வியாபார தேவைக்கேற்பவும் நூல் வர்த்தகத் துறையின் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளுக்கு ஏற்பவும் கடந்த நாற்பது ஆண்டுகளில் மட்டும் புத்தகங்களின் ‘title-page’- நூல் முகப்பு பக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது நூல் முகப்பு பக்கத்தில் இடம்பெறும் ISBN (International Standard Book Numbering) எனும் சர்வதேச புத்தக தர எண் மற்றும் CIP (Cataloguing in Publication) நூல் விபர பட்டியல் எனும் இரு அம்சங்களாகும். உலக அரங்கில் இவ்விரு அம்சங்களும் மிக முக்கியமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு முறையாக பின்பற்றப்படுகின்றன.
மலேசிய நூல் பதிப்பு சூழலில் குறிப்பாக இலக்கியம் சார்ந்த நூல் பதிப்புகளில் ISBNக்கு இன்றளவிலும் பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றே கூறவேண்டும். இவ்வாறான நிலைக்கு பல தரப்பினருடைய அலட்சியப் போக்கும் அறியாமையும் முக்கிய காரணமாக அமைகின்றது. புதியதாக வெளியீடு காணப்படவுள்ள புத்தகத்திற்கு ISBN மற்றும் CIP ஆகியவற்றை பெறும் பொறுப்பு அப்புத்தகத்தை வெளியீடு செய்யும் பதிப்பகத்தைச் (publisher) சார்ந்ததாகும். இந்நாட்டில் இயங்கிவரும் ஓரிரண்டு வெளியீட்டு நிறுவனங்களைத் தவிர்த்து ஏனைய மற்ற வெளியீட்டு நிறுவனங்களில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூல்களில் ISBN மற்றும் CIP பதிவு செய்யப்படாமல் இருப்பது மிகப்பெரும் குறைபாடாகும்.
நூலாசிரியர் (author), வெளியீட்டாளர் (publisher) மற்றும் அச்சு நிறுவனம் (printer) என இம்மூன்று தரப்பினரும் அவரவர் கடமையைச் சரியாக செய்யும்போது மட்டுமே எந்தவொரு சிக்கலும் இல்லாமல் நூலுக்கான ISBN மற்றும் CIP ஆகியவற்றை புத்தகத்தில் இடம்பெற செய்ய முடியும்.
ISBN சர்வதேச புத்தக தர எண்
பொதுவில், புதியதாக வெளியீடுகாணவிருக்கும் புத்தகத்திற்கு ISBN பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை அறிய அதன் வரலாற்றை சற்று பின்நோக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.
1966ஆம் ஆண்டு W. H. Smith எனும் பிரிட்டானிய நூல் வர்த்தக பெருநிறுவனம் தனது புத்தக் கிடங்கை கணினியாக்கம் பெற்ற கிடங்காக மாற்ற திட்டமிட்டது. அதன் அடிப்படையில், பிரிட்டிஷ் நூல் வெளியீட்டாளர்கள் மற்றும் விநியோக முறைகள் சங்கத்தின் உறுப்பினர்களும் மற்றும் சில கணினி நிபுணர்களும் ஒன்றிணைந்து SBN (Standard Book Numbering) எனும் புத்தக தர எண் முறையை உருவாக்கி 1967ஆம் ஆண்டு பிரிட்டன் முழுவதும் பயன்படுத்தத் தொடங்கினர்.
இதனிடையே, சர்வதேச தர நிர்ணய அமைப்பும் (ISO) ஆவணங்களின் தொழிநுட்ப குழுவும் (TC 46) SBNனில் தேவைகளைப் பல கோணங்களில் ஆய்வு செய்து 1970ஆம் ஆண்டு ISBN எனும் பெயரில் அதனை அங்கீகரித்து உலக நாடுகள் அனைத்தும் இதனை பயன்படுத்தும் சாத்தியத்தினை உருவாக்கியது. இதன் தலைமையகம் லண்டனில் நிறுவப்பட்டு, ஒவ்வொரு நாட்டுக்கும் தனித் தனி ISBN மையத்தை அமைத்து இயங்கி வருகின்றது.
இந்நாட்டில் இயங்கிவரும் வெளியீட்டு நிறுவனங்களும் சுய வெளியீட்டாளர்களும் மலேசிய தேசிய நூலகத்தில் புதிய நூலுக்கான ISBN மற்றும் CIP பதிவுகளைச் செய்ய முடியும். அங்கீகரிக்கப்பட்ட இப்பதிவு மையத்திலிருந்து பெறப்படும் ISBN மட்டுமே சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளபடும்; அன்றி மற்ற இடங்களில் பதிவு செய்யப்பட்டு பெறப்படும் ISBN எவ்வகையில் அந்நூல் படைப்பாளனுக்கோ அல்லது வெளியீட்டு நிறுவனத்திற்கோ பயன்படாது என்பதை நன்கு கருத்தில் கொள்ளவேண்டும்.
தொடக்க முப்பது ஆண்டுகளில் பத்து இலக்கங்களைக் கொண்டிருந்த ISBN, 1 ஜனவரி 2007ஆம் ஆண்டு தொடங்கி பதின்மூன்று இலக்க வடிவத்திற்கு மாற்றம் கண்டது. தற்போது ISBN வலைத்தளத்தின்மூலம் பத்து இலக்க ISBNனிலிருந்து பதின்மூன்று இலக்க வடிவத்திற்கு மாற்றும் வசதிகளை இந்நிறுவனம் வழங்குகிறது. http://www.isbn.org/ISBN_converter
ISBN மற்றும் CIP பதிவு செய்வதற்கான வழிமுறைகள்
முன்பே கூறியதுபோல, ISBN பதிவு செய்யும் காலம் தொடங்கி புத்தகத்தில் அச்சாகி வெளிவரும்வரை நூலாசிரியர் (author), வெளியீட்டாளர் (publisher) மற்றும் அச்சு நிறுவனம் (printer) என இம்மூன்று தரப்பினரின் பணி மிக முக்கியமானதாகும்.
நூலாசிரியரின் கடமைகள்
தனது படைப்பில் உருவாகும் நூல் ஏறக்குறைய 90 விழுக்காடு முழுமை பெற்றதையும் தலைப்பிலும் ஏதும் மாற்றங்கள் இருக்காது என்பதையும் நன்கு உறுதி செய்து கொண்ட பின்னரே அதற்கு ISBN பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவது சிறப்பாகும். சுயமாக நூலை வெளியீடுவதாக இருந்தாலும் அல்லது வெளியீட்டு நிறுவனங்களின் துணையுடன் வெளியிடுவதா என்பதையும் நூலாசிரியர்கள் இக்காலக்கட்டத்தில் முடிவு செய்வது சிறப்பாகும். சுய வெளியீடாக இருக்கும் பட்சத்தில் ISBN பெறும் அனைத்து வேலைகளையும் நூலாசிரியரே மேற்கொள்ள வேண்டிவரும். மேலும், நூல் முழுவதுமாக பிரசுரமான பின் அதன் பிரதியை மலேசிய தேசிய நூலகத்திற்கு அனுப்புவதையும் நூலாசிரியர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
வெளியீட்டாளரின் கடமை
ஒவ்வொரு நூல் வெளீயீட்டாளரும் (publisher) சுயநூல் வெளியீட்டாளரும் (self publisher) தங்கள் நிறுவனத்தை முதலில் ISBN தேசிய மையத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். PNM.PK.PBN (O).02(B1) எனும் பதிவு பாரத்தை மலேசிய தேசிய நூலக வலைபக்கத்திலும் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்துகொள்ள முடியும். இவ்வாறு பதிவு செய்வதன்மூலம் வெளியீட்டாளருக்கென தனியொரு குறியீட்டு இலக்க எண் ஒதுக்கப்படும். அவ்வெண் குறிப்பிடத்தக்க வெளியீட்டு நிறுவனத்தை அடையாளம் காண உதவும்.
இதைத் தொடர்ந்து, வெளியீட்டு நிறுவனம் நூலாசிரியரிடமிருந்து பெறப்படும் நூல் 90 விழுக்காடாவது முழுமை அடைந்துள்ளதை உறுதி செய்த பின்னர் அதன் தலைப்பையும் மறுஉறுதி செய்ய வேண்டும். பிரசுரிக்கப்படவுள்ள புத்தகத்தின் நகல், புத்தகத்தின் முகப்பு அட்டை நகல் மற்றும் பதிப்புரிமை பாரம் ஆகியவற்றை ISBN பதிவு அதிகாரியிடம் கொடுத்து PNM.PK.PBN (O).02(B2) எனும் ISBN பதிவு பாரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். முற்றிலும் இலவசமான இப்பதிவு வேலை இரண்டே நாள்களில் செய்து முடிக்கப்பட்டு ISBNனும் தரப்படும்.
புத்தகத்தின் கருத்தில், பக்க அளவில், தலைப்பில் மாற்றங்கள் ஏற்படுமேயானால் உடனே ISBNனை ரத்து செய்துவிட்டு புதியதை பதிவு செய்து பெற வேண்டியது அவசியமாகும். பெரும்பாலும் தொடக்கத்தில் இடப்படும் தலைப்புகள் பின் ஏதோவொரு காரணத்தால் மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுமேயானால் எடுக்கபட்ட ISBNனை உடனடியாக ரத்து செய்வது முக்கியமாகும். ஒரு புத்தகத்திற்குக் கொடுக்கப்படும் ISBNனை வேறு ஒரு தலைப்பிலான புத்தகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. புத்தக வெளியீடு / பிரசுரம் நிறுத்தப்படும் நிலையில் அதுகுறித்து ISBN தலைமையகத்திற்குத் தெரியப்படுத்துவது மிக முக்கியம். பல தொகுதிகளைக் கொண்ட நூல்கள், வெவ்வேறு விதமான அட்டைகளை கொண்ட புத்தகங்கள் (hard cover – தடித்த அட்டை; paper back-காகித அட்டை) போன்றவைகளுக்கு தனித் தனியாக ISBN எடுப்பதையும் வெளியீட்டாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
அச்சு நிறுவனத்தின் கடமை
அச்சு நிறுவனம் சரியான ISBN எண்ணை புத்தகத்தின் பின் அட்டையில் பிசுரிப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். இதுவரை வெளியீடு கண்டுள்ள நூல்களை ஆராய்ந்து பார்க்கும்போது நூல் முகப்பு பக்கத்தில் உள்ள ISBN எண்ணுக்கும் பின் அட்டையில் உள்ள ISBN எண்ணும் மாறுபட்டு இருப்பதைக் காண முடிகிறது. பெரும்பாலும் மறுபதிப்பு செய்யப்படும் புத்தகங்களிலும், தடித்த அட்டை (hard cover) காகித அட்டை (paper back) என இருவித அட்டைகளை பயன்படுத்தும் புத்தகங்களில் இத்தவறு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு புத்தகத்தை இருவேறு முகப்பு அட்டைகளில் பிரசுரிக்கும்போது 2 ISBN எண்களைப் பதிவு செய்து அவற்றை முறையாக முகப்பு பக்கத்திலும் (title page) பின் அட்டையின் கீழ் பகுதியிலும் பிரசுரிப்பது அவசியமாகும்.
ஒவ்வொரு தனிமனிதனும் எப்படி தன் பெயரை ஒத்த இருப்பவனிமிருந்து தன்னை பிரித்து அடையாளபடுத்த அடையாள அட்டை பயன்படுகிறதோ அதுபோலவே ஒவ்வொரு புத்தகத்தையும் வெவ்வேறாக அடையாளப்படுத்த ISBN அவசியமாகிறது. புத்தகங்களின் பெயரும், நூலாசிரியரின் பெயரும் ஒரே மாதிரியாக இருக்கும் நிலையில் அவற்றை பிரித்து அடையாளங்காண ISBN பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு நாளும் பல நூறு புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு வரும்போது நம்முடைய நூல் தெளிவான குறிப்புகள் இல்லாத காரணத்தால் காணாமல் போய்விட வாய்ப்புகள் அதிகம். எனவே புத்தகத்தை உருவாக்க எடுத்துக்கொள்ளும் சிரத்தையை அதற்கான ISBN பெறுவதிலும் காட்ட வேண்டும்.
ISBNனை வெறும் 13 இலக்கத்தைக் கொண்ட குறியீடாக மட்டும் கருதிவிட முடியாது. அப்பதின்மூன்று இலக்கங்களும் ஐந்து முக்கிய பகுதிகளை உள்ளடக்கி பயனீட்டாலர்களுக்குச் சில முக்கியத் தகவல்களை கொடுக்கின்றன.
பகுதி 1 | புத்தக துறைக்கான குறியீடு (978) |
இந்த குறியீடு சர்வதேச அளவில் புத்தகத் துறையை அடையாளம் காட்டுகிறது. | |
பகுதி 2 | நாட்டிற்கான குறியீடு |
மலேசியாவில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு 967 மற்றும் 978 ஆகிய இரண்டு வகை குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படும். | |
பகுதி 3 | வெளியீட்டாளருக்கான குறியீடு |
ஒவ்வொரு வெளியீட்டு நிறுவனத்திற்கும் / சுய வெளியீட்டாளருக்கும் தனித் தனி எண் குறியீடுகள் கொடுக்கப்படும். எனவே அந்நிறுவனத்தில் வெளியீடுகாணும் புத்தகங்களின் ISBNனில் இப்பகுதி குறியீட்டு எண்கள் ஒரே மாதிரியாக இருக்கும். | |
பகுதி 4 | நூலுக்கான குறியீடு |
இந்த பகுதி ஒரு வெளியீட்டாளர் மூலம் வெளியிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட தலைப்பு அல்லது பதிப்பை அடையாளம் காட்டும். | |
பகுதி 5 | கணினிவழி கட்டுப்படுத்தப்பட்ட எண் |
இப்பகுதியில் ஒரு எண் மட்டும் அல்லது ‘X’ என்ற குறியீடு இருக்கும். இது தானியங்கி முறையில் வரும் குறியீடாகவும் மிகத் துல்லியமான ISBNயை கொடுக்க உதவும். |
உதாரணம்:
நூல்: நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் / பூங்குழலி வீரன்
978 |
– |
983 |
– |
44618 |
– |
9 |
– |
8 |
புத்தக துறை |
நாடு |
வெளியீட்டாளர் |
நூல் |
கட்டுபடுத்தப்பட்ட எண் |
தொடர்ந்து, ஒரு புத்தகத்திற்கு ISBN எடுப்பதன்மூலம் அதனை உலகச் சந்தைக்குக் கொண்டு சேர்க்க முடியும். அதாவது பதிவு செய்யப்படும் ஒவ்வொரு ISBN அந்நூல் தொடர்பான விபரங்கள் அனைத்தும் லண்டனில் உள்ள தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. பிறகு அவை Publishers International ISBN Directory (PIID) எனும் வலைத்தளத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதன்வழி வெளியீட்டாளர்களின் விபரங்களும் புத்தகம் தொடர்பான விபரங்களும் உலக பார்வைக்குச் செல்கின்றன. இது ஒரு வெளியீட்டு நிறுவனத்திற்கு விளம்பரமாக அமைவதோடு படைப்பளர்களிடையே நம்பகத்தன்மையையும் உருவாக்குகிறது.
இவற்றோடு மேலும், ஒவ்வொரு ஆண்டும் தேசிய நூலகம் வெளியீடு செய்யும் தேசிய புத்தக விவரணப் பட்டியிலிலும் (National Bibliografi) ISBN பதிவு செய்யப்பட்ட நூல்கள் இடம்பெறுகின்றன. ஒராண்டில் வெளியான புத்தகங்களின் குறிப்பை உள்ளடக்கிய ஆவணக்குறிப்பாக இது அமைகின்றது. ISBN எடுக்கப்படாத நிலையில் எப்படிப்பட்ட தரமான படைப்பாக இருந்தாலும் இவ்விவரணப் பட்டியலிலிருந்து விடுபட்டுவிடுவது உறுதி. இப்படியாக தமிழில் உருவான எத்தனை எத்தனையோ இலக்கிய பிரதிகள் ISBN எடுக்கபடாத காரணத்தினால் சுவடுகளற்று காணாமல் போயுள்ளதற்காக நம்மையன்றி வேறு யாரையும் சாட முடியாது.
இதை தவிர, உள்நாட்டில் பதிப்பிக்கப்படும் நூல்களையும், வெளிநாடுகளில் பதிப்பிக்கப்படும் மலேசிய படைப்பாளர்களின் நூல்களையும் தேசிய நூலகம் ‘மலேசியானா’ எனும் பிரிவில் சேகரித்து பாதுகாத்து வைத்து வருகின்றது. பெரும்பாலான ஆய்வுகளுக்கு குறிப்பாக மலேசிய இலக்கிய படைப்புகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வியலாலர்கள் இம்மலேசியானா சேவையினை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இன்றளவிலும் மலேசிய தமிழ் இலக்கியம், தமிழர்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வு மாணவர்கள் தமிழ் சார்ந்த நூல்களைப் பெருவதில் சிரமத்தையே எதிர்கொள்கின்றனர். ISBN எடுப்பதன்மூலம் அப்புத்தகம் மலேசியானா பிரிவில் வைக்கப்பட்டு எல்லா காலங்களிலும் பயன்படும் வகையில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் பலர் இன்னும் இதன் அவசியத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பது கவலைக்குறியதாகும்.
CIP நூல் விபர பட்டியல்
வெளியீடு காணவுள்ள புத்தகம் தொடர்பான முக்கிய தரவுகளை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் கொடுப்பதுதான் CIP (Cataloging In Publication) என்பதாகும். ISBN பதிவு செய்யும் அதேவேளை CIPக்கும் பதிவு செய்வது அவசியமாகும். CIP புத்தகத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்களை உள்ளடக்கிய பகுதியாகும். பெரும்பாலும் நூலாசிரியர்களே முகப்புப் பக்கத்திற்குத் தேவையான குறிப்புகளை எழுதிக்கொள்வது இன்றளவிலும் நடைபெற்று வருகின்றது. எனவே அதிக அளவிலான புத்தகங்களில் பல முக்கிய விபரங்கள் விடுபட்டுபோய் விடுவதை தவிர்க்க முடியாமல் போகின்றது. ஒரு புத்தகத்தின் தலைப்புப் பக்கத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்களை உள்ளடக்கிய PNM.PK(0)PBN.02(B4) எனும் இரண்டு பக்க பாரத்தை பூர்த்தி செய்து கொடுப்பதன்வழி இச்சிக்கலையும் களைய முடியும்.
PNM.PK(0)PBN.02(B4) எனும் இரண்டு பக்க பாரத்தை பாரத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்கும்போது அதனுடன் புத்தகத்தின் தொடக்க பக்கங்களான (உள்ளடக்க பக்கம், முன்னுரை, அறிமுகம்) ஆகியவற்றின் பிரதிகளையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். இவற்றின் துணைகொண்டு தலைப்பு பக்கத்திற்கு வேண்டிய குறிப்புகளை மலேசிய தேசிய நூலகத்தின் நூலகர்கள் குறிப்பிட்ட வடிவத்தில் முழுமையாக நமக்கு கொடுப்பர். இதனை பிறகு நமது புத்தகத்தில் முகப்புப் பக்கமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இவ்வாறு முறையான மற்றும் மிகத் துல்லியமான குறிப்புகளை உள்ளடக்கிய தலைப்பு பக்கத்தை வடிவமைப்பது பல வழிகளில் அப்புத்தகத்தின் விற்பனைக்கும் ஆய்வுக்கும் பயன்படும். நமக்கு கொடுக்கப்படும் CIP மலேசிய தேசிய நூலக இணைய அணுகல் அட்டவணையிலும் (webopac.pnm.gov.my) இடம்பெருகிறது. இது மலேசியா மட்டுமல்லாமல் பரந்துபட்ட உலக மக்களின் பார்வைக்கும் செல்கின்றது. அவ்வகையில் ஒரு புத்தகம் பிரசுரம் ஆவதற்கு முன்பே அப்புத்தகம் தொடர்பான தகவல்கள் உலக மக்களின் பார்வைக்குச் சென்றுவிடுகின்றது.
CIP உதவியுடன் வடிமைக்கப்பட்ட புத்தகத்தின் தலைப்பு பக்கத்தில் புத்தகம் தொடர்பான குறிப்புகளுடன் அதன் அழைப்பு எண் (call number) மற்றும் குறிப்பு சொற்கள் (subject) தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் நூலகங்களுக்கு பெரிதும் பயன்படுவனவாக அமைகின்றன. நூலகங்கள் இப்புத்தகங்களை வாங்கும்பொழுது அதனை விரைவாக இணைய பட்டியலில் சேர்த்துவிட முடிகின்றது. மேலும் இதன்மூலம், இப்புத்தகத்திற்கு உலகம் முழுவதிலும் உள்ள நூலகங்கள் ஒரே மாதிரியான அழைப்பு எண்ணையும் குறிப்புச் சொற்களையும் பயன்படுத்த வழிசெய்கின்றன.
உலகமே கணினி மையத்தில் உளன்று கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான சிறுசிறு முக்கிய அம்சங்களை பொருட்படுத்தாததாலும் அலட்சியம் செய்வதாலும் மலேசிய தமிழ் படைப்புகள் ஒரு எல்லையைத் தாண்டி மேல் செல்ல முடியாமல் நிற்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல நல்ல புத்தகங்கள் நாட்டின் பல்வேறு மூலைகளில் வெளியீடு காண்கின்றன. ஆனால் அத்தனை புத்தகங்களும் தேசிய நூலகத்தில் உள்ளனவா; அவற்றின் குறிப்புகள் தேசிய இணைய அணுகல் அட்டவணையில் உள்ளனவா என்பது கேள்விக்குறியே. உள்நாட்டிலேயே இவ்வாறான நிலை என்றால் வெளிநாடுகளுக்கு நமது படைப்புகளை எப்படி விளம்பரம் செய்யப்போகிறோம் என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஒரு புத்தகத்திற்கு அதன் கருத்துத்தரம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவத்தை ISBN மற்றும் CIP இக்காலக்கட்டத்தில் கொண்டுள்ளதை மறுக்கவே முடியாது. இனிவரும் காலங்களிலாவது ISBN மற்றும் CIP பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
1 comment for “ISBN மற்றும் CIP மாற்றங்களும் தேவைகளும்”