அதிகாரத்தின் துர்வாசனை

leena pixஜனவரி 3, 4 தேதிகளில் சென்னை பல்கலைகழகமும் பெண்கள் சந்திப்பும் இணைந்து நடத்திய பெண்ணிய உரையாடலின் அழைப்பிதழ் எனக்கு கிடைத்தது. அதன் கவிதைக்கான பொது நிகழ்வில் ஊடறு.காம் றஞ்சி தலைமையில், ஆழியாளின் கவிதைத்தொகுதியை மதுசூதனன் வெளியிட சுகிர்தராணி பெற்றுக்கொள்வதான நிகழ்வின் அறிவிப்பும் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் தான் அண்மையில், இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றி நான் எடுத்த White Van Stories குறித்த பொய்யான அறிக்கையை ஊடறு.காம் வெளியிட்டிருந்தது. அந்தப் பொய் அறிக்கையை அம்பலப்படுத்தி எழுதிய எதிர்வினைக்கு எந்த பதிலும் ஊடறுவின் தரப்பில் இல்லாமல் இருந்ததால், என் எதிர்ப்பை பதிவு செய்யலாம் என்று நான் “பெண்ணிய உரையாடல் அரங்கிற்கு” சென்றேன்.எந்த அதிகாரத்தின் பின்புலமுமில்லாத உதிரி படைப்பாளியை அவதூறு கொண்டு காயடிப்பதை எதிர்த்து எழுதுவதும், பேசுவதையும் தவிர வேறு என்ன தான் வழியிருக்கிறது?

ஊடறு.காம் ஆசிரியர் றஞ்சி, ஊடறு.காமின் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஆழியாள் மற்றும் பெண்ணியவாதிகள் வ.கீதா, அ.மங்கை, புதிய மாதவி, சுகிர்தராணி, பிரேமா ரேவதி, வள்ளி, என தோழிகள் நிறைந்திருந்த அரங்கும் என் தந்தையின் நண்பரும், இருபது வருடங்களாக என்னை குழந்தைப்பருவத்திலிருந்து அறிந்த குடும்ப நண்பருமான பேராசிரியர் வீ அரசின் இருப்பும் என் எதிர்ப்பை அந்த சபையில் பதிவு செய்யும் நம்பிக்கையை எனக்கு அளித்தது. ஊடறு றஞ்சி, சந்தியா இஸ்மாயில் என்ற முகமூடியில் ஒளிந்துக்கொண்டு எழுதிய பொய்களையே அங்கே திரும்ப திரும்ப பரப்பிக்கொண்டிருந்ததை, அந்த அரங்கின் மற்ற பங்கேற்பாளர்கள் எனக்கு தெரிவித்ததும் மனக்கொதிப்பாக இருந்தது. இந்தப் பொய்ப் பரப்புரைகள் என்னையும், என் படக்குழுவையும் பாதிப்பதை விட அந்தப்படத்தில் பங்கெடுத்த பாதிக்கப்பட்ட ஈழத்து தாய்மார்களையும் குடும்பங்களையுமே பாதிக்கும் என்பதை எடுத்து சொல்லி நியாயம் கேட்கலாம் என்று தான் அந்த சபைக்கு சென்றேன். துண்டறிக்கைகளையும் கையோடு எடுத்து சென்றிருந்தேன். படத்தின் எடிட்டர் தங்கராஜும், கேமிரா மேன் அரவிந்தும் நானும் மட்டுமே அங்கு சென்றோம். ஊடறு.காம் தன் பொய்யான அறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் என்றும், ஊடறுவின் அநியாயப் பரப்புரையால் நடந்த பாதிப்புகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தட்டியைப்பிடித்துக்கொண்டு அமைதியாக தரையில் அமர்ந்து என் எதிர்ப்பை பதிவு செய்தேன். துண்டறிக்கையை வினியோகிக்க கூடாது என்றும் அந்த அரங்கத்தின் புனிதத்தை கலைக்க கூடாது எனவும் தடை விதித்தார் வீ.அரசு. என் படத்தின் எடிட்டரையும், கேமிராமேனையும் பார்த்து, ’என்ன ஆள் வைத்து கலாட்டா செய்கிறாயா’ என்று வசைபாடி துண்டறிக்கைகளையும் பறித்துக்கொண்டு, பின் தட்டி கேட்டபின், சிலருக்கு தானே வினியோகித்தார். அ.மங்கை ”என்ன நினைத்ததை செய்கிறாயா” என்று சத்தம் போட்டார். அமைதியாக தட்டிப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த நான், ”சீப்பான அரசியல் செய்கிறாய்” என்று வீ.அரசு சொன்னதற்கு மட்டும், ’இல்லை அங்கிள், நியாயத்தைக் கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்’ என்று மட்டும் பதலளித்தேன். றஞ்சியும், ஆழியாளும் ஒரு மணி நேரம் நான் பிடித்து நின்ற என் பதாகை வாசகங்களுக்கோ, வினியோகித்த துண்டறிக்கைக்கோ பதில் சொல்லவில்லை. ஒரு மணி நேரமும் நிகழ்வு நடந்து முடிந்தது. யாரும் எதுவும் பேசவில்லை. நான் எதிர்ப்பு தட்டியோடு அமர்ந்திருக்க, பெண்ணியவாதிகளின் செருப்புகள் என் மேல் தூசியெறிய கடந்து சென்றன.நாங்களும் வீடு திரும்பினோம். உலகப் பெண்களுக்கெல்லாம் நீதி பேசிய அரங்கு சமகாலத்தில் மாற்று சினிமா களத்தில் இயங்கும் எனக்கு அநீதி இழைக்கிறார்களே என்பதை அன்றிரவே சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன்.

இன்று (4 ஜனவரி) மாலை புதியமாதவி தலைமையில், பாமா, தமிழ்ச்செல்வி, யாழினிவரன், சுகிரதராணி ”படைப்பும் வாழ்வும்” என்ற தலைப்பில் பேசும் நிகழ்வுக்கு சென்றேன். பாமா பேசியபின், நேற்றைய போராட்டத்திற்கு எந்த பதிலும் றஞ்சியும், ஆழியாளும் எனக்கு தராததால், அரங்கமும் என்னை அலட்சியப்படுத்தியதால் பேசுவதற்கு நேரம் கோரினேன். புதிய மாதவி அரங்கம் முடிந்தபின் பேசுவதற்கு நேரம் தருவதாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பேராசிரியர் வீ.அரசு மைக்கிற்கு வந்தார். நான் செய்ததெல்லாம் படத்திற்கான விளம்பர ஸ்டண்ட் என்றார். படத்திற்கு, சேனல் ஃபோர் ஒளிபரப்பை விட எந்த விளம்பரத்தை பார்வையாளர்களை விட பங்கேற்பாளர்கள் அதிகம் தெரியும் இந்த பெண்ணிய உரையாடல் தரும் என்பதை வீ.அரசு விளக்கினால் புரிந்துக்கொள்வேன் என சொன்னேன்.உன்னதமான படைபபாளிகள் பேசும்போது நான் தகராறு செய்கிறேன் என்றார். உன்னதமற்ற படைப்பாளியாகவே நான் இருந்துவிட்டுப் போகிறேன்! எனக்கு நீதி பெற தகுதியில்லையா? எனக் கேட்டேன். அ.மார்க்ஸ், ம.க.இ.கவினரை தனியாக கூட்டம் வைத்துக்கொள்ள சொன்னது போல என்னை தனியாக கூட்டம் வைத்துக்கொள்ள அரசு கட்டளையிட்டார். ம.க.இ.க தோழர்களுக்கு பேச அனுமதித்தப் பின், அவர்கள் “லீனா மணிமேகலைக்கு தெரிந்த மார்க்ஸிய ஆண்குறிகளின் வகைமாதிரிகளை எங்களுக்கு சொல்ல வேண்டும்” என்று பேசியதால் தான் மார்க்ஸ் அவர்களை வெளியேறச் சொன்னார், அப்படியும் அதே அளவுகோள் வைக்க ’நான் கட்சியில்லையே, தனி ஆள் தானே, பேசுவதற்கும் அனுமதிக்கவில்லையே’ என்று கேட்டேன். பொறுமையிழந்த அவர், ”இவளை தூக்கி வெளியில போடுங்க” என்று கர்ஜித்தார். திரண்டு வந்த மாணவர்கள் விசில் சத்தம் கேட்ட கான்ஸ்டபிள்கள் போல என்னை இழுத்து சபையில் இருந்து வெளியேற்றினார்கள். எனக்கு ஆதரவாக பேசிய நண்பர்களையும், மாணவர்களை ஏவியே வெளியே தள்ளினார் வீ.அரசு. என்னுடன் வந்ததாக கருதிய பேராசிரியர் வீ.அரசு ,புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த யாரோ ஒரு இளைஞனையும் அடித்து, அவர் கேமிராவைப் பிடுங்கி கொண்டார். சென்னை பல்கலைகழக மாணவர்களை ஏவல் அடிமைகளாக பார்த்தது, என்னை சிறிது நேரம் White Van Stories படத்தையும், அவதூறாளர் றஞ்சியையும் கூட மறக்க வைத்தது.

சபைக்கு திரும்பிய பெண்ணியவாதிகள் சமூக நீதிக்கான தங்கள் அரங்கை தொடர்ந்து நடத்தினார்கள். வேடிக்கை பார்த்தவர்கள், மெளனம் சாதித்தவர்கள் ’உன்னத படைப்பாளிகளின்’ அறத்தில் பங்கேற்க திரும்பினார்கள். எல்லாவற்றிலும் மேலாக கதவுக்கு வெளியே காவலுக்கு ஏவப்பட்டு நின்றுக்கொண்டிருந்த மாணவர்களின் முகங்கள் என்னை அலைக்கழித்தது. என்னோடு வெளியேறிய நண்பர்களின் முகங்கள் பேயறைந்திருந்தது. சில மீட்டர்கள் தள்ளியிருந்த தமிழக அரசின் தலைமைச் செயலக கூட்டத்திற்கு வந்த இடத்தில் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது போல உணர்ந்ததாக ஒரு நண்பர் மனம் வெதும்பினார்.

வெளி வாசலில் கிடத்தப்பட்ட புத்தக கடைகளை நின்று சற்று வெறித்துப்பார்த்துவிட்டு கடற்கரை சாலையில் வெளியேறி நடந்தபோது அதிகாரத்தின் துர்வாசனை அடித்தது.

2 comments for “அதிகாரத்தின் துர்வாசனை

  1. prem
    January 15, 2014 at 7:56 pm

    லீனா … உங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க எங்களைப் போன்ற ஏராளமான வாசகர்கள் உள்ளனர். கவலையோ கலக்கமோ வேண்டாம்.cheers

  2. thina
    January 20, 2014 at 7:47 pm

    LEENAVIN NIYAYATIRKU KURAL KODUPPOM,…

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...