சொற்கள் அலையும் பெருநகரம் – யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்

பல்வேறு கிளைச்சம்பவங்களுடன் நீண்டு விரியும் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் எனது வாசிப்பு தளத்திற்குப் புதியவை. எப்போதும் மிக கவனமாக கையாளப்பட்ட சொற்ப வாக்கியங்களாலான கவிதைகளையே அதிகமான வாசித்து பழக்கப்பட்டுவிட்ட நமக்கு யவனிகாவின் கவிதைகள் வியப்பளிக்கின்றன. தொடக்கத்தில் அதில் நுழைவதற்கான ஓர் அச்சத்தை இயல்பாகவே ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால், கவிதைக்குள் நுழைந்து விடுகிற பொழுது ஒவ்வொரு சொல்லும் வசீகரிக்கின்றன. நின்று நிதானித்து உள்வாங்கிக் கடந்து போகிற நிலையினை ஒவ்வொரு கவிதையும் உருவாக்கி விடுகின்றன.

யவனிகா ஸ்ரீராம், தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். அத்தோடு விமர்சகராகவும், கட்டுரை மற்றும் சிறுகதை எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். தமிழில் அரசியல் மற்றும் பாலுமை சார்ந்த கவிதைகள் எழுதுபவர். தமிழ்நாட்டின் பல கல்லூரிகளில் நவீன கவிதைகள் பற்றி வகுப்பெடுக்கிறார்.

தனது தந்தையின் குடும்ப வணிகத்தை மேற்கொண்டு தமிழ்நாடு முழுக்கப் பயணித்தார். அதே வணிகக் காரணங்களுக்காகக் கிழக்காசிய நாடுகளுக்கும் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களுக்கும் பன்முறை பயணம் செய்ததில் சேகரித்த காட்சிப் பின்னணிகளைக் கொண்டு, பிரித்தானியக் காலனிய ஆதிக்கத்திற்கும் நாடு சுதந்திரமடைவதற்கும், பிறகு 1990களில் அறிமுகமான பொருளாதாரத் திறப்பிற்கும் அதன் விளைவான பின் காலனித்துவத்திற்கும் தனது மொழியின் இலக்கியத் தொன்மங்களுக்கும் இடையே நிலம் உடல் ஆகியவற்றை மீட்டெடுக்கும் வகையில் தன் படைப்புகளை அறிமுகப்படுத்துகிறார். (விக்கிப்பீடியாவில் இருந்து தொகுக்கப்பட்டது)

இவரது படைப்பாக இதுவரை இரவு என்பது உறங்க அல்ல (1998), கடவுளின் நிறுவனம் (2005), சொற்கள் உறங்கும் நூலகம் (2007), திருடர்களின் சந்தை (2009), காலத்தில் வராதவன் (2010) கவிதைத் தொகுப்பும் நிறுவனங்களின் கடவுள் (2011) என்ற தலைப்பில் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

யவனிகா ஸ்ரீராமின் சொற்கள் உறங்கும் நூலகம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் குறித்து தொடர்ந்து பயணிப்போம்.

இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள அங்காடித் தெரு என்ற கவிதை ஒரு நிதர்சனத்தை நம்முள் விதைத்துச் செல்கிறது. அங்காடித் தெரு திரைப்படம்போல ஒரு மெல்லிழை சோகம் இந்த கவிதையை வாசித்து முடிக்கும் போது நம்மை சூழ்ந்துக் கொள்கிறது.

பொருளில்லாதவன் எவ்வாறு பிறவற்றை காட்சிப் பொருளாக்கிக் கொள்கிறான் என்பதை இக்கவிதை எந்தவொரு புனைவுமின்றி உண்மையாக சொல்லிச் செல்கின்றது. இதே நிலையை நாமும் பல வேளையில் கடந்து வந்திருப்போம். ஆனால் யவனிகாவிற்கு வாய்த்துவிட்ட இந்த கவிதை வேறு எவருக்கும் வாய்க்கக் கிடைக்கவில்லை. அந்த கவிதையில் நாம் நம்மை பொருத்திப் பார்க்கலாம். கையில் போதிய பணமில்லாமல் நாம் எத்தனையோ முறை கடைவீதிகளில் சுற்றி அலைந்திருக்கின்றோம். எண்ணற்ற மனிதர்களும் எண்ணற்ற விலை அட்டை தாங்கிய பொருள்களும் நம்மை இம்சைப்படுத்தும் நொடிகள் அவை.
“ நெருக்கடி மிகுந்த ஒரு வணிக வீதியில்
நாம் ஏன் நுழைகின்றோம்
கையில் ஒரு துளியளவு பணம்கூட இல்லாமல்…”

வணிக வீதி முழுக்க நாம் சுற்றி அலைகின்றோம்…

“நம்மிடம் பணம் இல்லை என்பதை
ஒருவரும் அனுமானிக்கவில்லை”

இறுதியாக,

நம்மிடம் ஒரு சிறிய சீப்பும்
எளிதில் உடைந்துவிடக் கூடிய ஒரு பேனாவும்
சில இலவசக் கூப்பன்களோடு
மெல்லிய நறுமணமும் வீசுகிறது.

வணிக வீதி என்பதைத் தாண்டி நமது வாழ்வும் இவ்வாறுதான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர்களாகவும் ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே வாழ வகை செய்யும் பொருளாதார கட்டமைப்பில் எப்போதாவது ஆளும் வர்க்கம் வீசி எரியும் ஒன்றுக்கும் உதவாக இலவசங்களாலும் அவ்வப்போது மகிழ்ச்சியளிப்பதாய் தோன்றும் நிரந்தரமில்லாத சலுகைகளாலும் வாழ்வு நகர்வதாய் தோன்றுகிறது. நம்மீது வீசும் நறுமணம் கூட வழியில் விற்பனைக்காக நம்மீது தடவப்பட்ட நறுமணமாகத்தான் இருக்கிறது.

அசைந்தும் ஊர்ந்தும் செல்லும்
அனைத்தையும் குழந்தைகள் வியக்கின்றன

குழந்தைப் பருவம் ஒரு காலத்தில் அனுபவித்து இன்று நாம் தொலைத்து விட்ட மீண்டும் வர வராத ஒரு காலம். ஒரு பெரும் கலை இரசிகனாகத்தான் நாம் ஒவ்வொருவரும் பிறந்திருந்தோம் என்பதற்கு நமது குழந்தைப் பருவம் மட்டுமே எஞ்சி நிற்கும் ஒரே ஒரு சாட்சி. ஓவ்வொரு அசைவையும் ஒரு பேரியக்கம் போல நாம் உள்வாங்கிய அந்த கணத்தை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

பிறகு எங்கும் ஒரு உரத்தக் குரலுக்கு
குழந்தைகள் வரிசையாக நிற்கப் பழகுகிறார்கள்
ஒரே ஒரு பாடல் அவர்களைக்
குடிமகன்களாக வீரர்களாக
கொடிக்குக் கீழ் வணக்கம்
செலுத்துபவர்களாக மாற்றுகிறது.

மெல்ல மாறும் குழந்தைப் பருவம் சகட்டுமேனிக்குக் கட்டளைக்கு கீழ்படிபவர்களாக மாற்றுகிறது. கீழ்ப்படியாதவர்களைத் தறுதலைகள் என்கிறார்கள். கேள்வி கேட்காமல் கீழ்ப்படியும் குழந்தைகள் நல்லக் குழந்தைகளாக பெயர் எடுக்கிறார்கள்.

கவிஞர் தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருப்பவற்றை மிக கவனமாக கணக்கிலெடுத்து அதை கவிதையாக்கியிருக்கின்றார். தனது இயற்கையாக இயங்கும் தன்மையில் இருந்து குழந்தையை மாற்றுவது கூட ஒருவகையான கொலைதான். அந்த நூதன கொலை குறித்து பேசும் அருமையான காரியம் என்ற தலைப்பிலான கவிதை அதிகம் கவர்கிறது.

பிறந்த குழந்தைகளை
உயிருடனோ பிணமாகவோ
குப்பைத் தொட்டியில் போட்டு விடுபவர்கள்தான்
நாய்களுக்கு நல்லவகையான
புரதசத்துக் கிடைக்க உதவி செய்கிறார்கள்

இந்த கவிதையை வாசிக்கும் போது ஒரு மெல்லிய நடுக்கம் படர்வதை தடுக்க முடியவில்லை. மீண்டும் நாம் அவ்வப்போது கேட்கும் செய்திதான். பிறந்த குழந்தையை உயிருடனோ பிணமாகவோ வீசி எறியும் நிலை. அவர்கள் கூட இப்படி நாய் வளர்க்கலாம். இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்க மாட்டார்கள் என நமது மனதை திடப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை மிகுந்த நடுக்கத்துடன் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பொருட்களுடன் வசிக்க நேர்ந்தாலும்
எனது உலகம் கதைகளால் ஆனது

இந்தக் கவிதைக் கூட ஒரு கதைப் போலத் தான் விரிகிறது. எல்லாரும் அம்மாதான் ஒரு சிறந்த கதைச்சொல்லியாக இருந்திருக்கின்றாள். இன்றைய அம்மாக்கள் கதை சொல்கிறார்களாக என்பது கூட சந்தேகம்தான். குழந்தைகள் இப்போதெல்லாம் கற்பனை செய்வதில்லை. திராட்சைப் பழங்களை பார்க்கும் இதைப் பார்த்தா நரி புளிக்கும்மென்று சொன்னது என கேட்பதில்லை. கூடிய விரைவில் கவிஞர் சொன்னது போல கதைகளே இல்லாத பூமியில் இருந்து நாம் கதைக் கேட்க வரலாம்.

சொல்வது நமது ஆனந்த் என்ற கவிதை ஒரு நக்கல் தொனியில் எழுதப்பட்டிருந்தாலும் எவ்வாறு வெளிநாட்டு மோகத்தில் நாம் ஆழ்ந்து போய் இருக்கின்றோம் என்பதை மிகத் தெளிவாக காட்டுகிறது. ஆனந்;த் ஓர் அமெரிக்கராக தன்னை மாற்றிக் கொள்ள எவ்வாறு மெனக்கெடுகிறார் என்பது நம்மில் பலர் அப்பட்டமாக இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் எந்த மேலதிக பூச்சுமின்றி நிருவுகிறது. எல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக கடவுள் கூட ஓர் அமெரிக்கர்தான் என்கிறார் நமது ஆனந்த்.

ஒரு மூச்சில் படித்து விளங்கிக் கொள்ளும் தன்மையை யவனிகாவின் கவிதை கொண்டிருக்கவில்லை. அவரது கவிதையை விளங்கிக் கொள்ள நமக்கு சில அடிப்படை அறிவு தேவையானதாக இருக்கிறது. சில கோட்பாடுகள் குறித்த புரிதல்களும் திணைகளும் அங்குள்ள மனிதர்களின் வாழ்வு குறித்த அடிப்படை அறிவும் தேவைப்படுகிறது.

ஒரு கவிதை உணர்ந்த விரும்புவது எதுவாயினும் அதில் பொதிந்து கிடக்கும் உண்மை நிலைதான் அக்கவிதையை தூக்கி நிறுத்துகிறது. யவனிகா எழுதியிருக்கும் உண்மைகள் நம்மை அறைந்து கேள்வி கேட்கின்றன. நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கி, மிக சாதாரணமானதாக கருதி நாம் கடந்து போய்க் கொண்டிருப்பவற்றைக் கனம் பொருந்தியவையாக காட்சிப் படுத்தி, உன்னதம் என கருத்தப்டுபவற்றைக் கேலிக் குள்ளாக்கும் யவனிகாவின் கவிதைகள் தொடர் வாசிப்பைத் தூண்டுகின்றன. மீண்டும் மீண்டும் ஒவ்வொரு சொல்லையும் கவனத்துடன் நோக்க வேண்டிய பொறுப்பைத் தருகின்றன.

கவிதைக்குள் தொடர்ந்து இயங்க விரும்புவர்கள் தொடர்ந்து யவனிகாவின் கவிதைகளை வாசிக்க வேண்டும். அக்கவிதைகள் குறித்த கருத்துப் பகிர்வுகள், உரையாடல்கள் குறித்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். கவிதையைத் தாண்டி நிகழ்கால உலக இயங்கியலை அவரது கவிதைகளில் வழி நாம் உணரலாம்.

1 comment for “சொற்கள் அலையும் பெருநகரம் – யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்

  1. Vijayakumari
    June 29, 2021 at 10:58 pm

    தரமான பதிவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...