோதும் புரிந்துகொள்ள விரும்பாத அல்லது புரிந்துகொள்ள இயலாத ஒரு பெரும் மாய வலைக்குள் மானுடம் சிக்கி உழல்கிறது. ஒவ்வொரு மனிதனும் கண்ணுக்குப் புலப்படாத அந்த வலையின் கண்ணியாகி அறுக்க இயலாத சரடால் மற்றொருவரோடு பிணைக்கப்பட்டிருக்கிறான். பேய்ச்சி என்ற தொன்ம வலையில் ஊழ் என்ற வலுவான சரடால் கண்ணிகளாகப் பிணைக்கப்பட்ட ராமசாமி, ஓலம்மா, மணியம், சின்னி, மாலதி ஆகியோரை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுந்துள்ளது. இந்தச் சரடுகளை இறுக்கவும் இணைக்கவும் ஊடுபாவாக ஓடும் இழைகளாகக் கொப்பேரன், குமரன், முனியம்மா, ஆசோ, அப்போய், கருப்பன் போன்ற இதர கதாபாத்திரங்கள் துணைபுரிகின்றன.

அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சாவது போல மனிதனின் சில உணர்வுகள் உச்சத்தை அடைகையில் அவை வேறொன்றாக மாற்றமடைந்து அழிவை ஏற்படுத்துவது இயற்கையின் நிகழ்வாகும். கம்பராமாயணத்தில் “இராமனைப் பெற்ற எனக்கு இடர் உளதோ?” என்று வினவிய கைகேயியின் உச்சபட்ச அன்புதான் “நீ துறவு மேற்கொண்டு பதினான்கு ஆண்டுகள் கழித்து திரும்பி வா” என்று கட்டளையிடவும் துணிந்தது. இப்படி உணர்வுகள் அதீதமாகும் போது அவை அடையும் திரிபுகள் அனைத்தும் மையக் கதாபாத்திரங்களிலும் நிகழ்கின்றன.

பதினாறு வயதில் கர்ப்பமாகி வயிற்றைத் தள்ளிக்கொண்டு வந்தபோது அரவணைத்து ஆதரவு தந்த தனது தோட்டத்து மக்களின் மீது ஓலம்மா வைத்த அதீத அன்பும் நன்றியும்தான் விஷசாராயத்தால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு பொங்கி அதற்குத் துணை போன கணவனைக் கொல்லும் கோபமாக உருமாறுகிறது. பொட்டை என்ற சொல்லால் அனைவரும் அவமானப்படுத்திய போது தன்னை ஒரு தாயாகப் பார்த்த ஓலம்மாவின் மீது ராமசாமிக்கு இருந்த அதீத அன்பும் நேசமும்தான் அவளது நல்வாழ்க்கைக்காக மணியத்தின் சொற்களில் ஏமாந்து குமரனுக்கு நஞ்சு தரும் கொடூரமாக உருமாறுகிறது. பிறந்தநாள் முதல் வெட்டியான் மகன் என்ற அடையாளத்தால் விடாமல் துரத்தப்பட்டு எங்கெங்கோ ஓடித் திரிந்து இறுதியில் தகப்பன் செய்த அதே வேலையைச் செய்ய நிர்பந்திக்கப்படும் மணியத்தின் கறுப்புக் கைகள் சின்னியின் மஞ்சள் தோலில் வெறி கொண்டு படர்கையில் அவர் எதிர்கொண்ட அதீத அடக்குமுறைதான் சின்னியின் மீது காமமெனும் வன்முறையாக உருமாறுகிறது. தனது வியாபாரத்தில் மண் அள்ளிப்போட்ட சின்னி மீது ஆசோ கொண்ட அதீத பொறாமைதான் அவள் காய்ச்சும் சாராயத்தில் விஷத்தைக் கலக்கும் பழி உணர்வாக உருமாறுகிறது.

தனது மகனது வளமான எதிர்காலத்துக்காகத் தனி ஒருத்தியாகச் சாராயம் காய்ச்சி விற்றுப் பிழைப்பு நடத்துபவளும் இறக்கும் தருவாயில் கூட ‘இந்தப் பணத்த மட்டும் என் பிள்ளைகிட்ட சேத்துருங்க’ என்று கெஞ்சுபவளுமான சின்னியின் அதீத தாய்மைதான் “உன்னைய சும்மா விடமாட்டேன் ஓலம்மா” என வெஞ்சினமாக உருமாறுகிறது. குமரனின் மறுபிறப்பாகப் பார்த்த அப்போயின் மீது ஓலம்மா கொண்ட அதீத தாய்மைதான் முனியம்மா அவனைப் பிரித்து அழைத்து சென்றவுடன் ஆசையாய் பார்த்து, பார்த்து உருவாக்கிய தனது குட்டி சாம்ராஜ்யத்தை அழித்துத் துவம்சம் செய்யும் அரக்கத்தனமாக உருமாறுகிறது. கலகலப்பாகக், கலாட்டா செய்துகொண்டு ஒரு குழந்தையைப் போல நடந்துகொள்பவளும் ‘என்னால ஒரு உயிர கொல்லவே முடியாது’ என கலங்குபவளுமான மாலதியின் அடைய முடியாத தாய்மைக்கான அதீத ஏக்கம்தான் சேவலைப் பலியிடும் துணிச்சலாக உருமாறுகிறது. சின்னி, ஓலம்மா, மாலதி இந்த மூன்று பெண்களின் வழியாகத் தாய்மையின் உச்சம் பேய்மையாக உருக்கொள்ளும் மையத்தைப் பேய்ச்சி என்ற தொன்மத்தின் வழியாகக் காட்டுவதுவாசகர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இருளுக்குள்ளும் அகத்துக்குள்ளும் வாழும் உருவமற்ற பேய்ச்சியைத் தமிழ்நாட்டிலிருந்து மனதில் சுமந்து வந்து மலாயாவில் குடி அமர்த்துகிறார் கொப்பேரன். காத்தாயிடமிருந்து தனது ஆறாவது பிள்ளையான ராமசாமியைக் காப்பாற்றிவிட்ட நிறைவோடு மரணமடைந்த கொப்பேரன், குமரனைக் கொல்வதற்குத் துணை புரிந்ததன் மூலம் கைகளிலும் சின்னி கொலை செய்யப்படுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததன் மூலம் கண்களிலும் ரத்தக் கறையைச் சுமக்க நேர்ந்த குற்ற உணர்வில் ராமசாமியைத் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள வைத்து காத்தாயி என்ற பேய்ச்சி வெற்றி பெறுவாள் என்பதை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

‘கும்புடுறதெல்லாம் சாமியா’ என்று பேச்சியை இளக்காரமாகப் பேசிய ஓலம்மா வாழ்ந்த மண்ணை விட்டு நீங்குமாறு கட்டாயப்படுத்தப்படும்போது ஆங்காரம் கொண்டு தான் பெரிய சாமியாக நினைக்கும் காளியாக அவதாரம் எடுக்கிறாள். அனைத்தையும் அழித்துத் துவம்சம் செய்துவிட்டு அவள் நடந்து வருகையில் சிவனைப் போல அவளது காலடியில் அப்போய் ஓடிச் சென்று படுத்திருக்க வேண்டும். அது நடக்காமல் போனதால் உக்கிரம் கூடி அப்போயின் நிழலான கறுப்பன் என்கிற பைரவனையும் கொன்றுவிட்டு இறுதியில் தான் பழித்த பேய்ச்சியின் முன் நிற்கிறாள். காளியாகி நிற்கும் ஓலம்மா பேய்ச்சியாகி நிற்கும் சின்னியைச் சந்திக்கும் அத்தருணத்தில் தன்னுணர்வு அடைந்து தனது தாய்மையை உணர்ந்து குற்ற உணர்ச்சிக்குள்ளாகி தனது கழுத்தைத் தானே அறுத்துத் தன்னையே பேய்ச்சிக்குப் பலியாக்குகிறாள்.

நாயக்கர் கால சிற்பங்களில் ‘கொடிப்பெண்’ என்ற சிற்பம் பிரசித்தமானது. இந்தப் பெண் தனது கையில் பிடித்திருக்கும் கொடியிலிருந்து பிரிந்து செல்லும் வட்ட வடிவ கிளைப் பகுதிகளுக்குள் கந்தர்வர்கள், மனிதர்கள், துறவிகள், கடவுளின் அவதாரங்கள், தேவர்கள், விலங்குகள், பறவைகள் போன்றவை இடம் பெற்றிருக்கும். பெண்ணிலிருந்துதான் அனைத்து உயிரினங்களும் உதிக்கின்றன என்பதை விளக்கும் சிற்பமாக இதை எடுத்துக்கொண்டால் ஓலம்மா ரம்புத்தான் மரத்தைப் பிடித்துக்கொண்டு நிற்கும் ஒரு சித்திரம் மனதுக்குள் விரிகிறது. அவள் நட்டு வளர்த்த அந்த மரத்தில்தான் எத்தனை, எத்தனை உயிர்கள்! சேவல்கள், பெட்டைகள், வெண்ணாந்தை, கருப்பெறும்புகள், கட்டெறும்புகள், குளவிகள், மூசாம் பூனை, நாகங்கள். இவை தவிர அவள் காலைச் சுற்றி வரும் ஆங்சாக்கள், குலை தள்ளிய வாழைகள், கொய்யா மரங்கள், பறவைகள் வந்து உண்டுவிட்டுச் செல்லும் பப்பாளி மரங்கள், மரவள்ளிக் கிழங்கு தோட்டம் என அத்தனை உயிர்ப்புடன் இயங்கும் அவளது சாம்ராஜ்யம் ஒரு கதாபாத்திரமாகவே மாறி வாசகரைக் கிறங்கடிக்கிறது. நாவலின் இறுதியில் அந்த ரம்புத்தான் மரம் மட்டுமே ஓலம்மாவின் தாய்மைக்கான எச்சமாகவும் குறியீடாகவும் எஞ்சுகிறது. ஓலம்மாவுக்குச் சற்றும் குறையாமல் தன்னுள் முகிழ்த்த தாய்மையோடு ராமசாமி பராமரிக்கும் ஆலமரமும் மூலிகை தோட்டமும் தட்டான்கள், வெட்டுக்கிளிகள், கும்பிடு பூச்சிகள், அட்டைகள், புழுக்கள், பச்சை நிற வண்டுகள், கம்பளிப் பூச்சிகள் என பலவிதமான உயிரிகளைத் தன்னகத்தே கொண்டு அப்போயை மட்டுமல்லாமல் நம்மையும் வசீகரிக்கிறது.

தனது மகள் முனியம்மா நோய் நொடியின்றி வாழ தண்ணீர் மலை முருகனுக்கு வேண்டிக்கொள்கிறாள் ஓலம்மா. அந்தப் பெருந் தெய்வ சன்னிதியில் ஒரு மனிதனின் அகங்காரத்தை முற்றிலும் அழித்தொழிக்கும் மடிப்பிச்சை ஏந்துதல், முடியைக் காணிக்கையாக்குதல் போன்ற சடங்குகளைச் செய்து முடித்துவிட்டுத் திரும்பும் அவள், கணவனின் துரோகத்தைப் பார்த்தவுடன் தாய்மையின் ஆழ்மன இருட்டுக்குள் புதைந்து கிடக்கும் ஆதிதெய்வத்தின் வடிவமான பேய்ச்சியாக மாறுகிறாள். சன்னத நிலையிலிருக்கும் பெண்களைத் தலைவிரி கோலமாய் பார்த்துப் பழகிய நமக்கு, அந்த இரவில் காட்டமான இரைச்சலோடு மழை ஆவேசமாய்ப் பெய்து கொண்டிருக்க மின்னல் ஒளியில் கட்டியிருக்கும் மஞ்சள் புடவை கருஞ்சிவப்பாகத் தெரிய, மொட்டைத் தலையோடு உக்கிர காளி போல கால்களை மடித்து அமர்ந்திருக்கும் ஓலம்மா பேரச்சத்தைத் தருகிறாள்.

வெள்ளி வளையலை வாங்கிக் கொண்ட ஒரு பெண்ணின் சாபம் தள்ளுருகெவ கிராமத்தில் தொடங்கி விஷ சாராயம் அருந்தியவர்கள், ராமசாமி, ஓலம்மா, மணியம், சின்னி, கறுப்பன் என பலரின் அகோர மரணங்களைக் கண்ணியாக்கி இறுதியில் வெள்ளி வளையலை வாங்கிய மற்றொரு பெண்ணின் கொள்ளுப் பேத்தியான மாலதி அந்த வளையலைப் பேய்ச்சியின் காலடியில் வைத்து வணங்கி சேவலைப் பலி கொடுக்கையில் வளையலைப் போலவே ஓர் ஊழ் வட்டம் மலாயா மண்ணில் முடிவுறுகிறது. இனி பேச்சி கனிவாள், மாலதியின் வயிற்றில் சூல் ஆவாள் என்ற நம்பிக்கையோடு நாமும் அப்போயுடன் இணைந்து ‘ஆத்தா’ என கைகூப்பி வணங்குகிறோம்.

‘எடம் மாறுனா கொணமும் மாறும்’ என்ற ஒரு வரி நாவலில் வருகிறது. மனிதர்களுக்கு வேண்டுமானால் இடத்திற்கு ஏற்றவாறு குணாதிசயங்கள் மாறிப்போகலாம். ஆனால் பேய்ச்சிக்கு ஒருபோதும் இது பொருந்தாது. எந்த மண்ணில் சென்று அவள் அமர்ந்தாலும் இனம், மொழி, மதம் கடந்து வஞ்சிக்கப்பட்ட பெண்களின் ஆங்கார குரலாக எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறாள். அதனாலேயே அழிவற்ற தொன்மமாக மாறி காலம் கடந்து நிற்கிறாள். அழிவற்ற அவளைப் பேசுவதன் வழி நவீனின் இந்த நாவலும் தமிழ் இலக்கிய பரப்பிலும் புலம் பெயர் இலக்கியப் பரப்பிலும் அழியாப் புகழோடு காலங்கள் கடந்தும் நிலைபெற்று நின்றிருக்கும்.

2 comments for “பேய்ச்சி: அன்னையின் பேய்மையும் அதீதத்தின் திரிபும்

  1. mala
    July 2, 2020 at 12:14 pm

    naanum peyci navalai vasiten. anta unarvai appadiye elutil kondu vantulerkal. valthukal alagu nila

  2. புனிதவதி
    July 6, 2020 at 10:14 pm

    உங்கள் அனுபவ முன்னுரை, பேய்ச்சியின் கதையை மீண்டும் கண் முன் கொண்டு வந்தது 🌹😊🌹

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...