1
வீதியில் புணர்ந்து கொண்டிருக்கும்
நாயைப் பார்க்கிறாள்
தந்தையின் கைவிரலைப்பற்றி
சாலையை கடக்கும் சிறுமி
அப்பா நாய் என்ன செய்கிறது?
மௌனமான அப்பா…
அதைப் பார்க்க கூடாது
தலைவலி வரும் என்றார்
சிறுமிக்கு தலை வலிக்க ஆரம்பித்தது
நாயை திரும்பி பார்க்காமலே
அவள் நாயைப் பார்த்துக்கொண்டிருந்தாள்…
2
ஒரு கவிதைக்காக
பல மாதமாக
முயற்சித்து வருகிறேன்…
திடீரென
ஒரு கவிதை நடுநிசியில் உதிக்க
அதன் வரிகளை
என் போர்வையின்
அடியில்
எழுதி வைத்தேன்
காலையில்
போர்வையில் தேடினால்
கவிதை வரிகள்
கட்டிலில் சிதறிக் கிடந்தன
கனவுகள்
சொற்களை
கலைத்துப்போட்டிருக்களாம்
வரிகளை அடுக்கி
கவிதையை தேடலானேன்…
3
இன்றுதான் நான்
வேஷம் தரிக்க கற்றுக் கொண்டேன்..
முதலில் நாய் வேஷம்
போடப்பட்டது…
தெருவில் இருக்கும்
மரத்தூண்களில்
ஒரு காலைத் தூக்கி
சிறுநீர் கழிக்க
திராணி இருந்த எனக்கு
வவ் வவ்வென்று குரைக்க தெரியவில்லை
நாய் வேஷம் கலைக்கப்பட்டு
பூனை வேஷம் போடப்பட்டது
பூனையைப் போல்
பதுங்கத் தெரிந்த எனக்கு
பூனையின் திருட்டுப்புத்தி
கொஞ்சம்கூட பொருந்தாமல்
போனது…
இறுதியில் இதுதான்
பொருத்தம் என்று
குரங்கு வேஷம் போட்டுவிட்டார்கள்
அப்பாவி பார்வையோடு
நாலா பக்கமும் தாவிக் கொண்டிருக்கிறேன்
உடல் முழுதையும்
சொறிந்து கொள்கிறேன்…
வ்ஊ… வ்ஊ… என்று
குரல் எழுப்புகிறேன்
ஆடரா ராமா… ஆடரா..ராமா
என்று கையில்
கோலோடு என்னை
ஆட்டி வைப்பவன்
இன்னும் பார்க்கவில்லை
என் குரங்குச் சேட்டையை…
4
சாத்தான்கள்
தேவதை வேஷம் போட்டுக்கொண்டு
போருக்கு வந்தன…
தேவைதைகளும்
சாத்தான்கள் முகமுடி
அணிந்துக்கொண்டு
போருக்கு தயாராகின
லஹாட் டத்துவில்
அவை போரிடலாம் என முடிவானது
சாத்தான்களின் சேட்டையும்
தேவதைகளின் வேட்டையும்
விருப்பம்போல்
நடந்துக்கொண்டிருந்தன…
தன்னை காப்பாற்றப் போவது யார்
என்று ஒரு
துணிவுள்ள மனிதன்
காத்துக்கொண்டிருக்கிறான்
துணிவுள்ள மனிதனுக்கு
பிட்டத்தில் வால் இல்லை
இருப்பினும்
அனுமானாக மாறி
தேவதைகளையும்
சாத்தான்களையும்
எரிப்பதற்கு
துணிவுள்ள
அந்த மனிதன்
யோசித்துக்கொண்டிருக்கிறான்
5
அந்தரங்கமான
என் உலகத்தில்
பல கனவுகள்
விஸ்வரூபம்
எடுக்கின்றன
முகம் தெரியாத
யாரோ ஒருவன்
என் படுக்கையறையில்
உறங்கிக்கொண்டிருக்கிறான்
அவன் அழகனில்லை
என் கணவனுமில்லை
அவன் உறங்கும்
வேளை
தார்மீகப் பூக்கள்
பூக்கின்றன
மல்லிகையின் நறுமணம்
வீசுகிறது
நான் அவனைக் காண்கிறேன்
அவனின் கனவு கலைகின்றது
நான் இன்னும்
உறக்கத்தில் இருக்கிறேன்…
நன்றி : குவர்னிகா
யோகியின் கவிதைகள் மிக ஆழ்ந்த அர்த்தங்களை எனக்கு கூறுகின்றன….. என்னுடைய மனநிலையில் இருந்து என் அனுபவங்களின் அடிப்படையிலிருந்து… நானே எழுதியதைப்போல ஒரு உள்ளுணர்வு.. நன்றி யோகி.
simply superb
migavum sirappaga ullathu…..