குருபூர்ணிமா: கலையும் வாழ்வும்

venmurasu-day-1கலைக்குள்ளிருக்கும் நுட்பத்தை உரையாடுவது இலக்கியச் சந்திப்புகளில் பிரதானமான அம்சம். அதைக்காட்டிலும் அதன்  அடிக்கல்லாய், வேராய்ப் படிந்து கிடக்கும் கலைஞனின்  கைரேகைகளை  அறிவதும் சுவாரசியமானது. அது இளம் படைப்பாளிகளின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று எனலாம். குரு பூர்ணிமா ஒரு கலைநிறைவின் கொண்டாட்டமாகி 5 ஜூலை 2020 அன்று நடந்தபோது எழுத்தாளர் ஜெயமோகனுடனான உரையாடலை யூடியூப் வழி கண்டேன். அதில் வாசகர்கள் அடைந்திருக்கும் ஆழ்சோர்வு அதன் ஆசிரியராகிய ஜெயமோகன் அடைந்திருக்கும் நிறைவுவெறுமையின் நீட்சிதான். வெண்முரசு  உருவாகி வந்த காலக்கட்டங்களில் ஆசிரியர் எதிர்கொண்ட மன உணர்வுகள் பெரும்பாலும் வாசகப் பரப்பையும் சென்று சேர்ந்துள்ளது என்பதே பிரமிப்பூட்டுவது. சமகாலத்தில் இத்தனை அணுக்கமான வாசகர்களைக்கொண்ட நவீன எழுத்தாளர் ஜெயமோகன் என்பதை மறு உறுதி செய்துகொண்டேன்.

மானுட வாழ்வின் அத்தனை அம்சங்களையும்  தாங்கிய தொன்ம விழுமியமாக நின்று நிலைக்கும்  மகாபாரதத்தின் இன்னொரு விரிவான பதிப்பு அல்லது நவீன மொழியின் விரிப்பு என வெண்முரசைப் பொருள் கொள்ளலாம்.  கடந்த ஏழு வருடங்களாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் தொடர்ந்து எழுதப்பட்டு அண்மையில் நிறைவுபெற்ற வெண்முரசு நாவல்   சமகாலத்தில் புனையப்பட்ட ஒரு செவ்வியல் இலக்கியம். இந்தப் பெருமை அதன் சமகால வாசகர்களாகிய அத்தனைப் பேருக்குமானது என குரு பூர்ணிமாவிலிருந்து அறிய முடிந்தது. வியாசரை வியாசர் வாழும் காலத்திலேயே வாசித்து அவரோடு கருத்துப் பகிரும் பேரனுபவமாகவும், பெரும் வரலாறாகவும் குரு பூர்ணிமா சந்திப்பு அமைந்திருந்தது.  அது இணையம் வழி  உலகளாவிய வாசகர்களை ஒன்று திரட்டியது.  ஜெயமோகனை வியாசராகவே கொண்டாடும் வெண்முரசின் அத்தனை வாசகர்களும் அந்தப் புனைவுக்குள் தொலைந்து தம்மை மீட்டவர்கள். ஏழாண்டு காலம் வெண்முரசோடே புழங்கிய அநேக வாசகர்களின் காலை விழிப்புகளும் தினசரிகளும் இந்த வெண்முரசின் நிறைவால் அடைந்திருக்கும் வெறுமை என்பது இனி இன்னொன்றைக் கொண்டு நிகர் செய்ய முடியாது என்றே அந்த உரையாடல் வழி உணர்ந்துகொண்டேன்.

வெண்முரசை வாசிக்காத நான், நவீன தமிழ் இலக்கியத்தில் அது உருவாக்கியுள்ள வீச்சை அறிந்து வைத்துள்ளேன். ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்தில் அதன் சாதனையையும் அதன் ஆசிரியரின் அர்ப்பணிப்பையும் தொடர்ந்து ஜெயமோகன் தளம் வாசிப்பதன் வழி அறிவேன். எனவே அந்நிகழ்வு வரலாற்றில் முக்கியமானது எனத்தோன்றியது. வரலாற்றின் மேல் பறக்கும் ஈயாக இருப்பதில் எனக்குச் சம்மதம்தான். எனவே தமிழ் இலக்கியத்தில் இப்பெரும் பணியைச் செய்த எழுத்தாளரின் மனநிலையை அறிய நான்கு மணி நேரம் நடந்த தமிழக வாசகர்களுடனான உரையாடலையும் மூன்று மணி நேரம் நடந்த வெளிநாட்டு வாசகர்களுடனான உரையாடலையும் கண்டேன்.

ஒட்டுமொத்த படைப்பூக்கத்தையும் திரட்டி எழுத்தாக்கிய ஆசிரியனின் அபார மனக்குவிவு நேரடிப்பார்வையில் எளிய வாசகனுக்கு அகப்படக்கூடியது அல்ல. அவை நம் கணிப்புகளுக்கு உட்பட்டவையும் அல்ல. கடலின் அடி ஆழத்தில் இருந்து மேலே நோக்குதல் போல சவால்மிக்கது. அத்தனை உயிர்வேட்கைகளையும், கொந்தளிப்புகளையும், பெரும் சுழல்களையும் தன்னில் அடக்கிக்கொள்வது போலொரு சாகசச் செயல். பெரும் ஆழத்துள் மூழ்கி, அடர் நீலத்துள் தொலைந்து, பெரும் கூச்சல்களால் உடைபட்டுப்  பல நூறுகளாகத் தன்னைப் பகுத்துப் பகுத்து அதிலிருந்து சிதறிய துகள்களில் தன்னைத் தேடி  அடையக்கூடிய யோக நிலையின் கலை வடிவம் வெண்முரசு. எனவே, அத்தகைய கலைக்குரிய ஆசிரிய மனமும் அத்தனை சமச்சீரற்ற கொந்தளிப்புகளால் ஆட்டுவிக்கப்பட்டிருப்பதை நான் குரு பூர்ணிமா நிகழ்வில் ஜெயமோகனின் மூலம் அறிந்தேன்.

வியாச காரியமாகிய மகாபாரதத்தின் மீள் உருவாக்கம் என வெண்முரசை வகைப்படுத்தும் வாசகர்களுக்கு மத்தியில் ஜெயமோகன் தன்னை வியாசரின் மரபிலிருந்து தொடங்கி வருபவராகவே உணர்கிறார். ஒரு நிறைவின் பொருட்டுத் தன்னை உணரும் வரிகளாக அவை அவரிலிருந்து உதிர்பவை. தன் கலையின் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையின் சொல் வடிவமெனக்கூட சொல்லலாம்.

இவ்வுரையாடல்வழி ஜெயமோகன் தன்னை இரண்டாகப் பகுத்துக் கொள்ளக்கூடியவர் என்பதை உணர்ந்தேன். எழுத்தின்போது அதற்குள்ளான கதாபாத்திரங்களாகிய மாமனிதர்களின் முன் தன்னை அகல்விளக்கு ஏந்தி நிற்கும் பணிவை உடையவராகவே ஆக்கிக்கொள்கிறார். ஆனால், அதற்கு அப்பால்  அவர் தன்னை பூரணமான  எழுத்தாளனாக முழு நிமிர்வுடன் வாழ்கிறார். சின்னச் சின்ன சில்லறை வம்புகளுக்கும், சிக்கல்களுக்கும் மிக அப்பால் நிற்கக்கூடிய வரலாற்று ஆளுமையாகத் தன்னை உறுதியாக நம்புகிறவர் ஜெயமோகன்.

ஜெயமோகனின் பேச்சின் வழி ஓர் எழுத்தாளனுக்கான வாழ்வும் இரண்டாகவே அமைந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது. அகம், புறம் என எழுத்தாளர்கள் தங்களை மிகச் சரியாகப் பகுத்தாக வேண்டியது அவசியம். அவர்கள் தங்களைத் தங்களுக்குள்ளாக உணரும் நிலையிலிருந்து புற வாழ்வின் ஒத்திசைவுக்காக வேறொருவராக இருத்தல் அவசியமாகிறது. வாழ்வில் அத்தனை மணித்துளிகளையும் எழுத்தாளனாகவே கடத்துதல் என்பது சாத்தியமற்றது. தன் அகம் சாராத புற வாழ்வில் அவர்கள் எளிமையானவர்கள். அப்படி இருத்தலே சிக்கல் இல்லாத வாழ்வைக் கொடுக்கிறது. ஆனால், அந்த மாற்றம் என்பது எல்லா சமயங்களிலும்   கைகூடிவிடுவதில்லை என்பதில்தான் அவர்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.   தினசரிகளில், சராசரியர்களின்  அர்த்தமற்ற செயல்பாடுகளால் வெகு எளிதாகவே எரிச்சலடைபவர்கள் கலைஞர்கள். அடங்காத கொதிப்புநிலை தவிர்க்க முடியாதது. எனவேதான், சாமானியர்களுக்கான மனநிலையை அவர்கள் ஒத்திருப்பதில்லை. அவர்கள் நாமறிந்த மனிதர்களுக்கு மத்தியில் தங்களது நுண்ணுணர்வுகளால், மனதால், கற்பனையால், ஏற்புகளால், மறுப்புகளால்  வேறானவர்கள்.

ஒரு கலையின் வடிவமென்பதும் அதன் பேசு பொருள் என்பதும் ஆசிரியனை மீறி அவனைக் கொண்டு தன்னை வடித்துக்கொள்வது என பல ஆண்டுகளாக ஜெயமோகன் சொல்லி வருகிறார். ஒருவகையில் தனது முன்னோடியான சுந்தர ராமசாமியிடம் அவர் முரண்படும் இடமும் இதுதான். அவ்வகையில் வெண்முரசின் வடிவமென்பதும் முடிவு செய்யப்படாத அல்லது சட்டகமற்ற ஒரு கலைவடிவமாகவே அவரால் குறிப்பிடப்படுகிறது. அது பெரும்பாலும் ஆசிரியனால் முன்னமே நிர்ணயம் செய்யப்பட்ட வடிவமல்ல. போர்க்களத்தில் இறங்கும் முன் வீரனுக்குப் பயிற்சியும் போரை நகர்த்திச்செல்லும் உத்தியும் நினைவில் இருக்கும். ஆனால் போரை களத்தின் தீவிரமே தீர்மானிக்கிறது. அப்படி ஒவ்வொரு நாளும் புதிய களத்தில் தன்னை இழுத்துச் செல்லும் புனைவுப்பரி காட்டும் அனுபவம் அவருக்கேகூட புதியவையாகவே இருந்துள்ளன. அப்படி அவரறியாத நிலையில் அவரிலிருந்து எழுந்து வரும் புனைவுகள்   விழிப்புநிலை கடந்த கனவுநிலை கொண்டவை. ஆம், ஜெயமோகனின் கனவுகள்கூட கதை கொடுத்திருக்கின்றன. அது இயற்கையுடன் ஊடாடிக்கிடக்கும் இலக்கியத்தின் பேராற்றலை மீள்பதிவு செய்வதாக உள்ளது. அப்படி குரு பூர்ணிமாவில் ஜெயமோகன் அவர்கள் பகிர்ந்துகொண்ட கனவுகள் என்பது சராசரியர்களிலிருந்து விலகி ஒரு தெய்வீகத்தன்மையிலிருப்பதை அறிய முடிந்தது. அப்படி வந்த கனவுகளின் நீட்சியாகவே வெண்முரசின் சில மாயச் சூழல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

புனைவின் கொந்தளிப்புகளுக்குள் சிக்கிக்கொள்ளும் தருணங்களின் அபாய நீட்சி  அவர்களின் வாழ்வுக்குமானதாகிறது. குறிப்பிட்ட பகுதிகளை எழுதக்கூடிய தருணங்களில் சாலைக்குச் செல்வதில் இருந்த பயத்தையும்  வாகனங்களில் வீழ்ந்து தன்னை மாய்த்துக்கொள்ளத் தூண்டும் தற்கொலை தூண்டல்களையும் அகம்சார் புனைவுவெளியின் கோர நிழல்களாகக் குறிப்பிட்டார் ஜெயமோகன். ஒரு சாதாரணனைப் போலல்லாமால்  எழுத்தாளனின் மனக்கொந்தளிப்பு எத்தனை பாதகமானது என்பதை இதைவிட வேறெப்படியும் சொல்லிவிட முடியாது.  அது எழுத்தாளன் தன்னைப் முழுமையாகப் பணையம் வைத்து மேற்கொள்ளும் தவநிலை மனதுடன் உலகியல் வாழ்க்கைக்குள் நுழைகையில் உண்டாகும் முரண் வடிவம் என்றே எண்ணிக்கொண்டேன்.  களைத்து எழக்கூடிய கனவுகளும், நீள் திகைப்புகளும்,  மனக் கொந்தளிப்புகளும் குடிப்பழக்கமுள்ள ஒருவனையோ, தனிமையிலிருப்பவனையோ மிக எளிதில் முழுப் பைத்தியமாக்கக்கூடியவை. பல நேரங்களில் நம்மில் பலரின் மனச் சோர்வை போக்கக்கூடிய களங்களை அமைத்துத் தரும் இலக்கியம்  அழிசக்தியாக மாறுமா என உள்ளூர தீராத குழப்பம் வந்துபோகிறது. அதற்கான முன்னுதாரணங்களும் இருக்கையில், இயற்கையாகிய அன்னைக்கு எப்போதுமே இருநிலையிலான படிமங்கள் இருப்பதை நம்மால் விவாதிக்கவோ மறுக்கவோ முடியாததுபோல இதையும் அப்படியே ஏற்றாக வேண்டியுள்ளது.

மகாபாரதத்தில் ஒரு பாத்திரமாகி வரும் வியாசரைப் போல ஜெயமோகன் தன்னை வெண்முரசில் யாதொரு பாத்திரமாகவும் இணைக்கவில்லை. வெண்முரசில்  தனது கைகள் தெரியாத அளவே அவரது பங்கேற்பு  அமைந்திருக்கிறது. பொதுவாகச் சிறு சிறு துணைப் பாத்திரங்களினூடாகவே தனது குரலை ஜெயமோகன் இப்படைப்பில் முன்வைத்திருக்கிறார். மற்றதில் இல்லாத எது இதில் இருக்கிறது என்ற கேள்விகளினூடே அவர் தன்னையும் தனது தனிச்சிறப்புகளையும் பாத்திரங்களுக்குள் ஏற்றி வைத்திருப்பதாகச் சொல்கிறார். எதிர்காலத்தில் வெண்முரசு இன்னொரு பதிப்பானால் அதில் ஜெயமோகன் இணைக்கப்படலாமா  என்ற வாசகக் கேள்விக்கு அவரின் பதில் ஒரு சிறு புன்னகைக் கீற்றாக மட்டுமே அமைந்திருந்தது.

இப்பெரும் படைப்பை எழுதி முடித்த பிறகு ஏற்பட்டிருக்கும் இவ்வாழ்வு  குறித்தான  நிறைவினை அவர் இனி இருத்தலின் பால் இருக்கும் அர்த்தமின்மையாகவும் சேர்த்தே குறிப்பிடுகிறார். தான் படைக்கப்பட்டதற்கான பலன் அல்லது பிறவி நோக்கம் அடைந்தாகிவிட்ட சூழலில் இனி தான் இல்லாத காலங்களில் தான் பேசப்படுவதைப் பற்றிய எந்தச் சிந்தனையும் அவருக்கில்லை.

இந்த வெண்முரசு அவர் தன்னைக் கண்டையும் பொருட்டே எழுதப்பட்டுள்ளது.  தன்னைத் தேடி அடையும் வார்த்தைகளாலான தவம். ஜெயமோகன் அவர்கள் தனது வரலாற்றையும், ஆழ்மனதையும், மூதாதையர்களையும் தொடர்ச்சியாக தனக்கானதொரு மொழியையும் கண்டடைந்திருக்கிறார். இறுதியில் அதையே தனதடைதலெனவும் சொல்லி ஒரு கலையினால் அடைந்திருக்கும் பற்றற்ற நிலையையும் உரையில் சொல்கிறார்.

வெண்முரசின் மூலம் ஜெயமோகனென்ற பெரும் ஆளுமையில் ஏற்பட்டிருக்கும் சிந்தனை மாற்றங்கள் அல்லது இந்த வாழ்வின் சூட்சமப் பகுதிகளின் மீதான பார்வை மாற்றமும் அறியப்பட வேண்டியவை. மறுப்பிறப்பு சார்ந்து இன்று நாம் மீள மீள பேசியும் யாரொருவரின் பதிலிலும் திருப்தியடையாத தன்மைக் கொண்டிருக்கிறோம். தன் பணியினால் முழுமை நிலையில் உணரும் ஆசானாகிய அவர் இந்த வெண்முரசுக்குப் பின் மறுப்பிறப்பு இருப்பதாக தன் நம்பிக்கையை ஒரு  உறுதியான அறிதலாக முன்வைத்தார். அப்படித் தன் அறிதலை யாரும் நம்ப வேண்டியது அவசியமில்லை என சொல்லி அதனைக் அப்படியே கடந்துசென்றிருந்தார். ஆற்றல் அழியாதது அது உருமாறும் என்ற நம்பிக்கை மாற்றமும் அவருக்கு வெண்முரசால் நிகழ்ந்திருப்பது. அது இலக்கியத்தை இன்னும் இன்னும் ஆச்சரியத்தோடே பார்த்து பிரமிக்க வைக்கிறது.

அவர் இதில் அடைந்திருக்கும் அத்தனை நிறைவுக்குப் பின்னும் அதே நிகர்  அளவு  கொந்தளிப்பும் வெறுமையும் சூழ்ந்திருக்கிறது. வாழ்வில் ஒரு எழுத்தாளன் தன் புனைவினூடே  கண்டடையக்கூடிய நிகரற்ற ஒரு நிறைவானது வெறுமையின்  நிழலென புரிந்துகொள்கிறேன். இந்த குரு பூர்ணிமாவில் நான் ஜெயமோகனிடம் புனைவுக் களத்தில் நின்று ஆடி நிகரற்ற சாதனை புரிந்த களைப்போ, அல்லது சாதித்தத் துள்ளலோ பார்க்கவியலவில்லை. அவரிடம் காண முடிந்ததெல்லாம் தளும்பாத நிறைவின் பேரொளி மட்டுமே. இந்த வாழ்வுக்குண்டான பலனைத் தனது பிறப்புக்குண்டான அர்த்தத்தைப் பிரக்ஞையோடே  அடைந்துவிட்டதன் பொருட்டு ஏற்படும் நிகரற்ற நிறைவு அது. ஆனால், அந்த முற்றான நிறைவில் நின்றுகொண்டிருக்கும் அவருக்கு இனி செல்லும் திசைகளென்பது  அர்த்தமின்மையால் தொக்கி நிற்பவை.

குருபூர்ணிமா சந்திப்பு என்பது வெண்முரசு வாசகர்களின் ஒரு கருத்துக்களமாக அமைந்திருக்கும் அதே சமயம் புதிய வாசகர்களின் நுழை வாசல்களாகவும் அமைந்திருக்கிறது. படைப்பு என்பது ஒரு போட்டியல்ல. இன்னொருவரோடு செய்யும் ஒப்பீடு அல்ல. புகழை அடைய எடுத்துக்கொள்ளும் பாதையும் அல்ல. அது முதலில் எழுத்தாளன் தனக்குள் செய்யும் ஒரு தேடல். ஜெயமோகன் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் புத்தனுக்கு தவம் எப்படியோ அப்படியே எழுத்து ஓர் இலக்கியவாதிக்குத் திகழ்கிறது.

2 comments for “குருபூர்ணிமா: கலையும் வாழ்வும்

  1. புனிதாவதி
    September 1, 2020 at 1:51 am

    ஓர் அழகிய கவித்துவமானக்கட்டுரை கண்களை ஈரமாக்கிவிட்டது .
    மாபெரும் படைப்பாளியின் தவ வலிமை வெண்முரசு.

  2. shahul hameed
    September 1, 2020 at 10:51 am

    ஆழ் உள்ளத்திலிருந்து எழுந்த வரிகள் பவித்ரா .ஆசானை குருவாக அடைந்தது நற்பேறு என நீங்கள் சொல்கீர்கள் என்றே உணருகிறேன் .
    //இந்த குரு பூர்ணிமாவில் நான் ஜெயமோகனிடம் புனைவுக் களத்தில் நின்று ஆடி நிகரற்ற சாதனை புரிந்த களைப்போ, அல்லது சாதித்தத் துள்ளலோ பார்க்கவியலவில்லை//
    நிறை குடம் தழும்பாது என சொல்வார்கள் .
    நல்ல கட்டுரை ,வாழ்த்துக்களும் நன்றியும் .
    ஷாகுல் ஹமீது ,
    நாகர்கோயில்.

Leave a Reply to புனிதாவதி Cancel reply