கடந்த சில வாரங்களை மிகவும் முக்கியமான நாட்களாக உணர்கிறேன். எனக்கு மட்டும் அல்ல. மலேசிய இலக்கிய வாசகர்கள் பலருக்கும் இவை முக்கியமான நாட்கள்தான். காரணம் வல்லினத்தில் வெளிவந்த தாயாஜியின் சிறுகதை தான். ஒரு மலேசிய படைப்பாளி எழுதிய இலக்கிய படைப்பை முன்வைத்து பரவரலான கருத்தாடல்கள் இடம்பெருவது என்பது இந்நாட்டு இலக்கிய பரப்பில் அபூர்வமானது. வாசித்தோம் வாயை மூடிக்கொண்டிருந்தோம் என்பதே இங்குள்ள இலக்கிய வெளிப்பாடாக இருக்கும் போது பலர் இக்கதையை பற்றி (நல்ல மாதிரியோ வேறு மாதிரியோ) எழுதிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று நாளிதழ்களிலும் அறிக்கைகள் வந்துள்ளதால் இச்சிறுகதை கூடிய விரைவில் ‘வெள்ளிவிழா’ கொண்டாடக் கூடும். அந்த அபூர்வத்தை நிகழ்த்தி காட்டிய அளவில் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ (க.ப.வ) வை மனதார பாரட்டலாம். அதோடு மலேசிய வாசகர்களை ஒரு வாரத்திற்கேனும் இலக்கியம் குறித்த தீவிர கலந்துரையாடலுக்குள் தள்ளிவிட்ட வல்லினத்திற்கும் நன்றி பாராட்டத்தான் வேண்டும்
இச்சிறுகதை குறித்த என் தனிப்பட்ட கருத்துகள் சில உள்ளன. ஆனால் அதற்கு முன் க.ப.வ மீது பல்வேறு சாடல்களை தொடுப்பவர்களின் கருத்தை மதித்து மீள்பார்வை செய்ய வேண்டியது அவசியம். அவர்களின் இலக்கிய ரசனை, எதிர்ப்பார்ப்பு, அவர்கள் வடித்துக்கொண்ட இலக்கிய நோக்கம் போன்ற பல்வேறு கூறுகளை இச்சிறுகதை களைத்துப் போட்டு விட்டது என்றே நான் நினைக்கிறேன். தமிழர் வாழ்வியல், பண்பாடு, ஆன்மீகம் போன்ற பல்வேறு விழுமியங்களின் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக உணரும் பலரின் ஆவேச குரலை நான் மதிக்கிறேன். அது அவர்களின் உரிமை. மலேசிய சூழலுக்கு இப்படிப்பட்ட கதை தேவையா இல்லையா என்று முடிவு செய்யும் அதிகாரம் நிச்சயம் அவர்களுக்கு உண்டு. நான் அணிந்திருக்கும் ஆடையை திடீரென உருவி என்னை கோவணாண்டியாக்கி விட்டு, பண்டை தமிழர் கோவணம் உடுத்தி வாழ்ந்தவர்களாவர் ஆகவே நான் அதை சினம் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூற முடியாது. நான் நிச்சயம் கோபப்படுவேன். அது தார்மீக கோபம்.
அந்த அன்பர்களுக்கு, வல்லினம் ஆசிரியர் என்ற நிலையில் நவீன் பொறுப்புடன் கொடுத்த நீண்ட விளக்கம் ஓரளவேணும் புரிதலை கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. அந்த விளக்கமும் அவர்களுக்கு ஒம்பாமல் போகலாம். அதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். காரணம் ஒரு இலக்கிய பிரதியின் தரத்தையும் தேவையையும் முடிவு செய்யக்கூடியவர்கள் உண்மையான வாசகர்கள்தான். வெளிச் சக்திகளின் தூண்டுதல் காரணமாக ஒரு வாசகன் தன் மனதுக்கு ஒவ்வாத ஒன்றை இலக்கியமாக அங்கீகரிக்க மாட்டான்.
அடுத்து இன்னொரு சாரார் ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்று தங்கள் பழிவாங்கும் அரசியலை நிறைவேற்ற இச்சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. வல்லினத்தில் வந்த ஒரு சிறுகதை சர்ச்சைக்குள்ளாவதை காரணம் காட்டி இதுநாள் வரை வல்லினம் முன்னெடுத்த எல்லா போராட்டங்களையும் சிறுமைபடுத்தி ஒரு நாளிதழில் செய்தி போடும் கோழை தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு பொதுவான போராட்டம் நடந்து கொண்டிருந்த போது வாயை மூடிக் கொண்டு யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன; நமக்கு எல்லாரும் வேண்டும், என்று இருந்தவர்கள் இப்போது வல்லினத்தின் யோக்கியதையை பதம் பார்ப்பது கீழ்த்தரமான அரசியல் அன்றி வேறில்லை. நீண்ட காலமாக வல்லினத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி கொண்டிருந்த பலரின் குள்ளநரித்தனம் இப்போது வெளிப்படுவது ஆச்சரியம் இல்லை. அவர்களுக்கு இக்கதை குறித்த எந்த விளக்கமும் தேவை இல்லை. அவர்களிடம் நம் சொல் எடுபடாது. அதைவிட அவர்களுக்கு இலக்கியம் பற்றியோ சமுதாயம் பற்றியோ எந்த வித உண்மை அக்கரையும் இல்லை.
அவர்களின் நோக்கம் வல்லினத்தையும் அதன் குழுவினரையும் சமுதாய அசிங்கங்களாக காட்டி தங்கள் அசிங்கங்களை மறைத்துக் கொள்வது மட்டும்தான். ஆகவே அவர்களின் முயற்சிகளுக்கு அவர்களிடம் ‘அப்படியே செய்க!’ என்று மட்டும்தான் கூற முடியும்.
சரி இனி க.ப.வ குறித்த எனது கருத்துகள். முதலாவதாக இது ஒரு பின்நவீனத்துவ கதை அன்று. நோன் லீனியராக கதை சொல்லும் உத்தியும் இல்லை. ஆக இது வழக்கமான நேர்கோட்டு எதார்த்தவியல் கதை. ஆனால் கதையில் களம் இல்லை. கதை முழுதும் ஓரங்கவுரை புலம்பலாக அமைந்துள்ளது. கதை எடுத்துக் கொண்ட கருவும் மிகவும் பழமையானது. செயலுக்கு ஏற்ற பலாபலன்களே நமக்கு கிட்டும் என்பதையே இக்கதையும் கூறுகிறது. அதாவது இருவிணை தத்துவத்தையே இக்கதையும் வழிமொழிகிறது.
அடுத்து, இக்கதை காமத்தை வலியுறுத்துகிறது என்று சொல்வது அடிப்படையிலேயே பிழையான கருத்து. உண்மையில் இக்கதை காமத்திற்கு எதிரானது. காம உணர்வை அருவருப்பானதாக காட்டும் பழம்போக்கை மீறாத பழமைவாத கதை. காமத்தை மலத்தோடு ஒப்பிடும் ‘சமண மத’ கொள்கையை வலியுறுத்தும் இக்கதை ‘மலரினும் மெலியது காமம்’ என்ற தமிழ் சூழலை புறக்கணிக்கிறது என்பதே உண்மை. காம வலையில் சிக்குதலும் கழிப்பறையில் சிக்குதலும் ஒன்றே என்னும் போதனையையே இக்கதை செய்கிறது. எளிமையாக சொல்வதென்றால் புகழ் பெற்ற பழைய ‘ரத்தக்கண்ணீர்’ திரைப்பட பாணியை ஒத்த கதையே இச்சிறுகதை. அப்படத்தை இக்கதையின் ‘தெளிந்த’ முன்மாதிரியாக கூறலாம். காமத்தின் தூண்டுதலால் முறையற்று செயல்பட்டவன் இறுதியில் “கொண்டவளைத் துறந்தேன்; கண்டவள் பின் சென்றேன்; இன்று கண்களையும் இழந்தேன்” என்று புலம்புவதன் நவீன விரிவாக்கமாகவே இக்கதை போக்கு உள்ளது. புலம்பலின் வெளிப்பாடே கழிப்பறையில் சிக்கியவனின் பேச்சும் செயலும். ஆக இது நிச்சயம் காமக் கதை அன்று.
இப்படி காமத்தை இழிவானதாக கூறும் இக்கதையை காமக் கதை என்று (தவறுதலாக) குற்றஞ்சாட்டி பலரும் கடுமையாக தாக்குவதன் காரணம் என்ன என்று சிந்திக்கும் போது, அதன் விவரிப்பு மொழியும் கதை சொல்லும் பாங்குமே காரணம் என்று நாம் கண்டடைய முடியும். அதை தொட்டே வேறு பல சிக்கல்களும் பண்பாட்டு விழுமியங்களை உரசிப்பார்க்கும் தன்மையும் தெரிகிறது.
முதலாவதாக, கதையின் காட்சி விவரிப்புகள் மிக அதிகம். வாசகனின் கற்பனைக்கு வேலை வைக்காமல் படைப்பாளனே வலிந்து சொல்லுதல் தேவை இல்லாதது. சொல்லியும் சொல்லாமலும் செல்லவேண்டிய பகுதிகள் இக்கதையில் நிறைய இருந்தும் படைப்பாளி எல்லாவற்றையும் தானே சொல்ல முன்வந்தது முதல் தவறு. வாசகனுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கும் போக்கே இக்கதையில் குழப்பம் ஏற்பட காரணமாகிறது. உதாரணமாக கதைநாயகனின் பாலியல் மனப்பிறழ்வு தன் தாயின் மேல் காமம் கொள்ளச் செய்கிறது என்பதை வாசகர்களால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். தாய்மை புனிதமானது என்பது இக்கதையில் எந்த இடத்திலும் மீறப்படவில்லை. தன் மகனின் கண்ணில் விழுந்த தூசை பரிவுடன் நோக்கும் தாயின் அன்பே முதன்மையாகிறது. ஆனால் அதை மறக்கடிக்கும் படியாக நீலப்படம் குறித்த தெளிவான விவரிப்பு கதைக்கு சற்றும் தேவை இல்லாதது. இதை வெறும் ஆபாச திணிப்பு என்றுதான் வாசகர்கள் உணர்வார்கள்.
கதையின் பல்வேறு இடங்களில் கதையின் முக்கியத்துவத்தை சிதைக்கும் காட்சி விவரிப்புகளால் இக்கதை நிரம்பி இருக்கிறது. காட்சி விவரிப்புகள் கூடும் போது தேவையற்ற பாலியல் காட்சிகள் தவிர்க்க முடியாமல் போயிருப்பதை உணரமுடிகிறது.
இறுதியாக, கதையின் முடிவும் கதை போக்கை சிதைத்து விடுகிறது. சிறு வயது முதல் பல்வேறு காம அவலங்களில் கழித்திருந்த ஒருவன் தன் இறுதி நாளில் (தன் செயலால்) மனம் வருந்தி அரற்றுவதாகவே கதையை தயாஜி வடிவமைத்து இருக்கிறார். அந்த அரற்றலின் உச்சம்தான் தன் இஷ்ட தெய்வம் காளியிடம் முறையிடுதல். காளியை தன் காதலியாக கதைநாயகன் நோக்குவது இந்து ஞான மார்க்கத்துக்கு விரோதமானது அல்ல. கடவுளை குருவாக, தந்தையாக, தாயாக, நண்பனாக, காதலி அல்லது காதலனாக நேசிக்கும் மாண்பை இந்து ஞானம் போதிக்கிறது. ஆகவே இக்கதைநாயகனின் போக்கு விந்தையானது அல்ல. ஆனால் காளியை காதலியாக கண்டவன் அவளுடன் ஐக்கியமாதலை முதன்மையாக கொள்வதை (சரணாகதி நிலையை) படைப்பாளரால் தெளிவாக கொடுக்க முடியவில்லை என்பதே என் கருத்து. மேலும் ஆரம்பம் முதல் தன் காமத்தை வெறுத்து இம்மை வாழ்வில் இருந்து விடுதலை வேண்டும் என்று புலம்பியவன் இறுதியில் காளியிடம் ‘காதலை உயர்த்திப்பிடி, காமத்தை விதைப்போம்’ என்று கூறுவது மிகப்பெரிய முரண். இந்த முரணே தெய்வ அவமதிப்பாக தோற்றம் தருகிறது. மொத்த கதையும் இவ்விடத்தில் தான் திசை மாறிப் போவதாக நான் கருதுகிறேன்.
ஆகவே தயாஜியின் க.ப.வ வை சாடுவதும் பாராட்டுவதும் உங்கள் சுதந்திரத்திற்கு உட்பட்ட நிலை. ஆனால் சாடுவதாக இருந்தாலும் பாராட்டுவதாக இருந்தாலும் – மற்றவர்கள் சொல்கிறார்களே என்று செயல்படாமல் – இக்கதையின் உட்கிடங்கை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். சரியான புரிதலின் வழி மட்டுமே சரியான தீர்ப்பை உங்களால் வழங்க முடியும். நன்றி.
மிக நிதானமான/ அறிவு பூர்வமான கட்டுரை. ஒரு இலக்கியத்தை புரிந்துகொள்ளாதவர்களுக்குத் தகுந்த பதிலடி.
பல கோணங்களில் தாக்குதல்கள் குவிந்து கொண்டிருக்கின்றபோது, புரிந்துகொள்ள யாருமே இல்லையா.? என்று மனம் சோர்ந்திருந்த சமயத்தில், ஒரு `பூஸ்ட்டாக’ பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த முதல் கண்டனக் கட்டுரை இது. என்னைக் குதூகலிக்கவைத்தது. அருமை. நல்ல தமிழ் ஆளுமை உள்ள உள்ளூர் எழுத்தாளர் பாண்டியன். ஆசிரியர், மலாய் இலக்கிய ஆய்வாளரும் கூட.