வெண்முரசு: ஒரு தன்னுரை

IMG-20200829-WA00162013 இறுதி. ஒருநாள் ஆசிரியர் ஜெயமோகன் அழைத்திருந்தார். வியாச பாரதத்தை, அந்தக் களத்தைத் தனது தேடல் வெளியாகக் கொண்டு, வெண்முரசு எனும் தலைப்பில் பெரும்புனைவாக எழுதப் போவதாகக் கூறினார். எனக்கு அது ஆச்சரியம் அளிக்கும் விஷயம் இல்லை. காரணம் வெளியே அறிவிக்கும் முன்பே வேறொரு நிகழ்வின் பொருட்டு அவர் மகாபாரதத்தை எழுதத் துவங்கிவிட்டார். துரியோதனன் பிறப்பு வருகையில் அந்த நிகழ்வு கைவிடப்பட, அந்தத் துவக்கம் அங்கே வரை வந்து நின்றது. தயாரிப்பு நிறுவனத்துடன் சம்பந்தம் கொண்ட பிரதி ஆகவே, அது பொதுவில் வாசிக்கக் கிடைக்காது. பிரதி சீரமை நோக்கும் பணி எனக்கு என்பதால், நான் மட்டும் அதன் ஒரே வாசகன். இந்தப் பின்புலத்தில் இந்த மனிதன் இங்கே நின்றுவிடும் மனிதன் அல்ல என்பதை நானறிவேன்.

காரணம் பாரதப் பெருவெளியைத் தனது தேடல் களமாகக் கொள்ளவேண்டும் என்பது, குரு நித்யாவின் மாணவர் எனும் நிறையில் ஒருவராக ஜெயமோகனின் நெடுநாள் கனவு. நாராயண குரு எனும் இயக்கம் என்ற தலைப்பில் தனது குரு வரிசையின் செயற்களத்தை ஜெயமோகன் விரிவாக எழுதி இருக்கிறார். இந்த குரு மரபில் பகவத் கீதை வகிக்கும் இடம் வாசகன் தனியே பயில வேண்டிய களம். அந்த வரிசையில் வரும் ஜெயமோகன் பகவத் கீதையை அதன் ஒட்டு மொத்த பின்புலத்துடன்  எங்கணம் தனது போதத்துக்குள் கொண்டு வந்து விசாரித்தார் என்பதன் இலக்கிய சாட்சியமே கிருஷ்ணன் எனும் மகத்தான இந்திய மர்மத்தை மையம் கொண்ட வெண்முரசு எனும் பெரும்புனைவு.

இந்திய சமூக மறுமலர்ச்சித் தொடங்கி, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியைத் தொடங்கி வைத்த பாரதி வரை, பகவத் கீதையின் பாரதக் கதைகள் தாக்கம் யாவரும் அறிந்ததே. பாரதிக்குப் பிறகு தீவிரத் தமிழ் இலக்கியம் மரபுடனான தொடர்பை விசாரணையே இன்றி துண்டித்துக் கொண்டது. இந்தப் போக்கை விமர்சனப் பூர்வமாக அணுகி தனது புனைவுலகு வழியே, ஜெயமோகன் மரபினை மறுவிசாரணை செய்தார். பின் தொடரும் நிழலின் குரல் நாவலே மகாபாரதத்தின் நவீன வடிவம்தான். குருஷேத்ரமோ ஈழமோ இந்தப் பலிகளுக்கு என்ன பொருள் என்று போரைத் திரும்பி நின்று கண்ட ஒரு மனம், வரலாறு நெடுக நீளும் காலாதீதம் கொண்ட வினா.

பத்ம வியூகம் கதை எழுப்பிய அந்த வினா ஈழ சூழலில் அன்று எழுப்பிய அதிர்வுகள், இலக்கிய வரலாறு. என்றுமுள்ள தகிக்கும் வினாக்கள் விரவிய களம் வியாச பாரதம். வெவ்வேறு தருணங்களில் சிறு சிறு கதைகளாகவும், நாடகமாகவும், பாரதத்தின் குறிப்பிட்ட தருணங்களை எழுதிப் பார்த்திருந்த ஜெயமோகன், முதல் சொன்ன துரியோதனன் பிறப்பு வரை வந்து நின்று போன முயற்சிக்குப் பிறகு, இனி எதன் பொருட்டும் அல்ல, தனது தேடலின் பொருட்டு மட்டுமே பாரதத்தை எழுதி முடிப்பது என்று வீறு கொண்டு எழுந்தார். மகள் சைதன்யாவுக்காக எழுத முடிவு செய்தார். அன்றுதான் என்னை அழைத்திருந்தார்.

இது எதிர்காலத்தில் என்ன வரவேற்பு பெறும், இது என்ன தாக்கம் விளைவிக்கும் என்றெல்லாம் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. பத்து வருடம், தொடர்ந்து தினமும் எழுதி நிறைவு செய்வேன். அதுவே என் இலக்கு. உங்களைப் போன்ற மிகச் சில நண்பர்களிடம் மட்டும் நான் கேட்பது ஒன்றுண்டு. எந்தக் காரணம் கொண்டும் இடை வெட்டி நிறுத்தாதீர்கள். தினமும் வாசியுங்கள். நீங்கள் உட்பட ஒரு பத்து பேர் போதும். நீங்கள் தினமும் வாசிக்கிறீர்கள் எனும் உத்வேகம் போதும். இதை எழுதி நிறைவு செய்து விடுவேன். எனவே தினமும் வாசியுங்கள் என்றார். இப்படியாக நான் நிறைவேற்ற வேண்டிய ஒரு வாக்காக வெண்முரசு எனும் வாசிப்பின்பம் என்னை வந்து சேர்ந்தது.

சுதந்திரத்துக்குப் பிறகான கல்வி அமைப்பு நவீனம், அறிவியல்பூர்வம் என்ற இலக்கில் இந்திய மரபுச் செல்வம் மீது பாராமுகம் காட்டினாலும், பாரதக் கதை கேட்டு வளராத இந்தியக் குழந்தைகளே இல்லை எனும் வகையில்,  குழந்தைகளுக்கு வியாச பாரதத்தை காமிக்ஸ் வடிவில் கொண்டு சேர்த்தவர் ஆனந்த் பய். தொலைக்காட்சி புரட்சி துவங்கியபோது இல்லம் தோறும் பாரதக் கதையைக் கொண்டு சேர்த்தார் பி ஆர் சோப்ரா. இது இரண்டையும் வாசித்துக் கண்டு வளர்ந்தவன் நான். எனது கூட்டுக் குடும்ப தலைவர் என் தாத்தா, தீவிர தி க. (பின்னர் தனது மகள் ஒருவரின் வாழ்வு தடுமாறியபோது “நா பண்ண தப்புக்கு எம் புள்ளய தண்டிச்சிட்டியே முருகா” என்று கதறியவர்) குடும்ப உறுப்பினருக்கு தி க ஞானஸ்நானம் செய்த பெயர்தான். சித்தப்பா இருவருக்கும் தமிழரசன் ராவணன் எனும் பெயர் இறுதிவரை நீடிக்க என் அப்பா மட்டும் லிங்க ராஜ் என மாறிவிட்டார். அப்பாவின் அம்மா போடிநாயக்கனூர்காரி. எழுத்தறிவற்றவர். ஆனால் நாட்டுப்புறத்தில் புழங்கும் மகாபாரதக் கதைகள் மொத்தமும் அறிந்தவர். தாத்தா பெயர் தர்ம ராஜ். அந்த தரும ராசாவே வந்து தன்னைப் பெண் கெட்டிக் கூட்டிச் சென்ற நினைப்பில் வாழ்ந்தார். கணவர் பெயரைச் சொல்ல மாட்டார். கணவன் பெயரை மனைவி சொன்னால் பதி பக்தியில் இழுக்கு நேரும் என்பது அவர்கள் கால நம்பிக்கை. ஒரு முறை அரிசி அட்டை கொடுக்கும் ஊழியர் குடும்ப உறுப்பினர் சரிபார்க்க வீடு வந்தார். பாட்டி வசம் உங்க வீட்டுக்காரர் பெயர் என்ன என்று அவர் வினவ, பாட்டி சொன்ன பதில்

“பஞ்சபாண்டவஹல மூத்தவுஹ”

இப்படி ஒரு பெயரா. திடுக்கிட்டுப் போனார் ஊழியர்.

தர்மரின் கதையை, தான் உடல் நலம் குன்றி, படுக்கையில் இருக்கையில் (அன்றெல்லாம் காசநோய்க்கு மருத்துவம் அரிது. புதுமை பித்தன் போல இருமி இருமி சாக வேண்டியதுதான்) அப்பா பாட்டி வசம் கதையாகக் கேட்டார். அவ்வாறே பிற பாரதக் கதைகளும் அவரை வந்து சேர்ந்தன. நெல்லையை விட்டு அப்பா தொழிலுக்காகக் கடலூர் வந்தார். கடும் உழைப்பில் நகரும் வாரத்தில், ஞாயிறு மட்டும் அரைநாள் விடுமுறை. அன்றிரவு குடும்பம் மொத்தமும் கதைபேசியபடியே இரவு உணவு உண்போம். முட்டை போல பொரித்த அப்பளத்தைச் சற்றே ஓட்டைப் போட்டு, உள்ளே ரசம் சோறு நிரப்பி, தங்கைக்குத் தருவார் அப்பா. என் இரண்டு கையைக் குவிக்கச் செய்து பெரிய கவளமாக உணவைப் போடுவார்.  உண்டபடியே கதை கேட்போம். எல்லாமே பாரதக் கதைதான். வரங்களால் உயரந்தெழும் மாமனிதர்கள் சாபங்களால் சரியும் கதைகள். சொன்ன சொல்லின் பொருட்டு உயிரையும் அதற்கு அளிக்கத் துணிந்து நிற்கும் ஆளுமைகள். எத்தனை எத்தனை மனிதர்களின் கதைகள். கதைகள் ஒன்றினில் சகுனியின் அப்பா பீஷ்மரால் பழிவாங்கப் பட்டவர். சகுனிக்குத் துரியோதனன் போல நூறு சகோதரர்கள் உண்டு. நூறு பேரையும் சிறையில் இட்டு வதைக்கிறார் பீஷ்மர். எல்லா சகோதரர்களுக்கும் ஒரு நாளுக்கு ஒரு பருக்கை சோறு மட்டுமே அளிக்கிறார். நூறு பருக்கை சேர்ந்தால் ஒரு பிடி. சகோதரர்கள் அனைவரும் பிடி சோற்றைச் சகுனிக்குத் தந்து அவனைப் பாதுகாத்து, தான் இறந்து அவனைத் தப்புவிக்கிறார்கள். தந்தை இறந்த பிறகு அவரது தொடை எலும்பில் சதுரங்க எண் பாய்ச்சிகை செய்து கொள்கிறான் சகுனி. அதில் அவன் தந்தையின் உயிர் ஆவாகனம் கொண்டிருக்கிறது. சகுனி சொன்னபடி அது கேட்கும். சகுனி சொன்ன எண் அப்படியே விழும். பீஷ்மரால் தவிர்க்க இயலா சந்தர்ப்பம் வழியே சகுனி பீஷ்மரின் குடிக்குள் நுழைகிறான். பீஷ்மர் கண் முன்னால், அவர் பற்றுக் கொண்ட அனைவரையும் கொலை களம் அனுப்புகிறான்.

பகையாளர் குடியை உறவாடிக் கெடு எனும் சொல்லுக்கு விளக்கம் என இப்படி ஒருunnamed கதை எழுந்து வரும். வாரா வாரம் வித விதமான கதைகள் கர்ணனின் கதை, சகாதேவன் கதை, பாஞ்சாலி கதை, குந்தி கதை, அனைத்துக்கும் மேலாக பீமனின், கிருஷ்ணனின் கதை. கதைகள் சொன்ன அப்பா, எதோ ஒரு தருணத்தில், இந்தப் புரிந்து கொள்ள இயலா மர்மங்கள் கொண்ட மனிதர்கள் வாழ்க்கை மத்தியில் என்னைத் தனியே விடுத்து மறைந்து போனார். புரிந்து கொள்ள இயலா இந்த வாழ்வின் மீது ஒளி பாய்ச்சியது இலக்கியம். இலக்கியம் இந்த வாழ்வை அறிவதற்கான வழிமுறைகளில் ஒன்று என்ற போதத்தை எனக்குள் விதைத்தவர் ஜெயகாந்தன். அவரில் தொடங்கியே நான் ஜெயமோகனை அவர்  வழியே விஷ்ணுபுரத்தைத் தொடர்ந்து வெண்முரசுவரை வந்தடைந்தேன்.

வெண்முரசு எனும் நிகழ்வு துவங்கும் முன் அது இலக்கியக் களத்தில் என்னென்னென்ன விதமான எதிர்வினைகளை எதிர்கொண்டது என்பதை எண்ணிப்பார்க்க இக்கணம் சரியான தருணம் என நினைக்கிறேன். நவீன தமிழ் இலக்கியகர்த்தாக்கள் ஒரு செயல் திட்டம் போலவே, மரபு சார்ந்த எந்த ஒன்றும் தங்களது புனைவுக் களத்துக்குள் விசாரணைக்கு வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் அது உருவாக்கிய விமர்சனக் கொந்தளிப்பில் அதைக் காணலாம். இன்றும் நிலவரம் பெரிதாக மாறிவிடவில்லை. வெண்முரசு பெரிய அளவில் சென்று சேர விரும்பிய நண்பர்கள், அதற்கொரு பிரமோ வீடியோ உருவாக்க முடிவு செய்தனர். அந்தப் பணியில் சிலரைப் படம் பிடிக்க நானும் அணுகினேன்.

பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஜெயமோகனின் நெருங்கிய நண்பரும் கூட, இந்த பிரமோவுக்கு வெண்முரசு சார்ந்து உங்கள் வாழ்த்து இருப்பின் வீடியோவில் தெரிவிக்கக் கேட்டேன். தனிப்பட்ட உரையாடலாக மிகக் கடுமையான வார்த்தைகளில் இந்த வெண்முரசு எனும் முயற்சியை மறுதலித்தார். கண்டித்தார். ஐம்பதாண்டு பகுத்தறிவு உருவாக்கிய சமூக நீதியை மீண்டும் பிராமணீயம் உண்டு செறிக்க வழிவகை செய்யும் முயற்சி இது என்பது அவர் தரப்பு. இருப்பினும் இந்தச் செயல்பாடு இலக்கிய ஜனநாயகம் எனும் முறையில் ஆதரித்து பிரமோவில் பங்கேற்றார். ஜெயமோகனின் நண்பரும் எழுத்தாளருமான பவா செல்லத்துரை இதே நிலையில் இருந்தாலும், ப்ரமோவில் பங்கு கொள்ளாமல் நழுவினார். அசோகமித்திரன் கூட நா.மு போலத்தான். ஜனநாயக தன்மையுடன் இதை ஆதரித்தார். தனியே கேட்டிருந்தால் என்னாத்த அத போட்டுக்கிட்டு திரும்ப எழுதிக்கிட்டு என்றுதான் பதில் சொல்லி இருப்பார். தமிழின் முக்கியமான கவிஞர் (கொற்றவை பின் தொடரும் நிழலின் குரல் இரண்டும் இவருக்கு விருப்பமானது) தனி உரையாடலில் இந்துத்துவத்தை அடி வருடும் முயற்சி இது என்றார். மற்றொரு முக்கிய எழுத்தாளர் நவீன தமிழ் இலக்கியம் அடைந்தது எல்லாம் வீணாகும் வகையில், சூழலை ஒரு நூறு வருடம் பின்னோக்கி இழுக்கிறார் ஜெ என்றார். நான் வெகு இயல்பாக “சரி சார் அதுக்கு எதிரா நீங்க ஒரு நாவல் எழுதி, சூழலை இருநூறு வருஷம் முன்னாடி இழுத்துட்டு போய்டுங்க அவ்ளோதானே சிம்பிள்” என்று சொல்ல கடுமையாக மனம் புண்பட்டு சில வருடம் பேசாமல் இருந்தார். கிட்டத்தட்ட மன்னிப்புக் கேட்டு சமாதானம் ஆனேன். பி.ஏ கிருஷ்ணன், அ. முத்துலிங்கம், இந்திரா பார்த்தசாரதி உள்ளிட்ட மிக சில எழுத்தாளர்கள் தவிர பிறர், மேற்சொன்ன மனநிலையும் கருத்தும் கொண்டவர்களாகவே வெண்முரசு எனும் நிகழ்வை எதிர்கொண்டார்கள்.

ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டையே புனைவாக   மறுஉருவாக்கம் செய்த வெண்முரசு எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போதே அதை அத்யாயம் தோறும் நுட்பமாக அணுகி வாசித்த சான்றாகப் பல்லாயிரம் சிறந்த கடிதங்கள் வந்தன. வந்து கொண்டும் இருக்கும் அக்கடிதங்களுக்காக மட்டுமே தனியே ஒரு தளம் இயங்குகிறது. வெண்முரசு வாசிப்புச் சாத்தியங்கள் சார்ந்து அறிந்து கொள்ள இன்று அது முக்கியத் தளம். வெண்முரசு எப்படியெல்லாம் வாசிக்கப்படக் கூடாது என்பதற்குச் சான்றாகவும் சில கட்டுரைகள் வேறு தளங்களில் வெளியாகின. சுனில் கிருஷ்ணன் போன்ற சில இளம் எழுத்தாளர்கள் தவிர, முந்திய தலைமுறை எழுத்தாளர்கள் எவரும் வெண்முரசு குறித்து எழுதவில்லை. வாசிக்கிறார்கள் என்பதன் சுவடும் இல்லை. நானறிந்து வெண்முரசு நாவல் நிறை முழுமையும் படித்த ஒரே எழுத்தாளர் பாவண்ணன்.

முன்பு ஒரு காலத்தில் ஒரு நாவல் வெளியானதும், அது குறித்த சூழலில் நிலைபெறும் முதல் உரையாடலை முன்னெடுப்பவர்களாக சக எழுத்தாளர்களே இருந்தார்கள். அதாவது சுந்தர ராமசாமி காலத்தில். அந்த உரையாடலுக்குப் பிறகு உடன் நிகழ்வாக விமர்சன உரையாடலும், வாசகர் வாசிப்பும் நிகழும். இந்த நிகழ்வுக்குப் பிறகே ஒரு புனைவு சார்ந்து சூழலில் ஒரு மதிப்பீடு திரண்டு வரும். அந்த மதிப்பீட்டை ஊடறுக்கும் கோவை ஞானி போன்றவர்களின் விமர்சனங்கள் நிகழும். இத்தகு செயல்பங்கு இந்த 2020 இல் வழக்கொழிந்துபோனது என்றே சொல்லவேண்டும். நவீன இலக்கியத்தின் ரசனை விமர்சனத்தைத் தனது பரிந்துரைகள் வழியே க.நா.சு விரிவாக்கினார். சு.ரா, தேவதச்சன் போன்ற பல படைப்பாளிகள் உரையாடல் வெளியை நிகழ்த்தும் முதல் மையமாகத் திகழ்ந்தார்கள்.

பொதுவாகக் கேரளம், வங்கம், கர்நாடகம் போல தமிழ் நிலம் வளமான யதார்த்த இலக்கியம் கொண்டதில்லை. தகழியம் காரத்தும் கோலோச்சிய சூழலில் நமக்குக் கிடைத்தது கல்கியும் அகிலனும்தான். கன்னடத்தில் ‘அழிந்த பிறகு’ போலவோ, மலையாளத்தின் ‘காசாக்கின் இதிகாசம்’ போலவோ ஒரு வலிமையான நவீனத்துவப் புனைவு உருவாக்கியதில் தமிழ் நவீன இலக்கியம். சோகையான இந்த நவீனத்துவம் பிறகான அடுத்த ஒரு பத்துப் பதினைந்து  ஆண்டுகள் கட்டுடைத்தல் போன்ற விமர்சன போக்குகளும் பின்நவீன மொழுக்கட்டை பிரதிகளும் நின்று சாமியாடின. இன்று தமிழில் நிகழ்ந்து ஓய்ந்த அந்தப் பின்நவீனம் எனும் மியூசியத்தில் வைப்பதற்குக் கூட எந்த ஸ்பெஸிமனும் எஞ்சி இருக்கவில்லை. ‘ஜிரோ டிகிரி’யைத் தவிர ஒரே ஒரு பிரதி கூட இன்று அச்சிலோ வாசிப்பிலோ இல்லை. நாகார்ஜுனன் பூர்ணச்சந்திரன் தமிழவன் பிரேம் ரமேஷ் எம்ஜி சுரேஷ் இவர்கள் ஆக்கங்கள், இவர்கள் வைத்துக் குட்டிக்கரணம் போட்டுக் காட்டிய கோட்பாட்டு விமர்சனக் கழிகள் எல்லாம் எங்கே போயின?  ஆலன் சோக்கால் உலகளவில் இந்த பின்நவீன டப்பாங்குத்து எல்லாம் வெத்து வேட்டு என்று நிறுவிய பிறகும், தமிழில் மட்டும் அந்த அசட்டுத்தனம் அப்படியேதான் இன்னும் தொடர்கிறது.

தமிழ் நிலத்துக்குச் சொந்தமான மெய்யியல் ஒன்றின் வேரைத் தேடிப் பயணம் செய்த கொற்றவை போல இந்தியப் பண்பாட்டின் சாரமான மெய்மையின் வேர்களை நோக்கிப் பயணிப்பது வெண்முரசு. பின் நவீனம் பேசும் மையத்தை மறுத்தல், விளிம்புகளை அங்கீகரித்தல், பன்மைத்துவத்தை அதன் இயங்கியலை அங்கீகரித்தல் இவை பெருங்கதையாடல் மரபிலும் உண்டு. பௌத்தமும் வேதாந்தமும்தான் அது. இயற்பியல் முதற்கொண்டு தியரி ஆப் எவ்ரிதிங் எனும் இலக்கில் பெருங்கதையாடலின் இயங்கியலின் மறுமுனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெண்முரசு இந்த இயங்கியலின் அடுத்த படி. விஷ்ணுபுரம் தமிழின் அதுவரை எனும் நிலையை உடைத்த அடுத்த படி. விஷ்ணுபுரம் அடுத்த படி என்று அறிய வர சூழலுக்குப் பத்துவருடம் தேவையாக இருந்தது. நவீனம், பின்நவீனம் எனும் தத்துவங்கள் அழகியல்கள் தமிழில் கொண்டு வந்து சேர்த்தவற்றின் காலம் இங்கே முடிகிறது. வெண்முரசு இவற்றின் அடுத்தபடி.

இவை போக வெண்முரசு நிகழ்வு எனும் சமகால சூழலின் மிக முக்கிய அலகு இந்துத்துவர்கள். இந்துத்துவர்  ஒருவரின் பதிவு இவ்வாறு முடிந்தது. இளம் தலைமுறை இதுதான் மகாபாரதம் என்று மயங்கி விடும் ஆபத்து உண்டு. அவர்கள்  மூல மகாபாரதத்தை வாசிப்பதே சிறந்தது. இளைஞர்களைக் கெடுக்கிறார் என்று சாக்ரடிஸ் மீது விழுந்த அதே குற்றச்சாட்டு. இந்த மூலநூல்வாதம் பேசும் இந்துத்துவர்கள் இந்த நாவல் துவங்கியபோது ஒரு அலை போல பொங்கி வந்து குவிந்தார்கள். கொஞ்ச நாளில் தங்கள் அரசியலுக்கு முட்டுக்கொடுக்க வந்த பிரதி அல்ல இது என்று தெரிந்த பிறகு, தலையைச் சொரிந்துகொண்டே பின்வாங்கி சென்றார்கள்.

இவர்களுக்கு வெளியே, வெண்முரசு நிறையை அனுபவித்தும் நுட்பமாகவும் வாசிக்கும் பல குடும்பங்களை நேரடியாகவே நான் அறிவேன். அப்படி ஒரு குடும்பமே புதுவை அரிகிருஷ்ணன் குடும்பம். குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் அதன் வாசகர்கள். வெண்முரசு பேசும் அனைத்து நுட்பங்களையும் விரித்துப் பொருள்கொண்டு ரசித்து வாசிக்க அக்குடும்பம் ஒரு கூடுகையைத் துவங்கியது. பாவண்ணன், நாஞ்சில்நாடன், கீரனூர் ஜாகிர் ராஜா என ஆசிரியர் ஜெயமோகன் உட்பட பலர் இந்தக் கூடுகைகளில் கலந்து கொண்டார்கள். சென்னை, கோவை என பல இடங்களில் வெண்முரசு கூடுகை நிகழ்கிறது. பல ஆயிரம் பேர் இந்தப் பெரு நாவலை முழுதாக வாசித்திருக்கிறார்கள்.  தத்துவம், ஆத்மீகம் தொன்மங்கள் உளவியல் சமூகவியல் அரசியல் அழகியல் என வெண்முரசு எனும் பெரும்புனைவை விரித்துப் பொருள்கொள்ள தேவையான உரையாடல்கள் இனி நிகழும். நிற்க.

என் தனி வாழ்வில், வெண்முரசு நாவல் நிறையை வாசித்து நிறைவு செய்த இந்த நாள் ஒரு நன்னாள். இருள் வெளியில் என்னை நிறுத்தி, என்னைக் கைவிட்டுச் சென்ற தந்தை பேரொளியுடன் திரும்பி வந்து என்னை அணைத்துக் கொண்ட நாள். உணவு தந்து பாரதக் கதையும் சொன்ன என் தந்தை போலவே, அவருக்கும் மேலாக நின்று உணவும் தந்து வாழ்நாளுக்கும் தீராத பாரதக்கதையும் தந்த என் ஆசிரியர் ஜெயமோகனை நான் முழுதுற உணர்ந்த நாள்.  முன்பொரு சமயம் நடந்தது இது. ஜெயமோகன் அவ்வப்போது எனக்கு ஏதேனும் நூல்கள் பரிசளிப்பார். அந்த நூல்களில் எதையேனும் எழுதச் சொல்லி அதன் கீழ் அவரது கையொப்பம் போட சொல்லி நூலை பெற்றுக்கொள்வேன். பன்னிரு படைக்களம் நூலை பரிசளிக்கும்போது ஒரு விஷயம் சொன்னார். கேரளத்தில் ஒரு முறை உண்டாம். ராமாயணம் மகாபாரதம் ஏதேனும் ஒன்றை எடுத்து (மனம் குழம்பி சுபம் ஏதேனும் தேடும் சூழலில்) ஏழு பகுதிகள் விட்டு கண்ணில் படும் வரியை வாசிப்பார்களாம். அவர்களுக்கான செய்தி அங்கே இருக்குமாம். உங்களுக்கு என்ன வருது பாப்போம் என்று பன்னிரு படைக்களம் நூலை கையில் எடுத்தார்.

ஏழு பகுதி தாண்டினார். ஏழு பக்கம் தாண்டினார். ஏழு பாரா தாண்டினார். அடுத்த பாராவில் ஏழு வரி தாண்டினார். எட்டாவதாக வந்த வரி எதுவோ அதை எழுதி அதன் கீழ் கையெழுத்துப் போட்டுத் தந்தார். திருதுராஷ்டிரர் பேசுவதாக வரும் அந்த வரி …

“மைந்தா இப்புவியில் முதன்மையான உறவென்று நான் உன்னையே நினைக்கிறேன்”

இந்த நாவல் நிறையை எனக்களித்த தந்தைக்கு நிகர்த்த ஆசிரியர் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இப்பிறப்புப் போல எப்பிறப்பிலும்  என் பிரியமும் நன்றியும்.

 

3 comments for “வெண்முரசு: ஒரு தன்னுரை

  1. சிவதாமு
    September 3, 2020 at 8:42 am

    சீனு, உங்கள் கட்டுரை என்னை நெகிழ வைத்தது. என் வாழ்விலும் வெண்முரசு உடன் வந்தது. கைக்கோர்த்துக்கொண்டது. என் மனதை என் சிந்தனைகளை மாற்றியது. ஜெயமோகனுக்கு வாசகர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

    • புனிதவதி
      September 4, 2020 at 4:04 am

      பிதா மகனுக்கு ஒரு மாணக்கனாக பாத பூஜை செய்யும் இக்கட்டுரை.
      உணர்ந்து மெய் பூரித்து ஆனத்தக்களிப்பில்
      அவதரித்த கட்டுரை .
      நன்றி சீனு சார்

  2. penniamselvakumariselvakumari0020
    September 16, 2020 at 2:02 pm

    அருமை

Leave a Reply to புனிதவதி Cancel reply