The Platform: மானுடத்தின் இறுதி நம்பிக்கை

விஜி01சமூக வாழ்வியல் சிக்கல்களைப் பேசுமிடமெல்லாம் பொதுவாகவே உயரடுக்கு சமூகம், அதனுடன் நெருங்கியத் தொடர்புடைய முதலாளியத்துவம் சார்ந்தும் அச்சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டப் பிரிதொரு சமூகத்தைச் சார்ந்தும் கவனம் குவிமயமாவது இயல்பு. முதலாளியத்துவத்தை எதிர்த்துச் செயல்பாட்டு ரீதியிலும் கருத்தியல் பதிவாகவும் அழுத்தமான எதிர்ப்பை முன்வைத்த கார்ல் மார்ஸ் தொடங்கி இன்று அதன் நீட்சியில் முழுக்கவே சமூகவியல் சிக்கலாக உருமாற்றம் பெற்று ஆழ வேரூன்றி நிற்கும் சமூக அடுக்குகள்/வர்க்க பேதங்களால் மனிதன் சுயம் இழந்து நிற்பதைக் குறித்துப் பேசும் மெல்வின் சீமன் வரை மனித வாழ்வின் சிதைந்த வாக்குமூலங்களையே மீண்டும் மீண்டும் பதிவு செய்துள்ளனர்.

இலக்கியம் முதல் காட்சி ஊடகங்கள் வரை இவ்விரு முனையைத் தொட்டுப் பேசாதவர்கள் இல்லை என்றும் சொல்லலாம். உண்மையில், மனித வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் பல தருணங்களில் அது வர்க்க மோதலின் வரலாறாக மட்டுமே பதிவாகியுள்ளது. நூற்றாண்டுகள் தோறும் வெவ்வேறு வடிவங்களில் இம்மோதல்கள் நடந்தபடியேதான் உள்ளன. உயரடுக்குச் சமூகமும் அதிகாரக் கட்டமைப்பும் இன்னொரு தரப்பை நசுக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்க அதை எதிர்த்து நிற்பதும், அநீதி இழைக்கப்படுவதை உரக்கச் சொல்லிக்கொண்டே இருப்பதும் நிகழ்ந்தபடியே உள்ளதுன. அதிகார மையத்திலிருந்து சரிந்து கீழ்வருபவன் அல்லது கீழிருந்து அதிகார மையம் நோக்கி நகர்பவன் என்னவாக ஆகிறான்? அவன் போக்கு சூழலுக்கு ஏற்ப எப்படியாக மாறுகிறது? இந்தக் கேள்வியைப் பற்றிக்கொண்டு நூல் பிடித்து நகர்கிறது ‘The Platform’ எனும் எசுப்பானியத் திரைப்படம்.

2019, Toronto அனைத்துலக திரைப்பட விழாவில் People’s Choice Award for Midnight Madness பிரிவில் விருது பெற்ற இத்திரைப்படம் முதலாளித்துவ எதிர்ப்பு, சமூக இயங்கியல், அரசியல் பிழைகள், வர்க்க போராட்டம், வளங்களைப் பங்கிடுவதில் நிறைந்திருக்கும் ஏற்றத்தாழ்வு என்பதான பல்வேறு விடயங்களைப் பேசுவதாக உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து இத்திரைப்படம் கவனப்படுத்தியிருக்கும் வேறு சிலவும் இருக்கவே செய்கின்றன. ஒரு நல்ல கலைப்படைப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும் சிக்கல்கள்மீது ஒளிவீசி கடந்து செல்வதாக மட்டும் ஒருபோதும் இருக்காது. நடப்பியல் சிக்கலை வேறொரு கோணத்திலிருந்து அணுகி தனித்துவமான பார்வையை, அனுபவத்தை முன்வைப்பதாக, பார்வையாளனுக்குப் போதுமான இடைவெளியைத் தோற்றுவிப்பதாக, படைப்பாளனின் கைரேகையை அதில் பதியவைத்திருக்கும். The Platform திரைப்படத்தின் இயக்குனர் Galder Gaztelu-Urrutia மாறுபட்ட படைப்பாளியாக உயர்ந்து நிற்கும் இடமும் இதுதான்.

மனிதகுல வரலாற்றின் நாள்காட்டியைச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னால் கொண்டு சென்று விருட்டென நிகழ்காலத்தையும் அதற்கடுத்தான எதிர்காலத்தையும் தீர்வை நோக்கிய பயணத்தையும் நேர்கோட்டில் சொல்ல Galder Gaztelu-Urrutia உருவக முறையிலான கதைச்சொல்லலைக் கையிலெடுத்திருக்கிறார். நேரடியாகச் சொல்லிப் புரியவைக்கக்கூடிய ஒன்றை அதனுடன் முற்றிலும் தொடர்பற்ற இன்னொன்றின்மீது ஏற்றிவைத்துப் புனையப்படும் ஒரு கலைப்படைப்பு அசாதாரண திறப்புகளைப் பார்வையாளனுக்குச் சாத்தியப்படுத்துகிறது.

நேரடி கூறலில் நிதர்சன உலக காட்சிகள் புள்ளிவிபரப்படி சரியாகவும், முழுமையானதாகவும், முக்கியமானதாகவும் ஓர் உரையாடலைத் தோற்றுவிக்கக்கூடியதாகவும் இருக்கலாம். அதைக் கடந்து பேச, சிந்திக்க அதில் வேறெதுவும் இருக்காது. எளிமையாகச் சொல்வதென்றால் நேரடி கூறலில் நம்மால் நிறைய மரங்களின் தொகுப்பைப் பார்க்கவியலும், ஆனால் அதிலிருந்து ஒரு காட்டை சிருஷ்டித்துக்கொள்ள முடியாது. உருவக முறையிலான கதைச்சொல்லல் வழி The Platform திரைப்படம் சமூகம், தனிமனிதன் எனும் இருவேறு கட்டமைப்பையும் அதனுள் கிளைகொண்டிருக்கும் இன்னும் பலவற்றைப்பற்றியும் சிந்திக்க, கேள்வி எழுப்ப, அனுமானங்களை வரைய பரந்த வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பரந்த, செங்குத்து சிறை, சில நூறு தளங்கள். ஒவ்வொரு தளத்திலும் ஒற்றை, சிறிய அறை. நேரெதிர் சுவர்களை ஒட்டி இரு கட்டில்கள், பொதுவான ஒரு கைக்கழுவுமிடம், குளியல் தொட்டில், முகம் பார்க்கும் கண்ணாடி. ஒவ்வொரு தளத்திலும் உத்தேசமாக இரண்டு நபர்கள் (செல்மேட்டுகள்). ஒவ்வொரு மாதமும் இவர்கள் தனித்தனியாக வெவ்வேறு தளங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். நிறைய உணவு கிடைக்கக் கூடிய மேல் தளத்திற்குப் போவார்களா அல்லது கீழே காலி  Platformதனை பார்த்து சாகக்கிடப்பதா என்பது பற்றிய எவ்வித முன்னெச்சரிக்கையாகவும் இருக்காது. ஜன்னல்கள், கதவுகள் இல்லை. இரவா, பகலா என்று பார்க்கவும் வழியில்லை. நேரம் என்னவென்றும் கணிக்கவியலாது. அறை விளக்குகள் நிறம் மாறுவதை வைத்து உறங்கவும் எழவும் இன்ன நேரம் வழங்கப்பட்டுள்ளதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படியான அமைப்புக் கொண்ட ஒவ்வொரு அறையின் நடுவிலும் அல்லது கட்டிடத்தின் மையத்திலும் ஒரு பெரிய துளை உள்ளது. அதில்தான் ஒவ்வொரு தினத்துக்குமான ஒரு வேளை உணவு அனைத்துத் தளங்களிலும் இருக்கும் ஒட்டுமொத்த நபர்களுக்கும் வந்துபோகிறது. உணவைக் கொண்டுவரும் செவ்வக மேடை (Platform) எவ்வித இணைப்பும் இல்லாமல் அங்குலம் பிசகாமல் அந்தரத்தில் இறங்கி, பின் ஏறுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே வரும் இம்மேடை சொற்பமான கால அளவு மட்டுமே ஒவ்வொரு தளத்திலும் நிற்கிறது. அந்த நேரம் அன்றைய பொழுதுக்கான உணவையும் பானத்தையும் உட்கொண்டாக வேண்டும். பிறகு உண்பதற்காக எதையும் எடுத்து வைக்க அனுமதியில்லை; மீறி செய்தால் விஷ வாயு அறை முழுக்க பரவி சாக நேரிடும். முதல் தளத்தில் வந்து நிற்கும் உணவு மேடையில் கீழுள்ள முன்னூறுக்கும் மேற்பட்ட கீழ்தளங்களுக்கான உணவும் சேர்த்துவரும்; மேடை முழுவதும் வகை, வகையான உணவுகள். ஒவ்வொரு தளத்திலும் கைதிகள் அவர்களுக்கு உரிய உணவை மட்டும் சாப்பிடுவார்களேயானால் ஒட்டுமொத்தமாக எல்லா கைதிகளுக்கும் உணவு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவ்வாறு நடப்பதில்லை என்பதிலிருந்துதான் மையக் கருவை நோக்கி திரைப்படம் வளர்கிறது.

தண்டனைக்குரியவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் அந்தக் கட்டிடத்தில் ‘கோரெங்’  பரிசோதனை முயற்சியாகத் தானே முன்வந்து தங்குகிறான். ஆறு மாத ஒப்பந்த படிவங்களில் கையெழுத்திட்டுச் சிறைக்குள் நுழையும் கோரெங் புகைப்பிடிப்பதை விட்டுவிட அச்சிறை காலத்தைப் பயன்படுத்த நினைக்கிறான். அந்தப் பரிசோதனையில் வெற்றி பெற்றால் அவனுக்கு அங்கீகரிக்கப்பட்ட டிப்ளோமா கல்வி சான்றிதழ் தரப்படும் என சிறை நிர்வாகம் வாக்குறுதி வழங்குகிறது. ஒரு கவிதை புத்தகத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறான். அவன் உயிருடன் மீள்கிறானா என்ற முடிவை நோக்கிதான் பார்வையாளர்கள் இத்திரைப்படத்தின் அடுத்தக்கட்டம் நகர்த்தப்படுகிறார்கள். திகில், பரபரப்பு, மர்மம் என ஒவ்வொரு கணமும் பார்வையாளனின் கவனத்தை இழுத்து வைத்துக்கொள்ளும் கதையோட்டம், காட்சிகளுக்குப் பின்னால் சென்று சிந்திக்க முற்படும்போது பார்வையாளன் ‘கோரெங்’ ஆகிவிடுகிறான்.

சிறையில் நுழைந்தவுடன் கோரெங் முதலில் அங்கு வாழ அப்போதைக்குப் பொருத்தமான உயிராக உருமாறத் தொடங்குகிறான். அது உடனடியாக நிகழவில்லை என்பது கவனத்திற்குரியது. தொடக்கத்தில் சிறையின் வழக்கங்களைப் பார்த்து அதிர்ச்சியுறுபவன் பின்னர் உயிர் வாழும் பொருட்டு அதற்கேகேற்ப தன்னைப் பழக்கிக் கொள்கிறான். அதுவும் நீண்ட நாள் நீடிக்கவில்லை. நிர்வாகம் மேல் அடுக்கில் பரிமாறும் ஆடம்பர உணவுகள் பிலேட்ஃபோம் கீழ்நோக்கிச் செல்லும்போது செல்மேட்டுகளால் மிக அலட்சியமாகக் கையாளப்படுகின்றது. தங்களுக்குக் கீழே உள்ள சிறைவாசிகளின் பசியைப்பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் அவை நாசம் செய்யப்பட்டுக் கீழே அனுப்பப்படுகின்றன. அடிதட்டு சிறைவாசிகள் எச்சிலையும் காலி பாத்திரங்களையும் மட்டுமே பார்க்கவேண்டிய நிலை இருப்பதை கோரெங் உணர்கின்றான்.

முதலில், கோரெங் பிலேட்ஃபோமின் நிர்வாகத்தையும் பின்னர் சகThe-Platform செல்மேட்டுகளையும் விமர்சிக்கும் ஆளாக மாறுகிறான். அதில் எவ்வித மாறுதலும் நிகழப்போவதில்லை என்றுணர்ந்தவனாக சுயவிமர்சனம் செய்துகொள்கிறான். சுயவிமர்சனத்திலிருந்துதான் தன்னையும் தனக்கான கடமைகளையும் அறிந்துகொள்கிறான். உணவை அனைத்துத் தளங்களுக்கும் பங்கிட்டளிப்பது அவனது லட்சியமாக மாறுகிறது. அவனுடன் பகரத் இணைந்துகொள்கிறான். இந்த அளவில் கோரெஙின் போக்குகள் தொலைநோக்கற்ற அதேசமயம் கபடமற்ற லட்சியமாகவே நிற்கிறது. இத்துடன் இத்திரைப்படம் முடிந்திருந்தால் ‘சற்றே மாறுபட்ட வகையில் சொல்லப்பட்ட கதாநாயகத் தன்மையிலான திரைப்படம்’ என்று சொல்லி பார்வையாளனும் கடந்து சென்றுவிடக்கூடும். ஆனால், இயக்குனர் Galder Gaztelu-Urrutia ஓர் நம்பிக்கை நோக்கி நகர முனைவது அதற்கடுத்த காட்சிகளில் விரிகிறது.

இதனை ‘மகளைத் தேடும் அம்மா’ எனும் கதைப்பாத்திரத்தில் ஏந்தி நகர்த்துகிறார். மிகாரு தொலைந்துவிட்ட மகளைத் தேடி ஒவ்வொரு நாளும் பிலேட்ஃபோமில் பயணம் செய்கிறாள். அப்படியொரு பெண் குழந்தை இருப்பதை ஒட்டுமொத்த செல்மேட்டுகளுடன் பார்வையாளனும் நம்ப மறுப்பதற்கான அத்தனைச் சாத்தியங்களையும் இயக்குனர் கதையின் துவக்கத்திலிருந்தே கட்டமைக்கிறார். உணவு பங்கீட்டை வெற்றிகரமாக நிகழ்த்துவதிலிருந்து தனது லட்சியவாதத்தின் அடுத்த படிக்கல் நோக்கி நகரும் கோரெங், செல்லின் கடைசி தளத்தில் இருக்கும் நபரிடம் ஒரு சிறுபங்கு உணவையேனும் கொண்டு சேர்த்து அவரைக் காப்பாற்ற நினைக்கிறான். ஓரளவு முயன்றும் உணவு முற்றிலும் கிடைக்காத ஒரு கட்டத்தில் பாதுகாத்து வைக்கப்பட்ட அவ்வுணவைத் தட்டிப் பறிக்க முயன்றவர்களைக் கோரெங்கும் பகரத்தும் கொன்று குவிக்கிறார்கள். பகரத் ஒரு கட்டத்தில் மடிந்தும் போகிறான்.

பிலேட்ஃபோமின் கீழ்தளத்திற்குச் செல்லும் கோரெங் மிகாருவின் மகளைக் கண்டடையும்போது என்ன செய்கிறான் என்பது முழுக்கவே பார்வையாளனின் கடிகார முட்களை நிறுத்திவைக்குமிடம். அச்சிறுமி (மிகாருவின் மகள்?) தூய வெண்ணிற ஆடையில், கலங்கமற்று, நலமுடன் இருக்கிறாள். மிகாரு உண்மையில் தன் மகளைத் தேடவில்லை. பதிலாக, ஒவ்வொரு முறையும் தன் மகளுக்காக உணவைத் தற்காத்து அனுப்பியிருக்கிறாள் என கோரெங் அனுமானிக்கிறான்.

The Platform திரைப்படம் நிதர்சன உலகைக் காட்டி அதன் சிடுக்குகளிலிருந்து விடுபடுதலை அல்லது அவற்றை உரசி நகர்த்தும் வேலையைச் செய்ய முயன்றுள்ளது எனலாம். இயற்கையின் பரிணாமக் கோட்பாட்டை விளக்கும் டார்வின் ‘எதுவெல்லாம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப உடனடியாகத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறதோ அதுவெல்லாம் பிழைத்திருக்கும்’ என்கிறார். ஆனால், எல்லா உயிர்களும் பிழைத்திருக்க மட்டுமே விரும்புகிறதா, அவைகளின் போராட்டம் அதற்கானது மட்டும்தானா என்றும் சிந்தித்துப் பார்க்கவேண்டியுள்ளது. மனிதக்குலத்தின் வாழ்வு சார்ந்த பார்வை ஒன்றுபோல் இல்லை என்கிறது வரலாறு. அடிப்படையில் மனிதன் ‘நான்’ என்பதை என்னவாகப் புரிந்துகொள்கிறான், ஏற்கிறான் என்பதிலிருந்து சமூகம் மீதான பார்வையும் வாழ்க்கை மீதான ஏற்புநிலையும் உருவாகிறது. பிழைத்திருக்க நினைப்பவர்கள் பிழைத்திருப்பதற்கான வேலைகளை மட்டுமே செய்து, இறுதியில் மடிந்தும் போகிறார்கள். காரணம் அவர்கள் பிழைத்திருக்க மட்டுமே முனைபவர்கள். அவர்களின் போராட்டம் அதை மட்டுமே மையமிடுகிறது.

இவ்வாறு பிழைத்திருக்க போராடுபவனிடம் ‘நீ யார்? உன் அடையாளம் என்ன?’ எனும் கேள்விக்கான பதில்களை உருவாக்குவதும் கட்டமைப்பதும் அவன் வாழும் காலத்தில் செழித்திருக்கும் வெகுஜன போக்கு. இவைதான் பின்னர் கலாச்சாரமாக ஒழுகப்படுவதாகிறது.  சில நூற்றாண்டுகளாகவே இவ்வுலகில் மனிதன் வாழும் சூழலை, அவன் என்னவாக வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் முதலாளியத்துவமும் அதிகாரமையங்களும் உயரடுக்கு எனும் பிரிவினைவாதமாக நிலைத்துவிட்டிருக்கின்றன. இங்கு அவன் வாழ தகுதியானவனா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதும் இதுதான். இதில் ஒன்றிவிட்ட மானுடம் அநீதிகளைக் காணும்போதெல்லாம் மௌனிப்பது, சமூகத்தின்மீது விமர்சனத்தை முன்வைத்துவிட்டுக் கடந்து செல்வது, அல்லது தவறானவை நடக்க அனுமதித்துத் தன்னை மட்டும் காத்துக்கொள்ள முயல்வது போன்றான வேலைகளைச் செய்கிறது.

இதில்தான் கோரெங் போன்றவர்கள் மாறுபடுகிறார்கள். அவர்கள் உயிர்வாழ விரும்பும் ஓர் உயிரியாக மட்டுமாகச் சுருங்கிவிடுவதில்லை. இத்திரைப்படத்தில் இதைக்கூறுமிடம் கோரெங் தன்னை கண்டடையும் தருணத்தில் நிகழ்கிறது.

வெறுமனே பிழைத்திருப்பதைக் கடந்து சிந்திக்கக் கூடியவனே தன்னை அடையாளம் காண்கிறான். அதிலிருந்துதான் ஒரு சமூக மாற்றம் சாத்தியப்படுகிறது. இதைச் சற்றே கதாநாயகத் தன்மையுடனும் கூற முடியும். அதாவது, எல்லாக் காலங்களிலும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப ஒருவன் எழுந்து வருகிறான். தன்னையே அதற்காக அழித்துக் கொண்டு புதிய நம்பிக்கையை விதைக்க முயல்கிறான். இத்திரைப்படத்தில் கோரெங் தன்னைக் கண்டடையும் தருணம் ‘சமூக சுயவிமர்சனம்’ என்பதிலிருந்து வேர்கொள்கிறது.

பெரும் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு சமூகம் தன்னை வழிநடத்திக் கொள்வதற்குச் சரியான திசைவழிப்படுத்தல்கள் (Redirections) அவசியமாகின்றன. அவை ஒருபோதும் வெகுஜன போக்குகளிலிருந்து உருவாவதில்லை. அதனைத் தோற்றுவிப்பது சமூக சுயவிமர்சனம் கொண்டிருக்கும் தனிமனிதனாகவோ அல்லது ஒத்தக் கருத்துடைய ஒரு சிறு தரப்பாகவோ இருக்கும். இத்திசைவழிப்படுத்தலின் தொடக்கம் பெரும்பாலும் மிக அறுதியிட்ட, தெளிவான வரையறைகளை அல்லது செயல்முறைகளைக் கொண்டதாக இருக்காது; முடிவு என்ன என்பது பற்றிய தெளிவும்கூட இல்லாமல் இருக்கும். எளிய, தொலைநோக்கற்ற/கபடமற்ற லட்சியவாதமாகவும் இருக்கும். சுருங்கச் சொல்வதெனில் திசைவழிப்படுத்தல் என்பது தனிமனிதன் (சிறு குழுவாகவும் இருக்கலாம்) ஒரு சமூகத்திடம் தோற்றுவிக்க முயலும் உரையாடல் மட்டுமே. இவ்வுரையாடல் உருவாகாமல்கூட போகலாம், சரியான கருத்து பரிமாற்றங்கள் நிகழாமலும் போகலாம், எதிர்வினைகளையும் அழிவையும்கூட ஏற்படுத்தலாம்.

இதுதான் சமூக மாற்றத்தை முன்னெடுப்பவர்களுக்கும் நிகழ்வதாகிறது. ஓர் உன்னதத்தை நோக்கி நகருகையில் அகிம்சை பெரும்பாலும் கைக்கொடுப்பதில்லை; பதிலாக எதிரி வைத்திருக்கும் ஆயுதங்களே லட்சியவாதி தனது கையில் ஏந்தத்தகுந்த ஆயுதங்களையும் நிர்ணயிப்பதாகின்றன. அதுவே பின்னர் அவன் அழிவுக்கும் ஆதாரமாகிவிடுகிறது. ஆனால், அடைவு என்பது நிச்சயம் உயிர் வாழ்தல் அல்லது மடிதல் போன்றான வெற்றித் தோல்வியை நோக்கமாகக் கொண்டிருக்காது. கருத்து மாற்றம், சிந்தனை மாற்றத்தைக் கோருவது மட்டுமே அதன் தலையாய பணியாக இருக்கும். இக்கூறுகள் அனைத்தும் இத்திரைப்படத்தில் தொனித்திருப்பது கவனிக்கத் தக்கது.

அடுத்து, லட்சியவாதத்தின் மற்றொரு வடிவத்தின்மீதும் இயக்குனர் ஒளிவீசி விட்டுருப்பது கவனிக்கத்தக்கது. கோரெங் உருவாக்கிய லட்சியவாதமும் அதையொட்டிய போராட்டமும் தோய்ந்த எதிர்வினைகள் ஒருபுறம் என்றால், மிகாரு அதே லட்சியவாதத்தின் இன்னொரு வடிவம். அவளும் கோரெங்கைப்போல லட்சியவாதத்துடனே செயல்பட்டிருக்கிறாள்; கடைசிவரை தனிமையில். சமூக மாற்ற செயற்பாங்கு அறைக்கூவலுடன்தான் வெளிப்பட வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு தனிமனிதனிடமிருந்தும் கடைசிவரை தனிமுயற்சியாகவும்கூட சமூக மாற்றத்திற்கான வெளிப்பாடுகள் நிகழும். அதை கவனிக்க சமூகம் தன் அகக்கண்களைத் திறந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இறுதியாக, பிலேட்ஃபோம் கீழ்தளத்தில் பரிசுத்தம் போர்த்தியிருக்கும் சிறுமியாக வருபவள் முழுக்கவே குறியீட்டுத் தன்மையிலான வடிவமாக இருக்கிறாள். அவள் மனித குலத்தின் ஒப்பற்ற, அப்பழுக்கில்லா ஓர் இறுதி நம்பிக்கையின் அடையாளமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. களைகளையெல்லாம் பிடுங்கி எறிந்து ஒரு விதையைத் துளிர்விடச் செய்வது எவ்வளவு முக்கியம். அந்த விதை மரமாகுமா அல்லது அதன் வளர்ச்சியில் எங்கேனும் மாய்ந்துபோகுமா என்பதைக் காலமே தீர்மானிக்கிறது. ஆனால், மனிதமற்று போய்விட்ட உலக வழக்கத்திலிருந்து ஒரு தளிரையேனும் அதன் தூயத்தன்மை சிதையாமல் பாதுகாத்து மேலெழச் செய்வதுதான் மானுடம் மீள்வதற்கான இறுதி நம்பிக்கையாக இருக்க முடியும். அதுதான் பிலேட்ஃபோமின் இறுதி பயணமாகவும் இருக்க முடியும். இத்திரைப்படத்தைப் பார்த்து முடிக்கும் கணம் பார்வையாளனின் அகக்கண்ணாடி திறந்துகொள்ளுமெனில் அதுதான் இத்திரைப்படத்தில்வழி இயக்குனர் அடைந்த மாபெரும் வெற்றியும்கூட.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...