பட்டு : புரிந்து கொள்ளாத அன்பு நிரந்தரமானது

கணவன் மனைவி என்னும் உறவு புனிதமாகப் பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு முன் எப்படி இருந்திருந்தாலும் திருமணத்திற்குப் பின் ஒருவருகொருவர் எனும் கட்டமைப்பில் வருகிறார்கள். திருமணம் பெண்களை அடிமையாக்குகிறது என்கிறார் தந்தை பெரியார். காதல் என்பதும் ஒன்றுமில்லாதது. வெறுமனே அதற்குப் புனித பிம்பத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்று பெரியார் சொன்னதாய் படித்த ஞாபகம் இருக்கிறது. காதல் இல்லாத நிலை வந்தால்; எவ்வளவோ இழந்திருப்போம் என்றும் சொல்லலாம்.

கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் காதல்; வேறு வழியற்ற ஒன்றாகவும் இருக்கலாம். மனதில் வேறொரு ஆணோ பெண்ணோ இருக்க; சமூகத்திற்குப் பயந்து அது கட்டமைத்திருக்கும் கௌரவம், மானம், அவமானம், போன்ற வார்த்தைகளுக்குத் தலைவணங்கி போலி வாழ்க்கையை வாழ்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். பெண்களின் நிலமை இன்னும் மோசம்.

உடல் தேவைக்காக வேறு துணை நாடுவது; மனத்தேவைக்காக வேறு துணை தேடுவது என ஆழ்மனதின் ஆசைகளைத் தீர்ப்பவர்கள் எப்போதும் ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் தேவைகள் உண்டு, மனம் உண்டு ஆசைகள் உண்டு என்பதனை உத்தம வேடதாரிகள் ஒப்புக்கொள்வதில்லை. தன்னை நல்லவனாக ஊரார் நம்பவெண்டுமெனில்; ஆள்காட்டி வேலை செய்தாலே போது. இவன் கெட்டவன் என்பவன் நல்லவனாகிறான். அவன் பெண்பித்தன் என்பவன் உத்தமனாகிறான். இப்படிச் சுலபமான வழிகளில் நல்லவர்களாகவும் உத்தமர்களாகவும் உங்களுக்கும் எனக்கும் தெரிந்தவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

இதையெல்லாம் நினைத்துப்பார்க்க வைத்தது, சமீபத்தில் படித்த ‘பட்டு’ எனும் மொழிபெயர்ப்பு நாவலை படித்தேன். அச்லெசாண்ட்ரோ பாரிக்கோ எழுதிய நாவல் இது.

‘பட்டு’ (செட்டா-seta) என்ற இந்நாவல் இத்தாலிய மொழியில் 1996-ல் வெளியானது. வெளிவந்த மறு ஆண்டே இந்நாவல் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 30 மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். 2005-ம் ஆண்டு மேடை நாடகமாகவும், 2007-ம் ஆண்டுத் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் நாடக வடிவை, அமேரிக்க நாடக இயக்குனராக மேரி ஸிம்மன்மான் உருவாக்கினார். திரைப்படத்தைப் பிரெஞ்சு-கனடிய இயக்குனர் பிரான்ஸ்வா கியார்த் இயக்கியுள்ளார்.

பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து பிரகாசமான எதிர்காலத்துக்காகக் காத்திருக்கும் இளைஞனான ஹெர்வே ஜான்கர். நண்பனின் தூண்டுதலால் , பட்டு புழு வியாபாரம் செய்யத் தொடங்குகிறான். வியாபாரத்திற்காக உலகின் மறுகோடியில் இருப்பதாகச் சொல்லப்படும் ஜப்பானுக்குச் செல்கிறான். 1860-ம் ஆண்டுக் காலாகட்டம் என்பதால் பயணம் இலகுவாக இருக்கவில்லை. ஒரு முறை அங்குச் சென்று பட்டு புழு முட்டைகளைக் கொண்டு வர ஆறு மாதம் வரை ஆகிறது. ஹெர்வே ஜான்கரின் அந்தப் பயணம் விசித்திரமாக இல்லாமல், மனதை சுவாரஸ்யப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது.

ஜப்பானுக்கும் இதர நாடுகளுக்கும் கூட அரசியல் நெருக்கடியாக இருந்த சமயம் அது. அங்கே செல்வதால் உயிருக்கேகூட ஆபத்து நேரலாம் என்ற போதும்; அதன் சுவாரஸமும் அதன் லாபமும் ஹெர்வே ஜான்கரை தடுக்கவில்லை.

அங்குதான், ஜப்பானிய பெண் ஒருத்தியை அவன் சந்திக்கின்றான். சந்திப்பு என்பதை விட முகமறியாத ஸ்பரிசம் அது. அவளிடம் இருந்து ஒரு கடிதம் கிடைக்கிறது. ஜப்பானிய மொழியின் சித்திர எழுத்துகளில் இருந்ததால், ஹெர்வேக்கு அதன் பொருள் புரியவில்லை. அதே நினைவுகளுடனும் அன்று நடந்த சம்பவங்களுடன் திரும்புகிறான்.

தன் நாட்டிற்கு வந்ததும்; தன் நண்பனிடம் ஜப்பானிய சித்திர எழுத்துகளை வாசிக்கத் தெரிந்தவர்கள் குறித்து வினவ, அங்கேயிருக்கும் விபச்சார விடுதியை நடத்தும் பெண் குறித்துத் தெரிகிறது. அங்கே செல்கிறான். அவள் அந்தச் சித்திர எழுத்துகளைப் படிக்கிறாள்.

“திரும்பி வா. இல்லையென்றால் இறந்துவிடுவேன்” என்று இருக்கிறது. அங்கிருந்து ஹெர்வேயின் வேட்கை அதிகமாகிறது. யார் அவள்..? எதற்கு இப்படி எழுதியிருக்கிறாள்..?அன்று ஏன் அவள் அவ்வாறு நடங்துக்கொண்டாள்..? தனக்குப் பட்டு புழு முட்டைகளை விற்கும் சர்வாதிகாரனின் மனைவியா..? போன்ற குழப்பங்கள் அவனை ஆழ்த்துகிறது.

மீண்டும் பயணிக்கிறான். பல மாற்றங்கள் அவன் சந்திக்க நேர்கிறது.

காலம் மாறுகிறது ஜப்பானுக்குச் சென்று வாங்கும் நிலமை மேலும் அபாயகரமாகிறது. அதைவிட எளிய வழிகள் இருப்பதை வியாபாரிகள் உணர்கிறார்கள். அப்போதும் ஹெர்வே ஜான்கர் ஜப்பானுக்குச் செல்வதை விரும்புகிறான். அவனது மனைவிக்குச் சந்தேகம் எழுந்தாலும், அவளால் அவனை மேலும்மேலும், நேசிக்கவே முடிகிறது.

“கட்டாயம் நீங்கள் திரும்ப வேண்டும் ” என்ற விருப்பத்தைக் கூறியே வழியனுப்புகிறாள்.

இம்முறை எதிர்ப்பார்க்காத சம்பவங்கள் அவனைக் குழப்பத்தில் தள்ளுகிறது. திரும்புகிறான். அவனால் இயல்பாக இருக்க முடியாததை அனைவரும் உணர்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவற்றைச் செய்து, அவன் தன்னிலை மறந்துவிட்டான், புத்தி பேதலித்துவிட்டான், இவன் நல்லவன் என்று பலரும் பலவாறாகப் பேசும்படு ஆளாகிறான்.

இம்முறை அவனது முகவரிக்கு ஒரு கடிதம் வருகிறது. முகப்பில் மட்டுமே பழக்கமான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. கடிதத்தில் ஜம்மானிய சித்திர எழுத்துகள் பக்கம் பக்கமாக இருக்கின்றன. இனம் புரியாத சிந்தனை அவனை எங்கெங்கோ கொண்டு செல்கிறது. படிக்காத பொழுதும் அந்தக் கடித்தத்துடனே அவன் நாட்களைக் கடக்கிறான். மீண்டும் அந்தப் பெண்மணியைத் தேடி போகிறான். அவளும் அவனை அடையாளம் கண்டு வரவேற்கிறாள். அவள் அணிந்திருந்த நீல மலர்கள் அவளுக்கு மேலும் அழகை கூட்டின. நீல மலர்களுக்கு ஏற்றார்போலவே இருந்தாள் அவள். அவனுக்குத் தெரியாது அந்த நீல மலர்கள்தான் இவனது வாழ்க்கையை மாற்றப்போகிறது என. இம்முறை அவள் , இதுதான் கடைசி, இனி இந்தக் கடிதங்களை அவளால் படிக்க இயலாது என்கிறாள். குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டவள் போல அவள் கடிதத்தை அவனுக்குப் படித்துக் காட்டுகிறாள். கவிதைகளாகக் காதல் மொழிகளாக ஏக்கத்தின் அழைப்பிதழாக அந்தக் கடிதம் இருக்கிறது. அவை வார்த்தைகளா இல்லை; அவை வாழ்க்கை தான் வாழவேண்டிய வாழ்க்கை என அவன் மனம் நம்புகிறது.

வாழ்க்கை மாறுகிறது. ரசிகனாகிறான்.வியாபாரமும் வளர்கிறது. அவனுக்கு வியாபார யுக்தி முதல், ஆலோசனை வரை சொல்லிவந்த நண்பன் விடைபெறுகிறான். யாருக்கும் அவன் எங்கே போகப்போகிறான் எனத் தெரிந்திருக்கவில்லை. ஹெர்வே ஜாங்கர் அவனை வழியனுப்ப, ஹெர்வேயின் மனைவி அவனைக் கட்டியணைத்து அன்பு பறிமாறி கண்ணீருடன் அவனை வழியனுப்புகிறான். அதன் காரணம் கூட வாசித்துக்கொண்டிருக்கும் நமக்கும் ஹெர்வே ஜான்கருக்கும் தெர்ந்திருக்கவில்லை.

ஹெர்வே ஜான்கரின் மனைவி இறக்கிறாள். சமாதி செய்யப்படுகிறாள். இரண்டு மாதங்கள் கழித்து, மனைவியில் கல்லறையில் பூக்களை வைக்கும் போது வேறு சில பூக்களைக் கவனிக்கிறான். அவை நீல நிறப்பூமாலை. அது அவனை வேறு வகையில் சிந்திக்க வைத்தது. அவனது சிந்தனை நாட்கனக்காகத் தொடர்கிறது.

கடிதத்தைப் படித்த , அந்தப் பொண்மணியைத் தேடிப்போகிறான். அவள் வேறு நாட்டுக்குச் சென்றது தெரிகிறது. பல நாட்களுக்குப் பிறகு அவளைச் சந்திக்கின்றான். அவள் மெருகேரியிருந்தாள். இப்போது பணக்காரன் ஒருவனுக்காக மட்டுமே அவள் வாழ்ந்துக் கொண்டிருந்தாள் எனத் தெரிந்தது. இப்போது அவளிடம் நீல நிற புக்களோ, நீலம் நிற பூக்கள் போன்ற மோதிரமோ இருக்கவில்லை.

ஹெர்வே கேட்கிறான்;

“நீங்கள்தானே அந்தக் கடிதத்தை எழுதினீர்கள்”

அவள் சொல்கிறாள்;

“கடிதத்தை எழுதியது நானில்லை..”

அமைதி நிலவுகிறது; மீண்டும் அவள் சொல்கிறாள்;

“கடிதத்தை எழுதியது உங்கள் மனைவி ஹெலன். அவள் என்னிடம் வருவதற்கு முன்பே அதனை எழுதியிருந்தாள், என்னை அவற்றை ஜப்பானிய சித்திர எழுத்துகளில் எழுத சொன்னாள்.”

மேற்கொண்டு அவள் விவரிக்கும் விதம், இதுவரை நாவலில் இருந்த ஏதோ ஒன்றை உடைத்து எறிந்தது போல இருந்தது. இறுதியக;

“ஐயா, இந்த உலகத்தில் எதைவிடவும் அவள் ஆசைப்பட்டது அந்தப் பெண்ணாக ஆவதற்குத்தான் என்று நம்புகிறேன். உங்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவள் அந்தக் கடிதத்தை வாசிப்பதை நான் கேட்டிருக்கிறேன். எனக்குப் புரியும் ”

ஹெர்வே புறப்படுகிறான். மீண்டும் அவர்கள் சந்திக்கவேயில்லை. நாவலில் மீதி இருப்பது ஒரு அத்தியாயம் மட்டுமே; இந்நாவலை படித்தாலின்றி , அந்த அத்தியாயத்தைப் புரிந்து கொள்ள முடியாது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...