“அம்மா மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா அப்பா செத்திருக்க மாட்டாரு!” என்றான் அரசு.
அப்பாவின் படையலுக்கு வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக புறப்பட்டு சென்றபின்னர் வீடு மீண்டும் வெறுமையைப் போர்த்தத் தொடங்கியிருந்தபோது எழுந்த அவன் குரல் மாலதியைத் திடுக்கிட வைத்தது. அண்ணன் என்ன சொல்லவருகிறான் என்பதையும் தன் காதில் விழுந்த சொற்களை நம்பலாமா என்றும் யோசித்து குழம்பிவிட்டாள்.
அரசுவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். முகத்தைப் பார்ப்பது அவன் உதிர்த்த சொற்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவலாம் என நம்பினாள்.
“பதினாறு நாள் வரைக்கும் அப்பா உயிர் இங்கயே இருந்து எல்லாத்தையும் பார்த்துகிட்டுதான் இருக்கும். யார் யார் என்னென்ன செஞ்சாங்களோ எல்லாத்துக்கும் அனுபவிப்பாங்க,” விட்டத்தைப் பார்த்து பேசியவனின் குரலில் மெல்லிய விசும்பல் தட்டுப்பட்டது. பெருமூச்சு விட்டதில் தேகம் சற்றே விம்மி சரிந்தது. ஊதுபத்தி சாம்பிராணி விடாபிடியாய் வீடு முழுக்க பரவவிட்டிருந்த புகை திரட்சி சற்றே அடர்த்தி கம்மியிருந்தாலும் தொண்டை காய்வதாக உணர்ந்தாள் மாலதி. செருமிக்கொள்வது அவள் ஏதோ பேச வருகிறாள் எனும் தோரணையை உருவாக்கலாம். அவள் எதையும் பேச விரும்பாததால் எச்சிலை மட்டும் விழுங்கிக்கொண்டாள்.
அப்பாவின் படத்தைப் பார்த்தாள். பூஜைக்கு முன்னர் அம்மா அத்தனை முறை தொட்டுத் துடைத்து பராமரித்து வைத்த குங்குமப் பொட்டு அப்பாவின் நெற்றியிலிருந்து ரத்தத் துளியாய் வழியத் தொடங்கியது. அவர் கண்களால் அளந்து அளந்த சரிசெய்த மாலையும் ஒரு பக்கம் சரிந்துவிட்டிருந்தது.
அரசுவின் ஒவ்வொரு சொல்லும் மிகத் திட்டவட்டமாக தீர்க்கமாக முன்பே எழுதி மனனம் செய்து வைத்ததைபோல் பிசகல் இல்லாமல் வெளிபட்டது. அவை வெறுமனே உயிரற்ற சொற்களாக அல்லாமல் உள்ளத்து உணர்வுகளாய் உருகொண்டிருந்தன. ஒவ்வொரு சொல்லும் அவை கொண்டிருக்கும் அர்த்தத்திலும் இன்னொரு சொல்லுக்குத் தரப்பட்ட இடைவெளியிலும் பற்பல பாவங்களைக் கண்முன் கொண்டு வந்து காட்சிகளாய் விரித்துக் காட்டின. மூளையினுள் ஏதோவொன்று எம்பி எம்பி அதிர்வுகளை உருவாக்கி நரம்புகளில் கொப்பளித்து உடல் முழுதும் பரவி நோகடித்ததில் சில நூறு முறையேனும் அவள் மாய்ந்து போயிருந்தாள்.
ஒரு வாரத்திற்கும் மேலாக அவிழ்க்கப்படாத முடிச்சாய் அவளை இம்சித்து கொண்டிருந்த குழப்பமொன்று இப்போது அரசுவின் வாக்குமூலத்தினால் உருண்டு திரண்டிருந்த முடிச்சின்மீது அதீத ஒளிபரப்பி அவளைத் திணறடித்தது. நன்றாக யோசித்தால் அரசு இதையே கடந்த ஒருவாரமாகவே செயலால் முக அசைவால் மௌனத்தால் மறுபடி மறுபடி சொன்னதாகவே அவளுக்குத் தோன்றியது. அவன் புறக்கணிப்பும், அலட்சியமும், அம்மாவிடம் விலகிச்செல்லும் குணமும், யாரோ ஒருவனாகி விட்டதுபோன்ற பாவனையும் இந்தச் சொற்களைத் தாங்கியவைதான் என தனக்குள் உறுதி செய்துக்கொண்டாள். குனிந்து தலையை இரு கரங்களால் அழுத்திக் கொண்டாள். நடந்த அனைத்தையும் மீண்டும் ஒருமுறை மனம் நிகழ்த்திக்காட்டத் தொடங்கியது.
“உங்க அண்ணன் குடும்பத்த தவிர இந்த வீட்டுல யாருக்குமே அப்பாமேல அக்கறை இல்லயாமே… ஏம்புள்ள நெசமாவா?”
தனக்கு அப்பாவை பிடிக்காது என்பதைப் பலரும் சொல்ல கேட்டிருந்தாலும் இங்கே ‘யாருக்கும்’ என்று சொல்வதன்மூலம் தன்னுடன் வேறு யாரை எதனால் சேர்க்கிறார்கள் என்பதை அவளால் அந்தச் சூழலில் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அத்தை அப்படி தானாகச் சொல்பவர் இல்லை. அவள் ஒருவகையில் அண்ணனின் குரல்.
மனம் சட்டென தன்ணுணர்வு கொள்ள கண்கள் வறண்டு, உணர்வுகள் மழுங்கி, உடல் ஒடுங்கி தளர்ந்துபோனாள். அதற்கு முந்தைய கணம்வரை அப்பாவின் தலைமாட்டில் உட்கார்ந்து அழுததை நினைக்கும்போது மாலதிக்கு அசூயையாய் இருந்தது. தன்னை உட்படுத்திய அந்தச் சொற்கள் மாலதியை அரித்தெடுத்தன. அப்பாவையன்றி வேறொருவரை தன்னால் அவ்வளவு வெறுக்க முடியுமா எனச் சுயவிசாரணை செய்துக்கொண்டாள்.
அப்பாவுடன் பேசாமல் விலகியது, அவர் வன்மங்கள் நிறைந்த ஆளாகி நின்றபோதெல்லாம் எதிர்த்தது ஆரம்ப நாட்களில் என்னவோ பெருமையாகத்தான் இருந்தது. பின்னர் அதுவே இயல்பாக மாறி போனதில் அதற்குமேல் அதில் பெருமையாய் உணர ஒன்றும் இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் நோய்மையால் உடல் பலகீனமடைந்து கட்டில் கிடையாகி, விலகி செல்லும் கைலியை இழுத்து மூடிக்கொள்ளகூட சக்தி அற்றுபோய்விட்டிருந்தவரைத் தொட்டு பணிவிடைகள் செய்ய உடலும் மனமும் கூசியபோதுதான் அப்பாவிடமிருந்து வெகு தூரம் விலகிவந்துவிட்டதே அவளுக்குப் புரிந்தது. எல்லாவற்றையும் மன்னிக்கும்படி தூண்டும் காலம் அவளை மட்டும் எதிர்விசையில் நடத்தி, துன்புறுத்தி பூட்டி சிறை வைத்திருந்தது.
‘பதினாறு நாள் அப்பா பார்த்துக்கொண்டிருப்பாராமே… யார் யார் அப்படி என்ன செய்துவிட்டார்கள்…’
மாலதி மரத்துப் போன கால்களை நீட்டி அமர்ந்துகொண்டாள். அப்பாவே இல்லை என்றானபின், இனி என்ன சொல்லிதான் அரசுவை சமாதானப்படுத்திவிட முடியும். ஒருவகையில் அவனைப் பார்க்க மாலதிக்குப் பாவமாகக்கூட இருந்தது. அது தன்மேல் ஏற்பட்ட பரிதாபத்தின் நிழலாக இருக்கலாம் என நினைத்துக்கொண்டாள். தன்னைப்போலவே அவனும் அனைத்தையும் ஒற்றைப்படையாகப் புரிந்து கொண்டு சார்பெடுக்கிறான். அப்பாவின் இறப்பு அவனது ஒட்டுமொத்த உள்ளக்கிடங்கையும் கிளறி களைத்துப்போட்டுள்ளது. அவன் கட்டுப்படுத்த முடியாதவனாக மாறியிருந்தான்.
அத்துடன் பேச்சு வார்த்தையெல்லாம் முடிந்துவிட்டது என்ற தோரணையில் மௌனம் நிலவியது. மாலதி நிமிராமலேயே அவனைப் பார்க்க முயன்றாள். அவளைப்போல அரசுவும் தன்னுள்ளே ஊடுருவிச் சென்றுகொண்டிருப்பதை அவளால் உணர முடிந்தது.
இனி ஒருபோதும் அம்மாவை மன்னிக்கவே முடியாது எனும் அளவு அவன் இறுகிப்போயிருந்தான். ஒருவரையும் எதிர்த்து பேசாத, தனது விருப்பம், கோபம் என எதையும் பிறரறியும்படி காட்டிக்கொள்ளாத அம்மாவின் சுபாவம் ஆழத்தில் பிடிவாதமும் சுயநலமும் நிரம்பியதாக இருந்துள்ளதை அவன் மீண்டும் மீண்டும் நினைவுகளில் ஓட்டிப்பார்த்து இறுக்கத்தின் பிடியை இன்னுமின்னும் கூட்டிக்கொண்டிருந்தான். அதை உறுதியாக நம்பும்படியான சாட்சியங்களை அவன் மனம் தன்னிச்சையாய் ஓயாமல் தொகுத்துக்கொண்டிருந்தது.
அப்பாவுக்கு முதல் முறை நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சேர்த்தபோது தன்னுடன் வந்துவிடும்படியாக எத்தனையோ முறை அவன் அழைத்தும் வாழ்ந்த வீட்டைவிட்டு வரமுடியாது என்று சொல்லி தவிர்த்ததுதான் அம்மாவுடைய பிடிவாதத்தின், சுயநலத்தின் உச்சமென கூறினான்.
“அவங்களோட சுயநலந்தான் அப்பா உயிரை காவு வாங்கிடுச்சி. உனக்கு நினைவிருக்கா? அம்மா கடைசிவரை எங்கூட வரவேயில்ல. எத்தன முறை கூப்பிட்டேன். வந்தாங்களா? வாயத் தொறந்து ஒரு வார்த்த பேசலையே. அதட்டி கூப்பிட்டபோது அழுதே காரியத்த சாதிச்சிட்டாங்க. இங்க இருந்தாதானே கூட்டாளிங்ககூட கோயிலு, யாத்திரை, கல்யாணமுன்னு சுத்த முடியும்!”
அவன் அப்படி கூறியபோது மாலதி அம்மாவை எட்டிப்பார்த்தாள். அம்மா வெளியில் அமர்ந்து நெடுந்தொலைவில் மக்கிப்போன மரக்கட்டையில் பளிங்குப்பூவென மளர்ந்திருந்த சிப்பிக்காளான்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அண்ணன் பேசியது அவர் காதுகளில் விழுந்திருக்காது என்ற நம்பிக்கை அப்போதைக்கு நிம்மதியைத் தந்தது.
“பேரப்பிள்ளைங்கள பாக்குறதும், பீ மூத்திரம் அள்ளுறதும் அவங்களுக்குப் புடிக்கல. அவங்களுக்கு என்னைப் புடிக்காத மாரி என் புள்ளைகளையும் புடிக்கல. அது கெடக்கட்டும். நான் எனக்காகவா கூப்புட்டேன்? இப்ப என்ன ஆச்சு பாத்தியா? எங்கூட வந்திருந்தா அப்பாவுக்கு இப்படி ஆக விட்டிருக்க மாட்டேன்ல”.
“…”
அந்த நேரம் பார்த்து ஜோனி அரசுவின் பக்கத்தில் இருந்த ஆளில்லாத நாற்காலியை நோக்கி குரைத்தபடி வந்தது. அது அப்பா அமரும் நாற்காலி. பெரும்பாலும் அதில் வேறெவரும் அமருவதில்லை. அப்படி அமரும் ஒருவர் அப்பாவின் வம்படிக்குத் தயாராக இருக்க வேண்டும்.
தான் அவ்வளவு நேரம் பேசிய எதற்கும் மாலதியிடமிருந்து எந்த பதிலும் இல்லாதது அவனை சீண்டியிருக்க வேண்டும். விருட்டென அவன் போட்ட சத்தத்தில் ஜோனி வாலை கால்களுக்கு இடையில் நுழைத்தபடி அரண்டு ஓடியது.
அம்மா மெல்ல திரும்பி ஜோனியைக் கைக்காட்டி அழைத்தார். ஏதோ அதனிடம் பேசினார். அதுவும் வாலைக்குழைத்து அவர் காலடியில் படுத்துக்கொண்டது. அம்மா வாசலின் விளிம்பில் அமர்ந்திருப்பதை மாலதியும் அப்போதுதான் பார்த்தாள். அவள் கண்களின் மாற்றத்தில் அரசுவும் அதை அறிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் அவனால் சொற்களை அடக்க முடியவில்லை. அடக்கினால் வெடித்துவிடுவேன் என்பதுபோல உடலை மூச்சுக்காற்றால் பெருக்கியிருந்தான்.
“நீ ஒடனே பொம்பளைங்க உரிம மயிருன்னு பேசாத. சீக்காளிய தனியா உட்டுட்டு இஷ்டத்துக்கு அவங்க சுத்தரதுக்கு நீ வக்காளத்து வாங்காத. ஆபத்து அவசரத்துக்குக் கூப்பிட ஒருத்தரும் இல்லாத இந்தக் காட்டுல எதுக்கு வாழனும்? கொறஞ்சபட்சம் அவர்கூட எப்பவும் இருந்து ஒழுங்கா கவனிச்சிருக்கணும்ல. அவர தனியா வுட்டுட்டு சிவராத்திரி, நவராத்திரின்னு போனாங்க. இப்போ! கண்ணீர் வடிச்சி என்ன ஆவப்போவுது!”
அண்ணன் அவ்வீட்டை காடு எனச் சொல்வது அவளுக்கு வியப்பாக இருந்தது. சீடிங் அப்படி ஒன்றும் புறநகரல்ல. அதிலும் இது அம்மா சம்பாதித்து வாங்கிய நிலம். இன்று அதற்கு விலை இல்லாவிட்டாலும் என்றாவது தங்கம் போல விலை போகும் என அண்ணனுக்கும் தெரியும். அவசரத்துக்கு டாக்ஸி கிடைக்காததோ பேருந்துக்காக கொஞ்ச தூரம் நடந்து போக வேண்டிய நிலையோ காடு எனும் கற்பனைக்குப் பொருந்தாது. ஆனால் அவள் ஒன்றும் பேசவில்லை. பேசினால் அண்ணனின் குரல் இன்னும் உச்சமாகும். அம்மாவின் காதுகளில் அதன் சிறு பகுதி சென்று சேர்ந்தாலும் உடைந்துவிடுவார்.
உண்மையில் இந்தப் பேச்சு ஆரம்பிக்கும்போது அம்மா வீட்டில் இல்லாதது மட்டுமே மாலதிக்கு ஆறுதலாக இருந்தது. சுடுகாட்டில் அப்பா புதைக்கப்பட்ட இடத்தைப் பார்க்கப் போயிருந்தார். திரும்ப வந்தபிறகு மௌனமாக வெளியிலேயே அமர்ந்துவிட்டார்.
நிமிர்ந்து அரசுவைப் பார்த்தாள். பின்கழுத்தை அழுத்தியவாறு தலையைத் தொங்கப்போட்டிருந்தான்.
அம்மாவைப்பற்றி எல்லா காலமும் அவனிடம் ஏதாவது குற்றச்சாட்டுகள் இருந்தபடியேதான் இருந்தது. தன்மீது அன்புகாட்டவில்லை, தன்னைக் காட்டிலும் மாலதியின்மீதே அம்மாவுக்கு அன்பு, அக்கறை என்று சின்ன வயதில் நேரடியாகவே அம்மாவிடம் புலம்புவான். அம்மாவுக்கு ஏனோ அது ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. அப்பாவே முழுவதும் ஆக்கிரமித்துவிட்டிருந்த வாழ்வில் அம்மாவுக்கு வேறு எதுவும் பொருட்டாக இருக்க வாய்ப்பிருக்க முடியாதுதான். இயல்பாகவே அவனுக்கிருந்த தாழ்வு மனபான்மையும் அம்மாமீது அவன் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளும் திருமணமாகி அவனுக்கென்று தனியாக குடும்பம் குழந்தை என்று ஆனபின் சற்றே வேறுவிதமான குற்றச்சாட்டுகளாய் தலைக்காட்டத் தொடங்கியிருந்தன. அப்போதும் அம்மாவுக்கு அவையெல்லாம் பொருட்டில்லை.
இன்று அம்மாவை கொலைகாரியாக சித்தரிக்கும் அளவுக்கு அவன் மனதில் வன்மம் கூடியிருப்பது மாலதியைச் சமன்குலையச் செய்துகொண்டிருந்தது.
புழுக்கம் கசந்து, வியர்த்துக்கொட்டியது. புழுக்கத்தின் ரேகைகள் ஆயிரமாயிரம் கைகளாகி தன்னை அழுத்தி நெருக்குவதாக, புழுக்கம் அன்பற்று கசப்பை மட்டுமே கக்கும் விரோதியாக, உடலுக்கு ஒருபோதும் ஒவ்வாத கொடுங்கிருமியாக உணர்ந்தாள். சட்டென எழுந்துபோய் மின்விசிறியைச் சுழலவிட்டு மீண்டும் வந்து அதே இருக்கையில் அமர்ந்தாள். நாளாபுறமும் செம்பனை மரம் உறிஞ்சி கக்கிக்கொண்டிருந்த சூட்டை மின்விசிறி இன்னும் திடமாய் பரப்பத்தொடங்கியது. உடலில் ஊடுருவிய புழுக்கம் இருக்கையிலும் புரையோடி பிட்டத்தையும் முதுகையும் நனைக்கத் தொடங்கியது. சட்டையின் முன்கழுத்துப் பட்டையை இழுத்து கொஞ்சமாய் ஊதிக் கொண்டாள். எழுந்து வெளியே செல்லலாம். அரசு பின்னால் வந்து பேச ஆரம்பித்தால் அம்மா நோகடிக்கப்படுவார் என்பதால் தயங்கினாள்.
“லூமுட்ல சொந்தகாரங்க கல்யாணத்துக்குப் போனப்ப அப்பாவ இங்கயே உட்டுட்டாங்க. அஞ்சி நாளு சரியா சோறு தண்ணியில்லாம சுத்திகிட்டு கிடந்தாரு. நா போய் பார்க்கலனா அப்போவே போய் சேந்திருப்பாரு”.
அது அப்பாவின் தம்பி மகள் திருமணம்தான். போகாவிட்டால் அப்பாவின் பெயர் கெட்டுவிடும் எனத்தான் அம்மா போனார்.
“அவருக்குதாண்ண போவ புடிக்கல. அங்க போனா குடிக்க முடியாதுல்ல.”
“புடிக்கலண்ணா அப்படியே விட்டுருவாங்களா? சாப்பாட்டுக்குக்கூடவா கையில காசு கொடுத்துட்டு போவ மாட்டாங்க?”
அண்ணனுக்கு இதற்கான பதில் தெரியும் என மாலதி அறிவாள். வீட்டில் பிரிக்காமல் வைத்திருக்கும் அரிசி, பருப்பு மூட்டைகளையே விற்று குடிப்பவர் அப்பா. பணம் கொடுத்துவிட்டு சென்றால் நிலைமை என்னவாகும் என அறியாதவன் இல்லை. பின்னர் அவனாகவே பதில்களைத் தொகுத்துக்கொள்வான் என பெருமூச்சொன்றை விட்டாள். சன்னலில் தெரியும் கொய்யா மரக்கிளையில் நெடுநேரம் கத்திக்கொன்டிருந்த பறவையைப் பார்த்தாள். அவள் பார்ப்பது தெரிந்துவிட்டதுபோல; அங்கிருந்து பறந்துபோனது. பார்வையில் சீண்டல் உணர்ச்சி உள்ளதா என்ன? பறவைகளின் நுண்ணுணர்வு அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“அவர் வாழவே விரும்பல. அதான் இவ்வளவு சீக்கிரமாய் போய்ச் சேர்ந்துட்டாரு.”
அரசுவின் மனவோட்டங்களுக்கு இசைந்தபடி அப்பாவின் மரணம் முதலில் கொலையாகவும் பின்னர் தற்கொலையாகவும் மாறி மாறி அம்மாவின் தலைக்குமேல் பருந்தாய் சுற்றிக்கொண்டிருந்தது.
“அவராகவேதான் நெஞ்சைப் பிடிச்சிக்கிட்டு ஆசுபத்திரியில் போய் சேர்ந்தாரு. உங்களுக்கே தெரியும்,” என்றாள். அண்ணன் மிகையாக அப்பாவைப் பற்றி கற்பனை செய்திருப்பதாகத் தோன்றியது.
“உனக்குத் தெரியாது. அப்பாவே என்கிட்ட நிறைய தடவ சொல்லியிருக்கிறாரு. எத்தன தடவ அழுதுருக்காரு. இவங்க அவர கவனிப்பதே இல்ல. அப்படியே விட்டுட்டாங்க. முன்னெல்லாம் எதுத்து பேசாம இருந்துட்டு, வயசான காலத்துல அவர பழிவாங்கிட்டாங்க. அன்பா ஒரு வார்த்த பேசறது இல்ல. உனக்கு இது புரியாது. நான் பட்டுருக்கேன். சின்னப்பிள்ளையிலேர்ந்து இப்ப வரைக்கும். என்னையவிடு. அப்பா பாவம்ல. வயசாச்சுதானே.”
தனக்கு முன் பிறந்தவனென்பதால் அரசு அவளைக் காட்டிலும் வீட்டில் நிகழ்ந்த பல சம்பவங்களிலும் சாட்சியமாய் இருந்திருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டாள். அவள் அறிந்ததை எல்லாம் அவளைவிடவும் அதிகமாக அவன் அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவற்றுக்குப் புதுப்புது கற்பிதம் வரைந்து இன்று அதை அப்பாவின் மரணத்தில் ஓர் உயிர் பறிப்புக்குக் காரணமாய் சொல்வதை மாலதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உண்மையில் அவன் சித்தரிக்கும் கோர ராட்சசிதானா அம்மா? அல்லது அப்பாதான் குறைகளுக்கு அப்பாற்பட்டவரா? மாலதி தக்கவைத்திருந்த நிதானம் கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்துகொண்டே இருந்தது. ஒரு எல்லைக்குள் நின்று எதையும் நிதானமாய் முழுமையாய் யோசிக்க முடியாமல் மனதின் வேகத்திற்கு பழைய சம்பவங்கள் ஒவ்வொன்றும் காட்சிகளாய் நினைவில் வந்து வந்து மோதின.
தனது பிரக்ஞையில் ஆழ்ந்து போயிருந்த அப்பாவின் நினைவுகளிலிருந்து அவரை உருவி எடுக்க முயன்றாள். தகவல்களாய், காட்சிகளாய் துள்ளியமற்று நொடிக்கு ஆயிரம் பிரதிகள் ஒவ்வொன்றாய் பரிசீலிக்க நேரமில்லாமல் வெளிபட்டு உதிர்ந்தன. ஆனால் எதுவுமே பின்தொடரும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் படவில்லை. அதே சமயம் சுத்தமாய் மறக்கடித்துக் கொள்ளும் அளவுக்கு அசட்டையானதாகவும் இல்லை. அவை அப்படியே விட்டுவிடப்பட்ட நினைவுகள். மேற்கொண்டு என்ன யோசிப்பதென தீர்மானிக்க விருப்பமில்லாமல் மாலதியின் மனம் அம்மாவின் நினைவுகளை அசைபோட்டது.
வீட்டில் அம்மா இல்லாமல் அப்பா தனியாக இருந்ததாக ஓர் இரவைக்கூட அவளால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.
ஈராண்டுகள் சித்தர் ஆசிரம மறுவாழ்வு மையத்தில் அப்பா இருந்தபோதுகூட வாரத்திற்கு இரண்டு முறை மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு போய் அம்மா அங்கேயே தங்கிவிட்டு வந்தார். போதையிலும் ஊர் பொறுக்கி உதைபட்டு வலியில் கிடந்த நிலையிலும், சாராய போதையில் தன்னை மறந்த நிலையிலும் வீட்டைச் சூழ்திருந்த சூன்யத்தை கிழித்துக் கொண்டு அப்பா புலம்பியதும் முனகியதும் அம்மாவின் பெயரைத்தான். கூடிக்குடித்தவர்கள் ஆண்டுக்கொருவராய் குடல் வெந்தும், ரத்தம் கக்கியும் மடிந்துவிட, அத்தனை ஆண்டுகளில் விபத்துகள், காயங்கள், நோய்மை என ஒவ்வொன்றிலிருந்தும் தப்பி அப்பா உடலில் தங்கி இயக்கிக் கொண்டிருந்த சிற்றுயிர் புழுத்தாடும் உடல்வயமான இத்யாதிகளுக்கு மட்டுமானதாகத்தான் இருந்தது. உண்மையான உயிர் அம்மாவிடம் கண்ணுக்குத் தெரியாத முடிச்சொன்றில் பத்திரப்பட்டிருந்தது. இதை அறிந்தோ என்னவோ அப்பா போடாத குதியாட்டங்களே இல்லை. அப்பாவின் போக்குகளால் நொந்துபோன சந்தர்ப்பமொன்றில் அம்மா பூச்சி மருந்து குடித்ததை அரசு அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. இதையெல்லாம் கடந்து அம்மா சுயகாலில் நின்று குடும்பத்தைக் கவனித்தது வீடு வாங்கியது பற்றி அவனே பலமுறை கூறியிருக்கிறான்.
மாலதி மீண்டும் சட்டையின் முன்கழுத்துப் பட்டையை இழுத்து ஊதினாள். மனதில் கூடியிருந்த இறுக்கம் புறத்தே புழுக்கத்தையும் கூட்டியிருப்பதாய் உணர்த்தியது.
சற்றே தூரத்தில் அமர்ந்திருந்தாலும் அரசுவின் உள்ளக்கொதிப்பு புறச்சூழல் புழுக்கத்தின் விசையைத் தூண்டியபடியே இருந்தது. அவனொன்றூம் இவ்வுலகில் தோன்றிய முதல் உயிர் அல்ல. இப்பூமியில் தோன்றிய கோடானகோடி உயிர்களின் நினைவுகளைச் சேமித்து வைத்திருக்கும் மரபணுதான் அவனுக்குள்ளும் உயிரோடிக்கொண்டிருக்கிறது. அதிலும் அப்பாவின் சிருஷ்டியல்லவா அவன். அவள் சற்றே நிதானித்தாள், பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஒருகணம் நிகழ்காலம் முற்றிலும் மறைந்துபோய் அம்மாவின் நினைவில், அவரைச் சுழன்றபடி இருக்கும் உணர்வில் அவளது மனம் முழுவதும் ஒப்புக்கொடுத்துவிட்டிருந்தது.
அன்றுதான் அம்மா முதன்முதலாய் உடைந்து அழுதார். “ஐயோ போயிட்டீங்களா?” என்ற சொல் உயிரிலிருந்து புறப்பட்டு பெருங்குரலெடுத்து எல்லா கதறல்களையும் மிஞ்சி இருளாய் அந்த இடத்தையே சூழ்ந்துகொண்டது. யாருமே அணைத்துக்கொள்ள சாத்தியமில்லாதபடி இரு கைகளையும் விரித்து ஆகாயத்தைப் பார்த்து அலறினார். தாரை தாரையாய் கண்களில் கண்ணீர். அந்த சோகம் இதுவரை அவருக்கு நிகழ்ந்த இழப்புகளிலேயே முதன்மையானதாகவும் ஈடுசெய்ய முடியாததாகவும் இருந்திருக்கக்கூடும். எப்போதும் எவராலும் பகிர்ந்துகொள்ள முடியாத சோகமது. அன்று எல்லா சொந்தமும் கூடிநின்று அம்மாவை அணைத்து ஆறுதல் சொல்ல காத்துகிடந்தது. யார் இருந்தாலும் அன்று அம்மா யாருமற்றவரானார். அவரது அழுகையோ, கதறலோ, சொல்லாமல் விட்ட மனவேதனைகளோ, முக பாவங்களோ ஏதோ ஒன்று அதை சொல்லிக் கொண்டே இருந்தது.
“பிழைக்கவே முடியாதுனு டாக்டருங்க சொன்னப்பகூட போராடி உங்கள மீட்டு வந்தனே. நான் இல்லாத நேரம் பார்த்து அந்த எமன் உங்கள கூட்டிக்கிட்டானா… உங்களுக்கொரு குறையும் வைக்கலியே சாமி. உங்களுக்கு முன்னாடி நான் போனா உங்கள யாரும் பார்த்துக்க மாட்டாங்கனுதான் இப்படி முந்திக்கிட்டிங்களா…”
அம்மா ஓயாமல் அரற்றினாள். கடைசிவரை கண்ணீராலும் மௌனத்தாலுமே அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தாள். இவ்வுலகில் தோன்றி, அலைந்து திரிந்து, மடிந்த ஒருவனின் பிரிவால் உண்டான சோகம்போல் அல்லாமல் வாழ்வின் ஓட்டத்திற்கு மெல்லிய கோடாய் முன்னகர்ந்த கயிறு ஒன்று அறுபட்டுபோக ஒட்டுமொத்த மனிதகுலமே திக்கற்று நிற்கும் அனுபவமாய் அது இருந்தது. பேண்ட் வாத்தியங்களும் தாரை தப்பட்டைகளும் வாசற்படியில் இறுதி ஊர்வலத்திற்கு நின்றபோது அழாத ஜனம்கூட அழுதது.
முச்சந்தி வளைவில் காரின் சக்கரம் வெடுக்கென திரும்பியதில் மணல் உராய்ந்த சத்தம் வீடுவரை கேட்டது. கார் வீட்டின்முன் வந்து நின்று, கதவு திறந்ததுதான் தாமதம். நஞ்சானும் குஞ்சானுமாய் அரசுவின் பிள்ளைகள் காரை பிதுக்கிக்கொண்டு இறங்கி பலகை தரையில் தடபுடவென காலடிகளைப் பதித்தபடி வீட்டினுள் ஓடிவந்தார்கள்.
அவர்களைப் பின்தொடர்ந்து ஜோனி வாயில் பந்தைக் கவ்விக்கொண்டு ஓடியது.
“ஏய்…! ஜோனி அந்தப்பக்கம் போ!”
முதலில் குரல்மட்டும்தான் வந்தது. ஊடே அம்மாவும் வந்தார். காரிலிருந்து இறங்க முயன்ற கடைசி பேரனை இடுப்பில் அமர்த்தியிருந்ததில் உடலைக் கொஞ்சம் கோணியபடி நடந்து வந்தார்.
இப்போது மாலதியின் கவனம் முழுவதும் அம்மாவிடம் திரும்பியிருந்தது. அப்பாவின் மரணத்துக்குப் பிறகான நாட்களிலிருந்து அம்மா யார் முகத்தையும் பார்த்து பேசுவதில்லை. பேசுவதேகூட வெகுவாக குறைந்திருந்தது. பெரும்பாலும் குழந்தைகளுடனேயே இருந்தார். குழந்தைகள் இல்லாத சமயமெல்லாம் ஏதாவது வேலையைச் செய்து கொண்டே இருந்தார். இல்லாவிட்டால் வாசலில் அமர்ந்து தூரமாய் எதையோ பார்த்துக்கொண்டிருக்கிறார். எப்போது உறங்குகிறார் எப்போது எழுகிறார் என்பதை சரியாக அனுமானிக்கவும் முடியவில்லை. எப்போதும் அப்பாவிடம் எதிர்பேச்சு பேசிக்கொண்டும் அவரை விரட்டி, விரட்டி வேலை வாங்கிக் கொண்டும் வீட்டை ஆக்கிரமித்து வைத்திருந்தவர் சட்டென எதிலும் ஒட்டுறவற்றதுபோல் மாறியிருந்தார்.
அம்மா அரசுவை உற்றுப்பார்த்தார். பேசியது அனைத்தும் அவர் காதில் விழுந்திருக்குமா என அரசுவும் மாலதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அரசுவின் முகத்தில் இருந்த பதற்றம் மாலதிக்குக் கொஞ்சம் நிம்மதியாகக்கூட இருந்தது.
“ஏன் இப்படி வெக்கையில கெடக்குறிங்க,” என்றவாறே அம்மா நின்றுசுழலும் காற்றாடியைக் கொண்டு வந்து வைத்து அதன் விசையை முடுக்கிவிட்டு கடந்து போனார்.
அம்மாவின் குறுக்கீடு அவனை மௌனத்திற்குள் புதைத்துவிட்டிருந்தது. மற்றபடி அவன் முகத்தில் வேறெந்த சலனமும் தென்படவில்லை. அதற்கு முன்புவரை பேசிய எதற்கும் தொடர்பற்றவன்போல் அரசுவின் கண்கள் எதிரில் இருந்த மீன் தொட்டியினுள் எதையோ ஆழ்ந்து தேடிக்கொண்டிருந்தன. சட்டென எந்த உணர்வையும் வெளிகாட்டாத அடர்ந்த முகமூடியொன்றை அணிந்து கொண்டிருந்தது அவன் முகம். அவனால் எப்படி சட்டென எதையுமே முகத்தில் வெளிகாட்டாமல் இருக்க முடிகிறது. முகத்தில் காண்பிக்கப்படுகின்ற ஒவ்வொரு பாவமும் உணர்வுகளின் வெளிப்பாடு அல்லவா? பாவமே இல்லாத முகம் ஒன்று அவ்வளவு எளிதில் சாத்தியமா?
அவனது சலனமற்ற முகம் மாலதிக்குக் கிலியூட்டத் தொடங்கியது. தான் அதுவரை காத்துவந்த சமாதான சூழல் குழைந்துவிடுமோ என அஞ்சினாள். அவன் மௌனத்தை உடைக்க, அந்தச் சூழலை மாற்ற சட்டென ஒரு சம்பிரதாயமான வார்த்தைகூட தன்னிடம் இல்லை என்று உணர்ந்தபோது தன் இயலாமையை எண்ணி மாலதியின் உடல் புழுக்கத்தால் மேலும் வெந்தது.
“முதல்ல யாரு வந்துட்டு போனானு பார்த்தியா இல்லயா?”
மாலதி யாரை என்பதுபோல பார்த்தாள்.
“அவன் ஏன் இன்னும் இந்த வீட்டுக்கு வறான். அவன கொன்னுருவேன் பாத்துக்கோ. எல்லாம் கூட்டமா சேர்ந்து அனுப்பி வச்சிட்டு நாடகமா போடுறாங்க… மயிரு! அப்பா எல்லாத்தையும் சொன்னாரு… இவங்க அவன்கூட மணிக்கணக்கா போனுல பேசறதையும் அவன்கூட ஊர் சுத்துனதையும்.”
இதைச் சொல்லி முடிக்கும்போது அவன் கண்கள் விரிந்து, கன்னத்தசைகள் இறுகிப் புடைத்திருந்தன. விரல்களை சுருட்டி உலுக்கினான். அவன் உடலின் இறுக்கம் ரோத்தான் நாற்காலி முடிச்சுகளில் உராய்ந்து கிரீச்சிட்டன. குரலை உயர்த்தாவிடுனும் அழுத்தமாய் சொன்ன சொற்கள் பலகை வீட்டின் துவாரங்களில் ஊடுருவி அம்மாவின் காதுகளுக்கு எட்டியிருந்தால்? திக்கித் திணறி அதிர்ந்தவளாய் எல்லாப் பக்கமும் பார்வையை அலைய விட்டாள். எங்கும் அம்மாவைக் காணவில்லை. அம்மாவின் காதில் விழுந்திருக்கலாம் என நினைக்கும்போதே அதுவரை பொட்டு பொட்டாய் மொட்டுவிட்டிருந்த புழுக்கம் வியர்வைத் துளிகளாய் வழியத்தொடங்கியது. கண்முன் தெரிந்த அண்ணனின் உருவம் பிரவாகம் எடுத்த கண்ணீரில் உருகி வழிந்தன. உள்ளிருந்த நடுக்கம் புறத்தேயும் வெளிபடுவதுபோல் தோன்றியது.
“இவங்க வேசி தனத்தால அவரு மனசு நொந்து நொந்தே போய் சேர்ந்துட்டாரு.”
அரசு தொடர்ந்து பேசுவது இன்னுமின்னும் பதற்றத்தை அதிகப்படுத்தவே, அவள் அங்கிருந்து போய்விடுவது அல்லது அவனை அங்கிருந்து அப்புறப்படுத்திவிடுவது சரியெனப் பட்டது.
மரத்துபோன காலை கஷ்டப்பட்டு மடக்கி எழுந்தபோது விக்கித்து நின்றாள்.
அம்மா கையில் துண்டுடன் இரண்டடி இடைவெளியில் நின்றுக் கொண்டிருந்தார். நேராக அரசுவிடம் சென்று வியர்த்து வடிந்த அவன் முன்தலையைத் துடைத்துவிட்டார். அவனிடம் அசைவில்லை. அவன் கழுத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்துவிட்டு துண்டை எடுக்கும்போது அரசு அதனை கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.
துண்டிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டு மகனின் தலையைக் கோதியவர் அப்பாவின் நாற்காலியில் போயமர்ந்தார்.
அற்புதமாக மொழி கைகூடி வந்திருக்கும் கதை இது. இடப்பெயர்களை தவிர்த்தால் எந்நிலத்திலும் இக்கதை பொருந்தக்கூடும். திருகல் சொற்கள் இல்லாமல் இயல்பாக அமைந்திருந்த சொற்களால் கதை வலுப்பெறுகிறது. அரசுவின் அம்மா குறித்த சொற்களை எவ்வித எதிர்ப்புணர்வும் இல்லாமல் மவுனமாக இருக்கும் மாலதியைக் கண்டு மனம் எரிச்சலுறுகிறது. மாலதியின் மவுனம் வேண்டுமென்றே கதையில் புனையப்பட்டுள்ளதா.