பாடிக் கொண்டே இருக்கும் பறவைகள்

நீ பாடுவதை நிறுத்துவதில்லை
வலியைத் துளைத்து வெளியேறும்
சிவப்புநிற நாகம்
நீ பாடி முடிக்கையில்
சூரியனில் இருக்கும்

  • அனார்

கவிதை ஒரு பறவை. அது இழப்பு ஏற்பு, வலி, பிரிவு, துக்கம், மரணம், பிறப்பு, மலர்தல், மொக்குதல், மடிதல்  இன்னும் பலவற்றையும் பல வகைகளிலும் பாடிக்கொண்டே இருக்கும். இந்த நொடியும் உலகின் ஏதேனும் ஒரு இடத்தில் பாடல் ஒலிக்கும்.  இவ்வுலகம் ஓய்ந்து போனாலும் அதையும் பாடும். என்பதில் ஐயமில்லை. இப்படியாக யாவரும் வெளியீடாக சுபா செந்தில்குமார் அவர்களின் ‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’ கவிதை தொகுப்பும்  7 வகையாக பிரித்து பாடிக் கொண்டிருக்கிறது. 


 
திறந்தே கிடைக்கும் வீடுகள் 

அழகிய வீடு. அதனின் அழகு எல்லாவற்றிலும் வெளிப்படுகிறது. உலர்த்திய துணி, அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள், கொடியில் காய்ந்துக் கொண்டிருக்கும் துணிகள், ஆற்றுமணல் நெளி வடிவங்களுடன் மெத்தையில் விரிக்கப்பட்ட போர்வை, அதில் ஒய்யாரமாய் சாய்த்து வைக்கப்பட்ட தலையணைகள், பளபளக்கும் பாத்திரங்கள் மெழுகப்பட்ட சமயலறை இவற்றுக்கெல்லாம் காரணமாக ஏதோ ஒரு பெண் அல்லது அப்படியாக நினைக்கும் மனம். இப்படி நினைப்பது, அழகை, நேர்த்தியை இவ்வளவு துல்லியமாக பெண்ணால் மட்டுமே முடியும் என்று எடுத்துக் கொள்வதா?, இது அவளின் வேலை/கடமை என்ற ஆண் மைய வகையை சார்ந்தா எனும் கேள்வி எழுகிறது.  இரண்டாவது என்றால் இந்த ஆணின் மனதை எங்கே போய் தொலைப்பது? போகட்டும், சுபா செந்தில்குமாரின் இந்த பகுதியில் வரும் கவிதைகளும் இப்படியான அழகான நேர்த்தியான உலகையே விரித்து சொல்லுகிறது.  
 
வீடு முழுக்க பெண், பெண்கள் நிறைந்து இருப்பது போலவும் அவர்களின் செய்நேர்த்தியை கவிதைகள் வழியாக சொல்லுகிறார்.  செம்பருத்தி செடி, மல்லிகைப் பூ, பவளமல்லி, சங்குப்பூ கொடி, பெருமிதக்கதைகள், செவ்வந்தி மாலை என்று பெண்களுக்கு பிடித்தவையாகவே மாறுகிறது. அந்தப் பெண் அதிகபட்சமாய் அம்மாவாக இருக்கிறாள். சுபா வீட்டுற்கு உள்ளேயே நின்றுக்கொண்டு உலகத்தை அதாவது வீட்டிற்குள் இருக்கும் உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். விதி விலக்காக அல்லது இந்த பகுதியின் தலைப்புக்கு ஏற்றார் போல் ‘தினசரி’ என்ற கவிதையில்  நாளிதழ் போடும் சிறுவனுக்கு தாகம் தனித்துவிட்டு இப்படியாக கேட்கிறார் ‘ஒழுங்காக பள்ளி செல்கிறாயா?’  இது தன்னால் தொடர்ந்து படிக்க முடியாத, படிக்க விடாத பல அக்காக்களின் குரலாகவும் ஒலிக்கிறது.  சமீபத்தில் புரவி இதழில் அழகிய பெரியவனின் கவிதை ஒன்றைப் படித்தேன்.

காதலின் வாடை
டபுள்யூ வார்டின் ஆறாம் எண் படுக்கையில்
குழாய்கள் சொருகப்பட்டு
கிடைக்கும் அப்பா
தட்டுத் தடுமாறி
 என்னிடம் சொல்லுகிறார்
“உங்கம்மா மாத்திரைகளை ஒழுங்கா 
போட்டுக்கிட்டாளான்னு கேளு”
சுத்திகரிக்கப்பட்டு
பழுத்துக்கனிந்த
காதலின் வாடை
வார்டு முழுவதும்
அடிக்கிறது

 
இதை இங்கே குறிப்படுவதின் காரணம், உலகின் வேறொரு மூலையிலிருந்து நொடி நேரத்தில் வீட்டிற்குள் கட்டப்படும் நூலின்  வேகத்தையும் திண்மையையும் சொல்லும் திறன் கவிதைக்கு உண்டு என்பதை அறிகிறோம். ஏறக்குறைய சுபா செந்தில்குமாரின் திறந்தே கிடக்கும் வீட்டின் ‘தினசரி’ போல.

கடலைச் சேராத நதிகள்
‘இரு தேசங்களுக்கு இடையில்
வசீகர மீன் தொட்டியாய் 
விரிந்து கிடக்கிறது கடல்’.

 
ஒரு மனிதன் 1000 ஆண்டுகள் வாழ்வதாக வைத்துக் கொள்வோம். அந்த மனிதன் பிறந்ததிலிருந்து நடந்தாலும் இந்த உலகின் நிலம் இருக்கும் எல்லா இடத்திற்கும் போக முடியாது. மனிதர்கள் கால் படாத பல மைல்கள் இவ்வுலகில் இன்றைக்கும் உண்டு. இத்துணைக்கும் நான்கின் ஒரு பகுதியே நிலம் என்பதை அறிவோம். சுபாவின் மேற்சொன்ன வரிகளையும் தொகுப்பின் தலைப்பான ‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’யையும் படிக்கும் போதும் குழப்பதிற்கு உள்ளானேன். ஆனால் மனித மனதின் வேகம் ஒளியை விட பல மடங்கு அதிகமானது என்பது தோன்றிய கணத்தில், ’சரளைக் கற்கள் விளையும் வயலில்’  என்ற கவிதையை படித்தேன். புலம்பெயரக் காத்திருக்கும் குழந்தை தாய்மண்னை அள்ளித் தின்கிறது. இந்த குழந்தையையும் இது போன்ற பல்லாயிரம் மனிதர்களையும் குறிப்பிட்டே இப்பகுதியின் தலைப்பை வைத்திருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். புலம் பெயர்ந்தவர்களின் வலியை சொல்லும் கவிதையிது. மீண்டும் தாய் மண் என்னும் கடல் சேரா நதியாகவே அவர்கள் வாழ நேரிடுவது இவ்வுலகின் அவலம். ஒன்றை வாசிக்கும் போது மற்றொன்று நினைவு வந்தால், நாம் வாசித்த வரிகள் ஒளிர்வு பெறுகின்றன என்று எங்கோ யார் சொல்லியோ படித்து இருக்கிறேன். அந்த வகையில், இதை படித்த போது தமிழ் நதியின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன. 
 
நேற்றிரவு குண்டு தின்றது
மதில் விளக்கு அதிர்ந்து சொரிந்தது
சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்
குழந்தைக்குப் பாலுணவு தீர்ந்தது
பச்சைக் கவச வாகனங்களிலிருந்து நீளும்
முகமற்ற சுடுகலன்கள் வீதியை ஆள
வெறிச்சிடுகிறது ஊர்

– தமிழ் நதி 
 
இதுவும் இனிதெனக் கடத்தல் 
 
‘சுருண்ட பூனைப் போல் 
சலனமுற்றுக் கிடத்தப்பட்டிருக்கிறாள்’.
(பக்:27)
‘அழகிய மரணத்தின் சாயல்’
(பக்:30)
‘நீ இசைத்தது என் சுகதுக்கங்களைத் தானே’
‘பியானோ என்பது ஒரு நீண்ட சவப்பெட்டி’
(பக்:31)
‘அதே பனிரெண்டாம் மாடியிலிருந்து 
நேர்த்தியாக கீழே விழத்தொடங்குபவள்
நூலறுந்து இறங்கும் பட்டத்தைத் 
தற்கொலை செய்துகொண்டதாகவும்
நினைத்திருக்கலாம்’
(பக்:33)
‘உங்கள் வருகைக்கான சங்கிலி’
(பக்:34)

 
 தொகுப்பில் இந்த வரிகளையெல்லாம் வாசித்த போது, இணைந்து பயணித்தவர்கள், நெருங்கிய உறவுகள் என்று பலரும் இறந்து விட்ட இரண்டாம் அலை கடந்ததாக நம்பும் இத்தருணத்தில் இணக்கமாக இருந்தன. வாழ்வின் அர்த்தப்பாடுகள் அது முடியும் தறுவாயில் மலரத்தொடங்குகின்றன. சவ்வுடுபரவலில் கவிதையில் ‘ஆறு நாட்கள் தாளிப்பில் வெடித்துவிட்டு’ என்று பெண்ணின் அன்றாட பாடுகளிலிருந்து தொடங்கும் கவிதை, சுழலுக்குள் சிக்கிக்கொண்ட வாழ்வினை கடப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் வார இறுதி நாளும் அதே சுழற்குழிக்குள் இருப்பதை வழக்கமான பாதையிலேயே ஓடிக்கொண்டிருக்கும் கடற்கரை குதிரையுடன் முடித்திருப்பது சிறப்பு.

தொடர் தேய்வழக்கு குறித்த சலிப்பை நினைக்கும் போது குட்டி ரேவதியின் இந்த கவிதை நினைவுக்கு வந்தது.

வெளியே 

துயர்வெளியின் முகட்டில் நின்று
இவ்வுலகை எட்டிப்பார்த்தால்
பூமியே ஒரு பாலைவனச்சோலை 

 
பெருங்களிற்றுப் பயணம் 


முதுதெய்வங்களை குறித்து அறிவோம். மக்களிடையே  வாழ்ந்து  தன்னுயிர் பேணாமல் வீரம், தீரம், தியாகம் போன்றவற்றின் செயல்பாடுகள் வழியே கொண்டாப்பட்டவர்கள், இறந்த பின் தெய்வங்களாக வழிபடப்பட்டார்கள். இன்றளவும் இம்முறை உண்டு. 
 
பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண் இரும்பறை இரவல்
சேறி ஆயின், தொழாதனை கழிதல் ஒம்புமதி; 
வழாது, வண்டுமேம்படுஉம், இவ்வறநிலை யாறே, 
பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர் தந்து

 
புறநானுற்றில்   கரந்தை திணையில் கையறுநிலை துறையில் வீரர்களின் மரணத்தையும் நடுகல் வழிப்பாட்டையும் சொல்லும் பாடல் இது. வீரர்களின் செயல்கள் காலந்தோறும் மாறி வந்துக் கொண்டே இருக்கிறது. மறைந்த எழுத்தாளர் கி.ரா ‘தெனமும் வாழ்றதே பெரும் சாதனை’ என்பார். தற்காலத்திற்கு குறிப்பாக இரண்டாம் அலையுள்ள இந்நாட்களில் தினமும் சரியாக மூச்சு விடுவதே பெரும் சாதனை தான். தேவைக்கும் காலத்திற்கும் ஏற்ப மனிதர்களின் சாதனை மாறுபடுகிறது. போற்றுவதும் வழிபடுவதும் என்பது ஒரு சாமான்யனுக்கு இல்லாமல் போன நிலையிலும்  வாழ்தலுக்கான சிரமங்கள் குறைந்தபாடில்லை. விருதுகளும் பெறுமதிப்புகளும் பெறவில்லை என்றாலும் தினமும் வாழ்தலே இங்கு இனிமையாகிறது. 

சுபா செந்தில்குமாரின் நிலவில் உறங்கும் தட்டாங்கற்கள் கவிதையில்,

அன்றாடம் சாலையோரம் உறங்க நேரிடும் பெண் மேக போர்வையை விலக்கி பால்வெளி கனவுக்குள் சஞ்சரிக்கிறார். கனவுகளை கலைக்க மனமில்லாமல் பகலையும் தனக்குள் இழுத்துக் கொள்கிறார். காலை அலுவலகம் செல்லும் நேரத்திலும் உறங்கி கொண்டிருக்கும் இப்படியான மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கு கவித்துவ போர்வையை சுபா போர்த்தி செல்கிறார்.   ஒரு கவிதையில் இருத்தலின் மிச்சத்தை துண்டிக்கப்பட்ட கைகளில் பார்க்கிறார். ஒரு கவிதையில், சிறுவனைக் கொண்டு தார் சாலை பள்ளத்தை நிலவினை பிய்த்து எடுத்து நிரப்புகிறார். ஒரு கவிதையில் சேற்றில் விளையாடும் சிறுமிக்கும் வானத்தை தட்டையாக்கி தருகிறார். இப்படியாக இந்த பகுதியில் குப்பை பொறுக்கும் சிறுவனின் வலியை, யானை பாகனின் குறுகிய வீதிகளில் தெரியும்  எதிர்காலத்தை என்று விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மனிதர்கள் குறிப்பாக சிறுவர் சிறுமியர் குறித்து பகிர்ந்து இருக்கிறார். இவர்களே, மேலே சொல்லப்பட்ட புறநானுற்று வீரர்களாக  தற்காலத்தில் உருமாற்றம் கொண்டு இருக்கிறார்கள் என்பதாக எடுத்துக்கொள்கிறேன்.  தொகுப்பில், என்னளவில்  ஆகச் சிறந்த 2 கவிதைகளும் இதே பகுதியில் இடம் கொண்டது தற்செயலானது  எனலாம். அந்த கவிதைகள் கருநீல உரையாடல், வளர்சிதை. 

இதில் வளர்சிதை கவிதை பாக்கியம் சங்கரின் நான்காம் சுவர் திருப்பாலை நினைவுபடுத்தியது. 

மற்ற கவிதைகளில் சரியான சொற்களை சேர்த்தும் தேவையற்ற சொற்களை  நீக்கியுமிருந்தால் (குறிப்பாக, ‘பேராண்மையின் பலன்’) சராசரிக்கும் கீழான மனிதர்கள் இயலாமைகளையும் வறுமைக் கோட்டினை அழிக்காமலும் நீட்டித்து கொண்டும் பாதுகாத்து கொண்டும்  இருக்கும்  சுயநலமுள்ள அரசியலை  சொல்லும் சிறந்த கவிதையாகவும்  மாறியிருக்கும். 
  
 
கூடுதலாய் ஒரு வால்  


கூடுதல் என்பது மிகையோ என்று பொருள்பட்டிருந்தாலும், மிகச் சரியாக, அளவாக சொல்லப்பட்ட கவிதையாக சொல்லலாம். 
சமீப நாட்களில் முகநூலில் ஒரு விவாதம் போய்க் கொண்டு இருந்தது. இறப்பு செய்திக்கு கீழேயிடும் கருத்தில் ‘RIP’ என்று போடக்கூடாது என்று. காரணமாக அவர்கள் சொல்வது, ‘ஆத்மா’ காத்திருக்க கூடாதாம் உடனே மோட்சமோ, சொர்க்கமோ  ஏதோ ஒன்றை அடைந்து விட வேண்டுமாம். மத நம்பிக்கைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. 


சிலுவை சுமப்பவர்க்கெல்லாம்
சாத்தியமில்லை
மூன்றாம் நாள்
உயிர்த்தெழல்.
(பக்:60)


அதில் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுபாவின் இந்த கவிதை போன்றே எல்லோருக்கும் சாத்தியமாகாத ஒன்று தானே?

ஊடல்


வார்த்தைகளை
எய்து முடித்த பின்
நிராயுதபாணியாய்
போரைத் தொடர்கிறது
மெளனம்
(பக்: 65)


ஆம், கோபத்தில், உணர்ச்சி வேகத்தில் சொல்லப்படும் சொற்களை பிடித்துக் கொண்டு தொங்கியே மீதிருக்கும் நாட்களையும் ரணகளமாக்கி கொள்(ல்)கிறோம். 
தென்றல் சிவகுமாரின் கவிதையொன்று நினைவுக்கு வந்தது.

கைவிடப்பட்ட சொற்கள்
எதற்காகவும் ஏங்குவதில்லை
அகன்ற புன்னகையுடன்
படம் பிடித்துக் கொள்கின்றன
அர்த்தத்தின் அடர்த்தி
குறையக் கூறிய
நீர்க்க நீர்க்க களியாட்டம்
உரத்துச் சிரிக்கும்
காலகால மெளத்தின்
கண்ணோரம் துளிர்க்கிறது
நீர்த்துப் போகாத மெய்த் துளி. 

சொற்களின் முழுபலத்தையும் மெளனத்தின் வலிமையான அடர்வையும் இது போன்ற கவிதைகளில் உணர முடியும். சுபாவின் கூடுதலாய் ஒரு வாலில் இருப்பதுப் போல. 
 
ஆதி நிலத்தின் மிச்சங்கள்


‘தயைகூர்ந்து’ என்ற கவிதையில் ஆயுதம் ஏந்தி வன்முறையாக  பறிக்கப்படும் நிலத்தின் காட்சி பதிவாகியிருக்கிறது. அதுவே ஆதி நிலத்தின் மிச்சங்களையும் பறிக்கொடுத்த நிலையை சொல்லிவிடுகிறது. இந்த பகுதியில் மீதி இருக்கும் கவிதைகளில் அநேகமாக  கடவுளின் தேசமாக கருத்துப்படுகிறது.  அப்படியாக இருக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாக நம்புவதால் தொகுப்பில் நான் அந்நியப்பட்டுப் போனேன்.  

கதவுகளின் குரல்கள்


கதவுகளின் குரல்கள் நாம் என்றேனும் கேட்டு இருக்கிறோமா? அதற்கு என்று தனிக்குரலாகவா அது இருக்கப் போகிறது. கதவின் பின் இருக்கும் அறையின் வெளிச்சத்தையும் இருளையும் தீபங்களையும் குப்பைகளையும் சார்ந்தே அது பேசுகிறது. ஆனால் வெளி உலகுக்கு செல்லும் வழியாகவோ தொடர்பு கருவியாகவோ கதவு இருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது. இதனை திடீர் வெளிச்சமும் இருளும் கண்டு துணுக்குற்ற குழந்தையை, கருவில் உருக்குலைக்கப்பட்ட குழந்தை தாயின் வழியாக பார்க்க செய்து  கவிதையில் கடத்துகிறார் சுபா.  
தலைக் குளித்து உலர்த்த நேரமில்லாத பெண்ணின் முதுகை நனைக்கும் துளிகள், கட்டியணைக்க ஏதுவான சுவர்களை தேடுதல், பவர் ஆஃப் செய்வதற்குள் உறங்கும் மகளின் பிரபஞ்சம்   என்பதின் வழியாக தொகுப்பின் கடைசி பகுதியான இதற்கும்  முதல் பகுதியான ‘திறந்தே கிடைக்கும் வீடுகளுக்கும்’ தொடர்பு உண்டு என்பதை  வாசிக்கும் போது கண்டு உணரலாம்.
சுபா செந்தில்குமாரின் இந்த தொகுப்பு பேரனுபவத்தை, வேற்று நிலத்தை,  கள நிலவரத்தை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது (இது சொல்ல வேண்டும் என்று கட்டாயமில்லை) என்று சொல்லவில்லை  என்றாலும், ஒன்றை மற்றொன்றாக பார்ப்பதும் இயல்பை ஏற்றுக்கொண்டும்  மனிதர்களில் எப்போதேனும் வெளிப்படும் மனிதத்தையும் பாதிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் வாதைகளையும்  அதனின் அனுபத்தையும்  கடத்த முயன்று இருக்கிறார். அவரிடம் இன்னும் சொல்லி தீராதவை ஏரளமாக இருக்கின்றன என்றும் தொடர்ந்து சொல்லுவார் என்ற நம்பிக்கையையும் இத்தொகுப்பு தருகிறது. இனி எழுதப்போகும் கவிதைகளில் லைக்குக்கும் ஷேருக்கும் மனமிறங்காமல், தேவையற்ற சொற்களை நீக்கி, கூர் மிகுந்த கவிதைகளை தரவேண்டும். முக்கியமாக, ‘ன்’ விகுதி (மீன் வெட்டுபவன், குதிரைக்காரன்) தவிர்த்தல் அவசியம்.  பெண்பாலுக்கும் இது பொருந்த கூடியதாக  இருப்பினும் சில இடங்களில் அவர்கள் வயது குறைந்தவர்களாகவும் சிறுமியாகவும் சுட்டுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் தவிர்க்கிறேன்.  

யாவரும் பதிப்பகம், சென்னை

பக்கம் : 80

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...