பகுதி 4
கேள்வி : நீங்கள் ஏன் நாவல் எழுதவில்லை? சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை குறித்து உங்கள் பார்வை என்ன? சிலர் அதை இலக்கியப் பிரதியே இல்லை என விமர்சிக்கிறார்களே.
– வளவன், ஆதி & மகிழ்னன், சிங்கை
நாவல் எழுதத் தொடங்கி அதற்கான குறிப்புகளில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். தற்போது சில பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது, சில பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டியுள்ளது, அதனால் தள்ளிப்போய் கொண்டியிருக்கிறது. மக்கள் போராட்டங்களுடன் இணைந்திருக்க முன்னுரிமைக் கொடுப்பதும் அதற்கான ஆதரவு திரட்டுவதும், தகவல் தொடர்புகளை ஒருங்கிணைப்பதும் பெரும்பாலன நேரத்தை எடுத்துக் கொள்வதும் ஒரு காரணம். தொடர்ந்து எழுதும் மனநிலையும் நேரமும் அமைவது தற்பொழுது கடினமாக இருக்கிறது.
சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை குறித்து விரிவாக யாரும் விமர்சிக்கலாம். ஆனால் அது இலக்கிய பிரதியே இல்லை என்று சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இரண்டாம் ஜாமங்களின் கதை மத்தியதர- மேல்தட்டு வர்க்கத்தின் கதை. அதில் பாத்திரங்கள் புனைவாகவும் இல்லாமல் யதார்த்தமும் இல்லாத குழப்பமான நிலையில் உள்ளன. ஆசிரியரின் தணிக்கைக்குக் கீழ் அனைத்து கதாப்பாத்திரங்களும் இயங்குகின்றன. பெண் பாத்திரங்களின் சுதந்திரமான உரையாடல்கள் கதைக்குள் நிகழாமல் போனது நாவலை மேலோட்டான காட்சிநிலைக்குத் தள்ளியுள்ளது.
கேள்வி : உங்களுக்கு இரு கணவர்கள் என்ற ஒரு பேச்சு உண்டு. அப்படி வாழ்வதுதான் பெண்ணியமா? கேள்வி தவறென்றால் மன்னிக்க வேண்டும்.
– சரண்யா (வாசகி), சென்னை
இக்கேள்வி பெண்ணியம் சார்ந்த கேள்வியல்ல. மனித உரிமை மீறலான கேள்வி. இது போன்ற கேள்விகளைக் கேட்பது மனித உரிமை மீறல் மட்டுமல்ல, அதன் மீதான வன்முறை என்பதையும் தற்போது புரிந்து கொள்ளுங்கள்.
கேள்வி : தமிழ் தேசியம் குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. தமிழகத்தில் முக்கிய அறிவு ஜீவிகள் சிலரும் இதை ஆதரிகின்றனர். உங்கள் கருத்தும் சார்பும் என்ன?
– முகுந்தமதன்
தமிழ் தேசியம் ஆதிக்கச்சாதி சுடுகாட்டில் புதைக்கப்பட்டுவிட்டது. இங்கு தமிழ்த் தேசியம் பேச ஆதிக்கச்சாதியினருக்குத் தகுதியில்லை. நேற்றுக்கூட (24.11.2013) நிலக்கோட்டையில் வன்னியர்களால் 6 தலித் குடிசைகள் எரிக்கப்பட்டடுள்ளன. 20 கல்வீடுகள் உடைத்து சூறையாடப்பட்டுள்ளன. உலகத் தமிழினத் தலைவராக சொல்லப்படும் பழ. நெடுமாறன் சேது கால்வாய் திட்டம் தமிழரின் கனவுத்திட்டம் எனவும் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்ற வேண்டும் என்றும் சொல்கிறார். மீனவர் வாழ்வாதாரம் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை, குறைந்தபட்சம் சுற்றுச்சூழல் பற்றியும் கவலையில்லை. ஆதிக்கசாதிகளின் பொருளாதார, அதிகார நலனுக்கு மட்டும் பாடுபடும் தலைவர்கள் இவர்கள். தமிழ்நாட்டில் உள்ள தலித்துகள், பழங்குடிகள், மீனவர்கள் மற்றும் பிற விளிம்புநிலை ஒடுக்கப்பட்ட சாதியினரையெல்லாம் தவிர்த்த தமிழ் தேசியம்தான் இவரைப் போன்றவர்கள் விரும்பும் தமிழ்த் தேசியமாக உள்ளது. இதற்கு மாறான தமிழ்த் தேசியம் என்பது உருவானால் அது சாதி இந்து தலைவர்கள் விரும்பும் தமிழ்த் தேசியமாக இருக்க முடியாது.
கேள்வி : தங்களுக்குக் கடவுள் பக்தி உண்டா? உங்கள் ஆன்மீகம் என்ன?
வேதமூர்த்தி, இலங்கை
பனிரென்டாவது வயதிலிருந்து கடவுள் பொய், ஏமாற்று என்று உணர்ந்து கடவுள் வழிபாட்டையெல்லாம் விட்டுவிட்டேன். பதினைந்தாவது வயதில் பெரியாரைப் படித்த பின் இந்துமதத்தை விட்டும் வெளியேறிவிட்டேன். அம்பேத்கரைப் படித்தபின் பௌத்த வாழ்வியல் நெறிமீது ஈர்ப்பு ஏற்பட்டு பௌத்தத்தை பின்பற்றுவது குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். பௌத்தத்திற்குள்ளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் விடுதலையில்லை என்று உணர்ந்து அந்த திட்டத்தைக் கைவிட்டேன். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், அனைவருக்குமான உரிமை இவைதான் எனது ஆன்மீகம்.