“புலவர்கள் யாரேனும் நம்மை புகழ்ந்து பாட வல்லீரேல் பொற்காசுகள் பரிசாகத் தரப்படும்” என்று அரசர்கள் அறிவிப்பதும் அந்த அறிவிப்பை கேட்ட புலவர்கள், அரசர்களை நாடிச் சென்று இனிய கவி பல பாடி (அரசனை வீரதீர சூரன் என்று புகழ்ந்து) பரிசில்கள் பெருவதும் நாம் சங்க இலக்கியச் சூழலில் பல காலம் அறிந்த ஒன்றுதான். ஆட்சியாளர்களை மகிழ்விக்கும் புலவர்களுக்கும் பொது மக்களுக்கும் அரசுகள் அவ்வப்போது சில சன்மானங்களை வழங்கி அதன் வழி தங்கள் ஆட்சியை அல்லது அரசியலை உறுதிபடுத்திக் கொள்ள முனைகின்றன.
அன்று சங்க இலக்கியத்தில் கண்ட காட்சிகள் இன்றைய அரசியல் தளத்தில் வேறொரு வடிவத்தில் முளைத்து வளர்ந்து மரமாகிக் கொண்டிருக்கிறது. அன்று அரசர்கள் தங்களையும் தங்கள் ஆட்சியையும் புகழ்ந்து பாடுவோருக்கு பணமுடிப்புகளும் பொற்காசுகளும் கொடுத்தனர். ஆனால் இன்றைய அரசியலில் ஆட்சியாளர்கள் (அரசியல் கட்சிகள்) தங்களுக்கு ஆதரவு தரும் மக்களுக்கு பணமுடிப்பு தர ‘ஜன்ஜி’ (உறுதிமொழி) செய்கிறார்கள்.
மலேசிய அரசியல் வரலாற்றில் தேர்தல் நேரத்தில் உண்டாகும் பணப்புழக்கம் இன்று மிக வேகமாக முன்னேறி இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை பணப்புழக்கம் கட்சித் தேர்தல் அளவிலேயே இருந்தது. கிளைத்தலைவர், தொகுதி தலைவர் போன்ற சிறு தலைவர்களை வளைத்துப் போட கட்சியின் பெருந்தலைவர்கள் ‘மிக ரகசியமாக’ இந்த பண பட்டுவாடாவை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். நீ எனக்கு ஓட்டு போட்டால் இவ்வளவு கொடுப்பேன் என்று ரகசிய ‘ஜன்ஜி’கள் பேசி முடிக்கப்பட்டன. அம்னோ, ம.இ.கா, ம,சீ.ச போன்ற பெரிய கட்சிகளின் தேர்தல்களில் ‘பண வாடை’ கம கமத்து வீசியது. ஆனால் அது அப்போது வண்மையாக கண்டிக்கப்பட்டது. ‘பண அரசியல்’ மிகவும் தவறான வழிக்கு கட்சியை கொண்டு சென்று விடும் என்று ‘ உத்தமர்’ மகாதீர் போன்ற மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் ‘பால பாடம் பாடைவரை’ என்பது போல கட்சி மட்டத்தில் கற்றுக் கொண்ட பண அரசியல் இன்று தேசிய அரசியலிலும் பொதுத் தேர்தலிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இதில் மிகப் பெரிய வேறுபாடு என்னவென்றால் ‘ஹராமாக’ இருந்த பண அரசியல் ‘ஹலாலாக’ மாறியிருப்பதுதான். பாரிசான் தன் தேர்தல் கொள்கை அறிக்கையிலேயே மிக துணிச்சலாக ரிம 1200. ரிம 250 என்றெல்லாம் விலைப்பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
ஒரு அரசாங்கம் தன் மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு பொருளாதார உதவிகளை அவ்வப்போது செய்வது கடமையாகும். அரசாங்க ஊழியர்களின் ஊதிய உயர்வு, சிறப்பு படிச்செலவு, வறுமையில் வாடும் மக்களின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த சிறப்பு பண உதவிகள், கல்வியில் சிறப்பு தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் போன்ற பல்வேறு பண உதவிகளை ஒரு அரசாங்கம் மக்களுக்கு செய்வது கடமை. இவை சட்ட ரீதியாக சரியானவையும் கூட. நாடாளு மன்றத்தில் முன்மொழியப்பட்டு விவாதிக்கப்பட்டு, பல அடுக்கு விவாதங்களுக்கு பின் சிறப்பு ஆய்வுகள் வழி மேற்கண்ட உதவிகள் மக்களுக்குச் சென்றடைகின்றன. ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப கட்சி அளவில் திட்டமிட்டு, கட்சி நலனையே முன்னிறுத்தி தான் சார்ந்த கட்சி வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தோடு பொதுமக்களைக் கவரும் பொருட்டு தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் ‘பண உதவிகள்’ வெளிப்படையான பண அரசியல் அன்றி வேறில்லை.
இந்நாட்டில் பணம் தேர்தல் நேர வாக்குறுதிகளில் ஒன்றாக ஆவது 12வது பொதுத்தேர்தலில் இருந்து வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. 12வது பொதுத்தேர்தலுக்குப் பின் பினாங்கு மாநிலம் பாக்காதான் வசம் ஆனது. லிம் குவான் எங் மாநில முதல்வர் ஆனதும், பினாங்கில் பிறந்து வளர்ந்த அறுபது வயது நிரம்பிய மூத்தகுடிமக்களுக்கு ரிம100ஐ அன்பளிப்பாக கொடுத்தது. அதோடு பள்ளி மாணவர்களுக்கும் பல்வேறு உதவித் தொகைகள் கொடுக்கப்பட்டன. அப்போது தேசிய முன்னனி தலைவர்கள் பினாங்கு மாநில அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தனர். மேற்கண்ட உதவித்தொகை ‘ஹராமானவை’, சட்டவிரோதமானவை என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சில முதியவர்கள் அரசாங்கத்திடம் பெற்ற பணத்தை திரும்ப ஒப்படைத்து விட்டதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால், 2011 வரவு செலவு அறிக்கை தாக்கலின் போது பிரதமர் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு ரிம500 சிறப்பு உதவி தொகையை அறிவித்தார். அதே போன்று பள்ளி மாணவர் கல்வி உதவித் தொகை, உயர்கல்வி மாணவர்களின் புத்தக உதவித் தொகை போன்றவையும் அறிவிக்கப்பட்டன. 2012 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையிலும் மேற்கண்ட உதவிகள் தொடர்ந்தன. இவை மக்களை பாரிசான் பக்கம் கவரும் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாக தெரிந்தாலும் ஆளும் கட்சி (அரசாங்கம்) என்னும் அடிப்படியில் மக்களுக்கு செய்யும் கடமை என்று மகிழ்ச்சி அடையலாம். அந்த அளவில் “நம்ம அரசாங்கம் ரொம்ப நல்ல அரசாங்கம்” என்று மக்கள், ஊடகங்களில் பேட்டி கொடுப்பது ஏற்புடையதுதான்.
ஆனால் 13ஆவது பொது தேர்தலில் பாரிசான் தனது கொள்கை (அரசியலில் அப்படி ஒன்று உண்டா…?) அறிக்கையில் வரிசைபடுத்தியிருக்கும் ரிம1200, ரிம250, ரிம150 போன்ற உதவி தொகைகள் சந்தேகமற ‘மோசமான பண அரசியலின் வெளிப்பாடுதான். மக்களின் புனிதமான ஓட்டுக்கு விலைபேச துணியும் திட்டம் நிச்சயம் கட்சி தேர்தல்களில் பணத்தை வைத்து பலரின் வாயை அடைத்த பண முதலைகளின் புத்தியில் உருவானதுதான்.
பணத்தைக் காட்டி மக்களை கவர நினைப்பது எவ்வளவு கேவலமானது, ஆபத்தானது என்பது அரசியல் கட்சிகளுக்கு தெரியாதது அல்ல. ஆனால் அவை வழக்கம் போல சுயநலம் மிக்கவை. தங்கள் காரியம் முடிந்தால் போதும் என்னும் தற்காலிக திட்டத்தோடு அவை செயல்படுகின்றன. ரிம1200, ஒரு வசதியற்ற குடும்பத்திற்கு எந்தெந்த வகையில் உதவும் என்பது மிகவும் அகவயமான கேள்வியாகும். விடை காணுவது சிரமம். பொதுவாக ஒரு கணக்கு போட்டால், மிக சிக்கனமாக செலவு செய்தாலும் (உணவுக்கு மட்டும்) இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அந்த தொகை மறைந்துவிடும். அதன் பிறகு அந்த குடும்பத்தின் நிலை கேள்விக்குறிதான். அரசாங்கம் மீண்டும் எப்போது பிச்சை போடும் என்று காத்திருக்க வேண்டும். 56 ஆண்டுகள் நாட்டை ஆண்ட ஒரு அரசாங்கம் தன் மக்கள் இரண்டு மாதங்கள் மட்டுமே துன்பம் இன்றி வாழ வழி செய்ய முடியும் என்பது எவ்வளவு பெரிய அபத்தம். ‘வறுமையில் வாடும் மக்கள்’ எனப்படுவோர் அரசாங்கத்தின் நிரந்தர அரசியல் வைப்புத்தொகையாக இருப்பதையே பாரிசான் விரும்புகிறது. பணத்தை விட்டெரிந்து அவர்களை விலைக்கு வாங்கிவிட முடியும் என்று அது தப்புக் கணக்கு போடுகிறது.
அடுத்து, 13ஆவது பொது தேர்தலில் பாரிசான் ரிம1200 வுக்கு விலை பேசும் ஓட்டு இன்னும் பத்து ஆண்டுகளில் எவ்வளவு விலைக்கு போகும்? மக்கள் அப்போது எவ்வளவு தொகையை எதிர்பார்ப்பார்கள்? அன்றைய சூழலில் எந்த கட்சி கூடுதல் தொகைக்கு விலை பேசுகிறதோ அந்த கட்சியின் பின்னே மக்கள் போனால் நாடு என்ன ஆவது? பணத்தாசை பொல்லாதது; முடிவு இல்லாதது. இப்படியே போனால் ‘அன்னிய நாட்டு தீய சக்திகள்’ (ஒரு வசதிக்காக பல தலைவர்கள் இப்படித்தான் கூறிக் கொள்கின்றனர்) கூட பணநாயக தேர்தலின் வழி நாட்டை அடிமை படுத்திவிடலாம்.
2 மாதம் ‘செல்வ செழிப்போடு’ வாழ்வதற்காக 5 வருட வாழ்க்கையையும் அதற்கு பிறகு காத்திருக்கும் ஆபத்துகளையும் நிதான புத்தியுள்ள வாக்காலன் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டான். “போன போவுதுன்னு’ பொறிக்குள் முழு கருவாட்டை சுட்டு வைப்பது எலிக்கு உணவுதந்து பசி போக்க அல்ல…..பொறிக்குள் மாட்டிவிடவே.
(பின் குறிப்பு: கட்டுரையை எழுதி விட்டு ‘கோப்பி ஓ’ குடிக்க மரத்தடி கடைக்குப் போனேன். அங்கே தனித்து வாழும் தாயான பார்வதி மங்கு கழுவிக் கொண்டிருந்தார். நான் “அப்ப பாரிசான் ஜெயிச்சா உங்களுக்கு நம்பர் அடிச்ச மாதிரியாச்சே” என்றேன். அதற்கு அவர்… “ நீங்க வேற சார் அந்த 1200 ர வாங்க எனக்கு ஐசி இல்லையே சார்… பத்து வருசமா அலையவிடுராங்க…இன்னும் ஐசி கொடுக்க மாட்டராங்க” என்று குண்டை தூக்கி போட்டார். நாட்டு குடிமக்களுக்கு எது அவசியமானது, நிரந்தரமானது என்பதை அறிந்த அரசாங்கமே நமக்கு தேவை)
விலாசுங்கள் விலங்குகளை.. நெத்தியடி இறுதிவரி.
‘ஹராமாக’ இருந்த பண அரசியல் ‘ஹலாலாக’ மாறியிருப்பதுதான்…….
அறிவு பூர்வமான கருத்துகள். சூப்பர்