ஸதி கவிதைகள்

அன்பினாலானது…

நேசிப்பது எப்படியென்பதை
அறிந்துகொண்ட பொழுதில்
காற்றும் அறியாது முகிழ்த்தன
வார்த்தைகள்

இந்த வார்த்தைகளல்ல
எனது நேசம்
இந்தக் கணத்திலும் அதிகமான
எனது நேசத்தினால்
நிறைகிறது பிரபஞ்ச வெளி

இப்பெரும் வெளியை
கோர்த்திருக்கும் நம் கைகளுக்குள் அடக்கத்
துடித்தோம்
நிறமற்று விரிந்திருக்கும்
கடலுள் அமிழ்ந்தோம்

மணலில் கரையாத கடலென
உணர்வுகளில் அழியாது ஒளிரும்
அன்பை
நாம் உணர்ந்த
தருணத்தில்
சிதறித் தெறித்தது உயிர்க்கரு

கனிந்து பெருகும் உனதன்பை
எனதாகவும்
எனதன்பை உனதாகவும்
சுவரெழுப்பிக் கதவடைக்க
சிறகொடிந்து துடித்தது நமதன்பு

நேசத்தை அளக்கத் துடித்த
இருளடர்ந்த இரவில்
குழம்பிப் பிறழ்ந்தது
நம் உலகு.

——

சொற்கள் 1

சொல்லாது விட்ட சொற்களைச்
சமாளிப்பது
சுலபமானதல்ல

பொழுதுதோறும் பலம் பெறும்
அந்தச் சொற்கள்
மௌனம் தின்று பெருகின்றன

அவசர வேலைக்கிடையில்
எட்டிப் பார்த்து
அன்றைய நாளை
நிலைகுத்திவிடச் செய்யும்
அந்தச் சொற்களை என்ன செய்வாய்?

உருப்போட்டு உருப்போட்டு
வலுப்பெற்ற அச்சொற்கள்
உன்னை, என்னை
நம்மைவிடவும்
பெரிதாகி விட்டன.

அளவற்றுப் பெருகும் அன்பின்
நெகிழ்வை
இடைமறித்து நிற்கும்
பெருஞ்சுவரைத் தகர்க்க
புல்டோசருக்குக் காத்திருக்கிறாயா?

கேட்கப்படாத சொற்கள்
வேறிடம் தேடிப் போகும் அகதிகள் போலல்ல
பூமிக்குள் அமுக்கப்பட்ட காற்றென
வேகங்கொண்டு சீரழிக்கும் முன்
கண்டுகொள்

சிறு கனிவில்
அர்த்தமற்றுக் கரைந்துவிடும்
சொற்களும்
அவற்றின் எல்லா வடிவங்களும்

——-

சொற்கள் 2

பூட்டிச் சென்ற
கதவும் சன்னல்களும்
கைப்பிடி தூசியோடு கரம் படியாமல் இருக்கின்றன.
புத்தக அலுமாரியும்
சாத்தியபடியேதான் இருக்கிறது
எழுதும் மேசையும் கணினியும்
அசைந்த சுவடே இல்லை.
எங்கிருந்தோ
கொட்டிக் கிடக்கின்றன
ஓராயிரம் சொற்கள்

வாசலிலும் நடுக்கூடத்திலும்
அடுப்பின் மேலும்
கழிவறைச் சுவரிலும்
பொறுக்கி மாளவில்லை.
நிமர்ந்து பார்த்தால் காற்றாடியில் சுற்றுகிறது
தலையைத் திருப்பினால் கதவிடுக்கில் ஊர்கிறது
மெத்தையிலும் சட்டைகளிலும்
உயிர்ப்போடு அலையும்
ஆயிரமாயிரம் சொற்களை
ஒற்றை ஆளாய் எங்குதான்
அள்ளிக்கொட்டுவது?

———

சொற்கள் 3

போகும் அவசரத்தில்
முகம்கூடப் பார்க்காமல்
கை வருடித் தந்தாய்

பிறகு அஞ்சலில்
அனுப்பி வைத்தாய் சில

தொலைபேசி அழைப்புகளின்
வழமையான விசாரிப்புகளுக்கிடையே
எப்போதோ
உருண்டோடி வந்தன இன்னும் சில

அப்புறம் உன்னுடைய
எழுத்துகளிலும் பேச்சுகளிலும்
தேடித் தேடிச் சேகரித்தவையும் உண்டு

அதுவும் எட்டாமல் போன பிற்பாடு
உனை வேண்டாதவர்களை நாடினேன்

இப்பொழுதும் மேகங்களில் நீ பகிரும்
எல்லாருக்குமானவற்றிலிருந்து
எடுத்துக்கொள்கிறேன்.

இல்லாத சொற்களின்தானே
உயிர் வாழ்கிறோம்
நீயும் நானும் அனைவரும்

——————

தொலைபேசியில்
எண்களை அழிப்பது

மறப்பதைவிட
வலிமிகுந்ததாய் உள்ளது
தொலைபேசி எண்களை
அழிப்பது

பிரிவும் தவிப்பும் வெறுப்பும்
உடலெங்கும் பரவி
புது வதை செய்கின்றன

இறப்பின் பின்னான
பெருமதிப்பைப் பெறும்
இறந்தவரின் எண்
முன்னெப்போதையும்விட
அதிக கவனம் பெறுகிறது
அதன் அழைப்பை ஏற்க மறுத்த
அத்தனை தருணங்களும்
வாழ்வின் ஒரு துண்டை
கிழித்துக்கொண்டுதான்
அழிகிறது.

காணாமல் போனவர்
எண்கள்
கடவுள்களாகி விடுகின்றன
என்றாவது ஒரு தருணத்தில்
உயிர் பெறும் என்ற
துளி நம்பிக்கையை
எப்படித் துறப்பது?

ஒதுக்கப்பட்ட எண்கள்
நிர்வாண நிலையில்
நிறுத்தி விடுகின்றன
வெளிச்சொல்லாத
உணர்வுகளைப் பீச்சும்
அவை
விரல்களைச் செயலிழக்கச்
செய்துவிடுகின்றன.

————-

அறம் பாடியது

நதிகள் அழிந்த கதையுண்டு
கடல்கள் வற்றிய காலமுண்டு
பெரு நிலங்கள் காணாமல் போனதுண்டு
தொன்மைமிகு நாகரிகங்களும்
மரித்துப்போன சான்றுகளுண்டு

இதில் எது இப்போது?

எம் மக்களின் இறுதிப் பெருமூச்சில்
கடல் எரிந்தது

கொத்துக் கொத்தாய்க் குவிந்த எமதுடல்களில்
நிலம் புதைந்தது

குரலொழிந்த எம் மொழியில்
அடையாளமிழக்கும் குழந்தைகள்

தமிழ் என்றால் வல்லமை
என
உலகம் அறிந்ததும்
எண்ணற்ற போராளிகளின் ஒப்பற்ற உயிர்களில்
விளையும் எம் நிலம்
எனக் காத்திருந்ததும்
காலத்தில் உறைந்த கனவாக

வலிமிகுந்த காலத்தையும்
இலக்கிழந்த தோல்வியையும்
வரலாறுகள் எக்காலத்திலும்
பதிவதில்லை

பாடப்படாமலே
போகிறது
எல்லாம் தொலைத்த பின்னும்
கரு சுமக்கும் தமிழ்ப் பெண்ணின்
அறம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...