வல்லினம் & GTLF விழா கடிதங்கள்

மலேசியத் தமிழ் விக்கி : சில தெளிவுகள்

‘கட்டுரை எழுதுவதால் கற்பனையாற்றல் மழுங்கி விடுமா? படைப்பூக்கம் மங்கிவிடுமா?’ தமிழ் விக்கிக்கு எழுதத் தொடங்கிய காலத்தில் பரவலாக பேசப்பட்ட விவாதங்களில் ஒன்று இது. இத்தகைய விவாதங்களுக்கு மத்தியில்தான் மலேசியாவிலும் தமிழ் விக்கி அறிமுகம் கண்டது. ஏறக்குறைய இருநூறு கட்டுரைகள் பதிவேற்றம் கண்டு அதை விரிவான தளத்துக்கு அறிமுகம் செய்யும் வகையில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

கூலிம் சுங்கை கோப்பில் நடந்த இவ்விழாவில் அருண் மகிழ்நன் உரைக்குப் பிறகு எழுத்தாளர் ஜெயமோகன் தமிழ் விக்கிக்கு பங்களிப்பது கதைகளுக்கான விதைகளைத் தேடவும் விஷயங்களைச் சேகரிக்கவும் உதவும் என்றார். அதற்கு ஆண்டி சுப்பிரமணியம் அவர்களை முன் வைத்து ரம்யா எழுதிய ‘தூசி’ சிறுகதையை உதாரணமாகச் சொன்னார். இப்படி சில தெளிவுகளை எனக்கு வழங்குவதாக அமைந்தது தமிழ் விக்கி அறிமுக நிகழ்ச்சி.

நிகழ்ச்சியில் அருண்மகிழ்நன் மற்றும் ஜெயமோகனின் உரைக்குப் பிறகு, மலேசிய தமிழ் விக்கியில் பதிவேற்றப்பட்டிருக்கும் கட்டுரைகளை அறிமுகம் செய்ய கல்வியாளர்களுடனான கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முனைவர் முனீஸ்வரன் மூன்று கருத்துகளை முன்வைத்தார். அக்கருத்துகள் எனக்குள் சில உரையாடல்களை நிகழ்த்தின.

ஒன்று, உசாத்துணை முறையான Bibliographyல் இருத்தல். இரண்டு, பாரபட்டசமின்றி உசாத்துணைகளை எழுத வேண்டும். வல்லினத்தை மட்டுமே உசாத்துணையில் இடம்பெறச்செய்யக்கூடாது. மூன்று, மொழியியல் சார்ந்த கட்டுரைகளை எழுதுதல். இவரது முதல் இரண்டு கருத்துகளில் எனக்கு மாற்றுக்கருத்துகள் உள்ளன.


முனைவர் முனீஸ்வரன்

தமிழ் விக்கிக்கு எழுதிய சிறு அனுபவத்தில் Bibiliographyஐ பல்கலைக் கழக முறைமைக்கு ஏற்ப கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றே கருதுகிறேன். அது எளிதாக மக்களிடம் சென்று சேரும் வகையில் தனக்கான வகைமுறையை வைத்துள்ளது. அதுவே வெகுமக்கள் பயன்பாட்டுக்கும் உதவக்கூடியதாக அமையும்.

முனீஸ்வரன் அவர்களின் இரண்டாவது கருத்துபடி, தமிழ் விக்கியின் கட்டுரைகள் ஒவ்வொன்றுக்குமான உசாத்துணைகள் முழுமையாகவே பதிவிடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, மஹ் மேரி எனும் பழங்குடியைப் பற்றிய தமிழ் விக்கி பதிவின் உசாத்துணைகள். மலேசியத் தமிழ் சூழலில் பழங்குடி என்பது அதிகம் பேசப்படாத பொருள். மஹ் மேரி பழங்குடியைப் பற்றி தமிழில் வல்லினத்தில் மட்டுமே பதிவாகியிள்ளது. எனவே, வல்லினம் முதல் உசாத்துணை. அதனைத் தொடர்ந்து, ஆங்கில பதிவுகள், மலாய் பதிவுகள், யூடீயூப் காணொளியென அப்பதிவின் உசாத்துணைகள் வளர்ந்துள்ளது. இப்படி பெரும்பாலான தலைப்புகளுக்கு வல்லினம் முன்னோடியாக இருக்கும் பட்சத்தில் அது ஒரு மேற்கோள் தளமாக உருவாவதில் ஆச்சரியமில்லை. அதோடு ஏன் கல்வியாளர்கள் பலர் இப்படியான தலைப்புகளில் எழுதவில்லை என்பதுதான் ஆச்சரியமானது.


முனைவர் பரிந்துரைத்தபடி மொழியியல் கட்டுரைகளை அவரே எழுதி, செப்பனிட்டு மலேசிய தமிழ் விக்கிக்குப் பங்களிக்கலாம் அது இப்பதிவுகளை மேலும் சிறப்பானதாக்கி, மாணவர்களுக்கு சிறந்த வளங்களை உருவாக்கும்.

முனைவர் கோ. சாமிநாதன்


கல்வியாளர்களுடனான கலந்திரையாடலில் முனைவர் கோ. சாமிநாதன் தமிழ் விக்கியில் பதிவாகியிருக்கும் மலேசிய வரலாற்றின் பக்கங்களைப் பற்றி பேசியிருந்தார். அவர் நீலகண்ட சாஸ்திரியின் மலாயா பல்கலைகழக இந்திய துறைக்கான பரிந்துரையைச் சொன்னார். பொது மொழியாக சமஸ்கிருதமும் இந்திய மொழிகளில் தமிழும் ஒரு பாட மொழியாக இருக்கலாமென்று நீலகண்ட சாஸ்திரியின் நோக்கத்தை முனைவர் சுட்டிக்காட்டினார். அதன் பிறகு, அப்பரிந்துரையைக் கடுமையாக எதிர்த்து, தமிழ் எங்கள் உயிர் நிதி சேகரித்து தமிழ் மொழியை இந்திய ஆய்வு துறையில் முதன்மை மொழியாக தமிழ்வேள் கோ. சாரங்கபாணி நிலைநிறுத்தியது பற்றி முழங்கினார். மலேசிய தமிழர் பண்பாட்டை நிலைநிறுத்தியவர்களை இளைஞர்கள் கட்டாயம் படித்து தெரிந்திருக்க வேண்டுமென உணர்ச்சிபொங்கக் கேட்டுக்கொண்டார். அவரது வீராவேசமான உரையில் அதுவரையில் சலசலத்துக்கொண்டிருந்த மாணவர்கள் திக்கித்துப் போய் அமைதியடைந்தனர்.


இந்தப் பெருமுழக்கத்திற்கு விடையாக அமைந்தது அதன் பின்னர் இடம்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகனின் சிறப்புரை.


அவர் நீலகண்ட சாஸ்திரி யார் என்பதை முதலில் சொன்னார். அவரின் சிறப்புகளையும் அறிவாற்றலையும் எடுத்துக்கூறினார். பிறகு அவர் சொன்ன விஷயத்தை விளக்கினார்.

முனைவர் கிங்ஸ்டன்


மலாயாவில் இந்துசீன ஆதிக்கம் இருந்ததன் எந்த ஆவணப்பதிவும் இல்லை; சமஸ்கிருத மொழியாற்றல் இருந்திருந்தால் மலாயாவில் இருந்த இந்திய-பௌத்த நேரடி ஆதிக்கம் இன்று அறியப்பட்டிருக்கும். வரலாற்றில் செறிவாக இடம்பெற்றிருக்கும். அவற்றின் ஆவணங்கள் கிடைத்திருக்க்கூடும் என்றார்.
மலேசியாவில் மலாய் சுல்தானின் ஆட்சியை முதலில் சொன்ன நூல் Sulalatus Salatin. இந்நூலை இராம சுப்பையா மலாக்கா மன்னர்களின் வரலாறு என்று மொழி பெயர்த்துள்ளார். மலேசியாவில் இஸ்லாம் குறித்தும், மலாய் சுல்தான்களைக் குறித்து தொகுத்து எழுதப்பட்ட முதல் நூல் மலாக்கா மன்னர்களின் வரலாறு. சூலாலதுஸ் சலாத்தின் அரேபிய மொழியிலிருந்து, ஜாவி, ஆங்கிலம், மலாய், தமிழென மொழிபெயர்ப்புக்கொண்டுள்ளது. இதில் 1821ல் Dr. John Leyden என்பவர் சமஸ்கிருத ஆவணத்தை மலாய் மொழிக்கு மொழி பெயர்த்துள்ளார். நீலகண்ட சாஸ்திரின் பரிந்துரைகள் ஒருவேளை செவி சாய்க்கப்பட்டிருந்தால், ஜெ கூறியது போல சமஸ்கிருத ஆவணங்களைக் கள ஆராய்ச்சி செய்து நாம் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன் மலாயாவில் இருந்த இந்துசீன செல்வாக்கினை எழுதியிருப்போம் என்றார். தமிழ் என்று மட்டுமே பேசி, இந்த நிலத்தில் பல நூறு ஆண்டுகளாக நமக்கிருந்த வரலாற்றுத் தொடர்பையும் உரிமையையும் ஆதாரபூர்வமாக நிறுவும் வாய்ப்பைத் தவறவிட்டதன் பிழையைச் சுட்டினார். உணர்ச்சிப் பெருக்கான செயல்பாட்டால், அறிவார்த்தமான செயல்களைத் தவறவிட்டதை அவர் குறிப்பிட்டார். பேரறிஞரான நீலகண்ட சாஸ்திரி தமிழுக்கு எதிரானாவர் அல்லர். தமிழை நிந்தித்து அவர் சமஸ்கிருத்தை முன்வைக்கவில்லை. மலாயாவின் வரலாற்றுபூர்வமான அறிவாற்றலை வளர்க்கவும் இந்தியத் தொடர்பை உறுதிப்படுத்தவும் சமஸ்கிருதத்தின் தேவையை அவர் உணர்த்தினார் என்பதை ஜெ விளக்கினார். இந்த தெளிவு அனைவருக்கும் உணர்ச்சி திடுக்கிடலாக இருந்தது.

விரிவுரையாளர் தமிழ் மாறன்


தமிழ் விக்கியில் பங்களிப்பவர்களுக்கு இருக்க வேண்டிய மனச்சமநிலை குறித்த தெளிவை தமிழ் விக்கி ஏற்படுத்துவதாக அமைந்தது. அதுவே அடுத்து எழுத வேண்டிய பதிவுகளுக்கான பயிற்சியாகவும் அமைந்தது.

பரிமித்தா

கொண்டு சென்றச் சொல்

மலேசியாவில் ஒருங்கிணைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற இலக்கிய நிகழ்ச்சியான ஜார்ஜ்டவுன் இலக்கியத் திருவிழாவில் இவ்வாண்டு தமிழுக்கான இரு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மலேசியா-சிங்கப்பூர் இலக்கிய அமர்வும் எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் தொகுப்பு சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீடும் கேள்விபதிலுக்கான ஓரமர்வும் என நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது.அதனுடன் சேர்த்து சிங்கப்பூரின் முன்னோடி எழுத்தாளரான பி.கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் நாடக மொழிபெயர்ப்பு நூல்களை வெளியீட்டு அவரது படைப்புலகைப் பற்றிய விரிவான கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்ய ஒரமர்வும், மலேசிய தமிழ்விக்கி அறிமுக விழாவுக்கான ஒரமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டன. பெரும் உழைப்பையும் திட்டமிடலையும் கோரும் பணியை மிகச்சிறப்பாக பிரித்தளித்துத் தொடர்ந்து கண்காணித்து நிகழ்ச்சியை எழுத்தாளர் ம.நவீன் ஒருங்கிணைத்தார்.

வல்லினம் நண்பர்கள் பலரும் நிகழ்ச்சி சிறப்பாக நடக்க பேரூதவி புரிந்தனர்.இவ்வாண்டு தொடக்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தொடங்கிய தமிழ்விக்கி பணிகள் குறித்து வாசித்தேன். இப்பணியின் தேவை குறித்து உள்ளூரக் கேள்விகள் இருந்தன. முன்னரே விக்கிப்பிடியா இருக்கும் போது இதன் தேவை குறித்த ஐயம் இருந்தது. மலேசியாவிலும் எழுத்தாளர் ம.நவீனும் நண்பர்கள் சிலரும் இணைந்து மலேசிய ஆளுமைகள், பண்பாட்டு நிகழ்வுகள், படைப்புகள் ஆகியவற்றைத் தமிழ்விக்கி பதிவுகளாக எழுதத் தொடங்கினோம். முதலில், ஆளுமைகள், படைப்புகளை எடுத்துக் கொண்டு எழுதினேன். உள்ளப்படியாக அவர்கள் குறித்து எழுதுவதென்பது இருக்கும் தகவல்களைத் திரட்டிக் கொடுக்கப்பட்ட டெம்பளேட்டுக்கு ஏற்ப எழுதும் பணியாக இருந்தது. படைப்புகள் பற்றி எழுதுவதும் அவ்வாறாகவே அமைந்தது.

ஆனால், சரவாக் பழங்குடி இனங்களைப் பற்றி எழுதும்படி நவீன் கேட்டுக் கொண்டார். மலேசியாவின் அரசியல், பொருளியல் என எவ்வித வலுவும் இல்லாத குரலற்ற சமூகங்களைப் பற்றிய அப்பதிவு மலேசியாவில் இருக்கும் மானுடவியலைப் பற்றிய பெருந்திறப்பாக அமைந்திருந்தது. அவர்களின் பண்பாடும் இணைந்ததுதான் மலேசியா. சரவாக் மாநிலத்தில் நிகழும் அரசியல், சமய மாற்றங்களால் மெல்ல அம்மக்களாலே கைவிடப்பட்டு வரும் நாட்டார் பண்பாடு தமிழில் இருப்பது நிச்சயம் முக்கியமான வரலாற்று ஆவணமாக இருக்கப்போகிறதென்ற நிறைவு அப்பணியாற்றும் போதே கண்டுகொண்டேன்.

பி.கிருஷ்ணினின் ஷேக்ஸ்பியர் நாடக நூல்களில் சில பகுதிகளைத் தெரிவு செய்து மை ஸ்கில்ஸ் கல்லூரி மாணவர்களைக் கொண்டு நாடகமாக அரங்கேற்றும் பணிக்கு உதவி இயக்குநராக இருந்தேன். பி.கிருஷ்ணின் மொழிபெயர்ப்பு ஷேக்ஸ்பியர் பயன்படுத்திய செவ்வியல் ஆங்கிலத்துக்கு ஈடான இசைத்தன்மையுடன் கூடிய தமிழாக இருந்தது. அவற்றை மாணவர்கள் உள்வாங்கி மிகச்சிறப்பாக அரங்கேற்றினர். அந்தப் பணியில் பங்கெடுத்த நிறைவு அமைந்தது. இரண்டாம் நிகழ்ச்சியில் பி.கிருஷ்ணின் உலகச் சிறுகதைகளின் வானொலி நாடக வடிவங்களைக் கொண்ட சருகுகள் தொகுப்பு குறித்து பேசினேன். நாடகங்களாக மாற்றப்பட்டிருப்பதால் அவை அடைந்திருக்கும் மிகையுணர்ச்சித் தருணங்கள், நுண்ணுணர்வு, உயிர்ப்பான உரையாடல்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டேன். படபடவென நினைவிலிருந்து சுருக்கமாகப் பேசிய உரையாக இருந்தது. இன்னும் கூடுதலாகச் சேர்த்திருக்கலாம் என்ற ஐயம் இருந்தது. மாலையில் மலேசிய சிங்கப்பூர் இலக்கிய அமர்வின் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். சிங்கை எழுத்தாளர் லதா, மலேசிய எழுத்தாளர்கள் அ.பாண்டியன், கோ.புண்ணியவான் ஆகியோரிடம் மலேசிய-சிங்கப்பூர் இலக்கியப் போக்குக் குறித்த கேள்விகள் கேட்டேன். மலேசிய-சிங்கப்பூர் இலக்கியச் சூழலை ஒட்டி வைக்கப்படும் விமர்சன மரபின்மை, பல்லினப் பண்பாடு வெளிபாடு இல்லாமை, விருதுகள் தரும் வளர்ச்சி எனப் பலவற்றை ஒட்டி கேள்விகள் அமைந்திருந்தன. ஒவ்வொரு கேள்வியும் தனித்தனி விவாதங்களாக விரியக்கூடியவை.

மூன்றாம் நாள், நிகழ்ந்த எழுத்தாளர் நவீன் ஒருங்கிணைத்த ஜெயமோகனுடனான கேள்வி பதில் நிகழ்ந்தது. ஒவ்வொரு பதிலும் முன்னர் ஏதோ உரையில், கட்டுரையில், நூலில் அவர் சொன்னதைப் போலவே இருந்தாலும் புதியதாக ஏதோ ஒன்றைப் பெற்றதாகவும் நேர்சொல்லாகக் கேட்கையிலும் சிறப்பானதாக அமைந்திருந்தது. ஆமைகள் கடற்கரையில் முட்டையிடுவதை மட்டுமே செய்கின்றன. கடல் முன் நீந்தி உயிர்வாழ்தல் என்பது குஞ்சுகளின் உயிர் ஊக்கத்தில் இருக்கின்றன எனப் படைப்பூக்கத்துக்கும் விமர்சனத்தைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சியிலிருந்து கொண்டு செல்லப்போகும் சொல்லாக அதைச் சேமித்துக் கொண்டேன். நிறைவான மூன்று நாட்கள்,

அரவின் குமார்

அறிவுப் பகிர்வு

25ஆம் திகதி தொடங்கி 27ஆம் திகதி வரை வல்லினம் & GTLF ஏற்பாட்டில் நிகழ்ந்த இலக்கிய விழாவில் பங்கெடுத்துக் கொண்டேன். இவ்விழா கொண்டாட்டமாக அமையாமல் தொடர் அறிவு பகிர்வை வாசகர்களிடையே ஏற்படுத்திக் கொடுத்தது. நான் விரும்பி வாசிக்கின்ற எழுத்தாளர்களையும் ஆளுமைகளையும் நேரடியாகக் கண்டு அவர்களின் இலக்கியம் சார்ந்த பகிர்வுகளைக் கேட்கும் சாத்தியத்தையும் நான் இவ்விழாவில் பெற்றேன்.

ஐந்து அமர்வுகளைக் கொண்ட இவ்விலக்கிய விழா பல வகையில் எனக்குப் புதிய அனுபவத்தைத் தந்தது. ஜெயமோகனின் பேச்சும் 91 வயதிலும் துல்லியமாகக் கருத்துகளை முன் வைக்கும் பி. கிருஷ்ணனின் உரையாடலும் நெகிழ வைத்தது. மே மாதம் தொடங்கி தமிழ் விக்கி என்கின்ற இணையக் கலைக்களஞ்சியத்தில் மலேசிய ஆளுமைகள், எழுத்தாளர்கள், வரலாற்று இடங்கள், நாவல்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன்.

இவ்விழாவில் தமிழ் விக்கி அறிமுகமும் அதன் குறித்த கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. இதன் மூலம் கட்டுரைகளை மேலும் மேம்படுத்தப்படும் முறைகளையும் தமிழ் விக்கியின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தேன். பி.கிருஷ்ணன் மொழிபெயர்த்த ஷேக்‌ஸ்பியர் நாடக அரங்கேற்றம், பி. கிருஷ்ணனின் நூல் வெளியீடு, மலேசிய-சிங்கப்பூர் இலக்கியம் குறித்த கலந்துரையாடல், பி. கிருஷ்ணன் படைப்புலகம், ஜேயமோகனுடனான கலந்துரையாடல் எனக் கடந்த 3 நாட்கள் பயனாக நிறைவடைந்தன.

சாலினி

ஒரு சபதம்

வல்லினத்திற்கு மீண்டும் எனது நன்றி. எனக்கு மீண்டும் இலக்கிய உலகிற்கு ஒரு பாலமாய் அமைந்ததற்கு. 4 மாதங்களாகிவிட்டது நான் என்னை இலக்கியத்தில் ஈடுபடுத்தி. நான் தொடங்கிய இந்த இலக்கிய யாத்திரையில், இவ்விரண்டு நாட்களும் (25/11/2022 மற்றும் 26/11/2022) ஒரு திருப்புமுனையாக அமைந்தன. பி.கிருஷ்ணன், அவரின் இலக்கிய பயணத்தைப் பகிர்ந்த போது என்னுள் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி. 90 வயதை எட்டிய ஒருவர் இன்னும் இலக்கியத்திற்காக உழைக்கிறார் என்பதை உணர்ந்த போது, நான் வெறுமனே கழித்த 4 மாதங்களை நினைத்து வருத்தன். மீண்டும் நான் தட்டி எழுப்பப்படேன். அதே சமயத்தில், பி. கிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தேன். அவரிடம் பேசினேன். மீண்டும் அவரைச் சந்திக்கும் போது அவரே என் பெயர் சொல்லி வாழ்த்தும் வகையில் ஒரு படைப்பை எழுத வேண்டும் என்று சபதம் எடுத்தேன். வாசிப்பை மீண்டும் தொடங்க வேண்டும்; தொடங்கிவிட்டேன்.

குகன்

ஆச்சரியம்

சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் பி.கிருஷ்ணன் ஐயாவுடன். ஷேக்ஸ்பியரின் முதன்மையான நாடகங்களை மொழிபெயர்த்துள்ளார். அடுத்த ஆண்டு தமது 91ஆவது அகவையில் மற்றுமொரு நாடக மொழிபெயர்ப்பு நூலை வெளியிடவிருப்பதாகப் பகிர்ந்தார். அவர் முன்னெடுக்கும் செயலில் அவரின் ஆற்றலும் ஈடுபாடும் ஆச்சரியப்பட வைக்கின்றது.

தர்மராஜ்

சிறப்பு

பினாங்கு ஜார்ஜ்டவுனில் நவம்பர் 24 முதல் 27 வரை நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் இம்முறை இலக்கிய விழாவில் வல்லினம் இலக்கிய குழுவும் இணை இயக்கமாக இணைக்கப்பட்டு தமிழ் அரங்குக்கு எழுத்தாளர் ம.நவீன் அமர்த்தப்பட்டார். இலக்கிய உரைகள், கலந்துரையாடல்கள், புத்தகவெளியீடு, கண்காட்சிகள், பயிற்சி பட்டறைகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தன.

எழுத்தாளர் ஜெயமோகனின் தமிழ் விக்கி இணையக் கலைகளஞ்சியம் அறிமுகம், பயன்பாடு, பங்களிப்பாளர்கள், தமிழ் விக்கியின் மலேசிய பகுதியின் தரம்,அதன் அடைவு,கல்வி சூழலில் அதன் பயன்பாடு என விரிவான உரையாடலும் இடம் பெற்றிருந்தன.

சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளரான பி.கிருஷ்ணன் அவர்களின் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட ஷேக்ஸ்பியரின் ஏழு புத்தகங்கள் வெளியீடு கண்டது. எழுத்தாளர்கள் லதா, அழகுநிலா, ஜி.எஸ்.எஸ்.வி.நவின், அ.பாண்டியன், அரவின் குமார், அருண்மொழி நங்கை, கணேஸ்பாபு ஆகியோர் கலந்து கொண்டது பி.கிருஷ்ணன் அரங்குக்கு சிறப்பு சேர்த்தது.

கற்பகவள்ளி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...