எப்போதுமே எனக்கு கலாப்பிரியாவின் கவிதைகளின் மேல் தனியானதொரு காதல் உண்டு. அவரது பரந்து விரிந்த கவிதைக்களமும் கவிதையும் கவித்துவமும் மிக அழகானது. மீண்டும் மீண்டும் சிலாகிக்க வைக்கும் தனியொரு சக்தி அவரது கவிதைகளுக்கு உண்டு. அவரது மொழி ஆளுமை அபாரமானது. ஓரிரு வார்த்தைகளை ஒன்று சேர்த்து புதியதொரு பொருளைக் கொடுக்கும் அதிசயத்தை அவரது கவிதைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.
கலாப்பிரியாவைக் கடந்து தமிழ்க்கவிதை வேறொரு தளத்தில் பயணிக்கத் தொடங்கி நீண்ட காலம் ஆகிவிட்டாலும் அவரது கவிதைகளில் உள்ள எளிமையும் வார்த்தைச் செறிவும் இயற்கை அவதானிப்பும் மறுப்பதற்கு இடமின்றி தமிழ்க்கவிதை உலகில் குறிப்பிடத்தக்க ஒருவராக அவரை அடையாளப்படுத்தியுள்ளது.
கலாப்பிரியாவின் அண்மைய தொகுப்பான உளமுற்ற தீயில் மொழி குறித்தான பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மொழி குறித்து காலம் காலமாக பேசப்பட்டு வந்தாலும் கலாப்பிரியாவின் கவிதைகள் மொழியை மிக நெருங்கி நின்று பேசுகின்றன.
மனிதன் நாகரீகமடைந்து விட்டான் என்பதைக் காட்டும் மிக முக்கிய கூறாக மொழி விளங்குகிறது. சிந்தனை வளர்ச்சியே நாகரிக காலத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது. வேட்டை கருவிகளை முறையாக பயன்படுத்தி வேட்டையாடி உண்ணுதலும் ஓரிடத்தில் நின்று நிலைத்து வாழத் தொடங்கியதும்தான் மொழிகள் தோன்றுவதற்கான அடிப்படை வாய்ப்பினை ஏற்படுத்தியது. மனிதர்கள் பேசிய மொழி அவர்கள் செல்கிற இடமெல்லாம் பரப்பப்பட்டு பல கிளைமொழிகளாக பிரிந்து இன்று உலகில் ஏறத்தாழ ஆறாயிரத்திலிருந்து ஏழாயிரம் மொழிகள் வரை இருக்கக் கூடும் என மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
தேடிய வார்த்தையைப்
பூவாய்த் தரும்
ஆகராதி
ஏனையவற்றை
வேராய்
ஒளித்து வைக்கும்
மொழி
அகராதியில் சொற்களுக்குப் பொருள் தேடுகின்றோம். சில வேளைகளில் சொற்களையும் தேடுகிறோம். எத்தனையோ சூழ்நிலைகளை உணர்வுகளை இன்றுவரை நம்மால் சொற்களில் கொண்டு முடியவில்லை. அவை எல்லாம் எங்கு ஒளிந்திருக்கின்றன? சில வேளைகளில் ஏதாவதொன்றை யோசித்துக் கொண்டிருக்கிற போது யதேச்சையாக நினைவுக்கு ஏதாவது ஒன்று குறித்து திடிர் அவதிக்குள்ளாகிறோம். அதை மொழிக்குள் கொண்டு வர மீண்டு;ம் மீண்டும் முயன்று தோற்றும் போகிறோம்.
சுற்றிப் பார்க்க வந்த
குழந்தைகள்
இரண்டிரண்டாய்
மஹால் தூணைக்
கட்டிப் பிடிக்கின்றன
தொட்டுக்கொள்ளாத
கைகளுக்கிடையே
மௌனமாய்
மொழி
‘தொட்டுக்கொள்ளாத கைகளுக்கிடையே மௌனமாய் மொழி’ – மௌனமும் ஒரு மொழிதானே. ஆயிரம் வார்த்தைகள் பேசியும் புரியாத ஒன்றை வெறும் மௌனம் சில வேளைகளில் உணர்த்திவிடும் அதிசயம் எல்லாருக்கும் நிகழ்கிறது.வார்த்தைகளில்லாமல் நம்முடைய ஆழ்மனதின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் மௌனம். நமக்கு மிகப் பிடித்த ஒருவரை சந்தித்துப் பிரிக்கிற கடைசி நிமிட மௌனம் தானே சிலிர்ப்பூட்டுகின்றது. மனம் செயலற்று, சொல்லிழந்து நிற்கும்போது மௌனம் மட்டுமே மொழியாகிறது.
முலையுண்ட
குழந்தைக்கு
ஏப்பம் வரும் வரை
முதுகு நீவும்
தாயுடன்
பரிதவித்து நிற்கிறது
மொழி
“குழந்தைகளின் அகவுலகம் எப்போதும் உணர்வு அலைகளில் ததும்பிக்கொண்டே இருக்கிறது. அதிசயங்கள் மொய்த்துக் கிடக்கும் ஒவ்வொரு கணமும் அவர்களுக்கு மட்டுமே சாத்தியமாய் இருக்கிறது. வீட்டில், பள்ளியில், தோட்டத்தில் அவர்களது வார்த்தைகள் தொடர்ந்து பூத்துக்கொண்டேயிருக்கின்றன கவனிப்பாரற்று. குழந்தைகளின் மொழியை உலகம் தவறவிட்டதே மாபெரும் சாபமாய் எல்லோர் மீதும் கவிந்து கிடக்கிறது.” அண்மையில் இந்த வரிகளை வாசித்தபோது தொடர்ந்து குழந்தைகளைப் புறக்கணிக்கும் ஒரு சமூக பிரதிநிதியாக என்னையும் உணரத் தொடங்கியிருந்தேன். தன் முலைப்பால் புகட்டி, குழந்தைகளில் ஒவ்வொரு அசைவுக்கும் ஒவ்வொரு சத்தத்திற்கும் பொருள் கண்டு வளர்த்தெடுத்த காலம் போய் இப்போது புட்டிப்பால் வாய் நிறைந்து வெளியெல்லாம் ஒழுக தொட்டில் குழந்தைகள் இருக்கின்றன. புறக்கணிக்கப்பட்டு காயத்தோடு நிற்கும் ஒவ்வொரு குழந்தையைக் காணும்போதும் பரிதவித்துதான் நிற்கிறது மொழி.
தேடுவதை விடுத்து
என்றோ தொலைந்த
பழம் படிமங்களை
அகழ்ந்து வருகிறாயே
முதலில்
பாதாளக் கரண்டியைத்
தொலைத்து முழுக்கு
சொல்கிறது
மொழி
தொடர்ச்சியைப் பற்றிப் பேசாமல் தொன்மத்தை மட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும், பழம்பெருமையை மட்டுமே வாய்க்கிழியாமல் பேசிக் கொண்டிருக்கும் பலருக்கு இக்கவிதை ஒரு நல்ல அடி. தொன்மையைக் காக்கிறோம் என்று சொல்லி அதே இடத்தில் நின்று கொண்டிருப்பதும், தொடர்ச்சி குறித்து கவலைக் கொள்ளாமல் தொன்மத்தோடு தொலைந்துபோவதும் ஒருவகையான சாபக்கேடு தானே.
உறுமி பறை
கும்மி குலவை
சகல ஆர்ப்பாட்டங்களுடன்
சாமக் கொடை முடிந்து
சப்பரம் கிளம்பிற்று
தீவட்டி பிடிப்பவனின்
தூங்கி வழியும் கண்ணில்
அமைதியாய்க் குடியேறிய
மொழி
அவ்வப்போது வானேகுகிறது
வெடிச் சத்தமாய்.
உறுமி, பறை, கும்மி, குலவை என எல்லாமும் மொழிதான். இசைமொழி பேசும் மொழி கடந்து அனைவரையும் இணைக்கிறது தானே. இந்த கவிதையில் காணப்படும் சூழல் அவதானிப்பு குறிப்பிடத்தக்கது. மிகச் சிறிய கவிதைதான். ஆனால், ஒரு திருவிழா காட்சியை கண்முன் காட்டிப் போகின்றது.
சிறிய
ஊரென்றாலும்
பெரிய
உலகினுள்தான்
இரந்து நிற்பவனின்
மிகக் குறைந்த
சொற்களும்
ஈயாமல் விரட்டும்
ஒற்றைச் சொல்லும்
பரந்து கெடச்
சொல்லும்
அறச் சொல்லும்
அனைத்தும்
சேர்ந்தே
உயர்தனிச்
செம்மொழி
இதுதான் மொழி என வரையறுப்பது யார்? அதை பேசுபவர்களா அல்லது அதைக் கேட்பவர்களா? என்னைக் கேட்டால் பேசப்படுவது பேசப்படாதது எல்லாம் மொழிதான் என்பேன். கவிஞர் ஒன்றை மிகத் தெளிவாக சொல்கின்றார். பிச்சை கேட்டு நிற்பவனின் மிக குறைந்த சொற்களும், அவனுக்கு பிச்சை ஒன்றும் போடாமல் விரட்டும் ஒற்றைச் சொல்லும், ‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ என்பதான அறச்சொல்லும் கொண்டதுதான் நமது உயர்தனிச் செம்மொழி என்கிறார். ஆக இதுதான் மொழி, இது மட்டும்தான் மொழி எனத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கு வெறும் மௌத்தைக் கூட வழங்காமல் ஒதுங்கிப் போகிற ஒன்றை மட்டும்தான் நியாயமான ஒன்றாக தர முடியும்.
அதிகம்
கோருவதுமில்லை
குறைவாய்ச்
சொல்வதுமில்லை
அன்பின் மொழி
மொழி நம்மிடமிருந்து எதையும் கோருவதில்லை. அது எல்லா மாறுதல்களையும் தன்னுள் தேக்கி கொண்டு பயணித்தபடியே இருக்கிறது முடிவற்ற அண்டப் பெருவெளியில்…