ஜெயமோகனின் நூறு சிறுகதைகள்

1

ஜெஒரு புதிய இலக்கியப் படைப்பென்பது சீட்டாட்டத்தில் வரும் புதிய சீட்டைப் போல, கையிலிருக்கும் சீட்டுகளைப் புதியதோடு சேர்த்து மறுவரிசைப்படுத்துவது. (உண்மையிலேயே) புதிதாக வரும் படைப்புகள், ஒழுங்காகச் சீரமைந்திருக்கும் கடந்தகால படைப்புகளோடு தன்னை இணைத்துக் கொண்டு மேற்சொன்ன மறுவரிசையைக் கோருவதே. இதனையே டி.எஸ்.எலியட், கடந்த படைப்பிற்கும், புதிய வரவிற்குமான ஒத்திசைவு (confirmity between the old and the new) எனக் குறிப்பிடுகிறார்.

இரண்டு வகையில் இது நிகழும், ஒன்று ஆசிரியன் தன்னளவிலேயே தன் முந்தைய படைப்புகளோடு புதியதைச் சேர்த்து ஓர் அளவீடு/வரிசைப்படுத்துதல் நிகழும். இரண்டு ஒட்டுமொத்த இலக்கிய சூழலிலும் நிகழ்வது. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், புதிய இலக்கிய ஆக்கத்திற்கான மதிப்பீடுகள் என்பது ஒரு நல்ல வாசகன் ஒவ்வொரு புதுவரவிற்கும் தன் புத்தக அலமாரியைச் சீர்ப்படுத்துவது/மறுஒழுங்குபடுத்துவது என்று சொல்லலாம். இவ்வளவுகோல் புதிய படைப்பு உருவாக்கும் மதிப்பீடுகள் மற்றும் தரிசனம் சார்ந்து அவை தனக்கே உரித்தான ஒரு சட்டகத்துக்குள் அமரும்.

அரிதாக நிகழ்வதென்றாலும் சில படைப்புகள் ஒட்டுமொத்த மறுவரையறையைக் கோரி துடுக்காக நம் முன் வந்து நிற்கும். தமிழ் இலக்கிய சூழலில் புதுமைப்பித்தன் வரவு அத்தகையது. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் தமிழ் நாவல்களை அப்படி திருப்பிப்போட்டது, தற்போது வெண்முரசு நாவல் தொகுதி.

இப்போது புனைவு களியாட்டு/கதை திருவிழா என இரு பகுதியாக ஜெயமோகன் எழுதியிருக்கும் நூறு கதைகளும் மேல் சொன்ன வரிசையில் வந்து நிற்பதே. இந்நூறு சிறுகதை என்பது இனி தமிழ் இலக்கியத்தில் எழுதப் போகும் கதைக்கான கரு/வடிவ விதையைத் தாங்கி நிற்பது. அத்தனை பரந்துப்பட்ட வாழ்க்கை தலங்களையும், அதன் மீதான கேள்விளையும், தரிசனங்ளையும் தன்னுள் அடக்கியவை.

  • மீபொருண்மைக் கதை மணிபல்லவம், அனலுக்கு மேல்
  • மாய யதார்த்த கதை நற்றுணை, அமுதம்
  • தொன்ம கதைகள் கரு, மூத்தோள், தூவக்காளி
  • வரலாற்றுக் கதைகள் போழ்வு, இணைவு, லட்சுமியும் பார்வதியும், மலையரசி
  • துப்பறியும் கதைகள் பத்து லட்சம் காலடிகள், ஓநாயின் மூக்கு, வேரில் திகழ்வது, வேட்டு (ஔசேப்பச்சன் கதைகள்)
  • பகடி கதைகள் வருக்கை, பூனை
  • யதார்த்த கதைகள் வனவாசம், சுற்றுகள், செய்தி, வரம்
  • தலித் கதைகள் கழுமாடன், பீடம்
  • பேய்க் கதைகள் அங்கி, விலங்கு
  • உருவக கதைகள் அருகே கடல், எரிமருள்

இப்படி இலக்கியத்தின் அத்தனை சாத்தியங்களும் அமையப் பெற்று இந்த நூறு கதைகளின் தொகுப்பு உருவானதாலேயே எதற்குள்ளும் அடங்காமல் வெளியே துருத்திக் கொண்டு நிற்கும் ஒரு படைப்பு எனக் குறிப்பிட்டேன்.

ஈரோட்டில் ஓராண்டிற்கு முன் நடந்த சிறுகதை முகாமில் ஜெயமோகன் ஒரு சிறு உரையாற்றினார். அதில் புதுமைப்பித்தன் வெவ்வேறு வடிவில் எழுதிய பதிமூன்று கதைகளை முன்வைத்து அதிலிருந்து அந்தக் கதைகள் ஏற்படுத்திய பிற்கால போக்கிற்கான முன்மாதிரியைப் பற்றி விளக்கிப் பேசினார். அக்கதைகளின் ஊடாக இலக்கியம் காட்டும் போக்கென்ன, எதனை இலக்கியமென வகுப்பது, எப்படி திகில் கதைகளும், துப்பறியும் கதைகளும் இலக்கியமாக மாறுகிறது என்பதை விளக்கினார். இன்று இந்த நூறு கதைகளையும் வாசித்து முடித்த பிறகு அவ்வுரையோடு என்னால் மேலும் நெருங்கி யோசிக்க முடிகிறது.

இந்நூறு கதைகளும் அத்தகைய ஒரு போக்கிற்கான ரீஅக்வரன்ஸ் (Reaccurance) என்றே படுகிறது. இவை புதுமைப்பித்தன் முதல் ஜெயமோகன் வரை எழுதிக் குவித்த சிறுகதை போக்கின் ஒரு கூட்டு வடிவம். இங்கிருந்து பின் சென்றால் நம் மனதுள் சிறுகதைக்கான, அதன் வடிவத்திற்கான ஒரு முழுமையான சித்திரம் அமையும்.

2

பெரிய நாவலென்பது அதன் பக்க அளவிலில்லை, உட்கதைகளிலுமில்லை அது எழுப்பும் அறம் சார்ந்த/தரிசனம் சார்ந்த கேள்விகளே முதன்மையானது. வெண்முரசு போன்ற நாவல் தொகுப்பில் அத்தகைய கேள்விகள் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவில் தன்னுள் கேட்டு, விளக்கி, அறிந்து பயணிக்கும் போதே அதனை அளவில் பெரியதாக்குகிறது. இதன் பாதிப்பென்பது அதற்குப் பின்னாலும் ஆசிரியனுக்குப் பல கேள்விகளுக்கான விடையைத் தேடிய பயணமாகவே இருக்கும். இப்போது யோசிக்கும் போது ஜெயமோகன் இந்த நூறு கதைகளிலும் வெண்முரசு தன்னுள் ஏற்படுத்திய கேள்விகளை தனக்கே திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

‘காக்காய்ப்பொன்’ கதையில் சதானந்த தீர்த்தர் முள்ளிமலையில் அடையும் தரிசனம் அத்தகையது. சில வருடங்களுக்கு முன் நான் தர்மஸ்தலா சென்ற போது அங்கிருந்த அறுபதடி பாகுபலி சிலை கண்டு திகைத்துச் சொல்லிழந்து நின்றேன். இந்திய நிலத்தின் நிகரற்ற வீரன் இந்தியாவே தன் கைக்குள் ஆட்சி செய்யும் மொத்த பேறும், வாய்ப்பும் அமையப்பெற்ற ஒருவன். அவை அனைத்தையும் துறந்து அந்நிலையை அடைந்த மெய் ஞானி. பெரும் பிரமிப்போடு அச்சிலையைச் சுற்றி வந்த போது, பாகுபலி பற்றிய ஒரு சிறு குறிப்பை வாசித்தேன். அனைத்தையும் துறந்து வெற்றுடலுடன் அவ்வனத்தின் நடுவே நின்ற பாகுபலியால் மோட்சம் பெற முடியவில்லை, அத்தருணத்தில் அவருள்ளும் ஏன், ஏன் என்ற கேள்வியே எழுகிறது. அவர் தங்கைகள் இருவரும் அவர் தந்தையான ரிஷபரிடம் சென்று அதற்கான காரணத்தைக் கேட்கின்றனர். அவர், “அவன் அனைத்தையும் துறந்துவிட்டேன் என நிற்கும் அவ்வாணமவே அவனை அதிலிருந்து தடுக்கிறது” என்கிறார். தங்கைகள் இருவரும் திரும்ப வந்து அந்தக் காரணத்தைச் சொன்ன பிறகு அதனையும் துறந்து பாகுபலி சமாதியாகிறார்.

தன்னையும் துறக்காத எவரும் முழுத்துறவியாவதில்லை. அந்த ஏன் என்றே கேள்வியே சிறுகுடத்து நீரை வற்றாத நதியாக்கும். வெண்முரசில் காண்டீபம் நாவலில் வரும் அரீஷ்ட நேமிக்கும் இத்தகைய அறச்சிக்கல் எழுகிறது. அதன் விதையையும் கிருஷ்ணரே இடுகிறார். துறவென்னும் தன் பணி, அதனை அடைவதால் வரும் பித்ரு சாபம் என இரண்டிற்கும் நடுவே ஊசலாடிக் கொண்டு பெரும் அறச்சிக்கலில் இருக்கிறார். அத்தருணத்தில் ஒரு காக்கா வந்து ஏன் எனக் கூவிச் செல்கிறது. ரைவத மலை இறங்கி வந்து மொத்த பாரதவர்ஷமும் தன் காலின் கீழ் வரும் காட்சியைக் கண்டு அவை அனைத்தையும் துறந்து மீண்டு நேமிநாதராக ரைவத மலைத் தொடரில் சென்று நிற்கிறார். அரீஷ்ட நேமிக்கு கா என்ற சிறு சொல்லின் பொருள் சதானந்த தீர்த்தருக்கு விளங்கும் தருணம் காக்காய்ப் பொன்னில் வருகிறது அது அந்த சிறு அலுமினிய மணியை அவர் கையிலெடுக்கும் தருணம். “மின்னுவதன் மீதான பற்று என்பது பொன்மீதான பற்றுதான். பொன்மீதான பற்று என்பது காமம்தான். பொருள் மோகம்தான். ஆணவமும்தான்.”என சதானந்தரும் அனைத்தையும் விட்டுத் துறக்கும் தருணம். மூவாயிரம் வருடங்களாக மொத்த மனித குலம் மீது பெரும் அறக் கேள்வியை எழுப்பி நம்மைச் சூழ்ந்திருக்கும் ஓர் அரிய உயிரினம். அதுவே அந்த மாய காக்காய்ப்பொன்.

இப்படி ஒரு எல்லையில் தொன்மத்தின், தேடலின் தொடர்ச்சி நீண்டு கொண்டிருந்தால் மறு எல்லையில் புராணத்தின் சரடு இன்றைய யதார்த்தத்தைத் தொடும் கதைகளும் எழுதினார். அதற்குச் சிறந்த உதாரணமாக ‘வனவாசம்’ கதையைச் சொல்லலாம். தலைவன் கோட்டை சாமியப்பாவும், மதுரை குமரேசனும் கூத்துக் கலைஞர்கள். அவர்கள் அர்ஜீனன், அல்லியாகும் தருணம். கூத்து முடிந்து தலைவன்கோட்டை சாமியப்பா ஊர் திரும்பும் போது அவன் சிரிப்பில் அர்ஜீனனை சுப்பையா காணும் போது அவருள் வாழும் ஒரு கலைஞனின் நித்தியம் மின்னுகிறது. ஒரு கலைஞனின் இரு வேடங்களைச் சொல்லிச் செல்லும் கதை.

இத்தகைய யதார்த்தக் கதைகளிலும் ஜெயமோகன் சொல்முறை என ஒன்றுண்டு. அது கதையின் போக்கிலேயே கதையின் காலத்ததன் அரசியல், சினிமாவில் மக்கள் மனநிலையைச் சொல்லிச் செல்வது. அந்த ஒரு வரியிலேயே கதையின் நம்பத் தன்மையையும், கதை நிகழும் காலத்தையும் சொல்லிக் கடந்து விடுவார். உதாரணமாக வனவாசம் கதையில் வரும் ஒரு வரி, “பாயும் புலி…” “புலி பாயுது,பரட்டைக் கபடம் பாத்தாலே குண்டி எரியுது” போதும் கதைக்கான காலமும் நிறுவிவிட்டது. கதையின் நம்பத்தன்மைக்கும் ஒரு அவுன்ஸ் மாத்திரை குடுத்தாகிவிட்டது. வருக்கை என்ற இன்னொரு கதையில், “கருணாநிதிக்கு எம்ஜியார் மூக்கறுப்பு”ஒரு வரிதான் அந்த டீ கடை சூழலையும், காலத்தையும் சொல்லி முன் நகர்கிறார்.

உலகின் தலைசிறந்த கதை சொல்லிகள் குழந்தைகள். ஏனென்றால் நம்மைவிட அவர்கள் தான் கதைகளைக் கூர்ந்து கவனிப்பவர்கள். கவனிப்பவர்கள் என்று சொல்வதைவிடக் கதைகளில் வாழ்பவர்கள் என்பதே பொருந்தும். இக்கதை சரடில் அனந்தன் வெவ்வேறு கதைக் காலங்களில் வாழ்ந்திருக்கிறான். ஊர் பொதுவில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவனாக (ஆனையில்லா), ஊரிலுள்ள பெரியவர்களுக்குப் பத்திரிக்கை வாசிப்பவனாக (வருக்கை), அப்பாவுடன், கூட படிக்கும் பெண்ணின் வீட்டுக் கல்யாணத்திற்கு நைலக்ஸ் சட்டை அணிந்து கொண்டு முந்தி செல்பவனாக (சூழ்திரு), கோபாலகிருஷ்ணனுக்கும், திற்பரப்பு கொச்சுகேசவனுக்கும் நடக்கும் துவந்தத்தைப் பார்க்கும் கதை சொல்லியாக (துளி), நாகமாணிக்கத்தைக் கையில் கொண்டு அதன் வீரியம் தன்னை ஆட்கொள்ளச் செய்தவனாக (தங்கத்தின் மணம்), உடன் படிக்கும் சங்குவிற்குப் பயந்து அவன் காதலுக்காகக் கவிதை எழுதித் தருபவனாக (சிறகு), அவன் குழந்தை பிராயம் முடிந்து ஆண்மகனாகத் தன்னை முதல் உணரும் தருணங்களாக (செய்தி). இப்படி ஒவ்வொரு கதைகளிலும் அனந்தன் வெவ்வேறு கதாப்பாத்திரமாக வளர்ந்துவந்த ஒரு பயணம் நிகழ்கிறது.

அதன் உச்சம் தரிசனம் மொழி எனும் கதை, அதில் பெருவட்டர், டீக்கனாரிடம் சொல்லும் ஒரு வரி வருகிறது, “வே டீக்கனாரு,, இங்கிண நாம அறியாத பல பாசைகள் உண்டும்வே.”, “சாமிக்க பாசை வே… தேவன்மாருக்க பாசை”. உலகின் முன் குழந்தைகள் அவர்களுக்காகவே சமைக்கும் ஒரு மொழி இவ்வுலகியல் வஞ்சம், பகை என உலகியல் சூதுகள் ஏதும் அறிந்திடாத ஒரு மொழி அதுவே சாமியின் மொழியாக, தெய்வங்களின் மொழியாகிறது.

இப்படி இக்கதைகளில் நிறைந்து கிடக்கும் குழந்தைகள் உலகத்தை எளிமையாகச் சொல்லிச் செல்லுதல் என்பது அவ்வளவு சுலபமல்ல. ஏனென்றால் நம்மிடமிருந்து தொடர்பற்றவர்கள் குழந்தைகள், அவர்கள் உலகிற்குள் சென்று பார்ப்பதென்பது வேற்று கிரகம் சென்று வாழ்வதற்குச் சமமானதே. கல்பற்றாவின் முதல் நாள் என்ற கவிதை இப்படி வரும்,

அம்ருதா, நீ நினைப்பதைப்போல எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் அடிக்க சாத்தியமான பெல்லல்ல ஸ்கூலில் இருப்பது. உனக்கு இது புரிய கொஞ்ச நாட்களாகளாகும். பெல்லடிப்பது எவ்வளவு கஷ்டம், எவ்வளவு காத்திருக்க வேண்டும், யாருக்கும் அதை அடிப்பதர்கான சுதந்திரம் இல்லை இப்படி…

விரும்பிய நேரத்தில் பெல்லடிக்க இயலாது என்பது இயல்பானதுதான் என்று உணரத் தொடங்கும்போது, அதுவரை இயல்பாக இருந்தவையெல்லாம் உன்னைக் கைவிடும். பின்னர் உனக்கு நேரத்திற்குத்தான் பசிக்கும்.

இக்கதைகளில் பயின்று வந்த குழந்தைகளின் உலகமென்பது பெல்லடிக்க ஓடிச் சென்ற அம்ருதாவின் உலகத்தைச் சார்ந்தது. மொழி கதையில் வரும் லட்சுமி குட்டி அம்ருதாவின் வேறொரு வடிவம். கீரிட்டிங்ஸ் கதையில் வரும் வித்யாவும் அம்ருதாவின் சாயல் தான்.“வரமாட்டேன். நீ முட்டாயி குடுப்பே. அது கசக்கும்.”என்ற வரியை வித்யா சொல்லும் ஒரு நொடி சிவசங்கரனிடமிருந்த பதற்றம் மறைந்து பின் மீண்டும் அவர் உலகிற்குத் திரும்புகிறார். மொத்த அலுவலகமும் ஒரு பிரச்சனையில் இருக்கிறது. ஜிஎம் இஸ்மாயில் மரைகாயர் யார் சீட்டைக் கிழிப்பதென்று அலுவலகத்துள் நுழைகிறார். அவரிடம் வித்யா,“அழுவாதே. நீ நல்ல தாத்தா. நான் உனக்கு நல்ல கீர்ட்டிங்ஸ் தாறேன் என்ன?”, “அப்பா நான் இந்த செவேப்பு தாத்தாக்கு கீர்ட்டிங்ஸ் குடுத்தேன். அவரு பாவம்தானே?”என்ற வரிகளில் உள்ள குழந்தைத் தனம் மொத்த இறுக்கமான சூழலையும் மாத்துக்கிறது.

இத்தொடரில் வரும் அனந்தனின் உலகம் முற்றிலும் மாறுபட்டது அவன் உண்ம க்கு பதிலாக உம்ம குடுக்க தெரிந்தவன். கல்பற்றாவின் இன்னொரு கவிதை,

உண்ம’ என்ற சொல்லை
கேட்டெழுத்துக்குப்  போட்ட  டீச்சருக்கு
எத்தனை  ‘உம்ம’க்கள்  கிடைத்தன?
கண் மூடிய  உம்மாக்கள்.
உதடு குவித்த உம்மாக்கள்
தயங்கித் தயங்கி
சுற்றும் நோக்கும் உம்மாக்கள்.
வேறு யாருக்கோ உள்ள
உம்மாக்கள்.
பிறரைப்  பார்த்து  எழுதிய
புதியவகை குளிர்ந்த உம்மாக்கள்
டீச்சர் அனைவருக்கும் மார்க் போட்டாள்,
உண்ம’ என்றே எழுதிய
மரத்த முகமுள்ள புத்திசாலிப் பையனுக்கும்தான்.
பாவம்

வெவ்வேறு வகையில் எழுதிய அத்தனை உம்மக்களுள் அனந்தன் ஒழிந்திருக்கிறான். ஆனால் அத்தனை அனந்தனிலும் உச்சம் தொட்டு ஒரு புதிய வகை உம்ம தந்தவன் மொழி கதையில் வருபவன் தான். யாரும் அறிந்திடாத ஓர் தெய்வ மொழி அறிந்தவன். அதனாலே ஒரு மறைவுமில்லாமல் தன்னை உலகின் முன் நிர்வாணமாக்கி நின்றவன். குழந்தை தெய்வத்தின் வடிவமென உணரும் தருணம் அவை.

இக்கதை தொடரில் அனந்தனின் பயணமும் குறியீட்டு ரீதியானது. ஜெயமோகனின் கிளிகாலம் என்ற குறுநாவல் இப்படித் தொடங்கும், “சென்றது கிளிகாலம் அடுத்தது இலையுதிர் காலம்”. இங்கேசூழ்திரு, மொழி என கிளிகாலத்தில் வாழ்ந்த அனந்தனும் அவன் இலையுதிர் காலத்தை செய்தி, சிறகு கதைகளில் வந்தடைகிறான். பின் அவன் கிளிகாலத்தைத் தொடும் வசந்தமான நாட்கள் அவனுக்குத் திரும்ப வருகிறது, கிரீட்டிங்ஸ் கதையில். தந்தையர் தன் குழந்தையுள் தன்னை உணரும் தருணங்கள் அவை. தான் வாழ்ந்த கிளிகாலத்தை.

நாம் வாழும் இந்த யதார்த்த உலகில் இத்தொடரில் எழுந்து வரும் சிக்கல் ஆண், பெண் உறவு சார்ந்தது. எப்போதுமே ஆண், பெண் உறவில் வரும் சிக்கலென்பது காமம் சார்ந்ததல்ல, காதலுமல்ல. சொல்லப் போனால் அவை சிக்கலே அல்ல அவை வாழ்வின் வசந்தமான நினைவுகள். இந்த நூறு கதைகளில் வந்த ஆழி, பொலிவதும் கலைவதும், சுற்றுகள், ஆட்டக்கதை, வான்கீழ், முதல் ஆறு, நஞ்சு, சீட்டு, வான்நெசவு, தேவி, வரம், தவளையும் இளவரசனும் என ஒரு பட்டியல் நீழ்கிறது. இத்தனை கதைகள் சொன்ன பின்னும் இன்னும் இதில் சொல்ல எப்படி விஷயம் இருந்து கொண்டேயிருக்கிறது. அது அவ்வுரவில் என்றுமுள்ள ஒரு துளி நஞ்சு, ஒரு துளி அமிர்தம் இரண்டும் ஒன்றெனக் கலந்தது அந்தச் சொல்ல முடியாத முயங்கும் நிலையே இதன் பேசு பொருள். ஒவ்வொரு கதையும் மீண்டும், மீண்டும் பேசி, பேசி இதனையே கண்டடைகிறது.

இவ்வரிசையில் இதன் உச்சம் தொட்ட கதை என இரண்டைச் சொல்லலாம் ஒன்று ஆட்டக்கதை, அதில் கதகளி வடக்கு கேரளத்தில் வள்ளத்தோள் தலைமையில் வளர்ந்து வருவதைத் தடுக்க தெற்கிலிருந்து ஸ்ரீகிருஷ்ணபுரம் ராஜசேகரன் நாயரைத் திருவனந்தபுரம் அழைக்கின்றனர். அவர் மனைவி சரஸ்வதியிடம் விஷயத்தைச் சொல்கிறார். அப்போது சரஸ்வதி அம்மாள் அதனை மறுக்கச் சொல்லிக் கண்டிப்பாக நின்றுவிடுகிறார். பின் வள்ளத்தோள் இறந்த போது ராஜசேகரன் நாயர் தன் மனைவியிடம் சொல்கிறார், “என் காவல்தெய்வமே, நீ இல்லாவிட்டால் இன்றைக்கு நான் சங்கறுத்துக்கொண்டு செத்திருப்பேனே” என்று கதறினேன். என்னைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். ஒரு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் உணரும் தருணம் நஞ்சேறிய நீலகண்டனின் பாதி அமிர்தமாய் அவனுள் முயங்கியவள். அந்த அர்த்தநாரியே கதைகளாகின்றன. மற்றொன்று சர்வ ஃபூதேஷு கதை எல்லா ஆன்ஸெலை, கொச்சு மாத்தன் உறவை ஸ்ரீதரன் புரிந்து கொள்ளும் தரும் அவள் சர்வ ஃபூதேஷீவாய் சக்தி ரூபமாய் தாயாய் உலகில் நிறைகிறாள்.

இந்த யதார்த்த தளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட இரண்டு தளங்கள் இத்திருவிழாவில் அமைந்திருந்தன. ஒன்று துப்பறியும் கதைகள் மற்றது திருடன் கதைகள் (இது வகைப்படுத்துதல் அல்ல ஒரு வசதிக்காகவே திருடன் கதைகள் எனக் குறிப்பிடுகிறேன்). பொதுவாகத் தமிழ் இலக்கிய சூழலில் துப்பறியும் கதைகளுக்கு அதிக இடமில்லை ஏனென்றால் வணிக இதழ்களில் இவ்வகை கதைகள் எழுதிக் குவித்து கிலீஷேவாகிவிட்டன என்ற காரணத்தினாலேயே இவை பேசப்படாமல் இருந்தன.ஜெயமோகன் இதனைப் பகடி செய்து நான்காவது கொலை – தமிழின் மகத்தான துப்பறியும் நாவல் என்ற குறுநாவல்  எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் டாக்டர் சம்பத் போன்ற ஒன்றிரண்டு புதுமைப்பித்தன் கதைகளையே இதற்கு முன்னோடியாகச் சொல்ல முடியும் அதன்பின் இத்தளம் பேசப்படாமல் ஒரு வெற்றிடமாகவே இருந்தது. சிறுகதையில் ஔசேப்பச்சன் ஒரு புதிய முயற்சி என்றே சொல்ல வேண்டும். வேரில் திகழ்வது, பத்துலட்சம் காலடிகள், கைமுக்கு, ஓநாயின் மூக்கு, வேட்டு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெரும் அறக் கேள்விகளை எழுப்பிச் செல்லும் கதைகள் மற்றும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றுப் பின்னணியும் கொண்டது.

ஒரு முறை ஜெயமோகனிடம் தனி பேச்சில் திரில்லர் கதைகள் மீதான அவர் ஆர்வத்தைப் பற்றிக் கேட்டேன். அவர் The Name of the Rose – Umberto Eco நாவலைப் பற்றி சொன்னார். திரில்லர் வகை கதைகள் என்பது விறுவிறுப்பான சுவாரஸ்ய தளத்தில் மேலெழுந்து, அச்சமுகத்தின் வரலாற்றுப் பின்புலத்தையோ, தத்துவார்த்தமான தரிசனங்களையோ எழுப்பிச் செல்ல வேண்டும். அவ்வாறு எழுப்பும் ஒரு சின்ன கேள்வியே இலக்கியத்திற்குப் போதுமானது என்றார். அவ்வகையில் இத்தொடரின் கதைகளெல்லாம் ஒவ்வொரு கேள்வியை எழுப்பிச் செல்கின்றன, ஓநாயின் மூக்கு மொத்த திருவிதாங்கூரின் நாயர் சமூக குடும்பத்தின் சாபத்தைப்பற்றி ஒற்றைத் தற்கொலையிலிருந்து பேசுகிறது. பத்து லட்சம் காலடிகள் மாப்பிளா முஸ்லீம் என்ற ஒட்டுமொத்த சமூகத்தின் நெறியைச் சீமேனி அப்துல் ரஹ்மான் ஹாஜி குரல் கொண்டு பேசுகிறது. கைமுக்கு ஒரு சமூக சரிநிலைகளைப் பற்றி ஆராய்கிறது. இப்படி ஒவ்வொன்றும் வெவ்வேறு கேள்விகளை எழுப்பி ஒரு ஒட்டுமொத்தமான சமூக வரலாற்றுப் பார்வையை முன் வைப்பதாலேயே இக்கதைகள் இத்திருவிழா தொடரின் முக்கியமான கதைகளுள் ஒன்றாக வந்தமர்கிறது.

தமிழ் நவீன இலக்கியத்திற்கு மற்றொரு புது வரவாக அமைந்தது திருடன் கதைகள். உண்மையில் திருடர்கள் குழந்தைகளுக்கான கதைகளில் சுவாரசியமாக வந்து செல்வதோடு பெரும்பாலும் நின்றுவிடுகிறது. பவா செல்லதுரை சிறுகதையில் வந்துபோகும் திருடர்களையும் இவ்வேளையில் நினைவு கூற முடிகிறது. ஜெயமோகன் அந்த உலகை விசாலமாக்குகிறார். வருக்கை கதையில் வரும் தங்கனிடத்தில் அருமைநாயகம் இப்படி கேட்கிறார், “லே நீ திருடுகதுதான் திருடுதே. அந்தால சத்தம் காட்டாம போயி நாகருகோயிலு திருவனந்தபுரம்னு திருடினா என்னலே? அவனுக அங்க தள்ளில்லா கெடக்கானுக… உன்னை அவனுகளுக்குத தெரியாதுல்லா?”என்றார். அதற்குத் தங்கன் தீவிரமான முகத்துடன் “ஏசு என்ன சொன்னாரு? வேய் டீக்கனாரு சொல்லும்வே. என்ன சொன்னாரு?  நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். சொன்னாரா இல்லியா?”, ரசனைக் குரியதான அவன் பேச்சும் செய்கையும் அனைவரையும் கவர்கிறது. இக்கதையிலேயே வரும் அப்பு ஆசான் ஒரு முறை அறைக்கல் அம்மச்சியின் வீட்டில் திருடும் போது அதிலிருந்த அவர்களின் குடும்பப் பெயரை படிக்க தெரியாமல் அவர்களிடமே விற்றுவிடுகிறார். அவர் பீடியை ஆழ இழுத்து “ஆனா அதுக்குப்பிறவாக்கும் இங்க ஊரிலே நமக்கு டிமாண்டு. ஒருமாதிரிப்பட்ட எல்லா பெண்டுகளும் நம்மள விளிச்சிட்டுண்டு…”தங்கனையும் எல்லா பெண்களுக்கும் பிடித்திருக்கிறது, அதற்கான பதில் கரவு கதையில் வருகிறது, “தேன்சிட்டு போலே தேடிவந்து களவெடுப்பான்! பூவிட்டு பூ தொடுவான்! வான்விட்டு வந்த மகன் வயணமெல்லாம் சொல்வேனோ!”அந்தத் தேன்சிட்டுப் போலே தேடிவந்து களவெடுப்பவனையே எல்லோரும் விரும்புகின்றனர்.

அவன் எல்லாம் அறிந்தவன், எல்லாமுமாகத் தெரிந்தவன், எல்லோரையும் நன்கறிந்தவன் எல்லோருக்கும் உரைபவன். அதனை கரவு கதையில் தங்கன் சொல்கிறான், “லே, நம்ம சாமி சுடலையாக்கும். சுடலை ஆறு சாத்திரம் எட்டு தொளில் ஒன்பது ரெசம் அறிஞ்சவனாக்கும்…”. இப்படி வருக்கை, கரவு கதையில் தங்கனாக, எழுகதிரில் ஸ்ரீதரனாக, முத்தங்கள் கதையில் மூக்கனாக, கைமுக்கு கதையில் மகேஷாக வருபவன் முத்தாய்ப்பாக இறுதி கதையான வரம் கதையில் திருடனாக வருகிறான். திருடனாகவே வந்து தன்னைப் பற்றி சொல்கிறான்,“திருடனுக்கு எல்லாம் தெரியும், ஏனென்றால் அவன் தன்னந்தனிமையானவன், மறைந்திருப்பவன். அவனை எவரும் பார்க்கமுடியாது, அவன் அனைவரையும் மிகக்கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு எவருடனும் உறவில்லை, அவனை அனைவரும் எவ்வகையிலோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். திருடன் கதைகளில் வாழ்கிறான். அன்னையர் மைந்தர்களை மடியில் வைத்துக் கொண்டு மெல்லிய குரலில் வழிவழியாக வரும் திருடர்களின் கதைகளைச் சொல்கிறார்கள். சபைகளில் எவரேனும் திருடர்களைப் பற்றி வெடிப்புறப் பேசுகிறார்கள். திருடன் காகத்தில் குரங்கில் பூனையில் வெளிப்படுகிறான். குழந்தைகளில் வெளிப்படுகையில் அனைவரும் மகிழ்ந்து சிரிக்கிறார்கள்.”

திருடன் கதையிலிருந்து எழுந்துவந்த மற்றொரு வகை கதையென தன் தொழிலில் கலையைக் கண்டவர்கள் கதைகளைச் சொல்லலாம். குருவி, வனவாசம், மாயப்பொன், மலைகளின் உரையாடல், பிடி, இறைவன், ராஜன், சுக்ரர் என இப்படி ஒரு வரிசை கதைகள் நீள்கிறது. இவ்வரிசையில் எனக்கு ரொம்ப அனுக்கமானது பிடி கதை. பிடி கதையில் மதுரை ராமையாவாக வரும் சோமு அந்த ஊரிலுள்ள அனைவருக்காகவும் பாடுகிறார். பாட்டிலேயே அவர் வாழ்கிறார். கச்சேரி முடிந்து மறுநாள் ஒவ்வொருவரிடமும் பாடிய எல்லா பாட்டையும் பற்றி விசாரிக்கிறார். “நான் என்ன பாடினாலும் நீ இரக்கம் காட்டுவதே இல்லை” இப்படி அதனிலேயே வாழ்கிறார் தன் பாட்டினூடாக, கலையினூடாக ஒரு பிடியைக் குஸ்தியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் இறுதிவரை. இதிலிருந்து அடுத்தபடியாக எழுந்த கதைகளென ஐடியலிஸ்டிக் மனிதர்கள் பற்றிய கதைகளைச் சொல்லலாம். அவ்வரிசையில் வரும் கதைகள் அன்னம், ஆமை, ஏதேன், முதுநாவல் என ஒரு வரிசை நீள்கிறது.

இந்த வரிசையில்  வரும் வித்தியாசமான இரண்டு கதைகள் நற்றுணை மற்றும் சிறகு. இரண்டுமே சிறகு முளைத்தெழும் இரண்டு பெண்களைப் பற்றியது. அம்மிணித் தங்கச்சியும், அனந்தவல்லியும் ஒரு யுக மாற்றத்தின் மத்தியில் அமைந்த புள்ளிகள் அந்த யுகமாற்றத்திற்காகவே அனந்தவல்லியுள் சிறகு முளைக்கிறது, அம்மிணித் தங்கச்சிக்குக் கேசினி துணையாகிறாள். பிரஞ்சு புரட்சி, தீ செகண்ட் செக்ஸ், பெண் சமவுரிமை என்று கொதித்தெழுந்து பேசி நிறுவி செய்த புரட்சிகள் தவறவிட்ட ஒன்றுண்டு. அது அவளுள் இருக்கும் சிறகினை அவளுக்குக் காட்டாமல் விட்டது. அந்தச் சிறகே அவளுக்கு நற்றுணையாக அமையும். அவளே அச்சிறகை விரித்து வானில் வலம்வரக் கூடிய வல்லமை கொண்டவள்.

இப்பகுதியின் இறுதியாக நான் சொல்ல நினைப்பது இரண்டு அவை ஜெயமோகனின் வரலாற்று மற்றும் தத்துவ பார்வை. இதுவே அவரை மற்ற இலக்கியவாதிகளிடமிருந்து தனித்துக் காட்டுகிறது என்ற எண்ணம் எனக்குண்டு. அவ்வரலாற்று வரிசையில் இத்தொடரில் அமைந்த கதைகள் முற்றிலும் வரலாற்று மீதான புதிய திறப்பை அளிப்பவை. ஆயிரம் ஊற்றுகள், போழ்வு, இணைவு, லட்சுமியும் பார்வதியும், மலையரசி என திருவிதாங்கூர் அரசின் ஒரு கால வரலாற்றுச் சித்திரம் இதில் அமைகிறது மேலும் நுணுகிய வரலாறு என்றாலும் கழுமாடன், பீடம் கதைகளில் தலித் வரலாற்று மீதான ஒரு சித்திரமும் எழுகிறது. நான் முன்னர் சொன்னது போல் இதன் சிறப்பம்சமென்பது வரலாற்றைக் கொஞ்சம் திருப்பிப் பார்ப்பது, சைடு மிரரை கொஞ்சம் சரிசெய்து தெளிவாகப் பின்னால் வருபவையைப் பார்ப்பது போல.

ஒரு உதாரணம் கொண்டு இதனை விளக்கலாம் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட நாநூறு ஆண்டுகள் மதுரை  ஆண்டு நாயக்கர் வரலாற்றைத் திரும்ப ஒரு முறை பார்த்தால் கதைகளில் வரும் திருவிதாங்கூர் வரலாற்று மீதான சித்திரமும் புலப்படும். மதுரை நாயக்கர்களில் தலைசிறந்த அரசன் திருமலை நாயக்கர் அவர் ஆட்சி காலத்திலேயே மதுரையின் எல்லை விரிந்திருக்கிறது. அவர் ஆட்சிக் காலத்திலேயே மதுரை தனியரசாக முடிசூடியது. அவர் காலத்திலேயே மதுரை மீனாட்சி கோவிலில் சீர்த்திருத்தம் பல பணிகள் நடந்துள்ள, பின்னாளில் கட்டப்படாமல் விட்ட ராயர் கோபுரம் உட்பட. தமுக்கம் மைதானம் அவர் அமைத்துத் தந்ததே. ஆனால் இதே திருமலை நாயக்கர் காலத்தில் தான் ஐந்து பெரும் போர்கள் நடைப்பெற்றன. விஜயநகரத்தினுடனான போர், மைசூர் மீதான போர், இராமநாதபுரம் சேதுபதியினுடனான போர், திருவிதாங்கூர் அரசுடனான போர், இறுதியாகத் தனது எழுபத்தைந்து வயதில் தான் தலைமை தாங்காமல் நடந்த மைசூர் மீதான மூக்கருப்புப் போர். இப்படித் திருமலை நாயக்கர் ஆண்டு முப்பத்தாறு ஆண்டுகளில் போரிலேயே மதுரை இருந்துள்ளன. இதன் பாதிப்பு அவர் காலத்தில் நிகழவில்லை என்றாலும் அவருக்குப் பின்பான மதுரை நாயக்கர் வீழ்ச்சிக்கு இது ஒரு பெரும் காரணமாக விளங்கியது எனச் சொல்லலாம்.

மாறாக மங்கம்மாள் அவுரங்கசீபுடன் சந்து செய்து கொள்கிறார், தஞ்சை நாயக்கருடன் போரில் வென்ற பின்பும் சந்து செய்கிறார்கள். தேவையான போது திருவிதாங்கூரின் மீதும், இராமநாதபுரம் மீதும் படையெடுப்பு நிகழ்கிறது. மங்கம்மாள் சாலை உட்படப் பல அரிய சாதனைகள் அவர் காலத்தில் நிகழ்ந்துள்ளன. இன்னும் ஒரு விஷயம் நாயக்கர் ஆட்சி மதுரையில் இன்னும் சில காலம் தொடர்ந்ததற்கு மங்கம்மாளின் சமயோசிதமே காரணம் எனலாம். முத்தையது வேகம், பிந்தையது விவேகம். இதனையே கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்குப் பின்பான நாயக்கர் விழ்ச்சி பார்க்கலாம், இதனையே தளவாய் வேலு தம்பி பிள்ளையையும், பார்வதி பாய்யையும் பொருத்திப் பார்க்கலாம். புலிக்கும், நரிக்குமான வேறுபாடு. ஆனால் வரலாற்றில் வேகம் தன்னகங்காரம் என்ற ஒற்றைப் பார்வை மட்டுமே முன்வைக்கப்படுகிறது மாறாக இக்கதைகளில் அவ்விவேகத்திற்கான ஊற்றுகள், வேகத்தின் பின் விளைவுகள் எழுந்து வருகின்றன. அதன் மீதான ஒரு ஃபோகஸ் விழுகிறது. அதனைக் கொண்டே வரலாற்றை மேலும் தெளிவாக அணுக முயல்கிறது.

இவை இரு வேறு மனிதர்களின் தனித்தன்மையிலிருந்து எழுந்து ஒரு கால மாற்றத்திற்கான சித்திரமாக அமைகிறது. போழ்வு கதையில் தளவாய் வேலுதம்பி பிள்ளையிலிருந்து மலையரசி கதையில் வரும் அரசி பார்வதி பாயின் சித்திரம் ஒரு கால மாற்றத்திற்கான அடையாளம். அதனைப் பற்றி இணைவு கதையில் வருகிறது, கர்னல் சேமர்ஸ் அதனை விளக்குகிறார். “இதில் தாளவே முடியாத ஓர் அபத்தம் உள்ளது. இது ஏன் தாளமுடியாதது என்றால் உலகமெங்கும் இதுதான் நடைபெறுகிறது. உலகமெங்கும்… ஆப்ரிக்காவில் அரேபியாவில் ஆஸ்திரேலியாவில் கிழக்காசியாவில் எங்கும்… இதேபோல கண்மூடித்தனமான கூட்டம். இதேபோல தன்முனைப்பு கொண்ட, உலக அறிவில்லாத தலைமை. வீரவழிபாடு, கூட்டுத்தற்கொலை… இதேதான்… நூற்றுக்கணக்கான முறை…” என்றார் கர்னல் சேமர்ஸ். கர்னல் சேமர்ஸ் கையைவீசி தலையை அசைத்தார் “நான் ஜெனரல் ராபர்ட் கன்னிங்ஹாமிடம் இதைப்பற்றி ஒருமுறை கேட்டேன். நதிகளில் நீர் பெருகும்போது கனமான கலங்கல்நீர் கீழே செல்கிறது. அதைப்போலத்தான் இது என்றார். நாம் புதியகாலகட்டத்தவர்கள், அவர்கள் பழைய காலகட்டத்தவர்கள். அவர்கள் ஓர் அலையாக வந்து நம்மிடம் தோற்று கீழே சென்றே ஆகவேண்டும், அது இயற்கையின் விதி என்றார்.”’ இப்படி சின்ன திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தொடங்கும் கதையில் வளர்ந்து வளர்ந்து உலக வரலாற்று பார்வையை முன் வைக்கின்றன.

கடைசியாகத் தத்துவக் கதைகள். தத்துவமென்பது கதையின் கருவல்ல கதைக்கான களம் மட்டுமே. அக்களத்திலிருந்து ஒரு தரிசனமெழும்போது தான் அவை செவ்வியல் கதைகளாக அமைகின்றன. அதனையே விஷ்ணுபுரம் செய்தது. அங்கே வரும் தத்துவ விவாதங்கள் கதையின் களத்தில் அங்கமாக விளங்கியவை. அவை காட்டிய தரிசனமே அவற்றை மேலெழச் செய்தவை. இந்த வகை சிறுகதைகளுக்கு ஜெயமோகனின் இரண்டு சிறுகதையை முன்னோடியாகச் சொல்லலாம். ஒன்று ஜகன்மித்யை கதையின் இறுதியில் நம்பூதிரி வாயிலாகக் கதை சொல்லி மோகன் அடையும் தரிசனம். இரண்டு நச்சரவம் கதையில் வரலாற்று ஆர்வலனாக வரும் கதை சொல்லி இறுதியில் கண்டடையும் இந்து மெய் ஞான மரபின் ஆதி தரிசனமாகிய சாங்கிய தரிசனம். அவ்வகை கதையில் முதலிலேயே சொன்ன காக்காய்ப்பொன், கரு, தங்கப்புத்தகம், ஏழாவது போன்ற கதைகள் வந்தமர்கின்றன.

கரு, தங்கப்புத்தகம் இரண்டுமே ஷம்பாலா என்னும் கனவு நகரத்தின், தொன்மத்தின், தத்துவத்தின் தேடலுக்கான பயணம். அப்பயணத்தில் ஆடமும், பேட்டும், முக்தாவும் இறுதியில் தங்களைக் கண்டடையும் தரிசனமே முதன்மையானது. அதுவே காக்காய்ப் பொன் கதையில் சதானந்த தீர்த்தர் தன் வாழ்வின் இறுதியில் அந்தக் காக்கை கொண்டு வந்த பொன் மணியில் கண்டடைகிறார்.

3

இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில் செய்த வகைப்படுத்துதலென்பது ஒரு வகை உள் நுழைவிற்கான முயற்சி மட்டுமே. இந்நூறு கதைகள் எளிய வகைப்படுத்துதலின் படி சுருங்கி விடாமல் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு நூறு ஆயிரமென விரிந்து செல்லும் கதைக்களங்களைக் கொண்டவை இவை. அத்தகைய பரந்து விரிந்த தளங்களுமே, இவைக் காட்டும் மேற் சொன்ன புதிய வகை போக்குமே இதனை தமிழ் சிறுகதை முன்னோடி வரிசையிலிருந்து வளர்ந்து தனி ஒரு போக்காக மாற்றுகிறது.

உதாரணத்திற்கு டாக்டர் சம்பத் துப்பறியும் கதையின் ஒரு முயற்சி. ஔசேப்பச்சன் அதனை விரித்து வளர்த்தெடுத்து ஒரு தொகுப்பாக மாறுகிறது. இவை இன்னும் வளரும். ஒரு தொகுப்பென்பது ஒரு வடிவின் அத்தனை சாத்தியங்களையும் ஆராய்ந்து உள்ளிழுக்கிறது. அதனாலே அவை மேலும் வளர்கின்றன. இதனையே ஜெயமோகனின் அறிவியல் புனைக்கதை தொகுப்பான விசும்பு செய்தது. விசும்பு வந்து பத்து வருடத்திற்குள் தமிழ் அறிவியல் சிறுகதைக்கென சுசித்ரா, ரா.கிரிதரன், கமலக்கண்ணன், நகுல்வசன், தன்ராஜ் மணி என ஒரு நிரை எழுந்து வருவதைக் காணலாம்.

இந்நூறு கதைகளைப் பற்றி இத்தனை எழுதிய பின்னும் இன்னும் சொல்லாமல் விட்ட கதைகளே மேலெழுந்து என்னை நிறைக்கின்றன. அவையே செவ்வியல் ஆக்கத்தின் முதன்மையான பண்பு. இக்கட்டுரையின் முதல் பகுதியில் சொன்னது போல் இந்நூறு கதைகளை, பின்னால் தமிழ் இலக்கியத்தில் எழுத போகும் கதைகளுக்கான ஒரு ஊற்று முகமாகவே பார்க்கிறேன். இந்நூறை ஒரு சேர ஒட்டுமொத்தமாக விரித்துப் பார்க்கும் போது சிறுகதைகள் மீதான ஒரு முழுமையான சித்திரம் அமையும் என்பது என் துணிபு. இதனுள் இருந்து என் ரசனை சார்ந்து முதல் பத்து கதைகளை இங்கே பட்டியலிடுகிறேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

இவை ஒரு வகையில் வரிசைப்படுத்துதல் என்றாலும் மறுவகையில் மேற்சொன்ன ஒவ்வொரு வகை மாதிரி கதைகளுக்குள் செல்ல ஒரு முகாந்தரமாய் இவ்வரிசை அமையலாம். இனி புதிதாய் வாசிக்கத் தொடங்குபவர்களுக்கு இவ்வரிசை உதவலாம் என்ற அளவிலேயே இப்பட்டியலை இங்கிடுகிறேன்.

 

3 comments for “ஜெயமோகனின் நூறு சிறுகதைகள்

  1. Rathish Venugopal
    September 1, 2020 at 8:29 pm

    கதைகளை வாசித்தவர்களை மேலதிகமாக சிந்திக்கத் தூண்டும், புதியவர்களை வாசிக்கத் தூண்டும் சிறப்பான அறிமுகக் கட்டுரை.
    நன்றி ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...