உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது கொரோனா. நச்சில் `தாக்குண்டப் பெரும்பான்மையான நாடுகளில் இயல்நிலை முடக்கமோ, ஊரடங்கு சட்டமோ அமலில் இருக்கும் காலம். ஆறுதலுக்கு எங்கே போவது என எண்ணியபோதுதான், ‘யாவரும்.காமில்’ கொரோனா காலத்துக் கதைகள் என்ற விவரத்துணுக்கின் கீழ் தொடர்ச்சியாக 44 சிறுகதைகள் நாளுக்கு ஒன்றாய் பதிவேற்றம் காணுவதை அறிந்தேன். அவை ஆறுதலாக இருந்தனவா என்பதையும் தாண்டி, எதார்த்த நெருக்கடியிலிருந்து என்னைத் தப்பிக்க வைத்தன என்பதே உண்மை. இலக்கியம்தான் எத்துணை இதமானது. தனிமையில் பெருந்துணையாகவும், மனநெருடலில் பெருமருந்தாகவும் அமைந்துவிடுகிறது. இந்த 44 கதைகளுள் ஒரு சில கதைகளைக் கழித்துவிட்டால் ஏனையவையாவுமே வாசிக்க வாசிக்க ஆவலூட்டும் தரமான கதைகள். வித்தியாசமான பார்வை, சமகாலச் சிக்கலை மையமிட்டச் சூழல், அழகியல் ததும்பும் வைப்புமுறை என கதைகளின் தேர்வு அருமை. நாள்தோறும் இணையவழி மருத்துவப் படிப்பைப் படித்து வரும் எனக்கு, ஒவ்வொரு நாளும் இக்கதைகளின் வாசிப்பில்தான் ஆரம்பமானது. அவற்றுள், என்னைக் கவர்ந்த 10 கதைகள் குறித்தே இக்கட்டுரையில் விவரிக்க இருக்கின்றேன்.
ஏனையவையாவும், நான் ஏற்கனவே வாசித்த கருவைத் தாங்கி வந்ததாலோ, அல்லது அதனுள் மறைந்துகிடக்கும் தரிசனத்தைச் சரியாய்க் கண்டடைய முடியாத எனது இயலாமையின் காரணத்தாலோ, நேரமின்மையின் காரணத்தாலோ அவை இக்கட்டுரையில் இடம்பெறாமல் போகின்றன. இக்கதைகளுள் சில, இரண்டு மூன்று முறை வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டிய மெனக்கெடல்களைக் கோருகின்றன. அந்த அடிப்படையில், இந்தப் 10 சிறுகதைகளையும் தெளிந்தமட்டும் பேசியிருக்கின்றேன்.
இதென்ன இலங்கையில் நிகழ்ந்த வரலாற்றின் புனைவா என்ற எண்ணம் குத்திகனின் வருகை வரை தொடர்ந்து, பின் ஊர்ஜிதமாகிவிடுகிறது. சூரதிச்சன் எனும் பாண்டிய மன்னனிடமிருந்து இலங்கையைக் கைப்பற்றிய சோழ மன்னர்களான சேனன் குத்திகன் குறித்து அறிந்திருத்தல், கதை பேசும் சம்பவங்களைப் புரிந்துகொள்ள பெரிதும் வழிவகுக்கும். நாகர் குலம், அதற்குப்பின் வந்த ஆதிக்கங்களின் எழலால், வீழ்ந்து மண்ணுள் புதையுண்டு இன்னுமே அதன் வேரில் உயிர்ப்போடு ஒடுங்கிக்கிடக்கிறது. காலங்கள் மாறினாலும், சரித்திர வடுக்கள் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை மீட்டெடுக்க முற்படும் சம்பவங்கள் குறித்த விவரிப்பே கதை.
அம்மம்மாவாக வரும் சிவயோகத்தின் கதைச்சொல்லலில் பேரன் கதை கேட்கிறான். வரலாற்றுத் தொன்மம் இக்கதையில் உருவகமாகச் சொல்லப்பட்டுள்ளதே நமக்கான இடைவெளி. நிலத்துள் மட்டுமா? நெஞ்சுக்குள்ளும்தான் ஆழப் புதைந்து கிடக்கிறது வரலாறு. அவற்றை மீண்டும் நினைவுபடுத்துவதாய் இக்கதை அமைகிறது. இந்தக் கதை, நாகர் குலம் குறித்து மேலும் வாசிக்கத் தூண்டியது. நிலத்துள்ளிருந்து கண்டெடுத்தவையாவும் ஒரு குலத்தின் கதையைத் திகட்டாமல் சொல்கின்றன. அதனிலிருந்து, கதை சில கிளைகளாகப் பிரிந்து நம்முள் விரிகிறது. எழுத்தாளரின் மொழி கதையைப் பெரிதும் ஈர்க்கச் செய்து வாசிப்பில் ஒரு விறுவிறுப்பை ஏற்படுத்திவிடுகிறது என்பதிலும் ஐயமில்லை. பாவஞ்செய்த நிலத்தின் மீது ஊழ் கவிவதைப் போல, நீராடிய பெண் கூந்தலின் சொட்டைப்போல, வீட்டின் உள்ளே தையல் ஊசியை தவறவிட்ட மூதாட்டியைப் போல என எளிமைத்தமிழில் கவித்துவமான உவமைகள். ஒவ்வொரு காட்சியையும் அகரமுதல்வன் வர்ணித்திருக்கும் விதமே, கதையோடு நம்மைக் கைப்பிடித்துக் கொண்டு செல்கிறது. இக்கதை, தன் மொழியால் பலம் பெற்றுப் பெரிதும் கவர்கிறது.
தற்காலச் சூழலோடுப் பெரிதும் ஒத்துப்போகும் கதை. பெரும்பாலும் மேல்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்குப் காட்டப்படும் அக்கறை கீழ்தட்டு, இடைதட்டு மக்களுக்குக் காட்டப்படுவதில்லை. அதுவே, பாகுபாடின்றி எல்லோரும் பாதிக்கப்படும்போது அதிகாரத்துவம் கண் மூடிக்கொண்டு மூர்க்கத்தனமாய் நடந்துகொள்ளும் எதார்த்தம்தான் கதை. அந்த மூர்க்கத்தனத்தைச் சொல்லும் சிற்சில சம்பவங்கள் அந்த வலியை நமது மனதுள் ஏற்படுத்துவதில் வெற்றியடைகின்றன. மார்க்கத்தில் இப்படியெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன என்று சிறு வயதுமுதல் அறிவுறுத்தி வளர்த்து வந்ததற்கெல்லாம் பயனில்லாதுப் போய்விடுகிறது. “மரணத்திற்கு முன்னால் அழக்கூடாது. மய்யித்திற்கு முன்னாலும் அழக்கூடாது.” என்ற கூற்றுக்குத் தம்பியின் கதறலும், மார்க்கத்தின்படி இறந்த இஸ்லாமியர்கள் புதைக்கப்பட வேண்டுமேயன்றி எரியூட்டப்படக்கூடாது என்பதற்கு வாப்பாவின் உடல் எரியூட்டப்படும் செயலும் முரண்களாய் அமைந்து இக்கதைக்குக் கூடுதல் வளம் சேர்க்கின்றன.
கதையை வாசிக்க வாசிக்கச் சிந்தனைச் சிறகுகள் பலவாறாய் விரிகின்றன. இந்தக் கதையை முதல் முறை வாசித்தபோது, ஒரு பார்வை கிடைத்தது. மீள்வாசிப்பின்போது முன்காணாத இன்னொரு திறப்பு. இங்கே கிருமி என்பது உண்மையில் எது என்ற தெளிவைப் புரிந்துகொள்வதுதான் வாசிப்பின் வெற்றியாக நான் கருதுகிறேன். ஒவ்வொன்றையும் இணைத்துப் படித்தாலே எளிதில் கைக்கெட்டும் விடயமாகச் சொல்லியுள்ளார் எழுத்தாளர். தொய்வில்லாத மொழியாலும், கதைக்கேற்றக் கச்சித வடிவத்தாலும் இக்கதை என்னைக் கவர்ந்தது.
இந்தக் கொரோனா காலத்துச் சிறுகதைகள் தொடர்ச்சியில் முன்னோக்கு உத்தியில் கையாண்டுள்ள அறிவியல் கதைகள் சில இடம்பெற்றுள்ளன. வருங்காலத்தின் சாத்தியம் குறித்த அக்கதைகள் யாவுமே ஓர் அபார சிந்தனையை நம்முள் மிக லாவகமாய் விதைக்கின்றன. அவற்றுள் என்னைப் பெரிதும் பாதித்த கதைதான் ரியா வரும் நேரம். அந்த வாழ்க்கையை எண்ணிப் பார்க்கவே மனம் இரனமாகி வதைபடுகிறது. தனிமை என்னை ஆட்கொண்டு இம்சிக்கிறது. அச்சூழலில் நான் இருந்திருந்தால் அதனை எப்படி எதிர்கொண்டிருப்பேன் என்பதை யோசிக்கும்போதே கண்கள் இருளடைந்தன. யுவன் நம்மைப்போன்ற சாதாரண மனிதனாக இருப்பதால் வலி கூடுகிறது. அதுவே, அவன் தொழில்நுட்பத்தின் ஊடுருவல் கொண்ட மனிதனாக இருப்பின், இவ்வளவு பாதிப்பு நேர்ந்திருக்க வாய்ப்பில்லை.
யுவனோடு 16 ஆண்டுகள் பயணித்து வந்த சிப்பி, என்னவெல்லாமோ நினைவலைகளை அவனுள் விட்டிருக்கக்கூடும். இருவர் மட்டுமே தனியாய் அந்தக் கான்கிரீட் சமாதியில். நல்ல வேளை, சிப்பி என்ற ஒரு மனிதனாவது கூட இருக்கிறானே என்று நினைத்தேன். அதன்பின், அடடே அது ஒரு ரோபோட்டா என்று மனம் சலிப்பைப் பற்றியதே மிச்சம். ஆனால், கதையின் முடிவில்தான் அது ஒரு ரோபோட் கூட இல்லை, வெறும் மென்பொருள் என்பது தெரிய வந்தது. அந்த மென்பொருளோடு யுவனுக்கு உண்டான அன்பும் ஈடுபாடும் என்னை உலுக்கி எடுத்தது. தனிமையில் ஒரு மனிதன் தனது எதிர்பார்ப்புகளையும் மன மகிழ்ச்சியையும் இப்படியான சின்ன சின்ன விடயங்களிலெல்லாம் தேடிக் கொள்கின்றான். வேறு வழியில்லையே! அங்குதான் மனிதர்கள் வரப்போவதில்லையே! வாழ்க்கையில், மனப்பசி, காதல், காமம் என தற்போது நாம் கிள்ளுக்கீரையாய் எண்ணுவதெல்லாம் அந்தப் புது உலகில் சிந்தனையிலிருந்தே வெளியான ஒன்று. முழுதும், மனத்தின் அல்ப ஆசைகளாக நாம் இப்போது எண்ணுவதெல்லாம் அங்கே பெரிய விடயமாகப் பார்க்கப்படும் சூழல். இதுதான், கால ஓட்டத்தில் மனிதன் தனக்குத் தானாக எழுதிக்கொள்ளும் மாற்றுத் தலையெழுத்து. ரியாவின் வருகைதான் எத்துணைக் குதூகலத்தை உருவாக்குகிறது. ஆனால், அவளும் ஒரு மென்பொருள். மனம் வெறுமையின் வெளியில் தன்னந்தனியாய்த் தவிக்கிறது. கத்திக் கூச்சலிட்டும் பயனில்லை. 24 மணிநேரமும் கண்காணிப்பு. கருத்துச் சுதந்திரம் கனவாகிப் போன எதார்த்தம். தொழில்நுட்பம் இல்லாது மனிதன் வாழ முடியாத சூழல் உருவாகி, இயந்திரம் மனிதனை இயக்கத் தொடங்கிய காலம். ஒட்டுமொத்தமாகச் சொல்லப்போனால், அது ஆளில்லா தனித்தனி பூமி. அங்கே, ஆற்றுப்படுத்த யார்தான் வருவார்? வாழ்தலின் அர்த்தமும் இலக்கும் எதை நோக்கியதாக இருக்கும் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. இந்தக் கட்டுரையின் இந்தச் சொல்லை எழுதும் இந்த நேரத்தில் கூட, என் மனதுள் அப்படி வாழ்வதற்கு மரணம் மேலிலும் மேல் என்ற எண்ணமே உள்ளது.
ஒரு முக்கியமான கதை. வாழ்வியலின் பேரனுபவம் ஒன்றை சொற்சிக்கனத்தோடு ஆணித்தரமாய்ச் சொல்லுகிறது. ‘அடடே! இதென்ன இங்க வந்து நிறுத்திட்டாரு’ என்ற அதிர்ச்சி கலந்த திருப்திதான் எழுந்தது கதையை வாசித்து முடித்தவுடன். கதையின் தொடக்கத்தில் காமத்தின்பால் ஓர் இளவட்டப் பையன் கொள்ளும் ஈர்ப்பும், போக்கும் மிக நேர்த்தியாகப் பின்னோக்கு உத்தியில் சொல்லப்பட்டுள்ளது. அவனாக அப்பெண்ணுக்கு ஒரு பெயரைச் சூட்டிக்கொண்டு, கவிதையெல்லாம் எழுதுவது, காதோரம் சென்று காதல் மொழி உரைப்பது என மோகத் தூண்டலின் பிரதிபலிப்பு கச்சிதமாகவும் அதே சமயத்தில் சரியாகவும் புனையப்பட்டுள்ளது. தொடக்கத்தில் குமுகாயத்திலிருந்து தள்ளி நின்று, ஒரு வேசியாய் வாழும் தில்லை, பல ஆண்களின் காம இச்சைக்குத் தீனியாக வாழ்கிறாள். இவனும் அவளை நாடிப் போகும் ஒருவன்தான். அவனை ஏற்று நேரம் பார்த்து அழைப்பதாகச் சொல்லி உதவியாகப் பணம் வேண்டும் என்று அவள் கேட்டதுதான் கதையின் மிக முக்கியமான புள்ளி. அவள் இப்படிப்பட்டவள் என்று தெரிந்ததும் அவளை ஒரு வேசியாக மட்டுமே பார்க்கத் தெரிந்த இவனின் மனம், அவளுக்குள் இருக்கும் மனதைப் படிப்பதில் தோல்வியுற்றுப்போனது. ஆனால், அவள் படித்தாள். அவனது மனதை முழுதாய்ப் படித்தாள். அவனின் தேவை அறிந்து அவனுக்கு இசைந்தாள். இதில் திருப்பம் என்ன தெரியுமா? அப்படியாக, ஒரு கோணல் பார்வையையே இந்தக் குமுகாயம் அவள் மீது வைத்திருக்க, அவளோ, தனது வாடிக்கையாளர் ஒருவரையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்கிறாள். பெரும் புள்ளிகள் பலர் அவர்கள் குடும்பத்திற்கு நெருக்கமாகிறார்கள். பணம் பெரிதாகப் புலங்குகிறது. சரி, அவள் அப்படியாக உயர்ந்துவிட்டாள். அவளிடம் வழிந்து பேசிப் பின் வேசியென அறிந்ததும் ஒதுங்கிய அந்த இளைஞன் என்ன ஆனான்? நிலையற்ற அன்றாட வாழ்க்கை, குடி, போதை, மனைவியிடத்தில் மரியாதையின்மை, பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள முடியாத போதை அடிமைத்தனம், கீழ்ப்பாக்கத்தில் தாய் என வாழ்க்கையே பிய்த்துப் போட்ட ரொட்டித் துண்டாய்ச் சிதறிக் கிடக்கிறது. குமுகாயத்தில் ஒரு மனிதனின் அந்தஸ்தையும் மரியாதையையும் எது நிர்ணயிக்கின்றது? ஒழுக்கமான வாழ்க்கைப் பின்னணியா அல்லது சருக்கல்களைக் கடந்து ஓட்டைகளையும் ஒடிசல்களையும் சரிசெய்து மீண்டு எழுந்து வாழ்வில் முன்னேற்றம் காண உழைக்கும் உத்வேகமா? தில்லைக்கு அந்த உத்வேகம் இருந்தது, அவள் விடாமுயற்சி கொண்டு எழுந்து வந்தாள், அந்தஸ்து வந்தது. பழைய கறைகளை அது மறைத்தது. இவனோ, கறைபட்டுக் கிடக்கின்றான். இந்த உலகத்தின் எதார்த்தம் அதுதான். நாம் நிர்ணயித்திருக்கும் நெறிகள் யாவும் வாழ்க்கையில் வெற்றியோடு வாழ்வதற்கான அளவுகோள்கள் அல்ல. ஒரு மனிதனின் முனைப்பே அவனை முன்னுக்குக் கொண்டு வரும் என்ற ஆழமான அறிவுரை இக்கதையில் உள்ளது. அவன், அந்த மாற்றத்தை ஏற்க முடியாது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறான். என்னதான் பேச்சும், பின்னணியும் இருந்தாலும், முன்னேற்றப் பாதையில் பயணிக்க ஒரு திறம் வேண்டும். அந்த வகையில், தில்லையின் பாத்திரம் இக்கதைக்கே முதுகெலும்பு. அவளின் பாத்திரம் முன்னும் பின்னும் என மிகத் துல்லியமாய்ச் சொல்லப்பட்டுள்ளதால் ஒப்பிட்டுப் பார்த்துத் தெளிந்துகொள்ள நல்ல வழி அமைந்தது. எழுத்தாளர் மணி.எம்.கே மணியை நெஞ்சாரப் பாராட்டுகிறேன்.
இந்தக் கதையை நான் மூன்று பாத்திரங்களின் விழி வழியே பார்க்கிறேன். துரையைப் பொருத்தவரை, உச்சை தனக்கு மகள். இளவரசி. தனது ஆளுகையின் பிரதிபலிப்பு. ஐயரைப் பொருத்தவரை, அது ஸர்ப்பம் சூழ்ந்த புரவி. ஆபத்தை விளைவிக்க வேண்டி வந்துள்ள நாலுகால் அச்சம். முத்தண்ணனுக்கோ, உச்சையின் மீது அளவுகடந்த இணக்கம்தான். இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனாலும், அந்த இணக்கம் ஒரு காரியத்துக்கானதாகத்தான் தோன்றுகிறது. தானும் அதில் ஏறி உலா வர வேண்டும், அதன் அதி வேக ஓட்டத்தில் அது செலுத்தப்பட வேண்டும், என ஓர் ஆதிக்கத்தின் சின்னமாகவும், ஆடம்பரத்தின் அடையாளமாகவும்தான் அவன் அதைப் பார்க்கிறான். இது ஆபத்து என்று ஐயர் கூறியதை உண்மை என்று முத்தண்ணன் ஏற்கும் தருணம், துரை அதன் மீது கொலைத்தாக்குதல் நடத்தப் பணித்துவிட்டிருந்தார். அங்கே, ஆதிக்க வீழ்ச்சியிலும் கௌரவம் கெடாது வாழத் துடிக்கும் துரையின் மனப்பாங்கு வெளிப்படுகிறது.
புராணக் கதையில், கத்துருவின் சூழ்ச்சிக்குப்பின் அப்புரவி உச்சைஸ்ரவம் என்று பெயர் பெறவில்லை. அந்தப் பெயர் கொண்ட அதன் தன்மையே, அனைத்தினும் சிறப்பானதாகவும் முதன்மையானதாகவும் இருத்தலே. இந்திரனின் வாகனமாக இருந்ததால்தான் அதற்கு அந்த மதிப்பு. அதுபோல்தான், துரையின் வாகனமாக இருக்கும் வரையே “ப்ளேக்கி”-க்கும் அந்த மதிப்பு. அது முத்தண்ணனின் வாகனமாகும் பட்சத்தில் அம்மதிப்பை அது இழந்து சாதாரண குதிரையாகிறது. இன்னொரு கோணத்தில், அந்தக் குதிரையின் மீது இவன் ஏறி உலா வரும் சமயத்தில் இவன் துரைக்கு நிகராக வந்துவிடும் தோரணை எழுகிறது. இவ்விரண்டையும் சகியாத துரையின் முடிவுதான் அதைக் கொலை செய்வதென்பது. அவர் அதை ஆதிக்கத்தின் சின்னமாக மட்டும் பார்த்திருந்தால் அவரே அதைச் சுட்டிருக்கலாம். அவர், அதன் மீது மெய்யான அன்பை வைத்துவிட்டார். உடன், தனக்கான மிடுக்கையும் விட்டுத்தராதவர். தான் இன்றி இனி அது படும் மதிப்பற்ற நிலையை ஏற்காதவராய் அவர் அம்முடிவிற்கு வருகிறார். முத்தண்ணன் துரைக்குப் பணிந்து அதைக் கொன்றானா, அல்லது தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளத் தடையாக இருக்கும் துரையைக் கொன்றானா அல்லது முடிவெடுக்க முடியாத நிலையில் நிற்பவனாய்த் தன்னைத் தானே சுட்டுக் கொண்டானா என்பதுதான் கதையின் முடிவற்ற முடிவின் சாத்தியங்களாக நான் பார்க்கிறேன். இருப்பது என்னவோ ஒரு குண்டுதான்.
இது அதிகாரத்துவத்திற்கும் அடிமைத்தனத்திற்குமான வெவ்வேறு பார்வைகளைத் தருவதாகக் கருதுகிறேன். கதையில், பாத்திரங்களுக்கு இடையே நிகழும் உரையாடல், நம்மை அக்களத்தில் நிறுத்தி இரசிக்க வைக்கிறது. ஆழப்பொருள் புதைந்த நகைச்சுவையான உரையாடல்கள் பல. குறிப்பாக, முத்தண்ணனுக்கும் துரைக்குமான உரையாடல் என்னைப் பெரிதும் ஈர்த்தது. ஒட்டுமொத்தமாக, இக்கதை ஒரு நல்ல வாசிப்பனுபவம். பல திறப்புகளைத் தந்து நிறைவை நல்குகிறது.
சாவுக்குருவி என்பது ஆந்தை வகை ஒன்றினுக்குக் கிராமப்புறங்களில் வழக்கில் சொல்லப்படும் பெயர். அவற்றின் வினோதமான சத்தத்தைக், கெட்ட சகுனத்திற்கான அறிகுறி என்று பெரும்பாலும் கொள்வதே அப்பெயரிற்கான காரணம். இந்தக் கதையில் சாவுக்குருவி என்பதற்கும் கதைக்குமான தொடர்பு மிக வெளிப்படையாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்படியாயின், இதில் என்னதான் எழுத்தாளர் சொல்ல வந்துள்ளார் என்ற முடிச்சு, கதையோட்டத்தின் ஊடே நமக்கு எழுத்தாளரால் சொல்லப்பட்டுவிடுகிறது. பெரும்பான்மையான எல்லாவற்றையும் எழுத்தாளரே சொல்லிவிட்டாலும், இக்கதை பேசும் கருவும் சூழலும் மிக நிதர்சனமானது. இப்படியாகப் பல இணைகள். “மனம் கிடந்து அடிச்சிட்டே இருந்துச்சு. எழும்பி போய் எஸ்தர் பக்கத்திலயே இருந்தன். நான் வந்தது தெரிஞ்சு உடனே முழிச்சிட்டா.”- ரொஸைரோ செல்வத்திடம் சொன்ன இந்தப் பதிவிற்குப்பின் எஸ்தரின் முந்தைய வாழ்க்கை, அதாவது நோய்வாய்ப்படும் முன் இருந்த வாழ்க்கை, ரொஸைரோவுடனான காதல் என இவையாவையும் அறிந்துகொள்ள ஆவல் எழுந்தது. தொடர்ந்து கதையைப் படித்தேன். மனிதர்களால் சகிக்கவோ சுவாசிக்கவோ முடியாத அவளின் உடல்விட்டு வந்த இரத்தமும் சீழும் கலந்த வாடைதான் இறுதியில் ரொஸைரோவின் உயிர்த்தேவையாய் ஆகிவிடுகிறது. அவளின் போர்வையை விரித்து அதில் நிர்வாணமாய் படுத்து உயிர் துறக்கும் ரொஸைரோவின் காதல், என்னை என்னவெல்லாமோ செய்தது. பதினான்கு வருடமாய் இன்னதென அறியாத நோயோடு அவள் வாழ்ந்தால். அவளோடு ரொஸைரோவும் வாழ்ந்தார். உடல் இயக்கத்தில் தளர்ச்சியுற்றவர்கள் நோயாளியாகி ஒரு மூலையில் அடங்குகிறார்கள். ஆனால், உடல் வலிமையாக இருந்தும் தளர்ச்சியுற்றவரைப் பார்த்துக்கொள்ளவேண்டி பல குடும்பத்தினர் இவர்களைப் போன்று ஒரு வெளிக்குள் அடைக்கலமாகிவிடுகிறார்கள். என்னவொரு பரிதாப நிலை! ஆனால், அந்தப் பரிதாபமெல்லாம் ரொஸைரோவுக்குத் தேவையில்லை. அவர் எஸ்தரை நெஞ்சார காதலிக்கிறார். மனிதரொருவர் எந்த வேளையில் பார்க்க அசிங்கமாக இருப்பாரோ, அந்த வேளையிலும் அவர் தன் துணையால் ஆராதிக்கப்படுகிறார் எனில், அதுதான் மெய்யான காதல். ஏனெனில், அது இருமனதை இணைக்கும் காதலேயன்றி இரு உடலை இணைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டதன்று. தன்னிடம் இருக்கும் பணத்தையெல்லாம் அவளுக்காகவே செலவிடுகிறார் ரொஸைரோ. தனக்காக அவர் எதையும் செய்துகொள்ளவில்லை. எஸ்தர்தான் அவரின் தேவை. அவளின் நெருக்கம்தான் அவருக்கு ஆறுதல். இல்லையேல், அப்படியாக ஒரு பைத்தியக்காரனைப்போல் தரையை நுகர்ந்து பார்ப்பதும், இரத்தமும் சீழும் கலந்த அந்தப் போர்வைக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்ளவும் யாரால் முடியும்? எஸ்தரின் வலியைத் தன்னுடையதாக ஏற்றுக்கொண்டாலேயொழிய அது சாத்தியமன்று. அவளின் இறப்பிற்காக வீட்டிற்கு வருவோர்முன் அவள் அழகாகவும், சுத்தமாகவும், இருக்க வேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை வெகுவாக மனதை நெருடியது. தனது மனைவியின் மேல் வாடை வீசுகிறதென்றெல்லாம் யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதிலிருந்த அவரின் கவனம் கண்ணீரைத்தான் கொணர்ந்தது. அவள் தேகத்துச் சீழும் குருதியும் இவரின் தேகத்தினதாய்ப் பட்டது அவருக்கு. இந்தக் கதையின் முடிவில்தான் யார் யாரைப் பார்த்துக் கொண்டது என்ற கேள்வி எழுகிறது. நோய்வாய்ப்பட்ட அவளை இவர் பார்த்துக்கொண்டார் என்பதைவிட, தனது இருப்பால் இதுகாறும் ரொஸைரோவின் உயிரைக் காத்து வந்துள்ளால் எஸ்தர். அவளின் இன்மையால், அவர் மனத்துள் எழுந்த வெறுமைதான் அவரது எஞ்சிய நாள்களின் துணை என்பதை உணர்ந்தவர் அன்றே உயிர் துரக்கிறார். காதலுற்ற கவித்துவமான இணையின் கதை. மொழி செழித்துக் கதையை வனப்பாக்கியுள்ளது. அவளின் பெயர் சொல்லப்படாத நோய், மனதுள் ஏதேதோ அச்சத்தை ஏற்படுத்தி, அந்நோய் குறித்த பிம்பத்தை மிக ஆழமாய் நிறுவுகிறது. அதற்கு, எஸ்தரின் நிலையைக் காட்சிபடுத்திய விதம் பெரிதும் துணை நின்றுள்ளது. நம்மோடு பயணிக்கும் ஒன்று, அதன் இன்மையில்தான் அதனோடு நமக்குண்டான இணக்கத்தை உணர்த்துகிறது. அது, எதுவாயினும் சரி. மீனவத்தாயின் முன்தானை மீன்கவிச்சி மணத்தில் தூங்கிய மகனுக்குச், சலவை செய்த சுத்தமான துணி தரும் அந்நியமும் அருகாமையும்தான் எதார்த்தம். அதுபோல, இதுநாள்வரை வீட்டை முழுதாய் வியாபித்திருந்த எஸ்தரின் மணம், இனி இல்லை என்றதும் அவருக்கு இந்த உலகமே அந்நியமாய்ப்பட்டதே, அதுதான் எதார்த்தம். அந்த எதார்த்தத்தை இக்கதை வெற்றிகரமாய்ச் சொல்லியுள்ளது. அவ்வகையில், இதை ஒரு சிறந்த கதையாக நான் பார்க்கிறேன்.
இது ஒரு வித்தியாசமான கதை. ஒரு பெண், கட்டுப்பாடும் நெறிமுறைகளும் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பின்னர் தன்னந்தனியாய் ஒரு பெருநகரில், எதார்த்த உலகின் நவீன மாறுதல்களை எதிர்கொள்ளும்போது காணும் சிக்கலைப் பற்றிய கதை. அம்மா சொன்னால் சரி என்று எண்ணும் பெண்ணாக, அவள் சொல்லும் வசைகளையும் பொருட்படுத்துகிறாள், அவள் சொன்ன “உனக்கு உஷ்ண உடம்புடி” என்ற கூற்றையும் பொருட்படுத்துகிறாள். நல்ல வசதிதான். சொந்த வீடு, வேலை என்றெல்லாம் அவள் நல்ல நிலையில்தான் உள்ளாள். ஆனாலும், ஏதோவொன்று இல்லை. உடல் கேட்கும் இச்சைக்கு உணவளிக்கத் தெரியவில்லை. உஷ்ணம் மேலோங்கி நின்று, உணவு அருகிலேயே இருந்தாலும், போதிக்கப்பட்ட நெறிகள் எதிர்சுவர் அமைத்துத் தடுக்கின்றன. இப்படியே அவள் எத்தனை நாட்கள் காலத்தைக் கடப்பாள் என்றாலும் தெரியவில்லை. இப்போதே, 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. எதார்த்தம் தரும் சுதந்திரத்தில் நல்லொழுக்கம் என்று சொல்லித் தரப்பட்ட நெறிகளின் பிடியில் தன்னந்தனியாய் உணர்கிறாள். புறத்தில் எதையும் அனுபவிக்காது, அகத்துள் மட்டும், தன் உடல் அழகை மெச்சி, ஆணின் கவர்ச்சியைக் கொண்டாடி, மனதுள் காமக் களியாட்டமாடி “டோபமைன்” சுரக்கச் செய்கிறாள். மேற்கத்திய நாடுகளிலெல்லாம் உடலுறவு என்பதை உடலின் தேவையாக மட்டுமே பார்த்து வருவதால், அங்கே சரி, தப்பு, நெறிக்கு எதிரானது என்பதாகவெல்லாம் அது பெரும்பாலும் பார்க்கப்படுவதில்லை. ஆனால், நம் கலாச்சாரப் பின்னணியில் அந்தக் கட்டுப்பாடு உள்ளது. என்னதான் அங்கிருந்து நமக்குள் தாக்கம் வந்திருந்தாலும், இன்னுமே சில பிடிகளுக்குள் இருந்தே அவற்றை அணுகுகிறோம் என்ற எதார்த்தம் பேசும் கதை. தன்னளவில் சரியான வடிவில் அமைந்த தரமான கதை.
என்னவொரு கிண்டல் தொனி. அடேயப்பா!… தமிழ் நாட்டின் அரசியல் பிரச்சார கால வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாகவே காலமெல்லாம் பயணிக்கும் எதார்த்தம் பேசும் கதை. வேம்பு நல்ல மணம்தான். ஆயினும், உண்ணும்போது அது கசக்கத்தான் செய்யும். அதுபோலதான் அரசியல் வாக்குறுதிகளும், கேட்கும் போது இதமாகத்தான் இருக்கும். செயல்பாட்டில் வருமா என்றால் அது கானல் நீர் கதைதான். ஒவ்வொருமுறையும் இதோ கிடைத்துவிடும், இதோ கிடைத்துவிடும் என்று ஏமாற்று மொழி உரைப்பதும், பொய்யான நம்பிக்கையை விதைப்பதும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பதுபோல ஆகிவிட்டது. பரிதாபத்திற்குரிய ஏழை சனம், அதையும் முழு முற்றுமாய் நம்பி இன்னுமே ஏமாந்து ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறது. அட்சயாவின் அம்மா அந்த நிவாரண நிதியைப் பெற போராடும் விதம், என்னைப் பெரிதும் பாதித்தது. தன்னந்தனியாய் ஓர் இளம் பெண்ணோடு வாழும் அவளுக்கு, இன்னதென சொல்ல வாழ்க்கை என்னவாக இருக்கிறது? போராட்டமும், ஏழ்மையும் சேர்ந்த விளிம்பு நிலை வாழ்க்கையை வாழும் அவளுக்கு, அந்த நிவாரண நிதிதான் எத்துணைப் பெரிய தேவையாக இருக்கிறது. அதைக் கொண்டு செயல்படுத்த வேண்டிய திட்டங்களை அவள் குறிப்பிடும் தருணத்தில் நான் நொடிந்து போனேன். அவளின் தேவையை விளங்கிக்கொள்ளாது அலட்சியமாய்ச் செயல்படும் கட்சிக்காரர்களை என்னவாக மதிப்பிடுவது? ஒவ்வொருமுறையும் ஏற்பாட்டில் மட்டும் உலாவரும் நிவாரண நிதி திட்டம் செயல்பாட்டில் வருவது எப்போது? இந்த உண்மை அறியாத பலரும், இந்த அம்மாவையும் அட்சயாவையும் போல எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இவர்களுக்கு விடியல்தான் எப்போது? இவர்களால் உருவாகக் கூடிய விடியலை எண்ணி கருத்தோடு செயல்படும் திறத்தை இவர்கள் வளர்த்துக்கொள்வதுதான் எப்போது? ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆண்டுகள் கடந்த நிவாரண நிதிக்கும், துயரம் நேர்ந்த அந்தக் காலக்கட்டத்தில் கிடைக்கும் நிவாரண நிதிக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எது அவசியம் என்றறிந்து செயல்படும் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். வீண் சொற்களைக் கேட்டு மயங்கி விடாது இருந்தால் மட்டுமே, நாளைய தலையெழுத்து மாறுவதற்கு வழியுண்டு. அந்தத் தாயின் வலி நெஞ்சைக் உலுக்கிவிட்டது. அதற்கு மொழியும் பக்கபலமாய் நின்று கதையோடு நம்மைக் கட்டிப்போட்டுவிட்டது.
என்னைப் பெரிதும் பாதித்த கதை. வசதியில் நிகரற்றவராய் வாழும் செந்தட்டைக்கு ரெண்டாந்தாரமாக வாக்கப்படுகிறாள் ஆவடையம்மாள். அதுவும் எப்படி…? யாருக்கோ கல்யாணம் பேசி முடிக்கப் போய் இவர் பாட்டுக்கு எல்லோர் முன்னும், “எனக்கு அவளைப் பிடித்திருக்கு” என்று சொல்ல, ஆவடையம்மாளும் அவரது வில்லுவண்டியின் வசதியைப் பார்த்து வண்டி ஏறுகிறாள். அங்கிருந்து தொடங்கிய அவ்விணையின் காதல் பயணம் சிறப்பானதாகவே இருந்தது. பெரியசாமி என்றொரு மகன். மூப்பெய்திய அவ்விணை தனியாக வசித்தனர். ஏழ்மை சூழ்ந்துகொண்ட காலம். செந்தட்டைக்கு அவளைக் காட்டிலும் கூடுதல் மூப்பு. மூக்குப்பொடியே வலிமை தந்துதவுகிறது. ஆயினும், செல்ல மனைவியைக் கண்ணில் வைத்துக் காத்து வந்தார். அவளுக்கோ, உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. பணிவிடை எல்லாம் அவர்தான். ஒருநாள், கல்யாணத்துக்குப் போகும் அவசரத்தில் தாயின் உடல்நிலை குறித்து அக்கறையின்றி பேசும் பெரியசாமி, மோட்டாரை விட்டு இறங்கவுமில்லை. அதுசரி. எப்படி இறங்குவான்? பின்னே அமர்ந்திருக்கும் மனைவி இறங்கினால்தானே இவன் இறங்க. விசை அவளிடம் என்பது அங்கேயே தெரிந்துவிடுகிறது. சரி, அப்படியென்றால், எல்லா மருமகளும் அப்படியா? இல்லையே! நாலு வீடு தள்ளியுள்ள சரசுக்கிழவி மருமகளுக்குத் தலையில் பேணெல்லாம் பார்த்து விடுமளவுக்கு அந்நியோன்யம் இருக்கின்றதே என்ற முரணையும் காட்டி, ஒரு சில வீடுகளிலே அவ்வாறு நிகழ்கின்றது என்பதையும் எழுத்தாளரே காட்டிவிடுகிறார். உண்மையைச் சொல்லப்போனால், நோயாளியைக் காட்டிலும் பராமரிப்பவருக்கே அலுப்பு அதிகம். செந்தட்டை, மூப்பின் காரணமாகவும், ஏழ்மையின் காரணமாகவும் கையறு நிலையில் நிற்கிறார். என்ன செய்வதென்று அவருக்கே தெரியாத சமயத்தில்தான், ஆத்தோரம் ஆவடையம்மாளை அப்படியே விட்டுவிட்டு ஊர் திரும்புகிறார். கண்கள் கலங்கிய தருணமது. அது, அவர் விரும்பி எடுத்த முடிவல்ல. வேறு வழியின்றி எடுத்த முடிவு. ஆசை மனைவி தன் கண்முன் படும் துன்பத்தைச் சகியாதவராக, உடலின் வலுவும் உறவுகளின் ஒத்துழைப்பும் அற்றுப் போன நிர்கதியாய் மனதை இறுக்கிக் கொண்டு “முடியலம்மா” என்று அவர் சொன்ன அந்த ஒற்றைச் சொல்தான் கதையின் ஒட்டுமொத்த திருப்பம். கதையின் வலுவாக நான் பார்க்கும் இன்னொன்று, மிக எதார்த்தமான தென்மதுரை வட்டார வழக்கு. எழுத்தில் கண்ணியம் என்றெல்லாம் பொய்யைப் படைக்காது, அப்படியே சொல்லியிருக்கும் விதம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. அவ்வாறான உரையாடல்களே நெஞ்சோடு ஒட்டுகின்றன. பேச்சு வழக்காயின், அதன் அசல் தன்மை மாறாது, பயின்றுவந்த சொற்களும் திரியாது இருத்தலே தரம். அதை இலக்கணப்படுத்தி ஒழுங்குபடுத்துதல் எனக்கு ஏனோ வாசிப்பில் உவப்பைத் தருவதில்லை. அந்த வகையில், இக்கதை என்னைத் திருப்திபடுத்தி வாசிப்பில் நல்லதொரு நிறைவைத் தந்தது.
யாருக்காகப் பேசுவது? எதை நியாயப்படுத்துவது? அவரவர் நிலையில் அவரவருக்கான நியாயம் இக்கதையில் இருக்கவே செய்கிறது. ஆனாலும், இது பல குடும்பங்களில் நிகழும் பெரிதும் பேசப்படாத ஒரு போராட்டம். பல குடும்பத்தினர் இதனை மௌனமாய்க் கடந்து போய் விடுகின்றனர். இதைப்பற்றி பேச முற்படும் சில தம்பதியர்களோ பிரச்சனையில் பிரிந்து செல்கின்றனர். இதை எப்படித்தான் கையாள்வது? தனவள்ளி சமுத்திரத்தின்பால் மட்டற்ற காதல் கொண்டு தன்னை உளமார அவனிடம் ஒப்படைத்துவிட்டு வாழ்கிறாள். சாதி பாகுபாடு என்ற வறட்டு கௌரவத்தின் பிடியில் சிக்குண்ட அவளின் அப்பாவோ ஆள் வைத்து அவனைக் கொலை செய்துவிடுகிறார். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட தனவள்ளி பித்துப்பிடித்தாற்போல் ஆகிறாள். குடும்பமே சுக்குநூறாய் உடைந்து பெற்றோர் இருவரும் செத்தும் போகின்றனர். நிராதரவாய் நின்ற அவள் ஒரு வன்புணர்ச்சியில் சிக்குண்டிருப்பதைக் கண்டு அவளைக் காப்பாற்றி மரியதாஸ் அடைக்கலம் தருகிறான். தனது பசியையும் புறந்தள்ளிவிட்டு அவளுக்குப் புதுப்புடைவை வாங்கித் தருவதென என்னவெல்லாமோ செய்கிறான். இவனுக்கான இலக்கு என்றோ, குறிக்கோள் என்றோ எதுவும் இல்லை. தான் அடைக்கலம் தந்தவளைக் கடைசிவரை வைத்துக் காப்பாற்றலாம் என முடிவு செய்து தாலியும் கட்டுகிறான். அதெல்லாம் சரி. அவளோடு வாழ்ந்தானா? அதுதான் கேள்வியே. பல தம்பதிகள் இன்று ஒரு நிர்பந்தத்தின் பேரில் திருமணம் செய்துகொண்டு மனதில் வேறு யாரையோ அல்லது யாரும் இல்லாது உற்ற துணையையும் ஏற்காது பிறரின் திருப்திக்காய் வாழ்கிறார்கள். இது சரியா என்ற விவாதம் இங்கே வேண்டாம். அவர்களின் மனச்சூட்டை உள்வாங்குவதே முக்கியம். சின்ன சின்ன விடயங்களில்கூட சமுத்திரத்தின் நினைவே அவளுக்குள் தொடர்ந்து வருகிறது. தாலி, மீன் குழம்பின் நுரை என எல்லாவற்றையும் அவனோடு தொடர்புபடுத்தி வாழும் தனவள்ளியால் எப்படி மரியதாஸோடு வாழ முடியும்? அடைக்கலம் தந்தவன் என்பதற்காக அவளுக்கான மனதைக் கொன்று புதைத்துவிட்டு நன்றியுணர்வு பாராட்டி வாழ்தல் ஒரு வாழ்க்கையா? மரியதாஸின் நிலையோ பரிதாபத்திற்குரியது. அவளிடத்தில் ஒரு கணவனாக அவன் கொள்ளும் எதிர்பார்ப்பு கதையில் தெளிவாய்ச் சொல்லப்பட்டுள்ளது. அதைத் தவிர வேறு எதையுமே அவன் தனக்காகவென்று கேட்கவில்லை. ஆயினும், அந்த ஒரு எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. நோய் வாய்ப்பட்டு நொந்துக் கொண்டிருக்கிறான். எந்தப் புள்ளியிலேனும் அவன் அவனுக்காக வாழ்ந்தானா என்று மீண்டும் கதையில் தேடிப் பார்த்தேன். இல்லை. அவன் மேல் எனக்குப் பரிதாப உணர்வுதான் எழுந்தது. மனதை இறுக்கிக்கொண்டேனும் அவள் அவனோடு வாழலாமே என்ற எண்ணம் ஒரு மின்னல் வேகத்தில் வந்துவிட்டு மறைந்தது. ‘தன் முட்டிக்கால்களில் சுரக்கும் கொழுப்பும், தன் விதைப்பையில் ஊறும் விந்துவும்தான் இப்படி சளியாகி, இருமல் வழியே வெளியேறி தன்னை பலவீனமாக்கிக் கொண்டிருக்கிறதோ என்று நினைத்தான்.’- இந்தக் கூற்றின்வழி அவன் தன்னை ஒரு கையாலாகதவன் என்றே மதிப்பிட்டு வைத்துள்ளான் என்பது புலப்படுகிறது. அவனுக்கான எதிர்பார்ப்பு அவனுக்கு. அதைத் தவிர்ப்பதற்கு அவளுக்கான காரணம் அவளுக்கு. வாழ்தலின் அர்த்தம் எதற்குத்தான் என்று தேடித் தேடி காலம் கடந்து கொண்டிருக்க, இனியும் அங்கிருந்து தனக்கும் மகிழ்ச்சியின்றி, மரியதாஸையும் மகிழ்ச்சிப்படுத்த முடியாத தனது நிலையை ஏற்றவளாய் அவள் கிளம்புகிறாள். இதில், அவனுக்குப் பெரிதாய் எந்த இழப்பும் கிடையாது. அதே தனிமைதான் இப்போதும். சளியை முகத்தில் பூசிக்கொள்ள எத்தனிக்கும் அவன் மனம்தான், எத்துணை வலிகளின் தொகுப்பாக நம்முள்ளும் அவன் வலியை விதைத்துச் செல்கிறது. மௌனன் யாத்ரீகாவின் பலமாக இக்கதையில் அதன் வைப்புமுறையை நான் சுட்ட விரும்புகிறேன். தொய்வில்லாத வாசிப்பை இக்கதை தருகிறது. இப்படி இருக்குமோ என்று ஓர் அனுமானத்தில் வாசித்தால், எதிர்பாரா முடிச்சுகள் பல அவிழ்ந்து, கதையின் நகர்தலில் நம்மையும் எங்கோ நகர்த்திவிடுகிறது. இரு மனங்களின் இருப்பையும் கதையில் வெற்றிகரமாய்ச் சொல்லி தன் எழுத்தால் கவர்கிறார் மௌனன் யாத்ரீகா.
நிறைவாக, மேற்குறிப்பிட்ட பத்துச் சிறுகதைகளுமே வாழ்க்கையெனும் பெரும்புத்தகத்தின் பக்கங்களுள் சில. புனைவுக்கான சிறப்பே அதுதான். வாழ்ந்து உணரக்கூடிய ஒன்றை நம்மால் வாசித்தும் உணர முடிகிறது. இந்தக் கதைகள் பேசும் களங்கள் யாவும் வேறுபட்டு அமைந்திருப்பதால் அவை வாசிப்பில் நல்லதொரு ஈர்ப்பை ஏற்படுத்திவிடுகின்றன. இந்த 44 கதைகளுள் சுரேஷ் பிரதீப்பின் ரக்த மணம், குமார நந்தனின் வல்லூறின் நிழல் என்ற இரண்டு சிறுகதைகளும் ஏனோ என்னைப் பெரிதாய் ஈர்க்கவில்லை. அவற்றுள் ஏதோவோர் அடர்த்தியின்மையை உணர்ந்தேன். கதைகள் பேசும் கருவிற்கு இன்னுமே வலு சேர்த்திருக்கலாமோ என்று தோன்றியது. மற்ற கதைகள் யாவும் நல்ல தரத்தோடு அமைந்திருந்தாலும், மொழியாலும், வைப்புமுறையாலும், புனைவாலும் என்னைப் பெரிதும் ஈர்த்தக் கதைகளாக இப்பத்துக் கதைகளையுமே கருதுகிறேன். மூலத்தைத் தேடிப் படியுங்கள், உங்களுக்கான திறப்பு வேறானதாகக் கூட இருக்கலாம்.
குறிப்பு: தலைப்புகளின் சிறுகதைகளின் இணைப்பு உள்ளது.
சிறப்பான பதிவு